search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருப்பூர் செய்திகள்"

    அலுவலக ரீதியான பயன்பாட்டுக்காக மட்டுமே மக்கள் பிரின்டிங்கை நாடுகின்றனர்.

    திருப்பூர்:

    கடுமையான காகித விலை ஏற்றத்தால் தொழில் பாதிக்கப்பட்டு வருவதாக, பிரின்டிங் நிறுவன உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து திருப்பூர் பிரின்டிங் நிறுவன உரிமையாளர்கள் கூறியதாவது:-

    கடந்த ஓராண்டில் காகிதங்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. பிரின்டிங்கில் பில் புக், ரசீது உள்ளிட்ட அலுவலக ரீதியாக அதிகம் பயன்படுத்தப்படும் மேப் லித்தோ பேப்பர், 500 பேப்பர்கள் கொண்ட ரீம் ஒன்று, கடந்த ஆண்டு 580 ரூபாயாக இருந்தது.

    தற்போது 820 ரூபாய்க்கு மேல் விற்பனையாகிறது. இதேபோல் பல்ப் போர்டு, ஆர்ட் பேப்பர் உள்ளிட்டவை35 சதவீதம் வரை உயர்ந்துள்ளன. மேலும் 12 சதவீதம் இருந்த ஜி.எஸ்.டி., 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. காகிதங்களின் விலை ஏற்றம் காரணமாக, பிரின்டிங் தொழில் பெரிதும் பாதிக்கப்படுகிறது. அலுவலக ரீதியான பயன்பாட்டுக்காக மட்டுமே மக்கள் பிரின்டிங்கை நாடுகின்றனர்.

    திருமணம் உள்ளிட்ட விஷேசங்களுக்கு பத்திரிகை அடிப்பது குறைந்துள்ளது. தொழில் நுட்ப வளர்ச்சியாலும் பிரின்டிங் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. சம்பள பற்றாக்குறை காரணமாக, ஆபரேட்டர்களும் இத்தொழிலுக்கு வர மறுக்கின்றனர். புதிதாக யாரும் இத்தொழில் துவங்க முன் வருவதில்லை. காகித விலையை கட்டுக்குள் கொண்டுவர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    மோசடி எஸ்.எம்.எஸ்.,களிடம் வாடிக்கையாளர்கள் உஷாராக இருக்க வேண்டும்.

    திருப்பூர்:

    பொருளாதார இழப்புக்கு வலை விரிக்கும், மோசடி எஸ்.எம்.எஸ்.,களிடம் உஷாராக இருக்குமாறு வாடிக்கையாளர்களுக்கு, பி.எஸ்.என்.எல்., அறிவுறுத்தியுள்ளது.

    இதுகுறித்து பி.எஸ்.என்.எல்., நிறுவனம் அனுப்பி வரும் குறுஞ்செய்தியில், குறிப்பிட்ட செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு, 'உங்கள் ஆதார் விபரங்களை சரிபார்க்க வேண்டும். குறிப்பிட்ட செயலியை பதிவிறக்கம் செய்து, தகவல்களை அறிந்து கொள்ளலாம் என்பன போன்று வரும் மோசடி எஸ்.எம்.எஸ்.,களிடம் வாடிக்கையாளர்கள் உஷாராக இருக்க வேண்டும்.

    பி.எஸ்.என்.எல்., நிறுவனம் ஒருபோதும் மூன்றாம் நபர் செயலியை பதிவிறக்கம் செய்யுமாறு கூறாது. இது போன்ற எஸ்.எம்.எஸ்.,கள், அழைப்புகள் பொருளாதார இழப்பு முடிவை தரலாம் என்பதால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனதெரிவிக்கப்பட்டுள்ளது.

    100 நாள் திட்ட தொழிலாளர்களை பருத்தி சாகுபடி செய்யும் வயல்களுக்கு அனுப்ப வேண்டும்.

