search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    இடைவிடாது பெய்த கனமழையால் மாணவ-மாணவிகள் பாதிப்பு: மின்கம்பம் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
    X

    திருமலைசாமிபுரத்தில் உள்ள ஒரு மின் கம்பம் தீ பிடித்து எரிந்த காட்சி

    இடைவிடாது பெய்த கனமழையால் மாணவ-மாணவிகள் பாதிப்பு: மின்கம்பம் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

    • காலையில் இடைவிடாது பெய்த மழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
    • சுமார் ½ மணி நேரத்திற்கு மேல் தீப்பொறியுடன் மின் வயர்கள் எரிந்தது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்ட த்தில் கடந்த சில நாட்களாக மழையின் தீவிரம் குறைந்து காணப்பட்ட நிலையில் ஒருசில இடங்களில் மட்டும் அவ்வப்போது சாரல்மழை பெய்து வந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை 5 மணியளவில் லேசான சாரலுடன் தொடங்கிய மழை பின்னர் கனமழையாக அதிகரித்தது.

    சில மணிநேரம் மட்டும் இடைவெளி விட்டு பின்னர் கொட்டித் தீர்த்தது. இதனால் நகரில் உள்ள பெரும்பாலான சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. பல்வேறு இடங்களில் மழைநீருடன் சாக்கடை நீரும் கலந்து ஓடியது. ஓரளவுக்கு பெய்த பிறகு நின்றுவிடும் என்று எதிர்பார்த்த நிலையில் விட்டுவிட்டு பலத்த மழையாக பெய்தபடி இருந்தது.

    காலையில் இடைவிடாது பெய்த மழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விடுமுறை விடாததால் ஏமாற்றத்துடன் மாணவர்கள் நனைந்தபடியே பள்ளிக்கு சென்றனர். ஒருசில தனியார் பள்ளிகளில் மட்டும் விடுமுறை விடப்பட்ட நிலையில் பெரும்பாலான பள்ளிகளில் எந்த அறிவிப்பும் வராததால் மாணவ-மாணவிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

    இதேபோல காலையில் வழக்கமாக பணிக்கு செல்லும் தொழிலாளர்களும் கனமழையால் மிகுந்த சிரமம் அடைந்தனர். நகரின் தாழ்வான பகுதியான ஒத்தக்கண் பாலம் பகுதியில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கி நின்றது. இதனால் அந்த சாலையை கடக்க முடியாமல் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர்.

    இதே போல் ஒய்.எம்.ஆர் பட்டியில் உள்ள உப்புக்கேணி விநாயகர் கோவில் வளாகத்துக்குள்ளும் மழை நீர் புகுந்ததால் பொதுமக்களே தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். திண்டுக்கல்-கரூர் சாலையில் புதிய ரெயில்வே சுரங்கப்பாதையில் மழை நீர் அதிக அளவு தேங்கியதால் பணிகள் நிறுத்தப்பட்டது.

    திண்டுக்கல் மட்டுமின்றி பழனி, கொடைக்கானல், வேடசந்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் காலைமுதல் இடைவிடாது பெய்த மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    திண்டுக்கல் மாநகராட்சி 31-வது வார்டுக்கு உட்பட்ட திருமலைசாமிபுரம் 4வது தெருவில் உள்ள மின் கம்பத்தில் திடீரென தீப்பொறி வந்தது. சிறிது நேரத்தில் மின் கம்பம் எரிய தொடங்கியது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் அலறினர். சுமார் ½ மணி நேரத்திற்கு மேல் தீப்பொறியுடன் மின் வயர்கள் எரிந்தது. இதனால் அருகில் இருந்த 6 வீடுகளுக்கு தீப்பொறி பரவி வயர்கள் முற்றிலும் எரிந்து நாசமானது. பின்னர் அப்பகுதியில் மின்சாரம் துண்டிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து மின் வாரியத்திற்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த மின் வாரிய ஊழியர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×