search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "two wheeler"

    புதுச்சேரியில் நாளை முதல் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்படுவதாக போலீஸ் டி.ஜி.பி. சுந்தரி நந்தா கூறினார். #Helmet #TwoWheeler
    புதுச்சேரி:

    புதுவையில் ஹெல்மெட் அணிய வேண்டியது கட்டாயம் என கடந்த 2017-ம் ஆண்டு மே மாதம் அறிவிக்கப்பட்டது. ஆனால் இதற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக பெண்கள் அதிருப்தி தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து கட்டாய ஹெல்மெட் திட்டம் வாபஸ் பெறப்பட்டது. இந்த நிலையில் ஹெல்மெட் அணிவது தொடர்பாக போலீஸ் டி.ஜி.பி. சுந்தரி நந்தா நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவையில் ஹெல்மெட் அணிவது குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். கடந்த 3 ஆண்டுகளில் நடந்த விபத்துகளில் 648 பேர் இறந்துள்ளனர். இதில் 322 பேர் ஹெல்மெட் அணியாததாலேயே உயிரிழந்துள்ளனர். எனவே நாளை (திங்கட்கிழமை) முதல் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்படுகிறது. ஹெல்மெட் அணியாவிட்டால் வழக்கை சந்திக்க வேண்டியது இருக்கும்.

    ஹெல்மெட் அணியாதவர்களுக்கு முதலில் ரூ.100 அபராதம் விதிப்போம் அல்லது அதற்கான ரசீது கொடுப்போம். 3-வது முறை ஹெல்மெட் அணியாமல் பிடிபட்டால் டிரைவிங் லைசென்சு ரத்து செய்யப்படும். காரில் செல்லும்போது சீட் பெல்ட் அணிவதும் அவசியம். இதை மீறுவோருக்கும் அபராதம் விதிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் தனது வாகனங்கள் விற்பனையில் 6 சதிவிகித வளர்ச்சியை பதிவு செய்திருக்கிறது. #TVSMotor



    டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் கடந்த ஆண்டு டிசம்பர் மாத விற்பனையில் 6 சதவிகித வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

    டி.வி.எஸ். நிறுவனம் 2017 டிசம்பரில் 2,56,870 யூனிட்களை விற்பனை செய்திருந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 2,71,395 யூனிட்கள் விற்பனை செய்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், டிசம்பர் 2017 உடன் ஒப்பிடும் போது டிசம்பர் 2018 இல் வாகன விற்பனையில் 4 சதவிகிதம் வளர்ச்சியடைந்திருக்கிறது.

    2017 டிசம்பரில் உள்நாட்டு இருசக்கர வாகனங்கள் விற்பனை 2,07,739 யூனிட்களாக இருந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பரில் 2,09,906 யூனிட்கள் விற்பனையாகி ஒரு சதவிகித வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.



    டி.வி.எஸ். நிறுவனத்தின் ஸ்கூட்டர் விற்பனை முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 9 சதவிகிதம் அதிகரித்துள்ளது. 2017 டிசம்பரில் 83,638 யூனிட்கள் விற்பனையானது. கடந்த ஆண்டு டிசம்பரில் 91,480 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. 

    மோட்டார்சைக்கிள் விற்பனை 2017 டிசம்பரில் 95,246 யூனிட்கள் விற்பனையாகி இருந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பரில் 1,07,189 யூனிட்கள் விற்பனையாகி 13 சதவிகித வளர்ச்சி பெற்றுள்ளது.

    டி.வி.எஸ். நிறுவனத்தின் ஒட்டுமொத்த ஏற்றுமதி 26 சதவிகிதம் வளர்ச்சி பெற்றுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில் மட்டும் டி.வி.எஸ். நிறுவனம் 60,262 யூன்ட்களை ஏற்றுமதி செய்துள்ளது. முந்தைய ஆண்டு டிசம்பரில் டி.வி.எஸ். நிறுவனம் 47,818 யூனிட்கள் ஏற்றுமதியாகி இருந்தது.
    ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் புதிய மோட்டார்சைக்கிள் இத்தாலியில் நடைபெற இருக்கும் விழாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. #RoyalEnfield

     

    ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இன்டர்செப்டர் 650 மற்றும் கான்டினென்டல் ஜி.டி. 650 மோட்டார்சைக்கிள் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்நிலையில், ராயல் என்ஃபீல்டு நிறுவனம் புதிய க்ரூசர் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்ய இருக்கிறது.

    தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களின் படி ராயல் என்ஃபீல்டு நிறுவனம் 830சிசி க்ரூசர் பைக் மாடலை 2018 EICMA மோட்டார் விழாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இந்த விழா இத்தாலியில் நடைபெற இருக்கிறது.



