search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "CBI Raid"

    குட்கா ஊழல் விவகாரம் தொடர்பாக சென்னையில் இன்று பேட்டியளித்த முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் நேர்மையான அதிகாரிகளுக்கு பாதுகாப்பில்லை என தெரிவித்துள்ளார். #GutkhaScam #CBIRaid #George
    சென்னை:

    சென்னை முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் இன்று நொளம்பூரில் உள்ள தனது வீட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    நான் 36 ஆண்டுகளாக காவல் துறையில் சேவையாற்றி வந்துள்ளேன். சென்னை கமிஷனராக இருந்தபோது மற்ற யார் மீதும் நான் குற்றம் சாட்டவில்லை. திமுக வழக்கறிஞர் தனது மனுவில் எந்த இடத்திலும் எனது பெயரை குறிப்பிடவில்லை.

    குட்கா விவகாரம் நீதிமன்ற விசாரணையில் இருப்பதால் நான் சந்திக்கும் பிரச்னையை கூற விரும்பவில்லை.  இங்கு நேர்மையான அதிகாரிகளுக்கு பாதுகாப்பில்லை.

    குட்கா விவகாத்தில் பணம் பெற்றதாக கூறப்படும் காலகட்டத்தில் நான் கமிஷனராக பதவியில் இல்லை. எம்.எல்.ஏ. அன்பழகன் அளித்த புகார் தேதிகளில் நான் சென்னை கமிஷனராக இல்லை. சிபிஐ வெளியிட்ட முதல் தகவல் அறிக்கையில் எனது பெயர் குறிப்பிடப்படவில்லை.

    நான் மீண்டும் காவல் ஆணையராக பதவியேற்பதற்கு முன்னர் இந்த குட்கா பற்றிய செய்திகள் வெளியாகின. போலீஸ் உயரதிகாரி மட்டத்தில் பலர் லஞ்சம் வாங்கிக் கொண்டு குட்கா வியாபாரத்துக்கு துணையாக இருப்பதாக வதந்திகள் பரவின.

    எனவே, இதுதொடர்பாக, உரிய விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என தமிழக அரசுக்கு நான் கடிதம் அனுப்பினேன்.
     
    குட்கா விவகாரத்தில் 2016-ம் ஆண்டு ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் தான் சோதனை நடைபெற்றது. அப்போது நான் காவல் ஆணையர் பதவியில் இல்லை.

    21.4.2016, 25.6,2016, 26.6.2016 ஆகிய தேதிகளில் பணம் தரப்பட்டதாக முதல் தகவல் அறிக்கையில் கூறப்படுகிறது. ஆனால் அந்த காலகட்டத்தில் நான் காவல் ஆணையர் இல்லை. செப்டம்பரில்தான் நான் மீண்டும் பதவிக்கு வந்தேன்.

    மாதவரத்தில் குட்கா குடோனை சோதனையிட்ட அதிகாரிகள், அங்கு புகையிலை பொருள்களை பார்க்கவில்லை என தெரிவித்தனர். இதுதொடர்பாக நான் மேலதிகாரிகளுக்கு தகவலும் அனுப்பினேன். மேலும் இவ்விவகாரம் பற்றி விசாரணை நடத்தி அரசுக்கு அறிக்கை அனுப்பி வைத்தேன்.  

    எனக்கு கீழ் துணை காவல் ஆணையராக பணியாற்றிய ஜெயகுமாரிடம் நிறைய பொறுப்புகளை ஒப்படைத்திருந்தேன். அவரது செயல்பாடு சரியில்லை என்பதால் அவரை கண்டித்துள்ளேன்.

    குட்கா விற்பனை போன்ற பெரிய விவகாரங்கள் காவல் ஆணையர் உதவியுடன் மட்டுமே நடக்குமா? இந்த விவகாரத்தில் எனது பெயரை சேர்த்து என்னை குறிவைத்து செயல்படுவது மிகவும் வருந்தத்தக்கது.

