search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "DMK Youth Wing Conference"

    • சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தில் வருகிற 24-ந்தேதி தி.மு.க. 2-வது இளைஞரணி மாநாடு நடைபெற உள்ளது.
    • ஆர்டர் கொடுத்ததுமே 4 நிறுவனங்களிலும் பனியன் தயாரிப்பு பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டனர்.

    திருப்பூர்:

    திருப்பூரில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனியன் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிறுவனங்கள் மூலம் பனியன் உள்ளிட்ட ஆடைகள் தயாரிக்கப்பட்டு வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. மேலும் விளையாட்டு போட்டிகள், கோவில் திருவிழாக்கள், அரசியல் சார்ந்த நிகழ்ச்சிகள் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்கள் அணியும் வகையில் ஆர்டரின் பேரில் டீ-சர்ட் பனியன்கள் தயாரித்து கொடுக்கப்படுகிறது.

    இந்தநிலையில் சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தில் வருகிற 24-ந்தேதி நடைபெற உள்ள தி.மு.க. 2-வது இளைஞரணி மாநாட்டிற்காக திருப்பூர் பனியன் நிறுவனங்களில் 4 லட்சம் டீ-சர்ட் பனியன்கள் தயாரிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து பனியன் உற்பத்தியாளர் ஒருவர் கூறியதாவது:-

    சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தில் வருகிற 24-ந்தேதி தி.மு.க. 2-வது இளைஞரணி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்க இருக்கும் இளைஞரணி நிர்வாகிகள், தொண்டர்கள் அணிவதற்காக தி.மு.க., சார்பில் 4 லட்சம் பனியன்கள் தயாரிக்க திருப்பூரில் உள்ள 4 பனியன் நிறுவனங்களுக்கு ஆர்டர்கள் கொடுக்கப்பட்டது. முதலில் 17-ந்தேதி தி.மு.க. இளைஞரணி மாநாடு நடைபெற இருந்த நிலையில், சென்னை மிச்சாங் மழை வெள்ள பாதிப்பு காரணமாக 24-ந்தேதிக்கு மாற்றப்பட்டது. ஆனால் ஆர்டர் கொடுத்ததுமே 4 நிறுவனங்களிலும் பனியன் தயாரிப்பு பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டனர்.

    முதலில் மாநாடு 17-ந்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டதால் அதற்கு 2 நாள் முன்னதாகவே பனியன்கள் தயாரித்து கொடுத்து விட வேண்டும் என்று தயாரிப்பு பணியில் ஈடுபட்டோம். தற்போது 4 லட்சம் பனியன்களும் தயாரிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

    தி.மு.க. இளைஞரணி மாநாட்டிற்காக தயாரிக்கப்பட்டுள்ள டீ-சர்ட் பனியனில் பெரியார், அண்ணா, கருணாநிதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் உருவப்படங்கள் அச்சிடப்பட்டுள்ளது. பனியனின் இடது, வலதுபுற கைகளில் கலைஞர் நூற்றாண்டு விழா லோகோ அச்சிடப்பட்டுள்ளது. மேலும் தி.மு.க. இளைஞரணி 2-வது மாநில மாநாடு-2023, மாநில உரிமை மீட்பு முழக்கம் என்ற வாசகங்கள் அச்சிடப்பட்டுள்ளது. மிகவும் தரமாகவும், தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகள், தொண்டர்களை கவரும் வகையில் பனியன்களை தயாரித்துள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தற்போது தயாரிக்கப்பட்டுள்ள டீ-சர்ட் பனியன்கள் மாவட்டம் வாரியாக அனுப்பி வைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மாநாடு நடைபெறும் 24-ந்தேதி அன்று அந்தந்த மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள், தொண்டர்கள் டீ-சர்ட் அணிந்து கலந்து கொள்ள உள்ளனர்.

    • மாநாட்டின் தலைவர் உரையைத் தொடர்ந்து தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு வாழ்த்துரை வழங்குகிறார்.
    • மாலையில் பல தீர்மானங்கள் கொண்டு வந்து நிறைவேற்றப்பட உள்ளது.

    சென்னை:

    தி.மு.க. இளைஞர் அணிச் செயலாளரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையேற்றும், முன்னின்றும் நடத்தும், "தி.மு.க. இளைஞர் அணியின் 2-வது மாநில மாநாடு" மாநில உரிமை மீட்பு முழக்க மாநாடாக, வருகிற 17-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று சேலம் பெத்தநாயக்கன் பாளையத்தில் மிகப் பிரமாண்டமாக நடைபெற உள்ளது.

    தமிழ்நாட்டு வரலாற்றில் புது சரித்திரம் படைக்க உள்ள இந்த மாநாட்டில் சுமார் 5 லட்சம் இளைஞர் படை திரளுகிறது.

    மாநாட்டுப் பந்தலுக்கு 'தந்தை பெரியார்' பெயரில் நுழைவாயில். திடலுக்குப் பெயரோ, அண்ணா திடல், கலைஞர் அரங்கம், பேராசிரியர் மேடை, வீரபாண்டியார் கொடி மேடை, முரசொலி மாறன் புகைப்பட கண்காட்சி.

    வீரபாண்டி ஆ.ராஜா, வீரபாண்டி செழியன், சந்திரசேகர், 'நீட்' போராளிகள் அனிதா மற்றும் தனுஷ் ஆகியோர் பெயர்களால் தோரண வாயில்கள் என மாநாட்டின் ஒவ்வொரு ஏற்பாடும் உணர்ச்சியும், பொருளும் மிக்கதாய் அமைக்கப்படுகிறது.

    காலை 9 மணியளவில் தி.மு.க. கொடியேற்றத்துடன் மாநாடு தொடங்குகிறது. தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., தி.மு.க. கொடியினை ஏற்றி வைக்கிறார். காலை 9.30 மணியளவில் மாநாட்டு வரவேற்புக் குழு தலைவர் உரை, தி.மு.க. இளைஞர் அணி துணைச்செயலாளர் எஸ்.ஜோயல்.

    9.45 மணியளவில் மாநாட்டின் தலைவராக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினை முன்மொழிதலும் வழி மொழிதலும் நடைபெறும். காலை 10 மணியளவில் தி.மு.க. முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் உரை ஆற்றுகிறார்.

    இளைஞர் அணி கண்ட களங்கள்-திருச்சி சிவா, திராவிட மாடல்-எல்லோருக்கும் எல்லாம்-ஆ.ராசா, நிதித்துறையில் மாநில உரிமைகள் பறிப்பு-தங்கம் தென்னரசு, தமிழ்நாட்டின் கல்விப்புரட்சி-அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மொழிப்போர்-இந்தித் திணிப்பு-கம்பம் செல்வேந்திரன், திராவிட இயக்க முன்னோடிகள்-சபாபதி மோகன், கலைஞர் பாதையில் நம் தலைவர்-திண்டுக்கல் லியோனி, மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி-சுப.வீரபாண்டியன், திராவிடம் சொல்லும் மனிதநேயம்-வக்கீல் அருள்மொழி, தலைவர் ஆட்சியில் தொழில்புரட்சி-டி.ஆர்.பி.ராஜா, கலைஞர்-ஒடுக்கப்பட்டோர் வாழ்வில் ஒளிவிளக்கு-மதிவேந்தன், கலைஞரின் பேனா-கரு.பழனியப்பன், தி.மு.க. ஆட்சியில் திறன் மேம்பாடும் வேலைவாய்ப்பும்-எம்.எம்.அப்துல்லா, மருத்துவக் கட்டமைப்பு-இந்தியாவின் முன்னோடி தமிழ்நாடு-டாக்டர் எழிலன் நாகநாதன், இலக்கியமும் தி.மு.க.வும்-மனுஷ்யபுத்திரன், அவதூறுகளை அடித்து நொறுக்கிடும் கழகம்-வழக்கறிஞர் தமிழன் பிரசன்னா, சமூக நீதி-வே.மதிமாறன், பத்திரிகையும் திராவிட இயக்கமும்-கோவி லெனின், 'நீட்' விலக்கு நம் இலக்கு-வக்கீல் ராஜீவ்காந்தி, பெரியாரும் பெண் விடுதலையும்-வக்கீல் செ.ம.மதிவதனி, தாயுமானவர் நம் தலைவர்-கனிமொழி, திருநகர் வாழ்வில் திராவிட அரசு-ரியா ஆகியோர் சிறப்புரை ஆற்றுகிறார்கள்.

    மாலை 6.30 மணியளவில் மாநாட்டுத் தலைவர் உரை நடைபெறும். இந்தியா திரும்பிப் பார்க்கும் வண்ணம் இளைஞர் அணியின் 2-வது மாநில மாநாட்டை நடத்தி வாகை சூடும் தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை உரையாற்றுகிறார்.

    மாநாட்டின் தலைவர் உரையைத் தொடர்ந்து தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு வாழ்த்துரை வழங்குகிறார். தி.மு.க. பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன் சிறப்புரையாற்றுகிறார். இரவு 7.30 மணியளவில் மாநாட்டின் முத்தாய்ப்பாக தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாநாட்டு நிறைவு பேரூரையாற்றுகிறார்.

    அப்போது அவர் இளைஞர் அணி எதிர்காலத்தில் ஆற்ற வேண்டிய பணிகளுக்கு வியூகங்கள் வகுத்தளிப்பார்.

    தி.மு.க. தலைவரின் உரையை அடுத்து சேலம் கிழக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் டாக்டர் வீரபாண்டி ஆ.பிரபு நன்றியுரையாற்றுகிறார். இந்த மாநாட்டு நிகழ்வுகளை, நிகழ்ச்சி நிரலை தி.செந்தில்வேல், திவ்யாநாதன் ஆகியோர் தொகுத்து வழங்குகிறார்கள்.

    மாலையில் பல தீர்மானங்கள் கொண்டு வந்து நிறைவேற்றப்பட உள்ளது.

    இந்த மாநாட்டில் மேற்கூறிய நிகழ்வுகள் மட்டுமின்றி மாநாட்டு மலர் வெளியீடு, 10 பாசறை நூல்கள் வெளியீடு, தி.மு.க. முன்னோடிகளுக்கு மரியாதை, 'நீட்' விலக்கு நம் இலக்கு' அஞ்சல் அட்டை ஒப்படைப்பு, புதுகை பூபாளம் கலைக்குழு, பாடகர் தெருக்குறள் அறிவு இசை நிகழ்ச்சி ஆகிய பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஏற்பாடு செய்துள்ளார்.

    இந்த நிலையில் இன்று காலை அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் ஆகியோர் மாநாட்டு பந்தலை ஆய்வு செய்தனர். அப்போது பந்தல் அமைக்கும் அனைத்து பகுதிகளுக்கும் சென்று ஆய்வு செய்தனர். அதில் இனி வரும் நாட்களில் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் விரிவான ஆலோசனைகளை வழங்கினர்.

    மேலும் மாநாட்டு திடலில் ஒரே நேரத்தில் பல ஆயிரம் பேர் சாப்பிடக்கூடிய அளவில் உணவு அரங்கம், கழிப்பிட வசதி, சாலை வசதிகளும் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளையும் அமைச்சர்கள் பார்வையிட்டனர்.

    • மேடையில் இருக்க கூடிய உண்மையான முதல் செயல்வீரர் யார்? அது நம்முடைய முதன்மை செயலாளர் நேரு.
    • உழைத்தால் யாரும் முன்னேறலாம் என்பதற்கு நம்முடைய இளைஞர் அணியே சாட்சி.

    சேலம்:

    சேலம் பெத்தநாயக்கன் பாளையத்தில் அடுத்த மாதம் 17-ந்தேதி தி.மு.க. இளைஞரணி 2-வது மாநில மாநாடு நடைபெறுகிறது. இதையடுத்து தி.மு.க. இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டமாக சென்று இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசி வருகிறார்.

    அதேபோல் சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் இன்று நடந்த ஒருங்கிணைந்த மாவட்ட இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தில் தி.மு.க. மாநில இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    இளைஞர் அணி மாநாட்டை வெற்றி பெற செய்கின்ற பொறுப்பு மற்ற மாவட்டத்தை விட சேலம் மாவட்டத்திற்கு அதிகம் உண்டு என்பதை நீங்கள் உணர வேண்டும். இது வெறும் செயல்வீரர்கள் கூட்டம் அல்ல, மாநாட்டிற்கான முன்னோட்டம். நம்முடைய இளைஞர் அணிக்கு பல்வேறு பெருமைகள் இருக்கிறது. இளைஞர் அணியின் வரலாற்றை எல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இன்றைக்கு பல்வேறு இயக்கங்களில் இளைஞர் அணி இருக்கிறது. பல அணிகளும் இருக்கிறது. ஆனால் இந்தியாவிலேயே 1980-ம் ஆண்டு முதன் முறையாக ஒரு இயக்கத்திற்கு இளைஞர் அணி என ஆரம்பித்தது தி.மு.க. தான். இதை தொடங்கி வைத்தவர் நம்முடைய கழக தலைவர் தான்.

    அதுபோல் தி.மு.க.வில் பல அணிகள் உள்ளது. அதவாது 22 அணிகள் இருக்கிறது. ஆனால் அணிகள் இருந்ததும் அதில் முதன்மையான அணி எதுவென்றால் இளைஞர் அணி என்று கலைஞரால் பலமுறை பாராட்டப்பட்டது.

    தற்போது நம்முடைய தலைவர் மு.க.ஸ்டாலின் இளைஞரணி செயலாளராக இருந்து முதலமைச்சராக இருக்கிறார் என்றால் அவருடைய உழைப்பு எப்படி பட்டது என்பதை நீங்கள் உணர வேண்டும். இளைஞரணி மன்றத்தை கோபாலபுரத்தில் தொடங்கிய நம்முடைய தலைவர் படிப்படியாக உழைத்து இன்று தமிழ்நாட்டினுடைய முதலமைச்சராக, கழக தலைவராக உட்கார்ந்து இருக்கிறார் என்றால் அவருடைய உழைப்பு தான் அதற்கு காரணம். அதற்கு அடித்தளமாக அமைந்திருப்பது நம்முடைய இளைஞரணி என்பதை நீங்கள் உணர வேண்டும். இளைஞர் அணியினர் உழைத்தால் நிச்சயம் அங்கீகாரம் கிடைக்கும்.


    செயல்வீரர்கள்னா யார்? தலைவர் என்ன சொல்கிறாரோ, தலைமை என்ன சொல்கிறதோ அதை களத்தில் இறங்கி செஞ்சி முடிப்பவன் தான் உண்மையான செயல்வீரன். அதனால் தான் இந்த கூட்டத்திற்கு பெயர் செயல்வீரர்கள் கூட்டம். தன்னுடைய சுய நலன் பார்க்காமல் கட்சி நலனுக்காக தலைமை சொல்லிவிட்டது, தலைவர் சொல்லி விட்டார் என உத்தரவை ஏற்று களத்தில் இறங்கி அதை முதன் முதலில் செஞ்சி முடிக்கிறவன் தான் உண்மையான செயல்வீரன்.

    இந்த மேடையில் இருக்க கூடிய உண்மையான முதல் செயல்வீரர் யார்? அது நம்முடைய முதன்மை செயலாளர் நேரு. அவருக்கு துணை நிற்பவர்கள் தான் மாவட்ட செயலாளர்கள் 3 பேரும். இங்கு இருக்கக்கூடிய அனைவரும் உண்மையான செயல்வீரர்கள். எனவே தலைமை சொல்வதை களத்தில் இறங்கி செஞ்சி முடிப்பது நம்முடைய கடமை.

    உழைத்தால் யாரும் முன்னேறலாம் என்பதற்கு நம்முடைய இளைஞர் அணியே சாட்சி. அதற்கு நம்முடைய தலைவரே சாட்சி. உழைப்பு என்றால் ஸ்டாலின், ஸ்டாலின் என்றால் உழைப்பு என்று பாராட்டப்பட்டவர் தான் நம்முடைய தலைவர் அவர்கள்.

