search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "minister thangam thennarasu"

    • அமைச்சரவை விவகாரத்தில் ஆளுநர் தன்னிச்சையாக செயல்பட முடியாது.
    • திமுக அரசு பிரச்சனைகளை சட்ட ரீதியில் எதிர்கொள்ள தயக்கம் காட்டியது இல்லை.

    சென்னை:

    சென்னை தலைமைச்செயலகத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு, ரகுபதி, தி.மு.க. எம்.பி. வில்சன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது:-

    ஆளுநர் விவகாரத்தில் சட்ட ரீதியில் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கை நியாயமாக விசாரிப்பதற்கு எவ்வித தடையும் இல்லை. செந்தில் பாலாஜியை தனிமைப்படுத்தி குற்றச்சாட்டுவதற்கான அவசியம் என்ன? குற்றம்சாட்டப்பட்டதால் செந்தில் பாலாஜியை தகுதி நீக்கம் செய்ய இயலாது. செந்தில் பாலாஜி மீதான நடவடிக்கைகளில் அரசியல் உள்நோக்கம் உள்ளது.

    அமைச்சரவை விவகாரத்தில் ஆளுநர் தன்னிச்சையாக செயல்பட முடியாது. ஆளுநர் அதிகாரம் தொடர்பாக ஏற்கனவே உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

    மத்திய அமைச்சர்கள் ஏராளமானோர் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளன. வழக்கு உள்ள மத்திய அமைச்சர்கள் அனைவரும் நீக்கப்பட்டு விட்டார்களா?. இல்லாத பூனையை இருட்டு வீட்டில் தேடுகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி.

    திமுக அரசு பிரச்சனைகளை சட்ட ரீதியில் எதிர்கொள்ள தயக்கம் காட்டியது இல்லை.

    அவசர கதியில் ஆளுநர் ஆர்.என்.ரவி எடுத்துள்ள முடிவை, அரசு முற்றிலுமாக நிராகரிக்கிறது.

    இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

    அமைச்சர் பதவி நீக்கம் தொடர்பாக ஆளுநர் சொல்லும் சட்டப்பிரிவுகள் சரியானதா?. உச்சநீதிமன்ற கருத்துக்களை சுட்டிக்காட்டி செந்தில் பாலாஜி நீக்கம் என ஆளுநர் கூறுகிறார். ஆளுநர் மேற்கொள் காட்டிய உச்சநீதிமன்ற உத்தரவுக்கும் செந்தில் பாலாஜி வழக்கிற்கும் தொடர்பு இல்லை என தி.மு.க. எம்.எபி. வில்சன் கூறினார்.

    • அறியாமை மற்றும் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே சிலர் சனாதனத்தை எதிர்க்கிறார்கள்.
    • தமிழ் பண்பாடும், விழுமியங்களும் தனித்து இயங்கும் தன் இயல்பினை கொண்டவை.

    சென்னை:

    கடலூரில் நடைபெற்ற வள்ளலாரின் 200-வது ஜெயந்தி விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார்.

    அப்போது அவர், '10 ஆயிரம் ஆண்டு சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார். சனாதன தர்மத்தின் மாணவனாகிய நான், வள்ளலாரின் நூல்களை படித்து பிரமித்தேன். நமது பாரதம் சனாதன தர்மத்தால் ஆனது.

    அறியாமை மற்றும் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே சிலர் சனாதனத்தை எதிர்க்கிறார்கள். சனாதன தர்மத்தை ஏற்றாலும், எதிர்த்தாலும் அவர்களும் சனாதன தர்மத்திற்குள்ளேயே இருப்பார்கள். உங்களில் என்னையும், என்னில் உங்களையும் காண்பதுதான் சனாதன தர்மம். யார் வேண்டுமானாலும் எந்த மார்க்கத்தை வேண்டுமானாலும் பின்பற்றலாம் என்ற நிலை இருந்தது. அதைத்தான் சனாதன தர்மம் போதிக்கிறது. இந்தியர்களை பற்றி தவறாக எழுதி வைத்திருப்பவர் காரல் மார்க்ஸ்'', என விமர்சித்திருந்தார்.