    இவ்வாறு அவர் கூறினார். #GutkhaScam #CBIRaid #George
    குட்கா ஊழல் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள 5 பேரையும் வரும் 20-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க சிபிஐ கோர்ட் உத்தரவிட்டுள்ளது. #GutkhaScam #CBIRaid
    சென்னை:

    குட்கா விவகாரத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி டி.கே ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமிஷ்னர் ஜார்ஜ் ஆகியோர் வீடுகள் உள்பட 40-க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். இந்த சோதனை தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சோதனையை தொடர்ந்து இந்த வழக்கில் தொடர்புடைய குட்கா நிறுவன பங்குதாரர்கள் மாதவராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில் முருகன், கலால் வரித்துறை அதிகாரி பாண்டியன் ஆகிய நால்வரும் இன்று சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

    இதனை தொடர்ந்து மாலை 5 மணியளவில் குட்கா தயாரிப்பு நிறுவனர் சீனிவாச ராவும் கைது செய்யப்பட்டார். 

    கைது செய்யப்பட்ட 5 பேரும் சென்னை சிபிஐ கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் அனைவரையும் வரும் 20-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். 
    முன்னாள் போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜ் வீட்டில் நடந்த சி.பி.ஐ. சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. #GutkhaScam #CBIRaid #George
    சென்னை:

    குட்கா ஊழல் விவகாரம் தமிழக அரசியலில் மிகப்பெரும் பூகம்பத்தை ஏற்படுத்த தொடங்கி உள்ளது.

    குட்கா விற்பதற்காக அமைச்சர் மற்றும் அரசு அதிகாரிகள் ரூ.40 கோடி லஞ்சம் வாங்கியதாக கூறப்படும் குற்றச்சாட்டில் ஆதாரத்தை நிரூபிக்க சி.பி.ஐ. நடத்தி வரும் அதிரடி சோதனைகள் மற்றும் விசாரணை பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் 2013-ம் ஆண்டு தடை செய்யப்பட்ட குட்காவை தமிழகம் முழுவதும் தங்கு தடையின்றி விற்பனை செய்ய லஞ்சம் கொடுக்கப்பட்ட விவகாரம் கடந்த 2016-ம் ஆண்டு வருமான வரித்துறை நடத்திய சோதனையில் தெரிய வந்தது. அப்போது சிக்கிய டைரியில் யார்-யாருக்கு எவ்வளவு லஞ்சம் தரப்பட்டது என்ற முழு விவரமும் இருந்தது.

    முதலில் மாநில லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதில் முன்னேற்றம் இல்லாததால் ஐகோர்ட்டு உத்தரவு படி தற்போது இந்த லஞ்ச குற்றச்சாட்டு பற்றி டெல்லி சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    முதலில் வருமான வரித்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் இருந்து தகவல்களை பெற்ற டெல்லி சி.பி.ஐ. அதிகாரிகள் அது பற்றி தீவிர ஆய்வு நடத்தினார்கள். லஞ்சப் பணம் எப்படி கை மாறியது என்பதை கண்டு பிடித்து விட்டால் இந்த ஊழலை நிரூபித்து விடலாம் என்று அதிகாரிகள் முடிவு செய்தனர்.

    அதன்படி கடந்த வாரம் அவர்கள் சென்னை வந்து குட்கா பங்குதாரர் மாதவராவிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது சி.பி.ஐ. அதிகாரிகள் பார்வைக்கு மேலும் ஒரு ரகசிய டைரி கொண்டு வரப்பட்டது. அந்த டைரியிலும் அமைச்சர் மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு லஞ்சப்பணம் கொடுக்கப்பட்டதற்கான தகவல்கள் இடம் பெற்று இருந்தது.

