search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kerala CM"

    முல்லை பெரியாறு நீர்மட்டத்தை அரசியல் சுயலாபத்திற்காக குறைக்க சொல்லும் கேரள முதல்வர் பினராய் விஜயனுக்கு மேலூர் விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். #mullaperiyardam

    மதுரை:

    மேலூர் பகுதி முல்லை பெரியாறு, வைகை ஒரு போக பாசன விவசாயிகள் ஆலோசனை கூட்டம் தலைவர் முருகன் தலைமையில் நடந்தது.

    தற்போது கடும் மழையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மக்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு, சகஜ நிலைக்கு திரும்ப பிரார்த்தனை செய்யப்பட்டது, இதனைத் தொடர்ந்து முல்லை பெரியாறு, வைகை ஒருபோக பாசன பகுதியான, மேலூர் பகுதியில் 2 வருடமாக போதிய தண்ணீர் இன்றி 1 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் பாதிக்கப்பட்டுள்ளது.

    தற்போது நீர்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் உள்ளதால் மேலூர் ஒருபோக பாசனத்திற்காக போதிய தண்ணீர் திறக்க மாவட்ட நிர்வாகமும், பொதுப்பணித்துறையினரும், நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இல்லாவிட்டால் அனைத்து விவசாயிகளையும் ஒன்றிணைத்து பெரிய போராட்டம் நடத்தப்படும், முல்லை பெரியாறு அணை பகுதியில், பல்வேறு தொழில் கமிட்டிகளும், உச்சநீதிமன்றமும் 142 அடி நீர் தேக்கலாம் என்று கூறிய பின்பும், அரசியல் சுயலாபத்திற்காக நீர்மட்டத்தை குறைக்க வலியுறுத்தும் கேரள முதல்வர் பினராய் விஜயனுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

    கடந்தாண்டு தண்ணீர் கேட்டு 4 வழிச்சாலையை மறித்து தண்ணீருக்காக போராடிய விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. #mullaperiyardam 

    கேரள மாநிலத்தில் பெய்துவரும் அதிகப்படியான கனமழை காரணமாக இதுவரை 324 பேர் உயிரிழந்துள்ளதாக கேரள முதல்மந்திரி பிணராயி விஜயன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். #KeralaRains #RainKills #KeralaFlood #StandWithKerala
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த மழை காரணமாக பல்வேறு மாவட்டங்கள் நீரில் மூழ்கி, சூனியமாக காட்சியளிக்கிறது. மழை மற்றும் நிலச்சரிவு போன்ற சம்பவங்களால் கேரளாவில் உயிரிழக்கும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    கேரளாவில் ஏற்பட்டுள்ள இந்த இயற்கை சீற்றத்தில் இருந்து மீட்க, மத்திய அரசு உட்பட பல்வேறு மாநிலங்களும் கேரள மாநிலத்துக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன.

    இந்நிலையில், கேரள முதல்மந்திரி தனது ட்விட்டர் பக்கத்தில், மழை பாதிப்பால் இதுவரை 324 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், 100 வருடங்களில் இல்லாத இந்த மிகப்பெரும் இயற்கை பேரழிவை கேரளா சந்தித்து வருவதாகவும் பிணராயி விஜயன் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.



    கேரள மழை வெள்ளத்தில் இருந்து மக்களை பாதுகாக்க இதுவரை  ஆயிரத்து 500 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 2 லட்சத்து 23 ஆயிரத்து 139 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் கேரள முதல்மந்திரி பிணராயி விஜயன் வெளியிட்டுள்ள ட்விட்டர் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த மழை வெள்ளத்தில் இருந்து மக்களையும் கேரளாவையும் மீட்டெடுக்க உதவ donation.cmdrf.kerala.gov.in என்ற இணையதளத்தை பயன்படுத்துமாறும் பிணராயி விஜயன் கேட்டுக் கொண்டுள்ளார். #KeralaRains #RainKills #KeralaFlood #StandWithKerala
    முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளதாகவும், நீர்மட்டம் 142 அடியை தாண்டாமல் நிர்வகித்து வருவதாகவும் தமிழக முதலமைச்சர் கேரள முதலமைச்சருக்கு கடிதம் எழுதி உள்ளார். #KeralaRain #MullaperiyarDam #EdappadiPalaniswami
    சென்னை:

    கேரள மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் அனைத்து அணைகளும் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. இதனால் அதிக அளவிலான உபரி நீர் திறக்கப்பட்டு, ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு 142 அடியை எட்டியுள்ளது. இதையடுத்து, அணையின் 13 மதகுகள் திறக்கப்பட்டு கேரளாவுக்கு விநாடிக்கு 11,000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்த நீர் இடுக்கி அணையை சென்றடையும். ஆனால் அந்த அணையும் ஏற்கனவே நிரம்பியுள்ளதால், செருதோணி அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.



    இந்நிலையில், பாதுகாப்பு கருதி முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியில் இருந்து 136 அடியாக குறைக்க வலியுறுத்தி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதினார். அணைக்கு நீர்வரத்து அதிகமாக இருப்பதால் அணையின் தேக்க கொள்ளளவை குறைக்க வேண்டும் என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    இதனையடுத்து பினராஜி விஜயனுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதில் கடிதம் அனுப்பி உள்ளார். அதில், முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது என்றும் 142 அடியை தாண்டாமல் அணையின் நீர்மட்டத்தை நிர்வகித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும் முல்லை பெரியாறு அணை நீர்ப்படிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் அளவை தமிழக அதிகாரிகளிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். #KeralaRain #MullaperiyarDam #EdappadiPalaniswami
    கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், முதல்வர் பினராயி விஜயன் எதிர்க்கட்சி தலைவருடன் சென்று ஆய்வு செய்தார். #KeralaRains #KeralaFloods2018 #PinarayiVijayan
    திருவனந்தபுரம்:

    தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கேரளாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அணைகள் மற்றும் ஏரிகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக ஒரே நேரத்தில் 22 அணைகள் திறந்து விடப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு ஏராளமான வீடுகள் கட்டிடங்கள் இடிந்துள்ளன.

    இடுக்கி, மலப்புரம், கண்ணூர்,  வயநாடு ஆகிய மாவட்டங்களில் கனமழை காரணமாக 29 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவம், கப்பற்படையினர் மற்றும் பேரிடர் மீட்புக்குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் பினராயி விஜயன் இன்று பார்வையிட்டார். ஹெலிகாப்டர் மூலம் அவர் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வெள்ள சேதங்களை ஆய்வு செய்தார். இடுக்கி, ஆலப்புழா, எர்ணாகுளம், வயநாடு, கோழிக்கோடு மற்றும் மலப்புரம் ஆகிய பகுதிகளில் இன்று வெள்ள சேதங்களை பார்வையிடுகிறார். அவருடன் எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா, வருவாய்த்துறை அமைச்சர் சந்திரசேகரன் ஆகியோரும்உடன் சென்று வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்கின்றனர்.

    உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் நாளை கேரளா வந்து, மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட உள்ளார். பின்னர், முதல்வர் மற்றும் அதிகாரிகளை சந்தித்து மீட்பு பணிகள் குறித்து கேட்டறிவார் என தகவல் வெளியாகி உள்ளது. #KeralaRains #KeralaFloods2018 #PinarayiVijayan




    கேரளாவில் பெய்து வரும் கனமழையால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், மீட்பு பணிக்கு ராணுவத்திடம் உதவி கோரப்பட்டுள்ளது. #KeralaRains #PinarayiVijayan
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை இதுவரை இல்லாத அளவுக்கு பெய்து வருகிறது. கடந்த 2 மாதங்களாக மாநிலம் முழுவதும் மழை பெய்து வருவதால் அணைகள் உள்பட நீர் நிலைகள் நிரம்பி விட்டன. மாநிலத்தில் பல பகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. விவசாய பயிர்களும் மழையால் நாசமடைந்து விட்டன. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மழைக்கு பலியாகி உள்ளனர்.

    வெள்ளம் சூழ்ந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் நிவாரண முகாம்களிலும், பாதுகாப்பான இடங்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அனைத்து அரசு துறை அதிகாரிகளும் நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.



    இந்த நிலையில் நேற்றும், இன்றும் கேரளா முழுவதும் கனமழை பெய்து வருகிறது. இதனால் திருவனந்தபுரம், கண்ணூர், கோழிக்கோடு, மலப்புரம், இடுக்கி, வயநாடு போன்ற மாவட்டங்கள் பெரும் சேதத்தை சந்தித்து உள்ளன. இரண்டு நாட்களில் மட்டும் கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி 18 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சிலரைக் காணவில்லை.

    இந்த மழை நாளை வரை நீடிக்கும் என்று கொச்சி வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ள நிலையில், மீட்புப் பணிக்காக ராணுவ உதவி கோரப்பட்டுள்ளது.  ராணுவம், கடற்படை, கடலோர காவல்படை மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையிடமும் உதவி கோரப்பட்டிருப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். #KeralaRains #ArmyHelpForKerala #PinarayiVijayan
    கேரளாவில் முதல்முறையாக போலீஸ் அணிவகுப்பு நிகழ்ச்சியில் முதல்-மந்திரியின் ஜீப்பை ஓட்டிய முதல் பெண் போலீஸ் என்ற சிறப்பை சசீந்திரா பெற்றுள்ளார். #PinarayiVijayan
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருச்சூர் ராமவர்மபுரத்தில் போலீஸ் அகாடமி செயல்பட்டு வருகிறது. இங்கு பயிற்சி முடித்த போலீசாருக்கு வழி அனுப்பு விழா சமீபத்தில் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கலந்துகொண்டார். அப்போது பயிற்சி முடித்த போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஜீப்பில் சென்று ஏற்றுக்கொண்டார்.

    பினராயி விஜயன் சென்ற ஜீப்பை அந்த பயிற்சி பள்ளியின் பெண் போலீஸ்காரரான சசீந்திரா என்பவர் ஓட்டிச் சென்றார். இதன் மூலம் போலீஸ் அணிவகுப்பு நிகழ்ச்சியில் முதல்-மந்திரியின் ஜீப்பை ஓட்டிய முதல் பெண் போலீஸ் என்ற சிறப்பை சசீந்திரா பெற்றார்.


    பெண் போலீஸ் சசீந்திரா அங்கு போலீசாருக்கு ஓட்டுனர் பயிற்சியும் அளித்து வருவது குறிப்பிடத்தக்கது. இவரது கணவர் ஜெயன் திருச்சூரில் ஓட்டுனர் பயிற்சி பள்ளி நடத்தி வருகிறார். போலீஸ் வேலையில் சேருவதற்கு முன்பு சசீந்திராவும் அந்த பயிற்சிப்பள்ளியில் பயிற்சியாளராக பணியாற்றி வந்தார்.

    போலீசான பிறகு அவர் கேரள போலீஸ் டி.ஜி.பி. சந்தியாவுக்கு ஓட்டுனராக பணியாற்றி உள்ளார். அவரது ஜீப் ஓட்டும் திறமை காரணமாக போலீஸ் அகாடமியில் போலீசாருக்கு ஓட்டுனர் பயிற்சி அளிக்கும் பணி வழங்கப்பட்டது. அங்கு சிறந்த பயிற்சியாளர் என்ற பெயர் அவருக்கு கிடைத்ததால் தற்போது முதல்-மந்திரியின் ஜீப்பை ஓட்டி சாதனை படைத்து உள்ளார். #PinarayiVijayan
    காவேரி மருத்துவமனைக்கு வந்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்தார். #KarunanidhiHealth #KeralaCM #PinarayiVijayan
    சென்னை:

    திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை திடீரென மோசமடைந்ததையடுத்து கடந்த 27-ம் தேதி நள்ளிரவு சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை நன்றாக தேறி வருவதாகவும், வயது முதிர்வு, உடல்நிலை காரணமாக அவர் மேலும் சில நாட்கள் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.



    மருத்துவமனையில் கருணாநிதி அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்து தினமும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பிரபலங்கள் என நேரில் வந்து நலம் விசாரித்த வண்ணம் உள்ளனர். தொண்டர்களும் கருணாநிதியின் உடல்நிலை குறித்து அறிந்துகொள்வதற்காக காவேரி மருத்துவமனை வளாகத்தில் காத்துக்கிடக்கின்றனர்.

    இந்நிலையில், கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் இன்று சென்னை வந்தார். காவேரி மருத்துவமனைக்கு சென்ற அவர், கருணாநிதியின் உடல்நலம் குறித்து மு.க.ஸ்டாலினிடம் விசாரித்தார்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பினராயி விஜயன், பிறவி போராளியான கருணாநிதியின் உடல்நிலை மிகவும் முன்னேற்றம் அடைந்திருப்பதாக கூறினார்.

    ‘கருணாநிதியின் உடல்நிலை குறித்து ஸ்டாலின் மற்றும் கனிமொழி ஆகியோரிடம் நலம் விசாரித்தேன். கருணாநிதி உடல்நிலை வேகமாக முன்னேறி வருவதாக தெரிவித்தனர். அவர் விரைவில் பூரண குணமடைய வேண்டுகிறேன்’ என்றும் பினராயி விஜயன் கூறினார். #KarunanidhiHealth #KeralaCM #PinarayiVijayan
    படிப்பு செலவுக்கு மீன் விற்று பிரபலமான கல்லூரி மாணவியை நேரில் அழைத்து பாராட்டிய முதலமைச்சர் பினராயி விஜயன் அவரை கேரளத்தின் மகள் என்று கூறினார். #KeralaCM #PinarayiVijayan #Hanan
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் ஹனன். கல்லூரி மாணவி.

    ஏழை குடும்பத்தைச் சேர்ந்த ஹனன் குடும்பச் செலவுக்கும், கல்வி கட்டணம் செலுத்தவும் திருச்சூரில் உள்ள தெருக்களில் மீன் விற்பனை செய்தார். இந்த செய்தி சமூக ஊடகங்களில் வெளியானது.

    இதற்கு பலர் பாராட்டு தெரிவித்தனர். மாணவியின் தன்னம்பிக்கைக்கு வாழ்த்து தெரிவித்து கருத்து பதிவிட்டனர். அதே நேரம் இன்னொரு தரப்பினர் ஹனனை விமர்சித்தனர்.

    கல்லூரி மாணவி ஹனனை ஆதரித்தும், விமர்சித்தும் வெளியான கருத்துக்கள் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. சினிமா பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள், ஹனன் படித்து வந்த கல்லூரி ஆசிரியர்கள் ஹனனுக்கு ஆதரவாக கருத்துக்கள் பதிவிட, இன்னொரு தரப்பு கடுமையான விமர்சனங்களை வெளியிட்டது.

    இதனை அறிந்து ஹனன் வேதனை அடைந்தார். அவர், தன்னை விமர்சிக்க வேண்டாம் என்று கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்து சமூக ஊடகங்களில் கருத்து பதிவிட்டார்.

    இதையடுத்து ஹனனை விமர்சனம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மகளிர் ஆணையம் உத்தரவிட்டது. மாநில டி.ஜி.பி.க்கும் புகார் மனு அனுப்பியது. அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க முதல்-மந்திரி பினராயி விஜயனும் உத்தரவிட்டார்.

    ஹனனை பாராட்டி பேசிய பினராயி விஜயன், ஹனனை தவறாக விமர்சித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தார். அதன்படி, சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பிய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். நேற்று சங்கனாச்சேரியைச் சேர்ந்த பிரசாந்த் பத்ரா என்ற வாலிபர் கைதானார். இவரையும் சேர்த்து இதுவரை 3 பேர் கைதாகி உள்ளனர்.

    மாணவி ஹனனை பாராட்டிய பினராயி விஜயன்.

    இந்நிலையில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் நேற்று மாணவி ஹனனை தனது அலுவலகத்திற்கு வரவழைத்து நேரில் பாராட்டினார். அப்போது ஹனனை கேரளாவின் மகள் என்றும், அவருக்கு அரசு எப்போதும் துணை நிற்கும் எனவும் உறுதி அளித்தார்.

    இதுபற்றி பினராயி விஜயன் பேஸ்புக்கிலும் கருத்து வெளியிட்டுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது:-

    மாணவி ஹனனை அலுவலகத்தில் சந்தித்தேன். அவரது கள்ளம்கபடமற்ற சிரிப்பை கண்டதும் மனம் நெகிழ்ந்தது. அந்த சிறுமிக்கு கேரளா துணை நிற்கும். அவருக்கு தேவையான உதவிகள் செய்யப்படும், சிறுமியை விமர்சித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறி உளளார்.

    பினராயி விஜயனை சந்தித்த பின்பு ஹனன் கேரளா காதி வாரியம் நடத்திய புடவைகள் அறிமுக விழாவிலும் கலந்து கொண்டார். அப்போது நடந்த ஆடை அணிவகுப்பிலும் பங்கேற்றார். வெள்ளை நிற சேலையும், இன்டிகோ நிற ஜாக்கெட்டும் அணிந்து அவர் நடந்து வந்தார்.

    இதுபற்றி கேரள காதி வாரிய துணைத்தலைவர் ஷோபனா ஜார்ஜ் கூறியதாவது:-

    கேரளாவில் இளம்பெண்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் பெண்ணாக ஹனன் காணப்படுகிறார். எனவே அவரை காதி வாரிய சேலை அறிமுக விழாவில் பங்கேற்க அழைத்தோம். அவர் பங்கேற்றதின் மூலம் இளைஞர்கள், இளம்பெண்கள் மத்தியில் தன்னம்பிக்கை வளருமென்று நம்புகிறோம் என கூறினார். #KeralaCM #PinarayiVijayan #Hanan

    கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் வருகிற 19-ந் தேதி மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார். அங்கு 17 நாட்கள் தங்கியிருந்து அவர் சிகிச்சை பெறுகிறார். #KeralaCM #PinarayiVijayan
    திருவனந்தபுரம்:

    கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் வருகிற 19-ந் தேதி மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார். அங்குள்ள மினி சோட்டா ரோஸ்செஸ்டர் மயோ ஆஸ்பத்திரியில் அவர் சிகிச்சை பெறுகிறார். அங்கு 17 நாட்கள் தங்கியிருந்து சிகிச்சை பெறுகிறார். சிகிச்சை முடிந்து வருகிற செப்டம்பர் மாதம் 6-ந் தேதி அவர் கேரளா திரும்புகிறார்.

    அவருடன் அவரது மனைவி கமலாவும் செல்கிறார். பினராயி விஜயன் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்வது தொடர்பான ஒப்புதல் கேட்டு மத்திய வெளியுறவுத்துறைக்கு அவரது பயணத்திட்டம் விரைவில் அனுப்பி வைக்கப்பட உள்ளது. இதற்கு ஒப்புதல் கிடைத்ததும் பினராயி விஜயன் அமெரிக்கா செல்கிறார்.

    பினராயி விஜயனின் அமெரிக்க பயணத்தை அவரது தனி செயலாளர் ஜெயராஜா உறுதிப்படுத்தி உள்ளார்.

    பினராயி விஜயன் அமெரிக்காவில் சிகிச்சை பெற உள்ள ஆஸ்பத்திரி புற்றுநோய் சிகிச்சைக்கு புகழ் பெற்றது ஆகும். இதற்கு முன்பு முன்னாள் சபாநாயகர் கார்த்திக்கேயன், நடிகை மம்தா மோகன்தாஸ் இந்த ஆஸ்பத்திரியில் புற்றுநோயுக்காக சிகிச்சை பெற்று உள்ளனர்.

    பினராயி விஜயன் கடந்த மார்ச் மாதம் சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் மருத்துவ சிகிச்சை பெற்றார். அப்போது அது வழக்கமான மருத்துவ பரிசோதனை தான் என்று அறிவிக்கப்பட்டது.

    கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவி 17 பேர் உயிரிழந்தனர். இந்த நோய் தாக்குதலை கட்டுப்படுத்த பினராயி விஜயன் தீவிர முயற்சி எடுத்தார். இதனை பாராட்டி அவருக்கு அமெரிக்காவில் பால்டிமோரில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆப் கியூமன் வைராலஜி என்ற அமைப்பு அவரை கவுரவப்படுத்தி விருது வழங்கி இருந்தது. இதற்காக அவர் அமெரிக்கா சென்று இருந்தபோது அங்குள்ள ஆஸ்பத்திரியில் முதற்கட்டமாக மருத்துவ பரிசோதனை செய்திருந்தார். தற்போது 2-வது கட்டமாக அவர் அமெரிக்காவுக்கு சிகிச்சைக்கு செல்கிறார். #KeralaCM #PinarayiVijayan
    கேரள முதல் மந்திரியாக பினராயி விஜயன் பொறுப்பேற்ற பிறகு 2.53 லட்சம் மக்களுக்கு பேரிடர் நிவாரண நிதியாக ரூ.416 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. #KeralaCMsrelieffund
    திருவனந்தபுரம்:

    கேரள மாநில சட்டசபை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றதை தொடர்ந்து அம்மாநில முதல் மந்திரியாக பினராயி விஜயன் கடந்த 25-5-2016 அன்று பதவியேற்றார்.

    அவரது பதவியேற்புக்கு பின்னர் கேரள மாநிலத்தில் நிகழ்ந்த விபத்துகள், மழை, வெள்ளம், தீ உள்ளிட்ட இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்படும் மக்கள் மற்றும் சிறப்பு சிகிச்சைகளிக்கான நிதியுதவி கோரும் நோயாளிகளிக்கு மாவட்ட கலெக்டர்கள் மூலமாக அரசின் சார்பில் அளிக்கப்படும் முதல் மந்திரி நிவாரண நிதியின் தொகை 3 லட்சமாக உயர்த்தப்பட்டது.

    மேலும், இந்த தொகை பாதிக்கப்பட்டவர்கள் அல்லது இறந்தவர்களின் வாரிசுகளின் வங்கி கணக்குகளில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது.

    பினராயி விஜயன் தலைமையிலான இந்த ஆட்சிக் காலத்தின் முதல் இரண்டாண்டுகளில் இதுவரை 2.53 லட்சம் மக்களுக்கு பேரிடர் நிவாரண நிதியாக ரூ.416 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கேரள முதல் மந்திரியின் அலுவலகம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #KeralaCMsrelieffund 
    ×