search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tai Amavasai"

    • குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் தவழும்.
    • இன்னல்கள் அனைத்தையும் பித்ருக்கள் தடுத்து அருள்வார்கள்.

    மறைந்த முன்னோர்கள் பற்றி மகாளய அமாவாசை, தை அமாவாசை, ஆடி அமாவாசை நாட்களில் மட்டுமே பெரும்பாலானவர்கள் நினைக்கிறார்கள். இந்த நாட்களில் பித்ரு தர்ப்பணம் கொடுத்து விட்டால் போதும் என மன திருப்தி கொள்கிறார்கள். ஆனால் மாதந்தோறும் வரும் ஒவ்வொரு அமாவாசை தினத்தன்றும் முன்னோர் வழிபாடு செய்தால், அதற்குரிய பலன்கள் உங்களுக்கு நிச்சயம் முந்தி வரும். இது பலரும் அனுபவிக்கும் யதார்த்தமான உண்மை.

    இறந்தவர்களின் திதியை தெரிந்து கொண்டு, அந்த கடமையை தவறாமல் செய்து வருபவர்களைப் பாருங்கள், அவர்கள் அனைவரும் வாழ்க்கையில் ஓரளவுக்கு நல்ல நிலையில் இருப்பார்கள். அவர்களுக்கு அவர்களது மறைந்த முன்னோர்களின் ஆசி நிரம்ப கிடைத்து வருவதாக உறுதியாக கருதலாம்.

    ஒவ்வொரு அமாவாசை தினத்தன்றும் விரதம் இருந்து மனம் உருகி பித்ருக்களின் ஆசியை கேட்க வேண்டும். நிச்சயம் பித்ருக்கள் உங்களை வாழ்த்துவார்கள். இதன்மூலம் கிடைக்கும் முதல் பலன் என்ன தெரியுமா? உங்கள் குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் தவழும். உங்களுக்கு வரும் இன்னல்கள் அனைத்தையும் பித்ருக்கள் தடுத்து அருள்வார்கள். உங்கள் முன்னேற்றத்துக்கு தடையாக உள்ள அத்தனை விஷயங்களும் விலகும்.

    நீங்கள் எந்த அளவுக்கு பித்ரு பூஜைகள் செய்கிறீர்களோ..... அந்த அளவுக்கு உங்களுக்கு பலன் கிடைக்கும். பித்ரு வழிபட்டு செய்ய, செய்ய செல்வமும் சேரும். வறுமை என்பதே உங்கள் குடும்பத்தினருக்கு வராது.நோய்களை தடுத்து காக்கும் சக்தியும் பித்ருக்களுக்கு உள்ளது. அந்த வகையில் நமக்கு சிறு பாதிப்பு என்றாலும் முதலில் ஓடி வருவது பித்ருக்கள்தான்.

    சிலர் குல தெய்வ வழிபாட்டுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை பித்ருக்கள் வழிபாட்டுக்கு கொடுப்பது இல்லை. குலதெய்வ வழிபாட்டுக்கு முன்பு செய்ய வேண்டியது பித்ருக்கள் வழிபட்டுதான் என்பதை மறந்து விடக்கூடாது. பித்ருக்களை உரிய ஐதீகப்படி வழிபட்டால் உங்களின் இந்த பிறவியில் உள்ள தோஷங்கள், பாவங்கள் எல்லாம் விலகும். இதனால் உங்கள் ஆத்மா சுத்தமாகி புனிதம் பெறும்.

    இந்த புனிதம் அதிகரித்தால்தான் நீங்கள் முக்தி பாதைக்கு செல்ல முடியும். எனவே முன்னோர் வழிபட்டு செய்யாவிட்டால் உங்களுக்கு கிடைக்க வேண்டிய நல்ல பலன்கள் கிடைக் காமலே போய் விடக்கூடும். ஆகையால் முன்னோர் வழிபாட்டை மறக்காமல், தவறாமல் செய்யுங்கள்.

    • மறைந்த முன்னோர்களை பித்ருக்கள் என்கிறோம்.
    • பித்ரு தோஷம் உள்ளவர்களுக்கு திருமணம் நடக்காது.

    பித்ரு தோஷம் என்றால் என்ன?

    நம் குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்களை பித்ருக்கள் என்கிறோம். அவர்களுடைய ஆத்மா சாந்தி அடையாததால் வருகிற தோஷம் பித்ரு தோஷம் எனப்படும்.

    அதை ஜாதகத்தில் கண்டறிவது எப்படி?

    ஜாதகத்தில் சூரியன் அல்லது சந்திரன் ராகுவுடனோ அல்லது கேதுவுடனோ எந்த இடத்தில் சேர்த்திருந்தாலும் பித்ரு தோஷம் உண்டு.

