search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tomato price"

    • கோயம்பேடு சந்தைக்கு இன்று 35 லாரிகளில் தக்காளி விற்பனைக்கு வந்துள்ளது.
    • கோயம்பேடு மார்க்கெட்டில் பீன்ஸ் விலை மட்டும் சற்று அதிகமாக உள்ளது.

    போரூர்:

    தமிழகத்தில் தக்காளி விலை கடந்த ஒரு மாதமாக உச்சத்தில் இருந்து வந்தது. கிலோ ரூ.200 வரை விற்கப்பட்டது. கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வழக்கமாக 60 லாரிகள் வரை தக்காளி விற்பனைக்கு வரும். ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் 'திடீர்' மழை மற்றும் வடமாநிலங்களில் பெய்த கனமழையால் தக்காளி வரத்து பாதிக்கும் கீழ் குறைந்தால் இந்த விலை உயர்வு என்று கூறப்பட்டது.

    தக்காளி விலையை கட்டுப்படுத்த ரேசன் கடைகளில் தக்காளி விற்பனையை அரசு தொடங்கியது. அங்கு கிலோ ரூ.60-க்கு விற்கப்பட்டதால் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு ஏற்பட்டது.

    இந்த நிலையில் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தக்காளியின் வரத்து கடந்த சில நாட்களாக மெல்ல மெல்ல அதிகரிக்க தொடங்கி உள்ளது. கடந்த 3 நாட்களாக தினசரி 30 லாரிகளுக்கும் மேல் தக்காளி வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளன. இதனால் தக்காளி விலை ரூ.100-க்கு கீழ் சரியத் தொடங்கி உள்ளது.

    கோயம்பேடு சந்தைக்கு இன்று 35 லாரிகளில் தக்காளி விற்பனைக்கு வந்துள்ளது. மொத்த விற்பனையில் ஒரு கிலோ ரூ.80-க்கும், மார்க்கெட்டில் உள்ள சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ ரூ.100-க்கும் விற்கப்படுகிறது.

    கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை ரூ.100-க்கு கீழ் குறைந்து உள்ளதால் வெளிமார்க்கெட்டில் உள்ள கடைகளிலும் தக்காளி விலை குறையத்தொடங்கி உள்ளன. இதனால் பொதுமக்களும், இல்லத்தரசிகளும் நிம்மதி அடைந்து உள்ளனர்.

    இதுகுறித்து வியாபாரிகள் கூறும்போது, கடந்த வாரத்தில் தக்காளி விலை இரட்டை சதம் அடித்து இருந்தது. கடந்த சில நாட்களாக கோயம்பேடு மார்கெட்டுக்கு வரும் தக்காளியின் வரத்து சற்று அதிகரித்து வருகிறது. இதனால் தக்காளி விலை குறையத்தொடங்கி விட்டன. ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் மழை பாதிப்பு குறைந்து உற்பத்தி சீராக நடந்து வருகிறது. எனவே இனி வரும் நாட்களில் தக்காளியின் வரத்து மேலும் அதிகரித்து விலை படிப்படியாக குறையவே வாய்ப்பு உள்ளது. இன்னும் 15 நாட்களுக்குள் தக்காளியின் விலை பழைய நிலைக்கு திரும்பிவிடும் என்றார்.

    கோயம்பேடு மார்க்கெட்டில் பீன்ஸ் விலை மட்டும் சற்று அதிகமாக உள்ளது. மொத்த மார்க்கெட்டில் கிலோ ரூ.80-க்கு விற்பனை ஆகிறது. மற்ற பச்சை காய்கறிகள் அனைத்தும் கிலோ ரூ.50-க்கு கீழ் விற்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

    • தக்காளி விவசாயி தனது வயலில் தக்காளி விதைக்கிறார்.
    • விவசாயி எதிர்கொள்ளும் சூழ்நிலைகள் குறித்து விளக்கும் வகையில் அந்த கருத்தை மையமாக வைத்து காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.

    தூத்துக்குடி:

    தக்காளி விவசாயி சந்திக்கும் சூழல்களை விளக்கும் குறும்படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடியில் நடைபெற்று வருகிறது.

    பல குறும்படங்களை இயக்கிய அப்துல்மஜீத் இயக்கத்தில் தூத்துக்குடி மாவட்ட முத்துநகர் திரைப்பட நடிகர்கள் சங்க தலைவர் முருகேசன், நடிகர்கள் முருகேசன், ஜாகிர் உசேன், சக்திவேல், தங்கராஜ், டேனியல் ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடி அத்திமரபட்டி வயல்வெளிகளில் நடத்தப்பட்டு காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.

    தக்காளி விவசாயி தனது வயலில் தக்காளி விதைக்கிறார். விலை இல்லை என்று மறு வருடம் மாற்றுப்பயிர் விதைக்கிறார். ஆனால் தக்காளி விலை கூடுகிறது.

    இதனால் விவசாயி எதிர்கொள்ளும் சூழ்நிலைகள் குறித்து விளக்கும் வகையில் அந்த கருத்தை மையமாக வைத்து காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இதனை அப்பகுதி விவசாயிகள் பொதுமக்கள் ஆர்வமுடன் கூட்டம் கூட்டமாக நின்று பார்த்து ரசித்து வருகின்றனர்.

