search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kodanad robbery"

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 5.30 மணிக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து கொடநாடு விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடக்கோரி புகார் மனு அளிக்கிறார். #KodanadIssue #DMK #MKStalin
    சென்னை:

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் 2017-ம் ஆண்டு கொள்ளை சம்பவம் நடந்தது. அங்கிருந்த முக்கிய ஆவணங்கள் மாயமாயின.

    இதை மறைப்பதற்காக ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் உள்பட 5 பேர் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டதாக இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் கேரளாவை சேர்ந்த கூலிப்படை தலைவன் ‌சயான், மற் றொரு குற்றவாளி மனோஜ், தெகல்கா இணையதள புலனாய்வு பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத் யூஸ் சாமுவேல் ஆகியோர் கடந்த 11-ந்தேதி டெல்லியில் பேட்டி அளித்தனர். அப்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது அவர்கள் குற்றம் சாட்டினார்கள்.

    கொடநாடு கொலை- கொள்ளை சம்பவங்கள் தொடர்பான ஆவண படத்தையும் வெளியிட்டனர். இந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    தன் மீதான குற்றச்சாட்டுகளை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மறுத்ததுடன் இந்த குற்றச்சாட்டில் அரசியல் பின்புலம் இருப்பதாக கருதுகிறேன் என்றார். இது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

    இந்த நிலையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கொடநாடு விவகாரம் தொடர்பாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலகவேண்டும். சிறப்பு விசாரணை ஆணையத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும். ஐகோர்ட்டில் நீதிபதி மேற்பார்வையில் இந்த விசாரணை நடத்தப்படவேண்டும்.

    முதல்-அமைச்சரை அழைத்து ஜனாதிபதியும், கவர்னரும் விளக்கம் கேட்க வேண்டும்.


    இந்த பிரச்சனையை ஜனாதிபதி, கவர்னர் ஆகியோரின் கவனத்துக்கு தி.மு.க. கொண்டு செல்ல இருக்கிறது. இன்று கவர்னரிடம் புகார் மனு அளிக்க உள்ளோம் என்றார்.

    இதையடுத்து கவர்னரை மு.க.ஸ்டாலின் சந்திக்க நேரம் கேட்கப்பட்டது. அதன்படி கவர்னரை சந்திக்க மு.க.ஸ்டாலினுக்கு இன்று மாலை 5.30 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து மாலை 5.30 மணிக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை, மு.க.ஸ்டாலின் சந்தித்து கொடநாடு விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடக்கோரி புகார் மனு அளிக்கிறார். #KodanadIssue #DMK #MKStalin #BanwarilalPurohit
    தமிழக அரசு உடனடியாக ஒரு முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து கொடநாடு விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களை விசாரித்து கண்டறிய வேண்டும் என்று ஞானதேசிகன் வலியுறுத்தியுள்ளார். #Kodanad #TamilMaanilaCongress
    சென்னை:

    த.மா.கா. துணைத் தலைவர் ஞானதேசிகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கொடநாடு எஸ்டேட் கொலை-கொள்ளை விவகாரத்தில் திடீரென்று இதில் சம்பந்தப்பட்ட இரண்டு குற்றவாளிகள் சயன் மற்றும் மனோஜை டெல்லியில் பத்திரிகையாளர்கள் முன்பு நிறுத்தி ஒரு சந்திப்பு நடத்தி இருக்கிறார்கள். இவர்களை கொடநாடு அனுப்பியது தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான் என்று சொல்ல வைத்திருப்பதால் இதன் பின்னணி என்ன என்பதை தமிழக அரசு உடனே ஆய்வு செய்ய வேண்டும்.

    பத்திரிகையாளர் சந்திப்பில் சயன் தனக்கும் தற்போதைய முதல்வருக்கும் தொடர்பு இருப்பதாகவோ, முதல்வர் சொல்லித்தான் தான் ஆட்களை கொடநாடு கூட்டிச் சென்றதாகவோ சொல்லவில்லை.

