search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எடப்பாடி பழனிசாமி ஊழல் மீதும் சட்டம் தன் கடமையை செய்யும்- நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு எச்சரிக்கை
    X

    எடப்பாடி பழனிசாமி ஊழல் மீதும் சட்டம் தன் கடமையை செய்யும்- நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு எச்சரிக்கை

    • எடப்பாடி பழனிசாமி யார் காலில் விழுந்து கும்பிட்டுப் பதவி பெற்றார்.
    • இரு முன்னாள் அமைச்சர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு குற்றப்பத்திரிகையாகத் தாக்கல் செய்யப்பட்டு விட்டது

    சென்னை:

    நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    "முதலீட்டை ஈர்க்கப் போகிறாரா அல்லது முதலீடு செய்யப் போகிறாரா?" என்று தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக முதலமைச்சர் சென்றுள்ள 9 நாள் வெளிநாட்டுப் பயணத்தை கொச்சைப்படுத்தியிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    அ.தி.மு.க. ஆட்சியில் தொழில் வளர்ச்சியை காலில் போட்டு மிதித்து, வர விரும்பிய தொழில் நிறுவனங்களையும் அண்டை மாநிலங்களுக்கு விரட்டி விட்டு ஆட்சி நடத்தியவர் எடப்பாடி பழனிசாமி. நான்காண்டு கால ஆட்சியில் "ஊரெங்கும் ஊழல்" என்ற முழக்கத்திற்கு சொந்தக்காரராக - கரன்சி மழையில் நனைந்து - ஊழலின் ஒட்டுமொத்த உருவமாகத் திகழ்ந்த எடப்பாடி பழனிசாமி, வெளிப்படைத்தன்மையோடு நடைபெறும் தி.மு.க. ஆட்சி மீது ஊழல் புகார் கூறுவதற்கு என்ன தகுதி இருக்கிறது என்ற கேள்வியை இன்று தமிழ்நாடே கேட்கிறது.

    முதன்முதலில் டாஸ்மாக் கடையைத் தெருவெல்லாம் திறந்த அ.தி.மு.க. ஆட்சியை மறந்துவிட்டு - அ.தி.மு.க. ஆட்சியில் கொத்துக் கொத்தாக கள்ளச்சாராயச் சாவுகள் அரங்கேறியதை வசதியாக மறைத்து, 4 ஆண்டு கள்ளச்சாராயம், குட்கா எனத் தமிழ்நாட்டை போதை மாநிலமாக மாற்றிய எடப்பாடி பழனிசாமி தி.மு.க. ஆட்சி பற்றி குறை கூறுகிறார்.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளிநாடுகளுக்கு முதலீடு பெறப்போகிறார் என்பதைத் தெரிந்துகொண்டு அதற்கு முதல் நாள் ஒரு பேரணியை நடத்தி - சட்டம் ஒழுங்கு சீர்குலைவு என ஒரு புகார் கொடுக்கிறார். பொள்ளாச்சியில் இளம்பெண்கள் கதறியபோது கண்ணை மூடிக்கொண்டு இருந்தவர் பழனிசாமி. அமைதியாக அறவழியில் போராடிய ஸ்டெர்லைட் போராட்டக் குழுவினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி 13 பேரை காக்கை குருவிகள் போல் சுட்டுத்தள்ளிவிட்டு, நான் டிவியில் பார்த்து தெரிந்து கொண்டேன் என்று பொய் சொன்னவர் பழனிசாமி; தனது துறையின்கீழ் பணியாற்றும் பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகள் மீதான பாலியல் புகார்களையே வேடிக்கை பார்த்தவர் இந்தப் பழனிசாமி என்பதுதான் வரலாறு.