    இதையடுத்து போலீசார் மாதவராவுக்கு சொந்தமான செங்குன்றம் அருகே உள்ள குடோனுக்கு சீல் வைத்தனர். இந்த நிலையில் நேற்று யாரும் எதிர்பாராத வகையில் சி.பி.ஐ. அதிகாரிகள் திடீர் என்று அதிரடி சோதனையை மேற்கொண்டனர். சென்னை, திருவள்ளூர், தூத்துக்குடி மாவட்டங்கள், புதுச்சேரி, பெங்களூர், மும்பை மற்றும் குண்டூர் ஆகிய 7 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

    அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் டி.ஜி.பி. ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜ் வீடுகள் உள்பட 13 அதிகாரிகளின் வீடுகளில் இந்த சோதனை நடத்தப்பட்டது. நேற்று மாலை பெரும்பாலான இடங்களில் சோதனை நிறைவுக்கு வந்தது.

    டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் வீட்டில் சுமார் 11 மணி நேரம் சோதனை நடந்ததாக தெரிய வந்துள்ளது. அவரது வீட்டில் ஏதேனும் ஆவணம் கைப்பற்றப்பட்டதா? என்பது பற்றி விசாரித்த போது தகவல்களை தெரிவிக்க சி.பி.ஐ. வட்டாரங்கள் மறுத்து விட்டன.

    கோப்புப்படம்

    நொளம்பூரில் உள்ள முன்னாள் போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜ் வீட்டில் நேற்று காலை 5 அதிகாரிகள் சோதனையை தொடங்கினார்கள். இடைவிடாமல் சோதனை நீடித்தது. மற்ற இடங்களில் சோதனை முடிந்த நிலையில் ஜார்ஜ் வீட்டில் மட்டும் சோதனையை அதிகாரிகளால் விரைந்து முடிக்க இயலவில்லை.

    ஜார்ஜ் வசிக்கும் நொளம்பூர் பங்களாவில் 32 அறைகள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில் பெரும்பாலான அறைகள் சொகுசு வசதிகள் கொண்டது என்று கூறப்படுகிறது. இதனால்தான் சோதனையை முடிப்பதில் தாமதம் ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது.

    ஒவ்வொரு அறையாக சென்று சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இதனால் நள்ளிரவையும் கடந்து விடிய விடிய சோதனை நீடித்தது. இன்று காலை 8.30 மணிக்கு ஜார்ஜ் வீட்டில் நடந்த சோதனைகள் முடிவுக்கு வந்தன.

    ஜார்ஜ் வீட்டில் நடந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜார்ஜ் வீட்டில் கைப்பற்றப்பட்ட குறிப்புகளை அதிகாரிகள் எடுத்து சென்றுள்ளனர்.

    ஜார்ஜ் வீட்டில் ஏதேனும் அறைக்கு சீல் வைக்கப்பட்டதா? என்பது பற்றி தெரியவில்லை. ஜார்ஜ் சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனராக இருந்தபோது குட்கா ஊழலில் தொடர்புடையது பற்றி குறிப்பிட்டு கடிதம் எழுதி இருந்தார். அந்த கடித நகல்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

    நேற்று 7 இடங்களில் நடந்த சோதனையில் சி.பி.ஐ. அதிகாரிகள் எதிர்பார்த்த சில ஆவணங்கள் கிடைத்துள்ளன. அந்த ஆவணங்களை அடிப்படையாக வைத்து அடுத்தக்கட்டமாக விசாரணையை தொடங்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக சம்மன் அனுப்பும் பணி விரைவில் தொடங்கும் என்று தெரிகிறது.

    விசாரணைக்கு பிறகு யார்-யார் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் என்பது தெரிய வரும். #GutkhaScam #CBIRaid #George
    குட்கா விவகாரத்தில் சிபிஐ ரெய்டு நடத்தியுள்ள நிலையில், டிஜிபி டி.கே ராஜேந்திரன் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்துள்ளார். #GutkhaScam #DGPRajendran #CBIRaid
    சென்னை:

    குட்கா விவகாரத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி டி.கே ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமிஷ்னர் ஜார்ஜ் ஆகியோர் வீடுகள் உள்பட 40-க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். இந்த சோதனை தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தமிழகத்தில் மட்டும்தான் வரலாற்றின் முதல்முறையாக வருமானவரிச் சோதனையில் ராம மோகனராவ் சிக்கியபிறகு தலைமைச் செயலகத்தில் உள்ள தலைமைச் செயலாளர் அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டது. தொடர்ந்து முதல்முறையாக டிஜிபி டி.கே.ராஜேந்திரன் சென்னை வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.

