search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தக்காளி விலை மீண்டும் கடும் உயர்வு: டெல்லியில் ஒரு கிலோ ரூ.259-க்கு விற்பனை
    X

    தக்காளி விலை மீண்டும் கடும் உயர்வு: டெல்லியில் ஒரு கிலோ ரூ.259-க்கு விற்பனை

    • தக்காளி விலையை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன.
    • நாடு முழுவதும் தக்காளி விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.

    புதுடெல்லி:

    இந்திய சமையலறைகளில் மிக முக்கிய இடம் பிடித்துள்ள தக்காளியின் விலை கடந்த சில வாரங்களாக அதிகரித்து வருகிறது. இது அனைத்து தரப்பினரையும் கடுமையாக பாதித்து உள்ளது.

    எனவே தக்காளி விலையை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. குறிப்பாக அரசு சார்பில் பல மாநிலங்களில் சலுகை விலையில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    தலைநகர் டெல்லியில் கடந்த மாதம் 14-ந்தேதி முதல் தள்ளுபடி விலையில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் விலை சீராக இருந்து வந்தது.

    ஆனால் தற்போது தக்காளி உற்பத்தி செய்யப்படும் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் உற்பத்தி மற்றும் வினியோக பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

    இதனால் நாடு முழுவதும் தக்காளி விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. பல இடங்களில் வரலாறு காணாத உச்சத்தில் விலை உள்ளது.

    டெல்லியில் பல பகுதிகளிலும் சராசரியாக தக்காளி ஒரு கிலோ ரூ.203 வரை விற்கப்படுவதாக மத்திய நுகர்வோர் நலத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. அதேநேரம் அரசின் அன்னை பண்ணை கடைகளில் ரூ.259-வரை விற்கப்படுகிறது. இந்த கடைகளின் செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், 'காலநிலை மாறுபாடுகள் காரணமாக நாடு முழுவதும் கடந்த 2 மாதங்களாக தக்காளி வினியோகம் பாதிக்கப்பட்டு உள்ளது. தக்காளி வரத்து குறைவால் மொத்த விலை கடுமையாக உயர்ந்து உள்ளது. இதனால் சில்லரை விலையும் அதிகரித்து இருக்கிறது' என தெரிவித்தார்.

    ஆசியாவின் மிகப்பெரிய காய்கறி சந்தையான டெல்லி ஆசாத்பூரில் நேற்று ரூ.170 முதல் ரூ.220 வரை தக்காளி விற்கப்பட்டது.

    இதுதொடர்பாக ஆசாத்பூர் தக்காளி சங்கத்தலைவர் அசோக் கவுசிக் கூறும்போது, 'கனமழை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் தக்காளி விளைச்சால் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் சந்தைகளில் தக்காளி வரத்து குறைந்து உள்ளது. எனினும் அடுத்த 10 நாட்களில் இந்த நிலை மேம்படும்' என்றார்.

    ஆசாத்பூர் சந்தைக்கு நேற்று வெறும் 15 சதவீதம் அளவுக்கு தக்காளி வரத்து இருந்தது. அதாவது கர்நாடகா மற்றும் ஆந்திராவில் இருந்து வெறும் 6 லாரிகளில் மட்டுமே தக்காளி வந்ததாக விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×