search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "thaipusam"

    • பக்தர்கள் எடுத்து வரும் பால்குடங்கள் மூலஸ்தானத்தில் உள்ள வேலுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
    • அதிகாலை முதல் திரளான பக்தர்கள் கிரிவலமாக வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடு என்ற பெருமை கொண்டது திருப்பரங்குன்றம்.

    இங்கு மூலஸ்தானத்தில் சுப்பிரமணிய சுவாமி, சத்தியகிரீசுவரர், கற்பக விநாயகர், துர்க்கை, பவளக்கனிவாய் பெருமாள் ஆகிய 5 சுவாமிகள் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். திருப்பரங்குன்றம் மலை சிவலிங்க வடிவில் இருப்பதால் திருவண்ணாமலைக்கு அடுத்தபடியாக பக்தர்கள் இங்கு கிரிவலம் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர்.

    இன்று தைப்பூச நட்சத்திரம் மற்றும் தை பவுர்ணமியையொட்டி அதிகாலை முதல் திரளான பக்தர்கள் கிரிவலமாக வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். தைப்பூச நட்சத்திரத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் கோவிலில் நேற்று தைப்பூச திருவிழா நடந்த நிலையில், நாள்காட்டியில் இன்று தைப்பூசம் என்று இருப்பதால் பக்தர்கள் பால்காவடி, பறவை காவடி பால்குடம் உள்ளிட்டவைகள் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    பக்தர்கள் எடுத்து வரும் பால்குடங்கள் மூலஸ்தானத்தில் உள்ள வேலுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் நகரை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. திருப்பரங்குன்றம் கோவில் வாசல், சன்னதி தெரு மற்றும் கிரிவலப் பகுதிகளில் வாகனங்கள் சென்று வருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது .

    பால்குடம், காவடி, பறவை காவடி எடுத்து வரும் பக்தர்கள் வழக்கமாக சன்னதி தெரு வழியாக கோவில் வாசலை வந்தடைவார்கள். இன்று போலீசாரின் கெடுபிடி காரணமாக பக்தர்கள் கீழரத வீதிகள் வழியாக சுற்றி விடப்பட்டனர். கடும் வெயிலில் பக்தர்கள் கோவிலுக்கு சுற்றிவர வேண்டிய நிலை ஏற்பட்டது.

    • பக்தர்கள் பறவை காவடி எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    தென்காசி மாவட்டம் கடையம்-தென்காசி சாலை அருகே அமைந்துள்ளது பிரசித்திபெற்ற தோரணமலை முருகன் கோவில். இக்கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.

    தைப்பூசத்தையொட்டி இன்று அதிகாலையில் நடை திறக்கப்பட்டது.இதைத்தொடர்ந்து கணபதி ஹோமம், மகாஸ்ரீ கந்த ஹோமம் சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.

    பின்னர் ஊட்டி படுகர் இன மக்களின் பாரம்பரிய நடனம் நடைபெற்றது. வித்தியசமான இந்த நடனத்தை பக்தர்கள் கண்டு களித்தனர். இதையடுத்து பக்தர்கள் பறவை காவடி எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதையடுத்து விடுதலை போராட்ட தியாகிகள் மற்றும் உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் கவுரவிக்கப்பட்டனர். பின்னர் மதியம் முருகன், நடராஜர், விநாயகர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, உச்சிகால பூஜை நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரப் பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    இதைத் தொடர்ந்து மாலையில் சரணஜோதி திருவிளக்கு பூஜை, இரவில் வள்ளியம்மாள்புரம் திருமுருகன் உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இதில் பள்ளி மாணவர்கள் பலர் கலந்து கொள்கின்றனர். மேலும் விழாவில் காலை முதல் இரவு வரை அன்னதானம் நடைபெற்றது.

    விழாவில் பக்தர்களின் வசதிக்காக போலீஸ் பாதுகாப்பு வசதியுடன் இருசக்கர , நான்கு சக்கர வாகனங்களை நிறுத்த தகுந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் செண்பகராமன் செய்திருந்தார்.

    • இன்று சுவாமி அஸ்திரதேவர் தீர்த்தவாரி நடைபெற்றது.
    • பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று தைப்பூச திருவிழா நடைபெற்றது.