    குடிமங்கலம்:

    உடுமலை, குடிமங்கலம் வட்டாரத்தில் 25 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமாக பருத்தி சாகுபடி செய்யப்பட்டு வந்தது. தொழிலாளர் பற்றாக்குறை, நிலையில்லாத விலை, பி. ஏ. பி., பாசன சுற்று குறைப்பு உள்ளிட்ட காரணங்களால் படிப்படியாக சாகுபடி பரப்பு குறைந்து வருகிறது.

    விவசாய தொழிலாளர்கள் பலர் திருப்பூர், கோவை, சென்னை போன்ற தொழில் நகரங்களுக்கு வேலைக்கு சென்று விட்டனர். மீதமிருக்கும் தொழிலாளர்களும் 100நாள் திட்ட வேலைக்கு சென்று விடுகின்றனர்.

    பருத்தி மற்றும் நூல் விலை ஏற்றம் காரணமாக இன்று விசைத்தறி மற்றும் பின்னலாடை துறை உள்ளிட்ட தொழில்கள் முடங்கி உள்ளன. இதனால், பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். இந்நிலையில் 100 நாள் திட்ட தொழிலாளர்களை பருத்தி சாகுபடி செய்யும் வயல்களுக்கு அனுப்ப வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

    முகாம் குறித்த அறிவிப்பு, விளையாட்டுத்துறை தரப்பில் இருந்து வந்தவுடன் தெரிவிக்கப்படும்.

    உடுமலை:

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தனிநபர், குழு விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவர்களை கண்டறியவும், விளையாட்டுக்களை கற்றுத்தரவும், ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறையில் விளையாட்டு பயிற்சி முகாம் நடத்துகிறது.

    இம்முகாமில் தடகளம், கால்பந்து, டேக்வாண்டோ, பேட்மின்டன் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுக்களுக்கு பயிற்சியாளர் வாயிலாக பயிற்சி வழங்கப்படும். காலை, 6 மணிமுதல்9 மணி வரை, மாலை 3மணி முதல் 6மணி வரை நடக்கும் பயிற்சி முகாம், கொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகளாக நடக்கவில்லை.

    கொரோனா பாதிப்பு பெரும்பாலான மாவட்டங்களில் தற்போது பூஜ்ஜியமாகியுள்ளதால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு போட்டிகள் நடத்திட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    பள்ளி கல்வித்துறையும், மாவட்ட விளையாட்டுத்துறையும் கோடை விடுமுறை விட்டு ஒரு வாரமாகியும் சத்தமில்லாமல் உள்ளது.திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு உடற்கல்வி ஆய்வாளர் தரப்பில் இருந்து எந்த அறிவுறுத்தலும் இதுவரை வழங்கவில்லை.

    இதுகுறித்து மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜகோபாலிடம் கேட்ட போது,கோடைகால பயிற்சி முகாம் குறித்த அறிவிப்பு, விளையாட்டுத்துறை தரப்பில் இருந்து வந்தவுடன் தெரிவிக்கப்படும் என்றார்.

    தினமும் காலை 9மணி முதல் மாலை 5மணி வரை மையம் செயல்படும்.

    திருப்பூர்:

    திருப்பூர் தலைமை அரசு மருத்துவமனையில் முதியோர் பராமரிப்புக்கென பிரத்யேக மையம் தொடங்கப்பட்டு தேவையான சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவசர சிகிச்சை, பிரசவம் மட்டுமின்றி, ஆதரவற்ற முதியோர், உற்றார் உறவினர் இல்லாதவர்களை கொண்டு வந்து விடும் காப்பகமாக தலைமை அரசு மருத்துவமனை மாறிவிட்டது.

    மாவட்டத்தின் பல பகுதியில் இருந்து வயதானவர்களை அழைத்து வந்து சிலர் விட்டு சென்று விடுகின்றனர். இவர்கள் இங்கொன்றும், அங்கொன்றுமாக படுத்துறங்கி, உணவு அளிப்பவர்களிடம் சாப்பிட்டு காலத்தை ஓட்டி வருகின்றனர். இவர்களை போன்றவர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் தலைமை அரசு மருத்துவமனையில் முதியோர் பராமரிப்புக்கென பிரத்யேக மையம் தொடங்கப்பட்டுள்ளது.

