search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திருப்பூர் மாவட்டத்தில் தொடர் சாரல் மழை: பொதுமக்கள்-வாகன ஓட்டிகள் பாதிப்பு
    X

    திருப்பூர் மாவட்டத்தில் தொடர் சாரல் மழை: பொதுமக்கள்-வாகன ஓட்டிகள் பாதிப்பு

    • காங்கயம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.
    • ஊத்துக்குளி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டு வந்தது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்தது. இந்தநிலையில் நேற்றிரவு பல்வேறு இடங்களில் லேசான தூரலுடன் சாரல் மழை பெய்தது. இன்று காலை மாநகர் மற்றும் மாவட்டத்திற்குட்பட்ட உடுமலை உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது.

    இதனால் இன்று காலை பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் சற்று சிரமம் அடைந்தனர். அவர்கள் குடைபிடித்தபடி தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு சென்றனர். தொடர்ந்து சாரல் மழை பெய்ததால் மாவட்டம் முழுவதும் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது. மேலும் சிதலமடைந்த சாலைகள் சகதிக்காடாக மாறின. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் சற்று சிரமம் அடைந்தனர்.

    காங்கயம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தேங்காய் உடைத்து உலர்த்தும் உலர்களங்கள் 800-க்கும் மேற்பட்ட அளவில் உள்ளன. இப்பகுதியில் இயற்கையில் அமைந்த சீதோஷ்ண நிலை தேங்காய் உடைத்து உலர்த்தும் பணிக்கு ஏதுவாக உள்ளதால் அதிகளவில் களங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தேங்காய் எண்ணெய் உற்பத்தியில் கிரஷிங் பணிக்கு முன்பு வரை அனைத்து பணிகளும் திறந்தவெளியிலேயே நடைபெற்று வருகிறது. தேங்காய் மட்டை உரிப்பது, உடைப்பது, உலர்த்துவது ஆகிய பணிகள் திறந்த வெளியிலேயே நடைபெறுவதால் தொடர்மழை பெய்யும் காலங்களில் இந்தப் பணிகள் முற்றிலுமாக பாதிக்கப்படும்.

    இந்தநிலையில் காங்கயம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்து வந்தது. மேலும் நேற்று காலை முதல் தொடர்ந்து அவ்வப்போது விட்டு விட்டு பெய்த லேசான சாரல் மழையால் தேங்காய் உடைத்து உலர்த்தும் பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டது. ஏற்கனவே உடைக்கப்பட்டு களங்களில் உலர்த்தப்பட்டு வரும் தேங்காய் பருப்புகளை குவியல் குவியலாக களங்களில் குவித்து வைத்து தார்பாய் மூலம் மூடி வைக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் ஊத்துக்குளி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டு வந்தது. மேலும் வெயிலின் தாக்கம் இல்லை. இந்நிலையில் நேற்று மாலை முதல் சாரல் மழை பெய்தது. இந்த சாரல் தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடித்தது. இன்று அதிகாலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காட்சி அளித்தது. பின்னர் காலை 7 மணி முதல் சாரல் மழை பெய்த வண்ணம் இருந்தது. இதனால் சாலையில் கும்மிருட்டு நிலவியதால் 2 மற்றும் 4 சக்கர வாகன ஓட்டிகள் வாகனத்தை இயக்க கடும் சிரமப்பட்டனர். மேலும் வாகனத்தின் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு சென்றனர். இதனால் காலை நேரத்தில் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்த வண்ணம் காணப்பட்டது.

    Next Story
    ×