    இதை முன்னிட்டு, கடந்த சில நாட்களாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து பாதயாத்திரையாக திருச்செந்தூர் கோவிலுக்கு குவிந்த வண்ணம் இருந்தனர்.

    விழாவில் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்ய மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் வாகனங்களிலும் வந்து அலகு குத்தியும்,காவடி எடுத்து வந்தும் அங்கபிரதட்சனை செய்தும் சாமி தரிசனம் செய்தனர்.

    தைப்பூச திருவிழாவை முன்னிட்டு இன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 1.30மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், 3 மணிக்கு உதயமார்த்தாண்ட தீபாராதனை நடைபெற்றது.

    தொடர்ந்து சுவாமி அஸ்திரதேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரி நடைபெற்றது. அதன்பிறகு உச்சி கால அபிஷேகம், மதியம் 12 மணிக்கு உச்சி கால தீபாராதனை நடைபெற்றது.

    இன்று மாலை 5 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, மாலை 6 மணிக்கு ராக்கால அபிஷேகம், 6.45 மணிக்கு ராக்கால தீபாராதனை, இரவு 7.30 மணிக்கு ஏகாந்த தீபாராதனை, இரவு 8 மணிக்கு பள்ளியறை தீபாராதனை நடைபெற்று நடை திருக்காப்பிடப்படும்.

    இதுதவிர மதியம் உச்சிகால தீபாராதனைக்கு பிறகு மாலையில் சுவாமி அலைவாயுகந்த பெருமான் வடக்குரதவீதியில் உள்ள தைப்பூச மண்டபத்தில் எழுந்தருளி அங்கு சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் நடைபெறுகிறது. தொடர்ந்து சுவாமி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

    தைப்பூச திருவிழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தால் வருடம் முழுவதும் சிறப்பான வாழ்வு அமையும் என்ற நம்பிக்கை உள்ளதால் லட்சக்கணக்கான பக்தர்கள் இன்று அதிகாலையிலே கடல் மற்றும் நாழி கிணற்றில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையில், டி.எஸ்.பி. ஆவுடையப்பன் முன்னிலையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • பக்தர்கள் நீண்டநேரம் காத்திருந்து சாமிதரிசனம் செய்தனர்.
    • 7-ந்தேதி தெப்பத்தேர் உற்சவம் நடைபெறும்.

    தமிழ்கடவுள் முருகனின் 3-ம் படை வீடான பழனிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இங்கு கொண்டாடப்படும் திருவிழாக்களில் தைப்பூச திருவிழா மிகவும் முக்கியமானதாகும். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 29-ந்தேதி பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    6-ம் நாளில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைப்பூச தேரோட்டம் நேற்றுமாலை 4.30 மணிக்கு நடைபெற்றது. இதற்காக முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் சண்முகநதியில் தீர்த்தவாரிக்கு எழுந்தருளினார். பின்னர் பெரியநாயகி அம்மன் கோவிலில் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.

    பகல் 12 மணிக்கு திருத்தேரில் எழுந்தருளினார். மாலை 4.20 மணிக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை செய்யப்பட்டு திருத்தேரோட்டம் நடைபெற்றது. அரோகரா கோஷம் விண்ணை பிழக்க 4 ரதவீதிகளில் தேரோட்டம் நடைபெற்றது. இதைக்காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

    திருவிழாவின் 8-ம் நாளான இன்று காலை தந்தபல்லக்கில் முத்துக்குமாரசாமி, வள்ளி-தெய்வானையுடன் புறப்படும் நிகழ்ச்சி நடைபெற்றது. பல்வேறு பகுதிகளில் இருந்து காவடி எடுத்தும், அலகு குத்தியும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் ஆட்டம்பாட்டத்துடன் மேளதாளங்கள் முழங்க பக்தர்கள் ரதவீதியில் சுற்றிவந்தனர்.

    ஏற்கனவே பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வந்திருந்தனர். இன்று அதிகாலை முதல் பக்தர்கள் கூட்டம் மேலும் அதிகரித்ததால் நகரமே திக்குமுக்காடியது. மலைக்கோவில் பாரவேல் மண்டபத்தில் பல்வேறு வகையான மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பக்தர்கள் வசதிக்காக கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டன.

