search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "gothabhaya rajabakse"

    • ரணில் விக்ரமசிங்கே தற்காலிக இடைக்கால அதிபராக நியமனம் செய்யப்பட்டார்.
    • மாலத்தீவு தப்பிச் சென்ற கோத்தபய ராஜபக்சே இன்று சிங்கப்பூர் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியை அனுபவித்து வருவதால், மருந்துகள், சமையல் எரிவாயு, எரிபொருள் மற்றும் உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    இதனால், போராட்டத்தில் குதித்துள்ள மக்கள் அதிபர் மாளிகை, பிரதமர் அலுவலகங்களை முற்றுகையிட்டனர். இதனால், இலங்கையில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

    இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே தப்பித்துவிட்டதால், பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கே தற்காலிக இடைக்கால அதிபராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். நேற்று மாலத்தீவு தப்பிச் சென்ற கோத்தபய ராஜபக்சே இன்று சிங்கப்பூர் செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.

    இலங்கையில் பொருளாதார வீழ்ச்சியால் போராட்டம் வெடித்துள்ள நிலையில், இலங்கைக்கான அவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு இங்கிலாந்து, சிங்கப்பூர் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகள் தனது குடிமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளன.

    • வேறு நாட்டில் தஞ்சம் அடையும் நிலைக்கு கோத்தபய ராஜபக்சே தள்ளப்பட்டார்.
    • சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் மாலே சென்றதாக தகவல்,

    மாலத்தீவு:

    இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்கள், அந்நாட்டு அதிபர் மாளிகையை முற்றியிட்டு அதை கைப்பற்றினர். முன்னதாக அங்கிருந்து வெளியேறிய அதிபர் கோத்தபய ராஜபக்சே, தமது மனைவி மற்றும் பாதுகாவலர்களுடன் இலங்கை விமானப்படை விமானம் மூலம் நேற்று மாலத்தீவுக்கு தப்பி சென்றார்.

    அங்குள்ள மாலே நகர் பங்களாவில் கோத்தபய ராஜபக்சேவும், அவரது மனைவியும் தங்கி உள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த மாலத்தீவு மக்கள் கோத்தபய ராஜபக்சே வருகைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கோத்தபய ராஜபக்சேவுக்கு மாலத்தீவில் புகலிடம் கொடுக்க கூடாது. அவரை உடனே வெளியேற்ற வேண்டும் என்று சுற்றுலா அமைச்சகத்தின் நிர்வாக இயக்குனர் தையூப் சாஹிம் வலியுறுத்தி உள்ளார்.

    இதனால் வேறு நாட்டுக்கு தஞ்சம் கேட்டு செல்ல வேண்டிய பரிதாப நிலைக்கு கோத்தபய ராஜபக்சே தள்ளப்பட்டார். இந்நிலையில் தற்போது அங்கிருந்து சிங்கப்பூர் செல்ல அவர் திட்டமிட்டுள்ளார். இதற்காக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் மாலே சென்றதாக கூறப்படுகிறது.

    இன்று இரவு மாலேயில் இருந்து சிங்கப்பூருக்கு கோத்தபய புறப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் பாதுகாப்புச் சிக்கல்கள் காரணமாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் அவர் ஏறவில்லை என்றும், தனியார் விமானம் ஒன்றிற்காக அவர் காத்திருப்பதாகவும், டெய்லி மிரர் தெரிவித்துள்ளது.

    • இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு மாலத்தீவில் புகலிடம் கொடுக்க கூடாது.
    • மாலத்தீவிலும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதால் வேறு நாட்டுக்கு தஞ்சம் கேட்டு செல்ல வேண்டிய பரிதாப நிலைக்கு கோத்தபய ராஜபக்சே தள்ளப்பட்டுள்ளார்.