    தினமும் காலை 9மணி முதல் மாலை 5மணி வரை இம்மையம் செயல்படும். டாக்டர், செவிலியர் பணியில் இருப்பர். மருத்துவ ஆலோசனை பெறலாம். அவசியம் இருந்தால் மட்டும் வார்டில் அனுமதிக்கப்படுவர்.

    இல்லையெனில் அன்று மாலையே மருந்து, மாத்திரை கொடுத்து அனுப்பி வைக்கப்படுவர். மேலும் விபரங்களுக்கு பராமரிப்பு மைய பொறுப்பு அலுவலரை 98947 28419 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    உடுமலை பகுதியில் அறுவடை செய்யப்படும் பொரியல் தட்டைக்கு கூடுதல் விலை கிடைத்து வந்தது.

    மடத்துக்குளம்:

    காய்கறி சாகுபடியில் தட்டை பயர், பீன்ஸ் வரிசையில் பொரியல் தட்டையும் ஒன்றாகும். கேரளா மாநிலத்தில் அவியல், பொரியல், கூட்டு என உணவில் அதிக அளவு பயன்படுத்தப்படுவதால், அம்மாநிலத்திற்கு அதிக அளவு விற்பனைக்கு செல்கிறது.

    உடுமலை பகுதியில் காய்கறி சாகுபடியில் ஈடுபட்டு வந்த விவசாயிகள், நீர்ப்பற்றாக்குறை, பராமரிப்பு செலவு ஆகிய காரணங்களினால் 60 நாட்களில் பயனுக்கு வரும் பொரியல் தட்டை சாகுபடியிலும் தற்போது ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    குடிமங்கலம் வட்டாரம் உடுமலை, மடத்துக்குளம் வட்டாரங்களில் தற்போது அதிக அளவு உற்பத்தி செய்யப்படுகிறது. இப்பகுதிகளில் விளையும் பொரியல் தட்டை கேரளா மாநிலம், மூணாறு, மறையூர் மற்றும் பாலக்காடு பகுதிகளுக்கு விற்பனைக்கு செல்கிறது. கேரள மாநில வியாபாரிகள் வயல்களுக்கு நேரடியாக வந்து விளையும் பொரியல் தட்டை அனைத்தையும் கொள்முதல் செய்து வருகின்றனர்.

    உடுமலை பகுதியில் அறுவடை செய்யப்படும் பொரியல் தட்டைக்கு கூடுதல் விலை கிடைத்து வந்தது. தற்போது வரத்து அதிகரிப்பு காரணமாக நிலையில்லாத விலை நிலவுகிறது.

    இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    பொரியல் தட்டை அனைத்து வகை நிலங்களிலும், அனைத்து பருவத்திலும் சாகுபடி செய்யலாம். குளிர் சீதோஷ்ண நிலை உள்ள உடுமலை சுற்றுப்பகுதிகளில் நல்ல மகசூல் கிடைக்கிறது. விதைப்பு செய்த 50 வது நாள் முதல் காய்கள் தினமும் பறிக்கலாம்.

    தினமும் ஏக்கருக்கு 100 முதல் 150 கிலோ வரை கிடைக்கிறது. ஏக்கருக்கு 15 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது. 10 டன் வரை மகசூல் கிடைக்கிறது.கடந்த வாரம் கிலோ 30 ரூபாய் வரை சந்தை நிலவரம் இருந்தது. தற்போது 20 ரூபாயாக குறைந்துள்ளது. கேரளா மாநில வியாபாரிகள் மட்டுமே கொள்முதல் செய்வதால், நிலையில்லாத விலை கிடைக்கிறது.

    விவசாயிகளிடம், குறைந்த விலைக்கு கொள்முதல் செய்கின்றனர். எனவே, கேரளா மாநிலத்திற்கு அதிக அளவு விற்பனைக்கு செல்லும் நிலையில் வேளாண் மற்றும் வணிகத்துறை சார்பில் சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தி உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.