    அதற்கு என்ன பரிகாரம் செய்யவேண்டும்?

    ராமேஸ்வரம் சென்று தில ஹோமம் செய்வதும், கயா சிரார்த்தம் செய்வதும், காசி, அலகாபாத், பத்ரிநாத் சென்று திவசம் செய்வதும், திருவெண்காடு சென்று திதி கொடுப்பதும் இந்த தோஷத்துக்குப் பரிகாரம். குடும்பத்தில் யாரேனும் விபத்துக்களில் இறந்திருந் தாலோ, அல்லது தற்கொலை செய்துகொண்டி ருந்தாலோ மட்டுமே தில ஹோமம் செய்யவேண்டும். அனைவரும் இயற்கை மரணம்அடைந்திருந்தால், தில ஹோமம் செய்யவேண்டியதில்லை.

    அந்த தோஷத்தினால் ஏற்படும் தீய விளைவுகள் என்ன?

    இந்த தோஷம் உள்ளவர்களுக்கு திருமணம் நடக்காது. அல்லது மிகவும் தாமதமாக நடக்கும். விவாக ரத்து ஏற்படலாம். அல்லது தம்பதியரிடையே அன்னி யோன்னியம் இருக்காது. அல்லது குழந்தைப் பாக்கியம் இருக்காது. ஒரு சிலருக்கு கடுமையான உடல் உபாதைகள், மனநோய் காரணமாக தாம்பத்திய வாழ்க்கை பாதிக்கும்.

    ஒரு சிலருக்கு பலமுறை திருமணம் நடக்கவும் வாய்ப்புண்டு. கலப்புத்திருமணம் நடக்கவும், பெற்றொருக்குத் தெரியாமல் ரகசியத் திருமணம் நடக்கவும் வாய்ப்புண்டு .இந்த தோஷம் உள்ள சில தம்பதிகள் ஒருவருக்கொருவர் உண்மையானவர்களாக நடந்து கொள்வதில்லை.

    எத்தகைய பாவங்கள் செய்திருந்தால், இந்த தோஷம் வரும்?

    கருச்சிதைவு செய்துகொண்டால், இந்த தோஷம் வரும். பெற்றோர்களின் இறுதி நாட்களில் அவர்களை சரிவர கவனிக்காமல் இருந்து அதனால் அவர்கள் மன வேதனை அடைந்தால், பித்ரு தோஷம் வரும். ஒருவரின் இளைய தாரத்துப் பிள்ளைகள் மூத்த அன்னைக்கு திதி கொடுக்காவிட்டாலும் வரும்.

    தந்தைக்கு எத்தனை தாரங்கள் இருந்தாலும் அவர்கள் அனைவருக்கும் தவறாமல், திவசம் செய்யவேண்டும். ஆண்வாரிசு இல்லாத சித்தப்பா, பெரியப்பா, அத்தை , சகோதரர் ஆகியோருக்கு திதி கொடுக்காவிட்டால் வரும். துர்மரணம் அடைந்தவர்களுக்கு திதி கொடுப்பதோடு மட்டுமின்றி கயா சென்று சுப சிரார்த்தம் செய்யாவிடில் பித்ரு தோஷம் வரும்.

    ஒரே குடும்பத்தில் சிலருக்கு மட்டும் இது வருவது ஏன்?

    ஒரே குடும்பத்தில் சிலருக்கு மட்டும் இந்த தோஷம் வரலாம். திருமணம் ஆன பிறகும் பிறந்த வீட்டு வழியில் சில பெண்களுக்கு பித்ரு தோஷம் தொடரும். இந்த தோஷம் கடுமையாக உள்ள சில குடும்பங்களில் மூளை வளர்ச்சி இல்லாத மாற்றுத் திறனாளி குழந்தை பிறக்கலாம். தெய்வத்தை வணங்காவிட்டால், சாமி கோபித்துக்கொள்ள மாட்டார். ஆனால், தென்புலத்தாருக்கு ஆற்றவேண்டிய கடமைகளை தவறாமல் செய்யவேண்டும். அவற்றைச் செய்யத் தவறினால் வருவதுதான் பித்ருதோஷம்.

    • அமாவாசைக்கு முந்தைய தினமும் சிறப்பானது.
    • அமாவாசை விரதம் இருக்கும் பெண்கள் சவுபாக்கியத்துடன் வாழ்வார்கள்.

    அமாவாசை பித்ரு காரியங்கள் செய்வதற்கு உரிய தினம் என்பது பலருக்கும் தெரிந்திருந்தாலும், அதை ஐதீகப்படி எப்படி செய்வது என்பது சிலருக்கு மட்டுமே தெரிகிறது.

