search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "SriLanka"

    • இலங்கை கடற்படையினருக்கு பல்வேறு போர் பயிற்சிகளை சீன ராணுவம் அளித்து வருகிறது.
    • அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்தது.

    புதுடெல்லி:

    இந்தியாவுக்கு மிக அருகாமையில் உள்ள இலங்கை தீவு தேசம் சீனாவுக்கு நட்பு நாடாக விளங்கி வருகிறது. இதனால் சமீப காலமாக சீனாவின் ராணுவ நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இலங்கை கடற்படையினருக்கு பல்வேறு போர் பயிற்சிகளையும் சீன ராணுவம் அளித்து வருகிறது.

    இதற்கிடையே இலங்கையின் தொன்ட்ரா விரிகுடாவிற்கு அருகிலுள்ள காடுகளில் சீன அறிவியல் அகாடமியின் விண்வெளி தகவல் ஆராய்ச்சி மையம் ரேடார் தளத்தை அமைக்க பரிசீலித்து வருவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இதன் மூலம் இந்திய பெருங்கடலில் உள்ள இங்கிலாந்து மற்றும் அமெரிக்க ராணுவ தளங்களை உளவு பார்க்க முடியும் என தகவல்கள் கிடைத்துள்ளன.

    மேலும் இந்திய பெருங்கடலில் மேற்கத்திய கடற்படை கப்பல்களுக்கு எதிரான உளவு தகவல்களை சேகரிக்கும் நடவடிக்கைகளுக்கும் உதவும் என அஞ்சப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் டியாகோ கார்சியாவில் உள்ள அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ராணுவ தளங்களையும் உளவு பார்க்க சீனாவுக்கு வாய்ப்பாக அமையும் என கூறப்படுகிறது.

    மேலும் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள இந்தியாவின் நிறுவனங்கள் ரேடாரின் வரம்பிற்குள் இருக்கும் என விஷயத்தை நன்கு அறிந்த நபர்கள் தெரிவிக்கின்றனர். அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்குச் செல்லும் இந்தியக் கடற்படை கப்பல்களின் இயக்கத்தை ரேடார் கண்காணிக்க முடியும். கூடங்குளம் மற்றும் கல்பாக்கம் அணுமின் நிலையங்களை ரேடார் கண்காணித்து இந்த வசதிகளில் எரிபொருள் நிரப்பும் என்ற அச்சமும் உள்ளது.

    தொன்ட்ரா விரிகுடா இலங்கையின் தென்கோடி முனையில் அமைந்துள்ளது. இலங்கை வரலாற்றில் மேற்கண்ட பகுதி முக்கியத்துவம் வாய்ந்தது. இது ஒரு காலத்தில் இலங்கையின் தலைநகராக இருந்தது. அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்தது.

    அதன் மூலம் கடந்த ஆண்டு சீனா பி.எல்.ஏ. உளவுக் கப்பலின் வருகை, பிராந்தியத்தில் இந்தியாவின் நலன்களுக்கு பாதகமான தாக்கங்களை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து இந்திய கடற்படை உஷார்படுத்தப்பட்டது. அவர்கள் எல்லை பகுதிகளில் தீவிரமாக கண்காணித்து வந்தனர். அதன் பின்னர் வந்த யுவான் வாங் 5 சீனா உளவு கப்பல் இலங்கை கடற்பரப்பில் ஆய்வுகளை மேற்கொள்ளக் கூடாது என்ற நிபந்தனையின் பேரில் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

    அப்போதும் சீனா கடற்படையினர் தானியங்கி அடையாள அமைப்பை இயக்கியதாக செய்திகள் வெளியாகின. அதன் பின்னர் தீவிர பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு, கப்பலை அம்பாந்தோட்டையில் நிறுத்துவதற்கும், எரிபொருள் நிரப்புவதற்கும் மற்ற பொருட்களை எடுத்துக் கொள்வதற்கும் 6 நாட்கள் தங்குவதற்கு இலங்கை அனுமதித்தது.

