search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    தோரணமலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா திரளான பக்தர்கள் பங்கேற்பு
    X

    பக்தர்கள் கூட்டத்தினையும், முருகனுக்கு சந்தன அபிஷேகம் நடைபெற்றதையும் படத்தில் காணலாம்.

    தோரணமலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா திரளான பக்தர்கள் பங்கேற்பு

    • பக்தர்கள் பறவை காவடி எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    தென்காசி மாவட்டம் கடையம்-தென்காசி சாலை அருகே அமைந்துள்ளது பிரசித்திபெற்ற தோரணமலை முருகன் கோவில். இக்கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.

    தைப்பூசத்தையொட்டி இன்று அதிகாலையில் நடை திறக்கப்பட்டது.இதைத்தொடர்ந்து கணபதி ஹோமம், மகாஸ்ரீ கந்த ஹோமம் சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.

    பின்னர் ஊட்டி படுகர் இன மக்களின் பாரம்பரிய நடனம் நடைபெற்றது. வித்தியசமான இந்த நடனத்தை பக்தர்கள் கண்டு களித்தனர். இதையடுத்து பக்தர்கள் பறவை காவடி எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதையடுத்து விடுதலை போராட்ட தியாகிகள் மற்றும் உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் கவுரவிக்கப்பட்டனர். பின்னர் மதியம் முருகன், நடராஜர், விநாயகர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, உச்சிகால பூஜை நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரப் பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    இதைத் தொடர்ந்து மாலையில் சரணஜோதி திருவிளக்கு பூஜை, இரவில் வள்ளியம்மாள்புரம் திருமுருகன் உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இதில் பள்ளி மாணவர்கள் பலர் கலந்து கொள்கின்றனர். மேலும் விழாவில் காலை முதல் இரவு வரை அன்னதானம் நடைபெற்றது.

    விழாவில் பக்தர்களின் வசதிக்காக போலீஸ் பாதுகாப்பு வசதியுடன் இருசக்கர , நான்கு சக்கர வாகனங்களை நிறுத்த தகுந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் செண்பகராமன் செய்திருந்தார்.

    Next Story
    ×