    • தங்கம், வெள்ளி திருடிய திருட்டு கும்பல் தக்காளி பக்கம் தங்களது கவனத்தை திருப்பி உள்ளனர்.
    • அன்னமய்யா மாவட்டம் நெக்குண்டியை சேர்ந்த விவசாயி ஒருவர் தனது தோட்டத்தில் தக்காளி பயிரிட்டுள்ளார்.

    திருப்பதி:

    தக்காளியின் விலை தங்கத்தின் விலையை போல் நாள்தோறும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. தக்காளியின் விலை உச்சத்தை அடைந்ததால் இல்லத்தரசிகள் தக்காளியை பயன்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர்.

    இதேபோல் தக்காளியை பயிரிட்டுள்ள விவசாயிகள் பலர் ஒரே மாதத்தில் லட்சாதிபதிகளாகவும்,கோடீஸ்வரர்களாகவும் மாறி உள்ளனர்.

    குறிப்பாக ஆந்திர மாநிலம் சித்தூர் மற்றும் அன்னமய்யா மாவட்டத்தில் விவசாயிகள் தக்காளி பயிரிட்டு அறுவடை செய்து சந்தைகளில் விற்று லாபம் ஈட்டி வருகின்றனர்.

    தங்கம், வெள்ளி திருடிய திருட்டு கும்பல் தக்காளி பக்கம் தங்களது கவனத்தை திருப்பி உள்ளனர்.

    சித்தூர் மற்றும் அன்னமய்யா மாவட்டத்தில் தக்காளி விவசாயிகள் மற்றும் வியாபாரிகளை குறிவைத்து பணம் பறிக்கும் முயற்சியில் மர்ம கும்பல் ஈடுபட்டு வருகிறது.

    அன்னமய்யா மாவட்டம் நெக்குண்டியை சேர்ந்த விவசாயி ஒருவர் தனது தோட்டத்தில் தக்காளி பயிரிட்டுள்ளார்.

    நேற்று மர்ம நபர்கள் இரவோடு இரவாக தோட்டத்தில் புகுந்து 450 கிலோ தக்காளி திருடி சென்றுவிட்டனர்.

    இதேபோல் மதனப்பள்ளி மார்க்கெட் பகுதியில் கடையில் கதவை உடைத்து திருட்டு கும்பல் புகுந்தனர்.

    அங்கிருந்த 50 கிலோ தக்காளியை திருடி சென்றனர்.

    சித்தூர் மாவட்டம் புங்கனூர் அடுத்த நக்க பண்டாவை சேர்ந்தவர் லோகராஜ். இவர் நேற்று முன்தினம் தனது நிலத்தில் இருந்த தக்காளியை அறுவடை செய்து உள்ளூர் சந்தையில் விற்பனை செய்தார்.

    பின்னர் தக்காளி விற்பனையில் கிடைத்த பணத்தை எடுத்துக்கொண்டு சொந்த ஊருக்கு பைக்கில் சென்று கொண்டு இருந்தார். கஞ்சா போதையில் இருட்டான பகுதியில் மறைந்து இருந்த மர்ம நபர்கள் லோகராஜை வழிமறித்தனர்.

    பீர் பாட்டிலால் லோகராஜ் மீது சரமாரியாக தாக்கினார். பின்னர் அவரிடம் இருந்த ரூ.4.50 லட்சம் பணத்தை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர்.

    இதுகுறித்து லோகராஜ் புங்கனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    சித்தூர் மற்றும் அன்னமய மாவட்டத்தில் நடைபெறும் தொடர் சம்பவங்களால் தக்காளி விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் அச்சம் அடைந்து உள்ளனர்.

    • நீலகிரி உள்பட பல்வேறு இடங்களிலும் ஒரு கிலோ தக்காளி ரூ.150க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கு தொடர் மழையால் வரத்து குறைந்ததே காரணமாகும்.
    • மலைக்கிராமத்தில் தக்காளியை விளைவித்து குறைந்த விலைக்கு விற்பனை செய்து வரும் சகோதரர்களை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

    ஊட்டி:

    தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களிலும் கடந்த சில வாரங்களாகவே தக்காளியின் விலை புதிய உச்சத்தில் உள்ளது.

    தமிழகத்தின் பல இடங்களில் ரூ.130 முதல் ரூ.150 வரையும், வெளி மாநிலங்களில் சில இடங்களில் ரூ.200 என்ற அளவிலும் தக்காளியானது விற்பனையாகி வருகிறது.

    தக்காளியின் விலையை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு நடவடிக்கை எடுத்து ரேஷன் கடைகளில் கிலோ ரூ.60க்கு மக்களுக்கு விற்பனை செய்து வருகிறது.

    தக்காளி விலை உச்சத்தில் இருக்கும் நிலையில், நீலகிரி மாவட்டம் குந்தா பகுதியை சேர்ந்த சகோதரர்களான ராமன், புட்டுசாமி ஆகியோர் 2 சகோதரர்கள் தாங்கள் பயிரிட்டு அறுவடை செய்துள்ள தக்காளியை கிலோ ரூ.80க்கு விற்பனை செய்து ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளனர்.

