search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lakshmi Narasimha"

    ஸ்ரீ லட்சுமி நரசிம்மரை வழிபட, பூஜிக்க சில விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
    ஸ்ரீலட்சுமி நரசிம்மரை வழிபட, பூஜிக்க சுத்தமான பூஜை அறை தேவை. அசைவம் எக்காரணம் கொண்டும் சாப்பிடக்கூடாது. பூஜைக்கு ஏற்ற நாள் வியாழக்கிழமை. ஏற்ற நட்சத்திரம் சுவாதி ஆகும். இதே போல வைகாசி மாதத்தில் வரும் நரசிம்மர் ஜெயந்தியும் வழிபாட்டுக்கு ஏற்ற நாட்கள் ஆகும். தினசரியும் நரசிம்மரையும் வழிபடலாம்.

    ஸ்ரீலட்சுமி நரசிம்மர் படம் வைத்து, அதற்கு பூ வைத்து, பத்தி வைத்து, நெய் விளக்கு ஏற்றி, ஸ்ரீலட்சுமி நரசிம்மர் படத்தை ‘12’ முறை வலம் வர வேண்டும். பானகம் நைவேத்தியம் செய்ய வேண்டும். இங்கு குறிப்பிடப்பட்டுள்ள காயத்திரி மந்திரம், ஸ்லோகம் அனைத்தையும் பூஜை செய்து வழிபட்டு படிக்கவும்.
    திருமங்கையாழ்வாரும் நம்மாழ்வாரும் சோளிங்கர் நரசிம்மப் பெருமானை அக்காரக்கனி என்று அழைத்துள்ளனர். பேயாழ்வாரும் திருமங்கை ஆழ்வாரும் கடிகை என்று சோளிங்கரைக் குறிப்பிட்டுள்ளனர்.
    பண்டெல்லாம் வேங்கடம் பாற்கடல் வைகுந்தம்
    கொண்டங் குறைவாயார்க்கு கோவில் போல் வண்டு
    வளம்கிளரும் நீர்சோலை வண்பூங் கடிகை
    இளங்குமரன் தன்விண்ணகர்.பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி. 61
    மிக்கானை மறையாய் விரிந்த விளக்கை என்னுள்
    புக்காளைப் புகழ்சேர் பொலிகின்ற பொன்மலையைத்
    தக்கானைக் கடிகைத் தடங்குன்றின் மிசையிருந்த
    அக்காரக் கனியை அடைந்துய்ந்து போனேனே.
    திருமங்கைஆழ்வார் பெரியதிருமொழி. 8-9-4.
    எக்காலத் தெந்தையாய் என்னுள் மன்னில்
    மற்றெக் காலத்திலும் யாதொன்றும் வேண்டேன்
    மிக்கார் வேதவிமலர் விழுங்குமென்
    அக்காரக் கனியே உன்னையே யானே.நம்மாழ்வார் திருவாய்மொழி. 2-9-8.

    திருமங்கையாழ்வாரும் நம்மாழ்வாரும் சோளிங்கர் நரசிம்மப் பெருமானை அக்காரக்கனி என்று அழைத்துள்ளனர். பேயாழ்வாரும் திருமங்கை ஆழ்வாரும் கடிகை என்று சோளிங்கரைக் குறிப்பிட்டுள்ளனர்.
    காஞ்சீபுரம் அடுத்த செவிலிமேடு பகுதியில் அமைந்துள்ளது சௌந்தர்யவல்லி சமேதே ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    காஞ்சீபுரம் அடுத்த செவிலிமேடு பகுதியில் அமைந்துள்ளது சௌந்தர்யவல்லி சமேதே ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில். காஞ்சீபுரம் நகரத்தில் இருந்து ஏறத்தாழ 3 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. ஏறத்தாழ 800 ஆண்டுகளுக்கு முன்பு பல்லவ வம்சத்தின் கடைசி மன்னரான ராஜேந்திர பல்லவர் காலத்தில் கட்டப்பட்டது.

    இந்த கோவிலில் செவ்வாய், சனிக் கிழமைகளில் நெய் விளக்கு ஏற்றி பயபக்தியுடன் சுவாமியை வழிபட்டால் திருமண வரம் கைகூடும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. திருக்கோயிலின் கருவறையில் பிரம்மாண்டமான முறையில் எழுந்தருளி அருள்பாலிக்கும் நரசிம்ம மூர்த்தியின் மடியில் காண்போரை பக்தி பரவசத்துடன் கவரும் சாந்த சொரூபியாக தாயர் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

    சித்ரா பவுர்ணமி அன்று காஞ்சீபுரம் வரதராஜப் பெருமாள் இந்த திருக்கோவிலுக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார் மேலும் திருக்கோவில் சார்பினில் மண்டகப்படியும் நடைபெறும். திருக்கோயிலின் ஈசான்ய பாகத்தில் கிழக்கு கைலாச நாதரும் வடக்கு மூலையில் மேற்கு நோக்கி அமர்ந்து கைலாச நாதரும் பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர்.

    மேலும் ஆலயத்தில் செல்லியம்மன், மாரியம்மன் சன்னதிகளும் உள்ளன. புரட்டாசி மாதம் அனைத்து சனிக்கிழமைகளிலும் இத் திருக்கோயிலில் நடைபெறும் சிறப்பு வழிபாடுகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் மேலும் இத் திருக்கோவிலுக்கு நெய் விளக்கு ஏற்றி வழிபட்டால் பூமி, நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளும் தீரும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.

