search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Periyar statue"

    பெரியார் சிலையில் செருப்பு வைத்தவர் கைது செய்யப்பட்ட நிலையில் அவரது ஜாமீன் மனு மீதான விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. #Periyarstatue

    சென்னை:

    திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் உள்ள பெரியார் சிலை மீது செருப்பு வைத்து கடந்த செப்டம்பர் 17-ந்தேதி அவமரியாதை செய்யப்பட்டது.

    இதுகுறித்து தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நவீன்குமார் என்பவரை கைது செய்தனர். இவருக்கு கீழ் கோர்ட்டுகளில் ஜாமீன் கிடைக்கவில்லை என்பதால், சென்னை ஐகோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனு நீதிபதி தண்டபாணி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, திராவிடர் கழகத்தின் சார்பில் வக்கீல் குமாரதேவன், திராவிடர் விடுதலை கழகத்தின் சார்பில் வக்கீல் அருண் ஆகியோர் ஆஜராகி, மனுதாரருக்கு ஜாமீன் வழங்க கூடாது என்று வாதிட்டனர். சமுதாய சீர்த்திருத்தவாதியான பெரியாரை மனுதாரர் நவீன் குமார் உள்நோக்கத்துடன் அவமரியாதை செய்துள்ளதாக குற்றம் சாட்டினர்.

    மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் மனோகரன், ‘மனுதாரர் நவீன்குமார் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு, ஏற்கனவே சிகிச்சை பெற்றவர். தற்போது அந்த பாதிப்பில்தான் இது போன்ற செயலை செய்து விட்டார். எனவே, ஜாமீன் வழங்கவேண்டும்’ என்று வாதிட்டார்.

    இதையடுத்து நீதிபதி, மனுதாரரின் மனநிலை குறித்து மருத்துவ பரிசோதனை செய்து அறிக்கையை அக்டோபர் 22-ந் தேதி தாக்கல் செய்யும்படி, போலீசாருக்கு உத்தரவிட்டார்.

    இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனு தாரர் சார்பில் ஆஜரான வக்கீல், ‘சிறையில் இருக்கும் நவீன் குமாரிடம் இருந்து நிபந்தனையற்ற மன்னிப்பு கடிதம் பெற சிறை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. ஐகோர்ட்டின் உத்தரவு நகல் இருந்தால் தான், அதற்கு அனுமதிக்க முடியும் என்கின்றனர்’ என்று கூறினார்.

    இதற்கு நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார். அந்த சிறை அதிகாரிகளை நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

    அப்போது திராவிடர் விடுதலை கழகத்தின் சார்பில் ஆஜரான வக்கீல் அருண், ‘சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிப்பதற்காகவும், தங்களது புத்திசாலித்தனத்தை காட்டிக் கொள்ளவும் இதுபோல மன்னிப்பு கேட்கின்றனர். இதை ஏற்க கூடாது’ என்று வாதிட்டார்.

    இதையடுத்து இந்த மனு மீதான விசாரணையை நாளை (செவ்வாய்கிழமை) தள்ளிவைத்து நீதிபதி உத்தர விட்டார். #Periyarstatue

    ஈரோடு அருகே பெரியார் சிலைகளை அவமதிப்பவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    ஈரோடு:

    ஈரோடு காளைமாட்டு சிலை அருகே தி.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு தி.க. மண்டல தலைவர் பிரகலாதன் தலைமை தாங்கினார்.