    இதனால் பழனி நகரம் முழுவதும் பக்தர்கள் வெள்ளமாக காட்சியளித்தது. பஸ்நிலையம், அடிவாரம், கிரிவீதி, ரோப்கார் நிலையம், மின்இழுவை நிலையம் என பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் நீண்டநேரம் காத்திருந்து சாமிதரிசனம் செய்தனர்.

    படிப்பாதை, யானைப்பாதை வழியாக மலைக்கோவிலுக்கு சென்ற பக்தர்கள் நீண்டவரிசையில் காத்திருந்து தண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்தனர். இன்று இரவு 8 மணிக்கு மேல் தங்ககுதிரை வாகனபுறப்பாடு நடக்கிறது. 9-ம் நாள் காலை 9 மணிக்கு புதுச்சேரி சப்பரத்தில் வீதிஉலா, இரவு 9 மணிக்கு பெரியதங்கமயில் வாகனத்தில் வீதிஉலா நடைபெறுகிறது.

    10-ம் நாளான 7-ந்தேதி காலை 8.45 மணிக்கு முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் உலாவரும் நிகழ்ச்சியும், இரவு 7 மணிக்கு மேல் தெப்பத்தேர் உற்சவமும் நடைபெறும். அன்றுஇரவு 11 மணிக்குமேல் கொடியிறக்குதலுடன் தைப்பூச திருவிழா நிறைவடைகிறது.

    • வடலூரில் அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்தியஞான சபை உள்ளது.
    • காலை 6 மணிக்கு 7 திரை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெற்றது.

    கடலூர் மாவட்டம் வடலூர் பார்வதிபுரம் கிராமத்தில் உள்ள அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்தியஞான சபையில் ஆண்டுதோறும் தைப்பூச விழா ஜோதி தரிசனம் நடைபெறுகிறது.

    இந்த ஆண்டு 152 ஆண்டு தைப்பூச விழாவாக நடைப்பெற்றது. இதன் தொடக்கமாக கடந்த 28-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை தருமச்சாலையில் மகாமந்திரம் ஓதப்பட்டது, 31-ந்தேதி முதல் பிப்ரவரி 3-ந் தேதி வரை ஞான சபையில் அருட்பா முற்றோதல் நடைபெற்றது.

    நேற்று (4-ந்தேதி) காலை 5 மணி மணிக்கு அகவல் பாராயணமும், 7.30 மணிக்கு வள்ளலார் பிறந்த மருதூர், தண்ணீ ரால் விளக்கு எரித்த கருங்குழி யிலும். வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பத்தி லும், தருமச்சாலையிலும் சன்மார்க்க கொடி ஏற்றம் நடைபெற்றது, ஞானசபையில் கொடி ஏற்றம் காலை 10 மணிக்கும் பார்வதிபுரம் கிராம மக்கள் சார்பில் நடைபெற்றது, இரவு தருமச்சாலை மேடையில் சன்மார்க்க சொற்பொழிவும் கலை நிகழ்ச்சிகளும் நடை பெற்றது.

    தைப்பூச திருவிழாவை இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதையொட்டி காலை 6 மணிக்கு 7 திரை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெற்றது.

    அப்போது சன்மார்க்க அன்பர்கள் பக்தி பரவசத்துடன் அருட்பெருஞ்ஜோதி, அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெருங்கருணை, அருட்பெருஞ்ஜோதி என்கிற மகாமந்திர ஒலி ஞானசபை திடல் எங்கும் ஓங்கி ஓலித்தது.

    இதனை காண தமிழகம் மற்றும் உலகெங்கும் வாழும் தமிழர்கள், லட்சக்கணக்கான சன்மார்க்க அன்பர்கள் திரண்டு வந்து ஜோதி தரிசனம் பார்த்தனர், மேலும், வெளிநாட்டினரும் வடலூருக்கு வந்து ஜோதி தரிசனம் செய்தனர்.

    இதையடுத்து இன்று காலை 10 மணிக்கு தருமச்சாலை மேடையில் சிறப்பு நிகழ்வுகள் மாவட்ட அறநிலையத் துறையின் அதிகாரி முன்னிலையில் சன்மார்க்க அறிஞர்கள் உரையாற்றினார்கள்.

    அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், அறநிலை யத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட உயர் அதிகாரிகள் உட்பட பலர் ஜோதி தரிசனம் பார்த்தனர்.

    இதனை தொடர்ந்து இன்று காலை 10 மணி, பகல் 1 மணி, இரவு 7 மணி, 10மணி நாளை காலை 5.30 மணிக்கும் 7 திரை நீக்கி ஜோதி தரிசனம் நடக்கிறது.

    வள்ளலார் சித்தி பெற்ற திருஅறை தரிசனம் வருகிற 7-ந் தேதி பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை மேட்டுக்குப்பத்தில் நடை பெற உள்ளது.

    அப்போது வடலூர் ஞான சபையில் இருந்து வள்ளலார் பயன்படுத்திய பொருட்கள் அடங்கிய பெட்டியை பூக்களால் அலங்கரித்து மேளதாளம் முழங்க வள்ளலார் சித்திபெற்ற திருஅறை உள்ள மேட்டுக்குப்பம் கொண்டு செல்லப்படும். அங்கு பக்தர்கள் வழி பாட்டுக்கு பின்னர் மீண்டும் வடலூர் கொண்டு வரப்படும்.

    தைப்பூச திருவிழாவையொட்டி பல்வேறு சன்மார்க்க சங்கத்தினர்களால் சொற்பொழிவுகள், இசை நிகழ்ச்சி. நாடகம் உள்ளிட்ட பல கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை வள்ளலார் தெய்வநிலையம் உதவி ஆணையர் சந்திரன், செயல் அலுவலர் ராஜா சரவணக்குமார் மற்றும் பார்வதிபரம், மேட்டுக்குப்பம், கருங்குழி, மருதூர் கிராம மக்கள் செய்திருந்தனர். விழாவினை முன்னிட்டு 700 போலீசார், 200 ஊர்க்காவல் படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • கடவுள் முருகனுக்கு உகந்த நாள் தைப்பூசம்.
    • இன்று பவுர்ணமியும் சேர்ந்து வருகிறது.

    கடவுள் முருகனுக்கு உகந்த நாள் தைப்பூசம். அந்த வகையில் இன்று தைப்பூசமாகும். அதனுடன் இன்று பவுர்ணமியும் சேர்ந்து வருகிறது. தைப்பூசத்தையொட்டி இந்து மதக்கடவுள் முருகன் வழிபாட்டு தலங்களில் லட்சக்கணக்கான மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

    திருச்செந்தூர், பழனி, திருப்பரங்குன்றம், மருதமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை உள்பட முருகக்கடவுள் வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். திருச்செந்தூரில் கடலில் புனித நீராடி, மாலை அணிந்து, அலகு குத்தியும், காவடி எடுத்தும், அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.

    பழனியில் இன்று அதிகாலை 3 மணிக்கு முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதிகாலை 3 மணி முதல் தற்போது வரை 1.10 லட்சம் பக்தர்கள் முருகனை தரிசித்துள்ளனர். பழனியில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளதால் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    திருச்செந்தூர் முருகன் கோவிலில் நள்ளிரவு 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும் 6 மணிக்கு அபிஷேகமும் நடந்தது. நேற்று நள்ளிரவு முதலே பக்தர்கள் குவியத்தொடங்கினர். பக்தர்கள் கடலில் நீராடி முருகனை தரிசனம் செய்து வருகின்றனர். இதனால் எங்கு பார்த்தாலும் பக்தர்களின் கூட்டமே உள்ளது.

    அதேபோல் வடபழனி முருகன் கோவிலில் அதிகாலை முதலே பக்தர்கள் குவித்த வண்ணம் உள்ளனர். அதிகாலையில் முருகப்பெருமானும் பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து முருகப்பெருமானை தரிசனம் செய்து வருகின்றனர்.

    தைப்பூச திருவிழாவை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் இன்று முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும், வழிபாடும் நடந்து வருகிறது. கொரோனாவால் கடந்த 2 ஆண்டுகளாக களையிழந்து இருந்து தைப்பூச திருவிழா இன்று லட்சக்கணக்கான பக்தர்கள் படைசூழ கோலாகலமாக நடந்து வருகிறது. முருகன் கோவில்களில் எங்கு திருப்பினாலும் பக்தர்களின் கூட்டமாகவே காணப்படுகிறது.