    திருக்கோவில் காலை 8 மணி முதல் 10.30 வரையிலும் மாலை 5.30 மணி முதல் 7 மணி வரையும் திறந்திருக்கும். காஞ்சீபுரத்தில் இருந்து நகரப் பேருந்துகள் மற்றும் ஷேர் ஆட்டோக்கள் அதிக அளவில் செவிலிமேடு வழியாக இயக்கப்படுவதால் பக்தர்கள் காஞ்சிபுரத்தில் இருந்து பக்தர்கள் சிரமமின்றி இக் கோயிலுக்கு சென்று வரலாம்.

    அந்நியர்களால் நமது நாட்டில் படை யெடுப்பு நடந்தபோது இந்துக்கோவில்கள் பல சூறையாடப்பட்டும் இடித்தும் தள்ளப்பட்டன. அப்போது காஞ்சியில் உள்ள வரத ராஜ பெருமாள் ஆலயத்தின் உற்சவ விக்ரகங்களை பத்திர மாக பாது காக்க செவிலிமேட்டில் உள்ள இந்த ஆலயத்தில் எழுந்தருளச் செய்தனர்.
    சிலகாலம் காஞ்சி வரதருக்கு இங்கு திருமஞ்சனம், ஆராதனை, விழாக்கள் முதலியவற்றினை செவிலிமேட்டில் உள்ள இந்த ஆலயத்தில் செய்து வந்தனர்.

    அப்போது காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் ஆலயத்தில் இருந்து செவிலிமேட்டில் உள்ள லட்சுமி நரசிம்மர் ஆலயம் வரை சுரங்கப்பாதை அமைத்து வரதர் ஆலய உற்சவர்களை பத்திரமாக இங்கு கொண்டு வந்தனர். இப்போது விஷ ஜந்துக்கள் இருப்பதால் சுரங்கப்பாதையை மூடி வைத்துள்ளனர்.
    பலி பிடத்தைக் கடந்து உள்ளே சென்றால் சுமார் எட்டு அடி உயரமுள்ள துவார பாலகர்கள் இருபுறமும் நம்மை வரவேற்க நாம் மகிழ்ச்சியுடன் உள்ளே செல்லலாம்.

    மூலவர் கருணை தவழும் முகத்தோடும் இடது தொடையில் ஸ்ரீலட்சுமியை இடது கரத்தினால் அணைத்தவாறு மிகப் பெரிய வடிவில் லட்சுமி நரசிம்மராக காண்பவர்களின் கண்களுக்கு கருணைக்கடலாக அற்புத வடிவில் காட்சி தருகிறார். எம்பெருமான் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சேவை சாதிக்கிறார். உற்சவ மூர்த்தி சந்நிதியில் சௌந்தர்ய வரதர், கண்ணன், ஆண்டாள் ஆகிய சிலைகளைக் கண்டு சேவிக்கலாம்.

    இங்குள்ள மகாமண்டபத்தில் காஞ்சியின் தவமுனிவர் பரமாச்சார்யாளின் அனுக்கிரகத்தால் உருவான ஸ்ரீ ஆஞ்சநேயர் கலையழகுடன் அருட்காட்சி தருகிறார். ஆஞ்சநேயருக்குப்பின் இந்த ஆலயத்தில் பக்தர்களின் எண்ணிக்கை கூடி வருகிறது. மூலஸ்தானத்திற்கு நேராக பெரிய திருவடிகள் என்று போற்றப்படுகின்றவரும் பச்சைக் கல்லினால் உருவானவரும் ஆன ஸ்ரீ கருடாழ்வார் கைப்கூப்பிய நிலையில் பெருமாளை நோக்கி சேவை சாதிக்கிறார்.

    ஆலயப் பிராகாரத்தைச் சுற்றி வருகின்றபோது ராமர் மேடு என்று குறிப்பிடும் மண்டபம் உள்ளது. இதில் ஆதிசங்கரர், ராமானுஜர் உருவங்களைக் காண லாம். மற்றும் ஒரு சிறிய மண்டபத்தில் ஒரு கல் தூணில் ஆஞ்ச நேயரின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது.

    இந்த ஆலயத்தில் உள்ள தாயாருக்கு ஸ்ரீ சௌந்தரவல்லி என்ற திருநாமம் ஆகும். சுமார் 7 அடி உயரமுள்ள தாயாரின் உருவம் நம்மை பக்தி பரவ சத்தில் ஆழ்த்தும் கையிரண்டும் தானகவே ஒன்று சேர்ந்து அம்மா என்று அழைக்கும். உற்சவ விக்ரகமும் மிக எழிலான அலங்காரத்துடன் காட்சி தருகிறது.

    சோளிங்கபுரத்தில் யோக நிலையில் அருளும் அந்த சிங்கபிரானைச் சரணடைந்தால் மோட்சம் கிட்டும். பாவங்கள் நீங்கும். துன்பங்கள் பறந்தோடும்.
    நரசிம்மர் பல்வேறு வடிவங்களில் பல்வேறு தலங்களில் கோயில் கொண்டு அருள்கிறார். அவற்றில் ஒன்று, சோளிங்கர். ஒரு ஆண்டில் பதினோரு மாதங்கள் இத்தலத்தில் யோக நிலையிலேயே, கண்மூடி அமர்ந்திருக்கும் இந்த சிங்கபிரான், கார்த்திகை மாதம் மட்டும் கண் திறப்பதாக ஐதீகம். ஆகவே இத்தலத்தில் கார்த்திகை மாதம் முழுக்க திருவிழா கொண்டாடப்படுகிறது. இவருடன் அமிர்தவல்லித்தாயார், அருகிலுள்ள சிறிய மலையில் சங்கு, சக்கரபாணியாக யோக நிலையில் அனுமன் ஆகியோரும் அருள்பாலிக்கின்றனர்.

