search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "srilanka economic crisis"

    • இலங்கையில் ஏற்பட்டுள்ள பெரும் பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த சில மாதங்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது.
    • கொழும்பு, மருதானை, பீம்ஸ் ஆகிய இடங்களிலிம் இளைஞர்கள் பேரணி நடத்த முயன்றனர்.

    கொழும்பு:

    இலங்கையில் ஏற்பட்டுள்ள பெரும் பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த சில மாதங்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது. பொருளாதார நெருக்கடியால் பெட்ரோல், டீசல் மற்றும் உணவுப் பொருட்களின் விலை அதிகரித்தது. இதனால் மக்கள் கடும் நெருக்கடிக்கு ஆளானார்கள்.

    இதையடுத்து அப்போதைய அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக இலங்கையில் போராட்டக்காரர்கள் தங்களின் போராட்டங்களை தீவிரப்படுத்தினார்கள்.

    இதனால் அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவி ஏற்றார். அதன்பிறகு இலங்கையில் போராட்டங்கள் ஓய்ந்து நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

    ஆனாலும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை குறைக்க வேண்டும் என்று மக்கள் அவ்வப்போது போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் இலங்கையில் தற்போது மீண்டும் போராட்டங்கள் தலைதூக்கி உள்ளன. கொழும்பு நகரின் பல பகுதிகளை உயர் பாதுகாப்பு வளையமாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. இதற்கு அங்குள்ள இளைஞர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

    இதையடுத்து இலங்கையில் மீண்டும் போராட்டங்கள் தொடங்கி உள்ளன. சோசியலிச இளைஞர் சங்கத்தை சேர்ந்த போராட்டக்காரர்கள் கொழும்பு சுகாதார அமைச்சக கட்டிடத்தின் அருகே பேரணியாக செல்ல முயன்றனர்.

    அப்போது அவர்களை தடுக்க கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன. மேலும் தண்ணீரும் பீய்ச்சி அடிக்கப்பட்டன. இதையடுத்து போராட்டக்காரர்கள் அங்கிருந்து சிதறி ஓடினார்கள்.

    இதேபோல் கொழும்பு, மருதானை, பீம்ஸ் ஆகிய இடங்களிலிம் இளைஞர்கள் பேரணி நடத்த முயன்றனர். இதுதொடர்பாக 4 பெண்கள் உள்பட 84 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    • இலங்கைக்கு அதிகமான நிதி உதவி அளித்த நாடு இந்தியாவே ஆகும்.
    • இதர நட்பு நாடுகளிடமும் இலங்கைக்கு உதவுமாறு இந்தியா வற்புறுத்தி உள்ளது.

    கொழும்பு :

    இலங்கை வரலாறு காணாத பொருளாதார சிக்கலில் சிக்கித்தவிக்கிறது. இலங்கைக்கு இந்தியா கடன் மற்றும் நிதி உதவிகளை அளித்துள்ளது. இலங்கைக்கு அதிகமான நிதி உதவி அளித்த நாடு இந்தியாவே ஆகும்.

    ஆனால், இலங்கைக்கு இந்தியா இனிமேல் நிதி உதவி அளிக்காது என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    இதற்கு கொழும்பு நகரில் உள்ள இந்திய தூதரகம் நேற்று மறுப்பு தெரிவித்தது. இந்திய தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    இலங்கை மக்கள் சந்தித்து வரும் பொருளாதார சிக்கலில் இருந்து மீள்வதற்காக, இலங்கைக்கு முன்எப்போதும் இல்லாத அளவுக்கு 400 கோடி டாலர் இருதரப்பு உதவியை இந்தியா அளித்துள்ளது. இதர நட்பு நாடுகளிடமும் இலங்கைக்கு உதவுமாறு இந்தியா வற்புறுத்தி உள்ளது.

    இலங்கைக்கு சாத்தியமான எல்லா வழிகளிலும் இந்தியா தொடர்ந்து ஆதரவாக இருக்கிறது. பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக இலங்கையின் முக்கிய பொருளாதார திட்டங்களில் நீண்ட கால முதலீடுகளை செய்துள்ளது.

