search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Andhra Temples"

    பூலோக வைகுண்டம் என வர்ணிக்கப்படும் திருப்பதி உலக அளவில் மிகப் பிரசித்திப் பெற்றது. இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    காக்கும் கடவுளான மகா விஷ்ணுவின் அம்சமான திருப்பதி ஏழுமலையானை காண கண் கோடி வேண்டும். பூலோக வைகுண்டம் என வர்ணிக்கப்படும் திருப்பதி உலக அளவில் மிகப் பிரசித்திப் பெற்றது. அதற்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் “கலியுக வைகுண்டம்” ஆக கன்னியாகுமரியில் ஏழுமலையான் ஆலயம் உருவாக்கப்பட்டுள்ளது.

    சங்க இலக்கியங்களான சிலப்பதிகாரம், சாத்தனார் மணிமேகலை போன்ற இலக்கியங்களிலேயே திருப்பதி பற்றிய குறிப்புகள் உள்ளன. அவற்றில் திருப்பதியின் அப்போதைய பெயரான ‘திருவேங்கடம்’ என குறிப்பிடப்பட்டிருக்கும்.

    இன்று எத்தனையோ திருக்கோயில்கள் இருக்கும் போது திருப்பதியில் மட்டும் ஏன் பக்தர்கள் கூட்டம் இப்படி அலைமோதுகிறது? காரணம் இல்லாமல் இல்லை. இந்த சேஷத்திரத்தில் மகாவிஷ்ணு நடத்திக் காட்டிய மகிமைகள் பல. ஒருநாள் இருநாளில் அல்ல. பல ஜென்மங்கள் எடுத்துக் கொண்டு நடத்திய ‘நாடகம்’ தான் திருப்பதியில் வெங்கடேஸ்வர பெருமாள் குடிக்கொள்ள காரணமாயிற்று,

    கங்கை நதிக்கரையில் காஸ்யப முனிவரின் தலைமையில் முனிவர்கள் சிலர் யாகம் செய்துக் கொண்டிருந்தனர். அதைக் கண்ட நாரதர் இந்த யாகம் யாருடைய நன்மைக்காக நடத்தப்படுகிறது என கேட்டார். ஆனால் அங்கிருந்த முனிவர்களால் அதற்கு பதிலளிக்க முடியவில்லை. அதனால் பிருகு முனிவரிடம் உதவி கேட்டு சென்றனர்.

    பிருகு முனிவரின் உள்ளங்காலில் ஒரு கண் இருந்ததால் அவருக்கு மற்ற முனிவர்களை விட ஞானம் சற்று அதிகம் இருந்தது. அவர் இதற்கு ஒரு தீர்வு காண நினைத்து பிரம்மனை தரிசிக்க சத்யலோகத்திற்கு சென்றார். அங்கே பிரம்மதேவர் சரஸ்வதி தேவியின் துணையுடன் தனது நான்கு முகங்களாலும் ஸ்ரீமன் நாராயணைப் போற்றி நான்கு வேதங்கள் ஓதிக் கொண்டிருந்தார்.

    அவர் பிருகு முனிவர் வந்ததை கவனிக்கவே இல்லை. சற்று நேரம் பொறுத்துப் பார்த்த முனிவர் இவர் வழிபாட்டிற்கு உகந்தவர் இல்லை என முடிவு செய்து சிவப்பெருமானை தரிசிக்க கைலாசம் சென்றார். ஆனால் சிவன் பார்வதிதேவியுடன் ஏதோ முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டிருந்ததால் அவரும் முனிவரை கண்டுக் கொள்ளவில்லை. முனிவரைக் கண்ட பார்வதிதேவி சிவனிடம் கூற அவரோ தனது முக்கிய ஆலோசனையின் போது முனிவர் குறுக்கிட்டதைக் விரும்பாததால் அவரை அழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடலானார். அதனால் ஆத்திரமுற்ற பிருகு முனிவர் சிவப்பெருமானுக்கு சாபமிட்டு அங்கிருந்து நகர்ந்தார்.

    பின்னர் மகாவிஷ்ணுவை தரிசிக்க வைகுண்டம் வந்தார். ஆனால் ஆதிசேஷன் குடை விரிக்க, மகாலட்சுமி காலடியில் அமர்ந்து பணிவிடை செய்ய ஆனந்த சயனத்தில் இருந்ததால் அவரும் முனிவர் வந்ததை கவனிக்கவில்லை. அதனால் ஆத்திரத்தில் மதியிழந்த பிருகு முனிவர் மகாலட்சுமியின் உறைவிடமான மகாவிஷ்ணுவின் நெஞ்சில் எட்டி உதைத்தார்.

