search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Occupancy"

    • சங்கராபுரம் பஸ் நிலையத்தில் சிலர் ஆக்கிரமித்து கடைகள் வைத்து பயன்படுத்தி வந்தனர்.
    • போலீசார் பஸ் நிலையத்திற்கு சென்று ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகளை அகற்றினர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பஸ் நிலையத்தில் சிலர் ஆக்கிரமித்து கடைகள் வைத்து பயன்படுத்தி வந்தனர். இதனால் பயணிகள் பெரும் அவதி அடைந்து வந்தனர். இந்த நிலையில் செயல் அலுவலர் சம்பத்குமார் தலைமையில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி மற்றும் போலீசார் பஸ் நிலையத்திற்கு சென்று ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகளை அகற்றினர். மேலும் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த தள்ளுவண்டி மற்றும் வாகனங்களையும் அப்புறப்படுத்தினர்.

    • அனைத்து வர்த்தக வியாபாரிகளுக்கும் ஒரு முன்னெச்சரிக்கை துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.
    • பல்வேறு ஊர்களுக்கு செல்வதற்காக ஏராளமான பஸ்கள் இயக்க உத்தரவிடப்படும்.

    கடலூர்:

    புவனகிரி பகுதியில் போக்குவரத்து நெரிச்சலால் மாணவ -மாணவிகளுக்கு பள்ளிக்கு செல்ல முடியாமலும் வாகன ஓட்டிகள் சரியாக வாகனத்தை ஓட்டி செல்ல முடியாமலும் பல்வேறு விபத்துக்கள் ஏற்படுகிறது. இந்த நிலையில் சமூக ஆர்வலரான கனகராஜ் தலைமையில் புவனகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் அங்கு வந்து ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் தாங்கள் கூறியது போல் அதன் அடிப்படையில் நாங்கள் அனைத்து வர்த்தக வியாபாரிகளுக்கும் விரைந்து நோட்டீஸ் அனுப்பி வைக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்கள். அதன் அடிப்படையில் அனைத்து வர்த்தக வியாபாரிகளுக்கும் ஒரு முன்னெச்சரிக்கை துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. அதில் கூறியதாவது:-

    அனைத்து வர்த்தக வியாபாரிகளும் அவரவர்கள் கடைக்கு முன்பு செய்துள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக செப்டம்பர் 23 க்குள் பிரித்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் செப்டம்பர் 24 ஆம் தேதி நாங்கள் இயந்திரம் மூலம் அகற்றி விடுவோம் அதற்குரிய செலவின தொகையை தங்களிடமிருந்து வசூலிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்கள். ஆனால் இதனால் வரை எந்த ஒரு நடவடிக்கை எடுக்கப்படவில்லை ஒரு சிலர் மட்டும் தன்னுடைய கடைகளில் ஆக்கிரம்புகளை அகற்றி உள்ளார். தற்பொழுது வரும் தீபாவளி பண்டிகை தமிழக அரசு பல்வேறு ஊர்களுக்கு செல்வதற்காக ஏராளமான பஸ்கள் இயக்க உத்தரவிடப்படும்.

    இதனை ஒட்டி ஏராளமான போக்குவரத்துகள் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் மூலம் வெளியூரிலிருந்து சொந்த ஊருக்கு திரும்பி வருவார்கள் ஆகையால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். மேலும் ஏராளமான வாடிக்கையாளர்கள் தங்களது பிள்ளைகளை மற்றும் உறவினர்களை அழைத்துக் கொண்டு வந்து மளிகை பொருட்கள் புது ஆடைகள் பட்டாசுகள் வாங்குவதற்கு இரு சக்கர வாகனங்களில் வந்து வாகனங்களை நிறுத்துவதற்கு இடமில்லாமல் சாலை ஓரத்தில் நிறுத்த வேண்டிய சூழ்நிலை நேரிடும். அந்தப் பகுதியில் சாலையில் இருசக்கர வாகனம் கூட செல்ல முடியாத சூழ்நிலை உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது தமிழக அரசு அதிரடியாக ஏராளமான ஊர்களில் பெரிய அளவிற்கு கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் கூட இடித்து அப்புறப்படுத்தி வருகிறது. ஆனால் புவனகிரி பகுதியில் மட்டும் ஏன் ஆக்கிரம்புகள் அகற்றப்படவில்லை என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பள்ளி மாணவ மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நடைபாதையை ஆக்கிரமித்து செயல்படும் கடைகள் அகற்றப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
    • மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள சாலைகளில் நாளுக்கு நாள் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகிறது.