    மக்கள் போராட்டத்தால் ஆட்சியை இழந்த கோத்தபய ராஜபக்சே அதிபர் மாளிகையை விட்டுவெளியேறியதும் ராணுவத்தின் பாதுகாப்பில் கொழும்பு புறநகரில் தங்கி இருந்தார்.

    அங்கிருந்து முதலில் அவர் துபாய் செல்ல முடிவு செய்தார். ஆனால் விமான நிலையத்திலும், கடற்படை தளத்திலும் மக்கள் குவிந்ததால் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அவரால் தப்பி செல்ல இயலவில்லை. இதற்கிடையே சவுதி அரேபியா, சீனா ஆகிய நாடுகளிடம் அவர் உதவி கேட்டார். ஆனால் அந்த நாடுகளில் இருந்து சாதகமான பதில் வரவில்லை.

    கோத்தபய ராஜபக்சே ஏற்கனவே அமெரிக்க குடியுரிமை பெற்றிருந்தார். 2019-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிட்டபோது அவர் அமெரிக்க குடியுரிமையை திரும்ப பெற்றார். என்றாலும் அமெரிக்க அரசை தொடர்பு கொண்டு தனக்கு உதவி செய்யுமாறு கெஞ்சி கேட்டார்.

    ஆனால் கோத்தபய ராஜபக்சேவின் விசாவை பரிசீலிக்க கூட அமெரிக்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர். கொழும்பில் இருந்து வெளியேற எந்த ஒரு உதவியும் செய்ய இயலாது என்று அமெரிக்காவும் கைவிரித்தது. இதனால் எப்படி நாட்டை விட்டு வெளியேறுவது என்று கோத்தபய குழப்பமான நிலைக்கு தள்ளப்பட்டார்.

    சொந்த கட்சியிலும், ராணுவத்திலும் ஒரு பிரிவினர் தனக்கு எதிராக செயல்படுவதை கண்கூடாக பார்த்த கோத்தபய ராஜபக்சே உயிருடன் தப்ப முடியுமா என்று தவிக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார். கொழும்பு புறநகரில் அவர் ஒரே இடத்தில் தங்காமல் ரகசிய இடங்களுக்கு மாறிக் கொண்டே இருந்தார்.

    ராணுவத்தின் கமாண்டோ வீரர்கள் அவரை சுற்றி நின்று பாதுகாப்பு அளித்தனர். மக்கள் போராட்டத்தால் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதால் கொழும்பில் அவர் படாதபாடுபட்டார். எனவேதான் வெளி நாட்டுக்கு தப்பி செல்ல வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.

    அமெரிக்கா உதவ மறுத்த நிலையில் அடுத்து இந்தியாவின் உதவியை ராஜபக்சே நாடினார். விமானம் மூலம் தப்புவது கடினம் என்பதை உணர்ந்த அவர் கடல் வழியாக தப்புவதற்கான ஏற்பாடுகளை செய்தார். கப்பல் மூலம் இந்தியா வந்து பிறகு துபாய் செல்ல அனுமதி கேட்டார்.

    ஆனால் அதற்கு இந்திய வெளியுறவுத்துறை சாதகமான பதில் சொல்லவில்லை. இதையடுத்து சரக்கு விமானத்தில் இந்தியா வருவதாகவும், இந்தியாவில் இருந்து தன்னை வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் கோத்தபய ராஜபக்சே இந்திய அரசுக்கு தூதுவிட்டார்.

    அவரது இந்த கோரிக்கையையும் இந்தியா ஏற்கவில்லை. இதனால் உள்ளூர் அரசியல்வாதிகளிடம் கெஞ்சி கூத்தாடி ஒரு விமானத்தை வாங்கி கொண்டு மாலத்தீவு சென்று சேர்ந்திருக்கிறார்.

    இன்று அதிகாலை மாலத்தீவுக்கு தப்பி சென்ற கோத்தபய ராஜபக்சேவை அந்த நாட்டு ராணுவத்தினர் ரகசிய தீவு ஒன்றுக்கு அழைத்து சென்று உள்ளனர். அந்த தீவில் உள்ள பங்களாவில் கோத்தபய ராஜபக்சேவும், அவரது மனைவியும் தங்கி உள்ளனர்.

