search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    மருதமலை முருகன் கோவிலில் விரதம் இருக்கும் பக்தர்கள் காப்பு கட்டினர்
    X

    சுப்பிரமணிய சுவாமிக்கு காப்பு கட்டப்பட்ட போது எடுத்தபடம்.

    மருதமலை முருகன் கோவிலில் விரதம் இருக்கும் பக்தர்கள் காப்பு கட்டினர்

    • சுப்பிரமணிய சுவாமிக்கும் மற்றும் பிற தெய்வங்களுக்கும் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • 30-ந்தேதி சண்முகார்ச்சனை நடைபெறுகிறது.

    கோவையில் புகழ்பெற்ற மருதமலை முருகன் கோவில் உள்ளது. இது 7-வது படை வீடு என பக்தர்களால் போற்றப்படுகிறது. இக்கோவிலில் கந்த சஷ்டி விழா நேற்று தொடங்கியது. கந்த சஷ்டி விழாவின் முதல் நாளான நேற்று காலை 6 மணிக்கு கோ பூஜை நடந்தது. இதை தொடர்ந்து கோவில் நடை திறக்கப்பட்டது.

    பின்னர் மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு பால், பன்னீர், ஜவ்வாது போன்ற 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து வேடர் அலங்காரத்தில் சுப்பிரமணிய சுவாமி காட்சிஅளித்தார்.

    இதை அடுத்து காலை 7 மணி அளவில் விநாயகர் பூஜை, புண்யாகம், விழா நடைபெற இறை அனுமதி பெறுதல், மண் எடுத்தல் முளைப்பாளிகை இடுதல் ஆகியவை நடைபெற்றது.

    இதை தொடர்ந்து கருவறையை அடுத்துள்ள மகா மண்டபத்தில் சுப்பிமணியசுவாமி வள்ளி- தெய்வானையுடன் எழுந்தருளினார். இதை அடுத்து சுப்பிரமணிய சுவாமிக்கும் மற்றும் பிற தெய்வங்களுக்கும் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதைத் தொடர்ந்து அர்த்தமண்டபத்தில் யாகசாலை பூஜை நடந்தது. கந்த சஷ்டி விரதம் இருக்கும் பக்தர்கள் முருகப் பெருமானை வேண்டி காப்பு கட்டிக் கொண்டனர். கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு வருகிற 29-ந் தேதி வரை தினமும் காலையிலும் மாலையிலும் அர்த்தமண்டபத்தில் யாகசாலை பூஜை, சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும் அலங்காரம் நடைபெறுகிறது.

    30-ந் தேதி காலை 6மணி முதல் 7.30 மணி வரை சண்முகார்ச்சனை நடைபெறுகிறது. காலை 11 மணி முதல் 12 மணி வரை உற்சவர் சண்முகார்ச்சனை நடக்கிறது.மதியம் 3 மணிக்கு அன்னையிடம் வேல் வாங்குதல் மற்றும் சூரசம்காரத்திற்கு எழுந்தருளுதல், சூரபத்மனை முருகப்பெருமான் வதம் செய்யும் சூரசம்கார விழா நடைபெறுகிறது. 31-ந் தேதிகாலை 9.30.மணி முதல் 10.30 மணிக்குள் சுப்பிரமணிய சுவாமி, வள்ளி- தெய்வானை திருக்கல்யாணம் திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெறுகிறது. தொடர்ந்து புஷ்பபல்லக்கில் சுவாமி வள்ளி தெய்வானையுடன் திருவீதி உலா வருகிறார். விழா ஏற்பாடுகளை மருதமலை கோவில் துணை கமிஷனர் ஹர்ஷினி மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    இதுபோல் கோவை கோவில்பாளையத்தில் சுமார் 1000 ஆண்டு பழமை வாய்ந்த காலகாலேஸ்வரர் கோவிலில்கந்த சஷ்டி சூரசம்ஹார திருவிழா நேற்று காலை 9 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அதனைத் தொடர்ந்து 10 மணிக்கு காப்பு கட்டுதல் மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    Next Story
    ×