    "துப்பாக்கிச்சூடு" எடப்பாடி பழனிசாமிக்குத் தெரிந்தே நடந்தது என்பதை துப்பாக்கிச் சூடு பற்றி விசாரிக்க நியமிக்கப்பட்ட விசாரணை கமிஷன் அறிவித்து, "பச்சைப் பொய் பழனிசாமியின் முகத்திரையை கிழித்து எறிந்துள்ளதை ஏனோ எதிர்க்கட்சித் தலைவர் வசதியாக மறந்துவிட்டு, இன்று தனது உட்கட்சி பிரச்சினையைத் திசை திருப்ப, தனது அமைச்சரவை சகாக்கள் இருவர் மீது சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றப்பத்திரிகையே தாக்கல் செய்யப்பட்டு விட்டதை மக்கள் மனங்களில் இருந்து மறைக்க "பேரணி" "புகார்" "அறிக்கை" என விட்டு நீலிக்கண்ணீர் வடிக்கிறார்.

    தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்குத் தேவையான முதலீடுகளை பெறப் போகும் முதலமைச்சர் மீது அவதூறு பேசுகிறார். அந்த அளவிற்கு அவருக்கு பொறாமையும் எரிச்சலும் மனதிற்குள் கோடை வெயிலை விட அனலாக கக்குகிறது. 13 நாள் பயணமாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு எடப்பாடி பழனிசாமி செல்வதற்கு முன்பு அவரது மகன் மிதுன் அங்கு போனது பழனிசாமியின் ஊழல் பணத்தை முதலீடு செய்வதற்குத்தானோ என்ற கேள்வி இப்போது எழுகிறது.

    அ.தி.மு.க.வின் அமைச்சரவையையே ஒவ்வொருவராக வெளிநாடுகளுக்கு அனுப்பி உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கிறேன் என்று கபட நாடகம் நடத்திச் "சுற்றுலா" சென்றது ஊழல் பணத்தை வெளிநாடுகளில் முதலீடு செய்வதற்குத்தானா?

    இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளிநாடு சென்று உள்ளது பற்றி அவதூறு பரப்பும் எடப்பாடி பழனிசாமி, தனது மகனும், அவரது அமைச்சரவை சகாக்களும் ஏன் சென்றார்கள் என்பதை விளக்குவாரா?

    கொடநாடு கொலை மற்றும் அங்கு நடைபெற்றதாக கூறப்பட்ட தற்கொலைக்கு அடையாளமாக இருந்த மரத்தை வெட்டி சாட்சியங்களை மறைத்தது போன்ற மர்மங்கள் விலகும்போது எடப்பாடி பழனிசாமியின் உண்மை முகம் தெரிய வரும் என்பதில் சந்தேகமில்லை! அதுவரை அவதூறுகளை முதலீடுகளாக வைத்து அசிங்கமான அரசியல் செய்யாமல் இருப்பது எடப்பாடி பழனிசாமிக்கு நல்லது.

    2015-ம் ஆண்டும் அ.தி.மு.க. ஆட்சியில் நடத்தப்பட்ட உலக முதலீட்டாளர்கள் மாநாடு ஒரு "அ.தி.மு.க. மாநாடு"! எடப்பாடி பழனிசாமி இருந்தபோது நடத்திய 2019-ம் ஆண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாடு எடுபடாத மாநாடு!

    போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் என "கணக்கு" காட்டப்பட்டதே தவிர, வந்த முதலீடுகள் எவ்வளவு என்று நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு பார்த்தால் எடப்பாடி பழனிசாமியின் நிர்வாக லட்சணமும், அவர் முதலீட்டை ஈர்த்த மாயத்தோற்றமும் வெட்ட வெளிச்சமாகி விட்டது. இதனைத் தொழில்துறை அமைச்சராக இருந்த நான் பல முறை சுட்டிக்காட்டியிருக்கிறேன். உலக முதலீட்டாளர்கள் மாநாடு என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமி நடத்தியது உலகச் சுற்றுலா மாநாடு!

    எங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அப்படி இல்லை. அ.தி.மு.க. ஆட்சியில் 10 ஆண்டு காலம் சீரழிந்த நிர்வாகத்தை சீர்ப்படுத்தி வருகிறார். படுபாதாளத்தில் விழுந்து கிடந்த நிதி நிலைமையை சரிசெய்து வருகிறார். சட்டம் - ஒழுங்கிற்கு சவால் விடும் எந்த விவகாரத்தையும் துணிச்சலுடன் எதிர்கொண்டு, தவறு செய்வோர் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கிறார். ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து தொழில் தொடங்க "முதலீடு பெறுவதை" ஒரு முழு முயற்சியாகவும் புதிய தொழில் நிறுவனங்களை உருவாக்கி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்து வதை தினசரிப் பணியாகவும் செய்து வருகிறார்.