    திரேதாயுகத்தில் வாழ்ந்து வந்த இந்த்ரத்யும்னன் என்ற மன்னன், தன் தோள்களில் திருமாலின் சின்னங்களான சங்கு, சக்கர அடையாளங்களோடு பிறந்தவன். எப்போதும் ஹரி நாமத்தை மனதில் இருத்தி வாழ்ந்து வந்தான். தினமும் உறங்குவதற்கு முன், ஹரிநாமம் சொல்வது அவன் வழக்கம். ஒருநாள் அவனறியாமல், ‘ஹர’ என்று உச்சரித்தான்.

    உடனே ஈசன் அவனுக்கு தரிசனம் தந்து, ‘‘மன்னா, நீ கூறிய ஹர நாம ஒலியில் மகிழ்ந்தே நான் உனக்குக் காட்சி தந்தேன்’’ என்று கூறினார். மன்னனுக்கோ ஆனந்தம். ஒரே ஒருமுறை ஹர என்று சொன்னதற்கே ஈசன் தனக்கு தரிசனமளித்துவிட்டாரே! உடனே மகாதேவன், ‘‘நான் வேறு, திருமால் வேறு அல்ல. உனக்கு என்ன வரம் வேண்டும், கேள்’’ என்று கேட்க, தனக்கு மோட்சம் அருளுமாறு இந்த்ரத்யும்னன் வேண்டினான்.

    ஆனால் ஈசனோ, ‘‘நாராயணன் ஒருவனே மோட்சம் அளிக்க வல்லவன். பிரகலாதனுக்கு அருள் புரிந்த பின், உலகோர் அனைவருக்கும் அருள்புரியத் திருவுளம் கொண்டு கடிகாசலம் என்று விளங்கும் சோளிங்கபுரத்தில் நரசிம்ம மூர்த்தியாய் திருமால் வீற்றிருக்கிறார். அங்கு யோக நிலையில் அருளும் அந்த சிங்கபிரானைச் சரணடைந்தால் உனக்கு மோட்சம் கிட்டும்’’ என்று கூறினார். அதன்படியே இந்த்ரத்யும்னன் நரசிம்மரின் அருள்பெற்று உய்வடைந்தான்.

    சப்த ரிஷிகளும் வாமதேவர் எனும் முனிவரும் பிரகலாதனுக்குப் பெருமாள் காட்டியருளிய நரசிம்ம திருக்கோலத்தை தாங்களும் தரிசிக்க வேண்டுமென்று ஆவல் கொண்டனர். அதற்காக அவர்கள் சோளிங்கபுரம் வந்தடைந்து தவம் செய்தனர். அப்போது கும்போதரர், காலகேயர் போன்ற அரக்கர்களின் அட்டூழியங்கள் தலைவிரித்தாடின. தவம் செய்த முனிவர்களை அவர்கள் துன்புறுத்தினர்.

    அவர்களிடமிருந்து முனிவர்களை காக்க நரசிம்மர், அனுமனிடம் சங்கு, சக்கரங்களைக் கொடுத்து அரக்கர்களை கொல்ல ஆணையிட்டார். அரக்கர்கள் அழிவுக்குப்பின் சப்த ரிஷிகளும் ஆஞ்சநேயரும் இத்திருத்தலத்தில் நரசிம்மமூர்த்தியின் தரிசனம் பெற்று மகிழ்ந்தனர். நரசிம்மரின் ஆணைப்படி அவர் அருள் புரியும் பெரிய மலையின் அருகே உள்ள சிறிய மலையில் சங்கு சக்கரத்துடன் அமர்ந்து அனுமன் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்.
    திண்டிவனம் லட்சுமி நரசிம்மரை வழிபாடு செய்தால் செவ்வாய் தோஷம் நீங்கி திருமணம் கைகூடும். மேலும் சனியன்று வணங்கினால் கணவன், மனைவி இடையே உள்ள பிரச்னைகள் தீர்ந்து இணக்கம் அதிகரிக்கும்.
    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் அமைந்துள்ளது லட்சுமி நரசிம்மர் கோவில். இந்த கோவில் ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் கம்பீரமாக காட்சி அளிக்கிறது. இங்கு நரசிம்மர் இடது மடியில் லட்சுமி தேவியுடன் அமர்ந்த நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    பெருமாளின் உக்கிரத்தை குறைக்க தாயாரை மார்கண்டேய மகரிஷி வேண்டிக் கொண்டார். அதன்படி தாயார், பெருமாளை நோக்கி கைகூப்பி பக்தனுக்கு சாந்த மூர்த்தியாக அருள்பாலிக்கும் படி வேண்டி கொண்டார். அதன்பேரில் சாந்த மூர்த்தியாக பிரகலாத வரதனாக பெருமாள் காட்சி தந்தார். எனவே இந்த தலத்தில் தற்போதும் பக்தனுக்காக தாயார் கும்பிட்ட நிலையில் நரசிங்க பெருமாளோடு காட்சி அளித்து வருகிறார்.

    திண்டி, முண்டி, கிங்கிலி, கிலாலி ஆகிய அரக்கர்கள் வனத்தில் தவம் செய்த முனிவர்களுக்கு தொடர்ந்து தீங்கு செய்து வந்தனர். உடனே முனிவர்கள், நாராயணரை வேண்டினர். இதை ஏற்றுக்கொண்ட நாராயணர், அரக்கர்களை சம்ஹாரம் செய்ய அனுமாருக்கு தனது சங்கு, சக்கரத்தை கொடுத்து போருக்கு அனுப்பி வைத்தார். அதை பெற்றுக்கொண்ட அனுமர், அரக்கர்களை கொன்று முனிவர்களின் தவவேள்வியை நிறைவு பெற செய்தார். இதனால் இந்த கோவிலில் அனுமார் சங்கு, சக்கரத்தோடு 4 கைகளுடன் காட்சி அளிக்கிறார்.

    இத்தனை அற்புதங்களை கொண்ட லட்சுமி நரசிம்மரை வழிபட்டால் செல்வம் பெருகும். கடன் பிரச்சினை அகலும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். செவ்வாய் தோஷம் நீங்கும். திருமணம் கைகூடும். சாந்த மூர்த்தியாக தாயாருடன் காட்சிதரும் இத்தல நரசிம்மரை புரட்டாசி சனியன்று வணங்கினால் கணவன், மனைவி இடையே உள்ள பிரச்னைகள் தீர்ந்து இணக்கம் அதிகரிக்கும்.

    திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகிய 3 நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும், ராகுதிசை நடப்பவர்களுக்கும், ஏழரை சனியின் தாக்கத்தில் உள்ளவர்களுக்கும் இந்த கோவில் பரிகார தலமாக உள்ளது. கோவிலின் தெற்கு பிரகாரத்தில் தென்மேற்கு மூலையில் தாயார் சன்னதியும், வடமேற்கு பகுதியில் ஆண்டாள் சன்னதியும், பின்புறத்தில் ஆஞ்சநேயர் சன்னதியும் அமைந்துள்ளது.

    மேலும் இந்த கோவிலில் சக்கரத்தாழ்வார், கோதண்டராமர், வேணுகோபாலர் ஆகியோருக்கு தனி சன்னதிகள் உள்ளன. இந்த கோவிலில் தினமும் 2 கால பூஜைகள் நடந்து வருகிறது.

    விஷ்ணுவின் அவதாரங்களில் 4-வது அவதாரம் நரசிம்ம அவதாரமாகும். நரசிம்ம அவதாரம் எப்படி தோன்றியது என்பதற்கான புராண வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    விஷ்ணுவின் அவதாரங்களில் 4-வது அவதாரம் நரசிம்ம அவதாரமாகும். இந்த அவதாரத்தின்போது சிங்கத்தின் தலையுடனும், மனித உடலுடனும் விஷ்ணு பகவான் அவதாரம் எடுத்தார்.

    மற்ற அவதாரங்கள் அனைத்தும் திட்டமிட்டு நடந்தவை. ஆனால் நரசிம்ம அவதாரம் அப்படி அல்ல. அது தன் பக்தனை காக்க ஒரே நொடியில் தோன்றிய அவதார மாகும். இதன் காரணமாக மற்ற அவதாரங் களுக்கும், நரசிம்ம அவதாரத்துக்கும் மிகுந்த வித்தியாசம் உண்டு. நரசிம்மரிடம் சரண் அடைந்தால் பக்தர்கள் வைக்கும் வேண்டுதல்கள் அனைத்தும் உடனே நிறைவேறும் என்பது ஐதீகமாகும். எனவேதான் “நாளை என்பது நரசிம்மனிடம் இல்லை” என்பார்கள்.

    நரசிம்ம அவதாரம் எப்படி தோன்றியது என்பதற்கான புராண வரலாறு வருமாறு:-

    சத்யுகத்தில் காசியப முனிவருக்கும் தித்திக்கும் இரணியர்கள் என அழைக்கப்படும் இரணியகசிபு மற்றும் இரணியாக்சன் இரு அசுர சகோதரர்களும் பிறந்தனர். கூடலுக்கு ஆகாத அந்தி நேரத்தில் கூடியதால் அவர்களுக்கு அசுரர்கள் பிறந்து விட்டதாகக் கூறப்படுகிறது.

    வராக அவதாரத்தில் விஷ்ணுவால் இரணியாக்சன் கொல்லப்பட்ட பின்னர் வெகுண்ட இரணியன் விஷ்ணுவை அழிப்பதற்குத் தக்கபடித் தன்னை வலிய வனாக்கிக் கொள்ள பிரம்மாவை நோக்கித் தவமிருந் தான். பிரம்மாவும் காட்சி தந்தார். இரணியன் தனக்கு மனிதர்களாலோ, மிருகங்களாலோ, பறவைகளாலோ, இரவிலோ, பகலிலோ வீட்டிற்கு உள்ளேயோ, வெளியேயோ எந்தவித ஆயுதத்தாலும் மரணம் சம்பவிக்கக் கூடாது.

    எவ்வுலகிலும் தனக்குப் போட்டியாக யாருமே இருக்கக்கூடாது. அனைத்து உயிரினங்களுக்கும் கடவுளருக்கும் தான் மட்டுமே தலைவனாக இருக்க வேண்டும். அத்தகைய சக்தி வேண்டும். யோகங்களினாலும் தவத்தாலும் அடையக்கூடிய காலத்தால் அழியாத வல்லமை தனக்கு வேண்டும் என்று மிக புத்திசாலித்தனமாக வரம் கேட்டான். பிரம்மாவும் அவன் கேட்ட வரத்தை அளித்தார். கிடைத்த சக்தியை வைத்துக்கொண்டு அட்டூழியங்கள் புரிய ஆரம்பித்தான் இரணியன், அவனை அடக்க யாராலும் முடியவில்லை.

    இந்த நிலையில் கொடிய அரக்கனான இரண்யகசிபுக்கும் கயாதுக்கும் மகனாக பிரகலாதன் பிறந்தான். இரணியகசிபு, தான் பெற்ற சாகா வரத்தால் ஈரேழு உலகத்திலும் ஆட்சி புரிந்து வந்தான். தான்தான் கடவுள் என்றும் அனைவரும் தன்னைத்தான் வணங்க வேண்டும் என்றும் அனைவரையும் கட்டாயப்படுத்தி வந்தான்.

    அவனது மனைவி கர்ப்பம் தரித்தாள். நாரத மாமுனி ஆனவர், தாயின் கர்ப்பத்தில் இருந்த குழந்தை பிரகலாதனுக்கு அரி ஸ்ரீமன் நாராயணன் (விஷ்ணு) தான் இந்த ஈரேழு உலகத்திற்கும் கடவுள் என்று போதித்து விட்டார்.