    அமாவாசைக்கு முந்தைய தினமும் சிறப்பானது. அன்றைய தினம் ஒரு கதையை படித்த பிறகு மறுநாளான அமாவாசையன்று விரதம் இருக்கும் பெண்கள் சவுபாக்கியத்துடன் வாழ்வார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா? அந்த கதை வருமாறு:-

    அழகாபுரி நாட்டு அரசன் அழகேசன். பராக்கிரமம் மிக்க அவனுக்கு வாரிசு இல்லாத வருத்தம் இருந்தது. அதை தீர்த்துக்கொள்ள அவன் தன் மனைவியோடு தீர்த்த யாத்திரை மேற்கொண்டான். அதன் பலனாக அவனுக்கு ஒரு மகன் பிறந்தான்.

    மன்னன் மகிழ்ச்சியோடு இருந்த போது ஓர் அசரீரி எழுந்தது. அவனது மகன் இளமைப்பருவத்தை எட்டும் போது இறந்து போவான் என்று அது சொல்லவே மன்னன் விரக்தியில் ஆழ்ந்தான். மன அமைதிவேண்டி அவன் பல கோவில்களுக்கும் சென்றான்.

    ஒருநாள் காளி கோவில் ஒன்றில் அவன் வழிபட்ட போது உன் மகன் இறந்ததும் அவனுக்கு மணம் செய்துவை. அவனது மனைவியின் மாங்கல்ய பலத்தால் அவன் உயிர் பெறுவான் என்ற குரல் கேட்டது. இளமை பருவம் வந்ததும் இளவரசன் ஒருநாள் இறந்து போனான்.

    மன்னன் அவனுக்கு திருமணம் செய்து வைக்க பெண் தேடிய போது, பெற்றோரை இழந்து உறவினர்களின் கொடுமைக்கு ஆளாகி வாழ்ந்த ஓர் இளம் பெண்ணை அவளது உறவினர்கள் ஏமாற்றி, இறந்துபோன இளவரசனுக்கு திருமணம் செய்து வைத்தனர்.

    இருட்டிய பின்னர் இளவரசன் உடலோடு அவளை காட்டில் கொண்டு விட்டனர். அப்பாவியான அந்த பெண் கணவன் உறங்குவதாக நினைத்தாள். விடிந்தபின் உண்மை தெரிய வந்ததும் அழுதாள்... தவித்தாள்...

    தனக்கு தெரிந்த தெய்வங்களின் பெயர்களையெல்லாம் சொல்லி வேண்டினாள். உலகத்தின் தாயான ஈஸ்வரி அவளது அழுகுரல் கேட்டு மனம் இரங்கினாள். இறந்து கிடந்த இளவரசனை ஈசனின் அனுமதியோடு உயிர் பெற்று எழச்செய்தாள்.

    இந்த சம்பவம் நடந்த தினம் ஓர் அமாவாசை நாளாகும். தனக்கு அருளிய தேவியிடம் அந்த பெண் இருண்டு போன தன் வாழ்வை ஒளிபெற செய்தது போலவே அமாவாசை நாட்களில் அம்மனை வழிபடும் பெண்களுக்கும் அருள்புரிய வேண்டும் என்று வேண்டினாள்.

    மகிழ்ந்த அம்பிகை, அமாவாசைக்கு முன்தினம் அவளது கதையை படித்துவிட்டு மறுநாள் விரதம் இருந்து மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட மங்கல பொருட்களை உரியவர்களுக்கு தந்து தன்னை வழிபடும் பெண்களுக்கு தாலி பாக்கியம் நிலைக்கும் என்றும், அவர்கள் இல்லத்தில் அஷ்ட லட்சுமி கடாட்சம் நிலவும் எனவும் சொல்லி மறைந்தாள்.

    அமாவாசை அன்று காலையில், எழுந்து ஆறு, குளங்களில் நீராடி சூரிய உதயத்திற்கு முன்னதாகவே எள், தர்ப்பைப்புல் ஆகியவற்றை கொண்டு தர்ப்பணம் செய்து வருதல் நல்லது. அத்துடன் வீடுகளில் மறைந்த முன்னோர்கள் வாழ்ந்த காலத்தில், அவர்களுக்கு பிடித்தமான சைவ உணவு வகைகளையும் வைத்து வழிபட வேண்டும். அவர்கள் மனம் மகிழ்ந்தால் நம் வாழ்விலும் மகிழ்ச்சி பெருகும்.

    • முன்னோர்கள் புண்ணியலோகத்தில் இருந்து பூமிக்கு வருகிறார்கள்.
    • தங்களது தலைமுறைகளை சூட்சமமான முறையில் கண்காணிக்கிறார்கள்.