    இப்போது ஜனவரி 2024 உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்புவிடச் செல்லும் முன்பு, துபாய் போனபோது எவ்வளவு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், எவ்வளவு முதலீடுகள் பெறப்பட்டுள்ளது என்பதை பட்டியலிட்டுள்ளார். ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு 9 நாள் பயணமாகப் புறப்படும் முன்பு பத்திரிகைக் குறிப்பு வாயிலாகவும், விமான நிலையத்தில் பேட்டி வாயிலாகவும், இதுவரை தொழில் துறையில் பெற்ற முதலீடுகள் - போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஆகியவற்றை வெளிப்படையாக அறிவித்து விட்டுச் சென்றுள்ளார்.

    ஆனால் இது எதையுமே படிக்காத எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டின் தொழில் முன்னேற்றத்திற்கும், தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தவும் நாள்தோறும் உழைக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பார்த்து தரக்குறைவாக - அவதூறாக - கீழ்தரமாகப் பேசி - அரசியல் நாகரிகத்திற்கும் தனக்கும் ஆயிரம் மைல் தொலைவு என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.

    எடப்பாடி பழனிசாமி யார் காலில் விழுந்து கும்பிட்டுப் பதவி பெற்றார். பிறகு விழுந்தவர் காலையே எப்படி வாரி விட்டார். "விபத்தில்" முதலமைச்சரான அவர் அப்பதவியை தக்கவைக்க நடத்திய "கூவத்தூர் கூத்து"; அங்கு நடந்த அருவருப்பான நடனங்கள், எம்.எல்.ஏ.க்கள் சுவர் ஏறித் தப்பி ஓடும் காட்சிகள், ஆம்னி பேருந்துகளில் அடைத்து எம்.எல்.ஏ.க்களைக் கொண்டு வந்து நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற்றது என அனைத்திலும் "கரன்சி பெட்டிகளை" கொடுத்து, தங்கக் கட்டிகளையும் கொடுத்தார் என்ற செய்திகளைப் படித்து அப்போதே ஒட்டுமொத்த தமிழ்நாடும் பார்த்ததை ஏனோ எடப்பாடி பழனிசாமி மறந்து விட்டார்.

    முதலமைச்சர் பொறுப்பைத் தக்கவைக்கப் பணம்; ஓ.பி.எஸ் தகராறில் பொதுக்குழுவைக் கூட்டப் பணம்; அதில் மெஜாரிட்டி உறுப்பினர்களைப் பெறப் பணம்; வேண்டிய தீர்மானத்தை நிறைவேற்றப் பணம்; எல்லாவற்றையும் விட, பொதுச் செயலாளர் பதவியைப் பெற "பெட்டி பெட்டியாக" பணம் என கட்சி அரசியலையும், அசிங்கமாக அவர் ஆட்சியில் விட்ட "கான்டிராக்ட் ஊழல்" அரசியல் போல் நடத்திப் பதவியைப் பெற்று, பவனி வந்து கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் தி.மு.க. ஆட்சியை, திராவிட மாடல் முதலமைச்சரைப் பற்றி குறை கூற தகுதியும் இல்லை. தார்மீக உரிமையும் இல்லை.

    இப்போது இரு முன்னாள் அமைச்சர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு குற்றப்பத்திரிகையாகத் தாக்கல் செய்யப்பட்டு விட்டது. அடுத்தடுத்து முன்னாள் அமைச்சர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்குகளில் மட்டுமல்ல,

    பழனிசாமியின் ஊழல் மீதும் சட்டம் தன் கடமையைச் செய்யும். நீதிமன்றப் படிக்கட்டுகளை எண்ண வேண்டியவர்கள், தங்கள் ஆட்சி ஊழலை மறைக்க இதுபோன்ற அவதூறு பரப்பும் வேலைகளில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×