    இந்நிலையில், சோதனை முடிந்த சில மணி நேரங்களில் டி.கே ராஜேந்திரன் கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் இல்லத்தில் எடப்பாடி பழனிசாமியை தற்போது சந்தித்து பேசி வருகிறார். 
    குட்கா விவகாரத்தில் சிபிஐ ரெய்டு நடத்திய நிலையில், ‘தற்போதும் சொல்கிறேன் எனக்கு மடியில் கனமில்லை எனவே வழியில் பயமில்லை’ என அமைச்சர் விஜயபாஸ்கர் அறிக்கை வெளியிட்டுள்ளார். #GutkhaScam #VijayaBhaskar #CBIRaid
    சென்னை:

    குட்கா விவகாரத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமிஷ்னர் ஜார்ஜ் ஆகியோர் வீடுகள் உள்பட 40-க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். இந்த சோதனை தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில், இந்த சிபிஐ ரெய்டு தொடர்பாக அமைச்சர் விஜய பாஸ்கர் கூறியுள்ளதாவது:-

    குட்கா, பான்மசாலா தொடர்பாக நான் யாரையும் சந்தித்தது இல்லை. இன்று நடந்த சிபிஐ சோதனைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தேன். எந்த விசாரணைக்கும் தயாராகவே உள்ளேன். குற்றச்சாட்டுகளை பரப்பி அரசியலில் இருந்து அகற்றிவிடலாம் என மனப்பால் குடிக்கின்றனர். 

    அரசியல் எதிரிகளால் உருவாக்கப்படும் சூழ்ச்சிகளை தகர்த்து வெற்றி பெறுவேன். குற்றச்சாட்டு எழுப்பியதாலேயே ஒருவர் குற்றவாளி ஆகிவிடமாட்டார். தற்போதும் சொல்கிறேன் எனக்கு மடியில் கனமில்லை எனவே வழியில் பயமில்லை. இந்த பிரச்சனையை சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் எதிர்கொள்வேன். 

    என விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
    குட்கா முறைகேடு விவகாரத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன் வீடுகள் உள்ளிட்டோர் வீடுகளில் நடந்த சிபிஐ சோதனை முடிவடைந்துள்ளது. #GutkhaScam
    சென்னை:

    தமிழ்நாட்டில் குட்கா விற்பனை செய்வதற்கு கடந்த 2013-ம் ஆண்டு அரசு தடை விதித்தது.  இந்த தடையை மீறி சென்னை உள்பட முக்கிய நகரங்களில் குட்கா விற்பனை செய்யப்படுகிறது. போலீசாருக்கு லஞ்சம் கொடுத்து விட்டு சிறிய கடைகளில் குட்கா விற்பனை படுஜோராக நடக்கிறது.

    இந்த நிலையில் தமிழகத்தில் நடக்கும் குட்கா விற்பனையில் பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு நடப்பதாக மத்திய வருமான வரித்துறைக்கு ரகசிய தகவல்கள் சென்றன. அதன்பேரில் சென்னை செங்குன்றத்தில் செயல்பட்டு வந்த எம்.டி.எம். குட்கா ஆலையில் கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

    அந்த ஆலையில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் போதை பொருட்கள் தயாரிக்கப்படுவது கண்டு பிடிக்கப்பட்டது. இங்கிருந்து தமிழ்நாடு முழுவதும் கடைகளுக்கு சப்ளை செய்யப்பட்டு விற்பனை ஆவதும் வெளிச்சத்துக்கு வந்தது.

