search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Narasimha"

    தமிழகத்தில் 8 இடங்களில் காட்சி தந்த நரசிம்மர் கோவில்கள் உள்ளன. அந்த கோவில்களின் வரலாற்றை விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    இரண்யனுக்கு அஞ்சி வேறு பகுதிகளில் ஒளிந்து வாழ்ந்த முனிவர்கள், இரண்ய வதத்திற்குப்பின் பகவானிடம் நரசிம்மத் திருக்கோலத்தைத் தங்களுக்குக் காட்டியருள வேண்டும் என்று வேண்டினர். அதற்கிசைந்த பெருமாள் அவ்வண்ணமே முனிவர்களுக்குக் காட்சி தந்தார். அவ்வாறு காட்சி தந்த தலங்கள் தமிழகத்தில் எட்டு இடங்களில் உள்ளன.

    இவற்றில் பூவரசன் குப்பம் நடுவில் இருக்க, இதைச் சுற்றி சோளிங்கர் நரசிம்மர், நாமக்கல் நரசிம்மர், அந்திலி நரசிம்மர், சிங்கப் பெருமாள் கோவில் (தென் அகோபிலம்), பரிக்கல் நரசிம்மர், சிங்கிரி கோவில் லட்சுமி நரசிம்மர், சித்தனைவாடி நரசிம்மர் ஆகிய தலங்கள் அமைந்துள்ளன.

    பூவரசன்குப்பம், பரிக்கல், சிங்கிரி கோவில் ஆகிய மூன்று தலங்களும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்துள்ளன. இந்த 3 தலங்களையும் ஒரே நாளில் வழிபட்டால் நல்லது என்பார்கள். இவையன்றி இன்னும் பல தலங்களில் நரசிம்மர் கோவில் கொண்டுள்ளார். நரசிம்ம ஜெயந்தி நாளில், தன் பக்தனுக்காக நொடிப் பொழுதில் தோன்றி காத்து ரட்சித்த அந்த உலக நாயகனை வணங்கிப் பேறு பெறுவோம்.

    பூவரசங்குப்பம் :

    இரண்யகசிபுவை வதம் செய்த பிறகும், கோபம் தணியாத நரசிம்மர், காடுகளிலும், மலைகளிலும் சுற்றித் திரிந்தார். அப்போது இரண்யகசிபுக்கு பயந்து காடுகளில் ஒளிந்தபடி தன்னை வழிபட்ட முனிவர்களுக்கு அவர் காட்சியளித்தார். அந்தத் தலமே இதுவாகும். தட்சிண அகோபிலம் என்ற புராணப்பெயரைக் கொண்டது.
    தூணிலிருந்து நரசிம்மர் வெளிப்பட்ட வரலாற்றின் அடிப்படையில், ஒரு தூணையே நரசிம்மராகக் கருதி இங்கு வழிபாடு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அதன்பின்னர் பல்லவ மன்னர்கள் காலத்தில் ஆலயம் எழுப்பி, சிலையும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. மூலவர் லட்சுமிநரசிம்மர், உற்சவர் பிரகலாதவரதன், தாயார் அமிர்தவல்லி.

    பொதுவாக நரசிம்மருக்கான ஆலயங்களில் அவர் உருவம் பெரியதாகவும், தாயாரின் உருவம் சிறியதாகவும் அமைந்திருக்கும். ஆனால் இந்த ஆலயத்தில், ஆணுக்குப் பெண் சரிசமம் என்பதை உணர்த்தும் விதமாக பெருமாளின் உருவத்திற்கு தகுந்தாற்போல, தாயாரின் திருஉருவமும் அமைக்கப்பட்டிருக்கிறது.

    பண்ருட்டியிலிருந்து விழுப்புரம் செல்லும் சாலையில் சின்னக்கள்ளிப்பட்டு என்ற ஊரிலிருந்து 3 கிலோமீட்டர் தூரத்திலும், புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் செல்லும் சாலையில் சிறுவந்தாடு என்ற ஊரிலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த ஆலயம் இருக்கிறது. இங்கு ஆண்டுதோறும் வைகாசி மாதம் சுவாதி தினத்தில் நரசிம்மர் ஜெயந்தி தின விழா கொண்டாடப்படுவது வழக்கம்.

    கோவில் அலைபேசி எண்: 95851 78444.

    சிங்கிரிக்குடி :

    பிரகலாதன் வேண்டு கோளுக்கிணங்கி, 16 கரங் களுடன் உக்கிரமூர்த்தியாக காட்சியளித்த தலம் இது. ராஜராஜ சோழன் மற்றும் விஜயநகர மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்ட இவ்வாலயம், 5 நிலை ராஜ கோபுரத்துடன் மேற்கு நோக்கி உள்ளது.

    இரண்யகசிபுவை நரசிம்மர் மேற்கு நோக்கி நின்று வதம் செய்ததால், இந்தக் கோவிலும் மேற்கு நோக்கிய நிலையில் உள்ளது. நரசிம்மரின் இடதுபுறம் இரண்ய கசிபுவின் மனைவி நீலாவதி, வலதுபுறம் தரிசனம் வேண்டி 3 அசுரர்கள், பிரகலாதன், சுக்ரன், வசிஷ்டர் ஆகியோர் உள்ளனர். கருவறையின் உள்ளே வடக்கு நோக்கிய நிலையில் சிறுவடிவில் யோகநரசிம்மர், பால நரசிம்மர் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். ஒரு கருவறையில் மூன்று நரசிம்மர்கள் அருள்பாலிப்பது அரிதான காட்சியாகும்.

    கடலூர்-புதுச்சேரி சாலையில் தவளகுப்பத்தில் இருந்து அபிஷேகபாக்கம் செல்லும் சாலையில் 2 கிலோமீட்டர் தொலைவில் இந்தக் கோவில் இருக்கிறது.
    இக்கோவிலில் ஆண்டுதோறும் பிரம்ம உற்சவ விழா 10 நாட்கள் நடை பெறுவது வழக்கம். வருகிற 17--ந் தேதி (வெள்ளிக்கிழமை) நரசிம்மர் ஜெயந்தி மற்றும் விழாவின் சிகர நிகழ்ச்சியான தேர் திருவிழா நடை பெற உள்ளது.

    இதனையட்டி காலை 4 மணி அளவில் விஸ்வ ரூப தரிசனமும், 5 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஊர்வலமாக கொண்டு சென்று தேரில் அமர்த்தும் நிகழ்ச்சியும் நடக்கிறது. 6 மணிக்கு பக்தி கோஷத்துடன் தேரை பொதுமக்கள் வடம்பிடித்து இழுத்து முக்கிய வீதி வழியாக கொண்டு செல்கிறார்கள். பின்னர் தேர் நிலையை அடைகிறது. மாலை வரை சாமி தேரில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

    6 மணிக்கு நரசிம்மருக்கு மீண்டும் சிறப்பு அலங் காரம் செய்யப்பட்டு கோவிலுக்கு கொண்டு செல்கிறார்கள். இரவு 9 மணிக்கு நரசிம்மருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடை பெற உள்ளது. அதன் பின்னர் கொடிஇறக்கம் செய்யப்படுகிறது.

    கோவில் தொலைபேசி எண்: 04142-224328.

    பரிக்கல் :

    இதுவும் பிரகலாதனுக்காக நரசிம்மர் காட்சி கொடுத்த தலம் தான். நரசிம்மர் மீது மாறாத பக்திக்கொண்ட விஜயராஜன் என்னும் மன்னன் இங்கு ஆலயம் எழுப்பியுள்ளான். மேலும் ஆலயத்தில் தன் குரு வாமதேவ மகரிஷி உதவியுடன் மூன்று நாட்கள் தொடர் வேள்வி நடத்த ஏற்பாடு செய்தான்.

