search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kantha Sasti Festival"

    • திருத்தணி முருகன் கோவிலில் மட்டும் சூரசம்ஹார விழா நடப்பது கிடையாது.
    • வாருங்கள் அதற்கு என்ன காரணம் என்று பார்ப்போம்.

    உலகெங்கும் உள்ள முருகன் ஆலயங்களில் கந்த சஷ்டி விழாவானது வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இதில் சூரசம்ஹாரம் நடைபெறுவது முக்கிய நிகழ்வு. ஆனால் திருத்தணி முருகன் கோவிலில் மட்டும் சூரசம்ஹார விழா நடப்பது கிடையாது. வாருங்கள் அதற்கு என்ன காரணம் என்று பார்ப்போம்.

    தேவர்களையும் முனிவர்களையும் சூரபத்மன் என்னும் அசுரன் மிகவும் கொடுமைப்படுத்தினான். ஈசனிடம் பல அற்புத வரங்களை பெற்றதால் அவனை யாராலும் அழிக்க முடியவில்லை. ஈசன் தன் நெற்றிக்கண் சுடர் மூலம் முருகனை அவதரிக்க செய்து சூரபத்மனின் அழிவிற்கு வித்திட்டார்.

    சூரபத்மனை வதம் செய்த பிறகு முருகப்பெருமானின் சீற்றம் முழுவதும் தணிந்த பின் அமர்ந்த மலையே திருத்தணி என்று புராணங்கள் கூறுகிறது. ஆகையால் மற்ற கோவிலில்களில் சூரசம்ஹார விழா நடைபெற்றாலும் இங்கு முருகனின் சீற்றத்தை தணிக்க புஷ்பாஞ்சலி நடைபெறுவது வழக்கம்.

    சங்க காலப் புலவரான நக்கீரர் இயற்றிய திருமுருகாற்றுப்படையில் இக்கோவில் குறித்த குறிப்புகள் காணப்படுகிறது. தேவர்களின் துயர் துடைத்ததோடு அடியவர்களின் கவலையையும், துன்பத்தையும் தணிக்கும் தலம் இது என்பதால் திருத்தணி என்று பெயர் பெயர்பெற்றதாக கூறப்படுகிறது.

    திருத்தணி மலை நோக்கி சென்றாலோ, திருத்தணி முருகனை நினைத்தாலோ, திருத்தணி மலை இருக்கும் திசை நோக்கி வாங்கினாலோ முருகப்பெருமானின் அருள் கிடைக்கும் என்கிறது தணிகை புராணம்.

    • திருச்செந்தூர் கோவிலில் நடக்கும் திருவிழாக்களில் மிகவும் முக்கியமானது கந்தசஷ்டி திருவிழாவாகும்.
    • திருச்செந்தூர் முருகன் கோவிலில் இலை விபூதி பிரசாதம் வழங்கப்படுகிறது.

    அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் மிகவும் முக்கியமானது கந்தசஷ்டி திருவிழாவாகும்.

    இவ்விழாவில் தமிழகம் முழுவதும் மட்டுமல்லாமல் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் என உலக நாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சஷ்டி விரதம் மேற்கொண்டு சாமி தரிசனம் செய்து செல்வது வழக்கம். இங்கு வழங்கப்படும் பிரசாதங்களில் முக்கியமானது இலை விபூதியாகும்.

    ஒருமுறை ஆதிசங்கரர் காசநோயால் பாதிக்கப்பட்டு திருச்செந்தூர் முருகனிடம் வந்துள்ளார். அப்போது முருகப் பெருமான் ஆதிசங்கரரிடம் இனிய தமிழில்

    பாடல் பாடுமாறு கேட்டுள்ளார். அதற்கு அவர் நான் பெருமாளை மட்டும் பாடுவேன் என்று கூறியுள்ளார்.

    இதனால் வருத்தமடைந்த முருகப் பெருமான் வருத்தத்தோடு இருப்பது கண்டு அப்போது அங்கு வந்த பெருமாள் முருகன் வருத்தத்துடன் இருப்பதற்கு காரணத்தை கேட்டறிந்தார். விஷயம் புரிந்த பெருமாள் ஆதிசங்கரர் இடம் சென்று என்னை பாடுவதாக நினைத்து முருகப் பெருமான் முன் சென்று கண்ணை மூடிக் கொண்டு என்னை பாடு என்று கூறினாராம். அப்போது முருகப் பெருமான் முன் நின்று கண்ணை மூடிக்கொண்டு ஆதிசங்கரர் பாடினாராம். கண்ணை திறந்து பார்க்கும் போது முருகப் பெருமான் இருக்கும் இடத்தில் பெருமாள் இருந்துள்ளார்.

    பெருமாள் தான் முருகன், முருகன் தான் பெருமாள் என்பதை உணர்ந்த ஆதிசங்கரர், முருகப் பெருமானிடம் மன்னிப்பு கேட்டு முருகனை பாடி காசநோயை குணப்படுத்த வேண்டும் என்று வேண்டினார். உடனே முருகப்பெருமான் இலையில் விபூதியை அவரிடம் கொடுத்தார். திருநீற்றுப்பச்சிலையில் வைத்து கொடுக்கப்பட்ட இலை விபூதியை சாப்பிட்டதும் காசநோய் குணமாகியதாம்.

    தேவர்களை சிறை பிடித்து கொடுமைப்படுத்திய சூரபத்மனிடம் தேவர்களை விடுவித்து முருகப் பெருமானிடம் சரணடையுமாறு வீரபாகு தேவன் கேட்டபோது சூரன் மறுத்தான். முருகப் பெருமானிடம போர் புரிய தயாரானான். போர் தொடங்கியது போரில் முருகப் பெருமான் படை சார்பில் இருந்த வீரர்கள் சிலர் காயமடைந்தனர்.

    அந்த காயத்திற்கு மருந்தாக இலை விபூதி கொடுத்து குணமாக்கியுள்ளனர். பின்னாளில் அதன் மகத்துவத்தை அறிந்து கோவிலை கட்டிய சாதுக்கள் பணியாற்றிய ஊழியருக்கு ஊதியமாக இலை விபூதியை கொடுத்துள்ளனர். பெற்றுக் கொண்ட ஊழியர்கள் விடலை கோவில் பிள்ளையார் அருகே வந்து அதைத் திறந்து பார்த்த போது ஊதியத்திற்கு ஏற்ப பொற்காசுகள் ஆக மாறியிருந்ததாம். வேலை செய்யாதவர்களுக்கு வெறும் விபூதி மட்டுமே இருக்குமாம். அதனுடைய தத்துவத்தை உணர்த்தும் வகையில் இன்றும் திருச்செந்தூர் முருகன் கோவிலில் இலை விபூதி பிரசாதம் வழங்கப்படுகிறது.

    • தினமும் சிறப்பு அபிஷேகமும், அலங்கார பூஜைகளும் நடக்கிறது.
    • 31-ந்தேதி சட்டதேர்வலம் வருதல் நிகழ்ச்சி நடக்கிறது.

    அறுபடைவீடுகளில் முதற்படை வீ்டான திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கடந்த 25-ந்தேதி காப்பு கட்டுதலுடன் கந்தசஷ்டி திருவிழா தொடங்கியது. இதை தொடர்ந்து கோவிலில் தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. விரதம் இருக்கும் பக்தர்கள் சுப்பிரமணியரை வழிபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் இன்று(சனிக்கிழமை) மாலை 6.30 மணியில் இருந்து 7.30 மணிக்குள் தாயார் கோவர்த்தனாம்பிகையிடம் இருந்து வேல் வாங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது.

    திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நாளை(30-ந்தேதி) நடக்கிறது. இதையொட்டி நாளை மாலை 6.30 மணியளவில் சன்னதி தெருவில் உள்ள சொக்கநாதர் கோவில் முன்பு பக்தர்கள் புடைசூழ முருகப்பெருமான் சக்திவேல் கொண்டு சூரபத்மனை வதம் செய்யக்கூடிய"சூரசம்ஹார லீலை "நடைபெறும். திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியாக 31-ந்தேதி காலை 7-15 மணியளவில் மலையை சுற்றி சட்டதேர்வலம் வருதல் நிகழ்ச்சி நடக்கிறது.

    சோலைமலை முருகன் கோவிலில் கடந்த 25-ந்தேதி யாக சாலை பூஜை, காப்பு கட்டுதலுடன் கந்தசஷ்டி திருவிழா தொடங்கியது. இதை தொடர்ந்து தினமும் சிறப்பு அபிஷேகமும், அலங்கார பூஜைகளும் நடக்கிறது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான நாளை(ஞாயிற்றுக்கிழமை) மாலை 5.30 மணிக்கு சூரசம்ஹாரம் நடக்கிறது. 31-ந்தேதி திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள். இதே போல மற்ற முருகன் கோவில்களிலும் நாளை சூரசம்ஹார விழா நடக்கிறது.

    • கந்தசஷ்டி விழாவில் சூரசம்ஹார நிகழ்ச்சி நாளை நடக்கிறது.
    • நாளை தங்கரத புறப்பாடு நடைபெறாது.

    உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான கந்தசஷ்டி விழா கடந்த 25-ந்தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. விழாவையொட்டி பூஜை நேர மாற்றம் செய்யப்படுகிறது. இதுகுறித்து பழனி முருகன் கோவில் நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    கந்தசஷ்டி விழாவில் சூரசம்ஹார நிகழ்ச்சி நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி அன்றைய தினம் அதிகாலை 4 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4.30 மணிக்கு விளாபூஜை நடைபெறுகிறது. மதியம் 12 மணிக்கு உச்சிக்கால பூஜை, 1.30 மணிக்கு சாயரட்சை பூஜை நடக்கிறது. அதன்பின்னர் 2.45 மணிக்கு வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து கோவில் நடை சாத்தப்படும்.

    எனவே நாளை காலை 11 மணிக்கு பின் அனைத்து கட்டண சீட்டுகள் வழங்குவது நிறுத்தப்படும். அதேபோல் படிப்பாதையில் 11.30 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். மேலும் 10 மணி முதல் ரோப்கார், மின்இழுவை ரெயில் ஆகிய சேவைகளும் நிறுத்தப்படும். 4 கிரிவீதிகளிலும் சூரசம்ஹார நிகழ்ச்சி முடிந்து சின்னக்குமாரர் மலைக்கோவிலுக்கு சென்று சம்ரோஷன பூஜை நடைபெறும். அதேபோல் அன்றைய தினம் தங்கரத புறப்பாடு நடைபெறாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • தினமும் சுவாமி பல்வேறு வாகனங்களில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    • இன்று தாரகாசூரனை முருகன் வதம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது.

    கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் கந்தசஷ்டி விழா கடந்த 25-ந் தேதி தொடங்கியது. விழாநாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுவாமிக்கு, சிறப்பு அலங்காரம், அபிஷேகம் நடந்தது. 5-ம் நாள் விழாவான இன்று(சனிக்கிழமை) மதியம் சூரபத்மனின் இளையசகோதரர் தாரகாசூரனை முருகப்பெருமான் வதம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை(ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது.

    இதை முன்னிட்டு நாளை அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 6 மணிக்கு திருவனந்தல் பூஜை, விளாபூஜை, காலசந்தி பூஜைகள் நடைபெறும். காலை 7 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடக்கிறது. மதியம் 12 மணிக்கு உச்சிகால பூஜை நடைபெறும். மாலை 4.30 மணியளவில் முருகப்பெருமான், சூரபத்மனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    பின்னர் சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெறும். இரவு 7 மணிக்கு கோவில் சீர்பாதம் தாங்கிகள் சார்பில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • தினமும் கதிர்வேல் முருகனுக்கு லட்சார்ச்சனை நடந்து வருகிறது.
    • நவம்பர் 1-ந்தேதி ஊஞ்சல் உற்சவம், சாந்தாபிஷேகமும் நடக்கிறது.

    கோவில்பட்டி சொர்ணமலை கதிரேசன் கோவிலில் கந்த சஷ்டி விழாவும், லட்சார்ச்சனை விழாவும் கடந்த 25-ந்தேதி தொடங்கியது. தினமும் காலை 8 மணிக்கு கதிர்வேல் முருகனுக்கு லட்சார்ச்சனை நடந்து வருகிறது. காலை 10.30 மணிக்கு பழனி ஆண்டவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 11.30 மணிக்கு சிறப்பு தீபாராதனையும், மாலை 5 மணிக்கு லட்சார்ச்சனையும், இரவு 7 மணிக்கு சிறப்பு தீபாராதனையும் நடைபெற்று வருகிறது.

    நேற்று 4-வது நாள் விழாவை காலை 11.30 மணிக்கு சிறப்பு தீபாராதனை முடிந்ததும், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. வருகிற் 31-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு மூலவர் கதிர்வேல் முருகனுக்கு சிறப்பு அபிஷேகமும், 11-30 மணிக்கு சிறப்பு தீபாராதனையும், மாலை 6.30 மணிக்கு கார்த்திகேயர்-வள்ளி- தெய்வானை திருக்கல்யாணமும் நடைபெறுகிறது. நவம்பர் 1-ந்தேதி (செவ்வாய் கிழமை) மாலை 6 மணிக்கு ஊஞ்சல் உற்சவமும், இரவு 7.30 மணிக்கு புஷ்பாஞ்சலி மற்றும் சாந்தாபிஷேகமும் நடைபெறுகிறது.

    • சூரசம்ஹாரம் விழாவுக்கு அதிகமான பக்தர்கள் கூட்டம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • 31-ந்தேதி சுப்பிரமணியசுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெறும்.

    கோவை மருதமலையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணியசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் முருக பெருமானின் 7-வது படைவீடாக பக்தர்களால் போற்றப்படுகிறது. சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா கடந்த 26-ந் தேதி தொடங்கிறது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. இதையொட்டி கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் கந்தசஷ்டி விழாயொட்டி மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மருதமலை சுப்பிரமணியசாமி கோவில் துணை ஆணையர் ஹர்ஷினி, பேரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜபாண்டியன், வடவள்ளி இன்ஸ்பெக்டர் லெனின் அப்பாதுரை உள்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    கொரோனா காலத்திற்கு பிறகு வரும் கந்தசஷ்டி விழா என்பதாலும், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதாலும் சூரசம்ஹாரம் விழாவுக்கு அதிகமான பக்தர்கள் கூட்டம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பக்தர்களின் பாதுகாப்பு கருதியும், மலை கோவிலுக்கு செல்ல 2 மற்றும் 4 சக்கர வாகனங்களுக்கு அனுமதி இல்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அதற்கு பதிலாக அடிவாரத்தில் பக்தர்கள் வரும் 2 மற்றும் 4 சக்கர வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்யப்படும். பக்தர்கள் மலைக்கோவில் செல்ல தேவையான அளவிற்கு மினி பஸ்கள் இயக்கப்படும் எனவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    31-ந் தேதி சுப்பிரமணியசுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெறும் அன்று வழக்கம்போல வாகனங்கள் செல்ல அனுமதி அளிக்கப்படும். இதற்கு பக்தர்கள் முழு ஒத்துழைப்பு தரும்படி கோவில் நிர்வாகத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    • சூரர் பொம்மைகளுக்கான உடல், கை, தலை போன்றவற்றை தயார் செய்யும் பணிகள் நேற்று தொடங்கியது.
    • சூரசம்ஹாரம் நாளை மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.

    அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி விழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான விழா கடந்த 25-ந்தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்கு அடிவாரம் கிரிவீதிகளில் நடைபெறுகிறது. அப்போது சூரர்களான தாரகாசூரன், பானுகோபன், சிங்கமுகன், சூரபத்மன் ஆகியோரை முருகப்பெருமான் குத்தீட்டி, வேல் போன்ற ஆயுதங்களால் வதம் செய்வார்.

    இந்தநிலையில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சிக்காக சூரர்களின் உருவ பொம்மைகள் தயார் செய்யும் பணி பழனியில் மும்முரமாக நடந்து வருகிறது. இதில் பழனியை சேர்ந்த ராமசாமி மகன் செல்வராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் குடும்பத்தினர் 3 தலைமுறையாக கடந்த 300 ஆண்டுகளுக்கும் மேலாக சூரர்களின் உருவ பொம்மைகளை செய்து வருகின்றனர். அதிலும் இவர்கள் உருவாக்கும் பொம்மைகள் கந்த புராணத்தில் கூறப்பட்டுள்ளது போல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    அதன்படி சூரர் பொம்மைகளுக்கான உடல், கை, தலை போன்றவற்றை தயார் செய்யும் பணிகள் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் நிறைவு பெற்றவுடன் சூரர்களின் பொம்மைகள் கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும்.

    சூரசம்ஹாரம் நிகழ்ச்சிக்கு பயன்படுத்தப்பட்ட பின் சூரர்களின் பொம்மைகள் விஸ்வ பிராமண மகாஜன சங்கத்தினரிடம் ஒப்படைக்கப்படும். தொடர்ந்து அவற்றுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு பொம்மைகளை செய்தவர்களிடம் அவை மீண்டும் ஒப்படைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கந்தசஷ்டி திருவிழா கடந்த 25-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • சூரசம்ஹாரம் நிகழ்ச்சியை காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்.

