search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "jewelry snatch"

    கொளத்தூரில் மூதாட்டியிடம் நகை பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாதரவம்:

    கொளத்தூர் அஞ்சுகம் நகர் பிரதான சாலையில் வசித்து வருபவர் ஜம்புலிங்கம். இவரது மனைவி வசந்தா (வயது 65) இவர் இன்று அதிகாலை வீட்டின் கதவைத் திறந்து வெளியேவந்த போது மர்ம ஆசாமிகள் வசந்தா கழுத்தில் இருந்த 10 பவுன் தாலி செயினை பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.

    இது குறித்து கொளத்தூர் போலீசில் புகார் தெரிவித்தனர் புகாரின்பேரில் கொளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர் அதிகாலையில் இதுபோன்ற சம்பவங்கள் இப்பகுதியில் நடை பெறுவதால் பெண்கள் வெளியில் வருவதற்கு அச்சப்படுவதாக தெரிவித்தனர்.

    திண்டுக்கல் அருகே பெண் சத்துணவு ஊழியரிடம் நகை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    ஆத்தூர்:

    திண்டுக்கல் அருகே செம்பட்டி பச்சமலையான் கோட்டையை சேர்ந்தவர் பாலமுருகன் மனைவி பழனியம்மாள். கணவர் இறந்து விட்டதால் மகளுடன் அதே பகுதியில் வசித்து வருகிறார். இவர் செல்லாயிபுரத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று பணி முடிந்து மோட்டார் சைக்கிளில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். பச்சமலையான் கோட்டை பிரிவு அருகே செல்போன் அழைப்பு வந்ததால் சாலையோரம் பைக்கை நிறுத்தி விட்டு பேசிக்கொண்டிருந்தார்.

    அப்போது பின்னால் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள் பழனியம்மாள் கழுத்தில் இருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பழனியம்மாள் சத்தம் போட்டார். அக்கம் பக்கத்தினர் ஒன்று கூடினர். ஆனால் கண் இமைக்கும் நேரத்தில் 3 பேரும் மோட்டார் சைக்கிளில் தங்க சங்கிலியுடன் தப்பி சென்றனர்.

    இது குறித்து செம்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் தாவூத்உசேன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    இப்பகுதியில் பெண்களிடம் நகை பறிக்கும் சம்பவம் அதிகரித்துள்ளது. இதனால் மாணவ-மாணவிகள் மற்றும் பெண்கள் வெளியே வர அச்சம் அடைந்துள்ளனர். போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தி நகை பறிக்கும் கொள்ளை கும்பலை பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    பழனியில் இன்று நடந்து சென்ற பெண்ணிடம் 6 புவுன் நகை பறித்த கொள்ளையரை போலீசார் தேடி வருகின்றனர்.

    பழனி:

    பழனி அருகில் உள்ள புஸ்பத்தூரை சேர்ந்த பிச்சை முத்து மனைவி ஞானம்மாள் (வயது50). இவர் இன்று காலை கோவிலுக்கு செல்வதற்காக நடந்து வந்துகொண்டிருந்தார்.

    அப்போது இவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் திடீரென கண் இமைக்கும் நேரத்தில் அவர் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு ஓடிவிட்டனர்.

    அவர் சத்தம்போட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்தும் பைக் கொள்ளையர்களை பிடிக்க முடியவில்லை.

    பழனியில் பைக் கொள்ளையர்களின் அட்டகாசம் கடந்த சில நாட்களாக இல்லாமல் காணப்பட்டது. தற்போது மீண்டும் தங்கள் கைவரி சையை காட்ட தொடங்கி இருப்பது பொதுமக்கள் மற்றும் பக்தர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இது குறித்து ஞானம்மாள் சாமிநாதபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    மதுரை அருகே மூதாட்டியிடம் 7 பவுன் நகை பறிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை மீனாம்பாள்புரம் ஆபீசர் டவுன் தெருவைச் சேர்ந்தவர் மீனா (வயது 74). இவர் நேற்று அருகில் உள்ள எல்.ஐ.சி. காலனியில் உறவினரோடு நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் அவர்களை பின் தொடர்ந்தனர். ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி வந்தபோது மர்ம நபர்கள் மீனாவை வழிமறித்து அவரது கழுத்தில் கிடந்த 7 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பினர்.

    புகாரின் பேரில் கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை திருடிய மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

    விமான நிலையம் அருகே பெண் நகை பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆலந்தூர்:

    ராயப்பேட்டை பீட்டர் சாலையில் குடியிருப்பவர் சுரேஷ். ரெயில்வே ஊழியர். இவருடைய மனைவி தேவி புவனேஸ்வரி. டி.ஜி.பி. அலுவலக அதிகாரி.

    நேற்று சுரேஷ்-தேவி புவனேஸ்வரி இருவரும் பொழிச்சலூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர். அங்கு உறவினர்களை சந்தித்துவிட்டு இரவு வீடு திரும்பினார்கள்.

    இரவு 11.45 மணியளவில் மோட்டார் சைக்கிள் மீனம்பாக்கம் மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்தது. சுரேஷ் மோட்டார் சைக்கிளை ஓட்டினார். தேவி புவனேஸ்வரி பின்னால் உட்கார்ந்து இருந்தார்.

    அப்போது மற்றொரு மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்த 2 பேர் வந்தனர். திடீர் என்று தேவி புவனேஸ்வரியை கீழே தள்ளி அவர் கழுத்தில் கிடந்த 9 பவுன் நகையை பறித்து சென்றனர்.

    நிலை தடுமாறி மோட்டார் சைக்கிள் கீழே விழுந்தது. இதில் கணவன்-மனைவி இருவரும் பலத்த காயம் அடைந்தனர். மீனம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து வழிப்பறி கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.


    சிங்காநல்லூரில் ஆட்டோவை வழிமறித்து தம்பதியை மிரட்டி நகை பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை நீலிகோணம்பாளையம் மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் கோபால். ஓய்வு பெற்ற வேளாண்மை அதிகாரி. இவரது மனைவி சாந்தாமணி(51).

    இவர்கள் இருவரும் திருக்கடையூர் சென்று விட்டு பஸ்சில் ஊர் திரும்பினர். நள்ளிரவு 12.30 மணிக்கு சிங்காநல்லூர் பஸ் நிலையம் வந்த அவர்கள் ஆட்டோவில் வீட்டுக்கு சென்றனர்.

    ஆட்டோ நீலிகோணம்பாளையம் ரோட்டில் சென்று கொண்டிருந்தது. அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் ஆட்டோவை மறித்தனர்.

    கையில் வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர்கள் சாந்தாமணி அணிந்திருந்த தங்க செயின், கோபால் அணிந்திருந்த மோதிரம் என 6 பவுன் நகைகளை பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர்.

    இதுகுறித்து சாந்தாமணி சிங்காநல்லூர் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவஇடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

    அப்பகுதியில் உள்ள வணிக வளாகங்களின் முன்புறம் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. அவற்றில் வழிப்பறி கொள்ளையர்களின் உருவம் பதிவாகி உள்ளதா? என ஆய்வு செய்து வருகின்றனர்.

    தேனியில் வேலைக்கு சென்ற பெண்ணிடம் தங்க சங்கிலி பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    தேனி:

    தேனி அருகே பழனிசெட்டிபட்டி அம்மன் கோவில் அருகே வசித்து வருபவர் ராஜேஷ் மனைவி சவுமியா பிரித்தி (வயது25). இவர் சின்னமனூரில் உள்ள அறக்கட்டளையில் வேலை பார்த்து வருகிறார். இதன் கிளை தேனி சிவாஜி நகரில் உள்ளது.

    இங்கு செல்வதற்காக தேனி புதிய பஸ் நிலையத்தில் இருந்து நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அவரை மோட்டார் சைக்கிளில் மர்ம நபர்கள் பின் தொடர்ந்தனர். கண் இமைக்கும் நேரத்தில் சவுமியா பிரித்தி கழுத்தில் இருந்த 4 பவுன் தாலி சங்கிலியை பறித்தனர். சவுமியா சத்தம்போட்டபோதும் கொள்ளையர்கள் மின்னல் வேகத்தில் சென்று மறைந்தனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த சவுமியா இது குறித்து தேனி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து துணிகர கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    சித்தோடு அருகே நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு அருகே உள்ள சித்தோடு அடுத்த மணக்காடு பகுதியை சேர்ந்தவர் காளியம்மாள். இவரது மகள் சித்ரா(வயது32).

    சித்ராவை சேலம் மாவட்ட, மேட்டூர் அருகே உள்ள கொளத்தூரில் திருமணம் செய்து கொடுத்தனர்.

    சித்ரா அவ்வபோது சித்தோடு அடுத்த மணக்காடு பகுதியில் உள்ள தாய் வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம்.

    இதே போன்று நேற்றும் சித்ரா சேலத்தில் இருந்து கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக ஈரோடுக்கு பஸ்சில் வந்துள்ளார்.

    பின்னர் ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து சித்தோடு செல்லும் பஸ்சில் ஏறி உள்ளார். பஸ் மணக்காடு பஸ் நிறுத்தத்தில் வந்து நின்றது.

    பஸ்சில் இருந்து இறங்கிய சித்ரா தனது தாய் வீட்டிற்கு செல்வதற்காக நடந்து கொண்டிருந்தார்.

    அப்போது காமராஜர் தெரு அருகே சென்ற போது சித்ரா பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் பின் தொடர்ந்து வந்தனர். அவர்களில் பின்னால் உட்கார்ந்து வந்தவன் கண் இமைக்கும் நேரத்தில் சித்ரா கழுத்தில் இருந்த 5 பவுன் நகையை பறித்து மோட்டார்சைக்கிளில் தப்பி சென்று விட்டனர்.