    அம்பாந்தோட்டை துறைமுகத்தை 2017 ஆம் ஆண்டு முதல் 1.12 பில்லியன் டாலர்களுக்கு 99 வருட குத்தகைக்கு எடுத்து சீனர்கள் நடத்தி வருகின்றனர். முன்னதாக துறைமுகத்தை நிர்மாணிப்பதற்காக சீன நிறுவனத்திற்கு 1.4 பில்லியன் டாலர்கள் இலங்கை அரசால் வழங்கப்பட்டிருந்தது.

    இதற்கிடையே அவ்வப்போது இலங்கை ஆட்சியாளர்கள் அணி சேராமை, நடுநிலைமை, இந்தியா ஜெல் பஸ்ட் போன்ற வெளிவிவகாரக் கொள்கை நிலைப்பாடுகளைப் பற்றி வாய்ச்சவடால் பேசி வருகின்றனர்.

    தற்போது இலங்கையில் சீனா ரேடார் தளத்தை அமைக்கத் திட்டமிட்டுள்ளது என்ற செய்தி, இலங்கையின் வெளியுறவுக் கொள்கை குறித்து கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது என்று இலங்கையை தளமாகக் கொண்ட சுயாதீன அரசியல் ஆய்வாளர் ஏ.ஜதீந்திர கூறினார். மேலும் திரிகோணமலை, இந்தியப் பெருங்கடல் பகுதியில் பெய்ஜிங்கின் நடமாட்டம் அதிகரித்து வருவதை இந்தியா சந்தேகித்துள்ளது.

    • இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக நிறுத்தப்பட்டிருந்த சென்னை- யாழ்ப்பாணம் விமான சேவை இன்று முதல் மீண்டும் தொடங்கியது.
    • இன்று சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 64 இருக்கைகள் உடைய சிறிய ரக விமானம் புறப்பட்டு சென்றது.

    இந்தியாவில் இருந்து இலங்கையில் உள்ள கொழும்பு விமான நிலையத்திற்கு மட்டுமே விமான சேவைகள் இயக்கப்பட்டு வந்தன.

    இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் யாழ்ப்பாணத்திலும் விமான நிலையம் உள்ளது. ஆனால் இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு விமான சேவைகள் இல்லாத நிலை இருந்தது.

    இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும், யாழ்ப்பாணத்திற்கு தமிழ்நாட்டில் இருந்து விமான சேவையை நடத்த வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் கோரிக்கைகள் வைத்தன.

    இதையடுத்து கடந்த 2019ம் ஆண்டு சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு விமான சேவை தொடங்கியது. வாரத்தில் மூன்று நாட்கள் அந்த விமான சேவைகள் இருந்தன. அலையன்ஸ் ஏர் நிறுவனம் சிறிய விமானங்களை இயக்கி வந்தது.

    இதற்கிடையே கடந்த 2020ம் ஆண்டு தொடக்கத்தில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு பெருமளவு பரவியது. இதைத்தொடர்ந்து சென்னை- யாழ்ப்பாணம் விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டன.

    தற்போது, கொரோனா வைரஸ் பாதிப்பு பெருமளவு குறைந்து சகஜ நிலைக்கு திரும்பி உள்ளதால் சென்னை- யாழ்ப்பாணம் விமான சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதைத்தொடர்ந்து கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக நிறுத்தப்பட்டிருந்த சென்னை- யாழ்ப்பாணம் விமான சேவை இன்று முதல் மீண்டும் தொடங்கியது.

    ஏற்கனவே விமான சேவைகளை இயக்கி வந்த அலையன்ஸ் ஏர் நிறுவனம், சென்னை- யாழ்ப்பாணம்- சென்னை விமான சேவைகளை தொடங்கி உள்ளது.