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 25-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. திருவிழா தொடக்கம் முதல் தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கொட்டகைகளில் ஏராளமான பக்தர்கள் தங்கி விரதம் இருந்து வருகின்றனர். சூரசம்ஹாரம் நிகழ்ச்சியை காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்.

    இந்நிலையில் பக்தர்களுக்கு செய்யப்பட்ட அடிப்படை வசதிகள், ஏற்பாடுகளை நேற்று கனிமொழி எம்.பி., அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு செய்தனர். பின்னர் கனிமொழி எம்.பி. தங்கி விரதம் இருக்கும் ஒவ்வொரு தற்காலிக கொட்டகைகளுக்கு சென்று பக்தர்களிடம் குறைகள் ஏதும் உள்ளதா? என கேட்டு, உங்களுக்கு வேண்டிய வசதிகளை கூறுங்கள் உடனடியாக நிவர்த்தி செய்து கொடுக்கிறோம் எனவும் கூறினார்.

    பின்னர் அன்னதான மண்டபத்திற்கு சென்று பக்தர்களிடம் அன்னதானம் குறித்து கேட்டறிந்தார்கள். கோவில் வளாகத்தில் அமைக்கப்படுள்ள மருத்துவ முகாம், தற்காலிக கழிப்பறைகளை நேரில் பார்த்து ஆய்வு செய்தார். அவர் ஆய்வு செய்த போது ஏராளமான பெண்கள் அவருடன் செல்பி எடுத்தனர். அவருக்கு, விரதம் இருக்கும் கிராமத்து பெண்கள் குலைவையிட்டு தங்களுடைய வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்தனர்.

    • விழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
    • திங்கட்கிழமை திருக்கல்யாணம் நடக்கிறது.

    முருகபெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 25-ந்தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. 4-ம் நாளான நேற்று அதிகாலையில் நடைதிறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. காலையில் உச்சிகால அபிஷேகம், தீபாராதனையை தொடர்ந்து யாகசாலையில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடைபெற்றது.

    மதியம் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளினார். மாலையில் திருவாவடுதுறை ஆதீன கந்தசஷ்டி மண்டபத்தில் எழுந்தருளிய சுவாமி-அம்பாள்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இரவில் சுவாமி-அம்பாள்களுடன் தங்க ரதத்தில் எழுந்தருளி கிரிவீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 6-ம் நாளான நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலையில் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அன்று அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது. காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெறுகிறது.

    மாலை 4 மணியளவில் கடற்கரையில் சுவாமி ஜெயந்திநாதர் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து சந்தோஷ மண்டபத்தில் எழுந்தருளும் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெறும். பின்னர் சுவாமி-அம்பாள் புஷ்ப சப்பரத்தில் எழுந்தருளி கிரிவீதி வலம் வந்து 108 மகாதேவர் சன்னதி முன்பு சாயாபிஷேகம் (அதாவது கண்ணாடியில் தெரியும் சுவாமியின் பிம்பத்திற்கு அபிஷேகம்) நடைபெறுகிறது.

    7-ம் நாளான நாளை மறுநாள் (திங்கட்கிழமை) இரவு 11 மணியளவில் சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது.

    விழாவையொட்டி தமிழகத்தின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். ஏராளமான பக்தர்கள் கோவில் வளாகத்தில் உள்ள தற்காலிக கூடாரங்களில் தங்கியிருந்து விரதமிருந்து வருகின்றனர். பெரும்பாலான பக்தர்கள் அதிகாலை முதலே கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்கின்றனர். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளது.

    மேலும், பலத்த போலீஸ் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் மேற்பார்வையில், திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆவுடையப்பன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், ராமதாஸ், கணேசன், செந்தில் முருகன், இணை ஆணையர் (பொறுப்பு) அன்புமணி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • நிறைவாக தீப ஆராதனை காட்டியபின் இயன்ற நிவேதனம் செய்யுங்கள்.
    • அன்று மாலை, முருகன் கோவிலுக்கு போய் தரிசனம் செய்து விரதத்தினை நிறைவு செய்யுங்கள்.

    சூரசம்ஹார தினத்தன்று அதிகாலையில் எழுந்து நீராடிவிட்டு, அவரவர் வழக்கப்படி நெற்றிக்கு விபூதி, சந்தனம், குங்குமம் இட்டுக் கொள்ளுங்கள். பூஜை அறையில் வழக்கமான இடத்தில் திருவிளக்கினை ஏற்றி, குலதெய்வத்தை மனதார கும்பிடுங்கள். பிறகு, சஷ்டி விரதம் இருந்ததன் பலன் கிட்ட அருள வேண்டும் என்று பிள்ளையாரிடம் மனதார வேண்டுங்கள்.

    அடுத்து, உங்கள் வீட்டில் உள்ள முருகன் படம் அல்லது சிறிய முருகன் விக்ரகத்தினை எடுத்து கைகளில் வைத்துக்கொண்டு ஆறுமுகனை அகம் ஒன்றி கும்பிட்டு அன்போடு எழுந்தருள வேண்டுங்கள். பின் உங்கள் வசதிக்கு ஏற்றபடி சந்தனம், மஞ்சள், குங்குமம், ஜவ்வாது போன்றவற்றால் முருகனின் படம் அல்லது விக்ரகத்திற்கு பொட்டு வைத்து, பூப் போட்டு அலங்கரியுங்கள்.

    பூஜைக்கு உரிய இடத்தில் கோலமிட்டு அதன்மீது விக்ரகம் அல்லது படத்தினை வைத்து, தீபம் ஒன்றினை ஏற்றுங்கள். ஊதுபத்தி, சாம்பிராணி போன்றவற்றை புகைய செய்து நறுமணம் கமழ செய்யுங்கள். மனம் முழுவதும் அந்த மயில் வாகனனையே நினைத்தபடி கந்தசஷ்டி கவசம், கந்தகுரு கவசம், கந்தர் அனுபூதி, சுப்ரமண்ய புஜங்கம் போன்ற உங்களுக்கு தெரிந்த துதிகளை சொல்லுங்கள். அல்லது கேளுங்கள்.

    ஏதும் இயலாதவர்கள் கந்தா சரணம், முருகா சரணம், கார்த்திகை பாலா சரணம் என்று உங்களுக்கு தெரிந்தபடி சரணங்களை சொல்லுங்கள். நிறைவாக தீப ஆராதனை காட்டியபின் இயன்ற நிவேதனம் செய்யுங்கள். அன்று மாலை, பக்கத்திலுள்ள முருகன் கோவிலுக்கு போய் தரிசனம் செய்து விரதத்தினை நிறைவு செய்யுங்கள். வேலவன் அருளால் மணப்பேறு, மகப்பேறு, நல்வாழ்வு, ஆரோக்கியம், ஆயுள், புகழ், செல்வம் என்று நீங்கள் வேண்டியயாவும் நிச்சயம் கைகூடும். நிம்மதி, சந்தோஷம், உற்சாகம் வாழ்வில் நிறையும்.

    • மூலவர் சுப்ரமணியசுவாமிக்கு 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது
    • சுப்பிரமணிய சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    கோவையை அடுத்த மருதமலையில் புகழ்பெற்ற சுப்பிரமணிய சாமி கோவில் உள்ளது. இது முருகப்பெருமானின் 7-வது படை வீடு என முருக பக்தர்களால் போற்றப்படுகிறது. இந்த கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 26-ந்தேதி தொடங்கியது.

    கந்த சஷ்டி விழாவின் 2-வது நாளான நேற்று காலை 6 மணிக்கு கோ பூஜை நடந்தது. இதைத்தொடர்ந்து கோவில் நடை திறக்கப்பட்டது பின்னர் மூலவர் சுப்ரமணிய சுவாமிக்கு பால், பன்னீர், ஜவ்வாது போன்ற 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது

    அதைத்தொடர்ந்து சுப்பிரமணிய சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். மகா மண்டபத்தில் சுப்பிரமணியசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளினார். அதன்பிறகு மண்டபத்தில் காலையிலும் மாலையிலும் சண்முகார்ச்சனை மற்றும் யாகசாலை பூஜை நடந்தது. கந்த சஷ்டி விரதம் இருக்கும் பக்தர்கள் நேற்று சுவாமி தரிசனம் செய்து தங்கள் விரதத்தை தொடர்ந்தனர்.

    ×