    பெரியார் சிலைகளை அவமதிப்பவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும். குண்டர் சட்டத்தில் அவர்களை கைது செய்ய வேண்டும். கலவரத்தை தூண்டும் வகையில் பேசி வரும் எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

    மேலும் ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. மாநில விவசாய அணி செயலாளர் சச்சிதானந்தம், முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ், மாநகர செயலாளர் சுப்பிரமணியன், தி.க. மண்டல அமைப்பு செயலாளர் சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். #tamilnews
    சென்னையில் பெரியார் சிலை மீது காலணி வீசியதால் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் ஜெகதீசன் மீது, குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். #PeriyarStatue #Jagadeesan #GoondasAct
    சென்னை:

    தந்தை பெரியாரின் 140-வது பிறந்தநாள் விழாவையொட்டி திங்கள்கிழமை சென்னை அண்ணாசாலை சிம்சன் சந்திப்பில் உள்ள தந்தை பெரியாரின் உருவ சிலைக்கு அரசியல் தலைவர்கள் மரியாதை செலுத்தினர். அப்போது அங்கு வந்திருந்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஜெகதீசன் (35) திடீரென பெரியார் சிலை மீது காலணி வீசினார். அவரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.



    இந்நிலையில் கைதான வழக்கறிஞர் ஜெகதீசன் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி ஜெகதீசன் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு ஒரு ஆண்டு சிறையில் அடைக்கப்பட உள்ளார். #PeriyarStatue #Jagadeesan #GoondasAct
    பெரியார் சிலை அவமதிப்பு தொடர்பாக தூண்டி விட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார். #MKStalin #Periyarstatue

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பகுத்தறிவுப் பகலவன் தந்தைப் பெரியாரின் 140-வது பிறந்தநாள் நேற்று நாடு முழுவதும் எழுச்சியுடன் கொண்டாடப்பட்ட நிலையில், சென்னை அண்ணா சாலையிலும், திருப்பூர் மாவட்டம் தாராபுரத்திலும் தந்தை பெரியாரின் சிலைகள் அவமதிக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில் அமைதியையும், நல்லிணக்கத்தையும் குலைக்க வேண்டும் என்ற சதி தான் இந்த நிகழ்வுகளுக்கு பின்னணி ஆகும்.

    சென்னை அண்ணா சாலையில் தந்தை பெரியார் சிலை மீது காலனி வீசிய பாரதிய ஜனதாக் கட்சியைச் சேர்ந்த ஜெகதீசன் என்ற வழக்கறிஞரை அங்கிருந்தவர்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.

    தாராபுரம் பூங்காவில் அமைந்துள்ள தந்தை பெரியாரின் சிலை மீது காலனிகளை வைத்ததாக செங்கல் சூளை அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தந்தை பெரியாரின் சிலைகளை அவமதிப்பவர்கள் யார்? என்பதை அடையாளம் காண பெரிய அளவில் ஆராய்ச்சிகளை செய்யத் தேவையில்லை.

    தந்தை பெரியாரின் கருத்துகள் யாருடைய முகத்திரைகளை கிழிக்கிறதோ அவர்கள் தான் இதை செய்திருக்க வேண்டும். இத்தகைய நிகழ்வுகள் அனைத்தும் சிலரால் தூண்டி விடப்பட்டு தான் நடைபெறுகின்றன.

    கடந்த மார்ச் மாதம் திரிபுராவில் லெனின் சிலைகள் அகற்றப்பட்ட போது, அதேபோன்று தமிழகத்தில் தந்தை பெரியாரின் சிலைகளும் அகற்றப்பட வேண்டும் என்று பாரதிய ஜனதாக் கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா வெறுப்புத் தீயை மூட்டினார். அதைத் தொடர்ந்து வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள தந்தைப் பெரியாரின் சிலை சேதப்படுத்தப்பட்டது.


    புதுக்கோட்டை மாவட்டம் உள்ளிட்ட மேலும் பல இடங்களிலும் இதே போன்ற நிகழ்வுகள் நடத்தப்பட்டன. அதன் தொடர்ச்சியாகத் தான் சென்னை மற்றும் தாராபுரத்தில் தந்தை பெரியாரின் உருவச்சிலைகளை சமூக விரோதிகள் அவமதித்துள்ளனர்.

    தந்தைப் பெரியாரை எந்த வரையரைக்குள்ளும் அடக்க முடியாது. அவர் அனைவருக்காகவும் போராடியவர்; அனைத்துக்காகவும் போராடியவர் ஆவார். சமூக நீதி, பகுத்தறிவு என்றால் உடனடியாக நினைவுக்கு வருபவர் தந்தை பெரியார் தான். தந்தை பெரியார் மட்டும் தமிழகத்தில் அவதரித்து இருக்காவிட்டால் அடிமைப்படுத்தப்பட்ட மக்கள் அடிமைப்படுத்தப்பட்டவர்களாகவே இருந்திருப்பார்கள்; பறிக்கப் பட்ட சமூகநீதி பறிக்கப்பட்டதாகவே இருந்திருக்கும்.

    தமிழ்நாட்டு மக்களுக்கு எந்த உரிமையும், சுதந்திரமும் வழங்கப்பட்டிருக்காது. இவற்றையெல்லாம் பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள்தான் தந்தை பெரியாரின் உருவச் சிலை மீது காலனிகளை வீசி தங்கள் வெறுப்பைத் தீர்த்துக் கொள்கின்றனர்.

    நான் தொடர்ந்து கூறி வருவதைப் போல தந்தை பெரியார் சுயமரியாதையின் அடையாளம், சமூக நீதியின் அடையாளம், பாட்டாளி மக்கள் கட்சியின் அடையாளம். இத்தகைய வலிமை மிக்க அடையாளத்தை எவனாலும் அழிக்க முடியாது.

    தந்தை பெரியார் உயிருடன் இருந்த போதே, அவர் மீது காலனிகள் வீசப்பட்ட நிகழ்வுகள் நடந்ததுண்டு. அப்போதெல்லாம் அதைக் கண்டு தந்தை பெரியார் கவலைப்பட்டதில்லை. மாறாக எந்தெந்த இடங்களில் எல்லாம் தந்தை பெரியார் மீது காலனி வீசப்பட்டதோ, அந்த இடங்களில் எல்லாம் அடுத்த சில ஆண்டுகளில் அவருக்கு சிலைகள் எழுந்துள்ளன.

    தந்தை பெரியாரின் சிலைகள் அவமதிக்கப்பட்டதை தனித்த நிகழ்வாக பார்க்கக்கூடாது. தமிழகத்தின் பொது அமைதி மற்றும் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் நோக்குடன் தான் சிலரால் தூண்டப்பட்டு இந்த நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டுள்ளன.

    எனவே, தந்தை பெரியாரின் சிலைகளை அவமதித்தவர்களை மட்டுமின்றி, அவர்களைத் தூண்டியவர்கள் மீதும் கடுமையான பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து தண்டனைப் பெற்றுத் தர தமிழக பினாமி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #MKStalin #Periyarstatue

    பெரியார் சிலையை அவமதித்தது கண்டிக்கத்தக்கது. இது காட்டு மிராண்டித்தனமானது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். #ministerrajendrabalaji #hraja

    கோவை:

    கோவையில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது-

    பெட்ரோல், டீசல் விலை உயர்வால் தமிழகத்தில் விலைவாசி உயர்வு ஏற்பட்டு பொதுமக்களை பாதிக்காத வகையில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

    பெரியார் சிலையை அவமதித்தது கண்டிக்கத்தக்கது. இது காட்டு மிராண்டித்தனமானது. சிலையை அவமதித்தவர்கள் மனிதர்களே இல்லை.

    தமிழ்நாட்டில் ஜனநாயக உரிமை, கருத்துரிமை இருப்பதால் தான் எச். ராஜா இவ்வாறு பேசி வருகிறார். எச். ராஜா பேச்சை அவரது கோபத்தின் வெளிப்பாடாக தான் நான் பார்க்கிறேன்.

    அவருக்கு பிர‌ஷர் ஏறி இருக்கும். அதனை பரிசோதனை செய்து கொள்வது நல்லது. எச். ராஜா பேச்சையும் மாணவி சோபியா பேச்சையும் ஒப்பிட்டு பார்ப்பது சரியல்ல.


    தமிழிசை பாரதீய ஜனதா கட்சியின் தலைவர். இதே சம்பவம் மற்ற கட்சி தலைவர்களுக்கும் வரலாம். அதனால் தான் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்துள்ளது.

    அ.தி.மு.க.வில் இருந்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு ஒருவர் சென்றால் அங்கிருந்து 10 பேர் இங்கு வருகிறார்கள். எடப்பாடி பழனிசாமி தலைமையில் சிறப்பான ஆட்சி நடைபெற்று வருகிறது.

    இரட்டை இலை பக்கம் தான் தொண்டர்கள் உள்ளனர். அ.தி.மு.க.வை யாராலும் அழிக்க முடியாது. எச். ராஜா மீது தமிழக அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #ministerrajendrabalaji #hraja

    பெரியார் சிலையை அவமதித்துள்ள செயல் கண்டனத்திற்குரியது என்று முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #mkstalin #periyarstatue

    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மானமுள்ள ஒவ்வொரு தமிழரும் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 140-வது பிறந்தநாளை இன்று சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள். தி.மு.க.வின் சார்பில் சென்னை அண்ணா சாலையில் சிம்சன் அருகே தலைவர் கலைஞர் நிறுவிய தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

    மானத் தமிழர்கள் தங்கள் வாழ்க்கைக்கு சமூகநீதி, சுயமரியாதை வெளிச்சம் பாய்ச்சிய தந்தை பெரியாருக்கு நன்றி செலுத்தும் நாளில், சில ஈனப் புத்திக்காரர்கள் பெரியாரை அவமானப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு தமிழ்நாட்டின் அமைதியை சீர்குலைக்க வி‌ஷமத்தன மாகத் திட்டமிட்டு வெறி பிடித்த மிருகம் போல செயல்படுகிறார்கள்.

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தீவுத்திடல் பூங்காவில் உள்ள பெரியார் சிலையையும், சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலையையும் அவமதித்துள்ள கயமைத் தனத்திற்கு வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். தன் வாழ்நாளிலேயே இது போன்ற தாக்குதல்களை நேரடியாக எதிர்கொண்டு, அஞ்சாமல் போராடி, எதிரிகளைப் பொடிப்பொடியாக்கியவர் பெரியார். கடலூரில் அவர் மீது செருப்பு வீசப்பட்ட இடத்திலேயே பின்னர் அவருக்கு சிலை வைக்கப்பட்டு, அவர் முன்னிலையிலேயே அதனைத் தலைவர் கலைஞர் திறந்து வைத்தார் என்பது பெருமைமிகு வரலாறு.

    அந்த வரலாறு அறியாத மூடர்கள் திராவிட இயக்கத்தால் தமிழ்நாடு கண்டுள்ள சமுதாயப் புரட்சியை செரிமானம் செய்ய முடியாத மனநலன் பிறழ்ந்தவர்கள் அண்மைக்காலமாக இது போன்ற இழிவான- மலிவான தரங்கெட்ட செயல்களை மதவெறி சக்திகளின் பின்னணியுடன் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள். இதன் மூலமாக தமிழ்நாட்டில் நிலவுகின்ற ஒற்றுமை உணர்வை- மதநல்லிணக்கத்தை- சமூக நீதிக் கொள்கையை தகர்த்து, மதவாதப் பேயாட்டம் போடலாம் எனத் திட்டமிடுபவர்களை ஒட்ட நறுக்க வேண்டியது அவசியமாகும்.

    தமிழின விரோதிகள் சிலர் சமீப காலமாக இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதை அ.தி.மு.க அரசு பதவியில் நீடிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக வளர விட்டு வேடிக்கை பார்ப்பது மிகவும் ஆபத்தான போக்கு. இது பெரியார் மண் என்பது ஆள்பவர்களும் அறிவார்கள் என்பதால், தந்தை பெரியார் சிலையை அவமானப்படுத்த முயற்சித்து, அதன் மூலம் பொது அமைதியைக் குலைக்கத் திட்டமிட்டவர் களை ஒட்டுமொத்தமாக கைது செய்து தேசிய பாது காப்புச் சட்டத்தில் அடைக்க வேண்டும் என்றும், இது போன்ற செயல்களைத் தூண்டும் அமைப்புகளை சட்டத்தின் இரும்புக் கரம் கொண்டு அடக்கிட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #mkstalin #periyarstatue