    அத்துடன், இலங்கையில் 350 கோடி டாலர் மதிப்புள்ள இருதரப்பு மேம்பாட்டு ஒத்துழைப்பு திட்டங்கள் நடந்து வருகின்றன. இலங்கையை சேர்ந்தவர்கள், இந்தியாவின் முன்னணி கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி மற்றும் திறன் பயிற்சி மேற்கொள்ள கல்வி உதவித்தொகை பெற்று வருகிறார்கள்.

    இத்தகைய ஒத்துழைப்புகளும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள இலங்கைக்கு உதவி வருகின்றன.

    இவ்வாறு இந்திய தூதரகம் கூறியுள்ளது.

    • அரசை பிரதான எதிர்க்கட்சியான சமாகி ஜன பலவேகயா கடுமையாக குற்றம் சாட்டியுள்ளது.
    • இலவச அரிசிக்காக வெளிநாடுகளிடம் அரசு கெஞ்சிக்கொண்டு இருந்தது.

    கொழும்பு :

    இலங்கையில் அரிசி பற்றாக்குறை உள்ளது. அதேநேரம் அரிசி இறக்குமதி செய்ய பணம் இல்லை என வேளாண் மந்திரி மகிந்த அமரவீரா சமீபத்தில் தெரிவித்து இருந்தார்.

    இதைப்போல பணம் இல்லாததால் உள்நாட்டு விவசாயிகளிடம் இருந்தும் நெல் கொள்முதல் செய்யப்படவில்லை. நெல் கொள்முதல் நிலையங்களில் பணம் இல்லாமல் விவசாயிகள் திருப்பி அனுப்பப்படும் செய்திகளை தனியார் தொலைக்காட்சிகள் தொடர்ந்து ஒளிபரப்பி வருகின்றன.

    இந்த விவகாரத்தில் அரசை பிரதான எதிர்க்கட்சியான சமாகி ஜன பலவேகயா கடுமையாக குற்றம் சாட்டியுள்ளது. இந்த கட்சி எம்.பி. ரோகிணி கவிரத்னே கூறுகையில், 'இலவச அரிசிக்காக வெளிநாடுகளிடம் அரசு கெஞ்சிக்கொண்டு இருந்தது. அதேநேரம் உள்ளூரில் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்படவில்லை' என குற்றம் சாட்டினார்.

    அரிசி வாங்குவதற்கு பணமில்லை என்பதற்காக அரசு வெட்கப்பட வேண்டும் எனக்கூறிய அவர், ஆனால் 37 புதிய மந்திரிகளை நியமிக்க அரசிடம் போதுமான பணம் இருப்பதாக தெரிகிறது என்றும் சாடினார்.

    • இந்த விலை உயர்வு இன்று (புதன்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது.
    • மின் கட்டண உயர்வு மக்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தி இருக்கிறது.

    கொழும்பு :

    பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்து வரும் இலங்கையில் மின்சார கட்டணத்தை அரசு அதிரடியாக உயர்த்தி இருக்கிறது. யூனிட்டுக்கு 75 சதவீதம் அளவுக்கு உயர்த்தப்பட்டு இருக்கிறது.

    இதன் மூலம் மாதத்துக்கு 30 யூனிட் மின்சாரம் பயன்படுத்தும் ஒரு குடும்பத்தினர் இனிமேல் 198 ரூபாய் அதிகமாக செலுத்த வேண்டும். இந்த விலை உயர்வு இன்று (புதன்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது. இந்த கட்டண உயர்வுக்கு இலங்கை மின்சார வாரிய ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்து இருக்கிறது.

    ஏற்கனவே எரிபொருள் தட்டுப்பாடு, அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு மற்றும் விண்ணை முட்டும் விலைவாசியால் தவித்து வரும் மக்களுக்கு, தற்போது மின் கட்டண உயர்வு கூடுதல் சுமையை ஏற்படுத்தி இருக்கிறது.

    • சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கு அரசியல் நிலைத்தன்மை முக்கியமானது.
    • வெளிநாட்டு கடன் மற்றும் உள்ளூர் கடன் இரண்டையும் நாம் பார்க்க வேண்டும்.

    கொழும்பு :

    இலங்கையில் ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான புதிய அரசு நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எனினும் தற்போதைய நெருக்கடியில் இருந்து நாடு மீள்வதற்கு ஓராண்டு ஆகும் என ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளார்.

    கொழும்புவில் நடந்த 2 நாள் கருத்தரங்கு ஒன்றில் பேசிய விக்ரமசிங்கே இது தொடர்பாக கூறியதாவது:-

    அடுத்த 6 மாதங்கள் முதல் ஓராண்டு வரை இலங்கையின் பொருளாதார நெருக்கடி நீடிக்கும். அடுத்த ஆண்டு ஜூலை வரை இந்த கடினமான நாட்களை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என நினைக்கிறேன்.

    நாட்டின் பொருளாதார மீட்சிக்கு அணுசக்தி மற்றும் தளவாடங்கள் போன்ற புதிய துறைகளை நாம் பார்க்க வேண்டும். இதில் தளவாடங்கள் துறையை நான் அதிகமாக நம்புகிறேன்.

    இந்திய, வங்காளதேச, பாகிஸ்தான் பொருளாதாரங்களை பார்க்கும்போது, கொழும்பு, அம்பன்தோட்டா, திரிகோணமலையிலும் தளவாடங்கள் துறை மிகப்பெரிய பங்காற்ற முடியும்.

    சொத்துகள் மீது வரி விதித்தாலும், முதலில் பொருளாதார மீட்சிக்காகவும், இரண்டாவது சமூக நிலைத்தன்மைக்காகவும் அந்த நடவடிக்கைகளை நாம் நாட வேண்டும்.

    அது மட்டுமின்றி, அணுசக்தி துறையில் நுழைவதை நாடு பரிசீலிக்க வேண்டும். நம்மிடம் அதிக எரிசக்தி இருந்தால் இந்தியாவுக்கு விற்கலாம். அதே நேரத்தில் அதிக புதுப்பிக்கத்தக்க எரிசக்தியும் கிடைக்கும். இதைப்பற்றி நாம் சிந்திக்க வேண்டும்.

    சர்வதேச நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளில், கடன் மறுசீரமைப்பு தொடர்பான சட்ட மற்றும் தொழில்நுட்ப ஆலோசகர்கள் பணியை முன்னெடுத்து செல்கின்றனர்.

    வெளிநாட்டு கடன் மற்றும் உள்ளூர் கடன் இரண்டையும் நாம் பார்க்க வேண்டும். இது நிச்சயமாக கடினமான காலமாக இருக்கும். நாம் இதுவரை பார்த்திராத காலகட்டமாக முதல் ஆறு மாதங்கள் இருக்கும்.

    நாட்டின் 2.10 கோடி மக்கள் தொகையில், 60 லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    மேலும் மேலும் பலர் வேலையை இழந்து வருகின்றனர். அவர்களுக்காக கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கு அரசியல் நிலைத்தன்மை முக்கியமானது.

    எனவே சீர்திருத்தத்தின் அரசியல், சமூக மற்றும் பொருளாதார பரிமாணங்கள், நாம் செயல்படுத்தப் போகும் மறுசீரமைப்பு ஆகியவற்றை நாம் பார்க்க வேண்டும்.

    இவ்வாறு ரணில் விக்ரமசிங்கே கூறினார்.

    • கோத்தபய ராஜபக்சே, மகிந்த ராஜபக்சே, பசில் ராஜபக்சே மீது விசாரணை நடந்து வருகிறது.
    • நாட்டைவிட்டு வெளியேற தடை வருகிற 11-ந்தேதி வரை நீட்டிப்பு.