    கவர்னரின் இந்த கருத்துக்கு, தமிழக நிதி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    சமரச சுத்த சன்மார்க்க நெறிக்கும், சனாதன தர்மத்துக்குமான அடிப்படை வேற்றுமையைக் கூட அறிந்து கொள்ளாமல், வடலூர் வள்ளல் பெருமான் வழிகாட்டிய நெறிமுறைகளை முற்றிலும் சிதைத்து சனாதனப் போர்வைக்குள் சன்மார்க்க நெறியினைப் புகுத்தும் முயற்சியில், தா்ம ரட்சராக புதிய அவதாரம் மேற்கொண்டிருக்கும் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி ஈடுபட்டிருக்கிறார்.

    தமிழ் பண்பாடும், விழுமியங்களும் தனித்து இயங்கும் தன் இயல்பினை கொண்டவை என்பதை பல்லாயிரமாண்டு தமிழ் சமூக நாகரிக சுவடுகள் நமக்கு வெள்ளிடை மலையாக உணர்த்தி இருக்கின்றன.

    மத்திய அரசின் தனிப்பெருங்கருணை, ஏதோ ஒரு விதத்தில் வாய்க்கப் பெற்றுவிட்டதாலேயே கவர்னர் மாளிகையை சனாதனக் கூடாரமாக மாற்றும் கவர்னர் ஆர்.என்.ரவியின் கருத்துகள் முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டியவை.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் குறித்து கவர்னர் பேசியதை ஏற்க முடியாது.
    • முதல்வரின் ஜப்பான் பயணத்தின் மூலம் ரூ.3000 கோடிக்கு மேல் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளன.

    சென்னை:

    அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி முழு அரசியல்வாதியாக மாறி வருகிறார். துணைவேந்தர்கள் மாநாட்டில் அரசியல் பேசி உள்ளார். மாநாட்டை முழுக்க முழுக்க அரசியலுக்காக கவர்னர் பயன்படுத்தி உள்ளார்.

    மத்திய அரசின் தரவரிசை பட்டியலில் 22 பல்கலைக்கழகங்கள் தமிழகத்தில் உள்ளது. சிறந்த கல்வி நிறுவனங்கள் தர வரிசை பட்டியலில் தமிழக பல்கலைக்கழங்கள் முன்னிலையில் உள்ளன.

    தமிழ்நாட்டில் கல்வி சூழல் சரியில்லை, வேலைவாய்ப்பு உருவாக்கப்படவில்லை என பேசுவதா?. தமிழ்நாட்டின் கல்வி வரலாற்றை கவர்னர் அறிந்துகொள்ளாமல் பேசுகிறார்.

    மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் கல்வி கட்டமைப்பில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. தமிழகத்தில் அனைத்து கல்லூரிகளும் சிறந்து விளங்குகின்றன.

    முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் குறித்து கவர்னர் பேசியதை ஏற்க முடியாது. குஜராத் முதல்வராக மோடி இருந்தபோது, சிங்கப்பூர், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு தொழில் முதலீட்டை ஈர்க்க பயணம் மேற்கொண்டுள்ளார்.

    முதல்வரின் ஜப்பான் பயணத்தின் மூலம் ரூ.3000 கோடிக்கு மேல் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளன. தொழில் தொடங்க உகந்த மாநிலமாக தமிழகம் திகழுகிறது.

    உகந்த சூழல் காரணமாக தமிழகத்தை நோக்கி உலக முதலீட்டாளர்கள் படையெடுக்கிறார்கள். கல்வி, தொழில், வேலைவாய்ப்பில் உயர்ந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • எடப்பாடி பழனிசாமி யார் காலில் விழுந்து கும்பிட்டுப் பதவி பெற்றார்.
    • இரு முன்னாள் அமைச்சர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு குற்றப்பத்திரிகையாகத் தாக்கல் செய்யப்பட்டு விட்டது

    சென்னை:

    நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    "முதலீட்டை ஈர்க்கப் போகிறாரா அல்லது முதலீடு செய்யப் போகிறாரா?" என்று தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக முதலமைச்சர் சென்றுள்ள 9 நாள் வெளிநாட்டுப் பயணத்தை கொச்சைப்படுத்தியிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    அ.தி.மு.க. ஆட்சியில் தொழில் வளர்ச்சியை காலில் போட்டு மிதித்து, வர விரும்பிய தொழில் நிறுவனங்களையும் அண்டை மாநிலங்களுக்கு விரட்டி விட்டு ஆட்சி நடத்தியவர் எடப்பாடி பழனிசாமி. நான்காண்டு கால ஆட்சியில் "ஊரெங்கும் ஊழல்" என்ற முழக்கத்திற்கு சொந்தக்காரராக - கரன்சி மழையில் நனைந்து - ஊழலின் ஒட்டுமொத்த உருவமாகத் திகழ்ந்த எடப்பாடி பழனிசாமி, வெளிப்படைத்தன்மையோடு நடைபெறும் தி.மு.க. ஆட்சி மீது ஊழல் புகார் கூறுவதற்கு என்ன தகுதி இருக்கிறது என்ற கேள்வியை இன்று தமிழ்நாடே கேட்கிறது.

    முதன்முதலில் டாஸ்மாக் கடையைத் தெருவெல்லாம் திறந்த அ.தி.மு.க. ஆட்சியை மறந்துவிட்டு - அ.தி.மு.க. ஆட்சியில் கொத்துக் கொத்தாக கள்ளச்சாராயச் சாவுகள் அரங்கேறியதை வசதியாக மறைத்து, 4 ஆண்டு கள்ளச்சாராயம், குட்கா எனத் தமிழ்நாட்டை போதை மாநிலமாக மாற்றிய எடப்பாடி பழனிசாமி தி.மு.க. ஆட்சி பற்றி குறை கூறுகிறார்.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளிநாடுகளுக்கு முதலீடு பெறப்போகிறார் என்பதைத் தெரிந்துகொண்டு அதற்கு முதல் நாள் ஒரு பேரணியை நடத்தி - சட்டம் ஒழுங்கு சீர்குலைவு என ஒரு புகார் கொடுக்கிறார். பொள்ளாச்சியில் இளம்பெண்கள் கதறியபோது கண்ணை மூடிக்கொண்டு இருந்தவர் பழனிசாமி. அமைதியாக அறவழியில் போராடிய ஸ்டெர்லைட் போராட்டக் குழுவினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி 13 பேரை காக்கை குருவிகள் போல் சுட்டுத்தள்ளிவிட்டு, நான் டிவியில் பார்த்து தெரிந்து கொண்டேன் என்று பொய் சொன்னவர் பழனிசாமி; தனது துறையின்கீழ் பணியாற்றும் பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகள் மீதான பாலியல் புகார்களையே வேடிக்கை பார்த்தவர் இந்தப் பழனிசாமி என்பதுதான் வரலாறு.

    "துப்பாக்கிச்சூடு" எடப்பாடி பழனிசாமிக்குத் தெரிந்தே நடந்தது என்பதை துப்பாக்கிச் சூடு பற்றி விசாரிக்க நியமிக்கப்பட்ட விசாரணை கமிஷன் அறிவித்து, "பச்சைப் பொய் பழனிசாமியின் முகத்திரையை கிழித்து எறிந்துள்ளதை ஏனோ எதிர்க்கட்சித் தலைவர் வசதியாக மறந்துவிட்டு, இன்று தனது உட்கட்சி பிரச்சினையைத் திசை திருப்ப, தனது அமைச்சரவை சகாக்கள் இருவர் மீது சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றப்பத்திரிகையே தாக்கல் செய்யப்பட்டு விட்டதை மக்கள் மனங்களில் இருந்து மறைக்க "பேரணி" "புகார்" "அறிக்கை" என விட்டு நீலிக்கண்ணீர் வடிக்கிறார்.

    தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்குத் தேவையான முதலீடுகளை பெறப் போகும் முதலமைச்சர் மீது அவதூறு பேசுகிறார். அந்த அளவிற்கு அவருக்கு பொறாமையும் எரிச்சலும் மனதிற்குள் கோடை வெயிலை விட அனலாக கக்குகிறது. 13 நாள் பயணமாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு எடப்பாடி பழனிசாமி செல்வதற்கு முன்பு அவரது மகன் மிதுன் அங்கு போனது பழனிசாமியின் ஊழல் பணத்தை முதலீடு செய்வதற்குத்தானோ என்ற கேள்வி இப்போது எழுகிறது.

