search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Demonetisation"

    • 2016 நவம்பர் 8-ந்தேதி பண மதிப்பிழப்பு நடவடிக்கையை பிரதமர் மோடி அறிவித்தார்.
    • புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

    புதுடெல்லி :

    கருப்பு பணம், கள்ள நோட்டு புழக்கம், பயங்கரவாதத்துக்கு நிதி திரட்டல், வரி ஏய்ப்பு உள்ளிட்ட சட்ட விரோத செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந்தேதி பண மதிப்பிழப்பு நடவடிக்கையை பிரதமர் மோடி அறிவித்தார்.

    இதன் மூலம் அப்போது புழக்கத்தில் இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டன. அதற்கு மாற்றாக, புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. மேலும் புதிய 10, 20, 200 ரூபாய் நோட்டுகளும் புழக்கத்துக்கு வந்தன.

    இந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையை எதிர்த்து விவேக் நாராயண் சர்மா உள்ளிட்டோர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் 57 ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

    இந்த மனுக்களை நீதிபதி அப்துல் நசீர் தலைமையில் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.

    இந்த மனுக்கள் மீதான அடுத்த கட்ட விசாரணை வருகிற 24-ந் தேதி நடக்கிறது.

    இந்தநிலையில், மேற்படி வழக்கில் மத்திய அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதில் மத்திய அரசு கூறியிருப்பதாவது:-

    கள்ள நோட்டு புழக்கம், பயங்கரவாதத்துக்கு நிதி திரட்டல், கருப்புப் பணம், வரி ஏய்ப்பு ஆகிவற்றுக்கு எதிராக நன்கு ஆலோசித்து எடுக்கப்பட்ட முக்கிய முடிவே பண மதிப்பிழப்பு நடவடிக்கை.

    இந்த நடவடிக்கை குறித்து ரிசர்வ் வங்கியிடம் 2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதமே கலந்தாலோசிக்கப்பட்டது.

    பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் கள்ள நோட்டுகள் குறைந்ததுடன், டிஜிட்டல் பண பரிவர்த்தனையும் அதிகரித்து, கணக்கில் வராத வருவாயை கண்டறிய உதவியுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மொத்த உள்நாட்டு உற்பத்தி வீழ்ச்சி அடைந்துள்ளது.
    • பயங்கரவாதமும், கள்ள நோட்டுகளும் அதிகரித்துள்ளன.

    புதுடெல்லி :

    பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் 6-ம் ஆண்டு நிறைவையொட்டி, காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் கவுரவ் வல்லப் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    பணமதிப்பிழப்பு மூலமாக சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய, திட்டமிட்ட கொள்ளை இதே நாளில் அரங்கேற்றப்பட்டது. 6 ஆண்டுகள் ஆன நிலையில், பணமதிப்பிழப்பின் தாக்கம் குறித்து பிரதமர் மோடி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

    ஏனென்றால், நாம் என்ன சாதித்தோம், என்ன இழந்தோம் என்று தெரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது. வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்தது. சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன.

    கருப்பு பணம் வெளிவரும் என்று சொன்னீர்கள். ஆனால், வறுமைதான் வந்துள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தி வீழ்ச்சி அடைந்துள்ளது. பயங்கரவாதமும், கள்ள நோட்டுகளும் அதிகரித்துள்ளன.

    மொத்தத்தில், இது பொருளாதார வீழ்ச்சிக்கு வழிவகுத்த காவிய தோல்வி.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பாராளுமன்றத்தின் தனிச் சட்டம் தேவை என ப.சிதம்பரம் வாதிட்டார்.
    • அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை விசாரித்து நேரத்தை வீணடிக்க வேண்டாம் என மத்திய அரசு தரப்பு வாதம்

    புதுடெல்லி:

    நாட்டு மக்களிடம் புழக்கத்தில் இருந்த 1000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந்தேதி பிரதமர் மோடி திடீரென அறிவித்தார். கறுப்பு பணத்தை ஒழிக்கும் மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் சாதாரண மக்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளானார்கள். பண மதிப்பு இழப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மொத்தம் 58 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வில் இன்று தொடங்கியது.