    • உப்பில்லா பலகாரம் எதுவானாலும் உண்ணலாம்.
    • கந்தகுரு கவசமோ அல்லது கந்த சஷ்டி கவசமோ சொல்லலாம்.

    தைப்பூச நாளான இன்று கட்டுப்பாடுகள் இல்லாத எளிய விரதத்தை கடைப்பிடித்தால் வாழ்க்கையில் வெற்றி, ஆரோக்கியம், செல்வம் ஆகிய மூன்றும் தடையில்லாமல் கிடைக்கும் என்று கந்தபுராணம் சொல்கிறது. இந்த விரதத்தை மேற்கொள்பவர்கள் அதிகாலையில் எழுந்து நீராடி நெற்றியில் திருநீறிட்டு ஓம் சரவணபவ என்ற முருகனின் மூல மந்திரத்தை குறைந்தது 12 முறை மனதார உச்சரிக்க வேண்டும். உப்பில்லா பலகாரம் எதுவானாலும் உண்ணலாம்.

    கூடுமானவரையில் பால், பழங்கள், மோர், பழச்சாறு போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். மாலையில் பணியிடத்தில் இருந்து திரும்பியதும் அன்னை பார்வதி, முருகனுக்கு வேல் அளித்த கதையை படித்து நேரமிருப்பவர்கள் கந்தகுரு கவசமோ அல்லது கந்த சஷ்டி கவசமோ சொல்லலாம்.

    அருகில் இருக்கும் கோவிலுக்கு சென்று முருகனை வணங்கிவிட்டு இயன்ற அளவு ஏழைகளுக்கு அன்னதானம் செய்யலாம். இரவு சிறிது பால்சோறு சாப்பிடலாம். மறுநாள் காலை நீராடி, திருநீறு இட்டு முருகனின் மூல மந்திரத்தை ஆறுமுறை உச்சரித்து மனதார வணங்கி விரதத்தை நிறைவு செய்துவிட்டு வழக்கம்போல் உண்ணலாம்.

    • லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து தேர்த்திருவிழாவில் பங்கேற்று முருகனை வழிபட்டனர்.
    • பக்தர்களின் வசதிகக்காக கிரிவல பாதையில் பல்வேறு இடங்களில் தற்காலிக குடில்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ஜனவரி 29-ந்தேதி தைப்பூச திருவிழா தொடங்கி வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. விழாவின் சிகர நிகழ்வான தைப்பூச தேரோட்டம் இன்று நடைபெற்றது.

    இன்று அதிகாலை வள்ளி-தெய்வானையுடன் முத்துக்குமாரசாமி சண்முகாநதிக்கு எழுந்தருளி தீர்த்தம் கொடுத்தல் நடைபெற்றது. மதியம் சுவாமி திருத்தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைதொடர்ந்து மாலையில் தேரோட்டம் தொடங்கியது. பெரியநாயகி அம்மன் கோவிலில் இருந்து புறப்பட்ட திருத்தேர் ரத வீதியில் வலம் வந்தது.

    ஏராளமான பக்தர்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்து திருத்தேரில் வீற்றிருந்த முருகனை தரிசனம் செய்தனர். பக்தர்களின் 'அரோகரா... அரோகரா..' முழக்கம் விண்ணை பிளந்தது.

    தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து பழனிக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து தேர்த்திருவிழாவில் பங்கேற்று முருகனை வழிபட்டனர். பக்தர்கள் மலைக்கோவில், அடிவாரம் உள்ளிட்ட பகுதிகளில் திரண்டுள்ளதால் எங்கு திரும்பினாலும் மக்கள் தலைகளாக காட்சியளிக்கிறது. ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்தும் காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்களின் வசதிகக்காக கிரிவல பாதையில் பல்வேறு இடங்களில் தற்காலிக குடில்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    பக்தர்கள் பாதுகாப்புக்காக டி.ஐ.ஜி தலைமையில் 3 எஸ்.பிக்கள், 24 டி.எஸ்.பிக்கள் கொண்ட 3000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பக்தர்கள் வரும் வாகனங்களை நிறுத்த தற்காலிக பஸ்நிலையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    • மதியம் 12 மணிக்கு சுவாமி திருத்தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது.
    • தேரோட்டம் இன்று மாலை ரதவீதியில் நடைபெறுகிறது.

    பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் தைப்பூச திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழா கடந்த ஜனவரி 29-ந்தேதி பெரியநாயகி அம்மன்கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதனைதொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக நடந்து வந்தவண்ணம் உள்ளனர். கடந்த 2 நாட்களில் மட்டும் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட பாதயாத்திரை பக்தர்கள் பழனிக்கு சென்றனர். பக்தர்களின் வருகை அதிகரிப்பதால் பஸ், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    பல்வேறு ஊர்களில் இருந்து பழனிக்கு வரும் பாதயாத்திரை பக்தர்கள் மலைக்கோவில், அடிவாரம் உள்ளிட்ட பகுதிகளில் திரண்டுள்ளதால் கோவிலில் ஒருவழிப்பாதை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நேற்றிரவு 7 மணிக்குமேல் 8 மணிக்குள் சிம்ம லக்னத்தில் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷம் எழுப்பி முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். இதனைதொடர்ந்து இரவு 9 மணிக்கு வெள்ளிரதத்தில் வள்ளி-தெய்வானை சமேத முத்துக்குமார சாமிவீதிஉலா வரும் நிகழ்ச்சி நடந்தது. திருவிழாவின் உச்சபட்ச நிகழ்வான தைப்பூச தேரோட்டம் இன்று மாலை 4.30 மணிக்கு ரதவீதியில் நடைபெறுகிறது.

    இன்று அதிகாலை வள்ளி-தெய்வானையுடன் முத்துக்குமாரசாமி சண்முகாநதிக்கு எழுந்தருளி தீர்த்தம் கொடுத்தல் நடைபெற்றது. மதியம் 12 மணிக்கு சுவாமி திருத்தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடக்கிறது. இதனைதொடர்ந்து பக்தர்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதனைகாண அலைகடலென பழனியை நோக்கி பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளனர்.

    பழனி கோவில் கும்பாபிஷேகம் கடந்த மாதம் 27-ந்தேதி நடைபெற்றது. அதில் குறைந்த அளவு பக்தர்களே அனுமதிக்கப்பட்டனர். இதனால் தைப்பூச திருவிழாவின்போது ஏராளமான பக்தர்கள் பழனிக்கு பாதயாத்திரையாகவும், வாகனங்கள் மூலமும் வந்தவண்ணம் உள்ளனர்.

    பக்தர்கள் பாதுகாப்புக்காக டி.ஐ.ஜி தலைமையில் 3 எஸ்.பிக்கள், 24 டி.எஸ்.பிக்கள் கொண்ட 3000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பக்தர்கள் வரும் வாகனங்களை நிறுத்த தற்காலிக பஸ்நிலையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அங்கிருந்து பக்தர்களை அழைத்துவர 30 வாகனங்கள் ஏற்படுத்தப்பட்டு மலைகோவில் வரை இயக்கப்படுகிறது.

    திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக இடைவிடாத சாரல்மழை மற்றும் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. இதனால் பாதயாத்திரை பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். இருந்தபோதும் தைப்பூச திருவிழாவில் கலந்து கொள்ளவேண்டும் என்ற ஆர்வத்தில் கொட்டும் மழையிலும் பழனியை நோக்கி நடந்து சென்றனர். இன்று காலையிலும் பழனி மற்றும் சுற்றுப்புற பகுதியில் விட்டுவிட்டு சாரல்மழை பெய்து வந்தபோதிலும் அதனையும் பொருட்படுத்தாமல் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.

    • இந்த விழா நாளை வரை மொத்தம் 3 நாட்கள் நடைபெறும்.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பிரசித்திபெற்ற மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தைபூசத்தை முன்னிட்டு தெப்பத்திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான தெப்பத்திருவிழா நேற்று மாலை மாங்காடு காமாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள தெப்ப குளத்தில் நடைபெற்றது.

    நாளை (ஞாயிற்றுக்கிழமை) வரை மொத்தம் 3 நாட்கள் நடைபெறும். இந்த தெப்பத்திருவிழாவில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் வெள்ளீஸ்வரர், காமாட்சி அம்மன், வைகுண்ட பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாளிப்பார்கள்.