    குட்கா ஆலை பங்குதாரர் மாதவராவ் வீட்டிலும், குடோனிலும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது மாதவராவ் உதவியாளர் வீட்டில் இருந்து ரகசிய டைரி ஒன்று சிக்கியது.

    அந்த டைரியில் குட்கா தயாரிப்பு மற்றும் விற்பனையை கண்டு கொள்ளாமல் இருப்பதற்காக மாநகராட்சி உயர் அதிகாரிகள், உணவு பாதுகாப்பு அதிகாரிகள், போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த விவரம் இடம் பெற்று இருந்தது.

    ஒவ்வொரு போலீஸ் அதிகாரிக்கும் எந்தெந்த தேதிகளில் எத்தனை லட்சம் ரூபாய் லஞ்சமாக கொடுக்கப்பட்டது என்ற விவரமும் துல்லியமாக எழுதப்பட்டு இருந்தது.

    அதிகாரிகள் துணையோடு குட்கா விற்ற வகையில் எவ்வளவு வரி கட்டப்பட்டு இருக்கிறது என்ற குறிப்புகளும் இருந்தன. இந்த டைரி தகவல்தான் அதிகாரிகள் சிக்குவதற்கு ஆதாரமாக அமைந்தது.

    தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பெயரும் அந்த டைரியில் இடம் பெற்று இருப்பதாக வருமான வரித்துறை தெரிவித்து இருந்தது. இதைத் தொடர்ந்து அப்போதைய சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனர் உள்பட 23 அதிகாரிகளுக்கு ரூ.60 லட்சம் வீதம் மொத்தம் ரூ.40 கோடி லஞ்சம் வழங்கியதாக தகவல்கள் வெளியானது. டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் மீதும் குற்றம் சாட்டப்பட்டது.

    இது தொடர்பாக குட்கா பங்குதாரர் மாதவராவிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர் மாதாமாதம் தவிர தீபாவளி, கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை காலங்களிலும் லஞ்சம் கொடுத்து இருப்பதாக வருமான வரித்துறையிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இந்த ஆதாரத்தின் அடிப்படையில் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசின் தலைமைச் செயலாளர், போலீஸ் டி.ஜி.பி. ஆகியோருக்கு வருமான வரித்துறை முதன்மை ஆணையர் கடிதம் எழுதி இருந்தார்.

    இதையடுத்து தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் பெயரளவுக்கு விசாரணை நடத்தி சில போலீஸ் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து மேல் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    இதனால் சி.பி.ஐ. விசாரணை கோரி சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க. சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அதை ஏற்று குட்கா ஊழல் பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. டெல்லி சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரிக்க உத்தரவிடப்பட்டு இருந்தது.

    அதன்பேரில் சி.பி.ஐ. சார்பில் பெயர் குறிப்பிடாமல் கலால் துறை, உணவு பாதுகாப்புத் துறை, போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் சட்ட விரோத பணபரிவர்த்தனை நடந்து இருப்பதால் இது தொடர்பாக அமலாக்கப் பிரிவும் வழக்குப்பதிவு செய்தது. இதிலும் யாருடைய பெயரும் குறிப்பிடப்படவில்லை.

    சமீபத்தில் டெல்லியில் இருந்து வந்த சி.பி.ஐ. அதிகாரிகள் குட்கா பங்குதாரர் மாதவராவிடம் விசாரணை நடத்தினார்கள். சுமார் 10 மணி நேரம் நீடித்த இந்த விசாரணையில் குட்கா ஊழல் தொடர்பாக ஏராளமான தகவல்கள் சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு கிடைத்தது. எனவே சி.பி.ஐ.யின் அடுத்த அதிரடி எந்த நேரத்திலும் இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

    இந்த நிலையில் குட்கா ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று (புதன்கிழமை) அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த ஊழலில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அமைச்சர் விஜயபாஸ்கரின் கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டுக்கு காலை 8 மணிக்கு 5 அதிகாரிகள் சென்றனர். வீட்டை பூட்டிக்கொண்டு சோதனையில் ஈடுபட்டனர்.