    அமாவாசை தினத்தில் சூரியனும், சந்திரனும் நேர்கோட்டில் வருகிறது. அதாவது ஒன்றையொன்று சந்தித்துக்கொள்கிறது. அன்று முன்னோர்கள் புண்ணியலோகத்தில் இருந்து பூமிக்கு வருகிறார்கள். தங்களது தலைமுறைகளை சூட்சமமான முறையில் கண்காணிக்கிறார்கள். அவர்களது வாரிசுகளான நாம் தொடங்கும் காரியங்களை கரிசனத்தோடு பார்க்கிறார்கள், ஆசிர்வதிக்கவும் செய்கிறார்கள்.

    இந்த நிகழ்வு இந்த ஆண்டு வருகிற 9-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நிகழ உள்ளது. அன்று நாம் என்ன செய்ய வேண்டும்? பித்ருக்கள் என்ற முன்னோர்களை வழிபட்டு அவர்களுக்கு மரியாதை செய்ய வேண்டும். அன்று அவர்களை வழிபட்டு அமாவாசை தினத்தில் புதிய காரியங்களை தொடங்கினால் நிச்சயம் நல்லதே நடக்கும். அன்று நற்காரியங்களை செய்வதனால் தீங்கு ஏற்படாது.

    முன்னோர்கள் பூமிக்கு வரும் தினம் என்பதனால் அது நல்லநாளே. முன்னோர் வழிபாட்டுக்கு மிகவும் சிறந்த நாள் அமாவாசை! இது அனைத்து மதத்திற்கும் பொருந்தும். அமாவாசையன்று உலகை இயக்கும் சூரியனும் சந்திரனும் ஒன்று சோ்வதால் ஒரு காந்த சக்தி ஏற்படுகிறது.

    அமாவாசையன்று மாமிச ஆகாரம் தவிர்ப்பது பெரும் ஜீவகாருண்யமாகும். அமாவாசை அன்று பிறக்கும் குழந்தைகளின் மூளை பிற்காலத்தில் அதீதமாக வேலை செய்யும் என்று விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

    ஜோதிட ரீதியாக அமாவாசை நிறைந்த நாள். அனேகமானவர்கள் அமாவாசையில் மோதிரம் செய்து போட்டுக்கொள்வார்கள். சூரிய கலையும், சந்திர கலையும் சேருவதால் சுழுமுனை என்னும் நெற்றிக்கண் பலப்படுகிறது. அதனால் அமாவாசையில் சாஸ்திரிகள் மந்திர ஜெபம் ஆரம்பிக்கின்றனா். கடலில் நீராடி தங்களுக்கு ஏற்பட்ட தோஷத்தைப் போக்குகின்றனா்.

    அமாவாசையன்று ஜீவ சமாதிகள் புதிய உத்வேகத்தைப் பெறுகின்றன. அனேக குரு பூஜைகள் அதிஷ்டான பூஜைகள் அமாவாசையன்று நடத்துகின்றனா்.

    சாதாரணமாக இறந்த ஆவிகள் சந்திரனின் ஒளிக்கற்றையில் உள்ள அமிர்தத்தைப் புசிக்கும். அதுதான் அதற்கு உணவு. அமாவாசையன்று சந்திரனின் ஒளிக்கற்றை ஆவிகளுக்குக் கிடைக்காது. அதனால் ஆவிகள் உணவுக்குத் திண்டாடும். பசி தாங்க முடியாமல் ரத்த சம்பந்தமுடைய வீடுகளுக்கு வரும். அப்போழுது நம்மை யாராவது எண்ணுகிறார்களா, நமக்குத் தா்ப்பணம், படையல் செய்கிறார்களா என்று பார்க்கும்.

    வீடு வாசல் இல்லாத ஏழைகளுக்கு அமாவாசையன்று அன்னதானம் செய்ய வேண்டும். ஒவ்வொரு அமாவாசை அன்றும் தங்களால் இயன்ற அளவு உணவை அன்னதானம் செய்யலாம். பசு, காகம், நாய், பூனை மற்றும் இதர ஜீவராசிகளுக்கும் அன்று அன்னம் அளிக்கலாம்.

    அமாவாசை பிதுா் தா்ப்பணம் மற்றும் அன்னதானம் ஆகியவற்றைக் குலதெய்வம் இருக்கும் இடத்தில் செய்வது நல்லது. முடியாதவா்கள் தங்கள் இஷ்ட தெய்வம் இருக்கும் இடத்தில் செய்யலாம். வீட்டிலும் செய்யலாம்.

    அமாவாசை அன்று தலையில் எண்ணெய் தடவக் கூடாது. புண்ணிய தலங்களில் கடலில் நீராடலாம். அல்லது நதியில் நீராடலாம். அமாவாசை அன்று காலை சூரிய உதயத்தின் போது கடலில் எடுக்கப்பட்ட நீரை வீட்டுக்குக் கொண்டுவந்து தீா்த்தமாகத் தெளிக்கலாம். அதனால் வீட்டில் உள்ள தோஷங்கள் நீங்கும்.