    பிரகலாதன் பிறந்து அவன் கல்வி பயிலும் காலம் வந்ததும் அவனுக்கு அசுரர்களின் குருவான சுக்கிராச்சாரியார் இரணியன் தான் கடவுள் என்று போதிக்க, பிரகலாதன் அரி ஸ்ரீமன் நாராயணன் தான் தன் கடவுள் என்று சாதித்தான். இந்தச் செய்தியறிந்த இரணியன் பிரகலாதனை மாற்றச் சாம, பேத, தான தண்டம் என பலவிதங்களிலும் முயற்சி செய்தான். அவனது முயற்சிகள் எல்லாம் தோல்வியில் முடிந்தன.

    ஆத்திரமடைந்த இரணியன் தன் மகன் என்றும் பாராமல் கொல்ல முயற்சி செய்தான். ஆனால் ஒவ்வொரு முறையும் தோல்வியே அடைந்தான். யானையின் காலால் இடரச் செய்தல், கொடிய விஷம் கொண்ட பாம்புகளோடு அடைத்து வைத்தல், விஷமருந்து செய்தல், தீக்குள் இறங்கச் செய்தல் போன்ற அவனது கொடுமுயற்சிகளில் இருந்து பிரகலாதன், தான் கொண்ட அசைக்க முடியாத விஷ்ணு பக்தியினால் விஷ்ணுவின் உதவியால் காப்பாற்றப்பட்டதாகப் புராணங்கள் கூறுகின்றன.

    இரணியனின் சகோதரி ஹோலிகா அவளை நெருப்பு தீண்டாத வரம் பெற்றிருந்தாள். அவள் மடியில் பிரகலாதனை உட்கார வைத்து தீக்குள் இறக்கிய போது பிரகலாதன் விஷ்ணு பெயரைச் சொல்லி வேண்ட நெருப்பு பிரகலாதனை ஒன்றும் செய்யவில்லை, மாறாக ஹோலிகா நெருப்பில் மாண்டாள். இந்நிகழ்வு இந்தியாவில் ஹோலிப் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது.

    பிரகலாதனைக் கொல்லத் தான் எடுத்த முயற்சிகளில் எல்லாம் தோற்றுப்போன இரணியன் தானே நேராகப் பிரகலாதனைக் கொல்லப் போன போதும் பிரகலாதன் பயமின்றி தான் வணங்கும் கடவுள் தன்னைக் காப்பார் என்றான். அது கேட்டு ஆத்திரத்தில் அறிவிழந்தவனாக இரணியன் விஷ்ணுவைத் தானே கொல்லப் போவதாகக் கூறி உன் கடவுளைக் காட்டு என பிரகலாதனிடம் கேட்க, பிரகலாதனோ தன் கடவுள் அரி ஸ்ரீமன் நாராயணர் எங்கும் இருப்பார் எதிலும் இருப்பார், ஏன் தூணிலும் இருப்பார் எந்தத் துரும்பிலும் இருப்பார் என்று கூறினான்.

    இரணியன் ஒரு தூணைக் காட்டி, இந்த தூணில் உள்ளாரா என்று கேட்டான். ஏனெனில் அந்த தூண், இரணியனே பார்த்து, பார்த்து கட்டிய தூணாகும். பிரகலாதனோ இதை உடைத்து சோதித்துப் பாருங்கள் தந்தையே என்று கூறினான்.

    இரணியன் அந்தத் தூணை உடைக்க, ஸ்ரீமன் நராயணர், நரசிம்ம அவதாரம் (மனிதன் பாதி சிங்கம் பாதி) பூண்டு தூணில் இருந்து வெளிவந்தார். இரணியன் பெற்ற சாகா வரங்கள் பலிக்காத வகையில் அவனை வதம் செய்து பிரகலாதனைக் காத்தருளினார்.

    இரணியனைக் கொன்ற பின்பும் நரசிம்மரின் சீற்றம் தணியவில்லை. சிவன் உட்பட பிற தெய்வங்களால் அவரைச் சாந்தமடையச் செய்ய முடியவில்லை. அதனால் அவர்கள் விஷ்ணுவின் தேவியான லட்சுமியை நாடினர். ஆனால் லட்சுமியாலும் அவரை அமைதிப்படுத்த முடியவில்லை.

    பின் பிரம்மாவின் ஆலோசனைப்படி பிரகலாதனை நரசிம்மரின் முன் நிறுத்தினர். அவனது அதீதமான பக்தியாலும் வேண்டுதலாலும் நரசிம்மரின் சினம் அடங்கியது. அப்போது லட்சுமியும், நரசிம்மரை சாந்தப்படுத்தினார். அதன் பிறகு அவர் பிரகலாதனுக்கு மன்னனாக முடிச்சூட்டி அவனை வாழ்த்தினார்.

    நரசிம்மருக்கு பல்வேறு வடிவங்கள் புகழ்ந்து கூறப்படுகின்றன. அதில் மிகமிக முக்கியமானது லட்சுமி நரசிம்மர் வடிவமாகும். லட்சுமி நரசிம்மரை வழிபட்டால் தான் இந்த பிறவியானது அனைத்து வகையிலும் பூர்த்தியாகும். 
    கீழே கொடுக்கப்பட்டுள்ள நரசிம்மர் ஸ்லோகம் கைமேல் பலனளிக்கும் சக்தி வாய்ந்த சுலோகமாகும். இதை முறையாக கடைப்பிடித்தால் 48 நாட்களுக்குள் எண்ணிய செயல் கைகூடும்.
    அறிந்தோ, அறியாமலோ செய்த பாவங்களால் கிடைத்து வரும் தண்டனையில் இருந்து விடுபட லட்சுமி நரசிம்மரை வழிபட வேண்டும். நரசிம்மரை முழுமையாக சரணடைந்து ‘ஓம் நமோ நாராயணாய’ எனகூறி வழிபட்டால் தாயுள்ளம் படைத்த அவர் தண்டனையில் இருந்து விடுதலை கிடைக்க செய்வார். தினமும் குளித்துவிட்டு நரசிம்மபிரபத்தி ஸ்லோகத்தை 3, 12, 28 என பாராயணம் செய்ய வேண்டும்.

    ‘நரசிம்மரே தாய்;
    நரசிம்மரே தந்தை, சகோதரனும் நரசிம்மரே,
    தோழனும் நரசிம்மரே, அறிவும் நரசிம்மரே,
    செல்வமும் நரசிம்மரே, எஜமானனும் நரசிம்மரே.
    இவ்வுலகத்தில் நரசிம்மரே,
    அவ்வுலகத்திலும் நரசிம்மரே, எங்கெங்கு
    செல்கிறாயோ, அங்கெல்லாம் நரசிம்மரே’.
    நரசிம்மரை காட்டிலும்
    உயர்ந்தவர் எவரும் இல்லை.
    அதனால் நரசிம்மரே உம்மை சரணடைகிறேன்.

    இந்த சுலோகத்தை சொல்லி லட்சுமி நரசிம்மரின் முன்விளக்கேற்ற வேண்டும். காய்ச்சி ஆறவைத்த பசும்பால் அல்லது பானகத்தை நைவேத்தியம் செய்ய வேண்டும். இந்த பிரசாதத்தை குடும்பத்தினர் அனைவரும் சாப்பிட்டு வர வேண்டும். கைமேல் பலனளிக்கும் சக்தி வாய்ந்த சுலோகம் இது. இதை முறையாக கடைப்பிடித்தால் 48 நாட்களுக்குள் எண்ணிய செயல் கைகூடும்.
    விழுப்புரம் மாவட்டம் அந்திலி லட்சுமிநரசிம்மர் கோவிலில் உள்ள நரசிம்மரை வழிபட்டால் கடன் தொல்லை, எதிரிகளால் உண்டாகும் பிரச்சினைகள் விலகும்.
    விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் இருந்து 6 கிலோ மீட்டர் தூரத்திலும், அரகண்டநல்லூர் அருகே 2 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது அந்திலி லட்சுமிநரசிம்மர் கோவில்.

    இந்த கோவில் அரசமரத்தடியில் கருட வடிவிலான சிறிய பாறையின் மீது அமைந்துள்ளது. கோவிலில் நரசிம்மர் மீது ஆண்டு முழுவதும் சூரிய ஒளி படுவது போல் அமைக்கப்பட்டுள்ளது மிக சிறப்பு அம்சம் ஆகும். மகாவிஷ்ணு தனது நரசிம்ம அவதாரத்தில் தூணில் இருந்து தோன்றி இரணியனை அழித்து பக்த பிரகலாதனை காப்பாற்றினார். அப்போது மகாவிஷ்ணு கருட வாகனத்தை பயன்படுத்தவில்லை.

    எந்த சூழ்நிலையிலும் தன் மீதே அமர்ந்து பயணம் செய்யும் மகாவிஷ்ணு இந்த முறை பரமபதத்தின் மூலம் தூணில் இருந்து தோன்றி பக்த பிரகலாதனை காப்பாற்றி காட்சியளிக்க காரணம் என்ன? தான் (கருடன்) ஏதாவது தவறு செய்து விட்டோமா? அதனால்தான் நம்மீது பயணம் செய்வதை மகாவிஷ்ணு தவிர்த்து விட்டாரோ என்று கருட பகவான் குழப்பம் அடைந்தார்.

    உடனே பூமிக்கு வந்து தென்பெண்ணை நதிக்கரையின் அருகில் உள்ள கருட வடிவிலான பாறையில் அமர்ந்து கடும் தவம் மேற்கொண்டார். கருடனின் கடும் தவத்தை பார்த்த மகாவிஷ்ணு நேரில் வந்து கருடனின் முன்பு தோன்றி, என்ன வரம் வேண்டும் என்று கேட்டார்.

    அதற்கு கருடன், பக்த பிரகலாதனுக்கு நரசிம்மராக காட்சியளித்த நீங்கள், எனக்கும் நரசிம்மராக காட்சியளிக்க வேண்டும் என்று கூறினார். இதைகேட்ட மகாவிஷ்ணு கருடன் முன்பு நரசிம்மராக காட்சியளித்தார்.அப்போது மகாலட்சுமியும், மகா விஷ்ணுவின் மடியில் அமர்ந்து கருடனுக்கு காட்சியளித்த காரணத்தால் இந்த கோவிலில் லட்சுமி நரசிம்மராக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

    இந்த கோவிலுக்கு பல மகான்கள் வந்து தரிசித்து சென்றுள்ளதாக வரலாறுகள் கூறுகின்றன. கோவிலில் உள்ள நரசிம்மரை வழிபட்டால் கடன் தொல்லை, எதிரிகளால் உண்டாகும் பிரச்சினைகள் விலகும். திருமண தடை நீங்கும். கண் சம்மந்தப்பட்ட பிரச்சினை உள்ளவர்கள் விரைவில் குணமடைவார்கள். குழந்தை பாக்கியம் வேண்டுபவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

    குறிப்பாக மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைவதாகவும் கூறுகின்றனர். தங்கள் பிரார்த்தனை நிறைவேறியவுடன் லட்சுமி நரசிம்மருக்கு திருமஞ்சனம் சாற்றுதல், ஹோமம் செய்தல் போன்ற நேர்த்திக்கடன் செலுத்தி வழிபடுகின்றனர்.