    அ.தி.மு.க.வின் அமைச்சரவையையே ஒவ்வொருவராக வெளிநாடுகளுக்கு அனுப்பி உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கிறேன் என்று கபட நாடகம் நடத்திச் "சுற்றுலா" சென்றது ஊழல் பணத்தை வெளிநாடுகளில் முதலீடு செய்வதற்குத்தானா?

    இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளிநாடு சென்று உள்ளது பற்றி அவதூறு பரப்பும் எடப்பாடி பழனிசாமி, தனது மகனும், அவரது அமைச்சரவை சகாக்களும் ஏன் சென்றார்கள் என்பதை விளக்குவாரா?

    கொடநாடு கொலை மற்றும் அங்கு நடைபெற்றதாக கூறப்பட்ட தற்கொலைக்கு அடையாளமாக இருந்த மரத்தை வெட்டி சாட்சியங்களை மறைத்தது போன்ற மர்மங்கள் விலகும்போது எடப்பாடி பழனிசாமியின் உண்மை முகம் தெரிய வரும் என்பதில் சந்தேகமில்லை! அதுவரை அவதூறுகளை முதலீடுகளாக வைத்து அசிங்கமான அரசியல் செய்யாமல் இருப்பது எடப்பாடி பழனிசாமிக்கு நல்லது.

    2015-ம் ஆண்டும் அ.தி.மு.க. ஆட்சியில் நடத்தப்பட்ட உலக முதலீட்டாளர்கள் மாநாடு ஒரு "அ.தி.மு.க. மாநாடு"! எடப்பாடி பழனிசாமி இருந்தபோது நடத்திய 2019-ம் ஆண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாடு எடுபடாத மாநாடு!

    போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் என "கணக்கு" காட்டப்பட்டதே தவிர, வந்த முதலீடுகள் எவ்வளவு என்று நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு பார்த்தால் எடப்பாடி பழனிசாமியின் நிர்வாக லட்சணமும், அவர் முதலீட்டை ஈர்த்த மாயத்தோற்றமும் வெட்ட வெளிச்சமாகி விட்டது. இதனைத் தொழில்துறை அமைச்சராக இருந்த நான் பல முறை சுட்டிக்காட்டியிருக்கிறேன். உலக முதலீட்டாளர்கள் மாநாடு என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமி நடத்தியது உலகச் சுற்றுலா மாநாடு!

    எங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அப்படி இல்லை. அ.தி.மு.க. ஆட்சியில் 10 ஆண்டு காலம் சீரழிந்த நிர்வாகத்தை சீர்ப்படுத்தி வருகிறார். படுபாதாளத்தில் விழுந்து கிடந்த நிதி நிலைமையை சரிசெய்து வருகிறார். சட்டம் - ஒழுங்கிற்கு சவால் விடும் எந்த விவகாரத்தையும் துணிச்சலுடன் எதிர்கொண்டு, தவறு செய்வோர் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கிறார். ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து தொழில் தொடங்க "முதலீடு பெறுவதை" ஒரு முழு முயற்சியாகவும் புதிய தொழில் நிறுவனங்களை உருவாக்கி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்து வதை தினசரிப் பணியாகவும் செய்து வருகிறார்.

    இப்போது ஜனவரி 2024 உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்புவிடச் செல்லும் முன்பு, துபாய் போனபோது எவ்வளவு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், எவ்வளவு முதலீடுகள் பெறப்பட்டுள்ளது என்பதை பட்டியலிட்டுள்ளார். ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு 9 நாள் பயணமாகப் புறப்படும் முன்பு பத்திரிகைக் குறிப்பு வாயிலாகவும், விமான நிலையத்தில் பேட்டி வாயிலாகவும், இதுவரை தொழில் துறையில் பெற்ற முதலீடுகள் - போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஆகியவற்றை வெளிப்படையாக அறிவித்து விட்டுச் சென்றுள்ளார்.

    ஆனால் இது எதையுமே படிக்காத எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டின் தொழில் முன்னேற்றத்திற்கும், தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தவும் நாள்தோறும் உழைக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பார்த்து தரக்குறைவாக - அவதூறாக - கீழ்தரமாகப் பேசி - அரசியல் நாகரிகத்திற்கும் தனக்கும் ஆயிரம் மைல் தொலைவு என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.