    முன்னாள் நிதியமைச்சரும் மூத்த வழக்கறிஞருமான ப.சிதம்பரம், வாதாடும்போது, பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பாராளுமன்றத்தின் தனிச் சட்டம் தேவை என்றார். இதேபோன்ற பணமதிப்பிழப்பு நடவடிக்கை 1978ல் மேற்கொள்ளப்பட்டது என்றும் கூறினார். மேலும் ரிசர்வ் வங்கியிடமிருந்து பணமதிப்பு நீக்கத்திற்கான பரிந்துரைகள் மற்றம் அதுதொடர்பான உண்மைகள் மற்றும் ஆராய்ச்சியுடன் வெளிவந்திருக்க வேண்டும், அரசாங்கம் அதை பரிசீலித்திருக்க வேண்டும், ஆனால் அது இங்கே தலைகீழாக இருந்தது எனவும் ப.சிதம்பரம் வாதிட்டார்.

    மத்திய அரசின் சார்பில் ஆஜரான வக்கீல் பேசும்போது 'தனிநபர் பாதிக்கப்பட்டு இருந்தால் அதனை நிர்வாக ரீதியில் சரி செய்து கொள்ள வேண்டும். அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை விசாரித்து நேரத்தை வீணடிக்க வேண்டாம்' என்று வாதிட்டார்.

    பின்னர் பேசிய நீதிபதிகள், அரசியல் சாசன அமர்வு முன் வழக்கு வரும்போது, விசாரித்து பதில் அளிப்பது கடமை என்று கூறினர். மேலும், பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை தொடரும் என கூறிய நீதிபதிகள், அடுத்தகட்ட விசாரணையை நவம்பர் 9 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக தெரிவித்தனர். அடுத்த விசாரணையின்போது மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி விரிவான பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்ய வேணடும் என்றும் உத்தரவிட்டனர். 

    • பண மதிப்பு இழப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதுடன் மொத்தம் 58 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
    • அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை விசாரித்து நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று வாதம்.

    நாட்டு மக்களிடம் புழக்கத்தில் இருந்த 1000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந்தேதி பிரதமர் மோடி அறிவித்தார்.

    கறுப்பு பணத்தை ஒழிக்கும் மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் சாதாரண மக்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளானார்கள். பண மதிப்பு இழப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதுடன் மொத்தம் 58 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

    இந்த வழக்கை 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கான நீதிபதிகளை நியமிப்பதில் தாமதம் ஏற்பட்டது.

    இதற்கிடையே நீதிபதிகள் எஸ். அப்துல் நசீர், பி.ஆர். கவாய், ஏ.எஸ். போபண்ணா, வி. ராமசுப்பிரமணியன், பி.வி. நகரத்தா ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை விசாரிக்கும் என்றும், இந்த விசாரணை இன்று (அக்டோபர்-12) தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்தநிலையில் பண மதிப்பு இழப்பு நடவடிக்கைக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வில் இன்று தொடங்கியது.

    மத்திய அரசின் சார்பில் ஆஜரான வக்கீல் வாதாடும் போது "தனிநபர் பாதிக்கப்பட்டு இருந்தால் அதனை நிர்வாக ரீதியில் சரி செய்து கொள்ள வேண்டும். அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை விசாரித்து நேரத்தை வீணடிக்க வேண்டாம்' என்று வாதிட்டார்.

    • மத்திய அரசின் பணமதிப்பிழப்பு முடிவை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் வருகிற அக்டோபர் 12-ந் தேதி விசாரணைக்கு வரும் என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவித்தது.
    • நீதிபதி எஸ்.ஏ.நசீர் தலைமையிலான அரசியல் சாசன அமர்வில் நீதிபதிகள் பி.ஆர்.கவாய், ஏ.எஸ்.போபண்ணா, வி.ராமசுப்பிரமணியன், பி.வி.நாக ரத்னா ஆகியோர் இடம் பெற்று உள்ளார்.

    புதுடெல்லி:

    கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந்தேதி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்தனர்.

    இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு தரப்பினர் வழக்குகள் தொடர்ந்து இருந்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணையை 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி சுப்ரீம் கோர்ட்டு நேற்று உத்தரவிட்டது.

    இந்த நிலையில் மத்திய அரசின் பணமதிப்பிழப்பு முடிவை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் வருகிற அக்டோபர் 12-ந் தேதி விசாரணைக்கு வரும் என்று சுப்ரீம் கோர்ட்டு இன்று அறிவித்தது. நீதிபதி எஸ்.ஏ.நசீர் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரிக்கிறது.

    இந்த அமர்வில் நீதிபதிகள் பி.ஆர்.கவாய், ஏ.எஸ்.போபண்ணா, வி.ராமசுப்பிரமணியன், பி.வி.நாக ரத்னா ஆகியோர் இடம் பெற்று உள்ளார்.

    மொத்தம் 58 மனுக்கள் தாக்கம் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் 2016-ம் ஆண்டு டிசம்பர் 16-ந் தேதி தாக்கல் செய்யப்பட்டவை. அப்போது விசாரணையை 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

    அதன்பின் அந்த அமர்வு அமைக்கப்படாமல் இருந்ததால் மனுக்கள் மீதான விசாரணை நடைபெறாமல் இருந்தது. தற்போது 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு அமைக்கப்பட்டு உள்ளதால் விசாரணை தொடங்குகிறது.

    • பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக 57 ரிட் மனுக்கள் தாக்கல்.
    • உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு இன்று விசாரணை

    2016 ஆம் ஆண்டு நவம்பர் 8ந் தேதி இரவு, அப்போது புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்ற அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட்டார். அதன்படி நாடு முழுவதும் பழைய ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளுக்கு பதில், புதிய ரூ.500 மற்றும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் அறிமுகம் செய்யப்பட்டன. பழைய ரூபாய் நோட்டுக்களை வைத்திருந்தவர்கள் வங்கிகள் மூலம் புதிய நோட்டுக்களை பெற்றுக் கொள்ள மத்திய அரசு கால அவகாசம் வழங்கியது.

    பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் இந்த முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை கடந்த 2016 நவம்பர் 15 அன்று விசாரித்த அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர், தலைமையிலான அமர்வு, பணமதிப்பு நீக்கத் திட்டத்தின் பின்னணியில் உள்ள அரசின் நோக்கம் பாராட்டுக்குரியது என்றாலும், அதனால் மக்களுக்கு ஏற்படும் அசவுகரியங்கள் குறித்து நாங்கள் கவலைப்படுகிறோம் என்று தெரிவித்திருந்தது.

    அரசின் பொருளாதாரக் கொள்கையில் நாங்கள் தலையிட விரும்பவில்லை, இந்த விவகாரத்தில் அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு தடை உட்பட இடைக்கால உத்தரவு எதையும் பிறப்பிக்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது.  ​

    மேலும் ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வுக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக தொடரப்பட்ட 57 ரிட் மனுக்களை இன்று நீதிபதி எஸ்.அப்துல் நசீர் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விசாரணை செய்கிறது.

    2016-ம் ஆண்டு நவம்பரில் கொண்டு வரப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் எந்த நோக்கங்கள் நிறைவேற்றப்படவில்லை என காங்கிரஸ் கேள்வி எழுப்பியது.
    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந்தேதி பண மதிப்பிழப்பு திட்டத்தை அறிவித்தார். இதன்படி நாட்டில் புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ. 1000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது.
     
    அப்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ஊழலுக்கும், கருப்பு பணத்துக்கும், கள்ள நோட்டுக்கும், பயங்கரவாதத்துக்கும் எதிராக போரிட்டு நாட்டை தூய்மைப்படுத்த 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். திடீரென பண மதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்டதால் நாட்டில் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டன.

    பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது மக்கள் வங்கியில் சேமித்து வைத்திருந்த பணத்தை எடுக்க முடியாமல் வங்கி முன் நீண்ட வரிசையில் காத்துக் கிடந்தனர். மக்களுக்கு கடும் சிரமத்தை பண மதிப்பிழப்பு நடவடிக்கை ஏற்படுத்தியதாக கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

    இந்நிலையில், பண மதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டுவரப்பட்டு நேற்றுடன் 5 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் காங்கிரஸ் கட்சி கடுமையாக மத்திய அரசை  சாடியுள்ளது. இதுதொடர்பாக, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மணீஷ் திவாரி கூறியதாவது:

    பண மதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டுவரப்பட்டு 5 ஆண்டுகள் முடிந்துள்ளன. துக்ளக் பிரதமர் கடந்த 2016-ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவால் கறுப்புப் பணம், ஊழல், தீவிரவாதம் முடிவுக்கு வரும் என தெரிவித்தார். ஆனால், கடந்த 5 ஆண்டுகளாக பிரதமர் மோடி கூறியதில் எதுவும் நடக்கவில்லை.

    பணப்புழக்கம் அதிகரித்துள்ளது, ஊழல் அதிகரித்துள்ளது, பயங்கரவாத செயல்களுக்குப் பணம் செல்கிறது. 2016-ம் ஆண்டுக்கு முன்பு இருந்த சூழல் நிலவுகிறது.

    பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் எந்த நோக்கங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது, எது நிறைவேற்றப்படவில்லை என்பது குறித்து  நாட்டிற்கு பிரதமர் மோடி விளக்க வேண்டும் என தெரிவித்தார்.
     
    வேலை வாய்ப்புகளை உருவாக்கும் முயற்சியில் மத்திய அரசு தோற்று விட்டது என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சாடி உள்ளார். #ManmohanSingh #EmploymentOpportunities
    புதுடெல்லி:

    டெல்லியில் நேற்று நடந்த மேலாண்மை கல்லூரி பட்டமளிப்பு விழாவில் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் நாட்டின் பொருளாதார நிலை, நாடு எதிர்கொண்டு வரும் பிரச்சினைகள் பற்றி விரிவாக எடுத்துக்கூறினார். அப்போது அவர் கூறியதாவது:-

    விவசாயிகளின் கடுமையான நெருக்கடி, குறைந்து வரும் வேலை வாய்ப்புகள், சுற்றுச்சூழல் சீர்குலைவு எல்லாவற்றுக்கும் மேலாக பணித்தளங்களில் பிரிவினை சக்திகள் ஆகியவை இன்று நாடு எதிர்கொள்ளும் சவால்களாக அமைந்துள்ளன.

    விவசாயிகளின் தற்கொலைகளும், விவசாயிகள் அடிக்கடி நடத்தி வருகிற போராட்டங்களும் நமது பொருளாதார கட்டமைப்பு சமநிலையின்மையை பிரதிபலிக்கிறது. இதை ஆழமாக ஆய்வு செய்ய வேண்டும். அரசியல் தலைமை (மத்திய அரசு) இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.

    வேலை வாய்ப்பு இல்லாதோர் எண்ணிக்கை பெருகி வருகிறது. அது வேலை இழப்பு வீழ்ச்சிக்கு வழிநடத்தி உள்ளது. கிராமப்புறங்களில் கடன்கள் பெருகி வருவதும், நகர்ப்புறங்களில் நிலவுகிற குழப்பங்களும் சேர்ந்து எதிர்பார்ப்பு மிக்க இளைஞர்களை அமைதி இழந்து போகச்செய்கிறது.

    தொழில் துறையில் கூடுதல் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் முயற்சி தோல்வி அடைந்துள்ளது. தொழில்துறையும் வேகமான வளர்ச்சியை அடையவில்லை.

    நாட்டின் பொருளாதாரம் பெருகுவதில் சிறு தொழில் துறையும், அமைப்பு சாரா தொழில் துறையும் துடிப்பு மிக்கவை. ஆனால் பேரழிவை ஏற்படுத்தி உள்ள ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கையாலும், சரக்கு மற்றும் சேவைவரி நடைமுறைப்படுத்தப்பட்டதாலும் வேலை வாய்ப்புகள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

    தொழில் துறையையும், வர்த்தக துறையையும் ஊக்குவிப்பதற்கு நல்ல ஆழ்ந்த சிந்தனையில் தோன்றும் கொள்கைகளும், நல்ல செயல்பாட்டு உத்திகளும் தேவை.

    இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கிற உலகம். ஒரு பக்கம் உலகப்பொருளாதாரத்தில் நாம் நம்மை ஒருங்கிணைத்துக்கொண்டிருக்கிறோம். உலக சந்தைக்கு நம்மை வெளிப்படுத்தி வருகிறோம். மற்றொரு பக்கத்தில், உள்நாட்டில் நாம் மிகப்பெரிய பொருளாதார, சமூக சவால் களை எதிர்கொண்டு வருகிறோம்.

    இது நமது ஜனநாயக உணர்வுகளுக்கும், நமது பொறுமைக்கும், சகிப்புத்தன்மைக்கும் ஒரு சோதனையான கால கட்டம்.

    2030-ம் ஆண்டுக்குள் உலக பொருளாதாரத்தில் 3-வது முக்கிய நாடாக இந்தியா வந்து விடும் என கூறப்படுகிற முக்கியமான காலகட்டத்தில் நீங்கள் (மாணவர்கள்) வர்த்தக உலகில் இணைகிறீர்கள்.

    இதுவரை இல்லாத வகையில் மிக வேகமாக மாற்றங்களை சந்தித்து வருகிற உலகில் உங்களுக்கு வாய்ப்புகளும், சவால் களும் நிரம்ப இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    கருப்பு பணமாக பதுக்குவதை தடுக்கும் வகையில் ரூ.2000 நோட்டை மிகக்குறைந்த அளவு மட்டுமே தற்போது அச்சடிப்பதாக மத்திய அதிகாரிகள் தெரிவித்தனர். #BlackMoney #RBI #Demonetisation
    புதுடெல்லி:

    2016ம் ஆண்டு நவம்பர் 8-ந்தேதி பண மதிப்பிழப்பு திட்டம் அறிவிக்கப்பட்டது. இதன்படி அப்போது புழக்கத்தில் இருந்த ரூ.1000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என அறிவித்து அதற்கு பதிலாக ரூ.2000, ரூ.500 புதிய நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டது.

    தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் இந்த நோட்டுகள் கணிசமாக அச்சடிக்கப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டன. இதில் ரூ.2000 நோட்டுகளை கருப்பு பணமாக பதுக்குவது அதிகரித்து வருகிறது.

    எனவே அதை தடுக்கும் வகையில் ரூ.2000 நோட்டை அச்சடிப்பதை மிகவும் குறைப்பது என மத்திய அரசு முடிவெடுத்து இருக்கிறது. இதனால் மிகக்குறைந்த அளவு மட்டுமே தற்போது அச்சடிப்பதாக மத்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.


    ரூ.2000 நோட்டு செல்லாது என அறிவிப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக தகவல் பரவியது. ஆனால் இதை அதிகாரிகள் மறுத்துள்ளனர். அதுபோன்ற திட்டம் எதுவும் இல்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.

    கடந்த மார்ச் வரையிலான புள்ளி விவரப்படி 18 லட்சம் கோடி மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன. அதில் 6.37 லட்சம் கோடி ரூ.2000 நோட்டுகளாகும். இது மொத்த பணத்தில் 37 சதவீதம் ஆகும்.

    அதேபோல 500 ரூபாய் நோட்டுகள் ரூ.7.33 லட்சம் கோடி புழக்கத்தில் உள்ளன. இது மொத்த பணத்தில் 43 சதவீதம் ஆகும்.

    2000 ரூபாய் நோட்டு அச்சடிப்பதை நிறுத்தி விட்டதாக தகவல் வெளியானது. ஆனால் அவ்வாறு நிறுத்தவில்லை என்றும் அதிகாரிகள் கூறினார்கள். #BlackMoney #RBI #Demonetisation
    2016-ம் ஆண்டு நவம்பரில் கொண்டு வரப்பட்ட பண மதிப்பிழப்பு திட்டத்தால் நாட்டின் வளர்ச்சி சுமார் 2 சதவீதம் பாதிக்கப்பட்டதாக அமெரிக்காவை சேர்ந்த அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. #Demonetisation
    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந்தேதி பண மதிப்பிழப்பு திட்டத்தை அறிவித்தார். இதன்படி நாட்டில் புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ. 1000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது.

    அப்போது பண புழக்கத்தில் இருந்த மொத்த பணத்தில் இது 86 சதவீதமாகும். திடீரென பண மதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டதால் நாட்டில் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டன.

    பண மதிப்பிழப்பு திட்டத்தால் ஏற்பட்ட தாக்கம் குறித்து அமெரிக்காவை சேர்ந்த தேசிய பொருளாதார ஆராய்ச்சி அமைப்பு ஆய்வு ஒன்றை நடத்தி உள்ளது.

    அமெரிக்கா ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் பொருளாதார பேராசிரியர்கள் கேபிரியேல் ஜோட்ரோவ்ரிச், கீதா கோபிநாத், மும்பை குளோபல் மேக்ரோ ரிசர்ச் அமைப்பின் மேலாண்மை இயக்குனர் பிராச்சி மிஸ்ரா, ரிசர்வ் வங்கி அதிகாரி அபினவ் நாராயணன் ஆகியோர் இந்த குழுவில் அங்கத்தினர்களாக இருந்து ஆய்வு மேற்கொண்டனர்.

    அது தொடர்பான கட்டுரை ஒன்றை இப்போது அவர்கள் வெளியிட்டுள்ளனர்.

    அதில், 2016 நவம்பரில் கொண்டு வரப்பட்ட பண மதிப்பிழப்பு திட்டம் இந்தியாவின் வளர்ச்சியை பாதித்து விட்டது.

    அன்றைய கால கட்டத்தில் சுமார் 2 சதவீத வளர்ச்சியை பண மதிப்பிழப்பு பாதித்து இருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.

    பண மதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டதும் நவம்பர் மாதமும், டிசம்பர் மாதமும் 3 சதவீதம் வரை பாதிப்பு இருந்ததாகவும், அதன் பிறகு பல மாதங்கள் இதன் தாக்கத்தால் பாதிப்புகள் தொடர்ந்ததாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    2017 கோடை காலத்தில் நாட்டில் பொருளாதார ரீதியாக மோசமான நிலை இருந்ததாகவும் அதில் கூறியுள்ளனர்.

    மேலும் அந்த அறிக்கையில் பணமில்லா பரிவர்த்தனை திட்டங்கள், நவீன நிதி சந்தை பொருளாதாரத்தில் அவசியமான ஒன்று. அது, இந்திய பொருளாதார நடவடிக்கைகளுக்கு முக்கியமானதாக இருக்கும் என்றும் அவர்கள் கூறி உள்ளனர்.


    பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் சில நீண்ட கால பலன்கள் கிடைத்து இருப்பதாகவும் அதில் கூறப்பட்டு இருக்கிறது.

    அதாவது வரி வசூல் அதிகரிப்பு, நிதி அமைப்புகளில் சேமிப்பு அதிகரிப்பு, பணமில்லா பரிவர்த்தனை முறைகள் அதிகரிப்பு போன்றவை நடந்துள்ளது.

    ஆனாலும், இதில் எந்த மாதிரி நன்மைகள் கிடைத்தன என்பது தொடர்பாக இன்னும் விரிவாக ஆய்வு நடத்தப்படுவது அவசியம் என்றும் அவர்கள் கூறி இருக்கிறார்கள்.