    14 வயதில் 1967-ம் ஆண்டு கோபாலபுரத்தில் ஒரு முடிதிருத்தும் கடையில் இளைஞர் தி.மு.க.வை தொடங்கினார்கள். அதன் பிறகு 1968-ல் சென்னை மாநகராட்சி தேர்தலுக்காக சென்னை முழுவதும் சைக்கிள் பிரசாரம் செய்தார். 1969-ம் ஆண்டு சென்னை மாவட்டத்தினுடைய வார்டு பிரதிநிதி, 1973-ம் ஆண்டு தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர். 1976-ம் ஆண்டு மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஓராண்டு கடுங்காவல் தண்டனை.

    1980-ம் ஆண்டு தி.மு.க. இளைஞரணி ஆரம்பிக்கும்போது 7 அமைப்பாளர்களில் ஒருவர். கடின உழைப்பால் நம்முடைய தலைவர் முதலமைச்சர் ஆகியுள்ளார்.

    பா.ஜனதா ஆட்சிக்கு வந்து 9 வருடங்கள் ஆகி விட்டது. 2014-ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி ஒரு வாக்குறுதி கொடுத்தார். இந்தியாவை 2020-ம் ஆண்டுக்குள் வல்லரசு நாடாக மாற்றி காட்டுவேன் என்று சொன்னார். இப்போது மீண்டும் அதே வாக்குறுதியை கொடுக்கிறார். 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வல்லரசு நாடாக மாற்றி காட்டுவேன் என்று சொல்கிறார். ஒரு விசயத்தில் மட்டும் பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டியாக வேண்டும். ஒரு வாக்குறுதி கொடுத்தார். இந்தியாவை மாற்றி காட்டுவேன் என்றார். இதை மட்டும் செய்து விட்டார். என்னவென்று கேட்டால் அவர் இந்தியா பெயரை பாரத் என மாற்றி விட்டார். தன்னுடைய சொல்லை காப்பாற்றி விட்டார் என சொல்கின்றார்.

    சி.ஏ.ஜி. என்கிற அமைப்பு மத்திய, மாநில அரசுகளின் செலவு கணக்கை தணிக்கை செய்யும் அமைப்பு ஆகும். இந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் மத்திய அரசில் ரூ.7½ லட்சம் கோடிக்கு கணக்கு இல்லை எனவும், மத்திய அரசின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் இறந்து போன 88 ஆயிரம் பேருக்கு பணம் வழங்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து தொடர்ந்து நம்முடைய தலைவர் கேள்வி கேட்டுக்கொண்டு இருக்கிறார்.

    ஆனால் மத்திய பா.ஜனதா அரசு பதில் சொல்லாமல் அந்த சி.ஏ.ஜி. அறிக்கை தயார் செய்த அத்தனை அதிகாரிகளையும் பணியிட மாற்றம் செய்து விட்டார்கள்.

    நம்முடைய மாநாட்டின் பெயர் மாநில உரிமைகள் மீட்பு மாநாடு. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் விட்டு கொடுத்த நம்முடைய உரிமைகள் அத்தனையும் மீட்க வேண்டும்.

    தமிழ்நாட்டில் இருந்து வரி வருவாயாக மத்திய அரசுக்கு ரூ.5 லட்சம் கோடி சேர்ந்துள்ளது. அதில் ரூ.2 லட்சம் கோடி மட்டுமே திருப்பி தரப்பட்டுள்ளது. ஆனால் உத்தரபிரதேசத்தில் ரூ.3 லட்சம் கோடி வருவாய் சென்றுள்ள நிலையில் ரூ.9 லட்சம் கோடி அந்த மாநிலத்திற்கு திருப்பி கொடுத்துள்ளது.

    பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் வருகிற பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெறுவது உறுதி. செயல்வீரர்கள் அனைவரும் அதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

    கூட்டத்தில் பேசிய அமைச்சர் உதயநிதி, பூட்டை உடைக்க சுத்தியல் பலமுறை அடித்தும் திறக்கவில்லை, சாவி எளிதாக பூட்டை திறந்தது. சுத்தியலிடம் சாவி சொன்னது நீ பூட்டின் தலையில் தட்டினாய், நான் பூட்டின் இதயத்தை தொட்டேன் என்று. இதில் பூட்டு என்பது தமிழ்நாடு. சுத்தியல் ஒன்றிய பா.ஜ.க. அரசு. மக்களின் இதயத்தை தொடும் சாவி தி.மு.க. என குட்டிக்கதை சொன்னார்.