    உற்றார், உறவினா் தொடா்பு இல்லாத ஆவிகள் மரம், செடி கொடிகளில் அமாவாசை அன்று மட்டும் தங்கி, அவற்றின் சாரத்தைச்சாப்பிடும். அதனால் அமாவாசை அன்று மட்டும் மரம், செடி, கொடிகளையோ காய்கறிகளையோ புல் பூண்டுகளையோ தொடக்கூடாது. பறிக்கக் கூடாது.

    ஒவ்வொரு மாதம் அமாவாசை அன்னதானம் செய்ய முடியாதவா்கள் தை, ஆடி, புரட்டாசி அமாவாசையில் அன்னதானம் செய்ய வேண்டும். புரட்டாசி அமாவாசையில் செய்தால் 12 ஆண்டுகளாக அன்னதானம் தா்ப்பணம் செய்யாத தோஷம் நீங்கும். நமக்கு அன்னம் இடுபவள் அன்னபூரணி. ஆவிகளுக்கு அன்னம் இடுபவள் ஸ்வதா தேவி. நாம் ஆவிகளை நினைத்துக் கொடுக்கும் அன்னத்தை மற்றும் யாகத்தில் போடும் ஆவுதிகளை ஸ்வதா தேவிதான் சம்பந்தப்பட்ட ஆவிகளிடம் சோ்ப்பிக்கிறாள்.

    நகரங்களில் வசிப்பவா்கள் அமாவாசை அன்று ஏழைக் குழந்தைகளுக்கு அல்லது ஆதரவற்றவா்களுக்கு முன்னோர்களை நினைத்து அன்னதானம் செய்ய வேண்டும். இதர தானங்கள் தருவது அவரவா் வசதியைப் பொறுத்தது. அன்னதானம் கஞ்சியாகவோ, சாதமாகவோ, இட்லியாகவோ இருக்கலாம். ஆனால் எள்ளு சட்னி அல்லது எள் உருண்டை கண்டிப்பாக இருக்க வேண்டும்.

    எதுவும் செய்ய முடியாமல் இருப்பவா்கள் ஒரு பசு மாட்டிற்கு ஒன்பது வாழைப்பழங்கள் அமாவாசை அன்று கொடுக்க வேண்டும். இதற்கு சாதி, மதம், இனம் என்ற வேறுபாடு இல்லை. முன்னோர்கள் ஆத்மா சாந்தியடைய ஒவ்வொருவரும் இதை செய்ய வேண்டும்.

    • மூலவருக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை.
    • குளத்தில் குளித்தால் மனதால் நினைக்கும் பாவங்கள்கூட விலகுமாம்.

    1. ராவணனை அம்பெய்து கொன்ற ராமனைப் பள்ளி கொண்ட கோலத்தில் காண விரும்புபவர்கள், திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் ஆலயத்திற்கு செல்ல வேண்டும்.

    2. எவ்வளவு கொடிய பிணியையும் தீர்க்க வீரராகவனைச் சிந்தையில் வைத்துப் பொய்கையில் நீராடி வணங்கினால் எத்தகைய நோயும் தீரும்.

    3. இப்பெருமாளை உண்மையான அன்போடும், பக்தியோடும் வணங்குபர்களுக்கு அவர்கள் சார்ந்துள்ள தொழிலில் மேன்மை அடைவார்கள். உலகை ஆளும் தகுதியும் பெறுவார்கள்.

    4. திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் 3 அமாவாசைகளுக்கு தொடர்ந்து வந்து பெருமாளிடம் வேண்டிக்கொண்டால் தீராத வியாதிகளும், குறிப்பாக வயிற்று வலி, கைகால் வியாதி, காய்ச்சல் ஆகியவை குணமாகி விடுகிறது.

    5. தை அமாவாசை, வைகுண்ட ஏகாதசி, தமிழ், ஆங்கில புத்தாண்டு, தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட விசேஷ தினங்கள் தவிர வாரத்தின் சனிக் கிழமைகளில் பக்தர்கள் வெள்ளமென திரள்வது வழக்கம்.

    6. கல்யாணம் குழந்தை பாக்கியம் கிடைக்க மற்றும் கஷ்டங்கள் தீர செல்வம் பெருக இத்தலத்து பெருமாளை வேண்டிக்கொள்ளலாம்.

    7. ஸ்ரீதேவித் தாயார் வசுமதி எனும் பெயரில் திலிப மகாராஜாவிற்கு பெண்ணாக அவதரித்து வாழ்ந்து வர, வீரநாராயணன் எனும் பெயருடன் ஈக்காடு வேட்டைக்குச் சென்ற பெருமாள் தாயாரை மணமுடித்ததாகத் தலவரலாறு.

