என் மலர்
நீங்கள் தேடியது "Ranil Wickremesinghe"
- சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கு அரசியல் நிலைத்தன்மை முக்கியமானது.
- வெளிநாட்டு கடன் மற்றும் உள்ளூர் கடன் இரண்டையும் நாம் பார்க்க வேண்டும்.
கொழும்பு :
இலங்கையில் ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான புதிய அரசு நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எனினும் தற்போதைய நெருக்கடியில் இருந்து நாடு மீள்வதற்கு ஓராண்டு ஆகும் என ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளார்.
கொழும்புவில் நடந்த 2 நாள் கருத்தரங்கு ஒன்றில் பேசிய விக்ரமசிங்கே இது தொடர்பாக கூறியதாவது:-
அடுத்த 6 மாதங்கள் முதல் ஓராண்டு வரை இலங்கையின் பொருளாதார நெருக்கடி நீடிக்கும். அடுத்த ஆண்டு ஜூலை வரை இந்த கடினமான நாட்களை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என நினைக்கிறேன்.
நாட்டின் பொருளாதார மீட்சிக்கு அணுசக்தி மற்றும் தளவாடங்கள் போன்ற புதிய துறைகளை நாம் பார்க்க வேண்டும். இதில் தளவாடங்கள் துறையை நான் அதிகமாக நம்புகிறேன்.
இந்திய, வங்காளதேச, பாகிஸ்தான் பொருளாதாரங்களை பார்க்கும்போது, கொழும்பு, அம்பன்தோட்டா, திரிகோணமலையிலும் தளவாடங்கள் துறை மிகப்பெரிய பங்காற்ற முடியும்.
சொத்துகள் மீது வரி விதித்தாலும், முதலில் பொருளாதார மீட்சிக்காகவும், இரண்டாவது சமூக நிலைத்தன்மைக்காகவும் அந்த நடவடிக்கைகளை நாம் நாட வேண்டும்.
அது மட்டுமின்றி, அணுசக்தி துறையில் நுழைவதை நாடு பரிசீலிக்க வேண்டும். நம்மிடம் அதிக எரிசக்தி இருந்தால் இந்தியாவுக்கு விற்கலாம். அதே நேரத்தில் அதிக புதுப்பிக்கத்தக்க எரிசக்தியும் கிடைக்கும். இதைப்பற்றி நாம் சிந்திக்க வேண்டும்.
சர்வதேச நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளில், கடன் மறுசீரமைப்பு தொடர்பான சட்ட மற்றும் தொழில்நுட்ப ஆலோசகர்கள் பணியை முன்னெடுத்து செல்கின்றனர்.
வெளிநாட்டு கடன் மற்றும் உள்ளூர் கடன் இரண்டையும் நாம் பார்க்க வேண்டும். இது நிச்சயமாக கடினமான காலமாக இருக்கும். நாம் இதுவரை பார்த்திராத காலகட்டமாக முதல் ஆறு மாதங்கள் இருக்கும்.
நாட்டின் 2.10 கோடி மக்கள் தொகையில், 60 லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
மேலும் மேலும் பலர் வேலையை இழந்து வருகின்றனர். அவர்களுக்காக கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கு அரசியல் நிலைத்தன்மை முக்கியமானது.
எனவே சீர்திருத்தத்தின் அரசியல், சமூக மற்றும் பொருளாதார பரிமாணங்கள், நாம் செயல்படுத்தப் போகும் மறுசீரமைப்பு ஆகியவற்றை நாம் பார்க்க வேண்டும்.
இவ்வாறு ரணில் விக்ரமசிங்கே கூறினார்.
- இலங்கையில் நடந்த அதிபர் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கே அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.
- கோத்தபய வருகை அரசியல் பதற்றங்களை தூண்டி விடும்.
கொழும்பு :
இலங்கையில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத பொருளாதார நெருக்கடிக்கு அதிபர் கோத்தபய ராஜபக்சேவும், அவரது குடும்பத்தினரும் தான் காரணம் எனக்கூறி மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.
