search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Namakkal District News"

    • ராஜ்குமார்(41). இவர் கடந்த 26-ந் தேதி வேலகவுண்டன்பட்டியில் இருந்து பெரியமணலி பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
    • தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்த சின்னையன் மகன் ராஜ்குமார்(41). இவர் கடந்த 26-ந் தேதி வேலகவுண்டன்பட்டியில் இருந்து பெரியமணலி பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியதில் ராஜ்குமார் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளுடன் தார் சாலையில் கீழே விழுந்தார்.

    இதில் அவருக்கு தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் ராஜ்குமார் மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து அவரது உடல் உறுப்பு தானம் செய்யப்பட்டது.

    மூளை சாவடைந்து உறுப்பு தானம் செய்த அவரது உடலுக்கு அரசு மரியாதை அளிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை 9.10 மணிக்கு மாவட்ட கலெக்டர் டாக்டர் உமா, திருச்செங்கோடு ஜல்லிக்கட்டு பேரவை தலைவரும், நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான மதுரா செந்தில் மற்றும் போலீசாரால் அரசு மரியாதை செலுத்தப்பட்டது.

    இதில் காவல்துறை, வருவாய்த்துறை மற்றும் அவரது உறவினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். இறுதியாக மேலகவுண்டன்பட்டி அருகே உள்ள சுடுகாட்டில் ராஜ்குமார் உடல் தகனம் செய்யப்பட்டது.

    • ராசிபுரம் பொன்குறிச்சி ஊராட்சி பொன்நகரில் இணையவழி பட்டா வழங்குவதற்காக வரன்முறைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.
    • கலெக்டர் உமா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு இப்பகுதியில் தற்போது வரை இணையவழி பட்டா வழங்குவதற்காக வரன்முறைப்படுத்தப்பட்ட விவரங்களை விரிவாக கேட்டறிந்து பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

     நாமக்கல்:

    ராசிபுரம் பொன்குறிச்சி ஊராட்சி பொன்நகரில் இணையவழி பட்டா வழங்குவதற்காக வரன்முறைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட கலெக்டர் உமா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு இப்பகுதியில் தற்போது வரை இணையவழி பட்டா வழங்குவதற்காக வரன்முறைப்படுத்தப்பட்ட விவரங்களை விரிவாக கேட்டறிந்து பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    ராசிபுரம் வட்டம், காட்டூர் அணைக்கும் கரங்கள் அறிவுசார் குறைபாடுடைய குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளியை பார்வையிட்டுஆய்வு மேற்கொண்டு இப்பள்ளிக்கு அரசால் வழங்கப்படும் நிதி ஆதாரங்கள், செலவினங்கள் பயன்பெறும் குழந்தைகள், குழந்தைகள் கற்றல் திறன் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

    தொடர்ந்து சேந்தமங்கலம் வட்டம் உத்திரகிடி காவல் ஊராட்சி, நாச்சிபுதூர் காலணியில் இணையவழி பட்டா வழங்குவதற்காக வரன்முறைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

    முன்னதாக, நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரவியல் கிடங்கில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் கலெக்டர் உமா ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) மாதவன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் (பொறுப்பு) மகிழ்நன், தாசில்தார் (தேர்தல்கள்) திருமுருகன், ராசிபுரம் தாசில்தார் சரவணன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
    • சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 530 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் உமா தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

    இதில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 530 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். அவற்றைக் பெற்றுக்கொண்ட கலெக்டர் பரிசீலனை செய்து உரிய அலுவலர்களிடம் வழங்கி மனுக்களின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டார்.