    8. வீரராகவப் பெருமானை போற்றிப் பாடும் பாட்டுக்கள் வீரராகவர் போற்றி பஞ்சகம் எனப்படும். இப்பாட்டுக்கள் ஐந்தும் வீரராகவப் பெருமானை அருச்சிப்பதற்கு ஏற்றவை.

    நேர்த்திக் கடன்கள்

    இத்தலத்தில் இந்த நேர்த்திக்கடன் மிகவும் விசேஷமானது. உருவத் தகடுகளை (வெள்ளி, தங்கம்) செய்து போடுதல், தவிர பெருமாளுக்கு அபிஷேகம் ஆராதனை செய்தல், நைவேத்தியம் செய்து பக்தர்களுக்குப் பிரசாதம் விநியோகிக்கலாம். தாயாருக்கு 9 கஜ பட்டுப்புடவை சாத்துதலும் முக்கிய நேர்த்திக்கடனாகக் கருதப்படுகிறது.

    உடம்பில் உள்ள மரு, கட்டி ஆகியவை மறைய இத்தலத்து குளத்தில் பால், வெல்லம் ஆகியவற்றை பக்தர்கள் கரைக்கிறார்கள். கோவில் மண்டபத்தில் உப்பு மிளகு ஆகியவற்றை சமர்ப்பிக்கலாம்.

    அபிஷேகம் இல்லை

    மூலவருக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை. ஆண்டுக்கு ஒரு தடவை கார்த்திகை மாதம் மட்டும் சந்தன தைலத்தில் மட்டுமே அபிஷேகம் நடத்தப்படுகிறது.

    தலபெருமை:

    தொண்டை மண்டலத்தில் உள்ள வைணவத் தலங்களில் இத்தலம் மிக முக்கிய திவ்ய தேசமாகும். இத்தலத்து குளம்(தீர்த்தம்) கங்கையை விட புனிதமானது. இக்குளத்தில் குளித்தால் மனதால் நினைக்கும் பாவங்கள்கூட விலகுமாம்.

    ஆறுகால பூஜைகள் இன்றும் நடந்துகொண்டிருக்கும் சிறப்பு கொண்ட திருத்தலம். மார்க்கண்டேய புராணத்தில் இத்தலம் குறித்து கூறப்பட்டுள்ளது.

    மூலவருக்கு சந்தன தைலத்தில் மட்டுமே அபிஷேகம். சுமார் 15 அடிநீள 5 அடி உயரத்தில் பெருமாள் சயனம் கொண்டுள்ளார். லட்சுமி நரசிம்மர், சக்கரத்தாழ்வார் சன்னதிகள் இத்தலத்தில் மிகவும் விசேஷம். மிகவும் பழமையான தலம். இத்திருக்கோயில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்டுள்ளது.

    • முன்னோரை வழிபடும் நாட்களில் தை அமாவாசை முக்கியமானது.
    • துவாபரயுகம் மற்றும் கலியுகத்தில் பிதுர்கள் நம் கண்ணுக்குத் தெரியாமல் போய் விட்டனர்.

    வானவியல் கணிப்பின் படி சூரியனும் சந்திரனும் ஒரே ராசியில் கூடுகின்ற போதுள்ள காலம் அமாவாசை ஆகும். சூரியனைப் 'பிதுர் காரகன்' என்கிறோம். சந்திரனை 'மாதுர் காரகன்' என்கிறோம். எனவே சூரியனும், சந்திரனும் எமது பிதா மாதாக்களாகிய வழிபாடு தெய்வங்களாகும்.

    சூரிய பகவான் ஆண்மை, ஆற்றல், வீரம் என்பவற்றை எல்லாம் எமக்குத் தரவல்லவர், சந்திரன் எமது மனதுக்கு திருப்தியானவர். இதனால் மகிழ்ச்சி தெளிவான தெளிந்த அறிவு, இன்பம், உற்சாகம் என்பவற்றை எல்லாம் தரவல்லவர்.

    இத்தகைய பெருமைகளை எல்லாம் தருகின்ற சூரிய சந்திரனை தந்தை, தாய் இழந்தவர்கள் அமாவாசை, பூரண தினங்களில் வழிபாடு செய்வர். தை அமாவாசை தினத்தில் அதிகாலை எழுந்து தீர்த்தம் ஆடி, பின்னர் சிவாலய தரிசனம், பிதுர் தர்ப்பணம், அன்னதானம் செய்தல் என்பன முக்கியத்துவம் பெறுகின்றன.

    பிதுர் தேவர்களை சிரத்தையோடு வழிபாடு செய்து சிரார்த்தம் செய்வதால் பிதுர்களின் தோஷங்களில் இருந்து விடுபடலாம் என்பது நம்பிக்கை.