    நீலகிரி உள்பட பல்வேறு இடங்களிலும் ஒரு கிலோ தக்காளி ரூ.150க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கு தொடர் மழையால் வரத்து குறைந்ததே காரணமாகும்.

    இதற்கிடையே மலைக்கிராமத்தில் தக்காளியை விளைவித்து குறைந்த விலைக்கு விற்பனை செய்து வரும் சகோதரர்களை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

    இதுகுறித்து விவசாய சகோதரர்கள் கூறியதாவது:-

    விவசாயம் தான் எங்களுக்கு தொழில். இந்த பகுதியில் எல்லோரும் சாகுபடி செய்யும் மலைக்காய்கறிகளைத் தான் நாங்களும் சாகுபடி செய்து வந்தோம். வீட்டு தேவைக்காக ஒருமுறை தக்காளி பயிரிட்டோம். நல்ல விளைச்சல் தந்தது. இதனால் அடுத்து கொஞ்சம் அதிகமாக தக்காளியை பயிரிட்டோம்.

    ஏப்ரல் மாதம் மைசூரில் இருந்து 1000 தக்காளி நாற்றுகளை வாங்கி வந்து நடவு செய்தோம். அப்போது தக்காளி விலை ரூ.10 தான். கால நிலை மாற்றத்தால் 400 நாற்றுகள் பட்டுப்போயின.

    600 நாற்றுகள் உயிர் பிழைத்தன. செடி சாயாமல் இருக்க ரொம்ப சிரமப்பட்டு பந்தல் கட்டி பராமரித்தோம். எங்கள் உழைப்புக்கு இப்போது நல்ல பலன் கிடைத்து விட்டது.

    நீலகிரி மாவட்டத்தில் ரூ.150க்கு அதிகமாக தக்காளி விற்கும் நிலையில், உள்ளூர் மக்களுக்காக ரூ.80க்கு தக்காளியை நாங்கள் விற்பனை செய்து வருகிறோம்.

    குந்தா பகுதியில் நிலவும் சீதோஷ்ண நிலை தக்காளி விளைச்சலுக்கு ஏற்றது. மாட்டுச்சாண உரமிட்டு தக்காளியை சாகுபடி செய்தோம். இப்பகுதியில் வனவிலங்குகள் தொந்தரவு அதிகம். காட்டெருமை, கரடி, கடமான், குரங்குகள் கூட்டம் கூட்டமாக வரும்.

    வனவிலங்குகள் செடிகளை சேதப்படுத்தாமல் இருக்க இரவு, பகலாக காவல் காத்தோம். மேலும் தக்காளி செடிகளை பராமரிக்க நிறைய செலவு ஆகிறது.

    தக்காளி ரூ.200க்கு மேல் விற்றாலும் பரவாயில்லை. எங்களுக்கு கிலோவுக்கு ரூ.80 கிடைத்தால் போதும். ஆயிரம் கிலோவுக்கு மேல் தக்காளி அறுவடை செய்து உள்ளூர் மக்களுக்கு குறைந்த விலையில் கொடுத்திருக்கிறோம்.

    வெளியூரில் இருந்து எல்லாம் ஆட்கள் வந்து தக்காளியை அதிக விலைக்கு கேட்டார்கள்.

    உள்ளூர் மக்கள் தேவைக்கே பற்றாக்குறையாக உள்ள நிலையில், வெளியூரில் தக்காளியை விற்க மனமில்லை. குந்தா மக்களுக்கு நாங்கள் செய்யும் சேவையாகவே இதனை கருதுகிறோம்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    இவர்களிடம் குந்தா மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் போட்டி போட்டு வந்து தக்காளியை வாங்கி செல்கின்றனர். இதுகுறித்து குந்தாவை சேர்ந்த பெண்கள் கூறுகையில், நீலகிரி மாவட்டத்தில் ஒரு கிலோ தக்காளி ரூ.150-க்கும் மேல் விற்கப்படுகிறது. இது எங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

    • கடந்த சில வாரங்களாக வத்தலக்குண்டுவிலும் வரத்து குறைந்ததால் ஒரு கிலோ ரூ.150 வரை விற்பனையானது.
    • ஆடிப்பெருக்கை முன்னிட்டு பல்வேறு ஊர்களில் இருந்து நேற்று இரவு தக்காளி வரத்து அதிகரித்தது.

    வத்தலக்குண்டு:

    தமிழகத்தில் கடந்த 1 மாதமாக தக்காளி விலை கடுமையாக உயர்ந்து சாமானிய மற்றும் ஏழை மக்கள் வாங்கி பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலும் ஒரு கிலோ தக்காளி ரூ.160 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    உழவர் சந்தையிலும் விலை அதிகரித்து விற்பனையாவதால் பொதுமக்கள் தக்காளி வாங்குவதை குறைத்தும், தவிர்த்தும் வருகின்றனர். இந்நிலையில் வத்தலக்குண்டு மார்க்கெட்டுக்கு இன்று ஆடிப்பெருக்கை முன்னிட்டு அதிக அளவு தக்காளி வந்ததால் அதிரடியாக விலை குறைந்தது.