    • மாநாட்டு திடலில் இனிவரும் நாட்களில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், மேடை அமைப்பது தொடர்பாக விரிவாக கட்சியினருக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
    • மாநாட்டு வழிகாட்டு குழு மற்றும் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் பெத்த நாயக்கன்பாளையத்தில் அடுத்த மாதம் (டிசம்பர்) 17-ந்தேதி தி.மு.க. இளைஞரணி 2-வது மாநில மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டை சிறப்பாக நடத்துவது தொடர்பாக தமிழகம் முழுவதும் தி.மு.க. இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடத்தி வருகிறார்.

    அந்த வகையில், நேற்று காலையில் ஈரோடு மாவட்டத்திலும், மாலையில் நாமக்கல் மாவட்டத்திலும் நடைபெற்ற தி.மு.க. இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்று கட்சி இளைஞரணி நிர்வாகிகளிடம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்.

    பின்னர் நேற்று இரவு 9 மணியளவில் சேலம் வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சேலம் மாவட்ட எல்லையான மல்லூர் அருகே நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது மாவட்ட செயலாளர்கள் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. , எஸ்.ஆர்.சிவலிங்கம், டி.எம்.செல்வகணபதி ஆகியோர் சால்வை அணிவித்து வரவேற்றனர்.

    எம்.பி.க்கள் பார்த்திபன், கவுதம சிகாமணி, மேயர் ராமச்சந்திரன், தேர்தல் பணிக்குழு செயலாளர் தாமரைக்கண்ணன், மாநகர செயலாளர் ரகுபதி, துணை செயலாளர் சுரேஷ்குமார், பொதுக்குழு உறுப்பினர் எஸ்.ஆர்.அண்ணாமலை உள்பட கட்சியினர் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    இதற்கிடையே மாவட்ட கலெக்டர் கார்மேகம் , போலீஸ் சூப்பிரண்டு அருண்கபிலன் மற்றும் அதிகாரிகளும் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். தொடர்ந்து சேலம் வந்த அமைச்சர் உதயநிதிஸ்டாலின் மாமாங்கம் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கினார்.

    இன்று காலை சேலத்தில் இருந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெத்தநாயக்கன்பாளையத்திற்கு புறப்பட்டு சென்றார். பின்னர் அங்கு தி.மு.க . இளைஞரணி மாநில மாநாட்டுக்காக அமைக்கப்பட்டு வரும் பிரமாண்டமான பந்தலை பார்வையிட்டார்.

    அப்போது மாநாட்டு திடலில் இனிவரும் நாட்களில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், மேடை அமைப்பது தொடர்பாக விரிவாக கட்சியினருக்கு ஆலோசனைகளை வழங்கினார். தொடர்ந்து மாநாட்டு வழிகாட்டு குழு மற்றும் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அவருடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பெரிய கருப்பன் உள்ளிட்டோர் வந்திருந்தனர்.

    பின்னர் சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த தி.மு.க. இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெறும் சீலநாயக்கன்பட்டி மைதானத்திற்கு புறப்பட்டு சென்றார். அங்கு தி.மு.க.வினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர். தொடர்ந்து அங்குள்ள மைதானத்தில் இளைஞரணியினர் முன்பு சிறப்புரையாற்றுகிறார்.

    இந்த கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு, மற்றும் மாவட்ட செயலாளர்கள் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., டி.எம்.செல்வகணபதி, எஸ்.ஆர்.சிவலிங்கம், எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி., இளைஞரணி அமைப்பாளர்கள் அருண்பிரசன்னா, வீரபாண்டி பிரபு, மணிகண்டன் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள இளைஞரணியினர், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.

    இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் முடிந்ததும், சேலத்தில் இருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு புறப்பட்டு செல்கிறார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகையையெட்டி மாநகர போலீஸ் கமிஷனர் விஜய குமாரி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்கபிலன் ஆகியோர் தலைமையில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    ×