கடந்த மாத தொடக்கத்தில் போராட்டக்காரர்கள் கடும் கொந்தளிப்புடன் அதிபர் மாளிகை மற்றும் அதிபர் அலுவலகத்தை முற்றுகையிட்டதை தொடர்ந்து, கோத்தபய ராஜபக்சே தனது மனைவியுடன் வெளிநாட்டுக்கு தப்பி சென்றார். முதலில் மாலத்தீவு சென்ற அவர், பின்னர் அங்கிருந்து சிங்கப்பூர் சென்றார்.
பின்னர் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதனை தொடர்ந்து, இலங்கையில் நடந்த அதிபர் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கே அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.
இதற்கிடையில் சுற்றுலா பயணிகள் விசாவில் சிங்கப்பூரில் இருக்கும் கோத்தபய ராஜபக்சே இலங்கைக்கு திரும்ப உள்ளதாக அண்மையில் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் கோத்தபய ராஜபக்சே நாடு திரும்ப இது சரியான நேரம் இல்லை என அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "கோத்தபய வருகை அரசியல் பதற்றங்களை தூண்டி விடும். அவர் விரைவில் திரும்பி வருவதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. முன்னாள் அதிபர் கோத்தபய நாடு திரும்ப இது சரியான நேரம் இல்லை. ஒரு வேளை அவர் நாடு திரும்பினால் அது, பொருளாதார நெருக்கடிக்கு எதிராக இலங்கையில் எரிந்து கொண்டு இருக்கும் அரசியல் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும்" என கூறினார்.
இதனிடையே கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு தப்பியோடிய நிலையில் அவரது சகோதரர்களான மஹிந்தா ராஜபக்சே மற்றும் பசில் ராஜபக்சே ஆகிய இருவரும் ஜூலை 28-ந்தேதி வரை நாட்டைவிட்டு வெளியேற தடை விதித்து அந்த நாட்டு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. பின்னர் இந்த தடை ஆகஸ்டு 2-ந்தேதி வரை நீடிக்கப்பட்டது.
அதன்படி மஹிந்தா ராஜபக்சே, பசில் ராஜபக்சே ஆகிய இருவரும் நாட்டை விட்டு வெளியேற விதிக்கப்பட்டிருந்த தடை இன்றுடன் (திங்கட்கிழமை) முடிவடைய இருந்த நிலையில் மேலும் 2 நாட்களுக்கு தடையை நீட்டித்து சுப்ரீம் கோர்ட்டு நேற்று உத்தரவிட்டது.
- ரணில் விக்ரமசிங்கே அரசில் பங்கேற்கப்போவதில்லை என சஜித் பிரேமதாசா அறிவித்துள்ளது.
- இலங்கைக்கு நிதியுதவி வழங்கும் புதிய திட்டம் எதுவுமில்லை என உலக வங்கி கூறியுள்ளது.
கொழும்பு :
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அதிபர் பதவியை ஏற்றிருக்கும் ரணில் விக்ரமசிங்கே, நாட்டில் அரசியல் மற்றும் பொருளாதார நிலைத்தன்மையை ஏற்படுத்த தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக அனைத்துக்கட்சிகளும் இணைந்த வலுவான அரசு அமைப்பதற்காக ரணில் விக்ரமசிங்கே திட்டமிட்டு உள்ளார். இதற்கு வசதியாக மந்திரிசபையையும் அவர் இன்னும் விரிவாக்கம் செய்யவில்லை.
இலங்கையில் 30 மந்திரிகள் வரை நியமிக்க வாய்ப்பு உள்ள நிலையில், வெறும் 18 பேர் மட்டுமே மந்திரிகளாக நியமிக்கப்பட்டு உள்ளனர். அதிலும் ஆளும் இலங்கை மக்கள் கட்சி அல்லாத பிற கட்சிகளில் இருந்து 2 பேர் மட்டுமே மந்திரிகளாக உள்ளனர்.
எனவே தனது தலைமையிலான அரசில் பங்கேற்க வருமாறு எதிர்க்கட்சிகளுக்கு ரணில் விக்ரமசிங்கே அழைப்பு விடுத்து உள்ளார். இது தொடர்பாக அவர் பேச்சுவார்த்தைகளையும் தொடங்கி விட்டார்.