    வத்தலக்குண்டு மார்க்கெட்டுக்கு தேனி, வருஷநாடு, சின்னமனூர் உள்ளிட்ட ஊர்களில் இருந்தும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்தும் தக்காளி கொண்டு வரப்படுகிறது. சராசரியாக 15 டன் தக்காளி இங்கு வரத்து இருக்கும். இங்கிருந்துதான் திங்கட்கிழமை நடக்கும் பட்டிவீரன்பட்டி சந்தைக்கும் தக்காளி செல்லும். இது தவிர பல்வேறு ஊர்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படும்.

    கடந்த சில வாரங்களாக வத்தலக்குண்டுவிலும் வரத்து குறைந்ததால் ஒரு கிலோ ரூ.150 வரை விற்பனையானது. இந்நிலையில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு பல்வேறு ஊர்களில் இருந்து நேற்று இரவு தக்காளி வரத்து அதிகரித்தது. சுமார் 12 டன் வரை தக்காளி வந்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

    ஒரு கிலோ ரூ.55 முதல் ரூ.60 வரை விற்பனை செய்யப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் பொதுமக்கள் ஏராளமானோர் போட்டி போட்டு தக்காளியை ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். மலிவு விலையில் ரேசன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும் என கூறினாலும், பெரும்பாலான கடைகளில் இது கிடைக்காததால் மக்கள் ஏமாற்றத்தில் இருந்தனர்.

    இந்நிலையில் வத்தலக்குண்டு மார்க்கெட்டிலேயே கிலோ ரூ.55க்கு தக்காளி கிடைத்ததால் மகிழ்ச்சியடைந்தனர். ஒரு சில வியாபாரிகள் ஏற்கனவே தாங்கள் வாங்கி வைத்திருந்த தக்காளியை பழைய விலைக்கே கூடுதலாக விற்றனர். புதிதாக வந்த தக்காளியை நாளை முதல் விற்பனை செய்வதாக தெரிவித்தனர். வரத்து அதிகரிக்கும் சமயங்களில் தக்காளியை பதுக்கி வைத்து விற்பனை செய்வதை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    • தக்காளி விலையை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன.
    • நாடு முழுவதும் தக்காளி விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.

    புதுடெல்லி:

    இந்திய சமையலறைகளில் மிக முக்கிய இடம் பிடித்துள்ள தக்காளியின் விலை கடந்த சில வாரங்களாக அதிகரித்து வருகிறது. இது அனைத்து தரப்பினரையும் கடுமையாக பாதித்து உள்ளது.

    எனவே தக்காளி விலையை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. குறிப்பாக அரசு சார்பில் பல மாநிலங்களில் சலுகை விலையில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    தலைநகர் டெல்லியில் கடந்த மாதம் 14-ந்தேதி முதல் தள்ளுபடி விலையில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் விலை சீராக இருந்து வந்தது.

    ஆனால் தற்போது தக்காளி உற்பத்தி செய்யப்படும் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் உற்பத்தி மற்றும் வினியோக பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

    இதனால் நாடு முழுவதும் தக்காளி விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. பல இடங்களில் வரலாறு காணாத உச்சத்தில் விலை உள்ளது.

    டெல்லியில் பல பகுதிகளிலும் சராசரியாக தக்காளி ஒரு கிலோ ரூ.203 வரை விற்கப்படுவதாக மத்திய நுகர்வோர் நலத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. அதேநேரம் அரசின் அன்னை பண்ணை கடைகளில் ரூ.259-வரை விற்கப்படுகிறது. இந்த கடைகளின் செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், 'காலநிலை மாறுபாடுகள் காரணமாக நாடு முழுவதும் கடந்த 2 மாதங்களாக தக்காளி வினியோகம் பாதிக்கப்பட்டு உள்ளது. தக்காளி வரத்து குறைவால் மொத்த விலை கடுமையாக உயர்ந்து உள்ளது. இதனால் சில்லரை விலையும் அதிகரித்து இருக்கிறது' என தெரிவித்தார்.

    ஆசியாவின் மிகப்பெரிய காய்கறி சந்தையான டெல்லி ஆசாத்பூரில் நேற்று ரூ.170 முதல் ரூ.220 வரை தக்காளி விற்கப்பட்டது.

    இதுதொடர்பாக ஆசாத்பூர் தக்காளி சங்கத்தலைவர் அசோக் கவுசிக் கூறும்போது, 'கனமழை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் தக்காளி விளைச்சால் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் சந்தைகளில் தக்காளி வரத்து குறைந்து உள்ளது. எனினும் அடுத்த 10 நாட்களில் இந்த நிலை மேம்படும்' என்றார்.

    ஆசாத்பூர் சந்தைக்கு நேற்று வெறும் 15 சதவீதம் அளவுக்கு தக்காளி வரத்து இருந்தது. அதாவது கர்நாடகா மற்றும் ஆந்திராவில் இருந்து வெறும் 6 லாரிகளில் மட்டுமே தக்காளி வந்ததாக விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.