    250க்கும் மேற்பட்ட காலியிடங்கள் மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

    உடுமலை:

    டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளிகளுக்காக இலவச பயிற்சி வகுப்பு, மாவட்ட வேலை வாய்ப்பு மையத்தில் தொடங்கப்படுகிறது. தேர்வாணையம் அறிவித்த குரூப்- 4 தேர்வு வாயிலாக, வி.ஏ.ஓ., இளநிலை உதவியாளர், பில் கலெக்டர், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

    இப்பணியிடங்களில் 250க்கும் மேற்பட்ட காலியிடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு குரூப்- 4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு துவக்கப்படுகிறது.

    பயிற்சியில் பங்கேற்க விரும்பும் மாற்றுத்திறனாளிகள், தங்கள் பெயரை வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நேரிலோ அல்லது 0421 2999152, 94990 55944 என்கிற எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

    மாநகரில், கடந்த 2013 முதல் 2022 ஏப்ரல் வரை 231 போக்சோ வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

    திருப்பூர்:

    டாலர் சிட்டியான திருப்பூரில், பலதரப்பட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் குடும்பத்துடன் தங்கி பணியாற்றி வருகின்றனர். இங்கு குழந்தைகள், சிறார்கள் மீது பாலியல் அத்துமீறல் ஏதாவது ஒரு வகையில் நடக்கிறது. இது போலீசாரின் பார்வைக்கு செல்லும் போது குற்றவாளிகள் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கின்றனர்.

    கடந்த சில மாதங்களாக மாவட்டத்தில் அன்றாடம் ஒரு வழக்காவது பதிவாகிறது. இதில் பாதிக்கப்படும் சிறுவர், சிறுமிகள் அனைவரும் 12 முதல் 17 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்கின்றனர்.

    திருப்பூர் மாநகரில் கடந்த 2ஆண்டில் (2021 மற்றும் 2022 ஏப்ரல் வரை) 82 போக்சோ வழக்கு, புறநகரில் 119 வழக்கு என மாவட்டத்தில் மொத்தம் 201 வழக்கு பதிவாகியுள்ளது. 2 ஆண்டில் போக்சோ வழக்கில் 27 வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    மற்ற வழக்குகள் போலீஸ், கோர்ட்டு விசாரணையில் உள்ளது. மாநகரில், கடந்த 2013 முதல் 2022 ஏப்ரல் வரை 231 போக்சோ வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இம்மாதத்தில் மாநகர் மற்றும் புறநகரில் 5 வழக்குகள் பதிவாகி உள்ளது.

    ரத்த தானம் செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்களை கல்லூரி முதல்வர் கல்யாணி வழங்கினார்.

    உடுமலை:

    உடுமலை அரசு கலைக்கல்லூரி இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் கல்லூரி வளாகத்தில் ரத்ததான முகாம் நடந்தது. முகாமிற்கு உடுமலை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர் உமா மகேஸ்வரி தலைமை வகித்தார். முகாமை கல்லூரி முதல்வர்சோ.கி.கல்யாணி தொடங்கி வைத்தார்.

    அரசு மருத்துவமனை ரத்தவங்கி டாக்டர் கலைமுகில், செவிலியர்கள், பால் வினைப்பிரிவு ஆலோசகர், தொழில்நுட்ப பணியாளர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் ரத்த சேகரிப்பு பணிகளை மேற்கொண்டனர்.

    இம்முகாமில் மாணவர்கள் 54 பேர் ரத்த தானம் செய்தனர். ரத்த தானம் செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்களை கல்லூரி முதல்வர் கல்யாணி வழங்கினார். முகாமிற்கான ஏற்பாடுகளை இளைஞர் செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலர் கன்னிமுத்து மற்றும் மாணவர்கள் ரோகித் குமார், வசந்தகுமார், மோகன்குமார், சுரேஷ்குமார், தமிழரசன், கருப்புசாமி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    பாதாள சாக்கடைகளில் அடைப்பு ஏற்பட்டு நகரில் பல இடங்களில் கழிவுநீர் வழிந்தோடுகிறது.