அந்தவகையில் முன்னாள் அதிபர் மைத்ரிபால சிறிசேனாவின் இலங்கை சுதந்திர கட்சியுடன் நேற்று முன்தினம் ரணில் விக்ரமசிங்கே பேச்சுவார்த்தை நடத்தினார்.
இவ்வாறு நடந்து வரும் பேச்சுவார்த்தைகள் அனைத்தும் ஒரு வாரத்துக்குள் முடிக்கப்பட்டு அனைத்துக்கட்சி அரசு உருவாக்கப்படும் என அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
ஆனால் ரணில் விக்ரமசிங்கே அரசில் பங்கேற்கப்போவதில்லை என பிரதான எதிர்க்கட்சியான சஜித் பிரேமதாசாவின் சமாகி ஜன பலவகேயா அறிவித்து உள்ளது. எனினும் அந்த கட்சி எம்.பி.க்கள் சிலர் தனித்தனியாக அரசை ஆதரிக்க முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
மறுபுறம் தேசிய சுதந்திர முன்னணி கட்சியின் தலைவர் விமல் வீரவன்ச எம்.பி., ரணில் விக்ரமசிங்கேவை ஆதரிக்க முடிவு செய்துள்ளார். சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் அவர் டல்லஸ் அழகப்பெருமாவை ஆதரித்து இருந்தாலும், அரசில் இணைய அவர் விருப்பம் தெரிவித்து உள்ளார்.
இலங்கையில் அனைத்துக்கட்சி அரசு அமைப்பதற்காக கட்சிகளுக்கு அழைப்பு விடுத்திருப்பதாகவும், இதற்காக குறுகிய காலம் மட்டுமே அரசு காத்திருக்கும் என்றும் சட்டத்துறை மந்திரி விஜயதாச ராஜபக்சே கூறியுள்ளார்.
இதன் மூலம் ஜனநாயகத்திற்குள் நம்பிக்கை உணர்வை மீண்டும் ஏற்படுத்தவும், இலங்கைக்குள் இருக்கும் சமூக-அரசியல் நெருக்கடிகளைத் தீர்க்கவும் அரசு முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில் இலங்கை அதிபர் மாளிகையில் போராட்டக்காரர்கள் ஆக்கிரமித்திருந்தபோது, அதிபரின் கொடியை அவமதித்ததாக எதிர்க்கட்சி வர்த்தக யூனியனின் முன்னாள் துணைத்தலைவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
அதிபர் மாளிகையில் அத்துமீறி நுழைந்ததுடன், அதிபரின் கொடியை படுக்கை விரிப்பாக பயன்படுத்தியதை அவர் வீடியோவில் வெளியிட்டு இருந்தார். இதைத்தொடர்ந்து அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையே பொருளாதார நெருக்கடிக்கு உதவுவதற்காக உலக வங்கியுடன் இலங்கை தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
ஆனால் தற்போதைய நிலையில் இலங்கைக்கு நிதியுதவி வழங்கும் புதிய திட்டம் எதுவும் இல்லை என உலக வங்கி கூறியுள்ளது.
- இலங்கை அதிபர் பதவிக்கான பொறுப்புகளில் வெற்றி பெற வாழ்த்து.
- இலங்கை இந்தியா இடையே இருதரப்பு உறவு நீண்ட கால அடிப்படையிலானது.
இந்திய குடியரசுத் தலைவராக பதவியேற்றுள்ள திரவுபதி முர்முவுக்கு இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே வாழ்த்து தெரிவித்திருந்தார். இந்நிலையில், ரணிலுக்கு, முர்மு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
நான் பதவியேற்றதற்கு உங்கள் அன்பான வாழ்த்திற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இலங்கையில் அண்மையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற உங்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தியாவின் மிக நெருங்கிய அண்டை நாடான இலங்கையின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இந்தியா உறுதி பூண்டுள்ளது. இலங்கை இந்தியா இடையே இருதரப்பு கூட்டு உறவு நீண்ட கால அடிப்படையிலானது. பாரம்பரியம் மற்றும் இரு நாட்டு மக்களுக்கு இடையேயான உறவுகளின் அடிப்படையில் அது மேலும் வலுவடையும். இலங்கை அதிபருக்கான பொறுப்புகளில் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- இலங்கையின் புதிய அதிபர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
- இலங்கை மக்களுக்கு முழு அளவில் ஆதரவு வழங்கப்படும் என்றார் பிரதமர் மோடி.