    முனிவரின் கோபத்தை தணிக்க நினைத்த பெருமாள் எட்டி உதைத்த காலை சட்டென பிடித்து பாதங்களை மென்மையாக அழுத்திவிட்டார். அந்த இதத்தில் முனிவரின் கோபம் தணிந்தது. அதே சமயம் மகாவிஷ்ணு பிருகு முனிவரின் காலில் இருந்த கண்ணை பறித்துவிட்டார். பாதத்தில் இருந்த கண் தான் அவருக்கு இத்தனை அகங்காரத்தை தந்தது. தனது தவற்றை உணர்ந்த முனிவர் விஷ்ணுவிடம் மன்னிப்புக் கோரிவிட்டு மும்மூர்த்திகளில் சிறந்தவர் இவரே என முடிவு செய்தார்.

    இருப்பினும், தனது மணவாளன் தன்னை எட்டி உதைத்த முனிவரின் காலைப் பிடித்து மன்னிப்புக் கேட்டதை விரும்பாத ஸ்ரீதேவி அவரிடம் கோபித்துக் கொண்டு சென்று இன்று மகாராஷ்டிராவில் உள்ள கோலாபூர் எனும் இடத்திற்கு சென்றுவிட்டார். அவரைத் தேடிப் பிடித்து வருவதற்காக பூலோகம் வந்த மகாவிஷ்ணு வேங்கடமலையில் உள்ள புஷ்கரணியின் தெற்கு கரையில் ஒரு புளிய மரத்தடியில் எறும்பு புற்றின் மேல் அமர்ந்து தவம் புரிய ஆரம்பித்தார்.

    இதில் மனமுருகிய பிரம்மரும், ஈசனும் பெருமாளுக்கு உதவும் நோக்கோடு பசு மற்றும் கன்றுக் குட்டியின் வடிவெடுத்து அவர்களும் பூலோகம் வந்தனர். இத்தனை சங்கதிகளையும் சூர்ய பகவான் மூலம் அறிந்த மகாலட்சுமி அவரது அறிவுரைப்படி மாடு மேய்க்கும் பெண்ணாக உருக்கொண்டு வந்து பசுவையும் கன்றையும் சோழ மன்னனுக்கு விற்றார். அவற்றை வாங்கிய சோழ மன்னனின் பணியாட்கள் அவற்றை வேங்கடமலைக்கு மேய அனுப்புவார்கள்.

    அங்கே ஒரு எறும்பு புற்றில் மகாவிஷ்ணுவை கண்ட பசு தாமாகவே அங்கே பால்சுரக்க ஆரம்பித்தது. அதை ஏற்று மகாவிஷ்ணுவும் பசியாறி வந்தார். இதற்கிடையே அரண்மனையில் பசுக்கள் பால் தருவது இல்லை என்பதை கவனித்த மன்னனின் வேலையாள் பசுவை பின் தொடர்ந்து வந்தான். அது ஒரு இடத்தில் தானாகவே பால் சுரந்து பாலை வீணடிப்பதை கவனித்த அவன் பசுவின் மீது தன் கோடாலியை வீசியெறிய அது பசு மீது பட்டுவிடக் கூடாது என மகாவிஷ்ணு குறுக்கேத் தோன்றி அடியை தான் வாங்கினார். தான் வீசிய ஆயுதம் மகாவிஷ்ணுவை தாக்கி அதனால் ரத்தம் வருவதைக் கண்ட வேலையாள் அதிர்ச்சியில் உயிரிழந்தான்.

    ரத்தக் கறையுடன் பசு மாடு வருவதைக் கண்ட சோழ ராஜா என்ன நடந்தது என அறிய அதை பின் தொடர்ந்தான். அஙகே எறும்பு புற்று ஒன்றின் அருகே தனது வேலையாள் இறந்து கிடப்பதைக் கண்டு எதுமறியாமல் விழித்தான். அப்பொழுது அவனுக்கு காட்சியளித்த விஷ்ணு அவனது வேலைக்காரன் செய்த குற்றத்திற்கு மன்னனுக்கு சாபமிட்டார். ஆனால் மன்னன் மீது தவறேதுமில்லாக் காரணத்தால் அவன் அடுத்த ஜென்மத்தில் ஆகாய ராஜாவாக பிறப்பானென்றும் தனக்கும் பத்மாவதிக்கும் திருமணம் நடக்கும் சமயம் அவனது சாபம் தீரும் எனவும் ஆசி வழங்கினார்.