    இன்று சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 64 இருக்கைகள் உடைய சிறிய ரக விமானம் புறப்பட்டு சென்றது. முதல் நாள் என்பதால் இன்று மிகவும் குறைவான பயணிகளாக 12 பேர் மட்டுமே சென்றனர். முதல் விமானம் காலை 10.15 மணிக்கு தாமதமாக யாழ்ப்பாணத்திற்கு புறப்பட்டு சென்றது.

    வாரத்தில் 3 நாட்கள் மட்டும் இயக்கப்பட்டு இருந்த யாழ்ப்பாணத்திற்கான விமான சேவைகள், தற்போது திங்கள், செவ்வாய், வியாழன், சனி ஆகிய 4 நாட்களாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

    காலை 9.25 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படும் இந்த விமானம், காலை 10.50 மணிக்கு யாழ்ப்பாணம் விமான நிலையம் சென்றடைகிறது. மீண்டும் காலை 11.50 மணிக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்பட்டு பகல் 1.15 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையம் வருகிறது.

    சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு மீண்டும் விமான சேவை தொடங்கி உள்ளதால், சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் வசதியாக இருக்கும். மேலும் இலங்கையில் அதிகமாக வசிக்கும் தமிழ் மக்களுக்கும், இந்த விமான சேவைகள் பெரும் உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

    • தாய்லாந்தில் உள்ள கோத்தபய ராஜபக்சே, ஓட்டல் அறையிலேயே இருக்கும்படியும் வெளியில் வர வேண்டாம்.
    • கோத்தபய ராஜபக்சேவின் சகோதரரும், முன்னாள் நிதி மந்திரியுமான பசில் ராஜபக்சே அதிபர் ரணில் விக்ரமசிங்கேவை சந்தித்து பேசினார்.

    இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு அரசாங்க உயர் பதவிகளில் இருந்த ராஜபக்சே குடும்பத்தினர்தான் காரணம் என பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

    இதனால் அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே மாலத்தீவு மற்றும் சிங்கப்பூருக்கு தப்பி சென்றார். தற்போது அவர் தாய்லாந்து நாட்டில் தஞ்சம் அடைந்துள்ளார். மேலும் அமெரிக்காவில் குடியேற கோத்தபய விண்ணப்பித்து உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    கோத்தபய ராஜபக்சே, விரைவில் இலங்கை திரும்புவார் என்று அமைச்சர் ஒருவர் தெரிவித்து இருந்தார். ஆனால் தற்போதைய சூழலில் நாடு திரும்பினால் மீண்டும் பிரச்சினை ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளதால் அவர் இலங்கைக்கு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

    இந்தநிலையில் கோத்தபய ராஜபக்சே நாடு திரும்ப தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அதிபர் ரணில் விக்ரமசிங்கேவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    கோத்தபய ராஜபக்சேவின் சகோதரரும், முன்னாள் நிதி மந்திரியுமான பசில் ராஜபக்சே அதிபர் ரணில் விக்ரமசிங்கேவை சந்தித்து பேசினார். அப்போது கோத்தபய ராஜபக்சே நாடு திரும்புவதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று பசில் ராஜபக்சே வேண்டுகோள் விடுத்தார்.

    இதுக்குறித்து ராஜபக்சே கட்சியான இலங்கை பொதுஜன பெரமுனா கட்சி வெளியிட்ட அறிக்கையில் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே, நாடு திரும்ப ஏற்பாடுகளை செய்து தருமாறு பசில் ராஜபக்சே கோரிக்கை விடுத்தார் என்று தெரிவித்துள்ளது.

    ராஜபக்சே கட்சியின் ஆதரவுடன் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்கே, கோத்தபய ராஜபக்சே நாடு திரும்புவதற்கு பாதுகாப்பு அளிக்க விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு இதுவரை பதில் எதுவும் தெரிவிக்கவில்லை.