    தொடர்ந்து கூட்டுறவுத் துறை சார்பில் 14 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.83.50 லட்சம் மதிப்பீட்டில் மகளிர் சுய உதவிக் குழு கடனுதவி, தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம் சார்பில் பணியிட விபத்து மரண உதவித்தொகையாக தலா ரூ.5 லட்சம் வீதம் 2 பேருக்கு ரூ.10 லட்சம் உதவித்தொகை, 6 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.31,750 மதிப்பீட்டில் காதொலி கருவி, சக்கர நாற்காலி உள்ளிட்டவை என மொத்தம் 22 பயனாளிகளுக்கு ரூ.93.81 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

    மேலும் மாற்றுத்திற னாளிகள் நலத்துறையின் கீழ் உலகவங்கி நிதி உதவியுடன் செயல்பட்டு வரும் தமிழ்நாடு உரிமைகள் திட்டம், சமூகத் தரவு பதிவு குறித்த விழிப்புணர்வு பிரசுரங்கள், கையேடுகளை மாவட்ட கலெக்டர் வெளியிட்டார். தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து அவர்களின் கோரிக்கை மனுக்களை பெற்றார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுமன், மாவட்ட வழங்கல் அலுவலர் முத்துராமலிங்கம் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    • பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் 2023-2024-ன் கீழ் குத்தகைதாரர் உள்ளிட்ட அனைத்து விவசாயிகளும் ரபி பருவத்திற்கு காப்பீடு செய்து பயன்பெறலாம்
    • அனைத்து பயிர்களையும் மிகக்குறைந்த பிரிமியத்தில் காப்பீடு செய்து அதிகபட்ச காப்பீட்டுத் தொகையை விவசாயிகள் பெறலாம்.

     பரமத்திவேலூர்:

    கபிலர்மலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராதாமணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் 2023-2024-ன் கீழ் குத்தகைதாரர் உள்ளிட்ட அனைத்து விவசாயிகளும் ரபி பருவத்திற்கு காப்பீடு செய்து பயன்பெறலாம். நெல்-(சம்பா), சோளம், நிலக்கடலை, கரும்பு, சிறிய வெங்காயம், வாழை, மரவள்ளி, தக்காளி உள்ளிட்ட அனைத்து பயிர்களையும் மிகக்குறைந்த பிரிமியத்தில் காப்பீடு செய்து அதிகபட்ச காப்பீட்டுத் தொகையை விவசாயிகள் பெறலாம். விவசாயிகள் முன்மொழிவு படிவம், விண்ணப்ப படிவம், பயிர் சாகுபடி அடங்கல் அறிக்கை, ஆதார் அட்டை நகல் மற்றும் குறைந்தபட்ச இருப்பு வைத்துள்ள வங்கிக்கணக்கு புத்தக முதல் பக்க நகல் ஆகிய ஆவணங்களுடன் அருகிலுள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் ஆகிய இடங்களில் கரும்பு மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கு 5 சதவிகிதம் பிரிமியமும், இதர குறுகிய காலப்பயிர்களுக்கு 1.5 சதவிகித பிரிமியமும் செலுத்தி பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம். மேலும் கூடுதல் விபரங்களுக்கு விவசாயிகள் அருகிலுள்ள கபிலர்மலை வட்டார வேளாண்மை-உழவர் நலத்துறை விரிவாக்க அலுவலகத்தை அணுகி பயன் பெறலாம்.

    அரசால் அறிவிக்கை செய்யப்பட்டுள்ள கிராமங்கள், அந்த கிராமத்தில் எந்தெந்த பயிர்களுக்கு அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது, காப்பீடு செய்வதற்கான கடைசி தேதி, விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்துள்ள பயிருக்கு எவ்வளவு பிரிமியம் செலுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட விபரங்களை விவசாயிகள் தமிழக அரசின் விவசாயிகளுக்கான சிறப்பு செயலியான உழவன் செயலியில் தங்களது கைப்பேசியிலியே பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    • வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட்டு வருகின்றது.
    • இலவச பயிற்சி வகுப்பில் சேர விரும்பும் மனுதாரர்கள் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் ஆதார் அட்டை நகல் கொண்டு வரவேண்டும்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியுள்ளதாவது:-

    நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட்டு வருகின்றது.

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட உள்ள குரூப்-4 தேர்விற்கு இலவச பயிற்சி மற்றும் தேர்வு புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட பாடத் திட்டத்தின்படி நேரடியாக நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

    2023-ம் ஆண்டிற்கான டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வுக்கான இலவச நேரடி விரைவுப் பயிற்சி மற்றும் திருப்புதல் தேர்வு, திங்கட்கிழமை தோறும் காலை 10.30 - 1.30 மணி வரை நடைபெற உள்ளது. ஒவ்வொரு பாடவாரியாக சிறந்த வல்லுநர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. பாடத் திட்டத்திற்கான முழுதேர்வு வியாழக்கிழமை தோறும் காலை 10.30 - 1.30 மணி வரை நடைபெற உள்ளது.

    பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மனுதாரர்கள் நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் தொடர்பு கொண்டு தங்களது பெயர், முகவரி, தொலைபேசி எண் அடங்கிய சுய விவரத்தினை பதிவு செய்து பயன்பெறலாம். இலவச பயிற்சி வகுப்பில் சேர விரும்பும் மனுதாரர்கள் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் ஆதார் அட்டை நகல் கொண்டு வரவேண்டும்.

    இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    • சில வருடங்களுக்கு முன்பு பிளாட் போட்டு விற்பனை செய்த போது வேலூர் பேரூராட்சி பூங்காவிற்கு என ரூ.10 கோடி மதிப்புடைய 50 சென்ட் இடம் ஒதுக்கப்பட்டது.
    • பூங்கா அமைக்க பேரூராட்சி ஊழியர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சுல்தான்பேட்டை மோகனூர் ரோடு சாலையில் சின்னு நகர் அமைந்துள்ளது.

    இந்த நகரில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு பிளாட் போட்டு விற்பனை செய்த போது வேலூர் பேரூராட்சி பூங்காவிற்கு என ரூ.10 கோடி மதிப்புடைய 50 சென்ட் இடம் ஒதுக்கப்பட்டது.

    கடந்த பல வருடங்களாக பூங்காவிற்காக ஒதுக்கப்பட்ட பயன்பாடு இல்லாமல் இருந்துள்ளது. இதையடுத்து அங்கு பூங்கா அமைக்க வேண்டுமென அப்பகுதி குடியிருப்பு வாசிகள் கோரிக்கை வைத்தனர்.

    இதை தொடர்ந்து பூங்கா அமைக்க பேரூராட்சி ஊழியர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்ோது பூங்காவுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் தனியார் சிலர் வேலி அமைத்து ஆக்கிரமித்து இருந்தது தெரியவந்தது. இதனால் பேரூராட்சி ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து வேலூர் பேரூராட்சி செயல் அலுவலர் திருநாவுக்கரசு கூறுகையில், சின்னு நகரில் பேரூராட்சி பூங்காவுக்கு என ஒதுக்கப்பட்ட இடம் தற்போது தனி நபர்கள் ஆக்கிரப்பில் உள்ளது தெரியவந்துள்ளது.

    இதுகுறித்து பழைய பைல்களை ஆய்வு செய்து வருகிறோம். வேலூர் பேரூராட்சியில் பணியாற்றிய முன்னாள் ஊழியர்களிடம் இது குறித்து விளக்கம் கேட்டுள்ளோம்.

    பேரூராட்சிக்கு சொந்தமான பூங்கா இடத்தை ஆக்கிரப்பு செய்தவர்கள் தாங்களாக பேரூராட்சி நிர்வாகத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும். இல்லையெனில் சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    எந்தவொரு ஆக்கிர மிப்புக்கும் பேரூராட்சி நிர்வாகம் அனுமதி அளிக்காது என்றார்.

    • டிசம்பர் மாதம் 9-ந் தேதி தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடைபெற உள்ளது.
    • மக்கள் நீதிமன்றம் முன்பாக முடித்துக் கொள்ளும் வழக்கு களுக்கு மேல்முறையீடு கிடையாது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரு மான குணசேகரன் வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியுள்ளதாவது:-

    தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு அறிவுறுத்தலின்படி நாமக்கல் - திருச்செங்கோடு ரோட்டில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், திருச்செங்கோடு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், ராசிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், பரமத்தி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், சேந்தமங்கலம் நீதிமன்றம் மற்றும் குமார பாளையம் நீதிமன்றத்திலும் வருகிற டிசம்பர் மாதம் 9-ந் தேதி தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடைபெற உள்ளது.

