search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தி.மு.க. இளைஞர் அணி மாநில மாநாடு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரை
    X

    தி.மு.க. இளைஞர் அணி மாநில மாநாடு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரை

    • மாநாட்டின் தலைவர் உரையைத் தொடர்ந்து தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு வாழ்த்துரை வழங்குகிறார்.
    • மாலையில் பல தீர்மானங்கள் கொண்டு வந்து நிறைவேற்றப்பட உள்ளது.

    சென்னை:

    தி.மு.க. இளைஞர் அணிச் செயலாளரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையேற்றும், முன்னின்றும் நடத்தும், "தி.மு.க. இளைஞர் அணியின் 2-வது மாநில மாநாடு" மாநில உரிமை மீட்பு முழக்க மாநாடாக, வருகிற 17-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று சேலம் பெத்தநாயக்கன் பாளையத்தில் மிகப் பிரமாண்டமாக நடைபெற உள்ளது.

    தமிழ்நாட்டு வரலாற்றில் புது சரித்திரம் படைக்க உள்ள இந்த மாநாட்டில் சுமார் 5 லட்சம் இளைஞர் படை திரளுகிறது.

    மாநாட்டுப் பந்தலுக்கு 'தந்தை பெரியார்' பெயரில் நுழைவாயில். திடலுக்குப் பெயரோ, அண்ணா திடல், கலைஞர் அரங்கம், பேராசிரியர் மேடை, வீரபாண்டியார் கொடி மேடை, முரசொலி மாறன் புகைப்பட கண்காட்சி.

    வீரபாண்டி ஆ.ராஜா, வீரபாண்டி செழியன், சந்திரசேகர், 'நீட்' போராளிகள் அனிதா மற்றும் தனுஷ் ஆகியோர் பெயர்களால் தோரண வாயில்கள் என மாநாட்டின் ஒவ்வொரு ஏற்பாடும் உணர்ச்சியும், பொருளும் மிக்கதாய் அமைக்கப்படுகிறது.

    காலை 9 மணியளவில் தி.மு.க. கொடியேற்றத்துடன் மாநாடு தொடங்குகிறது. தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., தி.மு.க. கொடியினை ஏற்றி வைக்கிறார். காலை 9.30 மணியளவில் மாநாட்டு வரவேற்புக் குழு தலைவர் உரை, தி.மு.க. இளைஞர் அணி துணைச்செயலாளர் எஸ்.ஜோயல்.

    9.45 மணியளவில் மாநாட்டின் தலைவராக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினை முன்மொழிதலும் வழி மொழிதலும் நடைபெறும். காலை 10 மணியளவில் தி.மு.க. முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் உரை ஆற்றுகிறார்.

    இளைஞர் அணி கண்ட களங்கள்-திருச்சி சிவா, திராவிட மாடல்-எல்லோருக்கும் எல்லாம்-ஆ.ராசா, நிதித்துறையில் மாநில உரிமைகள் பறிப்பு-தங்கம் தென்னரசு, தமிழ்நாட்டின் கல்விப்புரட்சி-அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மொழிப்போர்-இந்தித் திணிப்பு-கம்பம் செல்வேந்திரன், திராவிட இயக்க முன்னோடிகள்-சபாபதி மோகன், கலைஞர் பாதையில் நம் தலைவர்-திண்டுக்கல் லியோனி, மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி-சுப.வீரபாண்டியன், திராவிடம் சொல்லும் மனிதநேயம்-வக்கீல் அருள்மொழி, தலைவர் ஆட்சியில் தொழில்புரட்சி-டி.ஆர்.பி.ராஜா, கலைஞர்-ஒடுக்கப்பட்டோர் வாழ்வில் ஒளிவிளக்கு-மதிவேந்தன், கலைஞரின் பேனா-கரு.பழனியப்பன், தி.மு.க. ஆட்சியில் திறன் மேம்பாடும் வேலைவாய்ப்பும்-எம்.எம்.அப்துல்லா, மருத்துவக் கட்டமைப்பு-இந்தியாவின் முன்னோடி தமிழ்நாடு-டாக்டர் எழிலன் நாகநாதன், இலக்கியமும் தி.மு.க.வும்-மனுஷ்யபுத்திரன், அவதூறுகளை அடித்து நொறுக்கிடும் கழகம்-வழக்கறிஞர் தமிழன் பிரசன்னா, சமூக நீதி-வே.மதிமாறன், பத்திரிகையும் திராவிட இயக்கமும்-கோவி லெனின், 'நீட்' விலக்கு நம் இலக்கு-வக்கீல் ராஜீவ்காந்தி, பெரியாரும் பெண் விடுதலையும்-வக்கீல் செ.ம.மதிவதனி, தாயுமானவர் நம் தலைவர்-கனிமொழி, திருநகர் வாழ்வில் திராவிட அரசு-ரியா ஆகியோர் சிறப்புரை ஆற்றுகிறார்கள்.

    மாலை 6.30 மணியளவில் மாநாட்டுத் தலைவர் உரை நடைபெறும். இந்தியா திரும்பிப் பார்க்கும் வண்ணம் இளைஞர் அணியின் 2-வது மாநில மாநாட்டை நடத்தி வாகை சூடும் தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை உரையாற்றுகிறார்.

    மாநாட்டின் தலைவர் உரையைத் தொடர்ந்து தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு வாழ்த்துரை வழங்குகிறார். தி.மு.க. பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன் சிறப்புரையாற்றுகிறார். இரவு 7.30 மணியளவில் மாநாட்டின் முத்தாய்ப்பாக தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாநாட்டு நிறைவு பேரூரையாற்றுகிறார்.

    அப்போது அவர் இளைஞர் அணி எதிர்காலத்தில் ஆற்ற வேண்டிய பணிகளுக்கு வியூகங்கள் வகுத்தளிப்பார்.

    தி.மு.க. தலைவரின் உரையை அடுத்து சேலம் கிழக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் டாக்டர் வீரபாண்டி ஆ.பிரபு நன்றியுரையாற்றுகிறார். இந்த மாநாட்டு நிகழ்வுகளை, நிகழ்ச்சி நிரலை தி.செந்தில்வேல், திவ்யாநாதன் ஆகியோர் தொகுத்து வழங்குகிறார்கள்.

    மாலையில் பல தீர்மானங்கள் கொண்டு வந்து நிறைவேற்றப்பட உள்ளது.

    இந்த மாநாட்டில் மேற்கூறிய நிகழ்வுகள் மட்டுமின்றி மாநாட்டு மலர் வெளியீடு, 10 பாசறை நூல்கள் வெளியீடு, தி.மு.க. முன்னோடிகளுக்கு மரியாதை, 'நீட்' விலக்கு நம் இலக்கு' அஞ்சல் அட்டை ஒப்படைப்பு, புதுகை பூபாளம் கலைக்குழு, பாடகர் தெருக்குறள் அறிவு இசை நிகழ்ச்சி ஆகிய பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஏற்பாடு செய்துள்ளார்.

    இந்த நிலையில் இன்று காலை அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் ஆகியோர் மாநாட்டு பந்தலை ஆய்வு செய்தனர். அப்போது பந்தல் அமைக்கும் அனைத்து பகுதிகளுக்கும் சென்று ஆய்வு செய்தனர். அதில் இனி வரும் நாட்களில் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் விரிவான ஆலோசனைகளை வழங்கினர்.

    மேலும் மாநாட்டு திடலில் ஒரே நேரத்தில் பல ஆயிரம் பேர் சாப்பிடக்கூடிய அளவில் உணவு அரங்கம், கழிப்பிட வசதி, சாலை வசதிகளும் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளையும் அமைச்சர்கள் பார்வையிட்டனர்.

    Next Story
    ×