    மேலும் புதிய க்ரூசர் மோட்டார்சைக்கிளுக்கான என்ஜினை ராயல் என்ஃபீல்டு மற்றும் போலாரிஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனங்கள் ஒன்றிணைந்து உருவாக்கியிருக்கின்றன. 830சிசி என்ஜின் மாடல் பி.எஸ். VI எமிஷன் விதிமுறைகளுக்கு உட்பட்டு இருக்கும் என கூறப்படுகிறது.

    புதிய க்ரூசர் மோட்டார்சைக்கிள் சர்வதேச சந்தைகளுக்கு ஏற்ற ஃபிளாக்ஷிப் மாடலாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. என்ஜின் அம்சங்களை பொருத்த வரை 834சிசி லிக்விட்-கூல்டு, ட்வின்-சிலிண்டர் என்ஜின் கிட்டத்தட்ட 80 முதல் 90 பி.ஹெச்.பி. பவர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    போலாரிஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் அமெரிக்க சந்தையில் மிட்-ரேஞ்ச் மற்றும் உயர்-ரக திறன் கொண்ட மோட்டார்சைக்கிள்களை உருவாக்குவதில் பிரபலமாக அறியப்படுகிறது. புதிய மோட்டார்சைக்கிளின் உற்பத்தி மாடலின் அறிமுகம் சார்ந்த விவரங்கள் எப்போது வெளியாகும் என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை.
    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்தியாவில் தொடர்ந்து இரண்டாவது மாதமாக ஏழு லட்சம் யூனிட் விற்பனையை பதிவு செய்திருக்கிறது. #motorcycle



    இந்தியாவின் முன்னணி இருக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் தொடர்ந்து இரண்டாவது முறையாக மாதம் ஏழு லட்சம் யூனிட் மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்திருக்கிறது. அக்டோபர் மாதத்தில் மட்டும் ஹூரோ மோட்டோகார்ப் 7,34,667 யூனிட்களை விற்பனை செய்திருக்கிறது. 

    இது கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் விற்பனையானதை விட 16.4 சதவிகிதம் அதிகம் ஆகும். கடந்த ஆண்டு பண்டிகை காலத்தில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 6,31,105 யூனிட்கள் விற்பனை செய்திருக்கிறது. ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 2018-19ம் நிதியாண்டில் மட்டும் நான்காவது முறையாக ஏழு லட்சம் யூனிட் விற்பனை செய்திருக்கிறது.



    முன்னதாக செப்டம்பர் 2018ல் ஹீரோ நிறுவன வரலாற்றிலேயே அதிகபட்சமாக 7,69,138 யூனிட்களை விற்பனை செய்தது. ஹூரோவிற்கு போட்டியாக ஹோன்டா நிறுவனம் சுமார் ஐந்து லட்சத்திற்கும் அதிக யூனிட்களை விற்பனை செய்தது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது 12 சதவிகிதம் அதிகம் ஆகும்.

    சமீபத்தில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் டெஸ்டினி 125 ஸ்கூட்டரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய டெஸ்டினி 125 ஸ்கூட்டர் விலை ரூ.54,650 மற்றும் ரூ.57,500 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்கூட்டருக்கான முன்பதிவுகள் துவங்கி இருக்கும் நிலையில், இதன் விநியோகம் இம்மாத இறுதியிலோ அல்லது டிசம்பர் மாத துவக்கத்தில் துவங்கலாம்.
    தருமபுரியில் வீட்டின் வெளியில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
    தருமபுரி:

    தருமபுரி பெரியார் தெருவில் உள்ள ஆண்டாள் நிலையத்தை சேர்ந்தவர் அசோகன் வயது(50). இவர் தருமபுரி தலைமை தபால் நிலையம் அருகே ஓட்டல் நடத்தி வருகிறார். இவர் கடந்த 8-ந் தேதி இரு சக்கர வாகனத்தை வீட்டின் வெளியே நிறுத்திவிட்டு ஓட்டலுக்கு சென்றுவிட்டார்.

    பின்னர் மாலை திரும்பி வந்து பார்த்த போது வண்டியை காணவில்லை. அசோகன் வண்டியை பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இது குறித்து அசோகன் நேற்று தருமபுரி டவுண் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews
    ஹெல்மெட் அணிவது குறித்து தஞ்சையில் இருசக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது. இதனை போக்குவரத்துதுறை துணை ஆணையர் உதயகுமார் தொடங்கி வைத்தார்.
    தஞ்சாவூர்:

    தஞ்சை வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் ஹெல்மெட் அணிவது குறித்து இருசக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலம் தஞ்சையில் நேற்று நடந்தது. ஊர்வலத்துக்கு வட்டார போக்குவரத்து அதிகாரி கார்த்திகேயன் தலைமை தாங்கினார். மோட்டார் வாகன ஆய்வாளர் சுந்தர்ராமன் முன்னிலை வகித்தார்.