    மதுரை அருகே உள்ள யானை மலை ஒத்தக்கடை என்ற இடத்தில் உள்ள யோக நரசிம்மரை வழிபாடு செய்தால் எதிரி பயம் விலகும். மரண பயம் அகலும். திருமணத்தடை நீங்கும்.
    மதுரை அருகே உள்ள யானை மலை ஒத்தக்கடை என்ற இடத்தில் உள்ளது யோக நரசிம்மர் ஆலயம். மிகவும் பழமை வாய்ந்த இந்த ஆலயத்தில் மூலவராக யோக நரசிம்மர் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். தாயார் பெயர் நரசிங்கவல்லி. ஆலய தீர்த்தம் சக்கர தீர்த்தமாகும். இது ஒரு குடவறைக் கோவிலாகும். நரசிம்மர் வீற்றிருக்கும் ஆலயங்களிலேயே மிகப் பெரிய உருவத்தை கொண்ட ஆலயம் இது என்பது தனிச் சிறப்பாகும்.

    இத்தலத்தில் இருக்கும் யோக நரசிம்மர், தன் மார்பினில் மகாலட்சுமியை தாங்கியபடி மேற்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார். இந்த ஆலயத்தில் கொடி மரம் இல்லை. இதற்குக் காரண மாக செவி வழிச் செய்தி ஒன்று சொல்லப்படுகிறது. பொதுவாக கொடி மரம் என்பது, கருவறைக்கு மேலுள்ள விமானத்தின் நீளம், அகல அளவைப் பொறுத்ததே. ஆனால் இத்தலத்தில் கரு வறைக்கு மேல், யானை மலை மிகவும் உயர்ந்து காணப்படுவதால் கொடி மரம் வைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    நரசிம்மராக அவதாரம் எடுத்தது, தேய்பிறை சதுர்த்தி காலத்தில்தான். எனவே அந்த நேரத்தில் இந்த யோக நரசிம்மரை வழிபட்டால், கல்வி சிறக்கும். வியாபாரம் விருத்தியாகும். எதிரி பயம் விலகும். மரண பயம் அகலும். அதே போல் நரசிங்கவல்லி தாயாரை வணங்கினால் திருமணத்தடை நீங்கும். கோபம் குறைந்து அமைதியான வழியில் செல்ல வழி ஏற்படும் என்பது அனுபவ உண்மையாகும்.

    இந்த ஆலயத்தின் அருகே உள்ள தீர்த்தத்தில் மாசி மாத பவுர்ணமி தினத்தன்று கஜேந்திர மோட்ச விழா சிறப்பாக நடத்தப்படுகிறது. திருவண்ணாமலையைப் போலவே இங்கும் ஒவ்வொரு பவுர்ணமி தோறும் கிரிவலம் நடைபெறுகிறது. இத்தலத்தில் சிவபெருமானுக்கு நடக்கிற பிரதோஷம் போல, நரசிம்ம ருக்கு பிரதோஷ பூஜை நடப்பது மிகவும் சிறப்பானதாகும். இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 11 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும்.

    அமைவிடம்

    மதுரையில் இருந்து சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் இருந்து சுமார் 8 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது யானை மலை ஒத்தக்கடை. இங்கிருந்து மினி பஸ்களில் 2 கிலோ மீட்டர் மேற்கே சென்றால் கோவிலை அடையலாம்.
    காஞ்சீபுரம் மாவட்டம் தென்னேரி அருகில் கட்டவாக்கத்தில் ஸ்ரீ விஸ்வரூப லட்சுமி நரசிம்மர் கோவில் அமைந்துள்ளது.
    காஞ்சீபுரம் மாவட்டம் தென்னேரி அருகில் கட்டவாக்கத்தில் ஸ்ரீ விஸ்வரூப லட்சுமி நரசிம்மர் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆதார பீடம், கூர்ம பீடம், பத்ம பீடம், அநந்த பீடம்,யோக பீடம் ஆகிய ஐந்து பீடங்களின் மேல் கம்பீரமாக வீற்றிருக்கும் பெருமாளுக்கு மேல் இரண்டு கரங்களில் சக்கரமும், வில், அம்பும் தாங்கி மற்றும் அபய வரத அஸ்தத்துடன் குளிர காட்சிக்கும் பாணியானது வந்தாரை வாழ வைக்கும் பெருமாள் என்பதை உறுதிப்படுத்துகிறது.

    மகாலட்சுமியுடன் கூடிய இந்த நரசிம்மருக்கு த்ரிநேத்ரம் அமைந்துள்ளது “அருள்விழியால் நோக்கி கருணை மழை பொழிய இரு கண்ணும் போதாமல் முக்கண்ணனாக சேவை சாதிக்கிறார்” மடியில் வீற்றிருக்கும் தாயார் தாமரை தாங்கிய அபய அஸ்தத்துடன் மிகவும் சாந்தமான தோற்றத்துடன் எழுந்தருளியிருப்பதை காண்கில் அருள் பொழியும் திவ்ய தம்பதிகள் இவர்கள்தான் என்பதை ஊர்ஜிதப்படுத்தும்.

    இங்கு எழுந்தருளி இருக்கும் நரசிம்மனுக்கு வஸ்ரதம்ஷ்ட்ரங்கள் (பற்கள்) 12 அமைந்திருக்கின்றன. இது 27 நட்சத்திரங்கள் அடங்கிய 12 ராசிகளைக் குறிக்கும்.
    திருமுக மண்டலத்தில் இடது கண் சந்திரன், வலது கண் சூரியன், நெற்றிக்கண் செவ்வாய்,நாசி சுக்ரன், மேல் உதடு குரு, கீழ் உதடு புதன், வலது காதில் கேது, இடது காதில் ராகு, நாக்கில் சனி பகவான் ஆக நவக்கிரகங்களும் பெருமானுடைய திருமுக மண்டலத்தில் ஐக்கியமாகி இருப்பதால் இது ஒரு பரிகார தலமாக விளங்குகிறது.

