search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரத்து தொடர்ந்து சரிவு- தக்காளி கிலோ ரூ.200-ஐ தாண்டியது
    X

    கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரத்து தொடர்ந்து சரிவு- தக்காளி கிலோ ரூ.200-ஐ தாண்டியது

    • சென்னை புறநகர் பகுதிகள் மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட இடங்களில் தக்காளி விலை ரூ.200- தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
    • தக்காளி விலை அதிகமாக உள்ளதால் சில்லரை விற்பனை கடைகளில் 100 கிராம், 200 கிராம் என்ற அளவில் தக்காளி விற்பது நிறுத்தப்பட்டது.

    போரூர்:

    சமையல் அறையில் முக்கிய பங்கு வகிப்பது தக்காளி ஆகும். கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு வரை குறைந்து இருந்த தக்காளியின் விலை இந்த மாத தொடக்கம் முதல் உச்சம் தொட ஆரம்பித்தது.

    கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தக்காளியின் விலை ரூ.150-யை தாண்டியே விற்று வருகிறது.

    சென்னையின் முக்கிய சந்தையான கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வழக்கமாக 60 லாரிகளுக்கும் மேல் தினசரி தக்காளி விற்பனைக்கு வருவது வழக்கம். ஆனால் தற்போது 30 முதல் 35 லாரிகளில் மட்டுமே தக்காளி விற்பனைக்கு வந்து கொண்டு இருக்கிறது.

    இதனால் அதன் விலை தாறுமாறாக உயரத் தொடங்கியது. மொத்த மார்க்கெட்டில் கிலோ ரூ.130-க்கும் சில்லரை விற்பனை கடைகளில் ரூ.160 வரையும் விற்பனை ஆனது.

    கடந்த வாரத்தில் தக்காளி வரத்து சற்று அதிகரிக்க தொடங்கியதால் அதன் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதன் பின்னரும் தக்காளி வரத்து மேலும் குறைய தொடங்கியதால் விலை மேலும் எகிறத் தொடங்கி உள்ளது.

    கோயம்பேடு மார்க்கெட்டுக்கு இன்று காலை 35 லாரிகளில் தக்காளி விற்பனைக்கு வந்தது. மார்க்கெட்டில் உள்ள சில்லரை விற்பனை கடைகளில் தக்காளி கிலோ ரூ.180-க்கும், வெளியிடங்களில் ரூ.200-க்கும் விற்பனை ஆகிறது.

    சென்னை புறநகர் பகுதிகள் மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட இடங்களில் தக்காளி விலை ரூ.200- தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். சமையலுக்கு சிக்கனமாக தக்காளியை பயன்படுத்தும் நிலைக்கு அனைவரும் தள்ளப்பட்டு உள்ளனர்.

    தக்காளி விலை அதிகமாக உள்ளதால் சில்லரை விற்பனை கடைகளில் 100 கிராம், 200 கிராம் என்ற அளவில் தக்காளி விற்பது நிறுத்தப்பட்டது. சில மளிகை கடைகளில் தக்காளி விற்பனையையே நிறுத்திவிட்டனர்.

    கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வழக்கமாக கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து தக்காளி விற்பனைக்கு வருவது வழக்கம். இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து கர்நாடகா, ஆந்திராவில் பலத்த மழை பெய்ததால் தக்காளி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் தக்காளி வரத்து பாதியாக குறைந்தது.

    இதேபோல் டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களிலும் கனமழை பெய்து வருவதால் அங்குள்ள வியாபாரிகளில் பெரும்பாலானோர் கர்நாடகா, ஆந்திராவில் இருந்து தக்காளி கொள்முதல் செய்து வருகின்றனர். இதனால் தக்காளிக்கு கடும் கிராக்கி ஏற்பட்டதால் இந்த விலை உயர்வு என்று தெரிகிறது.

    இதுகுறித்து தக்காளி வியாபாரி ஜாபர் அலி சேட் கூறும்போது:-

    கோயம்பேடு மார்க்கெட்டுக்கு இந்த மாதம் தொடக்கம் முதலே தக்காளியின் வரத்து பாதியாக குறைந்து விலை அதிகரித்தது. வரலாறு காணாத வகையில் தக்காளியின் விலை அதிகரித்து இருப்பதால் வியாபாரம் எதிர்பார்த்த அளவுக்கு நடக்கவில்லை. நஷ்டம் ஏற்படும் என்பதால் குறைந்த அளவிலேயே சில்லரை வியாபாரிகள் வாங்கி செல்கிறார்கள். விற்பனை மந்தமாகவே நடைபெற்று வருகிறது.

    மார்க்கெட்டுக்கு நேற்று 31 லாரிகளில் தக்காளி விற்பனைக்கு வந்த நிலையில் இன்று அதன் வரத்து சற்று அதிகரித்து 35 லாரிகளில் தக்காளி வந்தது.

    மார்க்கெட்டில் உள்ள விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.180-க்கு விற்கப்படுகிறது. இதனால் வெளி மாவட்டங்களில் தக்காளி விலை ரூ.200 மற்றும் அதனை கடந்தும் விற்பனை ஆகிறது. வரும் நாட்களில் தக்காளி விலை உடனடியாக குறைய வாய்ப்பு இல்லை.

    தக்காளியின் விலை அதிகபட்சமாக ரூ.250 வரை செல்ல வாய்ப்பு இருக்கிறது. தற்போது கர்நாடக, ஆந்திராவில் அதிக அளவில் மழை இல்லாததால் அடுத்த வாரம் முதல் தக்காளி வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. தக்காளி வரத்து அதிகரித்தால் மட்டுமே விலை குறையும். இல்லை எனில் இதே நிலைதான் நீடிக்கும். இன்னும் ஓரிரு வாரங்களில் ஆந்திர மாநிலம் ஆன்தபூர், கல்யாணதுர்கா, தாவணிக்கரை உள்ளிட்ட இடங்களில் இருந்து தமிழகத்துக்கு தக்காளி வரத்தொடங்கிவிடும். இதன் பின்னர் தக்காளி விலை குறைய வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தக்காளி விலை உயர்வு குறித்து பொதுமக்கள் கூறும்போது,

    எந்த சமையலும் தக்காளி இல்லாமல் செய்யமுடியாது. தக்காளி இந்த அளவுக்கு விலை உயரும் என்று எதிர்பார்க்கவில்லை. சில கடைகளில் கிலோ ரூ.200-ஐ கடந்தும் விற்பனை ஆகிறது. இதனால் தக்காளி இல்லாமல் சமையல் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம். தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கடந்த 8 நாட்களில் ரூ.80 அதிகரித்து உள்ளது. கடந்த வாரத்தில் ரூ.100 ஆக குறைந்து இந்த தக்காளி இன்று ரூ.180-க்கு விற்பனை ஆவது குறிப்பிடத்தக்கது. தினமும் 1200 டன் தக்காளி வரவேண்டிய இடத்தில் 400 டன் மட்டுமே வருவதாக வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    இதேபோல் தமிழகத்தின் நெல்லை, புதுக்கோட்டை கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட நகரங்களில் தக்காளியின் விலை தாறுமாறாக அதிகரித்து உள்ளது. நெல்லையில் தக்காளி கிலோ ரூ.200-க்கும், மற்ற நகரங்களில் ரூ.180-க்கும் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது.

    தக்காளி விலையை தொடர்ந்து பீன்ஸ் விலையும் தொடர்ந்து உச்சத்திலேயே இருந்து வருகிறது. கோயம்பேடு சந்தையில் இன்று ஒரு கிலோ பீன்ஸ் ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    Next Story
    ×