புதுடெல்லி:
இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதை தொடர்ந்து பொதுமக்கள் நடத்திய போராட்டத்தின் எதிரொலியாக அதிபர் மற்றும் பிரதமர் பதவி விலகினர்.
இதையடுத்து, புதிய அதிபருக்கான தேர்தலில் இடைக்கால அதிபராக இருந்த ரணில் விக்ரமசிங்கே வெற்றி பெற்று சமீபத்தில் அதிபராக பதவியேற்றுக் கொண்டார். எனினும், அவருக்கு எதிராகவும் மக்கள் போராட்டம் வலுப்பெற்று வருகிறது.
இந்நிலையில், இலங்கையின் புதிய அதிபரான ரணில் விக்ரமசிங்கேவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, பிரதமர் மோடி எழுதியுள்ள கடிதத்தில், இலங்கையின் 8-வது ஜனாதிபதியாக நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இலங்கைக்கு நெருக்கடியான காலத்தில் நீங்கள் இந்தப் பதவியை ஏற்று இருக்கிறீர்கள். உங்களின் பதவிக்காலத்தில் பொருளாதார ஸ்திரத்தன்மை மேம்படுவதுடன் இலங்கையின் அனைத்துக் குடிமக்களின் விருப்பங்களும் நிறைவேறும் என நான் நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கையில் நிறுவப்பட்ட ஜனநாயக வழிமுறைகள், அமைப்புகள் மற்றும் அரசியலமைப்பு கட்டமைப்பின் மூலம் ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார மீட்சிக்கான தேடலுக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
- மூன்று மாதங்களுக்கு மேலாக இயங்காமல் இருந்த அதிபர் மாளிகை நாளை முதல் முழுமையாக செயல்பட வைக்க அதிபர் ரணில் விக்ரமசிங்கே முடிவு செய்து உள்ளார்.
- போராட்டக்காரர்களால் கட்டிடத்தின் சில பகுதிகள் சேதமடைந்துள்ளன. கதவுகள், ஜன்னல்களை சுத்தம் செய்தல் மற்றும் பழுது பார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கொழும்பு:
இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் மக்களின் புரட்சி போராட்டம் வெடித்ததால் அதிபர் பதவியை கோத்தபய ராஜபக்சே ராஜினாமா செய்தார்.
அவர் வெளிநாட்டுக்கு தப்பி சென்றதால் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கே வீட்டுக்கு தீ வைக்கப்பட்டது.
இதற்கிடையே இலங்கை பாராளுமன்றத்தில் புதிய அதிபர் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கே வெற்றி பெற்று கடந்த 21-ந்தேதி பதவி ஏற்றார்.
மறுநாளே அதிபர் மாளிகைக்கு உள்ளேயும், முன்பும் இருந்த போராட்டக்காரர்களை போலீசார், ராணுவத்தினர் அப்புறப்படுத்தினர்.
அப்போது போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
ஐ.நா.சபை மற்றும் பல நாடுகளும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தன. ரணில் விக்ரமசிங்கேவை அமெரிக்கா தூதர் சந்தித்து தனது கவலையை தெரிவித்தார்.
இந்த நிலையில் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேவுடன் பல வெளிநாட்டு தூதர்கள் கலந்துரையாடல் நடத்தினார்கள். அப்போது ரணில் விக்ரமசிங்கே கூறும் போது:-
எனது தனிப்பட்ட வீடு எரிக்கப்பட்ட போது எந்த தரப்பினரும் எவ்வித டுவிட்டர் பதிவுகளையும் வெளியிடாதது குறித்து நான் ஆச்சரியமடைந்தேன். தற்போது கேள்வி எழுப்பும் ஒருவரும் அன்று ஒரு பதிவையேனும் வெளியிடவில்லை என்று கூறினார்.