    ஏற்கனவே கோர்ட்டில் நிலுவையில் இருக்கும் வழக்குகளில் சமரசம் செய்து கொள்ள கூடிய குற்றவியல் வழக்குகள், காசோலை தொடர்பான வழக்குகள், வங்கி கடன்கள், கல்வி கடன்கள் தொடர்பான வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், விவகாரத்து தவிர்த்த மற்ற குடும்ப பிரச்சினைகள் தொடர்பான வழக்குகள், உரிமையியல் வழக்குகள் (நிலம், சொத்து, பாகப்பிரிவினை, வாடகை விவகாரங்கள்), விற்பனை வரி, வருமான வரி, சொத்து வரி பிரச்சனைகள் போன்ற வழக்குகள் இந்த கோர்ட்டில் விசாரிக்கப்படும்.

    மக்கள் நீதிமன்றம் முன்பாக முடித்துக் கொள்ளும் வழக்கு களுக்கு மேல்முறையீடு கிடையாது. மக்கள் நீதிமன்றம் மூலமாக முடித்துக்கொள்ளும் வழக்கு களுக்கு செலுத்தப்படும் நீதிமன்ற கட்டணம் முழுமையாக திருப்பி தரப்படும் வாய்ப்பு உள்ளது. எனவே, பொதுமக்கள், நீதிமன்றத்தில் மேலே குறிப்பிட்ட வழக்குகள் நிலுவையில் இருந்தால் மக்கள் நீதிமன்றம் மூலம் சட்ட ரீதியாகவும், சமரச முறையிலும் தீர்வு காணலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    • குமாரபாளையம் குளத்துக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சின்னசாமி (வயது 70). இவர் கூலி வேலை செய்து வருகிறார்.
    • அப்போது அந்த வழியாக வந்த ஷேர் ஆட்டோ சின்னசாமி மீது மோதியது.

    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் குளத்துக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சின்னசாமி (வயது 70). இவர் கூலி வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவர் ராஜம் தியேட்டர் அருகே உள்ள ஓட்டலில் டிபன் வாங்கிக் கொண்டு ரோட்டை கடந்து செல்ல வேண்டி ரோட்டின் ஓரத்தில் நின்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த ஷேர் ஆட்டோ சின்னசாமி மீது மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவர் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.

    இது குறித்த புகாரில் பேரில் குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ஷேர் ஆட்டோ டிரைவர் பாபு என்பவரை கைது செய்தனர்.

    • பரமத்திவேலூர் பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இலவச மருத்துவ பரிசோதனை முகாம் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
    • பேரூராட்சி தலைவர் லட்சுமி தலைமை வகித்தார். வேலூர் பேரூராட்சி செயல்அ லுவலர் திருநாவுக்கரசு முன்னிலை வகித்தார்.

    பரமத்திவேலூர்:

    பரமத்திவேலூர் பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இலவச மருத்துவ பரிசோதனை முகாம் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

    பேரூராட்சி தலைவர் லட்சுமி தலைமை வகித்தார். வேலூர் பேரூராட்சி செயல்அ லுவலர் திருநாவுக்கரசு முன்னிலை வகித்தார்.

    வேலூர் பேரூராட்சியில் பணிபுரியும் 100-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு பரமத்திவேலூர் அரசு டாக்டர் கோகுல் தலைமையிலான செவிலியர்கள் சிகிச்சை மேற்கொண்டனர். மேலும் மன ரீதியாக ஏற்படும் மன அழுத்தத்துக்கும் ஆலோசனை வழங்கப்பட்டது.

    தொடர்ந்து அனைத்து தூய்மை பணியாளர்கள் மற்றும் பேரூராட்சியில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ரத்த பரிசோதனை செய்து ரத்தத்தில் சர்க்கரை அளவு ரத்த அழுத்த அளவு பரிசோதனை மேற்கொண்டனர். மேலும் காய்ச்சல், இருமல், சளி, தொண்டை வலி, தலைவலி உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. இலவச மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது.

    இந்த முகாமில் பேரூராட்சி கவுன்சிலர்கள், அலுவலகப் பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • நாமக்கல்லில் மளிகை மற்றும் பலசரக்கு கடை வணிகர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
    • தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் ஜெயகுமார் வெள்ளையன், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நாமக்கல்:

    நாமக்கல்லில் மளிகை மற்றும் பலசரக்கு கடை வணிகர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

    இதில் நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் ஜெயகுமார் வெள்ளையன், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    துணை போலீஸ் சூப்பிரண்டு தனராசு கூட்டத்திற்கு தலைமை வகித்துப் பேசுகையில், தமிழக அரசினால் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலைப் பொருட்கள் போன்றவற்றை வணிகர்கள் விற்பனை செய்ய கூடாது. இதை மீறி விற்பனை செய்வோர் மீது சட்டப்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது மிக அவசியம். மேலும் வணிகர்கள் காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

    கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன், தடைசெய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ய மாட்டோம் என வணிகர்கள் உறுதியேற்க வேண்டும். அவ்வாறு விற்பனை செய்வோர் சங்க உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்தார்.

    இவ்விழிப்புணர்வு கூட்டத்தில் நாமக்கல் நகர மளிகை வர்த்தகர் சங்க தலைவர் பத்ரி நாராயணன், துணை தலைவர் ஜிக்கி ஜெகதீசன், பேரமைப்பு மாவட்ட செயலாளர் பொன்.வீரக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் திரளான மளிகைக் கடை உரிமை யாளர்கள் கலந்துகொண்டனர்.

    • தடை செய்யப்பட்டுள்ள பான் மசாலா, குட்கா, ஹான்ஸ், பான்பராக் மற்றும் பல்வேறு வகையான புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அவற்றை உணவு பாதுகாப்பு அலுவலர் பறிமுதல் செய்தனர்.
    • கடையின் உரிமையாளர் சண்முகத்திற்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து, கடையின் உரிமத்தை ரத்து செய்தனர்.

    பரமத்திவேலூர்:

    பரமத்திவேலூர் பகுதியில் உள்ள கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள பான் மசாலா, குட்கா, ஹான்ஸ், பான்பராக் மற்றும் பல்வேறு வகையான புகையிலை பொருட்கள் விற்கப்படுகிறதா? என பரமத்திவேலூர் உணவு பாதுகாப்பு அலுவலர் முத்துசாமி மற்றும் பரமத்திவேலூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் கொண்ட குழுவினர் பரமத்திவேலூரில் உள்ள டீக்கடைகள் மற்றும் பெட்டி கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

    இதில் பரமத்திவேலூர் 4 ரோட்டில் உள்ள ஒரு கடையில் ஆய்வு மேற்கொண்டபோது அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள பான் மசாலா, குட்கா, ஹான்ஸ், பான்பராக் மற்றும் பல்வேறு வகையான புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அவற்றை உணவு பாதுகாப்பு அலுவலர் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த கடையின் உரிமையாளர் சண்முகத்திற்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து, கடையின் உரிமத்தை ரத்து செய்தனர்.

    தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடைகளில் விற்பனை செய்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • கோப்பணம் பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள பாலமுருகனுக்கு கார்த்திகை தீபத்தை முன்னிட்டு 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
    • தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பாலமுருகன் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கோப்பணம் பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள பாலமுருகனுக்கு கார்த்திகை தீபத்தை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது . அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பாலமுருகன் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.

    அதேபோல் கபிலர்மலை பாலசுப்பிரமணிய சாமி கோவில், பிராந்தகத்தில் உள்ள ஆறுமுகக்கடவுள் கோவில், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள சுப்ரமணியர், பொத்தனூர் அருகே உள்ள பச்சமலை முருகன் கோவில், அனிச்சம்பாளையத்தில் வேல் வடிவம் கொண்ட சுப்ரமணியர்கோவில், பிலிக்கல்பாளையம் விஜயகிரி வடபழனி ஆண்டவர் கோவில், நன்செய் இடையார் திருவேலீஸ்வரர் கோவிலில் உள்ள சுப்ரமணியர், ராஜா சாமி கோவிலில் உள்ள ராஜா சாமி, பேட்டை பகவதியம்மன் கோவிலில் உள்ள முருகன், அருணகிரிநாதர் மலையில் உள்ள முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் மகா தீபாராதனையும் நடைபெற்றது.

    விழாவில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.மேலும் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு பரமத்திவேலூர் வட்டாரத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. வீடுகள் தோறும் பொதுமக்கள் விளக்கேற்றி தீப திருநாளை கொண்டாடினர்.

    ×