    • கோயம்பேடு சந்தைக்கு தினசரி 60-க்கும் மேற்பட்ட லாரிகளில் விற்பனைக்கு வரும் தக்காளியின் வரத்து கடந்த ஒரு மாதமாகவே பாதியாக குறைந்து இருந்தது.
    • வரும் நாட்களில் தக்காளி வரத்து மேலும் அதிகரித்து விலை குறைய வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    போரூர்:

    தமிழகத்தில் தக்காளி விலை கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக உச்சத்தில் இருந்து வருகிறது. ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து தினசரி கோயம்பேடு சந்தைக்கு வரும் தக்காளி குறைந்ததால் இந்த விலை உயர்வு ஏற்பட்டது. வடமாநிலங்களில் பெய்த "திடீர்" மழையால் அங்குள்ள வியாபாரிகளும் தக்காளியை கொள்முதல் செய்ய ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் அதிகளவில் குவிந்ததால் கோயம்பேடு மார்கெட்டுக்கு வரும் தக்காளியின் வரத்து பாதியாக குறைந்து விலை அதிகரிக்க தொடங்கியது. இதனால் தக்காளி விலை புதிய உச்சமாக கிலோ ரூ.200 வரை விற்கப்பட்டது.

    கோயம்பேடு சந்தைக்கு தினசரி 60-க்கும் மேற்பட்ட லாரிகளில் விற்பனைக்கு வரும் தக்காளியின் வரத்து கடந்த ஒரு மாதமாகவே பாதியாக குறைந்து இருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அதன் வரத்து மேலும் குறைந்து 25 லாரிகளில் மட்டுமே தக்காளி விற்பனைக்கு வந்தது. இதற்கிடையே தற்போது கோயம்பேடு மார்கெட்டுக்கு வரும் தக்காளியின் வரத்து சற்று அதிகரித்து வருகிறது. இன்று 35 லாரிகளில் தக்காளி விற்பனைக்கு வந்தது. இதையடுத்து மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ130-க்கும், மார்க்கெட்டில் உள்ள சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.150-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எனவே வரும் நாட்களில் தக்காளி வரத்து மேலும் அதிகரித்து விலை குறைய வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    இதுகுறித்து தக்காளி மொத்த வியாபாரி ஜாபர் அலி சேட் கூறும்போது,

    ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் மழை பாதிப்பு குறைந்து உற்பத்தி சீராக நடந்து வருகிறது. இனிவரும் நாட்களில் தக்காளியின் வரத்து மேலும் அதிகரித்து விலை படிப்படியாக குறையவே வாய்ப்பு உள்ளது. 15நாட்களுக்குள் தக்காளியின் விலை பழைய நிலைக்கு திரும்பி ஒரு கிலோ ரூ.40 முதல் ரூ.50 என்ற நிலைக்கு வந்துவிடும் என்றார்.

    • விவசாயிகளுக்கு பெண் கொடுக்க சமுதாயத்தில் பலரும் மறுத்து வருகிறார்கள்.
    • விவசாயிகளை நம்பி பெண் கொடுக்க வேண்டும். விவசாயம் எப்போதும் விவசாயிகளை கைவிடாது.

    திருப்பூர்:

    தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும் கடந்த சில வாரங்களாகவே தக்காளியின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் தக்காளி விலை உயர்ந்து வருவதால், நடுத்தர வர்க்கத்தினர் பலர் சமையலில் தக்காளியை தவிர்த்து உள்ளனர். அந்த அளவிற்கு தக்காளியின் விலை ஒவ்வொரு மாநிலங்களிலும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

    இதற்கிடையே கடந்த சில வாரங்களாகவே தக்காளி பயிர் செய்த விவசாயிகள் பலர் கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டி உள்ளனர் என்ற செய்திகளும் அவ்வப்போது வந்து கொண்டிருக்கிறது.

    தற்போது திருப்பூர் மாவட்டத்தில் தக்காளியை பயிர் செய்த விவசாயி ஒருவர் ஒரே நாளில் ரூ.4 லட்சத்திற்கு தக்காளியை விற்பனை செய்துள்ளார். திருப்பூர் தென்னம்பாளையம் சந்தைக்கு திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் குண்டடம் ஜோதியம்பட்டி பகுதியை சேர்ந்த விவசாயி வெங்கடேஷ் (27) தான் விளைவித்த தக்காளிகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தார். 3900 கிலோ தக்காளிகளை 260 பெட்டிகளில், பெட்டிக்கு 15 கிலோ வீதம் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தார். ஒரு பெட்டி ரூ.1550 முதல் விற்பனையானது.

    தக்காளியை விற்பனைக்கு கொண்டு வந்த நேரத்திலேயே மளமளவென விற்று தீர தொடங்கியது. ஒரு கிலோ தக்காளி ரூபாய் 120 முதல் 160 வரை விற்பனையானது. இதன் மூலம் விவசாயி வெங்கடேசுக்கு ஒரே நாளில் ரூ. 4 லட்சத்து 3 ஆயிரத்திற்கு தக்காளி விற்பனையானது.