    யாகத்தில் கலந்து கொள்ளுமாறு பல்வேறு தேச அரசர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தான். இந்த நேரத்தில் பரிகாலன் என்னும் அசுரன், வேள்வியை தடுத்து நிறுத்த அங்கு வந்தான். அசுரன் வருவதை அறிந்த குலகுரு, மன்னனை அருகிலுள்ள புதரில் ஒளிந்துக் கொள்ளுமாறு கூறினார். இருப்பினும் அசுரன் கோடரியால் மன்னனின் தலையை தாக்கினான். இதையடுத்து நரசிம்மர், ‘உக்கிர நரசிம்மராக’ தோன்றி, பரிகாலனை அழித்து மன்னனுக்கு காட்சியளித்தார்.

    சென்னை--திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உளுந்தூர்பேட்டைக்கு வடக்கில் இருந்து இந்த ஆலயத்தை அடையலாம். விழுப்புரம் மாவட்ட எல்லைக்குள் இருக்கிறது இந்தக் கோவில்.

    இது மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவிலில் வருகிற 17-ந் தேதி நரசிம்மர் ஜெயந்தி விழா நடைபெறுகிறது. இதையட்டி காலை 6 மணிக்கு கோவில் நடைதிறக்கப்படுகிறது. 9 மணிக்கு சாமிக்கு பஞ்சாமிர்தம், பால், தயிர், இளநீர், மஞ்சள், சந்தனம் போன்றவைகளால் சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.
    10 மணிக்கு சாமிக்கு வைரகிரீடம் சூட்டப்படுகிறது. அதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடைபெறுகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்கின்றனர்.

    மதியம் 1 மணிக்கு நடை சாற்றப்படும். மாலை 4 மணிக்கு மீண்டும் கோவில்நடை திறக்கப்படுகிறது. இரவு 8 மணிக்கு சாமி சிம்ம வாகனத்தில் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. 10 மணிக்கு வீதிஉலா நிறைவு பெறுகிறது.

    பரிக்கல் லட்சுமி நரசிம்மர் கோவில் அலைபேசி எண்: 96776 42002.

    சோளிங்கர் :

    சப்த ரிஷிகளின் வேண்டுகோளின்படி, நரசிம்மர், யோக நிலையில் காட்சியளித்த தலம் இது. மூலவர் யோக நரசிம்மர், உற்சவர் பக்தவச்சலம் சுதாவல்லி, தாயார் அமிர்தவல்லி.

    விசுவாமித்திரர் இங்குள்ள நரசிம்மரை வழிபட்டு பிரம்ம ரிஷி பட்டம் பெற்றார். கடிகாசலம் எனப்படும், 500 அடி உயரமும், 1305 படிக்கட்டுகளும் கொண்ட பெரிய மலையில் மூலவர் அருள்பாலிக்கிறார். உற்சவருக்கு மலையிலிருந்து நான்கு கிலோமீட்டர் தள்ளி ஊருக்குள் தனிக்கோவில் உள்ளது. தமிழ்நாட்டிலேயே மூலவருக்கு தனியாகவும், உற்சவருக்கு தனியாகவும் கோவில் இருப்பது இங்கு மட்டுமே. பெரிய மலைக்கு அருகில் 406 படிக்கற்களைக் கொண்ட சிறிய மலையில் யோக ஆஞ்சநேயர் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

    வேலூர் மாவட்டம் அரக்கோணம்-சோளிங்கர் சாலையில் இந்த மலைக்கோவில் இருக்கிறது.

    சிங்கப்பெருமாள் கோவில் :

    ஜாபாலி என்னும் மகரிஷி, நரசிம்மரை வேண்டி தவம் செய்து, அவரது தரிசனம் பெற்ற தலம் இது. இவர் ‘பாடலாத்ரி நரசிம்மர்’ என்று அழைக்கப்படுகிறார். (பாடலம் என்றால் சிவப்பு, அத்ரி என்றால் மலை) என்று பொருள். சிவந்த கண்களுடன் மலைமீது அமர்ந்திருப்பதால், இந்த பெயர் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    பொதுவாக நரசிம்மருக்கான ஆலயங்களில், அவர் இடதுகாலை மடித்துவைத்தும், வலதுகாலை தொங்கவிட்ட நிலையிலும் காட்சி தருவார். ஆனால் இந்த ஆலயத்தில் வலதுகாலை மடித்துவைத்தும், இடதுகாலை தொங்கவிட்ட நிலையில் மிகப்பெரிய மூர்த்தியாக காட்சியளிக்கிறார்.

    காஞ்சீபுரம் மாவட்ட எல்லைக்குள், தாம்பரம்-செங்கல்பட்டு இடையில் சிங்கப்பெருமாள் கோவில் அமைந்துள்ளது.

    நாமக்கல் :

    திருமகள், தன் கணவரான மகாவிஷ்ணு எடுத்த நரசிம்மர் அவதாரத்தை காண வேண்டி, தவம் செய்து தரிசனம் பெற்ற தலம் இது. நரசிம்மரை காண வேண்டி இத்தலத்தில் திருமகள் தவம் செய்து கொண்டிருந்தார். அப்போது ஆஞ்சநேயர், கண்டகி நதியில் இருந்து சாளக்கிராம கல்லை (திருமாலின் அனுக்கிரகம் பெற்றது) எடுத்துக்கொண்டு வான்வழியே பறந்து சென்றார். இந்த தலத்தின் அருகே வந்தபோது, இங்குள்ள தீர்த்தத்தில் நீராட விரும்பினார் அனுமன்.

    கையிலிருந்த சாளக்கிராமத்தைக் கீழே வைக்கமுடியாத நிலையில், என்ன செய்வதென யோசித்தவருக்கு தீர்த்தக் கரையில் தவம் செய்த திருமகள் தெரிந்தார். மகிழ்ச்சியுடன் அவரிடம் அந்த சாளக்கிராமத்தைத் தந்து விட்டு நீராடச் சென்றார். அதை கையில் வாங்கிய திருமகள் குறித்த நேரத்திற்குள் வராவிட்டால் கீழே வைத்துவிடுவேன் என்று கூறினார்.

    அதுபோலவே அனுமன் வராதிருக்க திருமகள் அக்கல்லை கீழே வைத்தார். அது பெரியதாக விசுவரூபம் பெற்று பெருமலையானது. அதிலிருந்து நரசிம்மர் தோன்றி திருமகளுக்கும் ஆஞ்சநேயருக்கும் காட்சியளித்தார். சாளக்கிராமத்தைக் கொண்டுவந்த ஆஞ்சநேயர் 18 அடி உயரத்தில், கையில் ஜெபமாலை, இடுப்பில் கத்தியுடன் நரசிம்மர் ஆலயத்துக்கு எதிரில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். நாமக்கல்லில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.

    கோவில் அர்ச்சகர் ராஜா பட்டாச் சாரியார் கூறியதாவது:-

    நரசிம்ம ஜெயந்தி உற்சவத்தையட்டி நாமக்கல் நரசிம்மர் கோவி லில் 17-ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மூலவர் தரிசனம் கிடையாது.
    உற்சவ மூர்த்திக்கு அர்ச்சனை, அபிஷேகங்கள் செய்யப்படும். மூலஸ்தான நரசிம்மமூர்த்திக்கு சுமார் 9 மணி அளவில் ஆரம் பித்து மாலை 5.30 மணி வரை நடக்கும் தைலகாப்பு நிகழ்ச்சியில் நல்லெண்ணையால் சுத்தம் செய்து, வேறு புதிய வஸ்திரங்கள் சாத்துப்படி செய்து எம்பெருமானிடத்தில் நித்யபடி உள்ள கவசங்களை தேவஸ்தான பொற்கொல்லர் மூலம் சுத்தம் செய்து, அதை மறுபடியும் சாமியிடம் சமர்ப்பிக்கப்படும். பிரதோஷ நேரமான மாலை 6 மணி அளவில் விஷேசமான தீபாராதனை நடைபெறும்.

    ஜெயந்தி தினத்தில் மாலை 6 மணிக்கு பிறகு சாமியை தரிசிப்பவர்களுக்கு பொருளாதாரத்தினுடைய வளர்ச்சி, தோஷங்கள் நிவர்த்தியாகும். உத்யோகம், வாழ்வியலில் நம்முடைய நேர்மையான கோரிக்கைகளை சாமி அனு கிரகம் செய்து கொடுப்பார்.