    புண்ணிய நதியில் நீராடல்

    முன்னோர்களுக்கு நாம் செய்யும் திதி பலன்களை நம்மிடம் இருந்து பெற்று பிதுர் தேவதைகளிடம் வழங்குபவர் சூரியன். அந்த தேவதைகளே மறைந்த நம் முன்னோரிடம் பலன்களைச் சேர்க்கின்றன. அதனாலேயே சூரியனைப் பிதுர்காரகன் என்கிறோம்.

    அமாவாசை நாட்களில் தீர்த்தங்கரைகளில் நீராடும்போது பிதுர்காரகராகிய சூரியனுக்கு அர்க்கியம் செய்வது (இரு கைகளாலும் நீர் விடுவது) மிகுந்த நன்மை தரும்.

    சமுத்திரத்தில் அல்லது புண்ணிய நதிகளில் நீராடியவுடன் முழங்கால் அளவு நீரில் நின்று கொண்டு சூரியனை நோக்கி மூன்று முறை அர்க்கியம் செய்வதன் மூலம் இவர் அருளைப் பூரணமாக பெற முடியும்.

    திருதயுகம், திரோதாயுங்களில் வருஷ திதி நாளில் முன்னோர்கள் நேரில் வந்து நாம் கொடுக்கும் உணவையும், வழிபாட்டையும் ஏற்றுக்கொண்டனர். யுகங்களில் பூவுலகில் தர்மம் தழைத்திருந்ததால் இந்நிலை இருந்தது. ராமன் அயோத்தி திரும்பி பட்டம் கட்டிய நாளில் தசரதர் நேரில் தோன்றி தன் பிள்ளையை ஆசியளித்து மகிழ்ந்ததாக ராமாயணம் கூறுகிறது.

    திருதயுகம், திரோதாயுங்களில் வருஷ திதி நாளில் முன்னோர்கள் நேரில் வந்து நாம் கொடுக்கும் உணவையும், வழிபாட்டையும் ஏற்றுக் கொண்டனர். யுகங்களில் பூவுலகில் தர்மம் தழைத்திருந்ததால் இந்நிலை இருந்தது. ராமன் அயோத்தி திரும்பி பட்டம் கட்டிய நாளில் தசரதா நேரில் தோன்றி தன் பிள்ளையை ஆசியளித்து மகிழ்ந்ததாக ராமாயணம் கூறுகிறது.

    துவாபரயுகம் மற்றும் கலியுகத்தில் பிதுர்கள் நம் கண்ணுக்குத் தெரியாமல் போய் விட்டனர். ஆனால் சூட்சும வடிவில் அவர்கள் நம்மை நேரில் பார்ப்பதாகவும் ஆசியளிப்பதாகவும் சாஸ்திரங்கள் குறிப்பிடுகின்றன. ஒருவரின் வயிற்றில் பிறந்தால் மட்டும் பிள்ளையாகி விட முடியாது.

    பிள்ளைக்குரிய முழு தகுதியை ஒருவன் பெற வேண்டுமானால் வாழும் காலத்தில் பெற்றோரைக் கவனிப்பதோடு, இறப்புக்கு பிறகும் பிதுர் கடனை முறையாகச் செய்ய வேண்டும். சிரத்தையுடன் அதாவது, அக்கறையுடன் செய்வதற்கு சிரார்த்தம் என்று பெயர்.

    இறந்த பின்னும் நம் வாழ்வு தொடர்கிறது என்ற உண்மையை நமக்கு இக்கடமை நினைவூட்டுகிறது. இறந்த முன்னோர்களின் நற்கதிக்காகவும், அவர்களின் பூரண ஆசி வேண்டியும், சந்ததியினர் இக்கடமையைச் செய்கின்றனர். இச் சடங்கினைத் தீர்த்தக் கரையில் செய்வது வழக்கம். இயலாதவர்கள் வீட்டிலேயே செய்து முடிப்பர்.

    சிரார்த்தம் கொடுக்கும் போது சொல்லும் மந்திரத்தின் பொருளைத் தெரிந்து கொண்டு செல்லும் போது தானே நிச்சயம் பலன் கிடைக்கும். மனித வாழ்வு இறப்புக்கு பின்னும் தொடர்கிறது என்ற உண்மையை உணர்ந்து செய்யும் போது, இச்சடங்கு பொருளுடையதாகும். முன்னோரை வழிபடும் நாட்களில் தை அமாவாசை முக்கியமானது.