    ஸ்ரீ வராகசுவாமி ஆலயம் : இந்த சம்பவங்கள் நடந்த காலக்கட்டத்தில் திருப்பதி மலை வராகசுவாமியின் இருப்பிடமாக ஆதி வராக ஷேத்திரமாக இருந்தது. சோழ ராஜாவிற்கு ஆசி வழங்கி அனுப்பிய மகாவிஷ்ணு ஸ்ரீனிவாசன் என்ற பெயருடன் தனக்கு ஒரு இருப்பிடம் வேண்டி வராக சுவாமியை சந்தித்தார். அவரும் மகிழ்ந்து இடமளித்தார். அதற்கு நன்றிக் கூறும் விதமாகத் தான் இன்றும் திருப்பதிக்கு செல்பவர்கள் முதலில் புஷ்கரணியில் குளித்து வராக சுவாமியை தரிசித்து பூஜை, நைவேத்தியங்களை முதலில் அவருக்கு செய்துவிட்டு பிறகு வெங்கடேசப் பெருமாளை தரிசிக்க வேண்டும் என ஒரு ஐதீகம் உள்ளது.

    பத்மாவதி தாயார் : இது அனைத்தும் ஒரு ஜென்மத்து கதை. இக்கதை சோழ மன்னனின் அடுத்த ஜென்மத்திலும் தொடர்கிறது. அடுத்த பிறவியில் அச்சோழ மன்னன் ஆகாச ராஜாவாக பிறந்தான். பிறந்து வளர்ந்து அனைத்து வளங்களும் பெற்று திகழ்ந்த அவனுக்கு பிள்ளைப் «பறு இல்லை அதனால் யாகம் செய்ய எண்ணிய அவன் நிலத்தை உழுதப் பொழுது அழகிய தாமரை மலர் ஒன்று தோன்றியது. அதை அருகில் சென்று பார்த்தப்போது அதில் ஒரு பெண் குழந்தை இருப்பது தெரிந்தது. அப்போது அதை எடுத்து வளர்த்தால் சகல சவுபாக்கியம் உண்டாகும் என அசரீரிக் கேட்டது. தாமரை மலரில் தோன்றியதால் பத்மாவதி எனப் பெயரிட்டு சீரும் சிறப்புடனும் வளர்த்து வந்தான்.

    இதனிடையே சீனிவாசன் என்ற பெயரோடு வாழ்ந்து வந்த மகாவிஷ்ணு பத்மாவதியைக் கண்டார். உடனே பெற்ற தாய் போல தன்னை கவனித்து வந்த வகுலாதேவியிடம் சென்று பூர்வஜென்ம கதைகளைக் கூறி பத்மாவதியை தான் மணக்க வேண்டிய அவசியத்தைக் கூறுகிறார். அதே சமயம் ஆகாச ராஜாவும் அவனது மனைவியும் கூட தங்களது மகள் வேங்கட மலையில் வசித்து வரும் சீனிவாசனை மணக்க விரும்புவதை அறிகிறார்கள். செல்வங்களுக்கு அதிபதியான கு«பரன் இத்திருமணச் செலவுகளுக்காக சீனிவாசனுக்கு கடன் தருகிறார்.

    இரு வீட்டார் சம்மதத்துடன் தேவர்களும், சிவன், பிரம்மா புடைசூழ சீனிவாசன், பத்மாவதி திருமணம் நடைபெறுகிறது. இக்கதையும், இத்திருமணமும் நடைபெற்ற இடம் தான் திருவேங்கடமலை (திருப்பதி திருமலை). அதனால் இன்றும் திருமலையில் தினமும் கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. அதுமட்டுமின்றி இப்போதும் பிரம்மோற்சவம் நடக்கும் 9 நாட்களும், மஞ்சள், குங்குமம் மற்றும் சேலை திருப்பதியில் இருந்து திருச்சானூரில் இருக்கும் பத்மாவதி தாயாருக்கு எடுத்து செல்லப்படுகிறது.