    தாய்லாந்தில் உள்ள கோத்தபய ராஜபக்சே, ஓட்டல் அறையிலேயே இருக்கும்படியும் வெளியில் வர வேண்டாம் என்றும் அந்நாட்டு அரசு அறிவுறுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • இலங்கையில் அவசர நிலை சட்டம் அமலில் உள்ளது.
    • இது ஆகஸ்ட் 14 வரை நீட்டிக்கப்படுகிறது.

    கொழும்பு:

    இலங்கை அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூருக்கு தப்பிய நிலையில், இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார்.

    ஆனாலும் ரணில் பதவி விலக வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததால் பொதுச் சொத்துகள் பாதுகாப்பு, பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருள்கள், சேவை விநியோகம் ஆகியவற்றை கருத்தில்கொண்டு இலங்கையில் மீண்டும் அவசர நிலையை ரணில் விக்ரமசிங்க கடந்த 19-ம் தேதி அறிவித்தாா். அதன்பின், நடந்த முடிந்த அதிபர் தேர்தலிலும் ரணில் விக்ரமசிங்க முதல்முறையாக அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனாலும், பொருளாதார நெருக்கடியால் கொழும்பில் உள்ள அதிபர் மாளிகை முன் ரணில் பதவி விலகவேண்டும் என மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், அமலில் உள்ள அவசர நிலை சட்டம் வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி வரை நீட்டிக்கப்பட உள்ளது என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • புதிய அதிபராக தேர்தெடுக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்கேவுக்கு எதிராக தீவிரம் அடையும் போராட்டம்.
    • அதிபர் மாளிகையை போராட்டக்காரர்கள் நெருங்க முடியாத அளவிற்கு தடுப்புகள் அமைப்பு.

    கொழும்பு:

    பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையின் 8-வது அதிபராக ரணில் விக்ரமசிங்கே நேற்று பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில் ரணில் விக்ரமசிங்கேவுக்க எதிராக பல இடங்களில் திரண்ட போராட்டக்காரர்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். போராட்டக்காரர்கள் அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சித்தால், சட்டத்தின்படி கையாள்வோம் என்று ரணில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இந்த நிலையில் நேற்றிரவு கொழும்பில் உள்ள அதிபர் மாளிகை வளாககத்திற்கு வெளியே ஆயுதம் ஏந்தி ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டனர். அதிபர் மாளிகையை போராட்டக்காரர்கள் நெருங்க முடியாத அளவிற்கு தடுப்புகள் அமைக்கப்பட்டன. 


    உடனடியாக அங்கிருந்த போராட்டக்காரர்கள் தடுப்பு வேலிகளை அகற்ற முயற்சித்த நிலையில் அதை ராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்தினர். மேலும் போராட்டக்காரர்களின் கூடாரங்களை அப்பறப்படுத்தும் நடவடிக்கையில் அவர்கள் ஈடுபட்டனர். இந்த அந்த பகுதியில் பதற்றம் நீடித்து வருகிறது.

    • வேறு நாட்டில் தஞ்சம் அடையும் நிலைக்கு கோத்தபய ராஜபக்சே தள்ளப்பட்டார்.
    • சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் மாலே சென்றதாக தகவல்,

    மாலத்தீவு:

    இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்கள், அந்நாட்டு அதிபர் மாளிகையை முற்றியிட்டு அதை கைப்பற்றினர். முன்னதாக அங்கிருந்து வெளியேறிய அதிபர் கோத்தபய ராஜபக்சே, தமது மனைவி மற்றும் பாதுகாவலர்களுடன் இலங்கை விமானப்படை விமானம் மூலம் நேற்று மாலத்தீவுக்கு தப்பி சென்றார்.

    அங்குள்ள மாலே நகர் பங்களாவில் கோத்தபய ராஜபக்சேவும், அவரது மனைவியும் தங்கி உள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த மாலத்தீவு மக்கள் கோத்தபய ராஜபக்சே வருகைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கோத்தபய ராஜபக்சேவுக்கு மாலத்தீவில் புகலிடம் கொடுக்க கூடாது. அவரை உடனே வெளியேற்ற வேண்டும் என்று சுற்றுலா அமைச்சகத்தின் நிர்வாக இயக்குனர் தையூப் சாஹிம் வலியுறுத்தி உள்ளார்.