    கொடிய பாவங்கள் நீங்கும்

    மனிதப் பிறவி மகத்தான பிறவி. மனிதனாக பிறந்தால்தான் இறைவனை எளிதில் அடைய முடியும். வேறு எந்தப் பிறவிக்கும் இந்த சிறப்பு கிடையாது. வானுலகில் தேவராக இருந்தாலும் கூட இறைவனைத் தரிசிக்கத்தான் முடியுமே ஒழிய அவரோடு இரண்டறக் கலக்க முடியாது.

    ஆக இத்தகைய அரிய மானிடப்பிறவியைத் தந்த நம் முன்னோருக்கு நன்றி தெரிவிக்க வாரிசுகள் நடத்தும் ஒரு விழாவாக அமாவாசையை எடுத்துக் கொள்ளலாம். சூரியனின் வடக்கு திசை பயணம் துவங்கும் உத்ராயண காலத்தின் துவக்கமான தை மாதம் மிகவும் புனிதமானது.

    அந்த மாதத்தில் வரும் அமாவாசையில் கடற்கரை தலங்களுக்குச் சென்று முன்னோருக்குச் தர்ப்பணம் செய்து வரலாம். சம்பந்தரும், நாவுக்கரசரும் வழிபட்ட வேதாரண்யம் மிகவும் புனிதமானது. இக்கோவிலுக்குள் உள்ள மணிகாணிகை தீர்த்தத்தில் நீராடினால் கங்கை, யமுனை, நாமதை, சிந்து, காவிரி போன்ற புண்ணிய நதிகளில் நீராடியதற்கு சமம்.

    இதில் நீராடியவர்கள், தங்கள் பாவங்களைக் கழுவிக் கொள்வதுடன், தங்கள் முன்னோர் செய்த பாவங்களுக்கும் சேர்த்து நிவர்த்தி பெற்று வரலாம்.

    பிரம்மஹத்தி (கொலை செய்த பாவம்) போன்ற கொடிய பாவங்களும் கூட நீங்கும் என்பது ஐதீகம். பல ஆண்டுகளாக யோகம், தானம், தவம் செய்த பலன்களையும் அடையாளம்.

    • தை மஹாளய அமாவாசையை முன்னிட்டு சித்தர் பீடத்தில் முன்னோர்களுக்கான ‘பித்ரு பூஜை’யுடன் கூடிய மஹா யாக சிறப்பு வழிபாடுகள் சித்தர் பீடத்தின் சுவாமிகள் சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் நடந்தது.
    • மஹா யாக சிறப்பு யாக வழிபாடுகள் அனைத்தும் ஸ்ரீசித்தர் பீடத்தின் சுவாமிகள் சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் நடந்தது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகரிலுள்ள சித்தர் பீடத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி, ஸ்ரீமஹா காலபைரவர், குருமகாலிங்கேஸ்வரருக்கு அமாவாசை, பவுர்ணமி, தேய்பிறை அஷ்டமி நாட்களில் 'சாக்தஸ்ரீ' சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் மஹா யாகத்துடன் கூடிய சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது.

    இதன்படி, தை மஹாளய அமாவாசையை முன்னிட்டு சித்தர் பீடத்தில் முன்னோர்களுக்கான 'பித்ரு பூஜை'யுடன் கூடிய மஹா யாக சிறப்பு வழிபாடுகள் சித்தர் பீடத்தின் சுவாமிகள் சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் நடந்தது.

    நாட்டில் தொழில்வளம் சிறக்க வேண்டியும், நன்கு மழை பெய்து பசுமை வளம் கொழிக்கவேண்டியும், உலக மக்கள் அனைவரும் நோய்கள் மற்றும் உடல் பிணிகள் நீங்கி நலமாக வாழவேண்டியும், கடன் தொல்லைகள் எதுவும் இல்லாமல் செல்வ செழிப்போடு வாழவேண்டியும் ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி, மஹா காலபைரவர் மற்றும் குரு மகாலிங்கேஸ்வரருக்கு சிறப்பு மஹா யாகத்துடன் கூடிய சிறப்பு யாக வழிபாடுகள் நடைபெற்றது.

    அதனைத்தொடர்ந்து திருமஞ்சனம், தயிர், மஞ்சள், சந்தனம், இளநீர், பால், குங்குமம் உள்ளிட்ட 21வகையான அபிஷேகமும், தொடர்ந்து சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனையும் நடைபெற்றது.

    மஹா யாக சிறப்பு யாக வழிபாடுகள் அனைத்தும் ஸ்ரீசித்தர் பீடத்தின் சுவாமிகள் சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் நடந்தது. யாகத்தின் முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம், மஹா அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

    சிறப்பு வழிபாடுகளுக்கான ஏற்பாடுகளை ஸ்ரீசித்தர் பீடத்தின் சுவாமிகள் சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில், ஸ்ரீசித்தர் பீடத்தினர், மகளிர் அணியினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

    ×