    சென்னை சிம்சன் அருகே உள்ள பெரியார் சிலை மீது காலணி வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைக் கண்டித்து திமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் தொண்டர்கள் மறியலில் ஈடுபட்டனர். #PeriyarStaue #DMK
    சென்னை:

    பெரியார் பிறந்த நாளையொட்டி சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு இன்று அரசியல் கட்சியினர் மாலை அணிவித்தனர்.

    காலை 9 மணி அளவில் பெரியாருக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வதற்காக காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சியினர் திரண்டு நின்றனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் திடீரென பெரியார் சிலை மீது காலணிகளை வீசினார். இதைப் பார்த்ததும் அங்கிருந்தவர்கள் கூச்சல் போட்டனர்.

    அதற்குள் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடினார். அவரை அங்கிருந்த அரசியல் கட்சியினர் சிலர் விரட்டிப் பிடித்தனர். பின்னர் அவரைச் சுற்றி வளைத்து சரமாரியாக தாக்கினர். இதில் அவர் நிலைகுலைந்தார். இதனை பார்த்து பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் ஓடிச் சென்று தாக்குதலுக்குள்ளான வாலிபரை கூட்டத்துக்குள் இருந்து வெளியில் கொண்டு வருவதற்கு முயன்றனர். ஆனால் உடனடியாக அவரை மீட்க முடியவில்லை.

    பின்னர் ஒருவழியாக கூட்டத்தினரின் பிடியில் இருந்து வாலிபரை வெளியில் கொண்டு வந்து போலீசார் அவரை பாதுகாப்பாக போலீஸ் வேனில் ஏற்றினர்.

    இருப்பினும் கார் கண்ணாடி வழியாக கையை விட்டு தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த நேரத்தில் காரை வெளியில் கொண்டு செல்ல போலீசார் முயன்றனர். ஆனால் காரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது.

    சுமார் ½ மணி நேர போராட்டத்துக்கு பின்னரே போலீசாரால் கூட்டத்துக்குள் இருந்து காரை வெளியில் எடுக்க முடிந்தது. பின்னர் மின்னல் வேகத்தில் கார் அங்கிருந்து சென்றது.


    இந்த நிலையில் காலை 10.30 மணி அளவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்க வந்தார். அவரது தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது.

    பெரியார் சிலையை அவமதித்த வாலிபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், எச்.ராஜாவை கைது செய்ய வேண்டும் என்பது போன்ற கோ‌ஷங்களை திருமாவளவன் எழுப்பினார். இதன் காரணமாக அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.

    இதற்கிடையே பெரியார் சிலை மீது காலணியை வீசிய வாலிபரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அவரது பெயர் ஜெகதீஸ். ஈக்காட்டுதாங்கலை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள். தென் சென்னை கூடுதல் கமி‌ஷனர் மகேஸ் குமார் அகர்வால் நேரில் சென்று விசாரணை நடத்தினார். 
    #PeriyarStaue
    பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 140-வது பிறந்த நாளான 17-ந்தேதி அன்று எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள். #ADMK
    சென்னை:

    அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 140-வது பிறந்த நாளான 17-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணியளவில், சென்னை அண்ணா மேம்பாலம் அருகே அமைந்துள்ள தந்தை பெரியாருடைய உருவச் சிலைக்கு, ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்- அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்- அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார்கள்.

    இந்த நிகழ்ச்சியில், தலைமைக் கழக நிர்வாகிகளும், அமைச்சர் பெருமக்களும், மாவட்டக் கழகச் செயலாளர்களும், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், கழகம், எம்.ஜி.ஆர். மன்றம், புரட்சி தலைவி அம்மா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப்பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை மற்றும் தகவல் தொழில்நுட்பப் பிரிவு உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், கழக உடன் பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #ADMK
    ×