    இதனால் வேறு நாட்டுக்கு தஞ்சம் கேட்டு செல்ல வேண்டிய பரிதாப நிலைக்கு கோத்தபய ராஜபக்சே தள்ளப்பட்டார். இந்நிலையில் தற்போது அங்கிருந்து சிங்கப்பூர் செல்ல அவர் திட்டமிட்டுள்ளார். இதற்காக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் மாலே சென்றதாக கூறப்படுகிறது.

    இன்று இரவு மாலேயில் இருந்து சிங்கப்பூருக்கு கோத்தபய புறப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் பாதுகாப்புச் சிக்கல்கள் காரணமாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் அவர் ஏறவில்லை என்றும், தனியார் விமானம் ஒன்றிற்காக அவர் காத்திருப்பதாகவும், டெய்லி மிரர் தெரிவித்துள்ளது.

    • அனைத்துக் கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி இலங்கை பிரதமர் பதவியில் இருந்து ரணில் விலகல்.
    • இலங்கை தற்காலிக அதிபராக சபாநாயகர் அபேவர்தன செயல்படுவார் என தகவல்

    கொழும்பு:

    சுமார் 2 கோடியே 20 லட்சம் மக்கள் தொகையை கொண்ட இலங்கையில் கடந்த 70 ஆண்டுகளாக இல்லாத வகையில், பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.

    கடுமையான அந்நியச் செலாவணி பற்றாக்குறையால் அத்தியாவசிய உணவு பொருட்கள் விலையேற்றம் மற்றம் பற்றாக்குறை, எரிபொருள் தட்டுப்பாடு உள்பட பல்வேறு சூழல்களால் அந்நாட்டு மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.

    இதையடுத்து மக்கள் நடத்தி வரும் போராட்டம் உச்சகட்டத்தை எட்டியது. இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே மாளிகையை கைப்பற்றிய போராட்டக்காரர்கள் பொருட்களை கைப்பற்றியுள்ளதுடன் அங்கேயே தங்கி வருகின்றனர். 


    இந்நிலையில் இலங்கையில் பிரதமர் பதவியில் இருந்து விலகிய ரணில் விக்ரமசிங்கேவின் தனிப்பட்ட இல்லத்திற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். அதற்கு முன்னதாக ரணில் அந்த வீட்டில் இருந்து பாதுகாப்பாக வெளியேறி உள்ளார். போராட்டக்காரர்களை கலைக்க பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதனால் அங்கு பதற்றம் நீடிக்கிறது.

    முன்னதாக நேற்று நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில், பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்கே விலக வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து ரணில் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதேபோல் இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி அதிபர் பதவியில் இருந்து விலகுமாறு கோத்தபய ராஜபக்சேவை வலியுறுத்தி சபாநாயகர் அபேவர்தன கடிதம் எழுதினார். 


    அதற்கு பதில் அளித்துள்ள கோத்தபய, வரும் 13ந் தேதி பதவி விலகுவதாக தெரிவித்துள்ளதாக அபேவர்தன குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் தற்காலிக அதிபராக சபாநாயகர் அபேவர்தன செயல்பட அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இதனிடையே, கொழும்புவில் ரணில் விக்கிரமசிங்கேவின் தனிப்பட்ட இல்லம் அருகில் நடைபெற்ற போராட்டங்கள் குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற இலங்கையின் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்கள் போலீஸ் அதிரடிப்படையினரால் தாக்கப்பட்டுள்ளனர். காயமடைந்த நான்கு ஊடகவியலாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்த சம்வம் குறித்து வருத்தம் தெரிவித்துள்ள ரணில் விக்ரமசிங்கே, இலங்கையின் ஜனநாயகத்திற்கு ஊடக சுதந்திரம் மிகவும் முக்கியமானது. வன்முறையையும் தடுப்பதற்கும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், நிதானத்துடன் செயல்படுமாறு பாதுகாப்புப் படையினரையும் எதிர்ப்பாளர்களையும் கேட்டுக்கொள்வதாகவும் கூறியுள்ளார்.

    • ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லிட்டருக்கு ரூ.50 உயர்ந்துள்ளது.
    • ஒக்டேன் 95 ரக பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100 உயர்ந்துள்ளது.

    இலங்கையில் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. ஏற்கனவே, இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் உணவுப் பொருட்கள் முதல் அத்தியாவசியப் பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

    இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலையும் இன்று உயர்ந்துள்ளது.

    அதன்படி, ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லிட்டருக்கு ரூ.50 உயர்ந்து ரூ.470க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    இதேபோல், ஒக்டேன் 95 ரக பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100 உயர்ந்து ரூ.550க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    தொடர்ந்து, சூப்பர் டீசல் ரூ.75 உயர்ந்து, ரூ.520க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    • திருச்சியில் இருந்து இலங்கைக்கு நிவாரணமாக 4,500 டன் அரிசியை அனுப்புவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது
    • சென்னை அல்லது தூத்துக்குடி துறைமுகத்திற்கு கொண்டு செல்ல கிலோ ஒன்றுக்கு ரூ.1.50 பைசா வழங்குவதாக ஒப்பந்தம் செய்துள்ளனர்

    திருச்சி:

    இந்தியாவின் அண்டை தேசமான இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. இதனால் அத்தியாவசியப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் இலங்கைக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன. அந்த அடிப்படையில் தமிழக அரசும் இலங்கை மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது.

    மேலும் அடுத்த கட்டமாக 40 ஆயிரம் டன் அரிசி மற்றும் இதர நிவாரணப் பொருட்கள் வழங்க தமிழக முடிவு செய்துள்ளது. அதன்படி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரிசி ஆலைகளில் இருந்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் அரிசி கொள்முதல் செய்ய ஆர்டர் கொடுத்தனர்.

    இதில் திருச்சி மாவட்டத்திலுள்ள 5 அரிசி ஆலைகள் 4 ஆயிரத்து 500 டன் அரிசிக்கு ஆர்டர் பெற்றன. இதையடுத்து அரிசி உற்பத்தி செய்யும் பணிகள் இரவு, பகலாக அந்த ஆலைகளில் நடந்து வருகின்றன. முதல்தரமான இந்த அரசுக்கு கிலோ ஒன்றுக்கு ரூ.32 விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    மேலும் அந்த அரிசியினை சென்னை அல்லது தூத்துக்குடி துறைமுகத்திற்கு கொண்டு செல்ல கிலோ ஒன்றுக்கு ரூ.1.50 பைசா வழங்குவதாக ஒப்பந்தம் செய்துள்ளனர்.

    தற்போது வரை 1,600 டன் அரிசி திருச்சியிலிருந்து சென்னை துறைமுகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    இதுபற்றி ஆர்டர் பெற்றுள்ள திருச்சி அரிசி ஆலை உரிமையாளர் ஒருவர் கூறும்போது, கொள்முதல் விலை மிகவும் குறைவாக இருக்கிறது.

    அண்டை தேசமான இலங்கை மக்களுக்கு தோள் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இதனை நாங்கள் செய்கிறோம். தமிழக அரசின் தர நிபந்தனைகளை கடைபிடித்து ஒருமுறைக்கு இருமுறை பரிசோதனை செய்து அரிசி பேக்கிங் செய்யப்படுகிறது என்றார்.

    இதனை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகளும் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர். அவர்கள் கூறுகையில், அரிசி உற்பத்தி மற்றும் பேக்கிங் பணிகள் இரவு, பகலாக நடந்து வருகின்றன. விரைந்து முடிக்க ஆலைகளை துரிதப்படுத்தி வருகிறோம் என்றனர்.