    கோவில் வரலாறு : தொண்டைமான் எனும் தொண்டை மண்டலத்தை ஆண்டு வந்த மன்னன் ஒருவன் முதன் முதலாக கோவில், பிரகாரம் கட்டி தினசரி வழிபாட்டிற்கு வழிசெய்தான் எனக் கூறப்படுகிறது. அவனைத் தொடர்ந்து பல சோழ மன்னர்கள் பல சேவைகளை செய்துள்ளனர். ஆனால் இன்றுள்ள வளங்களில் பெரும்பாலானவை விஜயநகர பேரரசுக் காலத்தில் வந்தவை. கிருஷ்ணதேவராயர் இக்கோவிலுக்கு பலவசதிகளை செய்து கொடுத்து எக்கச்சக்கமான தங்க வைர ஆபரணங்களையும் பரிசளித்தார்.

    1843லிருந்து 1933 வரை ஆங்கிலேய ஆட்சி நடந்துக் கொண்டிருந்த சமயத்தில் கோவில் நிர்வாகம் ஹதிராம்ஜி மடத்தை சேர்ந்த சேவா தாஸ்ஜியிடம் இருந்தது. 1932-ல் மதராஸ் அரசு பொறுப்பேற்றதுடன் தனி தேவஸ்தானம் அமைத்து பொறுப்பை அதன் வசமளித்தது. 1933-ல் திருப்பதி திருமலை தேவஸ்தானம் உதயமானது.
    மங்களப்பள்ளியில் சாந்த ரூபியாக நரசிம்மர் அருள்புரிகிறார். இந்த ஆலயம் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    தசாவதாரங்களிலேயே சிறப்பு மிக்கதாக விளங்குவது நரசிம்மர் அவதாரம். பக்தர்களின் துன்பத்தை உடனடியாக தீர்ப்பவர் என்பதால், நரசிம்மருக்கு இந்த சிறப்பு. இப்பூவுலகில் வெறும் இரண்டு நாழிகைகள் மட்டுமே நீடித்திருந்த அந்த அவதாரத்திலேயே, ஆக்கல், அழித்தல், காத்தல், அருளல், மறைதல் ஆகிய ஐம்பணிகளையும் செவ்வனே செய்து முடித்தார்.

    அப்படிப்பட்ட அவதார தரிசனம் தனக்குக் கிடைக்கவில்லையே என்று, கருடன் வருந்தினார். இதனால் கருடனுக்கு நவ நரசிம்மராக இறைவன் காட்சி தந்த இடம் தான் அகோபிலம். இந்த திருத்தலம் தற்போதைய ஆந்திர மாநில கிழக்குத் தொடர்ச்சி மலையில் உள்ளது. இங்கு செல்ல உடல் உறுதியும், மன உறுதியும், கடின முயற்சியும் தேவை.

    ஆனால் சுலபமாக தரிசனம் செய்யும் வகையில், தமிழ்நாட்டில் திண்டுக்கல் நகரைச் சுற்றி அகோபிலம் போலவே நவ நரசிம்மர் கோவில் கொண்டுள்ளார்.

    புராண காலத்தில் திண்டுக்கல் ‘பத்மகிரி’ என்று அழைக்கப்பட்டது. பத்மம் என்றால் ‘தாமரை’ தாமரைப் பூவில் இருக்கும் மகாலட்சுமி அருளும் தலம் என்பதால் பத்மகிரி என்ற பெயர் உண்டானது. திண்டுக்கல் பகுதியில் ராமகிரி, கன்னிவாடி, நிலக்கோட்டை, கொத்தப்புள்ளி, அம்மைய நாயக்கனூர், மங்களப்பள்ளி, வி.மேட்டுப்பட்டி, வேடசந்தூர், நரசிங்கபுரம் என ஒன்பது தலங்களில் நரசிம்மர் எழுந்தருளியுள்ளார். இவற்றுள் மங்களப்பள்ளியில் சாந்த ரூபியாக நரசிம்மர் அருள்புரிகிறார். இந்த ஆலயம் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது.