    மாறாக மறைந்த கனகராஜ் தன்னை தொடர்பு கொண்டு தற்போதைய முதல்வர் அவரிடம் சொல்லி அதனால் இந்த ஏற்பாட்டை செய்ய வேண்டுமென்று கூறியதாக கூறியிருக்கிறார். அந்த கனகராஜ் இன்று உயிரோடு இல்லை என்பதை சாதகமாக எடுத்துக் கொண்டு இந்த கருத்தை கூறி இருக்கலாம்.

    இந்திய சாட்சிய சட்டம் 60-ன்படி எந்த சாட்சியமும் நேரடியாக தொடர்புள்ளதாக இருக்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் சயனின் கூற்று ஏற்புடையதல்ல.

    இப்படி ஒரு கூற்றை இந்த நேரத்தில் ஏன் சொல்ல வேண்டும் என்பது மிகப்பெரிய கேள்விக்குறி? டெல்லியில் உள்ள சாமுவேல் மாத்யேவுக்கும், கேரளாவை சேர்ந்த சயனுக்கும் என்ன தொடர்பு? சயனையும், மனோஜையும் டெல்லியில் பத்திரிகையாளர் சந்திப்புக்கு கூட்டிச் சென்றது யார்? இதற்கான செலவுகளை ஏற்றது யார்? இதன் பின்னணி என்ன என்பதை எல்லாம் மிக விரைவாக தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும். யார் வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் சொல்லலாம்.

    அதன் அடிப்படையில் மிகப்பெரிய அதிகாரத்தில் உள்ளவர்கள் ஒரு நாட்டையோ, மாநிலத்தையோ தலைமை தாங்குபவர்கள் மீது போகிற போக்கில் சேற்றை வாரி பூசுவது என்பது அனுமதிக்கப்பட்டால் யாரும் எந்தப் பதவியிலும் இருக்க முடியாது.

    ஒரு அரசின் ஸ்திர தன்மையை ஒரு நொடியில் தகர்த்து விட முடியும். இதில் எல்லா அரசியல் கட்சிகளும் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

    இந்த விவகாரம் தன்னுடைய அரசியல் லாபத்திற்கு உதவும் என்பதால், இதை ஆளுகிற அரசுக்கு எதிராக எதிர்கட்சிகள் கையில் எடுத்தால் நாளை இது அவர்களையும் தாக்கக்கூடும் அரசியல் எதிரிகளால் என்பதை உணர வேண்டும்.

    தமிழக அரசு உடனடியாக ஒரு முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து இதில் சம்பந்தப்பட்டவர்களை விசாரித்து கண்டறிய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார். #Kodanad #TamilMaanilaCongress
    கவர்னரை நாளை நேரடியாக சந்தித்து கொடநாடு விவகாரம் தொடர்பாக முறையிட உள்ளதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். #DMK #MKStalin #Kodanad
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் இன்று நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த போது நான் கிராமம் கிராமமாக சென்றேனா? இப்போது சென்று குறை கேட்பதா? என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி என்னை பார்த்து கேள்வி கேட்டு வருகிறார்.

    அதற்கு நான் சில விளக்கத்தை சொல்கிறேன். 2006-ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலை நடத்தியது நாங்கள் தான். பல ஆண்டுகாலமாக பாப்பாரப்பட்டி, கீரிப்பட்டி, நாட்டார் மங்கலம் ஊராட்சிகளுக்கு தேர்தலை நடத்தியதும் நாங்கள்தான்.

    நான் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்தபோது நிதி பகிர்வு குறித்து எனது தலைமையில் குழு அமைக்கப்பட்டு கலைஞர் முதல்- அமைச்சராக இருந்தபோது 99 பரிந்துரைகளை நிறைவேற்றி செயல்படுத்தினோம்.

    கிராம ஊராட்சிகளுக்கு அதிக நிதியை உருவாக்கி கொடுத்தோம். நாங்கள் சமத்துவபுரத்தை உருவாக்கினோம். நமக்குநாமே திட்டம், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தை செயல்படுத்தினோம். காங்கிரீட் வீடுகளை கட்டிக்கொடுத்தோம்.

    12,617 ஊராட்சிகளிலும் நூலகத்தை உருவாக்கினோம். 29 ஆயிரம் ஊரக சாலைகளை, 54 ஆயிரம் சாலைகளாக அதிகரித்தோம். மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.6,364 கோடி கடன் வழங்கினோம். நானே நேரடியாக சென்று மகளிருக்கு உதவி வழங்கினேன்.

    ராமநாதபுரத்தில் கூட்டுக் குடிநீர் திட்டம், தர்மபுரி, கிருஷ்ணகிரியில் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம், வேலூரில் கூட்டு குடிநீர் திட்டம், மீஞ்சூர் நெம்மேலியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை நிறைவேற்றினோம். இப்படி பல திட்டங்களை எங்கள் ஆட்சியில் செய்ததை சொல்ல முடியும்.

    ஆனால் இன்று கொலை, கொள்ளை, வழிப்பறி, லஞ்சம் என்று சொல்ல வேண்டுமென்றால் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெயரைத்தான் சொல்லமுடியும்.


    உள்ளாட்சி தேர்தலை நிறுத்தியது தி.மு.க. தான் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், அமைச்சர்களும் திட்டமிட்டு ஒரு பொய்யை சொல்லி வருகிறார்கள். உள்ளாட்சி தேர்தலுக்காக வழக்கு போட்டது நாங்கள் தான். அதை நிறுத்த வழக்கு போடவில்லை.

    ஆனால் தேர்தலை முறையாக நடத்த, அதில் உள்ள குறைகளை நீக்க ஆர்.எஸ்.பாரதி மூலம் வழக்குபோட்டோம். மலை வாழ் மக்களுக்கு இட ஒதுக்கீட்டை வழங்கி முறைப்படி நடத்த வழக்கு போட்டோம். 2017-ம் ஆண்டு மே மாதம் தேர்தலை நடத்த ஐகோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் இந்த அரசு தேர்தலை நடத்தவில்லை. பலமுறை கோர்ட்டு சொல்லியும் இதுவரை உள்ளாட்சி தேர்தலை நடத்தவில்லை. இது யார் தவறு? என் தவறா? எடப்பாடி பழனிசாமி மீது தவறா? மக்களுக்கு உண்மை தெரியும்.

    இப்போது நான் முதல்-அமைச்சராக இல்லை. தேர்தல் ஆணையம் அரசு கட்டுப்பாட்டில் உள்ளது. தேர்தலை நடத்த வேண்டியது அவர்கள் பொறுப்பு.

    ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டுக்கு இணையானது கொடநாடு பங்களா. ஜெயலலிதா இருந்த போதும், அவர் இறந்த பிறகும் கொடநாட்டில் மர்ம மரணம், திருட்டு, கொள்ளை, கொலை, விபத்து தொடர்ந்து நடக்கிறது. கொடநாடு காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டுள்ளார். அங்குள்ள சி.சி.டி.வி. ஆபரேட்டர் தினேஷ்குமார் தற்கொலை செய்துள்ளார். கார் டிரைவர் கனகராஜ் சாலை விபத்தில் பலியாகி உள்ளார்.

    சயன் என்பவரின் மனைவி, மகள், சாலை விபத்தில் மரணம் அடைந்தனர். இதற்கு பின்னணியில் யார் உள்ளனர் என்ற சந்தேகம் அனைவருக்கும் எழுகிறது.

    தெகல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் ஒரு குறும்படம் வெளியிட்டுள்ளார். அதில் சயன், வாளையார் பேட்டி கொடுத்துள்ளனர். எடப்பாடி பழனிசாமி சொல்லித்தான் காரியங்களை செய்ததாக அதில் கூறுகிறார்கள்.

    இந்த குற்றச்சாட்டு எதற்கும் எடப்பாடி பழனிசாமி பதில் சொல்லவில்லை. அதற்கு பதில் போலீசில் புகார் செய்துள்ளதாக கூறுகிறார். கனகராஜை தெரியாது என்று அவர் சொல்லவில்லை. சயன் என்பவர் யார் என்றே தெரியாது என்றும் அவர் சொல்லவில்லை. ரூ.2000 கோடி பணம் குறித்தும் எதுவும் சொல்லவில்லை. ரூ.5 கோடி பேரம் நடந்தது குறித்தும் மறுப்பு தெரிவிக்கவில்லை.

    ஆனால் பொத்தாம் பொதுவாக அரசியல் சதி என்று கூறுகிறார். இவர்கள் சொன்ன புகாரை நிரூபித்தால் பதவி விலக தயார் என்று ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. அதற்கு மாறாக குற்றச்சாட்டு சொன்னவர்கள் மீது வழக்குபோட்டு மிரட்டுவதிலேயே குறியாக இருக்கிறார்.

    இந்த வி‌ஷயத்தில் தி.மு.க.வின் கோரிக்கை என்னவென்றால் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனே பதவி விலக வேண்டும்.

    மத்திய அரசு சிறப்பு விசாரணை ஆணையத்தை அமைக்க வேண்டும். உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும். எடப்பாடி பழனிசாமியிடம், ஜனாதிபதியும், கவர்னரும் விளக்கம் கேட்க வேண்டும். குற்றச்சாட்டு கூறியவர்களுக்கு மத்திய அரசு பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.

    கவர்னரை நாளை நான் நேரடியாக சந்தித்து இதுபற்றி முறையிடுவேன். இதில் விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால் தி.மு.க. நீதிமன்றத்தை நாடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #DMK #MKStalin #Kodanad
    கொடநாடு சம்பவம் தொடர்பாக வீடியோ வெளியிட்ட தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேலிடம் விசாரணை நடத்துவதற்காக தனிப்படை போலீசார் டெல்லி விரைந்துள்ளனர். #KodanadEstate #KodanadVideo
    சென்னை:

    கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சயன், தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேலிடம் அளித்துள்ள வீடியோ வாக்குமூலம், தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொடநாடு சம்பவத்தின் பின்னணியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருப்பதாக சயன் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

    ஆனால் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அரசியலில் தங்களை நேரடியாக எதிர்கொள்ள முடியாமல் தவறான தகவலை பரப்புவதாகவும், அதன் பின்புலத்தில் இருப்பவர்கள் விரைவில் கண்டறியப்படுவர் என்றும் கூறினார்.

    பின்னர் அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகி அளித்த புகாரின் பேரில், மேத்யூ சாமுவேல் உட்பட வீடியோவில் பேசிய அனைவர் மீதும் சென்னை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அத்துடன் மேத்யூ சாமுவேலிடம் விசாரணை நடத்துவதற்காக போலீசார் டெல்லி விரைந்துள்ளனர். சென்னை குற்றப்பிரிவு துணை ஆணையர் செந்தில் குமார் தலைமையிலான தனிப்படை டெல்லி விரைந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. #KodanadEstate #KodanadVideo
    கொடநாடு தொடர்பாக சர்ச்சைக்குரிய ஆவணப்படம் வெளியிட்ட தெகல்கா முன்னாள் ஆசிரியர் உள்ளிட்ட வீடியோவில் பேசிய அனைவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். #KodanadEstate #KodanadVideo
    சென்னை:

    கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை விவகாரத்தில் குற்றவாளியாக கூறப்பட்ட ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ், சாலை விபத்தில் இறந்துபோனார். மற்றொரு குற்றவாளியான கனகராஜின் கூட்டாளி சயன் தனது மனைவி வினுப்பிரியா, மகள் நீது ஆகியோருடன் பாலக்காடு மாவட்டம் கண்ணடி அருகே சென்றபோது விபத்தில் சிக்கினார். அதில் அவருடைய மனைவி, மகள் இறந்தனர். சயன் மட்டும் உயிர் தப்பினார். கொடநாடு எஸ்டேட்டின் சிசிடிவி பராமரிப்பாளராக இருந்த தினேஷ் குமார் தற்கொலை செய்து கொண்டார்.

    இவ்விவகாரம் தொடர்பாக வழக்கு நடைபெற்று வரும் நிலையில், தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மாத்யூ சாமுவேலிடம் சயன் அளித்துள்ள வீடியோ வாக்குமூலத்தில், இந்தச் சம்பவங்களின் பின்னணியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருப்பதாக கூறியுள்ளார். இவ்விவகாரம் தமிழக அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அரசியலில் தங்களை நேரடியாக எதிர்கொள்ள முடியாமல் தவறான தகவலை பரப்புவதாகவும், அதன் பின்புலத்தில் இருப்பவர்கள் விரைவில் கண்டறியப்படுவர் என்றும் கூறினார்.

    இந்நிலையில் கொடநாடு வீடியோ விவகாரத்தில் மேத்யூஸ் உட்பட வீடியோவில் பேசிய அனைவர் மீதும் சென்னை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகி அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்கை பதிவு செய்துள்ளனர். ஆவணப்படத்தில் பேட்டியளித்த மனோஜ், சயன் ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. #KodanadEstate #KodanadVideo
    கொடநாடு கொள்ளை மற்றும் கொலைச் சம்பவத்துக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். #KodanadEstate #EdappadiPalaniwami
    சென்னை:

    நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட்டில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களா உள்ளது.

    இங்கு காவலாளியாக பணியாற்றிய ஓம்பகதூரை படுகொலை செய்துவிட்டு, பங்களாவுக்குள் புகுந்து ஜெயலலிதாவுக்கு சொந்தமான 5 கைக்கடிகாரங்கள், பளிங்கு கற்களால் ஆன அழகுசாதன பொருட்கள் ஆகியவற்றை ஒரு கும்பல் கொள்ளையடித்து சென்றது என போலீஸ் 2017 ஏப்ரலில் தெரிவித்தது.

    இவ்விவகாரத்தில் குற்றவாளி என கூறப்பட்ட ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ், சேலம் அருகே ஆத்தூரில் நடந்த சாலை விபத்தில் பரிதாபமாக இறந்தார். மற்றொரு குற்றவாளியான கனகராஜின் கூட்டாளி சயன் தனது மனைவி வினுப்பிரியா, மகள் நீது ஆகியோருடன் பாலக்காடு மாவட்டம் கண்ணடி அருகே சென்றபோது விபத்தில் சிக்கினார். அதில் அவருடைய மனைவி, மகள் பரிதாபமாக இறந்தனர். சயன் மட்டும் உயிர் தப்பினார். கொடநாடு எஸ்டேட்டின் சிசிடிவி பராமரிப்பாளராக இருந்த தினேஷ் குமார் தற்கொலை செய்து கொண்டார்.

    இவ்விவகாரம் தொடர்பாக வழக்கு நடைபெற்று வரும் நிலையில், புது சர்ச்சையொன்று வெடித்துள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மாத்யூ சாமுவேலிடம் சயன் அளித்துள்ள வீடியோ வாக்குமூலத்தில், இந்தச் சம்பவங்களின் பின்னணியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருப்பதாக கூறியுள்ளார். இவ்விவகாரம் தமிழக அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

    இந்நிலையில் இது தொடர்பாக சென்னை ராயப்பேட்டையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

    அப்போது எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

    கொடநாடு சம்பவத்தும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. நேரடியாக எங்களை எதிர்கொள்ள முடியாமல் தவறான தகவலை பரப்புகின்றனர். கொடநாடு கொள்ளை விவகாரம் தொடர்பாக வெளியான வீடியோ ஆதாரத்தில் கூறப்பட்டவை உண்மையில்லை. தவறான செய்தி வெளியிட்டவர்கள், அதன் பின்புலத்தில் இருப்பவர்கள் விரைவில் கண்டறியப்படுவர்.

    குறுக்கு வழியை கையாண்டு அ.தி.மு.க அரசை யாராலும் கவிழ்க்க முடியாது.  கொடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. கொடநாடு கொள்ளை குறித்த வீடியோ தொடர்பாக புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  முழுமையாக விசாரணை நடத்தினால் தான் உண்மை வெளிவரும்.


    அரசியலில் நேரடியாக எதிர்கொள்ள முடியாதவர்கள் கோழைத்தனமான செயலில் ஈடுபட்டுள்ளனர். பொங்கல் பரிசாக ரூ.1,000 தருவதற்கு எதிராக மு.க.ஸ்டாலின் தனது கட்சியினரை விட்டு வழக்கு போட்டுள்ளார்.  மு.க. ஸ்டாலின் நடத்தும் கிராம சபைக் கூட்டங்கள் அரசியல் நாடகம்.  ஆட்சியில் இருந்தபோது மக்களுக்கான அடிப்படை வசதிகளை செய்யத்தவறியவர் மு.க.ஸ்டாலின்.

    இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.   #KodanadEstate #EdappadiPalaniwami
    ×