    மாலத்தீவு மக்களுக்கு இன்று காலை இந்த தகவல் தெரியவந்ததும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மாலத்தீவில் கணிசமான அளவுக்கு இலங்கை தமிழர்கள் உள்ளனர். அவர்களும் கோத்தபய ராஜபக்சேவின் வருகைக்கு அதிருப்தி வெளியிட்டனர்.

    இதற்கிடையே மாலத்தீவு சுற்றுலா அமைச்சகத்தின் நிர்வாக இயக்குனர் தையூப் சாஹிம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு மாலத்தீவில் புகலிடம் கொடுக்க கூடாது. அவரை உடனே வெளியேற்ற வேண்டும்" என்று கூறி உள்ளார்.

    மாலத்தீவில் உள்ள சில கட்சி தலைவர்கள் கூறுகையில், "கோத்தபய ராஜபக்சேவுக்கு அகதி அந்தஸ்து வழங்ககூடாது" என்று வலியுறுத்தி உள்ளனர். மாலத்தீவிலும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதால் வேறு நாட்டுக்கு தஞ்சம் கேட்டு செல்ல வேண்டிய பரிதாப நிலைக்கு கோத்தபய ராஜபக்சே தள்ளப்பட்டுள்ளார்.

    • மாலத்தீவுக்கு செல்ல விரும்பினால் அதை மறுத்திருக்க முடியாது எனவும் மாலத்தீவு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
    • சபாநாயகர் நஷீத்தின் கோரிக்கையின் பேரில் தரையிறங்குவதற்கு அனுமதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அதிபர் கோத்தபய ராஜபக்சே அரசுக்கு எதிராக போராட்டங்களை தீவிரப்படுத்திய அவர்கள், கடந்த 3 நாட்களுக்கு முன் இலங்கை அதிபர் மாளிகைக்குள் நுழைந்து அதை ஆக்ரமித்தனர்.

    இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது பதவி விலகல் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளார் என்றும், இன்று அது முறைப்படி அறிவிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் தனது மனைவி மற்றும் இரண்டு பாதுகாவலர்களுடன் கோத்தபய ராஜபக்சே இலங்கை விமானப்படை விமானத்தில் மாலைதீவு தலைநகர் மாலே நகருக்கு புறப்பட்டுச் சென்றதாக இலங்கை குடியுரிமை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இன்று அதிகாலையில் அவர் மாலே நகரை அடைந்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. கோத்தபயவுடன் 13 பேர் ஏஎன்32 விமானத்தில் மாலத்தீவு சென்றதாக தொலைக்காட்சி செய்தி சேனல்கள் தெரிவித்துள்ளன.

    இந்நிலையில், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே நாட்டிலிருந்து தப்பிச் செல்வது தொடர்பாக மாலத்தீவு பாராளுமன்ற சபாநாயகரும் முன்னாள் அதிபருமான மொஹமட் நஷீத் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மேலும், ராஜபக்சே இன்னும் இலங்கையின் அதிபராக இருக்கிறார். அவர் ராஜினாமாவோ அல்லது வாரிசுக்கு தனது அதிகாரங்களையும் ஒப்படைக்கவில்லை என்றும் அதனால் அவர் மாலத்தீவுக்கு செல்ல விரும்பினால் அதை மறுத்திருக்க முடியாது எனவும் மாலத்தீவு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    மாலத்தீவில் இராணுவ விமானத்தை தரையிறக்குவதற்கான கோரிக்கைகள் மாலத்தீவில் உள்ள சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தால் ஆரம்பத்தில் நிராகரிக்கப்பட்டதாகவும், பின்னர் சபாநாயகர் நஷீத்தின் கோரிக்கையின் பேரில் தரையிறங்குவதற்கு அனுமதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ×