search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kantha Sasti Festival"

    • ஞாயிற்றுக்கிழமை சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.
    • 31-ந்தேதி திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

    முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 25-ந்தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. 3-ம் நாளான நேற்று அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது.

    காலையில் உச்சிகால அபிஷேகம், தீபாராதனையை தொடர்ந்து யாகசாலையில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரமாகி தீபாராதனை நடைபெற்றது. பின்னர் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி- தெய்வானையுடன் வெள்ளி சப்பரத்தில் சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    மாலையில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி- தெய்வானையுடன் திருவாவடுதுறை ஆதீன கந்தசஷ்டி மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சுவாமி- அம்பாள்களுக்கு மஞ்சள், பால், இளநீர், தேன், தயிர், பன்னீர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சுவாமி-அம்பாள்களுக்கு அலங்காரமாகி, தீபாராதனை நடைபெற்றது. அதன்பிறகு சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் தங்க ரதத்தில் எழுந்தருளி கிரிவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    6-ம் நாளான நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணியளவில் விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. 7-ம் நாளான வருகிற 31-ந்தேதி (திங்கட்கிழமை) இரவில் சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், ராமதாஸ், கணேசன், செந்தில் முருகன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • கந்தன் தனது பிறப்பின் நோக்கமான சூரனை வென்று அவனை ஆட்கொண்ட இடம் இத்தலம் ஆகும்.
    • கந்தசஷ்டி கடைபிடிக்கப்படும் ஆறு நாட்களும் பக்தர்கள் பல்வேறுவிதமான விரதங்களை மேற்கொள்வார்கள்.

    அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் செந்திலாண்டவன் கோவில் ஒரு அற்புதமான நிலையில் அமைந்து உள்ளது. கடலை எல்லையாகக் கொண்ட இக்கோவிலை மக்களின் பாதுகாப்பு அரண் என்றே கூறலாம்.

    மலைகளில் கோவில் கொள்ளும் விளக்கம் கொண்ட முருகன் இத்தலத்தில் சந்தன மலைமீது எழுந்தருளி உள்ளார். மூலவர் இருக்கும் பகுதி குடைவரை கோவிலாக விளங்குகிறது. இந்த மலைப்பகுதியை மூன்றாம் பிரகாரத்தில் அமைந்துள்ள பெருமாள் சன்னதியில் காணலாம்.

    திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருக்கோவிலில் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்ற போதிலும் கந்த சஷ்டி விழா அனைத்துக்கும் சிகரமாக போற்றப்படுகிறது.

    கந்தன் தனது பிறப்பின் நோக்கமான சூரனை வென்று அவனை ஆட்கொண்ட இடம் இத்தலம் ஆகும். சூரனுக்கும் முருகனுக்கும் யுத்தம் நடந்ததை மெய்ப்பிக்கும் வகையில் கோவில் அருகில் நீண்ட கடற்கரை பகுதி அமைந்துள்ளது.

    கந்தசஷ்டி கடைபிடிக்கப்படும் ஆறு நாட்களும் பக்தர்கள் பல்வேறுவிதமான விரதங்களை மேற்கொள்வார்கள். சிலர் மவுன விரதம் இருப்பார்கள். சிலர் ஒரு வேளை மட்டும் உணவு உண்பார்கள். சிலர் பழங்கள் மற்றும் பழச்சாறு குடித்து விரதம் மேற்கொள்வார்கள். இந்த ஆறு நாட்களும் கோவிலில் பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். பாலசுப்பிரமணிய சுவாமி முன்பு சிறப்பு ஹோமங்கள் நடைபெறும். பின்னர் சாமி சண்முக மண்டபத்திற்கு எழுந்தருள்வார்.

    கந்தசஷ்டி கவசம் கந்தகுரு கவசம் கோவில் வளாகத்தில் ஒலிக்கும். கந்த சஷ்டி விழா கண்களுக்கும், காதுகளுக்கும் விருந்தாக அமையும். ஆண்டுதோறும் இந்த விரதத்தை மேற்கொள்ளும் பக்தர்கள் ஏராளமாக உள்ளனர். சஷ்டி விரதம் இருப்பதற்காக வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருவார்கள்.

    திருச்செந்தூர் முருக பக்தர்கள் விரதம் இருக்கும் பக்தர்களுக்கு பானகம் உள்ளிட்ட பானங்களை வழங்கி மகிழ்வார்கள். சிலர் கந்த சஷ்டி கவசம் உள்ளிட்ட முருகன் பாராயண நூல்களை அச்சிட்டு பக்தர்களுக்கு வழங்குவார்கள். 24 மணி நேரமும் பக்தர்கள் முருகனின் நாமத்தை உரைத்தபடி இருப்பார்கள். செந்தூர் கடல்அலையும் ஓம் ஓம் என்று மந்திரம் இசைத்துக் கொண்டே இருக்கும். கடலில் குளித்து வந்தால் கவலைகள் எல்லாம் கரைந்து மறைந்து விடும்.

    ஒருமுறை திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்தவர்கள் மீண்டும் தரிசனம் செய்ய தவறமாட்டார்கள். அந்த அளவுக்கு முருகன் அவர்களை ஆட் கொண்டு விடுவார். மதுரையில் சிவபெருமான் ஏராளமான திருவிளையாடல்களை நிகழ்த்தி உள்ளார். அதே போல திருச்செந்தூரில் முருகனின் திருவிளையாடல் பல நிகழ்ந்துள்ளன. இன்றும் திருவிளையாடல்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அவரது திருவிளையாடல்கள் சில தொகுக்கப்பட்டு நூல்களாகவும் வெளிவந்துள்ளன.

    தமிழ் இலக்கியத்தில் திருச்செந்தூர்

    தமிழ் இலக்கியங்களில் திருச்செந்தூர் அலைவாய், சீரலைவாய் என்கிற பெயர்களில் போற்றப்பட்டுள்ளது. அது குறித்த தகவல்கள்

    தொல்காப்பியம்

    முருகன் தீம்புனல் அலைவாய் - தொல்காப்பியம் (களவு சூத்23)

    புறநானூறு

    வெண்டலைப் புனரி யலைக்குஞ் செந்தில்

    நெடுவேல் நிலைஇய காமர் வியன்துறை (பாடல் 55)

    அகநானூறு

    திருமணி விளக்கினலை வாய்ச்செரு மிகுசேஎய் (பாடல் 266)

    திருமுருகாற்றுப்படை

    உலகம் புகழ்ந்த ஓங்குயர் விழுச்சீர் அலைவாய்

    சிலப்பதிகாரம்

    சீர் கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்றும்

    அருணகிரிநாதர் பாடல்

    இக்கோயில் குறித்தும், முருகப்பெருமான் குறித்தும் அருணகிரிநாதரின் பாடல் இது.

    அந்தண்மறை வேள்வி காவற் கார செந்தமிழ் சொல் பாவின் மாலைக் கார அண்டரூப கார சேவற் கார முடிமேலே -

    அஞ்சலிசெய் வோர்கள் நேயக் காரகுன்றுருவ ஏவும் வேலைக் காரஅந்தம்வெகு வான ரூபக் கார எழிலான;

    சிந்துரமின் மேவு போகக் காரவிந்தைகுற மாது வேளைக் காரசெஞ்சொலடி யார்கள் வாரக் கார எதிரான -

    செஞ்சமரை மாயு மாயக் காரதுங்கரண சூர சூறைக் கார செந்திநகர் வாழு மாண்மைக் கார பெருமாளே.

    • 30-ந்தேதி சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடக்கிறது.
    • 31-ந்தேதி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது.

    முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பல்வேறு விழாக்களில் மிகவும் சிறப்பு வாய்ந்தது கந்தசஷ்டி திருவிழா.

    கோவிலில் இந்த ஆண்டு கந்தசஷ்டி திருவிழா கடந்த 25-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) தொடங்கியது. அன்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. காலை 6.30 மணிக்கு யாகசாலை பூஜை தொடங்கியது. காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 3 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெற்றது. மாலை 6.45 மணிக்கு யாகசாலை பூஜைகள் நடந்தது.

    விழாவின் 2-ம் நாளான 26-ந்தேதி முதல் 5-ம் நாளான 29-ந்தேதி வரையிலும் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது. காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெற்றது.

    யாகசாலை பூஜை ஆரம்பமாகியது. யாகசாலையில் உள்ள சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானைக்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. பின்னர் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சுவாமி, அம்பாள்களுக்கு திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் அபிஷேகம் அலங்காரமாகி தீபாராதனை நடந்தது.

    பின்னர் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் தங்க ரதத்தில் கிரி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். 6-ம் நாளான வருகிற 30-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடக்கிறது. அன்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது. காலை 6.45 மணிக்கு யாகசாலை பூஜை தொடங்குகிறது. மதியம் 12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனை நடக்கிறது.

    மதியம் 12.45 மணிக்கு யாகசாலையில் இருந்து சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் சண்முக விலாச மண்டபத்தில் எழுந்தருளுகிறார். பின்னர் சுவாமிக்கு தீபாராதனை நடக்கிறது. மதியம் 2 மணிக்கு திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானைக்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர் கடற்கரையில் எழுந்தருளி, சூரனை வேல் கொண்டு வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடக்கிறது. இதில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள்.

    7-ம் நாளான 31-ந்தேதி (திங்கட்கிழமை) இரவு 11 மணிக்கு சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது.

    அன்று காலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 3.30 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது.காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், 1 மணிக்கு மற்றகால பூஜைகள் நடக்கிறது. மாலை 5 மணிக்கு அம்பாள் தபசு காட்சிக்கு புறப்படுதல், 6.30 மணிக்கு சுவாமி- அம்பாளுக்கு மாலை மாற்றும் வைபவம் நடைபெற்று அன்று இரவு திருக்கல்யாண வைபவம் நடைபெறும்.

    • ஆறுமுகப்பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    காஞ்சீபுரம் குமரக்கோட்டத்தில் உள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா விமரிசையாக நடைபெற்று வருகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆறுமுகப்பெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து,பாதாம், பிஸ்தா, முந்திரி, ஏலக்காய், கிராம்பு மாலை, மற்றும் சாமந்திப்பூ, மல்லிகைப்பூ, மாலைகள் அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

    சிறப்பு லட்சார்ச்சனை செய்து தீபாராதனை காட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து முருகப்பெருமான் மான் வாகனத்தில் எழுந்தருளி ராஜவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    • நாளை காலை 9 மணிக்கு சங்காபிஷேகம் நடக்கிறது.
    • 30-ந்தேதி பக்தர்கள் பால் குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வருகிறார்கள்.

    ஈரோடு திண்டலில் பிரசித்தி பெற்ற வேலாயுதசாமி (முருகன்) கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி விழா சிறப்பாக கொண்டாடப்படும். அதுபோல் இந்த ஆண்டுக்கான கந்தசஷ்டி விழா நேற்று காலை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. இதையொட்டி முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதன்பின்னர் வள்ளி-தெய்வானை சமேத முருகனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு யாகபூஜை நடந்தன.

    கோவிலில் முருகனை தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் வந்தனர். அவர்கள் மலை படிக்கட்டு வழியாக ஏறி கோவிலுக்கு சென்றனர். அங்கு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த முருகனை நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். மேலும், பக்தர்கள் தங்களது வலது கையில் காப்பு கயிறு கட்டிக்கொண்டு கந்தசஷ்டி விரதத்தை தொடங்கினார்கள். கோவிலின் பூசாரிகள் பக்தர்களுக்கு காப்பு கயிறு அணிவித்தனர். விழாவையொட்டி பக்தர்கள் 6 நாட்களுக்கு தொடர்ந்து விரதம் கடைபிடிப்பார்கள்.

    இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு சடாஷர ஹோமமும், நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு சங்காபிஷேகமும் நடைபெறுகிறது. வருகிற 30-ந் தேதி காலை 10 மணிக்கு பக்தர்கள் பால் குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வருகிறார்கள். பின்னர் பக்தர்கள் கொண்டு வந்த பாலில் முருகனுக்கு அபிஷேகம் நடத்தி சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. மாலை 6 மணிக்கு சூரனை முருகன் வதம் செய்யும் சூரசம்காரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    வருகிற 31-ந் தேதி காலை 9 மணிக்கு வேலாயுதசாமிக்கும், வள்ளி-தெய்வானைக்கும் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ளும் பெண்களுக்கு மஞ்சள் கயிறு வழங்கப்படும். மேலும், பக்தர்கள் விரதத்தை முடித்துக்கொள்வார்கள். மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.

    இதேபோல் அனைத்து முருகன் கோவில்களிலும் நேற்று கந்தசஷ்டி விழா தொடங்கியது.

    • தண்டு விரதம் இருக்கும் பழக்கம் பொள்ளாச்சி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மட்டுமே காண முடியும்.
    • 31-ந்தேதி மகாஅபிஷேகம் நடக்கிறது.

    பொள்ளாச்சியில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சூரசம்ஹார விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டிற்கான விழா நேற்று கந்தசஷ்டி உற்சவம், காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதையொட்டி சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கையில் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர். இதை தொடர்ந்து 1-ந்தேதி வரை நான்கு கால அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது.

    நாளை மறுநாள் (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு சிவபெருமானிடம் இருந்து சுப்பிரமணிய சுவாமி வேல் வாங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 30-ந்தேதி மாலை 3 மணிக்கு நடைபெறுகிறது. கோவிலில் இருந்து சுப்பிரமணிய சுவாமி புறப்பட்டு எஸ்.எஸ்.கோவில் வீதி வழியாக சென்று, சத்திரம் வீதி, தெப்பக்குளம் வீதி சந்திப்பில் முதல் கஜமுகா சூரனை வதம் செய்கிறார். பின்னர் தெப்பக்குளம் வீதி வழியாக சென்று வெங்கட்ரமணன் வீதி சந்திக்கும் இடத்தில் 2-வதாக சிங்கமுகா சூரனையும், 3-வதாக வெங்கட்ரமணன் வீதி, ராஜாமில் ரோடு சந்திக்கும் இடத்தில் பாலுகோபன் சூரனையும் வதம் செய்கிறார். பின்னர் உடுமலை ரோடு வழியாக சென்று தேர்நிலை திடலில் 4-வதாக சூரபத்மன் சூரனை வதம் செய்து விட்டு, மீண்டும் கோவிலுக்கு வந்தடைகிறார்.

    31-ந்தேதி காலை 10 மணிக்கு மகாஅபிஷேகம் நடக்கிறது. அதை தொடர்ந்து மாலை 6 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், 1-ந்தேதி மாலை 6 மணிக்கு ஊஞ்சல் உற்சவமும் நடைபெறுகிறது. இந்த விழாவையொட்டி நேற்று முதல் 30-ந்தேதி வரை பக்தர்கள் விரதம் இருப்பார்கள். சூரசம்ஹாரம் முடிந்ததும் வாழைத்தண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை, சாத்துக்குடி போன்ற பழவகைகள், தயிர், கருவேப்பிலை, கொத்துமல்லிதழை ஆகியவற்றை கொண்டு பிரசாதம் தயார் செய்து சுப்பிரமணிய சுவாமிக்கு படைத்து விரதத்தை முடிப்பார்கள். தண்டு விரதம் இருக்கும் பழக்கம் பொள்ளாச்சி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மட்டும் காண முடியும். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

    • 29-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.
    • நவம்பர் 1-ந்தேதி வள்ளி திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடக்கிறது.

    நாகை மாவட்டம் சிக்கலில் பிரசித்தி பெற்ற சிங்காரவேலவர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள வேல்நெடுங்கன்னி அம்மனிடம், முருகன் வேல் வாங்கி திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் செய்ததாக கந்தபுராணத்தில் கூறப்பட்டுள்ளது. முருகன், வேல்நெடுங்கன்னியிடம், வேல் வாங்கும் போது முருகனின் முகம் மற்றும் திருமேனி முழுவதும் வியர்வை சிந்தும் அற்புத காட்சியை காண பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் இந்த கோவிலுக்கு வருவார்கள்.

    சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் 10 நாட்கள் கந்தசஷ்டி விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கந்தசஷ்டி விழா நேற்று முன்தினம் காப்புகட்டுதலுடன் தொடங்கியது. விழாவில் சிங்காரவேலவர் தங்கமஞ்சத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தார். இந்த விழா அடுத்த மாதம்( நவம்பர்) 3-ந்தேதி வரை நடக்கிறது, நேற்று இரவு ஆட்டுக்கிடா வாகனத்தில் சாமி வீதி உலா நடந்தது. இன்று (வியாழக்கிழமை) தங்கமயில் வாகனத் திலும், நாளை (வெள்ளிக்கிழமை) ரிஷப வாகனத்திலும் சாமி வீதி உலா நடக்கிறது.

    29-ந்தேதி(சனிக்கிழமை) காலை தேரோட்டமும், இரவு வேல் வாங்கும் நிகழ்ச்சியும், 30-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை9 மாலை சூரசம்ஹார நிகழ்ச்சியும், 31-ந் தேதி(திங்கட்கிழமை) தெய்வ சேனை திருக்கல்யாணமும், நவம்பர் 1-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) வள்ளி திருக்கல்யாணம் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    • சுப்பிரமணிய சுவாமிக்கும் மற்றும் பிற தெய்வங்களுக்கும் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • 30-ந்தேதி சண்முகார்ச்சனை நடைபெறுகிறது.

    கோவையில் புகழ்பெற்ற மருதமலை முருகன் கோவில் உள்ளது. இது 7-வது படை வீடு என பக்தர்களால் போற்றப்படுகிறது. இக்கோவிலில் கந்த சஷ்டி விழா நேற்று தொடங்கியது. கந்த சஷ்டி விழாவின் முதல் நாளான நேற்று காலை 6 மணிக்கு கோ பூஜை நடந்தது. இதை தொடர்ந்து கோவில் நடை திறக்கப்பட்டது.

    பின்னர் மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு பால், பன்னீர், ஜவ்வாது போன்ற 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து வேடர் அலங்காரத்தில் சுப்பிரமணிய சுவாமி காட்சிஅளித்தார்.

    இதை அடுத்து காலை 7 மணி அளவில் விநாயகர் பூஜை, புண்யாகம், விழா நடைபெற இறை அனுமதி பெறுதல், மண் எடுத்தல் முளைப்பாளிகை இடுதல் ஆகியவை நடைபெற்றது.

    இதை தொடர்ந்து கருவறையை அடுத்துள்ள மகா மண்டபத்தில் சுப்பிமணியசுவாமி வள்ளி- தெய்வானையுடன் எழுந்தருளினார். இதை அடுத்து சுப்பிரமணிய சுவாமிக்கும் மற்றும் பிற தெய்வங்களுக்கும் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதைத் தொடர்ந்து அர்த்தமண்டபத்தில் யாகசாலை பூஜை நடந்தது. கந்த சஷ்டி விரதம் இருக்கும் பக்தர்கள் முருகப் பெருமானை வேண்டி காப்பு கட்டிக் கொண்டனர். கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு வருகிற 29-ந் தேதி வரை தினமும் காலையிலும் மாலையிலும் அர்த்தமண்டபத்தில் யாகசாலை பூஜை, சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும் அலங்காரம் நடைபெறுகிறது.

    30-ந் தேதி காலை 6மணி முதல் 7.30 மணி வரை சண்முகார்ச்சனை நடைபெறுகிறது. காலை 11 மணி முதல் 12 மணி வரை உற்சவர் சண்முகார்ச்சனை நடக்கிறது.மதியம் 3 மணிக்கு அன்னையிடம் வேல் வாங்குதல் மற்றும் சூரசம்காரத்திற்கு எழுந்தருளுதல், சூரபத்மனை முருகப்பெருமான் வதம் செய்யும் சூரசம்கார விழா நடைபெறுகிறது. 31-ந் தேதிகாலை 9.30.மணி முதல் 10.30 மணிக்குள் சுப்பிரமணிய சுவாமி, வள்ளி- தெய்வானை திருக்கல்யாணம் திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெறுகிறது. தொடர்ந்து புஷ்பபல்லக்கில் சுவாமி வள்ளி தெய்வானையுடன் திருவீதி உலா வருகிறார். விழா ஏற்பாடுகளை மருதமலை கோவில் துணை கமிஷனர் ஹர்ஷினி மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    இதுபோல் கோவை கோவில்பாளையத்தில் சுமார் 1000 ஆண்டு பழமை வாய்ந்த காலகாலேஸ்வரர் கோவிலில்கந்த சஷ்டி சூரசம்ஹார திருவிழா நேற்று காலை 9 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அதனைத் தொடர்ந்து 10 மணிக்கு காப்பு கட்டுதல் மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    • 30-ந்தேதி சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது.
    • 31-ந்தேதி திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

    முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நேற்று முன்தினம் யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. 2-ம் நாளான நேற்று அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடந்தது. காலையில் மூலவருக்கு உச்சிகால அபிஷேகம், தீபாராதனையை தொடர்ந்து யாகசாலையில் சுவாமி ஜெயநாதருக்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடைபெற்றது.

    பின்னர் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி- தெய்வானையுடன் வெள்ளி சப்பரத்தில் சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. அப்போது அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி கோஷங்களை முழங்கி சாமி தரிசனம் செய்தனர்.

    மாலையில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் திருவாவடுதுறை ஆதீன கந்தசஷ்டி மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு அபிஷேகம் அலங்காரமாகி தீபாராதனை நடைபெற்றது. இரவில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் தங்க ரதத்தில் எழுந்தருளி, கிரி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    6-ம் நாளான வருகிற 30-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணியளவில் கடற்கரையில் சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது. 7-ம் நாளான 31-ந்தேதி (திங்கட்கிழமை) இரவில் சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், ராமதாஸ், கணேசன், செந்தில் முருகன், இணை ஆணையர் (பொறுப்பு) அன்புமணி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • சூரபத்மனின் ஆணவத்தை அழிப்பதற்கென்றே அவதரித்தவர் முருகக்கடவுள்.
    • முருகப்பெருமானுக்கு சூரபத்மன் தாத்தா முறை.

    சூரபத்மன் முருகப் பெருமானிடம் போர் புரிந்து, இறுதியில் மயிலாகவும் சேவலாகவும் மாறி சரணடைந்த கதை அனைவரும் அறிந்ததுதான்.

    சூரபத்மனை முருகப்பெருமான் முற்றிலும் வதம் செய்யாமல்மயிலாக வந்தபோது சேவலாக வந்த போது கொடியாகவும் ஏற்றுக் கொண்டார்.

    முன்ஜென்மத்தில் சூரபத்மன் தட்சனாக இருந்தான். அவன் மகள் தாட்சாயினி பரமனை மணந்தாள். அந்த வகையில் தட்சனான சூரபத்மன் பரமசிவனுக்கு மாமனாகிறான்.

    சிவ - பார்வதி மைந்தனான முருகப் பெருமானுக்கு சூரபத்மன் தாத்தா முறை. எந்தப் பேரனாவது தாத்தாவைக் கொல்வதற்கு முனைவானா? அதனால் தான் சூரபத்மன் மாமரமாகி நின்ற வேளையில், தன் அன்னையிடம் பெற்ற சக்திவேலால் மாமரத்தை இரண்டாகப் பிளந்து, 'நான்' என்னும் அகங்காரம் சேவலாகவும், 'எனது' என்னும் மமகாரம் மயிலாகவும் மாறியது. சேவலைக் கொடியாக்கி, மயிலை வாகனமாக்கிக் கொண்டார் முருகப் பெருமான என்கிறார் சென்னை நங்கநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோயிலின் பாலாஜி வாத்தியார்.

    பேரனைச் சுமக்க தாத்தாவிற்கு கஷ்டமா என்ன? அதனால் தான் மயில் வாகனமாக மாறி, பேரனைச் சுமந்தார் தாத்தா சூரபத்மன்.

    சூரபத்மனின் ஆணவத்தை அழிப்பதற்கென்றே அவதரித்தவர் முருகக் கடவுள்.

    இந்த சிவமைந்தன் முற்பிறவியில் பிரம்மதேவனின் மைந்தனாக பிரம்மஞானி சனக்குமாரர் என்ற பெயர் தாங்கி முக்காலம் அறிந்த ஞானியாகத் திகழ்ந்தார் என்றும் விவரிக்கிறது புராணம்.

    ஒரு முறை, சூரர்களைப் போரிட்டு வதம் செய்வது போல் கனவு கண்டார். அதனை தன் தந்தையான பிரம்மாவிடம், 'தந்தையே! நான் சேனாதிபதியாக நின்று அசுரர்களை வதம் செய்வதாகக் கனவு கண்டேன்' என்று சொன்னார். அதற்கு அவர், 'சனத்குமாரா, உன் கனவு பலிக்கும். ஆனால், நீ பிரம்மஞானியாக இருப்பதால் இந்தப் பிறவியில் அது இயலாத காரியம். அடுத்த பிறவியில் உனக்கு அந்தப் பாக்கியம் கிட்டும்' என்றார்.

    முருகப் பெருமானின் அவதாரத்தை முன்னிட்டு சிவனாரும் உமையவளும் சனத்குமாரரைக் காண வந்தார்கள். தியானத்தில் இருந்த சனத்குமாரர் தியானம் முடிவடைந்ததும் தன் முன் சிவனும் பார்வதியும் நிற்பதைக் கண்டு வணங்கினார்.

    அப்போது பரமேஸ்வரன் 'மகனே. உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்' என்றார். அதற்கு சனத்குமாரர், 'நீங்கள் ஒன்றும் எனக்கு வரம் தர வேண்டாம் உங்களுக்கு வேண்டுமானால் நான் வரம் தருகிறேன், கேளுங்கள்' என்றார். இதைக் கேட்டு கோபம் கொள்ளவில்லை சிவனார். "நீ எனக்கு மகனாகப் பிறக்க வேண்டும்" என்று வரம் கேட்டார்.

    சனத்குமாரரும், "உங்கள் விருப்பப்படியே உங்கள் அருளால் உங்களுக்கு மகனாகப் பிறப்பேன்" என்றார். இதைக் கேட்டுக் கொண்டிருந்த பார்வதி, "உம் அருளால் மகனாகப் பிறப்பேன் என்றால், என் பங்கு ஒன்றுமில்லாதது போல் தெரிகிறதே" என்றாள்.

    "ஆம். கர்ப்பவாசத்தில் தோன்றப் போவதில்லை. எனவே, அருள் கூர்ந்து தங்கள் கணவரின் அருள் பார்வையால் நான் அவதரிக்கும்படி செய்யுங்கள்" என்றார். பார்வதியும், "சரி, உன் விருப்பம் போல் நடக்கும்" என ஆசீர்வதித்தாள்.

    காலங்கள் கடந்தன. பஸ்மாசுரனைக் கொல்ல சிவபெருமான் மகா விஷ்ணுவுடன் சென்றபோது, பார்வதி தனித்திருப்பதை அறிந்த பஸ்மாசுரன் பார்வதியைத் தேடி வந்தான். தன் கணவனைப் பிரிந்த சோகத்தில் உருகிக் கொண்டிருந்த உமையவள், பஸ்மாசுரன் வருவதை அறிந்து அவனிடமிருந்து தப்பிக்க பொய்கையாக மாறினாள்.அது தான் சரவணப் பொய்கை எனப்படுகிறது.

    மகாவிஷ்ணுவின் மோகினி அவதாரத்தால் பஸ்மாசுரன் எரிந்து சாம்பல் ஆனதும், பரமசிவன் கயிலாயம் வரும் வழியில் பார்வதி பொய்கையாக மாறி இருப்பதைக் கண்டு, இது தான் தக்க தருணம் என்று தன் நெற்றிக் கண்ணிலிருந்து ஆறு தீப்பொறிகளை அந்தப் பொய்கையில் விழும்படி செய்தார்.

    சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து வெளிப்பட்ட ஆறு தீப்பொறிகள், ஆறு குழந் தைகளாக தாமரை மலர்கள் மேல் எழுந்தருளின. அந்த ஆறு குழந்தைகளையும் கார்த்திகைப் பெண்கள் எடுத்துப் போற்றினார்கள். இதனைக் கண்ட பார்வதி, அந்த ஆறு குழந்தைகளையும் அவர்களிடமிருந்து வாங்கி ஒன்றாக்கினாள். அந்தக் குழந்தையே ஆறுமுகம் கொண்ட சரவணன் என்கிற முருகப் பெருமான். இப்படித்தான் சனத்குமாரர் முருகக் கடவுளாக அவதரித்தார். சூரபத்ம வதமும் நிகழ்ந்தது. தேவர்களும் மகிழ்ந்தனர்.

    இதன் காரணமாகத்தான் ஐப்பசி மாதம் வளர்பிறையிலிருந்து ஆறு நாட்கள் திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா நடைபெறுகிறது. சஷ்டி திதி அன்று சூரசம்ஹார நிகழ்ச்சி திருச்செந்தூர் கடற்கரையில் மிகச் சிறப்பாக நடைபெறும்.

    கந்த சஷ்டி வேளையில் விரதம் இருந்து கந்தனை வணங்கி மகிழ்வார்கள் முருக பக்தர்கள்.