    எடப்பாடி பழனிசாமி யார் காலில் விழுந்து கும்பிட்டுப் பதவி பெற்றார். பிறகு விழுந்தவர் காலையே எப்படி வாரி விட்டார். "விபத்தில்" முதலமைச்சரான அவர் அப்பதவியை தக்கவைக்க நடத்திய "கூவத்தூர் கூத்து"; அங்கு நடந்த அருவருப்பான நடனங்கள், எம்.எல்.ஏ.க்கள் சுவர் ஏறித் தப்பி ஓடும் காட்சிகள், ஆம்னி பேருந்துகளில் அடைத்து எம்.எல்.ஏ.க்களைக் கொண்டு வந்து நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற்றது என அனைத்திலும் "கரன்சி பெட்டிகளை" கொடுத்து, தங்கக் கட்டிகளையும் கொடுத்தார் என்ற செய்திகளைப் படித்து அப்போதே ஒட்டுமொத்த தமிழ்நாடும் பார்த்ததை ஏனோ எடப்பாடி பழனிசாமி மறந்து விட்டார்.

    முதலமைச்சர் பொறுப்பைத் தக்கவைக்கப் பணம்; ஓ.பி.எஸ் தகராறில் பொதுக்குழுவைக் கூட்டப் பணம்; அதில் மெஜாரிட்டி உறுப்பினர்களைப் பெறப் பணம்; வேண்டிய தீர்மானத்தை நிறைவேற்றப் பணம்; எல்லாவற்றையும் விட, பொதுச் செயலாளர் பதவியைப் பெற "பெட்டி பெட்டியாக" பணம் என கட்சி அரசியலையும், அசிங்கமாக அவர் ஆட்சியில் விட்ட "கான்டிராக்ட் ஊழல்" அரசியல் போல் நடத்திப் பதவியைப் பெற்று, பவனி வந்து கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் தி.மு.க. ஆட்சியை, திராவிட மாடல் முதலமைச்சரைப் பற்றி குறை கூற தகுதியும் இல்லை. தார்மீக உரிமையும் இல்லை.

    இப்போது இரு முன்னாள் அமைச்சர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு குற்றப்பத்திரிகையாகத் தாக்கல் செய்யப்பட்டு விட்டது. அடுத்தடுத்து முன்னாள் அமைச்சர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்குகளில் மட்டுமல்ல,

    பழனிசாமியின் ஊழல் மீதும் சட்டம் தன் கடமையைச் செய்யும். நீதிமன்றப் படிக்கட்டுகளை எண்ண வேண்டியவர்கள், தங்கள் ஆட்சி ஊழலை மறைக்க இதுபோன்ற அவதூறு பரப்பும் வேலைகளில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடல்சார் ஆய்வினை மேற்கொள்ள இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் மற்றும் தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து கடல்சார் முன்கள ஆய்வு மேற்கொள்வதற்கான பணிகள் இன்று தொடங்கியது.
    • ஆய்வு பணியை தொழில்துறை மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார்.

    தூத்துக்குடி:

    சங்ககால பாண்டியர்களின் துறைமுகமாக கொற்கை போற்றப்படுகிறது.

    சங்க இலக்கியங்களான அகநானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை ஆகிய நூல்களும் சங்கமருவியக் காலத்தைச் சார்ந்த காவியமான சிலப்பதிகாரமும் கொற்கையைப் பற்றி விவரிக்கின்றன.

    பாண்டியர் காலத்தில் கொற்கை மிகச்சிறந்த துறைமுகமாக செயல்பட்டிருந்தது. மேலை நாட்டுடன் குறிப்பாக ரோம் நாட்டுடனும், இலங்கையுடனும், பெரும்பாலான தென்கிழக்கு ஆசிய நாடுகளுடனும் கடல்வழி வணிகம் நடைபெற்றுள்ளது.

    அகழாய்வாளர்கள் கொற்கையில் ரோமநாட்டு மட்கலன்களும், ரௌலட்டட் வகை பானை ஓடுகளையும் கண்டெடுத்துள்ளனர்.

    கடந்த 2021-ம் ஆண்டு மேற்கொண்ட அகழாய்வில் கங்கை சமவெளியை சார்ந்த கி.மு 5-ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய வடஇந்திய கருப்பு வண்ணமெருகேற்றப்பட்ட பானைஓடுகளும் மற்றும் கருப்பு பூச்சுப் பெற்றுள்ள பானை ஓடுகளும் வெளிப்படுத்தப்பட்டன. இவை தமிழ்நாடானது இந்தியாவின் பிறபகுதிகளோடு குறிப்பாக கங்கை சமவெளி நகரங்களுடன் நெருங்கிய உள்நாட்டு வணிகம் நடைபெற்றுள்ளதைக் எடுத்துக்காட்டுகிறது.

    ஏற்கனவே மேற்கொண்ட அகழாய்வுகளில் பெறப்பட்ட கரிமப்பகுப்பாய்வுக் காலக்கணிப்பின்படி கி.மு.8-ஆம் நூற்றாண்டிற்கு முன்னரே கொற்கை மிக முக்கியத் துறைமுகமாக செயல்பட்டிருந்ததை சுட்டிக்காட்டுகிறது.

    இதற்கிடையில் கடந்த தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் கொற்கை துறைமுகத்தை கண்டுபிடிப்பதற்காக கடல் சார் ஆய்வு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதற்கு முன்னர் கடல்சார் முன்கள ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

    அதன்படி தூத்துக்குடி துறைமுகத்தில் இந்த கொற்கைத் துறைமுகத்தின் தொல்லியல் வளத்தினைக் கண்டறிய கடல்சார் ஆய்வினை மேற்கொள்ள இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் மற்றும் தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து கடல்சார் முன்கள ஆய்வு மேற்கொள்வதற்கான பணிகள் இன்று தொடங்கியது. அதனை தொழில்துறை மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், கலெக்டர் செந்தில்ராஜ், மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இந்த ஆய்வு தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து திருச்செந்தூர் வரை கடல் பகுதியில் நடைபெறுகிறது. வருகிற 9-ந்தேதி வரை இந்த ஆய்வில் இந்த நிறுவனத்தைச் சேர்ந்தவர்களும், தொல்லியல் அலுவலர்களும் ஈடுபடுகின்றனர்.

    ஆய்வின் முடிவில் கொற்கையில் புதைந்துள்ள மிகப்பெரிய துறைமுகமும், அதை சார்ந்த வரலாற்றுத்தகவல்களும் விரைவில் வெளிவரும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    • மக்களுக்காக மக்களால் உருவாக்கப்பட்ட ஆட்சி தி.மு.க. ஆட்சி.
    • திராவிட மாடல் என்றால் என்ன? என்ற கேள்விக்கு நான் முதல்-அமைச்சருடைய வார்த்தைகளில் இருந்து எடுத்துச் சொல்கிறேன்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் பொம்மைகுட்டைமேட்டில் தி.மு.க. சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகளுடைய முதல் மாநாடு நடைபெற்றது.

    இந்த மாநாட்டில் அமைச்சர் தங்கம் தென்னரசு, திராவிட மாடல் அரசின் ஓராண்டு காலம் என்ற தலைப்பில் பேசியதாவது-

    மக்களுக்காக மக்களால் உருவாக்கப்பட்ட ஆட்சி தி.மு.க. ஆட்சி.

    திராவிட மாடல் என்றால் என்ன? என்ற கேள்விக்கு நான் முதல்-அமைச்சருடைய வார்த்தைகளில் இருந்து எடுத்துச் சொல்கிறேன். தந்தை பெரியார் பேசிய சமூக சீர்திருத்த கோட்பாடுகள், சீர்திருத்தக்கருத்துக்கள், அரசியல் பொருளாதாரம், கல்வி மற்றும் தொழில் வளர்ச்சியுனுடைய அடிப்படையில் அடுத்த பரிணாமமாக அதை கொண்டு சேர்க்கக் கூடிய கட்டம்.

    சுய மரியாதை, சமூக நீதி, மதசார்பின்மை, கூட்டாட்சி தத்துவம், மாநில உரிமைகள், தமிழ் மொழிக்கான வளர்ச்சி ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு ஆட்சி முறையை கொண்டு வருவது தான் திராவிட மாடலுடைய ஆட்சி. அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் சட்டம், திறனுக்கு ஏற்ப வேலைவாய்ப்பு, சம வேலை வாய்ப்புகள் என எல்லா மாவட்டத்திலும், எல்லா துறைகளிலும் உருவாக்க தூணாக நிற்கும் திராவிட மாடல் ஆட்சி.