    ஊர்வலத்தை தஞ்சை மண்டல போக்குவரத்து துறை துணை ஆணையர் உதயகுமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலம் திலகர்திடல் அருகே இருந்து தொடங்கி சோழன்சிலை, ராசாமிராசுதார் அரசு மருத்துவமனை சாலை, அண்ணாசிலை, காந்திஜிசாலை, இர்வீன்பாலம் வழியாக ரெயில் நிலையத்தை அடைந்தது.

    பேரணியில் தஞ்சை பகுதியில் உள்ள இருசக்கர வாகன விற்பனையாளர்கள், சமூக ஆர்வலர்கள், இருசக்கர பழுதுபார்ப்போர் சங்கத்தினர் கலந்து கொண்டனர். ஊர்வலத்தில் ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பதாகைகளை ஏந்தி சென்றனர். மேலும் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என்பது குறித்து துண்டுபிரசுரங்களும் வினியோகிக்கப்பட்டன. 
    அரியலூர் மாவட்டத்தில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்ற 161 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
    அரியலூர்:

    இருசக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்ந்து செல்பவரும் ஹெல்மெட் அணிந்து செல்லாத காரணத்தால் ஏற்பட்ட விபத்தில் ஏராளமான பேர் இறந்துள்ளனர். இதில் தொடர்ந்து உயிர்பலி அதிகரித்து வருகிறது. மோட்டார் வாகன சட்ட பிரிவு 129–ன்படி இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என்பதனை சென்னை உயர்நீதிமன்றமும் பலமுறை அறிவுறுத்தி உள்ளது. 

    இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் நேற்று மட்டும் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் பின்னால் அமர்ந்து சென்றவர்கள் மீது சட்ட பிரிவு 129–ன் கீழ் 161 பேர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே ஹெல்மெட் அணியாமல் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் சட்டப்படி போலீசாரால் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த தகவல் அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

    பெரம்பலூர் மாவட்டத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்து செல்ல வெண்டும். ஹெல்மெட் அணியாமல் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் மீது பிரிவு 129 மோட்டார் வாகன சட்டப்படி போலீசாரால் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று ஊட்டியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் போலீசார் அறிவுரை கூறினர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா உத்தரவிட்டார். அதன்படி, ஊட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு போக்குவரத்து விதிகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஊட்டி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் கலந்துகொண்டு மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி குறித்து போலீசார் கூறியதாவது:-

    கல்லூரி மாணவர்கள் ஹெல்மெட் அணியாமல் செல்வதால் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து வருகிறார்கள். எனவே இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனங்களை இயக்கக் கூடாது. போலீசாரின் சோதனையில், ஓட்டுனர் உரிமம் இல்லாமல் இயக்குவது கண்டறியப்பட்டால் அபராதம் விதிக்கப்படும்.

    தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் நகராட்சி சாலைகளில் குறிப்பிட்ட வேகத்துக்கு மேல் வாகனங்கள் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும். செல்போன் பேசிக்கொண்டு வாகனங்களை ஓட்டக்கூடாது. செல்போன் பேசுவதில் கவனம் இருந்தால், எதிரே வரும் வாகனங்கள் மீது மோதி விபத்து ஏற்படக்கூடும். குடிபோதையில் வாகனங்களை எக்காரணத்தை கொண்டும் இயக்கக்கூடாது. முக்கிய சந்திப்பு பகுதிகளில் மாணவர்கள் சாலையை கடக்கும் போது இருபுறமும் வாகனங்கள் வருகிறதா? என்பதை நன்கு கவனித்து செல்ல வேண்டும்.

    கார்களை இயக்கும் போது சீட் பெல்ட் அணிய வேண்டும். வாகனங்கள் வளைவுகளில் திரும்பும் போதும், நிறுத்தும் போதும் சிக்னல் செய்ய வேண்டும். அப்போது தான் பின்னால் வரும் வாகன ஓட்டிகள் அதற்கு ஏற்றவாறு வாகனத்தை இயக்க முடியும். பள்ளி மாணவர்கள் கையில் தான் எதிர்காலம் உள்ளது. மாணவர்களாகிய நீங்கள் போக்குவரத்து விதிகளை கடைபிடித்து பாதுகாப்பாக வாகனங்களை இயக்க வேண்டும்.

    மேலும் உங்களது பெற்றோர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினருக்கு போக்குவரத்து விதிகள் குறித்து எடுத்துக்கூற வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். 
    ×