    • கந்தசஷ்டி விழா நாளை தொடங்கி வருகிற 31-ந்தேதி வரை நடை பெறுகிறது.
    • திருத்தணி கோவிலில் சூரசம்ஹாரத்திற்கு பதில் புஷ்பாஞ்சலி நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    முருகன் கோவில்களில் கந்தசஷ்டி விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    ஆனால் திருத்தணி முருகன் கோவிலில் தொடங்கப்படவில்லை.

    இந்த நிலையில் இன்று காலை திருத்தணி முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா லட்சார்ச்சனையுடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதையொட்டி மூலவருக்கு புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

    திருத்தணி முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா நாளை தொடங்கி வருகிற 31-ந்தேதி வரை நடை பெறுகிறது. இதையொட்டி தினந்தோறும் மூலவர் முருகப்பெருமான் புஷ்ப அலங்காரம், பட்டு அலங்காரம், தங்கக்கவசம், திருவாபரணம், சந்தன காப்பு உள்ளிட்ட அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். வருகிற 30-ந்தேதி மாலையில் சண்முகப்பெருமானுக்கு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியும், 31-ந்தேதி காலையில் உற்சவர் திருக்கல்யாணமும் நடைபெற உள்ளது.

    அறுபடை வீடுகளில் முருகன் கோவில்களில் கடைசி நாளில் சூரசம்ஹாரம் நடைபெறும். ஆனால் திருத்தணி கோவிலில் மட்டும் புஷ்பாஞ்சலி நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. கந்த சஷ்டி விழா நடை பெறும் நாட்களில் காலை மற்றும் மாலை இரு வேளைகளில் தேவாரபாராயணம் நடைபெறுகிறது.

    • விழா நாட்களில் தினமும் அபிஷேகம், அலங்கார தீபாராதனை போன்ற நிகழ்வுகள் நடைபெறும்.
    • 31-ந்தேதி காலை 10 மணிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது.

    முருகப்பெருமான், சூரபத்மனை வதம் செய்ததை நினைவுகூறும் விதமாக ஆண்டுதோறும் முருகன் கோவில்களில் சூரசம்ஹார விழா நடைபெறுவது வழக்கம். இந்த விழாவையொட்டி கந்தசஷ்டி விழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான சூரசம்ஹார விழா வருகிற 30-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி கந்தசஷ்டி விழா நேற்று தொடங்கியது.

    குமரி மாவட்ட இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களில் ஒன்றான நாகர்கோவில் நாகராஜா கோவிலில் உள்ள பாலமுருகன் சன்னதியில் 45-வது ஆண்டு கந்தசஷ்டித் திருவிழா நேற்று தொடங்கியது. இந்த விழா 7 நாட்கள் நடைபெறுகிறது. இதையொட்டி நேற்று அதிகாலை 5 மணி அளவில் மகாகணபதி ஹோமமும், 6 மணிக்கு கால்நாட்டும், காப்புக்கட்டும் நடந்தது.

    9 மணிக்கு தன்வந்திரி ஹோமம், 11 மணிக்கு அபிஷேகம், மதியம் 1 மணிக்கு மகா தீபாராதனை, மாலை 5 மணிக்கு சமயச் சொற்பொழிவு, இரவு 7 மணிக்கு அலங்கார தீபாராதனை, 7.30 மணிக்கு உற்சவ மூர்த்தி மூலவரையும், அம்பாளையும் இறை இசைப்பாடல்களுடன் மும்முறை வலம் வரும் நிகழ்ச்சி, இரவு 8.30 மணிக்கு தீபாராதனை ஆகியவை நடந்தது.

    கந்தசஷ்டி திருவிழா தொடங்கியதையொட்டி நேற்று காலை 70-க்கும் மேற்பட்ட பக்தர்கள் நேற்று காப்புக் கட்டி விரதம் தொடங்கினர். விழா நாட்களில் தினமும் அபிஷேகம், அலங்கார தீபாராதனை போன்ற நிகழ்வுகள் நடைபெறும். 6-வது நாளான வருகிற 30-ந் தேதி மாலை 6.30 மணிக்கு நாகராஜா திடலில் விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடக்கிறது. அன்று இரவு 9 மணிக்கு சாமி ரதவீதிகளில் பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறும். 7-வது நாளான 31-ந் தேதி காலை 10 மணிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. மதியம் 12 மணிக்கு மங்கல தீபாராதனையும், தொடர்ந்து திருக்கல்யாண விருந்தும் நடக்கிறது.

    ×