    உடுமலை:

    உடுமலை நகராட்சியில் பாதாள சாக்கடைகளில் அடைப்பு ஏற்பட்டு நகரில் பல இடங்களில் கழிவு நீர் வழிந்தோடுகிறது. இந்தநிலையில் சாக்கடை அடைப்பை நீக்க மனிதர்கள் இறங்குவதை தவிர்க்கும் வகையிலும் பாதாள சாக்கடைகளை சுத்தம் செய்ய அடைப்புகளை நீக்கி கழிவுகளை வெளியேற்றும் வகையிலும் ரோபோட்டிக் எனும் தானியங்கி எந்திரம் வாங்கப்பட்டுள்ளது.

    உடுமலை நகர்மன்றத்தலைவர் மத்தீன் மற்றும் நகராட்சி ஆணையாளர் சத்தியநாதன், நகர்மன்ற துணைத் தலைவர் கலைராஜன், கவுன்சிலர்கள், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் ஆகியோர் முன்னிலையில் எந்திரம் பரிசோதிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டது. 

    விசைத்தறி ஜவுளி தொழில் கடந்த பல ஆண்டுகளாக நெருக்கடி நிலையில் உள்ளது.

    பல்லடம்:

    நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி திருப்பூர் மாவட்டத்தில் விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் விசைத்தறி தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளதுடன் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறியாளர்கள் சங்க செயலாளர் பாலசுப்ரமணியம் கூறியதாவது:-

    விசைத்தறி ஜவுளி தொழில் கடந்த பல ஆண்டுகளாக நெருக்கடி நிலையில் உள்ளது. ஏற்கனவே கூலி உயர்வு பிரச்சனை, தொழிலாளர்கள் பற்றாக்குறையில் சமாளித்து தொழில் செய்து வருகிறோம். இந்த நிலையில் நூல் விலை கடும் உயர்வு விசைத்தறி ஜவுளி தொழிலை கடுமையாக பாதித்துள்ளது.

    ஜவுளி உற்பத்தியாளர்கள் பாவு நூல் தருவதை நிறுத்திவிட்டனர். தற்போது சுமார் 40 சதவீதம் விசைத்தறிகள் மட்டுமே இயங்குகின்றன. இதே நிலை நீடித்தால் தொழிலாளர்கள் வேறு வேலைகளுக்கு சென்று விடுவார்கள். விசைத்தறி தொழிலை நம்பி வாங்கிய கடன்கள், வட்டி கட்ட முடியாத நிலையில் உள்ளது. எனவே மத்திய மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து நூல் விலையை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர் சங்க தலைவர் வேலுசாமி கூறியதாவது:-

    விசைத்தறி தொழில் ஏற்கனவே கூலி உயர்வு பிரச்சினை, பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி., கொரோனாஎன அடுத்தடுத்த சிக்கல்களால் நலிவடைந்துள்ளது. தொழிலை சரிவர மேற்கொள்ள முடியாமல் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக, வங்கியில் பெற்ற நகைக்கடனை திருப்பி செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வருகிறோம். இதற்கிடையே, ஜவுளி உற்பத்தியாளர்களின் 15 நாள் உற்பத்தி நிறுத்த போராட்டத்தால் பல லட்சம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு இழந்துள்ளதுடன் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது.

    இந்தநிலையில் வருகின்ற நாட்களில், குழந்தைகளின் பள்ளி மற்றும் கல்லூரி கட்டணங்கள் செலுத்த வேண்டும். சீருடை, புத்தகங்கள் போன்ற செலவுகள் ஏராளமாக உள்ளன. இந்த நிலையில் விசைத்தறி தொழிலில் ஏற்பட்டுள்ள பாதிப்பு காரணமாக, இந்த பிரச்சினைகளை எப்படி கையாள்வது என்று விழிபிதுங்கி உள்ளோம். எனவே, மத்திய, மாநில அரசுகள் நூல் விலையை குறைக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, தொழிலையும், தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் காப்பாற்ற முடியும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    திருப்பூா் மாவட்டத்தில் நாடா இல்லாத விசைத்தறிகள் 50 ஆயிரம் உள்ளன. இதன் மூலம் தினமும் சராசரியாக ரூ.50 கோடி மதிப்பிலான 1 கோடி மீட்டா் துணி உற்பத்தி செய்யப்படுகிறது. 