    பெருமாளின் அமைப்பு ஆறு அவதாரங்களையும், தாங்கி இருக்கும் ஆயுதங்கள் 4 அவதாரங்களையும் நினைவுபடுத்தும். கூர்ம பீடம் கூர்மாவதாரத்தையும், வஜ்ரதம்ஷ்ட்ரம வராக அவதாரத்தையும், வில் அம்பு (பார்கவ அஸ்திரம்) பரசுராம், ராம அவதாரங்களையும், சக்கரமானது கிருஷ்ண அவதாரத்தையும் நினைவுபடுத்துகிறது. மேலும் தாங்கியுள்ள ஆயுதங்களும் ஜய விஜயர்களுக்கு ஏற்பட்ட சாபத்தினால் அவர்களை வதம் பண்ண பெருமாள் 3 பிறவிகளில் உபயோகித்த ஆயுதங்கள் ஆகியவற்றையும் இந்த நரசிம்மனே தாங்கியிருப்பது விசேஷ அம்சம்.

    மேலும் விவரங்கள் அறிய செல் : 9444225091, 94437 74775, 94447 11031.
    திருமணம் தடைப்படுபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்லோகத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும்.
    காமேஸ்வராய காமாய காமபாலாய காமிநே!
    என்று தொடங்கும் இந்த சுலோகத்தின் இரண்டாம் பாதியையும்,
    நம: காமவிஹாராய காமரூபதராயச!!

    என்று தொடங்கும் இந்த சுலோகத்தின் முன் பாதியையும் சேர்த்து படித்து வந்தால் விவாஹ பலன் விரைவில் கிட்டும்.
    ஹிரண்யசசிபுவை வதம் செய்த பிறகு தமிழகத்தில் 8 இடங்களில் நரசிம்மர் காட்சிக் கொடுத்தார். அதில் நடுநாயகமாக பூவரசன்குப்பம் தலம் உள்ளது.
    ஹிரண்யசசிபுவை வதம் செய்த பிறகு தமிழகத்தில் 8 இடங்களில் நரசிம்மர் காட்சிக் கொடுத்தார். அதில் நடுநாயகமாக பூவரசன்குப்பம் தலம் உள்ளது. சப்தரிஷிகளும் இங்கு தவம் செய்து நரசிம்மர் காட்சியைப் பெற்றுள்ளனர். பூவரசன்குப்பம் 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்ற சிறப்புப் பெற்றது.
    இங்கு சுவாமிகளுக்கு திருமண் சாத்தப்படுவதில்லை. கஸ்தூரி திலகம் மட்டுமே வைக்கப்படுகிறது. அதுபோல ராமானுஜர் காலத்துக்கு முந்தைய சங்கு, சக்கரம் முறையே இங்கு நடைமுறையில் உள்ளது.

    சுவாதி நட்சத்திர நாளில் இத்தலத்தில் ஹோமம் செய்து வழிபடுவது அதிக பலன்களைத் தரும். தன்வந்திரி ஹோமமும், சுதர்சன ஹோமமும் இத்தலத்தில் அதிக அளவில் நடத்தப்படுகிறது. ஹிரண்யகசிபு வதம் முடிந்ததும் நரசிம்மர், முதன் முதலாக பூவரசன் குப்பத்தில்தான் தாயாருடன் காட்சிக் கொடுத்தார். எனவே இத்தலம் “தென் அகோபிலம்” என்று புகழப்படுகிறது.

    அகோபிலத்தில் உள்ள லட்சுமி நரசிம்மரும், பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மரும் அளவு, உயரம், அகலம், அழகு, வடிவமைப்பு உள்பட அனைத்து அம்சங்களிலும் ஒரேமாதிரி இருப்பது குறிப்பிடத்தக்கது. இத்தலத்தில் நரசிம்மரிடம் நாம் நம்மை ஒப்படைத்து விட்டால் ரூணம் (கடன்) ரோகம் (நோய்) சத்ரு (எதிரி) ஆகிய மூன்று தொல்லைகளில் இருந்து விடுபடலாம்.

    சுவாதி நட்சத்திரத்தினத்தன்று இத் தலத்தில் காலை 6 மணி முதல் 7 மணி வரை திருமஞ்சனம், 9 மணிக்கு ஹோமப் பூஜைகள் 12 மணிக்கு பூர்ணாஹ§தியும், மதியம் 1 மணிக்கு கலசதீர்த்தமும் நடைபெறும்.

    2004-ம் ஆண்டு இத்தலத்தில் திருப்பணி செய்யும்போது ஆண்டாள் சன்னதி அருகே தோண்டியதில் அபூர்வமான பெருமாள் சிலை ஒன்று கிடைத்தது. அந்த பெரு மாளுக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றன. 12 நவராத்திரி நாட்களில் இத்தலத்தில் நடக்கும் ஹோம பூஜைகள் மிகவும் சிறப்பு வாய்ந்தது. 10 டன் பழ வகைகள், சுமார் ஆயிரம் லிட்டர் நெய், தேன் அந்த யாகத்தில் பயன்படுத்தப்படும்.

    தேர்தலில் போட்டியிடுபவர்கள் இத்தலத்தில் சிறப்பு வழிபாடு செய்வது நடைமுறையில் உள்ளது. முப்பதாறு சுவாதி நாட்களில் இங்கு வழிபட்டால் நினைத்தது நடக்கும். சனி, புதன்கிழமைகளில் இத்தலத்தில் வழிபடுவதை பக்தர்கள் சிறப்பாக கருதுகிறார்கள்.
    ×