    இந்த ஆய்வை நடத்தியவர்களில் கீதா கோபிநாத், பன்னாட்டு நிதியத்தின் தலைமை பொருளாதார நிபுணராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் அடுத்த மாதம் இந்த பதவியை ஏற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #Demonetisation
    ரபேல் ஒப்பந்தமும், பண மதிப்பு நீக்கமும் நாட்டின் மிகப் பெரிய ஊழல்கள் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். #RahulGandhi #Demonetisation

    புதுடெல்லி:

    மத்திய அரசு செல்லாத நோட்டு அறிவிப்பு வெளியிட்ட போது தலைமை பொருளாதார ஆலோசகராக இருந்த அரவிந்த் சுப்பிரமணியன் விருப்ப ஓய்வு பெற்றார்.

    அவர் பண மதிப்பு நீக்கம் குறித்து கூறுகையில், “இந்த நடவடிக்கை மக்களுக்கு கடுமையான நிதி நெருக்கடியை ஏற்படுத்தியது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டு சரிவடைந்தது” என்றார்.

    இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் தெரிவித்த கருத்து வருமாறு:-

    பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு ஒப்புதல் அளிக்காத அரவிந்த் சுப்பிரமணியன் ஏன் அப்போது பதவி விலகவில்லை.

    ஆனால் முன்னாள் ராணுவ மந்திரி மனோகர் பாரிக்கர் ரபேல் ஒப்பந்தத்தை எதிர்த்து ராஜினாமா செய்தார்.

     


    ரபேல் ஒப்பந்தம் நாட்டுக்கு எதிரான மிகப் பெரிய குற்றம். மனோகர் பாரிக்கர் அதில் இருந்து விலகி தன்னை காப்பாற்றிக் கொண்டார்.

    அரவிந்த் சுப்பிரமணியனும் இப்போது கருத்து தெரிவித்து அதில் இருந்து விடுவித்துக் கொண்டார்.

    ரபேல் ஒப்பந்தமும், பண மதிப்பு நீக்கமும் நாட்டின் மிகப் பெரிய ஊழல்கள். இதுபற்றி விசாரண நடத்தி குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும்.

    இவ்வாறு கூறியுள்ளார். #RahulGandhi #Demonetisation

    சென்னை புழல் ஏரி அருகே 25 மூட்டைகளில் பழைய செல்லாத ரூபாய் நோட்டுக்களை கத்தை கத்தையாக வெட்டி வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. #OldBankNotes #Demonetisation
    சென்னை:

    பிரதமர் மோடி கடந்த 2016ம் ஆண்டு பணமதிப்புநீக்க நடவடிக்கையை அறிவித்தார். நாட்டில் புழக்கத்தில் இருந்த 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டு, புதிய 500 ரூபாய் மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்திற்கு விடப்பட்டன.

    பழைய 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டு,  அதற்கான காலக்கெடு விதிக்கப்பட்டது. பழைய நோட்டுக்களை வங்கிகளில் மாற்றுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. மொத்தமாக கையிருப்பு வைத்திருந்தவர்கள், வருமானத்தை கணக்கில் காட்டாமல் பதுக்கி வைத்திருந்தவர்களால் வங்கிகளில் நேரடியாக செலுத்தி பணத்தை மாற்ற முடியவில்லை. இதனால் பலர் ரூபாய் நோட்டுக்களை குப்பையில் வீசினர்.


    இந்நிலையில், சென்னையை அடுத்த புழல் ஏரி அருகே இன்று 25 மூட்டைகளில் பழைய 500 ரூபாய் மற்றும் 1000 ருபாய் நோட்டுக்கள் கிடந்தன. அந்த ரூபாய் நோட்டுக்கள் அனைத்தும் துண்டு துண்டாக வெட்டப்பட்டிருந்தன. இது அப்பகுதியில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த நோட்டுக்களை வெட்டி வீசியது யார்? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    மத்திய அரசு அறிவித்த காலக்கெடு முடிந்தபிறகு செல்லாது என அறிவிக்கப்பட்ட ரூபாய் நோட்டுக்களை வைத்திருக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.  #OldBankNotes #Demonetisation
    ×