    மதுரை

    மதுரையில் முக்கிய சாலை ஓரங்களில் பொதுமக்கள் நடந்து செல்வதற்காக நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாதையை சாலையோர வியாபாரிகள் ஆக்கிரமித்து ஓட்டல், பழக்கடை உள்ளிட்ட பல்வேறு வியாபாரங்கள் செய்து வருகின்றனர்.

    மதுரை ரெயில் நிலையம் முதல் பெரியார் பஸ் நிலையம் வரை சாலையோர நடைபாதையில் பல்வேறு கடைகள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் அந்த பாதையை பொதுமக்கள் மற்றும் பயணிகள் பயன்படுத்த முடியவில்ைல.

    இதன் காரணமாக மக்கள் நடைபாதையில் செல்ல முடியாத நிலை ஏற்படுவதால் வாகனங்கள் வரும் சாலையில் நடந்து செல்லும் நிலை ஏற்படுகிறது. அப்போது வேகமாக வரும் வாகனங்களால் விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.இந்த சாலையோர கடைகள் பொதுமக்களுக்கு பெரும் இடையூராக இருந்தபோதிலும் அதனை அகற்ற மாநகராட்சியோ, போக்குவரத்து போலீசாரோ, நடவடிக்கை எடுக்காமல் மெத்தனம் காட்டி வருகின்றனர். இதன் எதிரொலியாக நகரில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள சாலைகளில் நாளுக்கு நாள் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகிறது.

    எனவே அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றி மீண்டும் ஆக்கிரமிப்புகள் செய்யப்படுவதை தடுத்து மக்கள் நடைபாதையை பயன்படுத்த உதவி புரிய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக உடனடியாக எடுக்கப்படும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர். இதனை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன் வருவார்களா?

    • சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டியில் இருந்து பொம்மிடி செல்லும் சாலையில் டேனிஷ் பேட்டை ரெயில் நிலையம் அமைந்துள்ளது.
    • ரெயில்வே துறையினர் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ய இரண்டு கட்டமாக அப்பகுதி மக்களுக்கு இடத்தை காலி செய்ய நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டியில் இருந்து பொம்மிடி செல்லும் சாலையில் டேனிஷ் பேட்டை ரெயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த இடத்தில் ரெயில்வே துறைக்கு சொந்தமான சுமார் 50 சென்ட் நிலம் உள்ளது. அந்த நிலத்தில் அந்தப் பகுதியை சேர்ந்த மக்கள் பல ஆண்டு காலமாக குடியிருந்து வருகின்றனர் .

    ரெயில்வே துறையினர் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ய இரண்டு கட்டமாக அப்பகுதி மக்களுக்கு இடத்தை காலி செய்ய நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். இருந்தபோதிலும் அதிகாரிகள் ஆக்கிரமிப்புக்கு முன் வராத நிலையில் மக்கள் அப்பகுதியில் இருந்து வந்தனர். இன்று தேதி குறிப்பிட்ட நிலையில் முன்னதாகவே அவரவர் தேவையான பொருட்களை எடுத்துகொள்ளலாம் என்ற நிலையில் கடந்த 2 நாட்களாக மக்கள் வீடுகளில் தேவையான பொருட்களை எடுத்துச் சென்றனர்.