    ஒரு மீட்டா் துணி உற்பத்தி செய்ய ரூ.45 செலவாகிறது. ஆனால் ஒரு மீட்டா் துணி விற்பனை விலை ரூ.40 ஆக உள்ளது. இதனால் ஒரு மீட்டருக்கு ரூ.5 இழப்பு ஏற்படுகிறது. மேலும் பஞ்சு, நூல் விலை உயா்ந்து தொழில் நலிவடைந்து வருகிறது. தொழிலாளா்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதற்காக இயங்கப்பட்ட விசைத்தறி கூடங்களில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள துணி தேக்கம் அடைந்துள்ளது.

    இது பற்றி கரைப்புதூா் நாடா இல்லாத விசைத்தறி ஜவுளி உற்பத்தி நிறுவன உரிமையாளர் கரைப்புதூா் ராஜேந்திரன் கூறியதாவது:-

    தொழிலாளா்கள் ஊதியம் அதிகரிப்பு, விசைத்தறி உதிரி பாகங்களின் விலை உயா்வு ஆகிய சிரமங்களுக்கிடையே இத்தொழிலை நடத்தி வருகிறோம். மேலும் துணி உற்பத்தி செலவுக்கேற்ப விற்பனை விலை உயரவில்லை. 20 கவுண்ட் ரக நூல் கிலோ ரூ.160 ஆக இருந்தது. தற்போது ரூ.240 ஆக விலை உயா்ந்துள்ளது. கொரோனா பொது முடக்கத்தால் பொருளாதாரம் பாதிப்படைந்து மக்களிடம் வாங்கும் திறன் குறைந்துள்ளதால் வட மாநில ஜவுளி வியாபாரிகள் துணி கொள்முதல் செய்ய ஆா்வம் காட்டவில்லை.

    இதன் காரணமாக துணி விற்பனை வீழ்ச்சி அடைந்தது. தொழிலாளா்களுக்கு வேலை தரவேண்டிய நெருக்கடி, வங்கியில் வாங்கிய கடனுக்கு தவணை, வட்டி செலுத்த வேண்டிய கட்டாயம் ஆகியவற்றால் கிடங்கில் இருப்பு வைக்கப்பட்ட துணிகளை நஷ்டத்திற்கு விற்பனை செய்ய வேண்டிய நிலைஏற்பட்டுள்ளது.

    நாடா இல்லாத விசைத்தறி ஜவுளி உற்பத்தித் தொழிலை பாதுகாக்க அரசு மின் கட்டண சலுகை வழங்க வேண்டும். ஜி.எஸ்.டி. திரும்ப பெறும் தொகைகளை உடனே வழங்க வேண்டும். ஜவுளி உற்பத்தியாளா்கள் தொழில் மேம்பாட்டுக்காக கடன் வாங்கி திணறி வருகின்றனா். சிலா் திவால் ஆகும் நிலையில் உள்ளனா்.

    அவா்கள் வாங்கிய கடன்களுக்கு வட்டி சலுகை வழங்கிட வேண்டும். மேலும் தொழில் துறை வளா்ச்சி பெற விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளா்களின் கடனை முழுமையாக தள்ளுபடி செய்திட வேண்டும். பஞ்சு, நூல் பதுக்கலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இடைதரகா் இன்றி ஜவுளி உற்பத்தியாளா்கள் நேரடியாக துணிகளை விற்பனை செய்ய திருப்பூா், கோவை மாவட்டத்தின் மத்தியில் பல்லடத்தில் ஜவுளி சந்தை அமைக்க வேண்டும். விசைத்தறி தொழிலாளா்களுக்கு அரசு தங்கும் விடுதி அல்லது வீட்டுவசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என்றாா்.

