search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இலங்கையில் பொருளாதார நெருக்கடி"

    • அரசு ஊழியர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த அரசு தடை விதித்துள்ளது.
    • ஒரு பொது அதிகாரி சமூக ஊடகங்களில் கருத்துக்களை வெளிப்படுத்துவது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வழிவகுக்கும் குற்றமாகும் என்று அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

    கொழும்பு:

    இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் தவித்த மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தினர். அதிபர் மாளிகை உள்ளிட்ட அரசு கட்டிடங்களை போராட்டக்காரர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போராட்டம் காரணமாக கோத்தபய ராஜபக்சே, மகிந்த ராஜபக்சே உள்ளிட்ட ராஜபக்சே குடும்பத்தினர் அரசு உயர்பதவிகளில் இருந்து விலகினர்.

    அதன்பின் போராட்டங்கள் குறைந்து இருந்த நிலையில் சமீபத்தில் மாணவ அமைப்பினர் திடீரென்று போராட்டத்தில் குதித்தனர். இலங்கையில் தற்போது வரை உணவு பற்றாக்குறை நிலவி வருகிறது. இன்னும் இயல்பு வாழ்க்கைக்கு மக்கள் திரும்பாமல் தவித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் அரசு ஊழியர்கள் சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிட தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    உணவு பற்றாக்குறை காரணமாக பள்ளிகளில் மாணவர்கள் மயக்கம் அடைந்து வருவதாக மாகாண சுகாதார அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் தெரிவித்து இருந்தனர். இதையடுத்து அரசு ஊழியர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த அரசு தடை விதித்துள்ளது.

    இது தொடர்பாக இலங்கை அரசு வெளியிட்ட உத்தரவில், ஒரு பொது அதிகாரி சமூக ஊடகங்களில் கருத்துக்களை வெளிப்படுத்துவது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வழிவகுக்கும் குற்றமாகும் என்று கூறப்பட்டுள்ளது.

    இதற்கிடையே குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாடு இருப்பதாக கூறப்படுவதை சுகாதார அமைச்சர் ரம்புலெல்லா மறுத்தார்.

    அரசியல் உந்துதல் காரணமாக பொது சுகாதார ஊழியர்கள் குற்றச்சாட்டுகளை கூறுவதாக தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள ஒரு ஓட்டல் அறையில் கோத்தபய ராஜபக்சே தங்கி இருக்கிறார்.
    • கோத்தபய ராஜபக்சே பாதுகாப்பு காரணமாக அறைக்குள்ளேயே இருக்குமாறு தாய்லாந்து போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

    வாஷிங்டன்:

    இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவியதை தொடர்ந்து ஆட்சியாளர்களுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து அந்நாட்டு அதிபராக இருந்த கோத்தபய ராஜபச்சே மனைவியுடன் முதலில் மாலத்தீவு தப்பி ஓடினார்.

    பின்னர் சிங்கப்பூருக்கு சென்ற அவர் தற்போது தாய்லாந்து நாட்டில் தஞ்சம் அடைந்து உள்ளார்.

    அவர் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள ஒரு ஓட்டல் அறையில் தங்கி இருக்கிறார். அவரை பாதுகாப்பு காரணமாக அறைக்குள்ளேயே இருக்குமாறு தாய்லாந்து போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

    அவர் விரைவில் தாய்லாந்தில் இருந்து இலங்கை திரும்ப இருப்பதாக அவரது உறவினர் உதயங்க வீர துங்கா தெரிவித்தார்.

    இதனால் வருகிற 24-ந்தேதி அவர் சொந்தநாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் இலங்கை மக்கள் இன்னும் அவர் மேல் கோபமாக தான் உள்ளனர். இதனால் மீண்டும் இலங்கை வந்தால் பாதுகாப்பு இருக்காது என அவர் நினைக்கிறார்.

    இதையடுத்து அவர் தனது மனைவி லோமோ ராஜபக்சேவுடன் அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேற முடிவு செய்து உள்ளார். இதற்காக அவர் கிரீன்கார்டு கேட்டு விண்ணப்பித்து உள்ளார். கடந்த மாதமே தனது வக்கீல் மூலம் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேற்றம் பெற விரும்பும் வெளிநாட்டவர்களுக்கான புதிய மசோதா விதிகளின் படி கிரீன்கார்டு பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அதிபர் மாளிகை எதிரே காலி முகத்திடலில் இருந்த போராட்டக்காரர்கள் கூடாரங்கள் அகற்றப்பட்டன.
    • ரணில் விக்ரமசிங்கே பிறப்பித்த அவசர நிலை நாளையுடன் காலாவதியாகிறது.

    கொழும்பு:

    இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் மக்கள் போராட்டங்களில் குதித்தனர். இதனால் ராஜபக்சே குடும்பத்தினர் அரசாங்க பதவிகளை ராஜினாமா செய்தனர். அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே வெளி நாட்டுக்கு தப்பி சென்றார்.

    இலங்கையில் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே கடந்த மாதம் 21-ந் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடந்தது. இதையடுத்து இலங்கையில் அவசர நிலையை பிரகடனப் படுத்துவதாக ரணில் விக்ரம சிங்கே அறிவித்தார்.

    மேலும் அதிபர் மாளிகை எதிரே காலி முகத்திடலில் இருந்த போராட்டக்காரர்கள் கூடாரங்கள் அகற்றப்பட்டன. இதற்கிடையே காலி முகத்திடலில் இருந்து வெளியேறுவதாக போராட்டக்காரர்கள் அறிவித்தனர்.

    இதற்கிடையே ரணில் விக்ரமசிங்கே பிறப்பித்த அவசர நிலை நாளையுடன் காலாவதியாகிறது. இந்த நிலையில் அவசர நிலை வாபஸ் பெறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிபர் அலுவலகம் தரப்பில் கூறியதாவது:-

    நாட்டின் நிலைமை நிலையான வகையில் இருப்பதால் அரசுக்கு எதிராக போராட்டங்களை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட அவசரகால சட்டம் நீட்டிக்கப்படமாட்டாது.

    இந்த வாரத்தில் அவசர கால சட்டம் காலாவதி யாகும் நிலையில் மீண்டும் அமல்படுத்த வேண்டிய அவசியமில்லை என்று தெரிவித்துள்ளது. அதிபர் ரணில் விக்ரசிங்கே அவசர கால சட்டம் இந்த வார இறுதிக்குள் நீக்கப்படும். தற்போது நாடு, ஸ்திரமான நிலையில் இருப்பதால் அவசரகால சட்டத்தை நீடிக்க வேண்டிய அவசிய மில்லை என்றார்.

    • பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே விலகினார்.
    • அதிபர் மாளிகைக்கு எதிரே காலி முகத்திடலில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் திரண்டு போராட்டம்.

    கொழும்பு:

    இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் தவித்த மக்கள், ராஜபக்சே குடும்பத்தினர் அரசாங்க பதவிகளில் இருந்து விலகக்கோரி போராட்டம் நடந்தது.

    இதையடுத்து பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே விலகினார். ஆனால் அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே பதவி விலக மறுத்தார்.

    இதையடுத்து அதிபர் மாளிகைக்கு எதிரே காலி முகத்திடலில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் திரண்டு போராட்டம் நடத்தினர். அங்கேயே கூடாரங்களை அமைத்து தங்கினர்.

    இதற்கிடையே இலங்கையில் இருந்து சிங்கப்பூருக்கு தப்பி சென்ற கோத்தபய ராஜபக்சே பதவி விலகினார். புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் பதவி ஏற்ற மறுநாளே காலிமுகத்திடலில் இருந்த போராட்டக்காரர்கள் கூடாரங்களை போலீசார் அகற்றியதால் மோதல் ஏற்பட்டது.

    போராட்டக்காரர்கள் கலைந்து செல்ல வேண்டும் என்று ரணில் விக்ரமசிங்கே கேட்டுக் கொண்டார். ஆனாலும் போராட்டக்காரர்கள் அங்கேயே தொடர்ந்து இருந்தனர்.

    இந்த நிலையில் கொழும்பு காலிமுகத்திடலில் இருந்து வெளியேறுவதாக இன்று போராட்டக்காரர்கள் அறிவித்தனர். இலங்கை அரசுக்கு எதிராக புதிய வடிவில் போராட்டத்தை தொடரப்போவதாக போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

    • இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் தவித்த மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • ராணுவ தலைமையகத்திற்கு அதிபர் ரணில் விக்ரமசிங்கே திடீரென்று சென்றார்.

    கொழும்பு:

    இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் தவித்த மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று பேரணியை நடந்த போராட்டக்காரர்கள் தயாராகியுள்ளனர். இதையடுத்து கொழும்பில் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    விசேஷ அதிரடிப்படையினர் மற்றும் ஆயுதப்படையினரும் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் கலவர தடுப்பு பிரிவு தண்ணீர் பீரங்கி மற்றும் கண்ணீர் புகை குழுக்கள் விழிப்புடன் வைத்துள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை, பிரதமர் அலுவலகம் மற்றும் நாடாளுமன்றத்தை சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்த ஜனாதிபதி செயலகம் நடவடிக்கை எடுத்துள்ளது. கொழும்பை பாதுகாப்பதற்காக பல விசேஷ போலீஸ் படையினர் வெளி மாகாணங்களில் இருந்து கொழும்புக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் அக்குரேகொடவில் உள்ள ராணுவ தலைமையகத்திற்கு அதிபர் ரணில் விக்ரமசிங்கே திடீரென்று சென்றார்.

    • சிங்கப்பூரில் கோத்தபய ராஜபக்சே வருகிற 11-ந்தேதி வரை தங்கி இருக்க முடியும். அதன்பின் அவர் இலங்கை திரும்புவார் என்று தகவல் வெளியானது.
    • கோத்தபய ராஜபக்சேவுக்கு மேலும் 2 வாரம் விசாவை நீட்டித்து வழங்க சிங்கப்பூரிடம் இலங்கை அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

    கொழும்பு:

    இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் தவித்த மக்களின் புரட்சி போராட்டத்தால் அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே கடந்த 13-ந்தேதி மாலத்தீவுக்கு தப்பி சென்றார். பின்னர் மறுநாள் அங்கிருந்து சிங்கப்பூருக்கு சென்றார். அங்கிருந்தபடி அதிபர் பதவியை ராஜினாமா செய்தார்.

    கோத்தபய ராஜபக்சே வந்திருப்பதாகவும், தனிப்பட்ட பயணமாக அவருக்கு 14 நாட்கள் தங்கி இருக்க விசா வழங்கப்படுவதாகவும் அடைக்கலம் தரவில்லை என்றும் சிங்கப்பூர் அரசு தெரிவித்தது.

    கோத்தபய ராஜபக்சேவின் சிங்கப்பூர் விசா காலம் கடந்த 28-ந்தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில் விசாவை மேலும் 2 வாரம் அந்நாட்டு அரசு நீடித்தது.

    இதன்படி சிங்கப்பூரில் கோத்தபய ராஜபக்சே வருகிற 11-ந்தேதி வரை தங்கி இருக்க முடியும். அதன்பின் அவர் இலங்கை திரும்புவார் என்று தகவல் வெளியானது.

    இந்த நிலையில் கோத்தபய ராஜபக்சேவுக்கு மேலும் 2 வாரம் விசாவை நீட்டித்து வழங்க சிங்கப்பூரிடம் இலங்கை அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

    இதுதொடர்பாக உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே, சிங்கப்பூரில் மேலும் 14 நாட்கள் தங்கி இருக்க அனுமதிக்குமாறு இலங்கை அரசு சிங்கப்பூர் அதிகாரியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

    அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூரில் மேலும் சில நாட்கள் தங்கி இருப்பார் என்று தெரிவித்துள்ளன.

    இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு அரசாங்க உயர் பதவிகளில் இருந்த கோத்தபய ராஜபக்சே குடும்பத்தினர் காரணம் என்று கூறி மக்கள் மிகப்பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அனைவரும் தங்களது பதவிகளில் இருந்து விலகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கோத்தபய ராஜபக்சே இலங்கை திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
    • கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூரில் இருந்து இலங்கைக்கு வருகிற 11-ந்தேதி வர உள்ளதாக அரசின் உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

    கொழும்பு:

    இலங்கை அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சேக்கு எதிரான மக்களின் புரட்சி போராட்டம் காரணமாக கடந்த 13-ந்தேதி மாலத்தீவுக்கு தப்பி சென்றார். பின்னர் அவர் மறுநாள் (14-ந்தேதி) சிங்கப்பூருக்கு சென்றார்.

    அங்கிருந்தபடி அதிபர் பதவியை ராஜினாமா செய்து கடிதத்தை இ-மெயில் மூலம் பாராளுமன்ற சபாநாயகருக்கு அனுப்பினார்.

    இதற்கிடையே கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூரில் அடைக்கலம் கேட்பதாக தகவல் வெளியானது. இதை மறுத்த சிங்கப்பூர் அரசு, கோத்தபய ராஜபக்சே தனிப்பட்ட முறையில் வந்துள்ளதாகவும், அவருக்கு தங்கள் நாட்டில் தங்கியிருக்க 14 நாட்கள் விசா வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

    கோத்தபய ராஜபக்சேவின் சிங்கப்பூர் விசா கடந்த 28-ந்தேதி முடிவடைந்த நிலையில் அவருக்கு மேலும் 14 நாட்கள் விசா நீட்டிப்பை சிங்கப்பூர் அரசு வழங்கியது. இதன் மூலம் அவர் வருகிற ஆகஸ்டு 11-ந்தேதி வரை சிங்கப்பூரில் தங்கி இருக்க முடியும்.

    இந்த நிலையில் கோத்தபய ராஜபக்சே இலங்கை திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவர் சிங்கப்பூரில் இருந்து இலங்கைக்கு வருகிற 11-ந்தேதி வர உள்ளதாக அரசின் உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

    கோத்தபய ராஜபக்சே பதவி விலகிய பிறகு புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே பாராளுமன்றம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    அவருக்கு ராஜபக்சேவின் கட்சி ஆதரவு அளித்தது. மேலும் அதிபர் மாளிகை முன்பு இருந்த போராட்டக்காரர்களும் ராணுவம் மூலம் அப்புறப்படுத்தப்பட்டனர். இலங்கையில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டு ராணுவம், போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    மக்களின் போராட்டம் அடங்கி இருக்கும் சூழலில் கோத்தய ராஜபக்சே இலங்கை திரும்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இனப்படுகொலை குற்றச்சாட்டில் கோத்தபய ராஜபக்சேவை கைது செய்யுமாறு ஐ.நா. சபை அதிகாரி யாஸ்மின் சுகா விடுத்த கோரிக்கையை சிங்கப்பூர் அரசு நிராகரித்து உள்ளது.

    சிங்கப்பூர் சட்டப்படி கோத்தபய ராஜபக்சே எந்த குற்றமும் செய்யவில்லை என்றும் அவர் மீது இலங்கை அரசும், சர்வதேச இண்டர் போல் அமைப்பும் எந்த புகாரும் செய்யவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

    • சீனாவின் கடன் திட்டங்கள் இலங்கையின் வளர்ச்சியை உயர்த்தியதுடன் இலங்கை மக்களுக்காக பல நன்மைகளை செய்து உள்ளது.
    • சீனா இலங்கைக்கு குறைந்த வட்டி விகிதங்கள் மற்றும் நீண்ட கால கடன்களை வழங்கி உள்ளது.

    பெய்ஜிங்:

    அன்னிய செலாவணி இருப்பு குறைந்ததால் இலங்கையில் கடுமையாக பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது.

    கடும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக இந்தியா உள்ளிட்ட நாடுகளிடம் இலங்கை கடன் உதவி கேட்டு கையேந்தியது. இதையடுத்து பல்வேறு நாடுகள் இலங்கைக்கு நேசக்கரங்கள் நீட்டியது.

    சீனாவும் கடன் உதவி செய்தது. இந்தநிலையில் அதிக வட்டிக்கு சீனா கடன் கொடுத்ததால் இலங்கை பொருளாதாரம் சீரழிந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

    ஆனால் இதற்கு சீனா மறுப்பு தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக அந்த நாட்டின் செய்தி தொடர்பாளர் ஜாவோ லீஜன் கூறியதாவது:-

    சீனாவின் கடன் திட்டங்கள் இலங்கையின் வளர்ச்சியை உயர்த்தியதுடன் இலங்கை மக்களுக்காக பல நன்மைகளை செய்து உள்ளது. வெளிநாட்டு கடன்களுக்கான பல பிரிவுகள் உள்ளன. சீனா இலங்கைக்கு குறைந்த வட்டி விகிதங்கள் மற்றும் நீண்ட கால கடன்களை வழங்கி உள்ளது. இலங்கையின் உள் கட்டமைப்பு அங்குள்ள பொதுமக்களின் வாழ்வாதரத்தை மேம்படுத்த சீனா தனது பங்களிப்பை செய்து வருகிறது. நாங்கள் கடன் கொடுத்ததால் இலங்கையின் பொருளாதாரம் சீரழியவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அதிபர் மாளிகைக்குள் யாரும் நுழையாமல் இருப்பதற்காக அதனை சுற்றி ராணுவத்தினர் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    • பொதுமக்கள் போராட்டம் காரணமாக கடந்த 100 நாட்களுக்கு மேலாக அதிபர் மாளிகை முடங்கி கிடந்தது.

    கொழும்பு:

    நம் அண்டை நாடான இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிப்பதால் பொதுமக்கள் ஆட்சியாளர்களுக்கு எதிராக போராட்டத்தில குதித்தனர்.

    அதிபர் மாளிகை அருகே பொதுமக்கள் கூடாரம் அமைத்து தொடர் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

    இதன் உச்சகட்டமாக கடந்த 9-ந்தேதி இலங்கை அதிபர் மாளிகை மற்றும் பிரதமர் அலுவலகத்தில் அதிரடியாக புகுந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்த பொருட்களை சூறையாடினார்கள்.

    அங்கு சில நாட்கள் தங்கியும் தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.

    இதையடுத்து புதிய அதிபராக ரணில் விக்கிரமசிங்கே பதவி ஏற்றவுடன் போராட்டக்காரர்கள் மீது நடவடிக்கை பாய்ந்தது. அதிபர் மாளிகை அருகே முகாம் அமைத்து போராட்டம் நடத்தியவர்களை ராணுவத்தினர் அங்கிருந்து விரட்டியடித்தனர். அவர்கள் அமைத்து இருந்த கூடாரங்களை பிரித்து எறிந்தனர்.

    பின்னர் அதிபர் மாளிகையை ராணுவத்தினர் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அதிபர் மாளிகைக்குள் யாரும் நுழையாமல் இருப்பதற்காக அதனை சுற்றி ராணுவத்தினர் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    பொதுமக்கள் போராட்டம் காரணமாக கடந்த 100 நாட்களுக்கு மேலாக அதிபர் மாளிகை முடங்கி கிடந்தது. மேலும் அதனை சீரமைக்கும் பணியும் மும்முரமாக நடந்தது

    தற்போது நிலைமை ஓரளவு சீரடைந்து வருவதால் முதல் அதிபர் மாளிகை இன்று முதல் செயல்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இன்று அதிபர் மாளிகை மீண்டும் திறக்கப்பட்டு வழக்கம் போல பணிகள் நடந்தது.

    இதையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது.

    இலங்கையில் வாரத்தில் 3 நாட்கள் பள்ளிகள் இயங்குவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.

    • மூன்று மாதங்களுக்கு மேலாக இயங்காமல் இருந்த அதிபர் மாளிகை நாளை முதல் முழுமையாக செயல்பட வைக்க அதிபர் ரணில் விக்ரமசிங்கே முடிவு செய்து உள்ளார்.
    • போராட்டக்காரர்களால் கட்டிடத்தின் சில பகுதிகள் சேதமடைந்துள்ளன. கதவுகள், ஜன்னல்களை சுத்தம் செய்தல் மற்றும் பழுது பார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    கொழும்பு:

    இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் மக்களின் புரட்சி போராட்டம் வெடித்ததால் அதிபர் பதவியை கோத்தபய ராஜபக்சே ராஜினாமா செய்தார்.

    அவர் வெளிநாட்டுக்கு தப்பி சென்றதால் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கே வீட்டுக்கு தீ வைக்கப்பட்டது.

    இதற்கிடையே இலங்கை பாராளுமன்றத்தில் புதிய அதிபர் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கே வெற்றி பெற்று கடந்த 21-ந்தேதி பதவி ஏற்றார்.

    மறுநாளே அதிபர் மாளிகைக்கு உள்ளேயும், முன்பும் இருந்த போராட்டக்காரர்களை போலீசார், ராணுவத்தினர் அப்புறப்படுத்தினர்.

    அப்போது போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

    ஐ.நா.சபை மற்றும் பல நாடுகளும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தன. ரணில் விக்ரமசிங்கேவை அமெரிக்கா தூதர் சந்தித்து தனது கவலையை தெரிவித்தார்.

    இந்த நிலையில் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேவுடன் பல வெளிநாட்டு தூதர்கள் கலந்துரையாடல் நடத்தினார்கள். அப்போது ரணில் விக்ரமசிங்கே கூறும் போது:-

    எனது தனிப்பட்ட வீடு எரிக்கப்பட்ட போது எந்த தரப்பினரும் எவ்வித டுவிட்டர் பதிவுகளையும் வெளியிடாதது குறித்து நான் ஆச்சரியமடைந்தேன். தற்போது கேள்வி எழுப்பும் ஒருவரும் அன்று ஒரு பதிவையேனும் வெளியிடவில்லை என்று கூறினார்.

    அதிபர் மாளிகை முன்பு காலிமுகத் திடலில் இருந்த போராட்டக்காரர்கள் அப்புறப்படுத்தப்பட்ட போது அவர்களின் கூடாரங்களை போலீசார் அகற்றினர். அதிபர் மாளிகையை சுற்றி உள்ள பகுதிகள் அனைத்தும் ராணுவ கட்டுப்பாட்டில் உள்ளது.

    இந்த நிலையில் மூன்று மாதங்களுக்கு மேலாக இயங்காமல் இருந்த அதிபர் மாளிகை நாளை முதல் முழுமையாக செயல்பட வைக்க அதிபர் ரணில் விக்ரமசிங்கே முடிவு செய்து உள்ளார்.

    போராட்டக்காரர்களால் கட்டிடத்தின் சில பகுதிகள் சேதமடைந்துள்ளன. கதவுகள், ஜன்னல்களை சுத்தம் செய்தல் மற்றும் பழுது பார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதிபர் மாளிகை வளாகத்தில் நடந்த குற்றச்செயல்களுக்கான சாட்சியங்களை சேகரிப்பதற்காக சிறப்பு குற்றப்பிரிவு மற்றும் கைரேகை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    • 3-ம் கட்டமாக தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் இருந்து இலங்கையின் கொழும்பு துறைமுகத்திற்கு அத்தியாவசிய பொருட்கள் இன்று காலை வி.டி.சி. சன் கப்பல் மூலம் சென்றது.
    • இலங்கைக்கு நிவாரண பொருட்கள் கொண்டு செல்லும் கப்பலை கனிமொழி எம்.பி. கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

    தூத்துக்குடி:

    இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு அங்குள்ள மக்களுக்கு உதவும் வகையில் தமிழகத்தில் இருந்து நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

    அதன்படி கடந்த மே மாதம் 18-ந் தேதி சென்னை துறைமுகத்தில் இருந்து முதல்கட்டமாக 9.045 டன் அரிசி, 50 டன் ஆவின் பால்பவுடர், 8 டன் அத்தியாவசிய மருத்துவப் பொருட்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுப்பி வைத்தார். தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் இருந்து 2-ம் கட்டமாக கடந்த 22-ந் தேதி ரூ. 67.70 கோடி மதிப்பிலான 15 ஆயிரம் டன் எடையுள்ள பொருட்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

    இந்நிலையில் 3-ம் கட்டமாக தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் இருந்து இலங்கையின் கொழும்பு துறைமுகத்திற்கு அத்தியாவசிய பொருட்கள் இன்று காலை வி.டி.சி. சன் கப்பல் மூலம் சென்றது.

    அதனை கனிமொழி எம்.பி., சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், கலெக்டர் செந்தில்ராஜ் ஆகியோர் கொடியசைத்து அனுப்பி வைத்தனர்.

    இந்த கப்பலில் ரூ. 54 கோடி மதிப்பிலான 16.356 டன் அரிசி, ரூ. 6 கோடி மதிப்பிலான 201 டன் பால்பவுடர், ரூ. 14 கோடி மதிப்பிலான 39 டன் உயிர்காக்கும் மருந்துகள் என மொத்தம் ரூ. 74 கோடி மதிப்பில் 16.596 டன் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

    • போப் ஆண்டவர் பிரான்சிஸ் இலங்கையின் நெருக்கடி நிலை தொடர்பாக கவலை தெரிவித்துள்ளார்.
    • இந்த சிக்கலில் இருந்து மக்களை பாதுகாக்குமாறு அங்குள்ள அரசியல் தலைவர்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

    வாடிகன்சிட்டி:

    கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ள இலங்கையில், அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக கோரி பொதுமக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    அங்கு நிலவும் அரசியல் மற்றும் சமூக குழப்பங்கள் உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் இலங்கையின் நெருக்கடி நிலை தொடர்பாக கவலை தெரிவித்துள்ளார். இந்த சிக்கலில் இருந்து மக்களை பாதுகாக்குமாறு அங்குள்ள அரசியல் தலைவர்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில் கூறி இருப்பதாவது:-

    அரசியல் மற்றும் பொருளாதார நிலையற்ற தன்மையால் தொடர்ந்து அவதிப்பட்டு வரும் இலங்கை மக்களின் துயரில் என்னையும் இணைத்துக் கொள்கிறேன். ஏழைகளின் அழுகுரலை புறக்கணிக்க வேண்டாம் என்று இலங்கை பிஷப்புகளுடன் இணைந்து ஆட்சியாளர்களை மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.

    ×