    திருப்பூர் மாவட்டத்தில் தக்காளி விற்பனை ஒரே நாளில் லட்சக்கணக்கில் நடந்தது, பல விவசாயிகளிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து விவசாயி வெங்கடேஷ் கூறியதாவது:-

    ஜோதியம்பட்டி பகுதியில் கடந்த 5 ஆண்டுகளாக தக்காளி விவசாயம் செய்து வருகிறேன். தக்காளியை நம்பியே அதிக அளவு பயிர் செய்து வந்தேன். தற்போது 9 ஏக்கர் அளவிற்கு தக்காளி பயிரிட்டுள்ளேன். இந்த தக்காளிகளும் விளைந்து பறிக்கும் நிலைக்கு வந்துள்ளன. இப்படிப்பட்ட சூழ்நிலையை தக்காளி விலை அதிகமாக இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. நான் இவ்வாறு விலை உயரும் என்று எதிர்பார்க்கவில்லை. எப்போதும் போலவே வழக்கமாக தக்காளிகளை பயிரிட்டேன். ஆனால் தற்போது தக்காளிக்கு பல்வேறு பகுதிகளிலும், வெளிமாநிலங்களிலும் தேவை அதிகரித்துள்ளதால் தக்காளி விற்பனை விறுவிறுவென நடந்து முடிந்தது. இன்னமும் தக்காளிகள் பறிக்க வேண்டி உள்ளது.

    விவசாயிகளுக்கு பெண் கொடுக்க சமுதாயத்தில் பலரும் மறுத்து வருகிறார்கள். இதனால் பல விவசாயிகள் பெண் கிடைக்காத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். விவசாயிகளை நம்பி பெண் கொடுக்க வேண்டும். விவசாயம் எப்போதும் விவசாயிகளை கைவிடாது. இதுபோன்று திடீரென அதிக அளவு வருவாய் விவசாயத்தில் விவசாயிகளுக்கு கிடைக்கும். இந்த நம்பிக்கையில் தான் பெரும்பாலான விவசாயிகள், நஷ்டத்தை சந்தித்தாலும் தொடர்ந்து விவசாயம் செய்து வருகிறார்கள். இனி வருகிற காலத்தில் விவசாயிகளுக்கு பெண் கொடுக்க தயங்க மாட்டார்கள் என நம்புகிறேன். விவசாயிகளை நம்பி பெண் கொடுக்க முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தக்காளி விலையேற்றத்தை கட்டுக்குள் கொண்டுவர பல்வேறு நடவடிக்கைகள் கூட்டுறவுத்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • தமிழ்நாடு முழுவதும் தக்காளி விற்பனை 302 ரேஷன் கடைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

    சென்னை:

    அண்டை மாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து குறைந்ததாலும், தென்மேற்கு பருவமழை காரணமாக தக்காளி பயிரிடுவது பாதிக்கப்பட்டதாலும், ஜூன் மாத இறுதியில் வெளிச்சந்தையில் தக்காளியின் விலை கிலோ ஒன்றுக்கு ரூ.100 முதல் ரூ.120 வரை உயர்ந்தது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உத்தரவின்படி, தக்காளி விலையேற்றத்தை கட்டுக்குள் கொண்டுவர பல்வேறு நடவடிக்கைகள் கூட்டுறவுத்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதன்படி, கூட்டுறவுத்துறையின் கீழ் சென்னையில் செயல்படும் 27 பண்ணைப்பசுமை நுகர்வோர் கடைகள் மற்றும் 2 நகரும் பண்ணைப்பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் தக்காளி கிலோ ஒன்றுக்கு ரூ.60 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    சென்னையில் முதற்கட்டமாக வடசென்னையில் 32 ரேஷன் கடைகளிலும் மத்திய மற்றும் தென் சென்னையில் தலா 25 ரேஷன் கடைகள் என மொத்தம் 82 கடைகளிலும், மாநிலத்தில் பிற பகுதிகளில் 215 கடைகள் என மொத்தம் 302 ரேஷன் கடைகள் மூலம் தக்காளி கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    தொடர்ந்து தக்காளி விலை உயர்ந்து வருவதை கருத்தில் கொண்டு, பொதுமக்கள் பாதிப்படையாமல் தடுக்கும் வகையில் தற்போது தமிழ்நாடு முழுவதும் தக்காளி விற்பனை 302 ரேஷன் கடைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

    இந்நிலையில் தக்காளி விற்பனையை 500 ரேஷன் கடைகளுக்கு நீட்டிப்பு செய்ய முடிவு செய்யப்பட்டு, இன்று முதல் தக்காளி கிலோ ரூ.60க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    67 பண்ணை பசுமைக்கடைகள், 500 ரேஷன் கடைகளில் தக்காளி கிலோ ரூ.60க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று வரை 300 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 500 ஆக உயர்ந்துள்ளது. நபர் ஒருவருக்கு 1 கிலோ தக்காளி மட்டுமே வழங்கப்படுகிறது.