    அதன்படி நேற்று இரவு வெள்ளீஸ்வரர் தெப்பத்தில் எழுந்தருளல் நிகழ்ச்சியும், பின்னர் காமாட்சி அம்மன் தெப்பத்தில் எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. பின்னர் காமாட்சி அம்மன், யானை வாகனத்தில் திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழா ஏற்பாடுகள் அனைத்தும் கோவில் நிர்வாகம் சார்பில் செயல் அலுவலர் கவெனிதா மற்றும் கோவில் பரம்பரை தர்மகர்த்தா மணலி டாக்டர் சீனிவாசன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • நாளை அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது.
    • சுவாமி தங்க மயில் வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை தைப்பூசம் நடக்கிறது.

    விழாவில் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்ய மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் பாதயாத்திரையாகவும் அலகு குத்தியும்,காவடி எடுத்து வந்தும் சாமி தரிசனம் செய்ய வந்துகொண்டிருக்கின்றனர். தைப்பூசத்தை முன்னிட்டு நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது.

    1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 4.30 மணிக்கு தீர்த்தவாரியும், காலை 10.30 மணிக்கு உச்சிகால அபிஷேகமும் நடைபெறுகிறது. 12 மணிக்கு உச்சிக்கால தீபாராதனை, மாலை 5 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, 6 மணிக்கு இராக்கால அபிஷேகம், இரவு 7.30 மணிக்கு ஏகாந்த தீபாராதனை, இரவு 8 மணிக்கு பள்ளியறை பூஜையும் நடைபெற்று கோவில் நடை திருக்காப்பிடப்படும்.

    மதியம் உச்சிகால தீபாராதனைக்கு பிறகு மாலையில் சுவாமி அலைவாயுகந்த பெருமான் வடக்குரதவீதியில் உள்ள தைப்பூச மண்டபத்தில் எழுந்தருளி அங்கு சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் நடைபெறுகிறது. தொடர்ந்து சுவாமி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

    நேற்று சுவாமி சண்முகர் கடலில் கண்டெடுத்த நாள். இதை முன்னிட்டு நேற்றும் இன்றும் திருக்கோவில் அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு தொடர்ந்து பூஜைகள் நடைபெற்றது. இதை முன்னிட்டு நேற்று மாலையில் சுவாமி அலைவாயுகந்த பெருமான் வீதியுலா நடைபெற்றது.

    • தைப்பூசத் திருவிழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
    • மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு பக்தர்கள் சர்ப்ப காவடி எடுத்து வரக்கூடாது என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் எச்சரித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் தைப்பூசத் திருவிழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. விழாவை முன்னிட்டு கோவிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வருகின்றனர். அவ்வாறு சாலையில் நடந்து வரும் போது, சாலையின் இடதுபுறமாக வாகனங்கள் வருவதால் பக்தர்கள் மீது மோத வாய்ப்பு உள்ளது. ஆகையால் பக்தர்கள் சாலையின் வலதுபுறமாக நடந்து செல்ல வேண்டும். இதனால் எதிரே இடது புறமாக வரும் வாகனங்களை கண்டுகொண்டு விபத்து நேரா வண்ணம் பக்தர்கள் தங்களை காத்துக் கொள்வதோடு மற்ற வாகனங்களுக்கும் இடையூறு இல்லாமல் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ளலாம்.

    அதே போன்று பாதயாத்திரை பக்தர்கள் முதுகு பகுதி மற்றும் பைகளில் ஒளிரும் ஸ்டிக்கர்கள் ஒட்டி பாதுகாப்பாக பாதயாத்திரை செல்ல வேண்டும். இந்த தைப்பூச திருவிழாவை விபத்து இல்லாமல் பாதுகாப்பான முறையில் வழிபட்டு செல்வதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். கோவிலுக்கு வரும் பக்தர்கள் சாதி ரீதியான அடையாளங்கள் பொறிக்கப்பட்ட பனியன்கள், சட்டைகள் போன்றவற்றை அணிந்தோ அதனை வெளிப்படுத்தும் வகையிலான கொடிகளோ கொண்டு வரக்கூடாது. சர்ப்ப காவடி மற்றும் பாம்புகளை எடுத்து வரக்கூடாது. மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேலும் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் ஒரு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, 2 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 13 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    ×