அதிபர் மாளிகை முன்பு காலிமுகத் திடலில் இருந்த போராட்டக்காரர்கள் அப்புறப்படுத்தப்பட்ட போது அவர்களின் கூடாரங்களை போலீசார் அகற்றினர். அதிபர் மாளிகையை சுற்றி உள்ள பகுதிகள் அனைத்தும் ராணுவ கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்த நிலையில் மூன்று மாதங்களுக்கு மேலாக இயங்காமல் இருந்த அதிபர் மாளிகை நாளை முதல் முழுமையாக செயல்பட வைக்க அதிபர் ரணில் விக்ரமசிங்கே முடிவு செய்து உள்ளார்.
போராட்டக்காரர்களால் கட்டிடத்தின் சில பகுதிகள் சேதமடைந்துள்ளன. கதவுகள், ஜன்னல்களை சுத்தம் செய்தல் மற்றும் பழுது பார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதிபர் மாளிகை வளாகத்தில் நடந்த குற்றச்செயல்களுக்கான சாட்சியங்களை சேகரிப்பதற்காக சிறப்பு குற்றப்பிரிவு மற்றும் கைரேகை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
- புதிய அதிபராக தேர்தெடுக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்கேவுக்கு எதிராக தீவிரம் அடையும் போராட்டம்.
- அதிபர் மாளிகையை போராட்டக்காரர்கள் நெருங்க முடியாத அளவிற்கு தடுப்புகள் அமைப்பு.
கொழும்பு:
பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையின் 8-வது அதிபராக ரணில் விக்ரமசிங்கே நேற்று பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில் ரணில் விக்ரமசிங்கேவுக்க எதிராக பல இடங்களில் திரண்ட போராட்டக்காரர்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். போராட்டக்காரர்கள் அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சித்தால், சட்டத்தின்படி கையாள்வோம் என்று ரணில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நிலையில் நேற்றிரவு கொழும்பில் உள்ள அதிபர் மாளிகை வளாககத்திற்கு வெளியே ஆயுதம் ஏந்தி ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டனர். அதிபர் மாளிகையை போராட்டக்காரர்கள் நெருங்க முடியாத அளவிற்கு தடுப்புகள் அமைக்கப்பட்டன.

உடனடியாக அங்கிருந்த போராட்டக்காரர்கள் தடுப்பு வேலிகளை அகற்ற முயற்சித்த நிலையில் அதை ராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்தினர். மேலும் போராட்டக்காரர்களின் கூடாரங்களை அப்பறப்படுத்தும் நடவடிக்கையில் அவர்கள் ஈடுபட்டனர். இந்த அந்த பகுதியில் பதற்றம் நீடித்து வருகிறது.
- இலங்கையில் 8-வது அதிபராக ரணில் விக்ரமசிங்கே இன்று காலை பாராளுமன்றத்தில் பதவியேற்றுக்கொண்டார்.
- ரணில் விக்ரமசிங்கே தலைமை நீதிபதி ஜெயந்த ஜெயசூர்யா முன்லையில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
கொழும்பு:
இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் தவிப்புக்குள்ளான மக்கள், அரசு அலுவலகங்களில் உயர் பதவிகளில் இருந்த ராஜபக்சே குடும்பத்தினருக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இதையடுத்து கடந்த மே மாதம் 9-ந்தேதி மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்தார். இதையடுத்து ரணில் விக்ரமசிங்கே பிரதமராக நியமிக்கப்பட்டார்.
அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே பதவி விலக மறுத்து வந்த நிலையில் கடந்த 9-ந் தேதி மக்கள் புரட்சி வெடித்தது. அதனால் நாட்டைவிட்டு வெளியேறிய கோத்தபய ராஜபக்சே அதிபர் பதவியை ராஜினாமா செய்தார். இதை தொடர்ந்து இடைக்கால அதிபராக ரணில் விக்ரம சிங்கே நியமிக்கப்பட்டார்.
புதிய அதிபரை பாராளுமன்றத்தில் எம்.பி.க்கள் ரகசிய வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டது. அதற்கான தேர்தல் நேற்று நடந்தது.
அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்கே வெற்றி பெற்றார். அவருக்கு 134 வாக்குகள் கிடைத்தது. மற்ற வேட்பாளர்களான அழகபெருமா 82 வாக்குகளும், அனுராகுமார திசநாயகே 3 வாக்குகளும் பெற்றனர்.
