search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "iquiry"

    பெரியார் சிலையில் செருப்பு வைத்தவர் கைது செய்யப்பட்ட நிலையில் அவரது ஜாமீன் மனு மீதான விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. #Periyarstatue

    சென்னை:

    திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் உள்ள பெரியார் சிலை மீது செருப்பு வைத்து கடந்த செப்டம்பர் 17-ந்தேதி அவமரியாதை செய்யப்பட்டது.

    இதுகுறித்து தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நவீன்குமார் என்பவரை கைது செய்தனர். இவருக்கு கீழ் கோர்ட்டுகளில் ஜாமீன் கிடைக்கவில்லை என்பதால், சென்னை ஐகோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனு நீதிபதி தண்டபாணி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, திராவிடர் கழகத்தின் சார்பில் வக்கீல் குமாரதேவன், திராவிடர் விடுதலை கழகத்தின் சார்பில் வக்கீல் அருண் ஆகியோர் ஆஜராகி, மனுதாரருக்கு ஜாமீன் வழங்க கூடாது என்று வாதிட்டனர். சமுதாய சீர்த்திருத்தவாதியான பெரியாரை மனுதாரர் நவீன் குமார் உள்நோக்கத்துடன் அவமரியாதை செய்துள்ளதாக குற்றம் சாட்டினர்.

    மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் மனோகரன், ‘மனுதாரர் நவீன்குமார் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு, ஏற்கனவே சிகிச்சை பெற்றவர். தற்போது அந்த பாதிப்பில்தான் இது போன்ற செயலை செய்து விட்டார். எனவே, ஜாமீன் வழங்கவேண்டும்’ என்று வாதிட்டார்.

    இதையடுத்து நீதிபதி, மனுதாரரின் மனநிலை குறித்து மருத்துவ பரிசோதனை செய்து அறிக்கையை அக்டோபர் 22-ந் தேதி தாக்கல் செய்யும்படி, போலீசாருக்கு உத்தரவிட்டார்.

    இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனு தாரர் சார்பில் ஆஜரான வக்கீல், ‘சிறையில் இருக்கும் நவீன் குமாரிடம் இருந்து நிபந்தனையற்ற மன்னிப்பு கடிதம் பெற சிறை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. ஐகோர்ட்டின் உத்தரவு நகல் இருந்தால் தான், அதற்கு அனுமதிக்க முடியும் என்கின்றனர்’ என்று கூறினார்.

    இதற்கு நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார். அந்த சிறை அதிகாரிகளை நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

    அப்போது திராவிடர் விடுதலை கழகத்தின் சார்பில் ஆஜரான வக்கீல் அருண், ‘சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிப்பதற்காகவும், தங்களது புத்திசாலித்தனத்தை காட்டிக் கொள்ளவும் இதுபோல மன்னிப்பு கேட்கின்றனர். இதை ஏற்க கூடாது’ என்று வாதிட்டார்.

    இதையடுத்து இந்த மனு மீதான விசாரணையை நாளை (செவ்வாய்கிழமை) தள்ளிவைத்து நீதிபதி உத்தர விட்டார். #Periyarstatue

    ×