    கொழும்பு :

    இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு காரணமான கோத்தபய ராஜபக்சே, மகிந்த ராஜபக்சே மற்றும் பசில் ராஜபக்சே மீது விசாரணை நடத்தக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனு விசாரணைக்கு வருவதற்கு முன்பே கோத்தபய ராஜபக்சே வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார். அதை தொடர்ந்து கடந்த மாதம் 15-ந்தேதி வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு மகிந்த ராஜபக்சே மற்றும் பசில் ராஜபக்சே ஆகிய இருவரும் ஜூலை 28-ந்தேதி வரை நாட்டைவிட்டு வெளியேற தடை விதித்து உத்தரவிட்டது. பின்னர் இந்த தடை ஆகஸ்டு 4-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது மகிந்த ராஜபக்சே மற்றும் பசில் ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேறுவதற்கான தடையை வருகிற 11-ந்தேதி வரை நீட்டித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    • சீனாவின் கடன் திட்டங்கள் இலங்கையின் வளர்ச்சியை உயர்த்தியதுடன் இலங்கை மக்களுக்காக பல நன்மைகளை செய்து உள்ளது.
    • சீனா இலங்கைக்கு குறைந்த வட்டி விகிதங்கள் மற்றும் நீண்ட கால கடன்களை வழங்கி உள்ளது.

    பெய்ஜிங்:

    அன்னிய செலாவணி இருப்பு குறைந்ததால் இலங்கையில் கடுமையாக பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது.

    கடும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக இந்தியா உள்ளிட்ட நாடுகளிடம் இலங்கை கடன் உதவி கேட்டு கையேந்தியது. இதையடுத்து பல்வேறு நாடுகள் இலங்கைக்கு நேசக்கரங்கள் நீட்டியது.

    சீனாவும் கடன் உதவி செய்தது. இந்தநிலையில் அதிக வட்டிக்கு சீனா கடன் கொடுத்ததால் இலங்கை பொருளாதாரம் சீரழிந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

    ஆனால் இதற்கு சீனா மறுப்பு தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக அந்த நாட்டின் செய்தி தொடர்பாளர் ஜாவோ லீஜன் கூறியதாவது:-

    சீனாவின் கடன் திட்டங்கள் இலங்கையின் வளர்ச்சியை உயர்த்தியதுடன் இலங்கை மக்களுக்காக பல நன்மைகளை செய்து உள்ளது. வெளிநாட்டு கடன்களுக்கான பல பிரிவுகள் உள்ளன. சீனா இலங்கைக்கு குறைந்த வட்டி விகிதங்கள் மற்றும் நீண்ட கால கடன்களை வழங்கி உள்ளது. இலங்கையின் உள் கட்டமைப்பு அங்குள்ள பொதுமக்களின் வாழ்வாதரத்தை மேம்படுத்த சீனா தனது பங்களிப்பை செய்து வருகிறது. நாங்கள் கடன் கொடுத்ததால் இலங்கையின் பொருளாதாரம் சீரழியவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது.
    • வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே பள்ளிகளை இயக்க அனுமதி.

    கொழும்பு :

    இலங்கையில் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக, எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் நாடு முழுவதும் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன.

    இது பலமுறை நீட்டிக்கப்பட்டு கடைசியாக இன்று வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இது மேலும் நீட்டிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தொடர்ந்து மூடுவதை அரசு நிறுத்தி உள்ளது. நாடு முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளும், தனியார் பள்ளிகளும் நாளை (திங்கட்கிழமை) முதல் திறந்து கல்விப்பணிகளை தொடர அரசு அனுமதி அளித்து உள்ளது.

    எனினும் வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே பள்ளிகளை இயக்க அனுமதிக்கப்பட்டு உள்ளதாக கல்வி அமைச்சகம் கூறியுள்ளது.

    • கடந்த வியாழக்கிழமை இலங்கை அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்சே விலகினார்.
    • இலங்கையில் நெருக்கடியான சூழல் நீடித்து வருகிறது.

    கொழும்பு :

    இலங்கையில் விலைவாசி உயர்வு, உணவு, எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறை ஆகியவற்றை தொடர்ந்து கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. நிதி நெருக்கடியால், உணவு, மருந்து மற்றும் எரிபொருள் ஆகியவற்றை இறக்குமதி செய்யவோ, விலை கொடுத்து வாங்கவோ முடியாத சூழ்நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டது.

    சுதந்திரம் பெற்றதில் இருந்து இதுவரை இல்லாத வகையிலான எரிபொருள் பற்றாக்குறையால் அந்நாடு சிக்கி தவித்து வருகிறது. இந்த சூழலில், இலங்கைக்கு இந்தியா ஆதரவுகரம் நீட்டியுள்ளது. கோதுமை உள்ளிட்ட உணவு பொருட்கள், உரம் போன்றவற்றை தீவு நாடான இலங்கைக்கு கப்பலில் அனுப்பி வருகிறது. எனினும், இலங்கையில் நெருக்கடியான சூழல் நீடித்து வருகிறது. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் நிதி நெருக்கடியான சூழலால் மக்கள் பல மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிபர் கோத்தபய ராஜபக்சே அரசுக்கு எதிராக அவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

    கொழும்புவில் உள்ள அதிபர் கோத்தபயா வீட்டிற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் வீட்டை அடித்து நொறுக்கினர். எனினும், போராட்டக்காரர்கள் வருவதற்குள் கோத்தபயா தனது குடும்பத்துடன் தப்பி விட்டார். கோத்தபயா தனது குடும்பத்துடன் மாலத்தீவுக்கு கடந்த 13ந்தேதி ராணுவ விமானத்தில் தப்பி சென்றார். இதன்பின், மாலத்தீவில் இருந்தபடியே சிங்கப்பூருக்கு சென்றார். இலங்கையில் பல வார போராட்டங்களுக்கு பின்னர், கடந்த வியாழ கிழமை இலங்கை அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்சே விலகினார்.

    இடைக்கால அதிபராக பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கடந்த வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றார். ஆனால் அவரும் பதவி விலக கோரி நாடெங்கும் போராட்டங்கள் நடைபெறுகின்றன. இந்நிலையில் இலங்கையில் அவசரநிலையை பிறப்பிப்பதற்கான உத்தரவை இடைக்கால அதிபர் ரணில் நேற்று முன்தினம் காலை வெளியிட்டார். இலங்கையில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான பணிகள் ஒருபுறம் நடந்து வருகின்றன.

    இதனை தொடர்ந்து புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று நடைபெறுகிறது. இந்த சூழலில், இலங்கையில் கொழும்பு நகரில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டு உள்ள செய்தியில், இலங்கையில் தற்போது ஏற்பட்டு உள்ள நெருக்கடியான சூழலில், இங்கிருக்கும் இந்தியர்கள் சமீபத்திய முன்னேற்றங்கள் பற்றிய விவரங்களை பற்றி தொடர்ந்து அறிந்து கொண்டு, அதன்பின்னர் தங்களது பயணம் மற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி கேட்டு கொள்ளப்படுகின்றனர் என அறிவுறுத்தி உள்ளது. தேவைப்பட்டால் கொழும்புவில் உள்ள இந்திய தூதரகத்தினை இந்தியர்கள் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்து உள்ளது.

    • இடைக்கால அதிபராக ரணில் விக்மரசிங்கே நியமிக்கப்பட்டுள்ளார்.
    • இன்று அதிபர் தேர்வு நடப்பதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    கொழும்பு :

    இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசிய பொருட்களின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்தது. மேலும் உணவு பொருட்கள், பெட்ரோல், டீசல் ஆகியவற்றுக்கு தட்டுப்பாடும் நிலவுகிறது. இதனால் மக்கள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தியதால் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே கடந்த மே மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    இதையடுத்து புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே நியமிக்கப்பட்டார். அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே பதவி விலக மறுத்து வந்த நிலையில் அவருக்கு எதிராக மிகப் பெரிய அளவில் போராட்டம் வெடித்தது. அதிபர் மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்தனர். இதனால் கோத்தபய ராஜபக்சே கடந்த 9-ந்தேதி மாலத்தீவுக்கு தப்பி சென்றார். பின்னர் சிங்கப்பூருக்கு சென்ற அவர் அங்கிருந்தபடி அதிபர் பதவியை ராஜினாமா செய்வதாக இ-மெயில் மூலம் பாராளுமன்ற சபாநாயகருக்கு கடிதத்தை அனுப்பினார்.

    இதனை தொடர்ந்து இடைக்கால அதிபராக ரணில் விக்மரசிங்கே நியமிக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார். மேலும் புதிய அதிபரை 20-ந்தேதி பாராளுமன்றத்தில் எம்.பி.க்கள் வாக்களித்து தேர்வு செய்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது. புதிய அதிபர் பதவிக்கு இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்கே, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா, ஜெ.வி.பி. கட்சி தலைவர் அனுராகுமாரதிசநாயக, இலங்கை மக்கள் கட்சியில் இருந்து பிரிந்து சென்ற முன்னாள் மந்திரி டல்லஸ் அழகப்பெருமா ஆகிய 4 பேர் போட்டியிடுவதாக அறிவித்தனர்.

    255 உறுப்பினர்களை கொண்ட இலங்கை பாராளுமன்றத்தில் 50 சதவீதத்துக்கு அதிகமான வாக்குகளை பெறும் வேட்பாளர் புதிய அதிபராக தேர்வு செய்யப்படுவார். பாராளுமன்றத்தில் ஆளும் இலங்கை மக்கள் கட்சிக்கு பெரும்பான்மை உள்ளது. அக்கட்சி ரணில் விக்ரமசிங்கேவை ஆதரிப்பதாக அறிவித்துள்ளது.

    ஆனால் இலங்கை மக்கள் கட்சி தலைவர்களில் ஒருவரான ஜி.எல்.பிரீஸ் அணியினர் முன்னாள் மந்திரி டல்லஸ் அழகப் பெருமாவுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர். இதனால் ஆளுங்கட்சிக்குள் கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. இலங்கையில் மீண்டும் அவசர நிலை பிரகடனப்படுத்துவதாக நேற்று முன் தினம் இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்கே அறிவித்தார்.

    இதையடுத்து ராணுவத்தினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் இன்று அதிபர் தேர்வு நடப்பதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டக்காரர்கள் பாராளுமன்றத்தை முற்றுகையிட முயன்றால் அவர்களை தடுக்கவும் கலைந்து செல்லவும் விசேஷ பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதாக போலீஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

    கலவரத் தடுப்பு பிரிவுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கொழும்பு மற்றும் பாராளுமன்றத்தை சுற்றியுள்ள பகுதிகளுக்கு கண்ணீர் புகை குண்டுகளை வீசும் குழுக்களும் வரவழைக்கப்பட்டுள்ளன. அதிபர் பதவிக்கு போட்டியிடும் ரணில் விக்மரசிங்கேவுக்கும் போராட்டக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இலங்கையில் 2 ஏக்கருக்கு குறைவான வயல்களில் பயிரிட்ட விவசாயிகளின் கடன்கள் ரத்து.
    • வெளிநாடுகளுடனான உதவிக்கான கலந்துரையாடல்களில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது

    கொழும்பு :

    இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணாத ஆட்சியாளர்களுக்கு எதிராக பொதுமக்கள் கிளர்ச்சி செய்து வருகின்றனர். இதனால் அதிபர் கோத்தபய ராஜபக்சே சமீபத்தில் பதவி விலகினார். இதனால் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, இடைக்கால அதிபராக பதவியேற்று உள்ளார். புதிய அதிபருக்கான தேர்தல் 20-ந்தேதி நடக்கிறது.

    கோத்தபய ராஜபக்சே பதவி விலகினாலும், எதிர்ப்பை கைவிடாத போராட்டக்காரர்கள் இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு எதிராகவும் போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர். நாட்டின் ஒட்டுமொத்த அரசு அமைப்பையும் மாற்றும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என அவர்கள் அறிவித்து உள்ளனர். இந்தநிலையில், பொருளாதார சிக்கலில் சிக்கி தவிக்கும் இலங்கை மக்களுக்கு பல்வேறு சலுகைகளை ரணில் விக்ரமசிங்கே அறிவித்துள்ளார்.

    இலங்கையில் 2 ஏக்கருக்கு குறைவான வயல்களில் பயிரிட்ட விவசாயிகளின் கடன்கள் ரத்து செய்யப்படும். சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதால் பெட்ரோல் விலையும் குறைக்கப்படும். எரிபொருள் விநியோகத்தில் ஜூலை மாதம் கடினமான காலமாக இருக்கும். எவ்வாறாயினும், டீசல் இருப்புக்கள் பாதுகாக்கப்பட்டு அனைவருக்கும் விநியோகிக்கப்படும், ஜூலை 21 முதல் பெட்ரோலும் விநியோகிக்கப்படும்.

    நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, தனி மனிதர் மீதான கருத்து வேறுபாடுகளால் நாடு பாதிக்கப்படுவதற்கு இடமளிக்க வேண்டாம். மேலும் அனைத்துக் கட்சி அரசாங்கத்தை அமைக்க வேண்டும். சர்வதேச நாணய நிதியத்துடனான (IMF) பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. மேலும் வெளிநாடுகளுடனான உதவிக்கான கலந்துரையாடல்களும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என இலங்கை அதிபர் அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளது.

    • பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் கிடைக்காமல் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
    • எரிபொருள் வாங்குவதற்காக மக்கள் வரிசையில் நிற்கும்போது பல வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

    கொழும்பு :

    இலங்கையில் கடுமையான அந்நியச் செலாவணி பற்றாக்குறையின் காரணமாக நாட்டில் எரிபொருள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதி தடைபட்டது. இதனல், அந்த நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்து வருகிறது. அத்துடன், அங்கு கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.

    பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் கிடைக்காமல் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். இந்த எரிபொருள் தட்டுப்பாட்டால் மின் உற்பத்தி பாதிப்பு, போக்குவரத்து முடக்கம் போன்ற சிரமங்கள் ஏற்பட்டு உள்ளன. அங்கு பெட்ரோல், டீசல் விற்பனை நிலையங்கள் மற்றும் கியாஸ் நிரப்பும் நிலையங்களில் போதிய அளவுக்கு இருப்பு இல்லாததால் மக்கள் நீண்ட வரிசையில் நாள் கணக்கில் காத்திருக்கும் நிலை உருவாகி உள்ளது.

    எரிபொருள் வாங்குவதற்காக மக்கள் வரிசையில் நிற்கும்போது பல வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. எரிபொருள் வாங்க வரிசையில் தொடர்ந்து பல நாட்கள் காத்துக்கிடந்ததால், கிட்டத்தட்ட 20 பேர் சோர்வு காரணமாக இறந்துள்ளனர். இந்த நிலையில் இலங்கையின் அரசு நிறுவனமான சிலோன் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் டீசல் மற்றும் பெட்ரோல் சில்லறை விலைகளை தலா 20 ரூபாய் நேற்று குறைத்தது, கடந்த பிப்ரவரி முதல், ஐந்து முறை விலை உயர்வுக்கு பிறகு தற்போது விலை குறைந்துள்ளது.

    அதன்படி குறைக்கப்பட்ட பெட்ரோல், டீசல் விற்பனை நேற்று இரவு 10.00 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. கடைசியாக பெட்ரோல், டீசல் விலை மே மாத இறுதியில் ரூ.50 மற்றும் 60 ஆக உயர்த்தப்பட்டது. ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லிட்டருக்கு .50 உயர்ந்துரூ.470க்கும், ஒக்டேன் 95 ரக பெட்ரோல் லிட்டருக்குரூ.100 உயர்ந்து ரூ.550க்கும், சூப்பர் டீசல் ரூ.75 உயர்ந்து ரூ 520க்கும் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    ×