அப்போது பாராளுமன்றத்தில் உரையாற்றிய ரணில் விக்ரமசிங்கே அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்ரம சிங்கே இன்று பதவி ஏற்பார் என்று அதிபர் அலுவலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
அதன்படி இலங்கையில் 8-வது அதிபராக ரணில் விக்ரமசிங்கே இன்று காலை பாராளுமன்றத்தில் பதவியேற்றுக்கொண்டார். அவர் தலைமை நீதிபதி ஜெயந்த ஜெயசூர்யா முன்லையில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
ராஜபக்சே குடும்பத்தினருக்கு எதிராக போராட்டங்கள் நடத்தி அவர்களை அரசாங்க பதவிகளில் இருந்து துரத்திய நிலையில் ரணில் விக்ரமசிங்கேவுக்கும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
கோத்தபய ராஜபக்சே அதிபர் பதவியை ராஜினாமா செய்த பிறகு, பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்கேவும் பதவி விலக கோரி போராட்டம் வெடித்தது.
அது போல நேற்று புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்தெடுக்கப்பட்ட போது அதிபர் மாளிகை முன்பு அவருக்கு எதிராக போராட்டஙகள் நடந்தது. பல இடங்களில் போராட்டக்காரர்கள் திரண்டு எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இந்த நிலையில் போராட்டக்காரர்களுக்கு ரணில் விக்ரமசிங்கே கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் கொழும்பில் உள்ள புத்த கோவிலில் தரிசனம் செய்த பிறகு நிருபர்களிடம் கூறியதாவது:-
நீங்கள் (போராட்டக்காரர்கள்) அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சித்தால், அதிபர் அலுவலகம் மற்றும் பிரதமர் அலுவலகங்களை ஆக்கிரமிக்க முயற்சித்தால் அது ஜனநாயகம் அல்ல, அது சட்டத்திற்கு எதிரானது. அப்படி செய்பவர்களை சட்டத்தின் படி உறுதியாக கையாள்வோம்.
அரசியல் அமைப்பில் மாற்றத்துக்காக அமைதியாக போராடும் பெரும்பான்மையினரின் எண்ணங்களை ஒரு சிறிய அளவில் உள்ள எதிர்ப்பாளர்களால் நசுக்க அனுமதிக்கமாட்டோம். நான் ராஜபக்சேக்களின் நண்பன் அல்ல. நான் மக்களின் நண்பன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அதிபர் தேர்தலில் 134 வாக்குகள் பெற்று ரணில் வெற்றி பெற்றார்.
- 2024-ம் ஆண்டு நவம்பர் வரை ரணில் விக்ரமசிங்சே அதிபர் பதவியில் நீடிப்பார்.
கொழும்பு :
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பொருளாதார நெருக்கடிக்கு எந்த நடவடிக்கையும் எடுக்காத அரசைக் கண்டித்து நடைபெற்று வரும் மக்கள் போராட்டம் நாளுக்கு நாள் அதிகரித்ததால், அதிபர் கோத்தபய ராஜபட்ச அண்மையில் ராஜினாமா செய்தாா்.
இதையடுத்து அந்நாட்டின் இடைக்கால அதிபராக ரணில் விக்கிரமசிங்கே பதவியேற்றாா். இலங்கையின் பிரதமராகப் பதவியேற்றிருந்த ரணில் விக்கிரமசிங்கே, அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் பதவி விலகலுக்குப் பிறகு, இலங்கையின் இடைக்கால அதிபராகவும் பதவியேற்றார்.
இந்தநிலையில், இலங்கையில் முதல்முறையாக நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்கெடுப்பு மூலம் நேற்று நடத்தப்பட்ட அதிபர் தேர்தலில் 134 வாக்குகள் பெற்று ரணில் வெற்றி பெற்றார்.
இந்தத் தேர்தலில் அதிபர் பதவிக்கு ரணில் விக்கிரமசிங்கே, டலஸ் அழகப்பெருமா, அனுரா திசநாயக்க ஆகியோர் போட்டியிட்டனர். அதிகபட்சமாக 134 வாக்குகள் பெற்ற ரணில் விக்கிரமசிங்கே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து அவர் இன்று அதிகாரப்பூர்வமாக பதவியேற்கவுள்ளார். இதனை அதிபர் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.