    சனி, ராகு, கேது, செவ்வாய் போன்ற கிரக உபாதைகள் தங்களிடம் குறையும். கிரகங்களால் ஏற்படக் கூடிய தோஷங்கள் குறையும், லட்சுமி கடாட்சம் கிடைக்கும். எந்தவித பிரார்த்தனைகளும் உடனே அனுகிரகமாக கூடிய தினம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கோவில் தொடர்பு எண்:04286-233999

    சிந்தலவாடி :

    ஒரு பக்தனின் கனவில் தோன்றிய நரசிம்மர், தனக்கு ஒரு ஆலயம் எழுப்புமாறு கூறி, அந்த பக்தனுக்கு காட்சியளித்த தலம் இது. ஹரியாச்சார் என்பவர் கரூர் மாவட்டம் திருக்காம்புலியூரில் வசித்துவந்தார். அவர் கனவில் ஒருநாள் நரசிம்மர் தோன்றி, தான் கருப்பத்தூர் காவிரிக்கரையில் ஒரு கல்லாக கவிழ்ந்து கிடப்பதாகவும், தன்மீது ஒரு சலவையாளர் அனுதினமும் துணி துவைத்துக் கொண்டிருப்பதாகவும் கூறினார்.

    இதுகேட்டு வேதனையுற்ற ஹரியாச்சார் கருப்பத்தூர் சென்றார். இதேபோல் சலவையாளரின் கனவிலும் தோன்றி சொல்லியிருக்கவே, இருவரும் சேர்ந்து நரசிம்மரை கண்டுபிடித்து, அதை தூக்கிக் கொண்டு திருக்காம்புலியூர் புறப்பட்டனர். பாரம் அதிகமாக இருக்கவே திருக்காம்புலியூருக்கும், கருப்பத்தூருக்கும் இடைபட்ட சிந்தலவாடியில் இருந்த வெங்கட்ரமண ஆலயத்தில் இறக்கி வைத்தனர். பகவான் அங்கேயே பிரதிஷ்டை ஆனதுடன், ஹரியாச்சாருக்கும், சலவையாளருக்கும் காட்சித் தந்தார்.

    திருச்சி-கரூர் நெடுஞ்சாலையில் காட்டுப்புத்தூர் அருகில் அமைந்துள்ளது இந்த ஆலயம்.

    அந்திலி :

    நரசிம்மர், தன் வாகனமான கருடனுக்கு காட்சி தந்த திருத்தலம் இது. பிரகலாதனை காப்பாற்ற வேண்டிய அவசரத்தில் தன்னிடம் சொல்லாமல் பகவான் புறப்பட்டுச் சென்றதை அறிந்த கருடன், மிகுந்த வேதனை அடைந்தார். பகவானைத் தேடி பூலோகம் வந்து நிம்மதியின்றி தவித்தார்.
    எங்குச் சென்றாலும் தன்மீது ஏறிச்செல்லும் பகவான், தன்னை மறந்துவிட்டுப் போனதை எண்ணி வருந்தியவர் இந்த தலம் இருக்கும் இடத்திற்கு வந்து தவம் இருந்தார். இதனால் அவர் உடல் இளைத்தது. அவரது உடலிலிருந்து வெளிப்பட்ட வெப்பம், கயிலாயம் வரை சென்று தாக்கியது. இதையடுத்து தேவர்கள், நாராயணரிடம் சென்று கருடனை காக்க வேண்டி பிரார்த்தித்தனர். கருடனிடம் முன்பாக சென்றார் நாராயணர். அப்போது தனக்கும் நரசிம்மராக காட்சியளிக்க வேண்டும் என்று கருடன் வேண்ட, அவ்வாறே காட்சியளித்தார்.

    திருக்கோவிலூரில் இருந்து முகையூர் வழியாக விழுப்புரம் செல்லும் சாலையில் அரகண்ட நல்லூரை அடுத் திருக்கிறது அந்திலிதிருத்தலம்.
    தெலுங்கானா மாநிலத்தின் புகழ்பெற்ற திருத்தலம், யாத ரிஷிக்கு பஞ்ச நரசிம்மராக இறைவன் காட்சி தந்த இடம் என பல்வேறு பெருமைகள் கொண்டதாக திகழ்கிறது, யாதகிரி பஞ்ச நரசிம்மர் கோவில்.
    தெலுங்கானா மாநிலத்தின் புகழ்பெற்ற திருத்தலம், ஸ்கந்த புராணம் புகழும் கோவில், யாத ரிஷிக்கு பஞ்ச நரசிம்மராக இறைவன் காட்சி தந்த இடம், தீராத பிணி தீர்க்கும் வைத்திய நரசிம்மர் வாழும் கோவில் என பல்வேறு பெருமைகள் கொண்டதாக திகழ்கிறது, யாதகிரி பஞ்ச நரசிம்மர் கோவில்.

    மகாவிஷ்ணுவின் தசாவதாரங்களில் நான்காவது அவதாரமாகத் விளங்குவது, நரசிம்மர் அவதாரம். மனித உடலும், சிங்க முகமும் கொண்ட தோற்றம். தன் பக்தனான பிரகலாதனை காப்பாற்றுவதற்காக, அவனது தந்தை இரணியனை வதம் செய்ய இறைவன் எடுத்த அவதாரம் இது. அந்த வகையில் காத்தருளும் தெய்வமாக, யாதகிரியில் இருந்து அருள்கிறார் பஞ்ச நரசிம்மர்.

    புராண வரலாறு :

    ரிஷியஸ்ருங்கா- சாந்தா தேவியின் புதல்வராக பிறந்தவர் யாத ரிஷி. திரேதாயுகத்தில் வாழ்ந்த இவர், அனுமனின் அருளைப் பெற்றவர். நரசிம்மர் மீது தீராத பக்தி கொண்டவர். அவரைக் காணும் ஆவலில் கடுமையாக தவம் இயற்றி வந்தார். அவரது தவத்தால் மகிழ்ந்த நரசிம்மர், அனுமன் மூலமாக தன்னுடைய இருப்பிடத்தைக் காட்டி, அங்கே ஐந்து வடிவங்களில் யாத ரிஷிக்கு அருள்காட்சி தந்தருளினார்.

    முதலில் ஜ்வாலா நரசிம்மர், யோகானந்த நரசிம்மர், உக்கிர நரசிம்மர், கண்ட பேருண்ட நரசிம்மர் என நான்கு வடிவங்களைக் காட்டினார். ஆனால் யாத ரிஷியோ, “தாயார் லட்சுமியோடு காட்சியருள வேண்டும்” என வேண்டி நின்றார். தொடர்ந்து உடனடியாக லட்சுமியோடு, லட்சுமி நரசிம்மராக தோன்றி அருளினார். எனவே இத்தலம் பஞ்ச நரசிம்மர் தலமாக போற்றப் படுகிறது.

    நரசிம்மர் காட்சி தந்த ஆதிக் கோவில், தற்போதைய யாதகிரி மலை அடிவாரத்தில் இருந்து ஐந்து கிலோமீட்டா் தொலைவில் உள்ளது. யாத ரிஷி முத்தியடைந்த பின்பு இப்பகுதிவாழ் மக்கள், அந்த ஆலயத்தில் முறையாக வழிபாடு செய்யவில்லை. இதனால் அங்கிருந்து அகன்று, தற்போதைய மலை மீதுள்ள குகைக்குள் இறைவன் குடிபுகுந்தார்.

    இந்த நிலையில் இறைவனை வழிபட விரும்பும் பக்தர்கள், நரசிம்மரைக் காணாமல் தவித்தனர். அப்போது ஒரு பெண்ணின் கனவில் தோன்றிய நரசிம்மர், தன் இருப்பிடத்தைக் கூறினார். மகிழ்ச்சியடைந்த மக்கள் மலை மீது ஏறி, குகைக்குள் இருந்த நரசிம்மரைக் கண்டு மகிழ்ந்து வழிபடத் தொடங்கினர் என தலவரலாறு கூறப்படுகிறது.

    கி.பி.1148-ல் நாராயணசுவாமி கோவில் கல்வெட்டு ஒன்றில், திரிபுவன மல்லுடு மன்னர், தான் போரில் வென்றோருக்காக போன்கிரில் கோட்டை கட்டியதாகவும், அங்கிருந்து யாதகிரி வந்து நரசிம்மரைப் பலமுறை வழிபட்டு தரிசித்துச் சென்றதாகவும் வரலாற்றில் பதிவாகியுள்ளது. இதேபோல, விஜயநகர மன்னன் கிருஷ்ண தேவாராயர், யாதகிரி லட்சுமி நரசிம்மரை வழிபட்டு, மகப்பேறு கிடைத்ததாகக் கூறப்படுகிறது.

    ஆலய அமைப்பு :

    யாதகிரி நகரின் எல்லையில் எழிலான சிறிய குன்றில் நரசிம்மர் ஆலயம் அமைந்துள்ளது. சுற்றுச்சுவர், கோபுரங்கள், கருவறை என அனைத்தும் மன்னர்கால சிறிய வேலைப்பாட்டோடு கருங்கல் திருப்பணியாக மாநில அரசால் உருவாக்கப்பட்டு வருகிறது. இக்கோவில் பழங்கோவிலுக்குரிய அம்சத்தோடு அமைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

    எனவே, நரசிம்மர் அமர்ந்த குகைக்குள், பஞ்ச நரசிம்மர்கள் காட்சி தருகின்றனர். பிரதானமாக லட்சுமி நரசிம்மர் சாந்த சொரூபியாக, லட்சுமியோடு அருள்காட்சி வழங்குகிறார். மேல் இரு கரங்கள் சக்கரம், சங்கு தாங்கியும், கீழ் இரண்டு கரங்கள் அபய, வரத முத்திரையோடும் காணப்படுகிறது.

    தீராத நோயால் அவதிப்படுபவர்கள், இந்த ஆலயத்திற்கு வந்து நம்பிக்கையோடு 40 அல்லது 48 நாட்கள் தினமும் ஆலயத்தை வலம் வந்து வணங்க வேண்டும். அதன் மூலம் அவர்களின் நோய் பூரண குணம் பெறும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. இதனால் இவரை ‘வைத்திய நரசிம்மர்’ என்றும் அன்போடு அழைக்கின்றனர். தீயசக்திகள், கிரக தோஷங்கள் உள்ளவர்களுக்கும் கண்கண்ட தெய்வமாக இத்தல லட்சுமி நரசிம்மர் விளங்குகிறார்.

    அது மட்டுமின்றி வாகனம் வாங்குவோர், புது வீடு வாங்கியவர்கள், முதல் குழந்தை பெற்றவர்கள் வந்து செல்லும் திருக்கோவிலாகவும் இது விளங்குகிறது. நித்திய கல்யாண நரசிம்மர் என்பதும் இவரின் கூடுதல் சிறப்பு.

    குடவரைக் கோவிலான யாதகிரி லட்சுமி நரசிம்மர் ஆலயத்தில், கருவறை உச்சியில் உள்ள விமானத்தில், தங்கத்தால் ஆன சுதர்சன சக்கரம் அமைக்கப்பட்டுள்ளது. 3 அடி உயரம், 3 அடி நீளம் கொண்ட இந்த சக்கரம் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது.

    இந்த ஆலயத்தில் நாள்தோறும் திருமண வைபவமும் நடைபெறுகிறது. இக்கோவில் பிரம்மோற்சவம் தெலுங்கு பல்குண மாதத்தில் (பிப்ரவரி- மார்ச்) பதினோரு நாட்கள் வெகு விமரிசையாக நடக்கிறது. அதே போல நரசிம்மர் ஜெயந்தியும் சிறப்பான முறையில் கொண்டாடப்படுகிறது. இது தவிர ராமானுஜர், நம்மாழ்வார், மணவாள மாமுனிகள், திருமங்கையாழ்வார், திருப்பாணாழ்வார், ஆண்டாள் திருநட்சத்திர விழாக்கள், மார்கழி, ராமநவமி, மகா சிவராத்திரி, தேவி நவராத்திரி, அனுமன் ஜெயந்தி விழாக்களும் நல்ல முறையில் நடைபெற்று வருகின்றன.

    தினந்தோறும் திருக்கல்யாணம் நடைபெற்று, நித்திய கல்யாண நரசிம்மராக விளங்கும் இந்த ஆலயம், காலை 4 மணி முதல் மதியம் 3 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    இவ்வாலயம் தெலுங்கானா மாநில அரசால் நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது. ஸ்ரீலட்சுமி நரசிம்மசுவாமி வாரி தேவஸ்தானம் இந்த ஆலயத்தை நேரடியாக கவனித்து வருகிறது.

    அமைவிடம் :

    தெலுங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டத்தில், ஐதராபாத் - வாரங்கல் வழித் தடத்தில் 6 கிலோமீட்டர் தொலைவில் யாதகிரி திருத்தலம் இருக்கிறது. ஐதராபாத்தில் இருந்து 60 கி.மீ, வாரங்கல்லில் இருந்து 90 கி.மீ தொலைவில் யாதகிரி உள்ளது. போன்கிர் என்ற ரெயில் நிலையத்தில் இருந்து 13 கி.மீ தொலைவிலும் இந்த திருத்தலத்தை சென்றடையலாம்.
    சுவாதி நட்சத்திரம் வாயுவின் நட்சத்திரம், வாயுபகவான் எவ்வளவு வேகத்தில் வருகிறாரோ அது போல் நரசிம்மரை சுவாதி நட்சத்திரத்தில் வழிபாடு செய்தால் வாயு வேகத்தில் வந்து நரசிம்மர் நம்மை பாதுகாத்து அருள் செய்வார்.
    சுவாதி நட்சத்திரம் வாயுவின் நட்சத்திரம், வாயுபகவான் எவ்வளவு வேகத்தில் வருகிறாரோ அது போல் நரசிம்மரை சுவாதி நட்சத்திரத்தில் வழிபாடு செய்தால் வாயு வேகத்தில் வந்து நரசிம்மர் நம்மை பாதுகாத்து அருள் செய்வார். சுவாதி நட்சத்திரத்தில் நரசிம்மரை தொடர்ந்து வழிபாடு செய்தால் ருண விமோசனம் என்று கூறக்கூடிய கடன் தொல்லைகள் நீங்கி செல்வச் செழிப்புகள் ஏற்படும், வியாபார அபிவிருத்தி உண்டாகும். நரசிம்மர் அவதாரம் எடுத்த காலம் மாலைப்பொழுது என்பதால் மாலை வேளையில் நரசிம்மரை வழிபாடு செய்தால் விசேஷமான பலன்கள் கிட்டும்.

    சுவாதி நட்சத்திரத்தன்று நடைபெறும் மூலிகை ஹோமம் வழிபாடு மிகுந்த பலன்களைத் தரும். இந்த ஹோமத்தில் என்னென்ன பொருட்களை சேர்த்தால், என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்ற விவரம் வருமாறு:-

    அருகம்புல் - காரியத்தடை நீங்குதல்
    தேன் கலந்த மல்லிகை புஷ்பம் -
    கல்யாணத் தடை நீங்குதல்
    துளசி பத்ரம் - சர்வபாப நிவர்த்தி

    எள் - பிதுர்தோஷம் நீக்கும்.
    அரசு சமித்து - சந்தான பாக்யம்
    பச்சைக் கற்பூரம் - கல்வியல் முன்னேற்றம்
    சிந்தில் - ஆயுள் அபிவிருத்தி

    செந்தாமரை -  கடன் தொல்லை நீங்குதல்
    வில்வ பத்ரம் - மகாலட்சுமி கடாஷம்
    வெண் கடுகு - எதிரிகள் தொல்லை நீங்குதல்
    நாயுருவி - நவக்கிரக தோஷ நிவர்த்தி

    கருங்காலி - பில்லி, சூன்யம் நிவர்த்தி
    குங்குமப்பூ - ரத்தம் சம்பந்தப்பட்ட வியாதி நிவர்த்தி
    வெற்றிவேர், விளாமுச்சுவேர் - சகலகாரிய அனுகூலம்
    விஷ்ணுக்ரந்தி - சர்வதோஷ நிவாரணம்.

    கண்ணப்ப நாயனார் என்ற வேடனுடைய பக்தியை சிவபெருமான் உலகிற்கு வெளிப்படுத்திய போன்று நரசிம்மரும் ஒரு வேடனுடைய பக்தியை வெளிப்படுத்தி உள்ளார்.
    கண்ணப்ப நாயனார் என்ற வேடனுடைய பக்தியை சிவபெருமான் உலகிற்கு வெளிப்படுத்திய போன்று நரசிம்மரும் ஒரு வேடனுடைய பக்தியை வெளிப்படுத்தி உள்ளார். ஆதிசங்கரருடைய சீடன் பத்மபாதர் நரசிம்ம உபாசகர். தியானத்தில் அடிக்கடி ஈடுபடுவார்.

    ஒருவேடன் அவரிடம் தவமிருக்க வேண்டிய காரணம் என்ன? என்று அவரைக் கேட்ட போது அவனுக்குப் புரிய வேண்டி, ஓர் அதிசய மிருகத்தைத் தேடி வந்து தியானம் செய்கிறேன் என்றார்.

    வேடன் விலங்கின் அடையாளம் கேட்க மனித உடம்பும் சிங்க முகமும் கொண்டது என்று கூற, வேடனும் காடெங்கும் தேடி கிடைக்காததால் காட்டுக் கொடிகளைக் கொண்டு தூக்குப் போட்டு இறக்க முனைந்த போது வேடன் முன் நரசிம்மர் தோன்றினார். காட்டுக் கொடிகளைக் கொண்டு அவரைக் கட்டி, வேடன் பத்மபாதர் முன் கொண்டு வந்து காட்டினார். வேடன் கண்ணுக்குப் புலப்பட்ட நரசிம்மர் பத்மபாதர் கண்ணிற்குத் தெரியவில்லை. வேடன் செய்வதறியாது திகைத்த போது நரசிம்மர் கர்ச்சனை செய்து குரல் ஒலிமூலம் அவருக்குப் புலப்படுத்தினார் என்று கூறுவர்.

    இதே பத்மபாதரை இரண்டு முறை சாவிலிருந்து நரசிம்ம சுவாமி மீட்டதாகவும் கூறுவர். ஆதிசங்கரரும் நரசிம்மர் மீது கராவலம் என்ற நூலை இயற்றியுள்ளார்.
    பெரிய பெருமாள் மகாவிஷ்ணுவை பெருமாள் என்றழைப்பார். பெருமாள் என்றால் பெரிய ஆள் என்று அர்த்தம். ஆக்கல், அழித்தல், காத்தல், அருளல், மகிழ்தல் ஆகிய அனைத் துப் பணிகளையும் செவ் வனே செய்து முடித்து பூர்ணத்துவமான அவதாரமாக விளங்குவதால் நரசிம்மருக்கு பெரிய பெருமாள் என்ற பெயரும் உண்டு.

    நரசிம்மரை தொடர்ந்து வழிபட்டு வந்தால் எதிரிகளை வெல்லும் பலம் கிடைக்கும். நரசிம்மரை வழிபாடு செய்யும் போது சொல்ல வேண்டிய 108 போற்றி பார்க்கலாம்.
    ஓம் திருக்கடிகைத் தேவா போற்றி
    ஓம் திருமாமகள் கேள்வா போற்றி
    ஓம் யோக நரசிங்கா போற்றி
    ஓம் ஆழியங்கையா போற்றி
    ஓம் அங்காரக் கனியே போற்றி
    ஓம் அனுமனுக்கு ஆழி அளித்தாய் போற்றி
    ஓம் எக்காலத் தேந்தாய் போற்றி
    ஓம் எழில் தோள் எம்மிராமா போற்றி
    ஓம் சங்கரப்ரியனே போற்றி
    ஓம் சார்ங்க விற்கையா போற்றி

    ஓம் உலகமுண்ட வாயா போற்றி
    ஓம் உலப்பில் கீர்த்தியம்மா போற்றி
    ஓம் அடியவர்க்கருள்வாய் போற்றி
    ஓம் அனைத்துலக முடையாய் போற்றி
    ஓம் தாமரைக்கண்ணா போற்றி
    ஓம் காமனைப் பயந்தாய் போற்றி
    ஓம் ஊழி முதல்வா போற்றி
    ஓம் ஒளி மணிவண்ணனே போற்றி
    ஓம் இராவணாந்தகனே போற்றி
    ஓம் இலங்கை எரித்த பிரான் போற்றி

    ஓம் பெற்ற மாளியே போற்றி
    ஓம் பேரில் மணாளா போற்றி
    ஓம் செல்வ நாரணா போற்றி
    ஓம் திருக்குறளா போற்றி
    ஓம் இளங்குமார போற்றி
    ஓம் விளங்கொளியே போற்றி
    ஓம் சிந்தனைக்கினியாய் போற்றி
    ஓம் வந்தெனையாண்டாய் போற்றி
    ஓம் எங்கள் பெருமான் போற்றி
    ஓம் இமையோர் தலைவா போற்றி
    ஓம் சங்கு சக்கரத்தாய் போற்றி

    ஓம் மங்கை மன்னன் மனத்தாய் போற்றி
    ஓம் வேதியர் வாழ்வே போற்றி
    ஓம் வேங் கடத்துறைவா போற்றி
    ஓம் நந்தா விளக்கே போற்றி
    ஓம் நால் தோளமுதே போற்றி
    ஓம் ஆயர்தம் கொழுந்தே போற்றி
    ஓம் ஆழ்வார்களுயிரே போற்றி
    ஓம் நாமம் ஆயிரம் உடையாய் போற்றி
    ஓம் வாமதேவனுக்களித்தாய் போற்றி

    ஓம் மூவா முதல்வா போற்றி
    ஓம் தேவாதி தேவா போற்றி
    ஓம் எட்டெழுத்திறைவா போற்றி
    ஓம் எழில்ஞானச் சுடரே போற்றி
    ஓம் வரவரமுனிவாழ்வே போற்றி
    ஓம் வடதிருவரங்கா போற்றி
    ஓம் ஏனம்முன் ஆனாய் போற்றி
    ஓம் தானவன் ஆகம் கீண்டாய் போற்றி
    ஓம் கஞ்சனைக் கடிந்தாய் போற்றி
    ஓம் நஞ்சரவில் துயின்றாய் போற்றி

    ஓம் மாலே போற்றி
    ஓம் மாயப் பெருமானே போற்றி
    ஓம் ஆலிலைத் துயின்றாய் போற்றி
    ஓம் அருள்மாரி புகழே போற்றி
    ஓம் விண் மீதிருப்பாய் போற்றி
    ஓம் மண் மீதுழல்வோய் போற்றி
    ஓம் மலைமேல் நிற்பாய் போற்றி
    ஓம் மாகடல் சேர்ப்பாய் போற்றி
    ஓம் முந்நீர் வண்ணா போற்றி
    ஓம் முழுதும் கரந்துறைவாய் போற்றி

    ஓம் கொற்றப் புள்ளுடையாய் போற்றி
    ஓம் முற்றவிம் மண்ணளந்தாய் போற்றி
    ஓம் அனைத்துலக முடையாய் போற்றி
    ஓம் அரவிந்த லோசன போற்றி
    ஓம் மந்திரப் பொருளே போற்றி
    ஓம் இந்திரனுக்கருள்வாய் போற்றி
    ஓம் குரும்பரம்பரை முதலே போற்றி
    ஓம் விகனைசர் தொழும் தேவா போற்றி
    ஓம் பின்னை மணாளா போற்றி
    ஓம் என்னையாளுடையாய் போற்றி

    ஓம் நலம்தரும் சொல்லே போற்றி
    ஓம் நாரண நம்பி போற்றி
    ஓம் பிரகலல்லாதப்ரியனே போற்றி
    ஓம் பிறவிப் பிணியறுப்பாய் போற்றி
    ஓம் பேயார் கண்ட திருவே போற்றி
    ஓம் ஏழு மாமுனிவர்க்கருளே போற்றி
    ஓம் ஏமகூட விமானத்திறைவா போற்றி
    ஓம் ஆணையின் நெஞ்சிடர் தீர்த்தாய் போற்றி
    ஓம் கல்மாரி காத்தாய் போற்றி
    ஓம் கச்சி யூரகத்தாய் போற்றி

    ஓம் வில்லியறுத்த தேவா போற்றி
    ஓம் வீடணனுக்கருளினாய் போற்றி
    ஓம் இனியாய் போற்றி
    ஓம் இனிய பெயரினாய் போற்றி
    ஓம் புனலரங்கா போற்றி
    ஓம் அனலுருவே போற்றி
    ஓம் புண்ணியா போற்றி
    ஓம் புராணா போற்றி
    ஓம் கோவிந்தா போற்றி
    ஓம் கோளரியே போற்றி

    ஓம் சிந்தாமணி போற்றி
    ஓம் ஸ்ரீதரா போற்றி
    ஓம் மருந்தே போற்றி
    ஓம் மாமணி வண்ணா போற்றி
    ஓம் பொன் மலையாய் போற்றி
    ஓம் பொன்வடிவே போற்றி
    ஓம் பூந்துழாய் முடியாய் போற்றி
    ஓம் பாண்டவர்க் கன்பா போற்றி
    ஓம் குடந்தைக் கிடந்தாய் போற்றி
    ஓம் தயரதன் வாழ்வே போற்றி

    ஓம் மதிகோள் விடுத்தாய் போற்றி
    ஓம் மறையாய் விரிந்த விளக்கே போற்றி
    ஓம் வள்ளலே போற்றி
    ஓம் வரமருள்வாய் போற்றி
    ஓம் சுதாவல்லி நாதனே போற்றி
    ஓம் சுந்தரத் தோளுடையாய் போற்றி
    ஓம் பத்தராவியே போற்றி
    ஓம் பக்தோசிதனே போற்றி 
    தனக்கு அபசாரம் செய்தவர்களை நரசிம்மர் பொறுத்துக் கொள்வார். ஆனால் தனது பக்தர்களுக்கு அநீதி செய்பவர்களைப் பொறுத்துக் கொள்ள அவரால் முடியாது.
    நரசிம்மருடைய அவதாரத் தோற்றம், சிம்ம முக உருவில் பயங்கரமாகவும், பக்தனான குழந்தை பிரகலாதனுக்கு இரணிய கசிபு இழைத்த கொடுமைகளினால் உக்கிரமான கோபம் கொண்டவராகவும் சேவை சாதிப்பதால், அவரைப் பூஜிப்பது கடினம் என்று பலர், தவறான கருத்தைக் கொண்டுள்ளனர்.

    தனக்கு அபசாரம் செய்தவர்களை நரசிம்மர் பொறுத்துக் கொள்வார். ஆனால் தனது பக்தர்களுக்கு அநீதி செய்பவர்களைப் பொறுத்துக் கொள்ள அவரால் முடியாது.
    ஏனெனில் தன்னை நம்பும் பக்தர்களிடம் அத்தனை அன்பும், கருணையும் அவருக்கு உண்டு. ஆதலால்தான் ‘‘பக்தவத்ஸலன்’’ என்ற திருநாமம் ஏற்பட்டது.

    அதாவது, தன் பக்தர்களுக்குக் குழந்தை போன்றவன் என்பது பொருள். நம்மிடம் அளவற்ற கருணை கொண்ட ஸ்ரீ நரசிம்மரிடம் பயம் ஏன்?
    நரசிம்மரை பூஜித்து வழிபடுவது மிகவும் சுலபம். அனைவருக்கும் அவர் எளிதானவர்.

    முற்பிறவித் தவறுகளின் பலனாக ஏற்படும் மிகக் கொடிய துன்பத்தையும் ஒரு நொடியில் போக்கி அருளக் கூடிய ஆற்றல் நரசிம்மரிடம் உள்ளது. ஆதலால், ஸ்ரீலட்சுமி நரசிம்மரைக் கிரக தோஷப் பரிகாரமாக எவரும் வழிபடலாம். அதற்கு உடனடியாகப் பலனும் காண முடியும்.

    தஞ்சையைச் சுற்றி உள்ள சாலியமங்கலம், நீடாமங்கலம், மெலட்டூர், ஊத்துக்காடு, சூலமங்கலம் முதலான ஊர்களில் ஆண்டு தோறும் பாகவதமேளா நாடகங்கள் பல நாள்கள் நடத்தப்படுவதுண்டு. தற்போது மெலட்டூர் மற்றும் சாலியமங்கலத்தில் மட்டும் பாகவதமேளா நாடகங்கள் நடைபெறுகின்றன.

    மெலட்டூரில் நரசிம்ம ஜெயந்தி தோறும் சுவாமி சன்னதியில் ஒரே குடும்ப மரபில் வந்த பிராமண ஆண்கள் பிரகலாத நாடகத்தை நிகழ்த்துகின்றனர். தெலுங்கு மொழியில்தான் நாடகம் நடத்தப்படுகிறது. தெலுங்கு மொழி தெரியாத தமிழர்களே பெருமளவில் வந்திருந்து நாடகத்தைக் காண்கின்றனர். திருவள்ளூர், காஞ்சி, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் போன்ற மாவட்டங்களில் தமிழில் கூடிய மகாபாரத, பாகவத, ராமாயண நாடகங்கள் நடத்தப்படுகின்றன.
    வியாழக்கிழமைகளில் விரதம் இருந்து அசைவம் சாப்பிடாமல் மனதை ஒழுங்கப்படுத்தி வழிபட்டால் நீங்கள் கேட்ட வரத்தை நரசிம்மர் தருவார்.
    லட்சுமி நரசிம்மரை ஆலயத்துக்கு சென்று வழிபடுவது மிகவும் நல்லது. வியாழக்கிழமை தோறும் விரதம் இருந்து ஆலயங்களில் லட்சுமி நரசிம்மரை வழிபட்டு வந்தால் நல்ல விஷயங்கள் நடைபெறும். ஆலயத்துக்கு செல்ல முடியாத பட்சத்தில் வீட்டிலும் நரசிம்மரை வழிபடலாம். ஆனால் அவரை வழிபட வேண்டிய இடம் மிக மிக சுத்தமாக இருக்க வேண்டும்.

    அசைவம் சாப்பிடுவதாக இருந்தால் மிக கவனமாக இருக்க வேண்டும். அசைவம் சாப்பிடும் தினத்தன்று அவரை வணங்குவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் நரசிம்மருக்கு அசைவம் சுத்தமாக பிடிக்காது. வியாழக்கிழமைகளில் விரதம் இருந்து அசைவம் சாப்பிடாமல் மனதை ஒழுங்கப்படுத்தி வழிபட்டால் நீங்கள் கேட்ட வரத்தை நரசிம்மர் தருவார்.

    சுவாதி நட்சத்திர தினங்களில் முடிந்தவர்கள் லட்சுமி நரசிம்மருக்கு திருமஞ்சனம் செய்து வழிபடலாம். இயலாதவர்கள் அவர் சன்னதியை சுற்றி வந்து வழிபட்டாலே போதும். காலையில் வழிபடுவதை விட மாலை நேரத்தில் வழிபட்டால் நரசிம்மரின் பரிபூரண ஆசியை பெறலாம்.

    வீட்டில் வழிபடுபவர்கள் லட்சுமி நரசிம்மர் படத்தை வைத்து வழிபடலாம். நரசிம்மர் படத்துக்கு பூ வைத்து நெய் விளக்கு ஏற்றி வழிபட வேண்டும். மறக்காமல் பானகம் நெய்வைத்தியம் படைக்க வேண்டும். பூஜை முடிந்ததும் அந்த படத்தை 12 முறை சுற்றி வந்த வழிபடுவது ஆலயத்துக்கு சென்று வழிபட்ட பலன்களை உங்களுக்கு தரும்.

    கடன்கள், நோய்களில் இருந்து விடுபட விரும்புபவர்கள் லட்சுமி நரசிம்மருக்குரிய ஸ்லோகங்கள், மந்திரங்களை சொன்னால் விரைவில் பலன் கிடைக்கும்.

    நரசிம்மர் கவசம், நரசிம்மர் அஷ்டகம், நரசிம்மர் அஷ்டோத்ர சதநாம மந்திரம், நரசிம்மர் துதி, நரசிம்மர் நகஸ்துதி, நரசிம்மர் மந்திரம், நரசிம்மர் மங்கள நவரத்ன மாலிகா, நரசிம்மர் போற்றி போன்றவற்றை முடிந்த போதெல்லாம் சொல்லி வந்தால் நரசிம்மரின் கருணை பார்வை உங்கள் மீது மழை போல் பொழியும்.
    ஸ்ரீலட்சுமி நரசிம்மரை சுவாதி நட்சத்திரத்தன்றும், செவ்வாய்க்கிழமையிலும், பிரதோஷ நாளன்றும் விரதம் இருந்து வழிபடலாம். நரசிம்மர் அருளால் விரைவில் தடை நீங்கி நல்லபடியாக திருமணம் நடைபெறும்.
    ஸ்ரீநரசிம்மரை பிரதோஷத்தன்று விரதம் இருந்து வழிபடுவது சிறப்பாகும். அன்று மாலை லட்சுமி நரசிம்மர் போட்டோவை வீட்டில் வைத்து சந்தனம், துளசியால் அலங்கரித்து பானகம் வைத்து வழிபடவும்.

    ஸ்ரீலட்சுமி நரசிம்மரை சுவாதி நட்சத்திரத்தன்றும், செவ்வாய்க்கிழமையிலும், பிரதோஷ நாளன்றும் விரதம் இருந்து வழிபடலாம். நரசிம்மர் துதியை தினமும் சொல்லி தியானித்துவர ஏவல், பில்லி சூனியம், காரிய தடை, கடன் தொல்லை இவைகள் நீங்கி சுகம் பெறலாம்.

    திருமண தடை உள்ளவர்கள் பிரதோஷ தினத்தன்று விரதம் இருந்து பானகம் வைத்து நரசிம்மரை வழிபட்டு வர வேண்டும். நரசிம்மர் அருளால் விரைவில் தடை நீங்கி நல்லபடியாக திருமணம் நடைபெறும்.
    நங்கவள்ளி லட்சுமி நரசிம்மசாமி கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    சேலம் மாவட்டம் நங்கவள்ளியில் பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மசாமி - சோமேஸ்வரசாமி கோவில் உள்ளது. இந்த கோவில் சைவ-வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் கோவில் ஆகும். இந்தாண்டுக்கான தேர்த்திருவிழா கடந்த 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதைத்தொடர்ந்து நாள்தோறும் அன்னவாகனம், சிம்மவாகனம், சேஷவாகனம், அனுமந்தவாகனம், யானைவாகனம், கருடவாகனம், ரிஷபவாகனம் உட்பட பல்வேறு வாகனங்களில் சாமி திருவீதி உலாவும், திருக்கல்யாண உற்சவமும் நடைபெற்றது.

    நேற்று லட்சுமி நரசிம்மசாமி - சோமேஸ்வரசாமி சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜை செய்யப்பட்டு தேரில் அமர்த்தப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று மாலை நடந்தது. இதையொட்டி கோவில் முன்பு இருந்து தேரோட்டம் தொடங்கி முதலில் விநாயகர் தேரும் 2-வது தேரில் சோமேஸ்வரரும், சவுந்தரவல்லி அம்பாளும், 3-வது பெரிய தேரில் லட்சுமி நரசிம்மசாமி ஸ்ரீதேவி, பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்துடன் நடைபெற்றது. தேர் புறப்பட்டு தாரமங்கலம் பிரிவு சாலையில் நிறுத்தப்பட்டது.

    தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம்பிடித்து தேர் இழுத்தனர்.

    இன்று (சனிக்கிழமை) தாரமங்கலம் பிரிவு சாலையில் இருந்து பஸ்நிலையம் வரையும், நாளை (ஞாயிற்றுக்் கிழமை) பஸ்நிலையத்தில் இருந்து பேரூராட்சி அலுவலகம் வரையும், நாளை மறுநாள் (திங்கட்கிழமை) பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து தோப்பு தெரு பிரிவு வரையும், 26- ந்தேதி (செவ்வாய்க்்் கிழமை) தோப்பு தெரு பிரிவில் இருந்து கோவில் முன்பு நிலை சேருகிறது. இவ்வாறு 5 நாட்கள் தேரோட்டம் நடைபெறுகிறது. 27-ந்தேதி (புதன் கிழமை) இரவு 9 மணிக்கு சத்தாபரண நிகழ்ச்சி நடைபெறுகிறது.
    மனித உடலும், சிங்கமுகமும் கொண்டு மகா விஷ்ணு எடுத்த அவதாரம் ‘நரசிம்ம அவதாரம்.’ இந்த அவதாரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
    மனித உடலும், சிங்கமுகமும் கொண்டு மகா விஷ்ணு எடுத்த அவதாரம் ‘நரசிம்ம அவதாரம்.’ இரண்யாசுரனை வராக அவதாரம் எடுத்து மகாவிஷ்ணு வதம் செய்தார்.

    அந்த இரண்யாசுரனின் சகோதரன் இரண்யகசிபு. தன் சகோதரனைக் கொன்றதால், மகாவிஷ்ணுவின் மீது தீராத பகை கொண்டிருந்தான். தன்னையே கடவுளாக அனைவரும் வழிபட வேண்டும் என்று நினைத்தான். ஆனால் அவனது மகனான பிரகலாதன், நாராயணரின் நாமங்களைச் சொல்லி, அவரையே இறைவனாக பாவித்து வழிபட்டான்.

    இதனால் ஆத்திரம் அடைந்த இரண்யகசிபு, மகன் என்றும் பாராமல் பிரகலாதனைக் கொல்ல பலமுறை முயற்சித்தான். ஆனால் பிரகலாதனின் பக்தி, அவனை ஒவ்வொரு முறையும் ஆபத்துகளில் இருந்து காப்பாற்றிக் கொண்டே இருந்தது. ஒரு முறை இரண்யகசிபு தன் மகன் பிரகலாதனிடம், “உன் இறைவன் தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் என்பதை நிரூபித்துக் காட்டு” என்று சவால் விடுத்தான்.

    பக்தனுக்காக தூணில் இருந்து நரசிம்ம அவதாரத்தில் வெளிப்பட்டார், மகா விஷ்ணு. பின்னர் இரண்யகசிபுவை வதம் செய்து, பிரகலாதனை ஆட்சியில் அமர்த்தினார்.

    பயந்த சுபாவம் உள்ளவர்கள் செவ்வாய்கிழமை தோறும் அல்லது தினமும் இந்த இரு மந்திரங்களை சொல்லி வழிபாடு செய்து வர பயம் நீங்கித் தைரியம் பெறுவார்கள்.
    நரசிம்ம மந்திரம்

    தூங்கும் முன் சிறிது தண்ணீர் எடுத்து "ஓம் ஹூம் பட் நரசிம்மாய ஸ்வாஹா"

    என்று 18 தடவை ஜெபித்து அந்த நீரைக் குடித்துப் பின்னர் தூங்க பயங்கரமான கனவுகள் தோன்றாது. பயந்த சுபாவம் உள்ளவர்கள் செவ்வாய்கிழமை தோறும் இந்த முறையைச் செய்து வர பயம் நீங்கித் தைரியம் பெறுவார்கள்.

    துர்கா தேவி மந்திரம்

    ஓம் ஹ்ரீம் ஸ்ரீம்
    க்லீம் துக்க ஹந்த்யை
    துர்க்காயை தே நம ஸ்வாஹா ||

    தூங்கும் முன் சிறிது தண்ணீர் எடுத்து மேற்சொன்ன மந்திரத்தை 18 தடவை ஜெபித்து அந்த நீரைக் குடித்துப் பின்னர் தூங்க பயங்கரமான கனவுகள் தோன்றாது.

    பயந்த சுபாவம் உள்ளவர்கள் வெள்ளிக்கிழமை தோறும் இந்த முறையைச் செய்து வர பயம் நீங்கித் தைரியமும் நல்வாழவும் பெறுவார்கள்.
    மங்களப்பள்ளியில் சாந்த ரூபியாக நரசிம்மர் அருள்புரிகிறார். இந்த ஆலயம் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    தசாவதாரங்களிலேயே சிறப்பு மிக்கதாக விளங்குவது நரசிம்மர் அவதாரம். பக்தர்களின் துன்பத்தை உடனடியாக தீர்ப்பவர் என்பதால், நரசிம்மருக்கு இந்த சிறப்பு. இப்பூவுலகில் வெறும் இரண்டு நாழிகைகள் மட்டுமே நீடித்திருந்த அந்த அவதாரத்திலேயே, ஆக்கல், அழித்தல், காத்தல், அருளல், மறைதல் ஆகிய ஐம்பணிகளையும் செவ்வனே செய்து முடித்தார்.

    அப்படிப்பட்ட அவதார தரிசனம் தனக்குக் கிடைக்கவில்லையே என்று, கருடன் வருந்தினார். இதனால் கருடனுக்கு நவ நரசிம்மராக இறைவன் காட்சி தந்த இடம் தான் அகோபிலம். இந்த திருத்தலம் தற்போதைய ஆந்திர மாநில கிழக்குத் தொடர்ச்சி மலையில் உள்ளது. இங்கு செல்ல உடல் உறுதியும், மன உறுதியும், கடின முயற்சியும் தேவை.

    ஆனால் சுலபமாக தரிசனம் செய்யும் வகையில், தமிழ்நாட்டில் திண்டுக்கல் நகரைச் சுற்றி அகோபிலம் போலவே நவ நரசிம்மர் கோவில் கொண்டுள்ளார்.

    புராண காலத்தில் திண்டுக்கல் ‘பத்மகிரி’ என்று அழைக்கப்பட்டது. பத்மம் என்றால் ‘தாமரை’ தாமரைப் பூவில் இருக்கும் மகாலட்சுமி அருளும் தலம் என்பதால் பத்மகிரி என்ற பெயர் உண்டானது. திண்டுக்கல் பகுதியில் ராமகிரி, கன்னிவாடி, நிலக்கோட்டை, கொத்தப்புள்ளி, அம்மைய நாயக்கனூர், மங்களப்பள்ளி, வி.மேட்டுப்பட்டி, வேடசந்தூர், நரசிங்கபுரம் என ஒன்பது தலங்களில் நரசிம்மர் எழுந்தருளியுள்ளார். இவற்றுள் மங்களப்பள்ளியில் சாந்த ரூபியாக நரசிம்மர் அருள்புரிகிறார். இந்த ஆலயம் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது.

    கி.பி.1529-ல் மதுரை மகாமண்டலேசுவர விசுவநாத நாயக்கர் பேரரசு அமைத்தபொழுது, இந்தப் பகுதியில் இருந்த குறுநிலத் தலைவர்களையும், தன்னுடன் வந்த கன்னட, தெலுங்கு மொழி பேசும் படைத் தலைவர்களையும் அரசு நிர்வாகத்தில் அங்கமாக்கினார். அதனைத் தொடர்ந்து 72 பாளையங்கள் உருவாக்கப்பட்டன. திண்டுக்கல் பகுதியில் மட்டும் 18 பாளையங்கள் அமைக்கப்பட்டன. இவர்கள் கோவில்களில் திருப்பணிகளில் ஈடுபட்டனர்.



    அப்படி திருப்பணி செய்யப்பட்ட ஆலயங்களில் ஒன்றுதான் இந்த நரசிம்மர் ஆலயம். கன்னட, தெலுங்கு மன்னர்கள் காலத்தில் சிவ - விஷ்ணு ஆலயமாக சிறந்து விளங்கிய இத்திருத்தலத்தின், மகா மண்டபத் தூண்களில் ஏராளமான புடைப்புச் சிற்பங்கள் வடிக்கப்பட்டிருந்தன. இங்கிருந்த 18 தூண்களிலும் விநாயகர், சிவலிங்கம், ஆனிலையப்பர், கண்ணன், ஆஞ்சநேயர் சிற்பங்களும், இசைக்கருவிகளை வாசித்துக்கொண்டு நடனமாடும் பெண்களும் சிற்பங்களாக இடம்பெற்றிருந்தன.

    கால ஓட்டத்தில் கவனிப்பாரின்றி போய்விட்ட இந்த கோவிலில், பல சிற்பங்கள் சிதைந்து விட்டன. கடந்த 2002-ம் ஆண்டு தான் கல்லூரி மாணவர்கள் சிலரின் முயற்சியால் இந்த ஆலயம் வெளியுலகுக்கு தெரியவந்தது. தற்போது இந்த ஆலயத்தில் ஸ்ரீதேவி - பூதேவி சமேத சீனிவாசன் சிலை மட்டுமே உள்ளது. தற்போதுதான் நரசிம்மர் சிலை தயார் செய்து வருகின்றனர். அறநிலையத்துறைக்குட்பட்ட இவ்வாலயம் அரசு ஆவணங்களில் லட்சுமி நரசிங்கப்பெருமாள் என்றே உள்ளது. லட்சுமி நரசிம்மருக்குப் பூஜைகளும் நடைபெற்று வருகின்றன.

    இங்கு ஒவ்வொரு மாத சுவாதி நட்சத்திரம் அன்றும் காலையில் சுதர்சன ஹோமமும், கோபூஜையும் நடக்கின்றன. இங்கே நரசிம்மரை மனதில் நிறுத்தி வழிபாடு செய்தால் மன அமைதி கிட்டும், சர்வரோக நிவாரணம் ஏற்படும். திருமணத் தடங்கல் நீங்கும். சந்தான பாக்கியப்பேறு வாய்க்கும். லட்சுமி கடாட்சம் ஏற்படும்.

    நரசிம்மர் குழந்தை மனம் கொண்டவர். தம் பக்தர்களின் மனம் மகிழச் செய்பவர். குழந்தையைக் கண்டதும் தாயின் முகம் மலர்வது போல பக்தர்களைக் கண்டதும் பகவானின் முகம் மலர்கிறது. ஏராளமான பக்தர்களை ஒருங்கே காண நேரிடும்போது, சீனிவாசனுக்கு ஆனந்தக் களிப்பு தலைக்கேறி முகம் மலர்கிறது. அந்த மலர்ச்சியைக் காண நீங்களும் ஒரு முறை இந்த ஆலயம் சென்று வாருங்கள்.

    அமைவிடம் :


    திண்டுக்கல் - கரூர் சாலையில் உள்ள தாடிக்கொம்பு என்னும் ஊரில் இருந்து 7 கி.மீ. தொலைவில் மங்களப்பள்ளி அமைந்துள்ளது. திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் இருந்து நவாமரத்துப்பட்டி செல்லும் பேருந்தில் ஏறி, கோவில்பட்டிப் பிரிவில் இறங்கி 1 கி.மீ. மேற்கே சென்றால் இத்தலத்தை அடையலாம்.கோடாங்கிப்பட்டி செல்லும் பேருந்தில் பயணித்து மன்னார்கோட்டையில் இறங்கி 1 கி.மீ. கிழக்கே சென்றும் இக்கோவிலுக்கு வரலாம்.
    ×