    தமிழகம் முழுவதும் சில்லறை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ.200க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் சென்னையில் மலிவு விலையில் தக்காளி வாங்க நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருந்து வாங்கி சென்றனர்.

    • தக்காளி வரத்து 310 டன்னாக குறைந்ததால் விலை ஏற்றம்
    • சென்னையில் இதுவரை இவ்வாறு விலை உயர்ந்ததில்லை எனக் கூறப்படுகிறது

    தக்காளி விலை தொடர்ந்து ஏற்றத்தை கண்டு வருகிறது. நேற்று கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ 160 ரூபாய் என்ற அளவில் விற்பனை செய்து வந்த நிலையில், இன்று 10 ரூபாய் அதிகரித்து 170 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    இதனால் சில்லறை விற்பனையில் 200 ரூபாயை தாண்டும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று தக்காளி விலை உயர்ந்துள்ளது.

    கோயம்பேடு சந்தைக்கு வழக்கமாக 1200 டன் தக்காளி வரும். ஆனால், இன்று 310 டன் தக்காளி மட்டுமே வந்ததால் நேற்றைய விலையை விட இன்று 10 ரூபாய் அதிகரிக்க முக்கிய காரணமாக என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • தக்காளி விலை அதிகபட்சமாக 200 ரூபாய் வரை விற்பனையாகிறது.
    • இதனால் பொதுமக்கள் தக்காளி வாங்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள்.

    சேலம்:

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தக்காளி விலை அதிகபட்சமாக 200 ரூபாய் வரை விற்பனையாகிறது. இதனால் பொதுமக்கள் தக்காளி வாங்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள்.

    இதை அடுத்து ரேஷன் கடைகள் மூலம் பொது மக்களுக்கு 60 ரூபாய்க்கு தக்காளி வழங்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த

    சில நாட்களாக தக்காளி

    விலை மேலும் அதிகரித்த தால் ரேஷன் கடைகள் மூலம் தக்காளி விநியோ கிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    இதேபோல் சேலம் பேலஸ் தியேட்டர் அருகே உள்ள கூட்டுறவு பண்டக சாலையிலும் தக்காளி விற்பனை நிறுத்தப்பட்டது. இன்று காலை 10-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இங்கு தக்காளி வாங்க வந்தனர். ஆனால் அங்கு கடந்த 2 நாட்களாக விற்பனைக்கு தக்காளி வரவில்லை என்று கூறியுள்ளனர்.

    இதனால் ஆத்திர மடைந்த பொதுமக்கள் கூட்டுறவு பண்டக சாலையை முற்று கையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அங்கு இருந்த ஊழியர்களுடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

    இதற்கிடையே அங்கு வந்த வட்ட வழங்கல் அதிகாரிகள் அவர்களை சமாதானம் செய்தனர். பின்னர் விரைவில் தக்காளி வழங்க நடவ டிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தனர்.

    இதை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். 

    • சென்னை புறநகர் பகுதிகள் மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட இடங்களில் தக்காளி விலை ரூ.200- தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
    • தக்காளி விலை அதிகமாக உள்ளதால் சில்லரை விற்பனை கடைகளில் 100 கிராம், 200 கிராம் என்ற அளவில் தக்காளி விற்பது நிறுத்தப்பட்டது.

    போரூர்:

    சமையல் அறையில் முக்கிய பங்கு வகிப்பது தக்காளி ஆகும். கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு வரை குறைந்து இருந்த தக்காளியின் விலை இந்த மாத தொடக்கம் முதல் உச்சம் தொட ஆரம்பித்தது.

    கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தக்காளியின் விலை ரூ.150-யை தாண்டியே விற்று வருகிறது.

    சென்னையின் முக்கிய சந்தையான கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வழக்கமாக 60 லாரிகளுக்கும் மேல் தினசரி தக்காளி விற்பனைக்கு வருவது வழக்கம். ஆனால் தற்போது 30 முதல் 35 லாரிகளில் மட்டுமே தக்காளி விற்பனைக்கு வந்து கொண்டு இருக்கிறது.

    இதனால் அதன் விலை தாறுமாறாக உயரத் தொடங்கியது. மொத்த மார்க்கெட்டில் கிலோ ரூ.130-க்கும் சில்லரை விற்பனை கடைகளில் ரூ.160 வரையும் விற்பனை ஆனது.

    கடந்த வாரத்தில் தக்காளி வரத்து சற்று அதிகரிக்க தொடங்கியதால் அதன் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதன் பின்னரும் தக்காளி வரத்து மேலும் குறைய தொடங்கியதால் விலை மேலும் எகிறத் தொடங்கி உள்ளது.

    கோயம்பேடு மார்க்கெட்டுக்கு இன்று காலை 35 லாரிகளில் தக்காளி விற்பனைக்கு வந்தது. மார்க்கெட்டில் உள்ள சில்லரை விற்பனை கடைகளில் தக்காளி கிலோ ரூ.180-க்கும், வெளியிடங்களில் ரூ.200-க்கும் விற்பனை ஆகிறது.