    கி.பி.1529-ல் மதுரை மகாமண்டலேசுவர விசுவநாத நாயக்கர் பேரரசு அமைத்தபொழுது, இந்தப் பகுதியில் இருந்த குறுநிலத் தலைவர்களையும், தன்னுடன் வந்த கன்னட, தெலுங்கு மொழி பேசும் படைத் தலைவர்களையும் அரசு நிர்வாகத்தில் அங்கமாக்கினார். அதனைத் தொடர்ந்து 72 பாளையங்கள் உருவாக்கப்பட்டன. திண்டுக்கல் பகுதியில் மட்டும் 18 பாளையங்கள் அமைக்கப்பட்டன. இவர்கள் கோவில்களில் திருப்பணிகளில் ஈடுபட்டனர்.



    அப்படி திருப்பணி செய்யப்பட்ட ஆலயங்களில் ஒன்றுதான் இந்த நரசிம்மர் ஆலயம். கன்னட, தெலுங்கு மன்னர்கள் காலத்தில் சிவ - விஷ்ணு ஆலயமாக சிறந்து விளங்கிய இத்திருத்தலத்தின், மகா மண்டபத் தூண்களில் ஏராளமான புடைப்புச் சிற்பங்கள் வடிக்கப்பட்டிருந்தன. இங்கிருந்த 18 தூண்களிலும் விநாயகர், சிவலிங்கம், ஆனிலையப்பர், கண்ணன், ஆஞ்சநேயர் சிற்பங்களும், இசைக்கருவிகளை வாசித்துக்கொண்டு நடனமாடும் பெண்களும் சிற்பங்களாக இடம்பெற்றிருந்தன.

    கால ஓட்டத்தில் கவனிப்பாரின்றி போய்விட்ட இந்த கோவிலில், பல சிற்பங்கள் சிதைந்து விட்டன. கடந்த 2002-ம் ஆண்டு தான் கல்லூரி மாணவர்கள் சிலரின் முயற்சியால் இந்த ஆலயம் வெளியுலகுக்கு தெரியவந்தது. தற்போது இந்த ஆலயத்தில் ஸ்ரீதேவி - பூதேவி சமேத சீனிவாசன் சிலை மட்டுமே உள்ளது. தற்போதுதான் நரசிம்மர் சிலை தயார் செய்து வருகின்றனர். அறநிலையத்துறைக்குட்பட்ட இவ்வாலயம் அரசு ஆவணங்களில் லட்சுமி நரசிங்கப்பெருமாள் என்றே உள்ளது. லட்சுமி நரசிம்மருக்குப் பூஜைகளும் நடைபெற்று வருகின்றன.

    இங்கு ஒவ்வொரு மாத சுவாதி நட்சத்திரம் அன்றும் காலையில் சுதர்சன ஹோமமும், கோபூஜையும் நடக்கின்றன. இங்கே நரசிம்மரை மனதில் நிறுத்தி வழிபாடு செய்தால் மன அமைதி கிட்டும், சர்வரோக நிவாரணம் ஏற்படும். திருமணத் தடங்கல் நீங்கும். சந்தான பாக்கியப்பேறு வாய்க்கும். லட்சுமி கடாட்சம் ஏற்படும்.

    நரசிம்மர் குழந்தை மனம் கொண்டவர். தம் பக்தர்களின் மனம் மகிழச் செய்பவர். குழந்தையைக் கண்டதும் தாயின் முகம் மலர்வது போல பக்தர்களைக் கண்டதும் பகவானின் முகம் மலர்கிறது. ஏராளமான பக்தர்களை ஒருங்கே காண நேரிடும்போது, சீனிவாசனுக்கு ஆனந்தக் களிப்பு தலைக்கேறி முகம் மலர்கிறது. அந்த மலர்ச்சியைக் காண நீங்களும் ஒரு முறை இந்த ஆலயம் சென்று வாருங்கள்.

    அமைவிடம் :


    திண்டுக்கல் - கரூர் சாலையில் உள்ள தாடிக்கொம்பு என்னும் ஊரில் இருந்து 7 கி.மீ. தொலைவில் மங்களப்பள்ளி அமைந்துள்ளது. திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் இருந்து நவாமரத்துப்பட்டி செல்லும் பேருந்தில் ஏறி, கோவில்பட்டிப் பிரிவில் இறங்கி 1 கி.மீ. மேற்கே சென்றால் இத்தலத்தை அடையலாம்.கோடாங்கிப்பட்டி செல்லும் பேருந்தில் பயணித்து மன்னார்கோட்டையில் இறங்கி 1 கி.மீ. கிழக்கே சென்றும் இக்கோவிலுக்கு வரலாம்.
    ×