2024-ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை ரணில் விக்கிரமசிங்கே, அதிபர் பதவியில் நீடிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
- புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தலில் ரணில் விக்ரமசிங்கே வெற்றி பெற்றார்.
- நாட்டின் பல்வேறு பகுதிகளில் புதிய அதிபர் ரணிலுக்கு எதிராக போராட்டம்
கொழும்பு:
இலங்கையில் மக்கள் புரட்சி தீவிரமடைந்த நிலையில், அதிபர் கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூருக்கு தப்பிச் சென்றார். அங்கிருந்து தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், தற்காலிக அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவி ஏற்றார். அதன்பின்னர் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று நடைபெற்றது. இதில், ரணில் விக்ரமசிங்கே வெற்றி பெற்றார்.
புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்வான நிலையில் இலங்கையில் மீண்டும் போராட்டம் தொடங்கியது. இலங்கை அதிபர் அலுவலகத்தின் முன்பு போராட்டக்காரர்கள் மீண்டும் திரண்டுள்ளனர். ரணில் பதவி விலக கோரி அதிபர் அலுவலகத்தின் முன்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதேபோல் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ரணிலுக்கு எதிராக போராட்டக்காரர்கள் முழக்கங்கள் எழுப்பத் தொடங்கி உள்ளனர். இதனால் அங்கு மீண்டும் பதற்றம் நிலவி வருகிறது.
இதற்கிடையே, நாளை முதல் அனைத்து தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக ரணில் தெரிவித்துள்ளார்.
- இலங்கையில் 2 ஏக்கருக்கு குறைவான வயல்களில் பயிரிட்ட விவசாயிகளின் கடன்கள் ரத்து.
- வெளிநாடுகளுடனான உதவிக்கான கலந்துரையாடல்களில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது
கொழும்பு :
இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணாத ஆட்சியாளர்களுக்கு எதிராக பொதுமக்கள் கிளர்ச்சி செய்து வருகின்றனர். இதனால் அதிபர் கோத்தபய ராஜபக்சே சமீபத்தில் பதவி விலகினார். இதனால் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, இடைக்கால அதிபராக பதவியேற்று உள்ளார். புதிய அதிபருக்கான தேர்தல் 20-ந்தேதி நடக்கிறது.
கோத்தபய ராஜபக்சே பதவி விலகினாலும், எதிர்ப்பை கைவிடாத போராட்டக்காரர்கள் இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு எதிராகவும் போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர். நாட்டின் ஒட்டுமொத்த அரசு அமைப்பையும் மாற்றும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என அவர்கள் அறிவித்து உள்ளனர். இந்தநிலையில், பொருளாதார சிக்கலில் சிக்கி தவிக்கும் இலங்கை மக்களுக்கு பல்வேறு சலுகைகளை ரணில் விக்ரமசிங்கே அறிவித்துள்ளார்.
இலங்கையில் 2 ஏக்கருக்கு குறைவான வயல்களில் பயிரிட்ட விவசாயிகளின் கடன்கள் ரத்து செய்யப்படும். சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதால் பெட்ரோல் விலையும் குறைக்கப்படும். எரிபொருள் விநியோகத்தில் ஜூலை மாதம் கடினமான காலமாக இருக்கும். எவ்வாறாயினும், டீசல் இருப்புக்கள் பாதுகாக்கப்பட்டு அனைவருக்கும் விநியோகிக்கப்படும், ஜூலை 21 முதல் பெட்ரோலும் விநியோகிக்கப்படும்.
நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, தனி மனிதர் மீதான கருத்து வேறுபாடுகளால் நாடு பாதிக்கப்படுவதற்கு இடமளிக்க வேண்டாம். மேலும் அனைத்துக் கட்சி அரசாங்கத்தை அமைக்க வேண்டும். சர்வதேச நாணய நிதியத்துடனான (IMF) பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. மேலும் வெளிநாடுகளுடனான உதவிக்கான கலந்துரையாடல்களும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என இலங்கை அதிபர் அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளது.