search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Northeast monsoon"

    • காங்கயம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.
    • ஊத்துக்குளி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டு வந்தது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்தது. இந்தநிலையில் நேற்றிரவு பல்வேறு இடங்களில் லேசான தூரலுடன் சாரல் மழை பெய்தது. இன்று காலை மாநகர் மற்றும் மாவட்டத்திற்குட்பட்ட உடுமலை உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது.

    இதனால் இன்று காலை பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் சற்று சிரமம் அடைந்தனர். அவர்கள் குடைபிடித்தபடி தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு சென்றனர். தொடர்ந்து சாரல் மழை பெய்ததால் மாவட்டம் முழுவதும் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது. மேலும் சிதலமடைந்த சாலைகள் சகதிக்காடாக மாறின. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் சற்று சிரமம் அடைந்தனர்.

    காங்கயம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தேங்காய் உடைத்து உலர்த்தும் உலர்களங்கள் 800-க்கும் மேற்பட்ட அளவில் உள்ளன. இப்பகுதியில் இயற்கையில் அமைந்த சீதோஷ்ண நிலை தேங்காய் உடைத்து உலர்த்தும் பணிக்கு ஏதுவாக உள்ளதால் அதிகளவில் களங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தேங்காய் எண்ணெய் உற்பத்தியில் கிரஷிங் பணிக்கு முன்பு வரை அனைத்து பணிகளும் திறந்தவெளியிலேயே நடைபெற்று வருகிறது. தேங்காய் மட்டை உரிப்பது, உடைப்பது, உலர்த்துவது ஆகிய பணிகள் திறந்த வெளியிலேயே நடைபெறுவதால் தொடர்மழை பெய்யும் காலங்களில் இந்தப் பணிகள் முற்றிலுமாக பாதிக்கப்படும்.

    இந்தநிலையில் காங்கயம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்து வந்தது. மேலும் நேற்று காலை முதல் தொடர்ந்து அவ்வப்போது விட்டு விட்டு பெய்த லேசான சாரல் மழையால் தேங்காய் உடைத்து உலர்த்தும் பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டது. ஏற்கனவே உடைக்கப்பட்டு களங்களில் உலர்த்தப்பட்டு வரும் தேங்காய் பருப்புகளை குவியல் குவியலாக களங்களில் குவித்து வைத்து தார்பாய் மூலம் மூடி வைக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் ஊத்துக்குளி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டு வந்தது. மேலும் வெயிலின் தாக்கம் இல்லை. இந்நிலையில் நேற்று மாலை முதல் சாரல் மழை பெய்தது. இந்த சாரல் தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடித்தது. இன்று அதிகாலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காட்சி அளித்தது. பின்னர் காலை 7 மணி முதல் சாரல் மழை பெய்த வண்ணம் இருந்தது. இதனால் சாலையில் கும்மிருட்டு நிலவியதால் 2 மற்றும் 4 சக்கர வாகன ஓட்டிகள் வாகனத்தை இயக்க கடும் சிரமப்பட்டனர். மேலும் வாகனத்தின் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு சென்றனர். இதனால் காலை நேரத்தில் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்த வண்ணம் காணப்பட்டது.

    • காலையில் இடைவிடாது பெய்த மழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
    • சுமார் ½ மணி நேரத்திற்கு மேல் தீப்பொறியுடன் மின் வயர்கள் எரிந்தது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்ட த்தில் கடந்த சில நாட்களாக மழையின் தீவிரம் குறைந்து காணப்பட்ட நிலையில் ஒருசில இடங்களில் மட்டும் அவ்வப்போது சாரல்மழை பெய்து வந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை 5 மணியளவில் லேசான சாரலுடன் தொடங்கிய மழை பின்னர் கனமழையாக அதிகரித்தது.

    சில மணிநேரம் மட்டும் இடைவெளி விட்டு பின்னர் கொட்டித் தீர்த்தது. இதனால் நகரில் உள்ள பெரும்பாலான சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. பல்வேறு இடங்களில் மழைநீருடன் சாக்கடை நீரும் கலந்து ஓடியது. ஓரளவுக்கு பெய்த பிறகு நின்றுவிடும் என்று எதிர்பார்த்த நிலையில் விட்டுவிட்டு பலத்த மழையாக பெய்தபடி இருந்தது.

    காலையில் இடைவிடாது பெய்த மழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விடுமுறை விடாததால் ஏமாற்றத்துடன் மாணவர்கள் நனைந்தபடியே பள்ளிக்கு சென்றனர். ஒருசில தனியார் பள்ளிகளில் மட்டும் விடுமுறை விடப்பட்ட நிலையில் பெரும்பாலான பள்ளிகளில் எந்த அறிவிப்பும் வராததால் மாணவ-மாணவிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

    இதேபோல காலையில் வழக்கமாக பணிக்கு செல்லும் தொழிலாளர்களும் கனமழையால் மிகுந்த சிரமம் அடைந்தனர். நகரின் தாழ்வான பகுதியான ஒத்தக்கண் பாலம் பகுதியில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கி நின்றது. இதனால் அந்த சாலையை கடக்க முடியாமல் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர்.

    இதே போல் ஒய்.எம்.ஆர் பட்டியில் உள்ள உப்புக்கேணி விநாயகர் கோவில் வளாகத்துக்குள்ளும் மழை நீர் புகுந்ததால் பொதுமக்களே தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். திண்டுக்கல்-கரூர் சாலையில் புதிய ரெயில்வே சுரங்கப்பாதையில் மழை நீர் அதிக அளவு தேங்கியதால் பணிகள் நிறுத்தப்பட்டது.

    திண்டுக்கல் மட்டுமின்றி பழனி, கொடைக்கானல், வேடசந்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் காலைமுதல் இடைவிடாது பெய்த மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    திண்டுக்கல் மாநகராட்சி 31-வது வார்டுக்கு உட்பட்ட திருமலைசாமிபுரம் 4வது தெருவில் உள்ள மின் கம்பத்தில் திடீரென தீப்பொறி வந்தது. சிறிது நேரத்தில் மின் கம்பம் எரிய தொடங்கியது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் அலறினர். சுமார் ½ மணி நேரத்திற்கு மேல் தீப்பொறியுடன் மின் வயர்கள் எரிந்தது. இதனால் அருகில் இருந்த 6 வீடுகளுக்கு தீப்பொறி பரவி வயர்கள் முற்றிலும் எரிந்து நாசமானது. பின்னர் அப்பகுதியில் மின்சாரம் துண்டிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து மின் வாரியத்திற்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த மின் வாரிய ஊழியர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கடலூர், மயிலாடுதுறை, நாகையில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
    • திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர், சிவகாசி, கரூர், திருச்சி, நாமக்கல், அரியலூர், பெரம்பலூர் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

    * திண்டுக்கல், திருப்பூர், கோவை உள்ளிட்ட 21 மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    * கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கடலூர், மயிலாடுதுறை, நாகையில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    * திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர், சிவகாசி, கரூர், திருச்சி, நாமக்கல், அரியலூர், பெரம்பலூர் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.

    • தற்போது நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது.
    • மத்திய குழுவினரும் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஏற்கனவே ஆய்வு செய்து வெள்ள சேதங்கள் குறித்து கணக்கெடுத்து சென்றனர்.

    தூத்துக்குடி:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த மாதம் 17, 18-ந் தேதிகளில் வரலாறு காணாத மழை பெய்தது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டதாலும், வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததாலும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது.

    இதைத்தொடர்ந்து வெள்ளத்தில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டு தேங்கிய தண்ணீரும் படிப்படியாக அகற்றப்பட்டு தற்போது நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது.

    எனினும் பல்வேறு வீடுகள் இடிந்தும், சேதம் ஆகியும், வீட்டில் இருந்த பொருட்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டும் உள்ளது. இதேபோல் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளது.

    வெள்ளம் பாதித்த நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து அதிக பாதிப்பு ஏற்பட்ட பகுதி மக்களுக்கு தலா ரூ.6 ஆயிரமும், மற்ற பகுதி மக்களுக்கு தலா ஆயிரம் என நிவாரண தொகை அறிவித்து வழங்கப்பட்டுள்ளது.

    மேலும் வெள்ளம் பாதித்த தென் மாவட்டங்களுக்கு தேவையான நிவாரண தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

    இதைத்தொடர்ந்து மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தூத்துக்குடி மாவட்டத்திற்கு வந்து வெள்ள சேத பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து சென்றார். மேலும் மத்திய குழுவினரும் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஏற்கனவே ஆய்வு செய்து வெள்ள சேதங்கள் குறித்து கணக்கெடுத்து சென்றனர்.

    இந்நிலையில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் வெள்ள சேதங்களை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக மத்திய குழு மீண்டும் வருகிறது. அந்த வகையில் மத்தியஅரசின் பேரிடர் மேலாண்மை துறை நிர்வாகி மற்றும் ஆலோசகர் கீர்த்தி பிரதீப் சிங் தலைமையில் பல்வேறு துறைகளை சேர்ந்த உயர் அதிகாரிகள் பொன்னுசாமி, விஜயக்குமார், ரங்கநாத் ஆதம், ராஜேஸ் திவாரி, தங்கமணி, பாலாஜி ஆகிய7 பேர் கொண்ட குழுவினர் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) இந்த மாவட்டங்களில் ஆய்வு செய்ய வருகின்றனர்.

    தொடர்ந்து அவர்கள் 14-ந் தேதி வரை 4 நாட்கள் ஆய்வு செய்கிறார்கள். இதற்காக 11-ந் தேதி மதுரை வரும் மத்திய குழுவினர் அங்கிருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வருகிறார்கள். அங்கு வெள்ளத்தால் சேதமான பயிர்கள், சாலைகள், வீடுகள், உள்ளிட்ட பல்வேறு இடங்களை ஆய்வு செய்கிறார்கள். மேலும் வெள்ள பாதிப்பு தொடர்பாக மாவட்ட கலெக்டர்களுடனும், உயர் அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்த உள்ளனர்.

    • பெரம்பலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை போதிய அளவு பெய்யவில்லை.
    • நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென்று மழை பெய்ய தொடங்கியது.

    பெரம்பலூர்:

    தென்கிழக்கு வங்கக்கடல் பகுதி மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக டெல்டா மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

    அதன்படி டெல்டா மாவட்டங்களில் நேற்று விடிய விடிய கனமழை பெய்தது.

    பெரம்பலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. இதனால் பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பவில்லை. சில நீர்நிலைகளுக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட வரவில்லை. இந்த நிலையில் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ஆனால் மழை பெய்யும் என்று எதிர்பார்த்த பொதுமக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

    இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென்று மழை பெய்ய தொடங்கியது. விடிய விடிய மழை விட்டு விட்டு பெய்தது.

    பெரம்பலூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து அம்மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

    • நெல்லையில் நாளை மற்றும் 10-ம் தேதிகளில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
    • ஆற்றில் யாரும் இறங்கவோ, கால்நடைகளை இறக்கவோ வேண்டாம்.

    நெல்லை:

    நெல்லையில் நாளை மற்றும் 10-ம் தேதிகளில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இந்நிலையில், ஆறுகளில் நீர்வரத்து அதிகரிக்கும் என்பதால் கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாகவும், ஆற்றில் யாரும் இறங்கவோ, கால்நடைகளை இறக்கவோ வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

    • தென்சென்னை பகுதிகளில் 50 மி.மீ முதல் 70 மி.மீ மழை பதிவாகி உள்ளது.
    • கடந்த 4 வருடங்களாக ஜனவரி மாதம் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது.

    சென்னை:

    வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களின் உள் பகுதிகளில் தீவிரம் அடைந்து இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    இதன் காரணமாக தென் மாவட்டங்களின் உள் பகுதிகளில் அனேக இடங்களிலும், கடலோர மாவட்டங்களில் சில இடங்களிலும், வட மாவட்டங்களின் உள் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

    இதன் தொடர்ச்சியாக தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் மழை பெய்து வருகிறது.

    தமிழ்நாட்டில் அதிகபட்சமாக சீர்காழியில் 22 செ.மீ. மழை பெய்து உள்ளது. திருவாரூரில் 20 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. மேலும் பல மாவட்டங்களிலும் கனமழை பெய்துள்ளது.

    பலத்த மழை காரணமாக மயிலாடுதுறை, விழுப்புரம், கடலூர், திருவாரூர் ஆகிய 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, அரியலூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை ஆகிய 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

    இதற்கிடையே வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது. மேலும் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கும் இன்று 'ஆரஞ்சு அலர்ட்' விடுக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் சென்னையில் இன்று மிக கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மிக கனமழைக்கு வாய்ப்பு இல்லை என்றும், கனமழை மட்டுமே பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். இதுகுறித்து தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறியதாவது:-

    தமிழகத்தில் மழை மேகங்கள் டெல்டா பகுதியில் இருந்து மாமல்லபுரம் வரை நேற்று மையம் கொண்டிருந்தது. அந்த மழை மேகங்கள் கொஞ்சம் மேலே நோக்கி நகர்ந்து இன்று புதுச்சேரி, விழுப்புரம், மரக்காணம், மாமல்லபுரம் பகுதிகளில் மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாகவே டெல்டா மாவட்டங்களில் சில பகுதிகளில் மிக கனமழை பெய்து உள்ளது. சீர்காழி பகுதியில் 24 செ.மீ, திருவாரூரில் 21 செ.மீ. மழை பெய்துள்ளது.

    டெல்டா மாவட்டங்களில் அதிக மழை கொட்டி தீர்த்து விட்டது. தென்சென்னை பகுதிகளில் 50 மி.மீ முதல் 70 மி.மீ மழை பதிவாகி உள்ளது. இன்று காலையில் மழை மேகங்கள் தென்சென்னை பகுதிகளுக்கு வந்தது. இதனால் இன்று காலையில் தென்சென்னை பகுதிகளில் கனமழை பெய்தது.

    சென்னையில் இன்று 20 செ.மீ முதல் 25 செ.மீ. அளவுக்கு மிக கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த மழை திருவாரூர் மாவட்டத்தில் பெய்து விட்டதால் சென்னையில் கனமழை மட்டுமே பெய்யும். விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் சமாளிக்கக்கூடிய வகையில் மழை விட்டு விட்டு பெய்யும்.

    காற்றழுத்தம், புயல் உருவாகும் போது மழை எங்கெங்கு பெய்யும், எவ்வளவு பெய்யும் என்பதை கணித்து சொல்ல முடியும். ஆனால் இது போன்ற காலங்களில் பெய்யும் மழை சற்று வித்தியாசமாக இருக்கும். எனவே எவ்வளவு மழை பெய்யும் என்பதை கணிப்பது கொஞ்சம் கடினமான விஷயம் தான்.

    கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் வரலாறு காணாத வகையில் பலத்த மழை பெய்தது. அப்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஜனவரி மாதம் தமிழகத்தில் எல்லா இடங்களிலும் பரவலாக 2 செ.மீ. மழை தான் வழக்கமாக பெய்யும். சென்னையில் 2 அல்லது 3 செ.மீ. வரை மழை பெய்யும். ஆனால் தமிழகம் முழுவதும் கடந்த 2 நாட்களில் 6 செ.மீ. முதல் 8 செ.மீ. வரை மழை பதிவாகி உள்ளது.

    கடந்த 4 வருடங்களாக ஜனவரி மாதம் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. 2020-ம் ஆண்டுக்கு முன்பு வரை அப்படி கிடையாது. 3 அல்லது 4 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் ஜனவரி மாதம் மழை பெய்யும். இப்போது 4 ஆண்டுகள் தொடர்ச்சியாக ஜனவரி மாதம் மழை பெய்து வருகிறது. அதாவது கால நிலையில் புதிய மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது.

    வடகிழக்கு பருவமழை தாமதமாக தொடங்கி ஜனவரியில் பொங்கல் பண்டிகை வரை நீடித்து வருகிறது. ஜனவரி மாதம் அதிக அளவில் மழை பெய்வது வரலாறு காணாத விஷயம் தான். சீர்காழி, திருவாரூரில் ஜனவரி மாதம் 10 மடங்கு அதிக மழை பெய்துள்ளது.

    கீழடுக்கு சுழற்சி அரபிக்கடலை நோக்கி நகர்வதால் தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி உள்ள மாவட்டங்களில் நாளை முதல் 2 நாட்களுக்கு மழை பெய்யும். தமிழகத்தில் மழையின் தாக்கம் வருகிற 11-ந்தேதி வரை இருக்க வாய்ப்புள்ளது. வட தமிழக பகுதிகளான சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் இன்று இரவு வரை மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. அதன் பிறகு மழை படிப்படியாக குறைந்து விடும். அதன் பிறகு உள் மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சென்னையில் நேற்று முதல் மிதமான மழையும், அவ்வப்போது கனமழையும் பெய்து வருகிறது. மீனம்பாக்கத்தில் அதிகபட்சமாக 18 செ.மீ. மழை பெய்துள்ளது.

    தமிழகத்தில் இன்று காலையில் 29 மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. விழுப்புரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களிலும், புதுச்சேரியில் ஒரு சில இடங்களிலும் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில் தமிழகத்தில் மேலும் 7 நாட்களுக்கு மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறி இருப்பதாவது:-

    தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தென் மேற்கு அரபிக்கடலில் கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும். ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும். சென்னையில் தொடர்ந்து மிதமான மழை பெய்யும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • விழுப்புரம், கடலூர் மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் கனமழை மற்றும் மிக கனமழை பெய்யக்கூடும்.
    • தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது.

    சென்னை:

    லட்சத்தீவு பகுதிகள் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாலும், காற்று குவிதல் காரணமாகவும் சென்னையில் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

    இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரைக்கண்ணன் கூறியதாவது:-

    வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் வடகிழக்கு திசையில் இருந்து வீசும் காற்றும், தென்கிழக்கு திசையில் இருந்து வீசும் காற்றும் ஒன்றாக சேர்ந்து காற்று குவிதல் ஏற்பட்டு உள்ளது.

    இதன் காரணமாக வட தமிழக பகுதிகளில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை, திருவள்ளூர், மாவட்டங்களுக்கு உட்பட்ட பகுதியில் கன மழையும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் மிக கன மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

    இன்று மாலை மற்றும் இரவிலும், நாளையும் மேற்கண்ட மாவட்டங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் காணப்படுகிறது.

    தமிழகத்தில் அநேக இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதியிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும். விழுப்புரம், கடலூர் மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் கனமழை மற்றும் மிக கனமழை பெய்யக்கூடும்.

    ராணிப்பேட்டை திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், மயிலாடுதுறை, தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும், நெல்லை மாவட்டத்தில் மலையோர பகுதியிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வானிலை மையத்தின் எச்சரிக்கையை அடுத்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று பரவலாக மழை பெய்தது. வேப்பேரி, புரசைவாக்கம், மேடவாக்கம், கிண்டி, அடையாறு உள்ளிட்ட பகுதிகளிலும், தாம்பரம் சுற்றுவட்டார பகுதிகளிலும் இன்று காலையிலும் பலத்த மழை பெய்தது. இதையடுத்து வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.

    • சென்னையில் இன்று மாலையிலும் இரவிலும் சில இடங்களில் கனமழை பெய்வதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.
    • வடசென்னை பகுதியில் சில இடங்களில் லேசான மழை பெய்துள்ளது.

    சென்னை:

    வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டு உள்ளது.

    சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    சென்னையில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் எப்படி உள்ளன? என்பது பற்றி தனியார் வானிலை ஆய்வாளரான ஸ்ரீகாந்திடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-

    சென்னையில் இன்று மாலையிலும் இரவிலும் சில இடங்களில் கனமழை பெய்வதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. எந்தெந்த பகுதிகளில் கனமழை பெய்யும் என்று கூற முடியாது. ஆனால் சென்னையில் சில இடங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே சென்னையில் இன்று காலையில் இருந்தே பல இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அடையாறு, அண்ணாசாலை, வேப்பேரி, கிண்டி, கோயம்பேடு உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது.

    வடசென்னை பகுதியிலும் சில இடங்களில் லேசான மழை பெய்துள்ளது. நாளை (திங்கட்கிழமை) காலையிலும் சென்னையில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    மிச்சாங் புயலுக்கு பிறகு சென்னை மாநகரில் மழை ஓய்ந்திருந்த நிலையில் தற்போது சென்னையில் மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டு சென்னை மாநகருக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் மட்டுமின்றி, கடலோர மாவட்டங்கள் முழுவதிலுமே மிதமானது முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவண்ணாமலை, விழுப்புரம், திருவாரூர், தஞ்சை ஆகிய மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

    • மிச்சாங் புயல் மற்றும் கனமழை காரணமாக சென்னையில் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
    • ஜனவரியில் 2 சனிக்கிழமைகள், பிப்ரவரியில் 2 சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும்.

    சென்னை:

    சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    மிச்சாங் புயல் மற்றும் கனமழை காரணமாக சென்னையில் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. வெள்ள பாதிப்பு காரணமாக அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடுசெய்ய வேலை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    * 4 வாரங்களுக்கு சனிக்கிழமைகளில் அனைத்து பள்ளிகளுக்கும் வேலை நாள்.

    * ஜனவரியில் 2 சனிக்கிழமைகள், பிப்ரவரியில் 2 சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும்.

    * ஜன.6, 20 மற்றும் பிப்.3, 17 ஆகிய தேதிகளில் பள்ளிகள் இயங்கும் என்று கூறப்பட்டுள்ளது.

    • தேனி, திண்டுக்கல் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
    • தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் நிலவும்.

    சென்னை:

    கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்றும், நாளையும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    தேனி, திண்டுக்கல் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் நிலவும்.

    6-ந்தேதி கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசான மழை பெய்யக்கூடும்.

    கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்யும். 7 மற்றும் 8-ந்தேதிகளில் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

    • சேதமடைந்த மீன்பிடி படகுகளுக்கு நிவாரணம் ரூ.15 கோடி வழங்கப்படும்.
    • தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 1,17,471 கால்நடைகள் சேதமடைந்துள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் மற்றும் அதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் கனிமொழி எம்.பி. தலைமையில் நடைபெற்றது.

    தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

    முதலமைச்சர் அறிவித்தபடி, தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதித்த பகுதிகளில் உள்ள 2 லட்சத்து 92 ஆயிரத்து 17 குடும்பங்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணத்தொகை மற்றும் 5 கிலோ அரிசி பை, 1 லட்சத்து 88 ஆயிரத்து 650 குடும்பங்களுக்கு ரூ.1,000 நிவாரணத்தொகை வழங்கப்பட்டுள்ளன.

    வெள்ள பாதிப்பால் மொத்தம் 7,762 வீடுகள் சேதமடைந்துள்ளது. இதில் 4,412 குடிசை வீடுகள் பகுதியாகவும், 2,794 குடிசை வீடுகள் முழுமையாகவும், 472 கான்கிரீட் வீடுகள் பகுதியாகவும், 84 கான்கிரீட் வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளது. வீடுகள் சேதமடைந்த வகைக்கு 3,981 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 82 லட்சத்து 77 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ள பாதிப்பால் 153132.38.5 ஹெக்டேர் வேளாண் பயிர்களும், 32592.02.5 ஹெக்டேர் தோட்டக்கலை பயிர்களும் சேதமடைந்துள்ளது. 688.81.7 ஹெக்டேர் விவசாய நிலங்களில் வெள்ளத்தால் அடித்து வரப்பட்ட மண் படிந்துள்ளது.

    வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிறு வணிகர்களுக்கு கடன் வழங்க கூட்டுறவு வங்கிகள் மூலம் மனுக்கள் பெறப்படுகின்றன. இத்திட்டத்தின் மூலம் சிறு வணிகர்கள் மற்றும் சிறு கடை உரிமையாளர்கள் மற்றும் தெருவோர வியாபாரிகளுக்கு ரூ.10 ஆயிரம் வரை 4 சதவீத வட்டி, ரூ.1 லட்சம் வரை 6 சதவீத வட்டி வீதத்தில் கடன் வழங்கப்படும்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் 10,282 உற்பத்தி நிறுவனங்களும், 30,297 சேவை நிறுவனங்களும், 2,583 வியாபாரம் சார்ந்த நிறுவனங்களும் என மொத்தம் 43,162 நிறுவனங்கள் உதயம் பதிவுச்சான்றிதழ் பெற்றுள்ளன.

    மாவட்டத்தில் மொத்தம் உள்ள 10 வட்டங்களில், 5 வட்டங்களில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பான்மையான உற்பத்தி சார்ந்த நிறுவனங்கள் உதயம் பதிவு மேற்கொண்டு, காப்பீடு செய்துள்ளனர்.

    ஆனால் வியாபாரம் மற்றும் சேவை தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் வங்கிக் கடன் பெற்றிருந்தால் மட்டுமே உத்யம் பதிவு மற்றும் காப்பீடு மேற்கொள்கின்றனர். நிவாரணத் தொகுப்பில் அறிவிக்கப்பட்டுள்ள சிறு வணிகர்களுக்கான ரூ.1 லட்சம் வரையான சிறப்பு கடன் திட்டம் குறித்து வணிகர் சங்கங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும், சிறு வணிகர்களுக்கும் சிறப்பு கடன் முகாம்கள் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரை 12 மனுக்கள் பெறப்பட்டு பரிசீலிக்கப்பட்டு வருகிறது. மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    சேதமடைந்த மீன்பிடி படகுகளுக்கு நிவாரணம் ரூ.15 கோடி வழங்கப்படும். நாட்டுப்படகு மீனவர்களின் உதவியுடன் தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழை வெள்ளத்தில் சிக்கியிருந்த சுமார் 2,000 பொதுமக்கள் மீட்கப்பட்டனர்.