    திருப்பூர் காட்டன் மார்க்கெட் கமிட்டி 1936-ல், உருவாக்கப்பட்டது.

    திருப்பூர்:

    தமிழ்நாடு வேளாண் விளைபொருள் விற்பனை சட்டத்தை சீராய்வு செய்ய விவசாயிகள், தங்கள் ஆலோசனை மற்றும் கருத்துகளை தெரிவிக்கலாம் என வேளாண் வணிகத்துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

    தமிழ்நாட்டில், 1928-ல் ராயல் கமிஷன் ஏற்படுத்தப்பட்டு, அதன் பரிந்துரை அடிப்படையில் மெட்ராஸ் வணிகப்பயிர் சட்டம், 1933ல், தோற்றுவிக்கப்பட்டது. தொடர்ச்சியாக திருப்பூர் காட்டன் மார்க்கெட் கமிட்டி 1936-ல், உருவாக்கப்பட்டது.

    வேளாண் விளைபொருள் விற்பனையை முறைப்படுத்திட 1933-ல் இயற்றப்பட்ட சட்டத்திற்குப் பிறகு சமூக பொருளாதாரத் தேவையை கருத்தில் கொண்டு 1959 மற்றும் 1987 ஆண்டுகளில் புதிய சட்டங்கள் உருவாக்கப்பட்டன.

    தற்போது தமிழ்நாட்டில் விவசாயிகள் தங்களுடைய விளைபொருளை விற்பனை செய்ய 27 விற்பனை குழுக்களின் கீழ் 284 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் செயல்பட்டு வருகின்றன.

    இந்நிலையில் 1987ல் இருந்து அவ்வப்போது ஏற்படும் சந்தை நிலவரத்திற்கு ஏற்றவாறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மின்னணு சந்தை, மாநில அளவிலான ஒருங்கிணைந்த ஒற்றை உரிமம், ஒருமுனை மார்க்கெட் கட்டண வசூலிப்பு உள்ளிட்ட மாற்றங்கள் 2017ல் கொண்டு வரப்பட்டது.

    அதன் தொடர்ச்சியாக வேளாண் விளைபொருட்களை விவசாயிகள் தங்கள் விருப்பத்திற்கேற்ப ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களிலும், இதர வணிக இடங்களிலும் விற்பனை செய்யும் வகையில் கடந்த, 2020ல் மீண்டும் மாற்றப்பட்டது.

    தற்போதைய சந்தை நிலவரத்திற்கு ஏற்றவாறு, வேளாண் விற்பனை சந்தையை மேம்படுத்திட, மேற்படி சட்டத்தைச் சீராய்வு செய்ய அரசு தீர்மானித்தது. அதன் அடிப்படையில் மாநில வேளாண்மை விற்பனை சந்தை முறை மற்றும் அதன் வழிமுறைகளை உருவாக்க தேவையான மாற்றங்களுக்கான ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகள் வழங்க அரசால் உயர்நிலை குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இக்குழுவினர் விவசாயிகள், வியாபாரிகளிடம் இருந்து, சட்ட சீராய்வுக்கான கருத்து மற்றும் ஆலோசனைகளை வரவேற்றுள்ளனர். வரும் ஜூன் 6-ந் தேதிக்குள், தங்கள் கருத்துகளை விவசாயிகள் தெரிவிக்கலாம்.

    விவசாயிகள், 93848 76300 என்ற செல்போன் எண்ணுக்கு வாட்ஸ் ஆப் வாயிலாகவும், உழவன் மொபைல் செயலி, agrimarketing.rm@gmail.com என்ற இ-மெயில் வாயிலாகவும் அனுப்பலாம்.

    மேலும், தபால் வாயிலாக, வேளாண்மை இணை இயக்குனர் (ஒழுங்குமுறை விற்பனைக்கூடம்) வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சிப்பெட் ரோடு, கிண்டி, சென்னை -600032 என்ற எண்ணுக்கும் அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×