    அதே நேரத்தில் முகப்பேர் மேற்கில் உள்ள போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் வீட்டிலும் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடியாக புகுந்து சோதனையில் ஈடுபட்டனர்.

    நொளம்பூர் புதிய போலீஸ் நிலையம் அருகில் உள்ள அவரது வீட்டில் 10 அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். குட்கா ஊழலில் பரபரப்பாக பேசப்பட்ட முன்னாள் போலீஸ் கமி‌ஷனரான ஜார்ஜின் வீட்டிலும் சோதனை நடந்தது.

    நொளம்பூர் பாரிசாலையில் உள்ள அவரது வீட்டிலும் சி.பி.ஐ. அதிகாரிகள் குழு அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இங்கு 5 அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    போலீஸ் அதிகாரிகளான டி.கே.ராஜேந்திரன், ஜார்ஜ் இருவரது வீடுகளும் ஒரே பகுதியில் அமைந்துள்ளன. இதனால் இன்று நடைபெற்ற இந்த சோதனை அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது.

    சென்னை போலீஸ் வட்டாரத்தில் மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் உள்ள போலீஸ் அதிகாரிகள் மட்டத்திலும் சி.பி.ஐ. நடத்திய இந்த அதிரடி வேட்டை உச்சக்கட்ட பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    டி.ஜி.பி.யாக பொறுப்பில் இருக்கும் ஒருவர் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறப்பட்டு இருப்பதும், அது தொடர்பாக, சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தி இருப்பதும், தமிழக காவல்துறை வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.
    பீகாரில் சிறுமிகள் காப்பகத்தில் நடந்த பாலியல் வன்முறை தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிபிஐ அதிகாரிகள், இன்று மாநில முன்னாள் மந்திரியின் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டனர். #MuzaffarpurShelterHome #CBIRaid
    பாட்னா:

    பீகார் மாநிலம் முசாபர்பூரில் தொண்டு நிறுவனம் நடத்தி வரும் காப்பகத்தில் தங்கியிருந்த சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

    சிறுமிகள் சீரழிக்கப்பட்ட காப்பகத்திற்கு மாநில சமூக நலத்துறை மந்திரி மஞ்சு வர்மாவின் கணவர் சந்தேஷ்வர் வர்மா அடிக்கடி சென்று வந்ததாகவும், அதனால் பாலியல் வன்கொடுமை வழக்கில் சந்தேஷ்வர் வர்மாவுக்கும் தொடர்பு இருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. இதற்கு தார்மீக பொறுப்பேற்று மஞ்சு வர்மா தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தனர். இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்ததையடுத்து, மஞ்சு வர்மா கடந்த வாரம் பதவியை ராஜினாமா செய்தார்.



    இந்நிலையில், பாட்னாவில் உள்ள மஞ்சு வர்மாவின் வீடுகள் உள்ளிட்ட அவருக்கு சொந்தமான 5 இடங்களில் இன்று சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். காப்பகத்தை நிர்வகித்து வரும் பிரஜேஷ் தாக்கூருக்கு சொந்தமான 7 இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். #MuzaffarpurShelterHome #BiharMinister #CBIRaid
    திருச்சி விமானநிலையத்தில் நேற்று 2-வது நாளாக சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இதையடுத்து 6 சுங்க அதிகாரிகள் உள்பட 19 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். #TrichyAirport #CBIRaid
    திருச்சி:

    திருச்சி விமானநிலையத்தில் நேற்று 2-வது நாளாக சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இதையடுத்து தங்கம் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த 6 சுங்க அதிகாரிகள் உள்பட 19 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். மேலும், கணக்கில் வராத ரூ.9 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டது.