    பகுதி சேதமடைந்த மீன்பிடி விசைப்படகுகள் 347-க்கு ரூ.161.415 லட்சம், முழு சேதமடைந்த 4 நாட்டுப்படகுகளுக்கு ரூ.4 லட்சம், பகுதி சேதமடைந்த 402 நாட்டுப்படகுகளுக்கு ரூ.119.07 லட்சம், சேதமடைந்த மீன்பிடி வலைகள் 3,515-க்கு ரூ.527.25 லட்சம், சேதமடைந்த மீன்பிடி எந்திரங்கள் 3,902-க்கு ரூ.292.65 லட்சம், சேதமடைந்த மீன் பண்ணைகள் உள்ள 24.75 ஹெக்டேர் பரப்புக்கு ரூ.2.475 லட்சம், சேதமடைந்த உள்நாட்டு மீனவர்களின் வலைகள் 850-க்கு ரூ.85 லட்சம் என மொத்தம் மொத்தம் ரூ.1191.86 லட்சம் சேதார மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 1,17,471 கால்நடைகள் சேதமடைந்துள்ளது. இதில் 3,285 பசுக்களும், 1,343 கன்றுகளும், 26,469 ஆடுகளும், 85,632 கோழிகளும், 524 பன்றிகளும், 49 கழுதைகளும், 60 எருமைகளும், 109 காளைகளும் அடங்கும். புதிதாக கால்நடைகள் வாங்குவதற்கு கடன்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இறந்த கால்நடைகளுக்கு நிவாரணமாக பசு, எருமைக்கு 37,500 ரூபாய் வரையிலும், ஆடு, செம்மறி ஆடுகளுக்கு தலா ரூ.4,000 வரையிலும், கோழி ஒன்றுக்கு ரூ.100 வரையிலும் வழங்கப்படுகிறது. இதுவரை 534 இனங்களுக்கு நிவாரணத்தொகை வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள இனங்களுக்கு 2 நாட்களில் நிவாரண தொகை வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    தூத்துக்குடி தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில் இணையதளம் வாயிலாக உப்பளத் தொழில் செய்யும் 2023-ம் ஆண்டு பதிவு பெற்ற மற்றும் புதுப்பித்தல் செய்த உப்பளத் தொழிலாளர்களுக்கு அக்டோபர், நவம்பர், டிசம்பர் 2023-ம் ஆண்டிற்கான மழைக்கால நிவாரணம் வழங்கும் பொருட்டு 5300 பதிவு பெற்ற உப்பள தொழிலாளர்களுக்கு ரூ.5000 வீதம் ரூ.2,65,00,000 தொகை கடந்த மாதம் 22-ந்தேதி ஆர்இசிஎஸ் மூலம் பணப்பட்டுவாடா செய்யப்பட்டது.

    மேலும், அதி கனமழையினால் உயிரிழந்த 44 நபர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

    வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 5 ஊராட்சி ஒன்றியங்களில் தேங்கியிருந்த மழைநீர் வெள்ளமானது பெரும்பான்மை பகுதிகளில் சுமார் 110 மோட்டார் பம்புகள் மூலம் வேகமாக அகற்றப்பட்டது. மீதமுள்ள 36 குடியிருப்பு பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட மோட்டார் பம்புகள் மூலம் வேகமாக அகற்றப்பட்டு வருகிறது.

    தூத்துக்குடி மாநகராட்சி வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து 4,127 டன் திடக்கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது. வெள்ளத்தின்போது 123 கிராம ஊராட்சிகளில் உள்ள 727 குக்கிராமங்களில் மின் இணைப்பு பாதிக்கப்பட்டது.

    தற்போது அனைத்து கிராம ஊராட்சிகளிலும் முழுமையாக மின் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. அதீத கனமழையின் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தின் மாநில நெடுஞ்சாலைகளில் 112 இடங்களில் பலத்த பாதிப்பு ஏற்பட்டது. அவற்றில் 109 பகுதிகள் சரிசெய்யப்பட்டுள்ளது.

    ஊராட்சிகளுக்குட்பட்ட சாலைகளில் 39 இடங்களில் பலத்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவற்றில் 33 சாலைகளின் பகுதிகள் சீர்செய்யப்பட்டுள்ளது.

    பொதுப்பணித்துறை மூலம் சேதமடைந்த 85 குளங்களில் 82 குளங்களும், 80 கால்வாய்களில் 65 கால்வாய்களும், ஆற்றங்கரைகளில் ஏற்பட்ட 2 உடைப்புகளும் சரிசெய்யப்பட்டுள்ளன.

    போக்குவரத்துத் துறை மூலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 302 வழித்தடங்களில் 270 வழித்தடங்கள் சீரமைக்கப்பட்டுள்ளது.

    வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 15 தண்ணீர் விநியோகம் செய்யப்படும் நிலையங்களில் 6 நிலையங்கள் பகுதியாகவும், 7 நிலையங்கள் முழுவதுமாக மீட்டெடுக்கப்பட்டுள்ளது.

    நெடுஞ்சாலைத்துறை மூலம் சேதமடைந்த 42 சாலைகளும், 112 உடைப்புகளும் சீர் செய்யப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    அதனைத் தொடர்ந்து மாவட்ட தொழில் மையம் மூலம் நீட்ஸ் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கனிமொழி எம்.பி வழங்கினார்.

    ×