    • ரூ.12 கோடிக்கு (இலங்கை மதிப்பில்) மேல் ஆண்டு வருவாய் பெறும் நிறுவனங்களுக்கு 2.5 சதவீதம் சமூக பங்களிப்பு வரி விதிப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
    • அரசு ஊழியா்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை நாளாக அறிவிக்கும் திட்டத்துக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

    கொழும்பு:

    இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் கடும் துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர். அத்தியாவசிய பொருட்கள், சமையல் எரிவாயு உள்ளிட்டவை கூட மக்கள் வாங்க முடியாத விலைக்கு விற்பனையாகி வருகின்றன. மேலும் பல்வேறு இடங்களில் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளன.

    இந்நிலையில் அந்நாட்டின் பொருளாதாரத்தை மீட்பதற்கான செயல்திட்டங்கள் குறித்து விவாதிப்பதற்காக அமைச்சரவைக் கூட்டம் கடந்த திங்கள்கிழமை கூடியது. அதில், ரூ.12 கோடிக்கு (இலங்கை மதிப்பில்) மேல் ஆண்டு வருவாய் பெறும் நிறுவனங்களுக்கு 2.5 சதவீதம் சமூக பங்களிப்பு வரி விதிப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மின்சாரப் பயன்பாட்டைக் குறைத்து, அதன் மூலம் எரிசக்தி பற்றக்குறையை சமாளிக்கும் விதமாக, அரசு ஊழியா்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை நாளாக அறிவிக்கும் திட்டத்துக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

    இந்தியா-இலங்கை இடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதை தாம் எதிர்நோக்கி உள்ளதாகவும் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே குறிப்பிட்டுள்ளார்.
    கொழும்பு:

    அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த மந்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக மேலாளர்  கிரிசலினா ஜோர்ஜீவாவுடனான சந்திப்பின்போது, நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு ஐஎம்எப்,  நிதி உதவியை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

    இந்நிலையில்  நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே  தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். 

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதவில், இந்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுடன் தொலைபேசி மூலம் உரையாடியதாக குறிப்பிட்டுள்ளார்.

    தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், இந்த கடினமான காலகட்டத்தில் இலங்கைக்கு இந்தியா அளித்து வரும் ஆதரவிற்கு  பாராட்டு தெரிவித்ததாகவும்,  மேலும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்த எதிர்பார்ப்புடன் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    மற்றொரு டுவீட்டில், இலங்கைக்கு உதவ வெளிநாட்டு உதவி கூட்டமைப்பை அமைப்பதில் குவாட் உறுப்பு நாடுகள் முன்மொழிந்துள்ளதற்காக இந்தியா மற்றும் ஜப்பானுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளார்.


    புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களில் இருக்கும் அணிகள் அடுத்த வருடம் நடைபெற இருக்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை பெறும்.
    துபாய்:

    வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. முதல் டெஸ்ட் போட்டி கடந்த வாரம் டிராவில் முடிந்தது.

    இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி அபார வெற்றி பெற்று தொடரை 1-0 என கைப்பற்றியது.

    இந்நிலையில், வங்காளதேசம், இலங்கை டெஸ்ட் தொடருக்கு பிறகான டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியல் இன்று  வெளியானது. 

    இன்றைய போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் பாகிஸ்தான் அணியை பின்னுக்குத் தள்ளி இலங்கை அணி 4-வது இடத்தைப் பிடித்துள்ளது. 55 சதவீத வெற்றியுடன் இந்தப் பட்டியலில் இலங்கை 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

    இந்தப் பட்டியலில் 75 சதவீதத்துடன் ஆஸ்திரேலிய அணி முதல் இடத்திலும், 71.43 சதவீதத்துடன் தென் ஆப்பிரிக்க அணி 2-வது இடத்திலும் உள்ளது. 58.33 சதவீத வெற்றியுடன் இந்திய அணி 3-வது இடத்தில் உள்ளது.
    ×