    மாவட்ட கலெக்டர் உத்தரவின் படி மேட்டூர் சப்கலெக்டர் பிரதாப் சிங் மற்றும் தாசில்தார் அருள் பிரகாஷ் மற்றும் வருவாய் துறையினர், ரெயில்வே துறையினர் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து நிலத்தை சமன் செய்ய ரெயில்வே துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். சம்பவத்தில் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க ஓமலூர் டி.எஸ்.பி. சங்கீதா , தீவட்டிபட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ரெயில்வே போலீஸ் அதிரடிப்படை, தீயணைப்புத் துறையினர், மருத்துவத் துறையினர் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • தொடர்ந்து சுடுகாட்டில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதிகளை அகற்றுவதற்கு உண்டான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
    • நிலத்தை அளவிடும் பணி தீவிரம்.

    சேலம்:

    சேலம் மாநகராட்சி 22-வார்டுக்கு உட்பட்ட சூரமங்கலம் மண்டல பகுதி ஆண்டிபட்டி சுடுகாட்டில் சிலர் ஆக்கிரமிப்பு செய்து பல வருடங்களாக விவசாயம் செய்து வருவதாக அப்பகுதி பொதுமக்கள் மாநகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்திருந்தனர், அதன் பேரில் நேற்று மாநகராட்சி சர்வேயர் நித்தியா, உதவி பொறியாளர் மலர் ஆகியோருடைய மேற்பார்வையில் ஆண்டிபட்டி சுடுகாடு பகுதியில் நில அளவு செய்யப்பட்டது.

    தொடர்ந்து சுடுகாட்டில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதிகளை அகற்றுவதற்கு உண்டான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அதிகாரிகளுடன் 22 -வது வார்டு கவுன்சிலர் கே. சி. செல்வராஜு மற்றும் பொதுமக்கள் சென்றிருந்தனர்.

    • தமிழக அரசு திருச்செங்கோடு நகராட்சி பகுதிகளில் உள்ள 5 நீர் நிலைகளை மேம்படுத்த 5 கோடியே 94லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்திருந்தது.
    • நகராட்சி பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ள இடங்கள் தொடர்ந்து கண்டறியப்பட்டு ஆக்கிரமிப்பு அகற்றம் செய்யப்படும்.

    திருச்செங்கோடு:

    தமிழக அரசு நீர் நிலைகளை மேம்படுத்த உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் திருச்செங்கோடு அம்மன் குளக் கரைகளை மேம்படுத்தி நடைமேடை அமைக்க ரூ 40 லட்சம் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. இதற்கான பணிகள் தொடங்கிய நிலையில் குளத்தின் மேற்கு புற கரையில் 32 கடைகள் சாலையை ஆக்கிரமித்து கட்டப் பட்டிருந்தது.

    அதனை அகற்றிக் கொள்ள நகராட்சி நிர்வாகத்தினர் நோட்டீஸ் கொடுத்திருந்தனர் ஆனாலும் யாரும் கடைகளை அகற்றாததால் நகராட்சி ஆணையாளர் கணேசன் மற்றும் நகராட்சி பொறியாளர் சண்முகம் ஆகியோர் நகராட்சி பணியாளர்களுடன் சென்று பொக்லைன் உதவியுடன் கடைகளை அகற்ற முயன்றனர்.

    அப்போது கடை உரிமையாளர்கள் தாங்களாகவே கழட்டி கொள்வதாகவும் இடிக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டதன் பேரில் கடைகளை அவர்களாகவே அகற்றிக் கொள்ள அனுமதிக்கப்பட்டது இதையடுத்து உடனடியாக கடைகள் அகற்றும் பணி நடந்தது. இது குறித்து நகராட்சி ஆணையாளர் கணேசன் கூறியதாவது:-

    தமிழக அரசு திருச்செங்கோடு நகராட்சி பகுதிகளில் உள்ள 5 நீர் நிலைகளை மேம்படுத்த 5 கோடியே 94லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்திருந்தது. அதன்படி சூரியம்பாளையம் ராஜா கவுண்டம்பாளையம் ஏரிகள், அம்மன்குளம் பெரிய தெப்பக்குளம் மலை அடி குட்டை ஆகியவற்றில் கரைகள் மேம்படுத்தும் பணி தொடங்கி நடந்து வருகிறது .

    இந்த நீர்நிலைகள் தூர்வாரி மேம்படுத்தி பராமரிக்கப்பட இருப்பதால் அம்மான் குளம் பகுதியில் கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக ஆக்கிரமிப்பில் இருந்த 32 கடைகளை அகற்றி உள்ளோம். மேலும் இதுபோல் நகராட்சி பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ள இடங்கள் தொடர்ந்து கண்டறியப்பட்டு ஆக்கிரமிப்பு அகற்றம் செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

    • நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில் குடியிருப்பவர் இடத்தை காலி செய்யுமாறு நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினார்கள்.
    • நாங்கள் உயர்நீதிமன்ற ஆணையை மதிக்கிறோம். அதே சமயம் எங்களது ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு மாநில அரசு பரிசீலிக்க வேண்டும்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா ஜேடர் பாளையம் சரளைமேடு பகுதியில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில் சுமார் 100-க்கும் மேற்ப ட்டோர் வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில் நெடுஞ்சாலை துறை துறைக்கு சொந்த மான இடத்தில் குடியிருந்த வர்களை வேறு பகுதிக்கு சென்று குடியிருக்குமாறு அறிவுறுத்தினர்.

    இது சம்பந்தமான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இறுதி தீர்ப்பில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் குடியிருப்பவர்களை அப்புறப்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில் குடியிருப்பவர் இடத்தை காலி செய்யுமாறு நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினார்கள்.

    இந்நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கூடாது என கோரி அங்கு குடியிருப்பவர்கள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள் அ.மு.மு.க.வை சேர்ந்த சுமார் 100-க்கும் மேற்பட்டோர் ஜேடர் பாளையம் நான்கு ரோடு அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தங்கமணி பேசியதாவது:-

    ஜேடர்பாளையம்- பரமத்தி செல்லும் மாவட்ட நெடுஞ்சாலையில் இருபக்கமும் நெடுஞ்சாலை பயன்பாட்டிற்கு போக மீதமுள்ள நிலங்களில் தான் கடந்த 120 ஆண்டுகளாக ஏழை கூலி மக்கள் குடிசை போட்டு தலைமுறை தலைமுறையாய் வாழ்ந்து வருகின்றனர். இவர்களது வீடுகளை காலி செய்திட தனி ஒரு நபர் சுயநலத்திற்காக வழக்கு தொடர்ந்து 2010-ஆண்டு தீர்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.

    இது குறித்து அரசும், பொதுமக்களும் அறியாத வகையில் வழக்கு நடந்துள்ளது. தற்போது இதே தனிநபர் மீண்டும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்து தீர்ப்பு பெற்றுள்ளார் .ஆனால் இது குறித்து இப்பகுதி பொதுமக்களின் கருத்துக்களை அறியவும், மாற்று ஆலோசனைகள் மற்றும் தீர்வுக்கு வழிகான ஒரு வழி காட்டவும் இல்லாமல் திடீரென்று தீர்ப்பு கொடுத்து மக்களின் குடிசைகளை இடித்து தரைமட்டம்ஆக்குவது சரியான தீர்வாகாது.

    மேலும் நாங்கள் உயர்நீதிமன்ற ஆணையை மதிக்கிறோம். அதே சமயம் எங்களது ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு மாநில அரசு பரிசீலிக்க வேண்டும். மாநில அரசு அவசர, அவசிய வழக்காக மேல்முறையீடு செய்து குடிசைகளை தரைமட்டமாக முடிவை தள்ளி போட வேண்டும். ஆக்கிரமிப்பு அகற்றுவது உண்மை எனில் முறையாக சரியாக அளவீடு செய்து முழுவதையும் அப்புறப்படுத்த வேண்டும்.

    நெடுஞ்சாலை விரிவா க்கம் நடைபெறும் வரை மக்களை வாழ விட வேண்டும் .காலி செய்யும் நிலை வரும் போது அனைவருக்கும் இலவச வீட்டு மனை வீடு கட்டிக்கொள்ள தேவையான பொருளாதார உதவிகள் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு போலீஸ் டி.எஸ்.பி. ராஜா ரணவீரன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ், வீரம்மாள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

    • மணல் கொள்ளையை தடுத்திட தமிழக அரசு உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
    • சமுத்திர ஏரிக்குள் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதோடு ஏரியை அகலப்படுத்தி ஆழப்படுத்திடும் வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்க பொதுக்குழு கூட்டம் தஞ்சையில் மாவட்ட தலைவர் சேவையா தலைமையில் நடைபெற்றது. துணை செயலாளர் துரை.மதிவாணன், உடல் உழைப்பு சங்க மாவட்ட பொது செயலாளர் கோவிந்தராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் சந்திரகுமார், மாவட்ட செயலாளர் தில்லைவனம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    இந்த கூட்டத்தில், தஞ்சை மாவட்டத்தில் மணல் கொள்ளையை தடுத்திடவும், குவாரிகளை முறையாக செயல்படுத்தவும் கண்காணிப்பு குழு அமைப்பதுடன், அரசு நிர்ணயித்த விலைக்கு மணல் பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்ய தமிழக அரசு உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அரசு இதில் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி வருகிற 19-ந்தேதி தஞ்சை ரெயிலடி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது,

    சமுத்திர ஏரிக்குள் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதோடு ஏரியை அகலப்படுத்தி ஆழப்படுத்திடும் வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • 4 ரதவீதிகளிலும் தார்ச்சாலைகள் சீரமைக்கப்பட்டு தூய்மைப்பணியாளர்கள் மூலம் சுத்தப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • சாலையோரம் உள்ள விளம்பர பலகைகள் உள்ளிட்டவைகள் அகற்றப்பட்டன.

    நெல்லை:

    தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் நெல்லையப்பர் கோவிலும் ஒன்று. நெல்லையப்பர் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் சிறப்பு பெற்றது ஆனித்தேரோட்டம். இந்தாண்டு திருவிழா வருகிற 3-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை)கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தேரோட்டம் 11-ந் தேதி நடக்கிறது. கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு பின்னர் கோலாகலமாக நடைபெறுகிறது.

    இதைத்தொடர்ந்து ஆனித்தேரோட்ட ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. தேரோட்டத்தையொட்டி ரதவீதிகளில் சாலைகளை புதுப்பிக்கவும், அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும் பக்தர்கள் சார்பில் மாநகராட்சிக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    அதன்படி மாநகராட்சி சார்பில் கோவிலை சுற்றியுள்ள 4 ரதவீதிகளிலும் தார்ச்சாலைகள் சீரமைக்கப்பட்டு தூய்மைப்பணியாளர்கள் மூலம் சுத்தப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் நெல்லை மண்டல உதவி கமிஷனர் பைஜூ தலைமையில் டவுன் ரதவீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் இன்று ஈடுபட்டனர். அப்போது சாலையோரம் உள்ள விளம்பர பலகைகள் உள்ளிட்டவைகள் அகற்றப்பட்டன.

    மேலும் அனுமதியின்றி நிறுத்தப்பட்டிருந்த தள்ளுவண்டி கடைகள் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்ற 2 நாட்களுக்கு முன்பு அறிவுறுத்தி இருந்தனர். ஆனால் அவர்கள் அகற்றாததால் இன்று மாநகராட்சி மூலம் எடுத்து செல்லப்பட்டது. சில கடைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும் போலீசார் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்றது.

    ×