    திராவிட மாடல் ஆட்சி எல்லாவற்றையும் உருவாக்கும், எதையும் சிதைக்காது, சீர்தூக்கும், யாரையும் பிரிக்காது எல்லோரையும் ஒன்று சேர்க்கும். யாரையும் இந்த ஆட்சி தாழ்த்தாது அனைவரையும் சமமாக நடத்தும், யாரையும் இந்த ஆட்சி புறக்கணிக்காது தோளோடு தோள் நின்று அனைவரையும் அரவணைக்கும். இந்த கோட்பாடுகளைத்தான் ஆட்சி பொறுப்பு ஏற்று ஓராண்டு காலத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து இன்று நிரூபித்து வருகிறார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அமைச்சர் தங்கம் தென்னரசு, ராமேசுவரம் நடராஜபுரம், அண்ணா நகர் பகுதிகளில் மழைநீர் தேங்கும் இடங்களை பார்வையிட்டு தீயணைப்புத் துறையினரின் வெள்ள தடுப்பு உபகரணங்களையும் பார்வையிட்டார்.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம், ராமேசுவரம் பகுதியில் அமைச்சர் மற்றும் மாவட்ட கணிப்பாய்வு அமைச்சர் தங்கம் தென்னரசு வடகிழக்கு பருவ மழையையொட்டி செய்ய வேண்டிய முன்னேற்பாடு மற்றும் தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.

    அப்போது அமைச்சர் பேசுகையில், வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    முதல்-அமைச்சர் ராமநாதபுரம் மாவட்டத்தில் மழை தடுப்பு போல வெள்ள தடுப்புக்கான எல்லாவிதமான தடுப்பு நடவடிக்கைகளை மேற் கொள்ளவும் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாத வகையில் பாதுகாக்கவும் அறிவுறுத்தி உள்ளார்.

    எந்தந்த இடங்களில் தண்ணீர் தேங்குகிறதோ அதையெல்லாம் ஆய்வு செய்து வருகிறோம். ராமநாதபுரம் நகராட்சி பகுதிகளில் மழைநீர் தேங்காத வகையிலும் மற்ற நகராட்சி பகுதிகளிலும் மழைநீர் தேங்காத வகையில் மாவட்ட நிர்வாகம் முழுவீச்சில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    தொடர்ந்து 2, 3 நாட்களுக்கு கனமழை ராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த நேரத்தில் பொது மக்களுக்கு எந்தவிதமான பிரச்சினை இல்லாத வகையிலும், கால்நடைகள் மற்றும் பொதுமக்களின் உடமைகளுக்கு பாதிப்பு இல்லாத வகையில் இருப்பதற்காக தடுப்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மாவட்ட நிர்வாகம், காவல்துறை, மின்சார வாரியம் போன்ற அத்தியாவசிய துறைகள் அனைத்தும் முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றார்.

    முன்னதாக அமைச்சர் தங்கம் தென்னரசு, ராமேசுவரம் நடராஜபுரம், அண்ணா நகர் பகுதிகளில் மழைநீர் தேங்கும் இடங்களை பார்வையிட்டு தீயணைப்புத் துறையினரின் வெள்ள தடுப்பு உபகரணங்களையும் பார்வையிட்டார்.

    மண்டபம் ஊராட்சி ஒன்றியம் தங்கச்சிமடம், ஊராட்சி அய்யன் தோப்பு பகுதியில் மழைநீர் தேங்கும் இடங்களையும் பார்வையிட்டார். பாம்பன் பாலம் மற்றும் ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம் சக்கரக்கோட்டை கண்மாய், ராமநாதபுரம் பெரிய கண்மாய் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    கலெக்டர் சங்கர்லால் குமாவத், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக், நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி, சட்டமன்ற உறுப்பினர்கள் காதர் பாட்சா முத்துராமலிங்கம் (ராமநாதபுரம்), முருகேசன் (பரமக்குடி), கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி பிரவீன் குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    ×