    சித்ரா திருடன்...திருடன் என்று கத்தினார். ஆனால் அதற்குள் கொள்ளையர்கள் தாங்கள் வந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர்.

    இது குறித்து சித்ரா சித்தோடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உசிலம்பட்டியில் வீடு புகுந்து மூதாட்டியிடம் 5 பவுன் நகையை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.

    உசிலம்பட்டி:

    உசிலம்பட்டி தேனி ரோட்டில் ஆர்.சி.பள்ளி அருகே உள்ள சீதா தெருவைச் சேர்ந்தவர் அரசப்பன். இவரது மனைவி பரமேஸ்வரி (வயது 60). இவர் இன்று அதிகாலை காற்றுக்காக கதவை திறந்து வைத்து விட்டு வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்தார்.

    அப்போது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் பரமேஸ்வரி கழுத்தில் கிடந்த 5 பவுன் நகையை நைசாக பறித்தனர்.

    உடனே திடுக்கிட்டு எழுந்த பரமேஸ்வரி கூச்சலிட்டார். ஆனால் அதற்குள் மர்ம நபர்கள் அங்கிருந்து நகையுடன் தப்பினர்.

    இதுகுறித்து உசிலம்பட்டி நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ் பெக்டர் ராமகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து நகை திருடிய மர்ம நபர்களை தேடி வருகிறார்.

    டீக்கடைக்காரரை தாக்கி நகையை பறித்துச் சென்றது தொடர்பாக 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் எரிச்சநத்தம் லட்சுமியா புரத்தைச் சேர்ந்தவர் ராஜூ (வயது 62). இவர் அதே பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார்.

    சம்பவத்தன்று இவரது கடைக்கு 2 பேர் டீக்குடிக்க வந்தனர். அவர்கள் டீக்குடித்தபின் ராஜூவிடம் தகராறு செய்ததாக தெரிகிறது. இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த 2 பேரும் ராஜூவை தாக்கி அவரது கழுத்தில் கிடந்த 2 பவுன் செயினை பறித்துக்கொண்டு தப்பினர்.

    இதுகுறித்து ராஜூ எம்.புதுப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன் அடைப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், நகைப் பறிப்பு தொடர்பாக அதே ஊரைச் சேர்ந்த 2 பேரை பிடித்து விசாணை நடத்தி வருகின்றனர்.

    பேரையூர் அருகே இரும்பு கம்பியால் பெண்ணை தாக்கி நகையை மர்ம மனிதர்கள் பறித்து சென்றனர்.

    பேரையூர்:

    பேரையூர் அழகர்சாமி நகரைச் சேர்ந்தவர் திருச்சிற்றம்பலம், கூட்டுறவு சங்க செயலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி பத்மினி (வயது55). இவர்களது வீடு நகரின் ஒதுக்குப்புறத்தில் உள்ளது.

    நேற்று கணவன்-மனைவி இருவரும் படுத்திருந்தனர். அப்போது ஏதோ சத்தம் கேட்டு பத்மினி எழுந்தார். வீட்டின் பின்புறம் வந்து பார்த்தபோது 2 மர்ம நபர்கள் காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து வந்து பின்பக்க கதவை உடைத்து கொண்டிருந்தனர்.

    இதனை கண்டு பத்மினி அதிர்ச்சி அடைந்து சத்தம் எழுப்ப முயன்றார். அதற்குள் பூட்டை உடைத்து விட்ட மர்ம நபர்கள் இரும்பு கம்பியால் பத்மினியின் தலையில் தாக்கினர்.

    இதில் அவர் படுகாயம் அடைந்து கீழே விழுந்த போது மர்ம நபர்கள் பத்மினியின் கழுத்தில் கிடந்த 5 பவுன் நகையை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.

    இதுகுறித்து பேரையூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கே.கே.நகர் அருகே போலீஸ் என்று கூறி மூதாட்டியிடம் நகை பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    கே.கே.நகர் பாரதிதாசன் காலனியை சேர்ந்தவர் சந்திரா (76). ஓய்வுபெற்ற அரசு ஊழியர். இவர் நேற்று மதியம் வீட்டின் அருகே உள்ள கடைக்கு சென்று கொண்டிருந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் நாங்கள் போலீஸ். நகைகளை இப்படி அணிந்து செல்லக் கூடாது என்று கூறினார்கள். அதை நம்பி தான் அணிந்திருந்த நகையை கழற்றினார். உடனே அவர்கள் அதை வாங்கி ஒரு காகிதத்தில் பொதிந்து கொடுத்தனர்.

    வீடு திரும்பிய அவர் காகிதத்தை பிரித்து பார்த்த போது அதில் நகை இல்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் எம்.ஜி.ஆர் நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×