    சென்னை புறநகர் பகுதிகள் மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட இடங்களில் தக்காளி விலை ரூ.200- தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். சமையலுக்கு சிக்கனமாக தக்காளியை பயன்படுத்தும் நிலைக்கு அனைவரும் தள்ளப்பட்டு உள்ளனர்.

    தக்காளி விலை அதிகமாக உள்ளதால் சில்லரை விற்பனை கடைகளில் 100 கிராம், 200 கிராம் என்ற அளவில் தக்காளி விற்பது நிறுத்தப்பட்டது. சில மளிகை கடைகளில் தக்காளி விற்பனையையே நிறுத்திவிட்டனர்.

    கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வழக்கமாக கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து தக்காளி விற்பனைக்கு வருவது வழக்கம். இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து கர்நாடகா, ஆந்திராவில் பலத்த மழை பெய்ததால் தக்காளி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் தக்காளி வரத்து பாதியாக குறைந்தது.

    இதேபோல் டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களிலும் கனமழை பெய்து வருவதால் அங்குள்ள வியாபாரிகளில் பெரும்பாலானோர் கர்நாடகா, ஆந்திராவில் இருந்து தக்காளி கொள்முதல் செய்து வருகின்றனர். இதனால் தக்காளிக்கு கடும் கிராக்கி ஏற்பட்டதால் இந்த விலை உயர்வு என்று தெரிகிறது.

    இதுகுறித்து தக்காளி வியாபாரி ஜாபர் அலி சேட் கூறும்போது:-

    கோயம்பேடு மார்க்கெட்டுக்கு இந்த மாதம் தொடக்கம் முதலே தக்காளியின் வரத்து பாதியாக குறைந்து விலை அதிகரித்தது. வரலாறு காணாத வகையில் தக்காளியின் விலை அதிகரித்து இருப்பதால் வியாபாரம் எதிர்பார்த்த அளவுக்கு நடக்கவில்லை. நஷ்டம் ஏற்படும் என்பதால் குறைந்த அளவிலேயே சில்லரை வியாபாரிகள் வாங்கி செல்கிறார்கள். விற்பனை மந்தமாகவே நடைபெற்று வருகிறது.

    மார்க்கெட்டுக்கு நேற்று 31 லாரிகளில் தக்காளி விற்பனைக்கு வந்த நிலையில் இன்று அதன் வரத்து சற்று அதிகரித்து 35 லாரிகளில் தக்காளி வந்தது.

    மார்க்கெட்டில் உள்ள விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.180-க்கு விற்கப்படுகிறது. இதனால் வெளி மாவட்டங்களில் தக்காளி விலை ரூ.200 மற்றும் அதனை கடந்தும் விற்பனை ஆகிறது. வரும் நாட்களில் தக்காளி விலை உடனடியாக குறைய வாய்ப்பு இல்லை.

    தக்காளியின் விலை அதிகபட்சமாக ரூ.250 வரை செல்ல வாய்ப்பு இருக்கிறது. தற்போது கர்நாடக, ஆந்திராவில் அதிக அளவில் மழை இல்லாததால் அடுத்த வாரம் முதல் தக்காளி வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. தக்காளி வரத்து அதிகரித்தால் மட்டுமே விலை குறையும். இல்லை எனில் இதே நிலைதான் நீடிக்கும். இன்னும் ஓரிரு வாரங்களில் ஆந்திர மாநிலம் ஆன்தபூர், கல்யாணதுர்கா, தாவணிக்கரை உள்ளிட்ட இடங்களில் இருந்து தமிழகத்துக்கு தக்காளி வரத்தொடங்கிவிடும். இதன் பின்னர் தக்காளி விலை குறைய வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தக்காளி விலை உயர்வு குறித்து பொதுமக்கள் கூறும்போது,

    எந்த சமையலும் தக்காளி இல்லாமல் செய்யமுடியாது. தக்காளி இந்த அளவுக்கு விலை உயரும் என்று எதிர்பார்க்கவில்லை. சில கடைகளில் கிலோ ரூ.200-ஐ கடந்தும் விற்பனை ஆகிறது. இதனால் தக்காளி இல்லாமல் சமையல் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம். தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கடந்த 8 நாட்களில் ரூ.80 அதிகரித்து உள்ளது. கடந்த வாரத்தில் ரூ.100 ஆக குறைந்து இந்த தக்காளி இன்று ரூ.180-க்கு விற்பனை ஆவது குறிப்பிடத்தக்கது. தினமும் 1200 டன் தக்காளி வரவேண்டிய இடத்தில் 400 டன் மட்டுமே வருவதாக வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    இதேபோல் தமிழகத்தின் நெல்லை, புதுக்கோட்டை கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட நகரங்களில் தக்காளியின் விலை தாறுமாறாக அதிகரித்து உள்ளது. நெல்லையில் தக்காளி கிலோ ரூ.200-க்கும், மற்ற நகரங்களில் ரூ.180-க்கும் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது.

    தக்காளி விலையை தொடர்ந்து பீன்ஸ் விலையும் தொடர்ந்து உச்சத்திலேயே இருந்து வருகிறது. கோயம்பேடு சந்தையில் இன்று ஒரு கிலோ பீன்ஸ் ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    ×