    திருச்சி விமானநிலையம் சர்வதேச அந்தஸ்தை பெற்றுள்ளது. இங்கிருந்து இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, சவுதி அரேபியா, துபாய், குவைத் உள்பட பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. திருச்சி விமானநிலையம் வழியாக தங்கம் கடத்தி வருவதை தடுக்கும் வகையில் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த சில மாதங்களாக கடத்தல் தங்கம் பிடிபடுவது அதிகரித்து வருகிறது.

    இந்த நிலையில் சிங்கப்பூரில் இருந்து ஏர்-இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்று முன்தினம் மாலை திருச்சி வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகள் சோதனைகளை முடித்துக்கொண்டு வெளியே செல்ல ஆயத்தமானார்கள்.

    அப்போது விமானநிலையத்தின் வெளிப்புற பகுதியில் காத்திருந்த மதுரை சி.பி.ஐ. பிரிவு டி.எஸ்.பி. மதுசூதனன் தலைமையிலான 11 பேர் கொண்ட சி.பி.ஐ. அதிகாரிகள் மாலை 5.30 மணி அளவில் அதிரடியாக விமானநிலையத்துக்குள் புகுந்தனர். அங்கு சோதனை முடித்து வெளியே வந்த பயணிகளை தடுத்து நிறுத்தி மீண்டும் உள்ளே அழைத்து சென்றனர். அவர்களிடம் தீவிர சோதனை நடத்தினார்கள். பயணிகள் யாரையும் வெளியே அனுப்பவில்லை. 70 பயணிகள் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகளிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினார்கள்.

    சி.பி.ஐ. அதிகாரிகளின் இந்த அதிரடி சோதனையை சற்றும் எதிர்பார்க்காத பயணிகள் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் பயணிகள் வருகை பகுதி, லக்கேஜ்களை ஸ்கேனர் செய்யும் பகுதி, சுங்க அதிகாரிகள் அலுவலகம் என அனைத்தையும் சி.பி.ஐ. அதிகாரிகள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். பயணிகளை தனித்தனியாக அழைத்து சென்று விசாரித்தனர். இதில் பயணிகள் சிலர் ‘குருவி’களாக (மற்றவர்களுக்காக பொருட்களை கடத்தி வருபவர்கள்) வந்துள்ளது தெரியவந்தது. அவர்கள் சிங்கப்பூரில் இருந்து எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களை வாங்கி வந்து, வியாபாரிகளிடம் விற்பனை செய்ய இருந்ததும் தெரியவந்தது. அவ்வாறு ‘குருவி’கள் போல் வந்த பயணிகளுக்கு தங்கம் கடத்தலில் தொடர்பு உள்ளதா? எனவும் விசாரித்தனர். இந்த விசாரணையில், பயணிகள் தங்கம் கடத்தி வருவதில் சுங்கத்துறை அதிகாரிகள் சிலருக்கு தொடர்பு இருந்தது தெரியவந்தது.

    2-வது நாளாக நேற்றும் சோதனையும், விசாரணையும் நீடித்தது.

    இது தொடர்பாக திருச்சி விமானநிலைய சுங்கத்துறை உதவி ஆணையர் வெங்கடேசுலு, கண்காணிப்பாளர்கள் கலுகசலமூர்த்தி, ராமகிருஷ்ணன், ஆய்வாளர்கள் அனீஸ்பாத்திமா, பிரசாந்த் கவுதம், அதிகாரி பிரடி எட்வர்டு மற்றும் பயணிகள் புதுக்கோட்டையை சேர்ந்த முருகேஷ், திருச்சியை சேர்ந்த தமயந்தி, அவரது கணவர் தீவகுமார், மனோகரன் முத்துகுமார் என்கிற சரவணன், அப்துல்ரமீஸ், கனகா, சாந்தி, ராமலெட்சுமி, லட்சுமி, வள்ளி, புஷ்பா, இலங்கையைச் சேர்ந்த மகேஷ்வரன், சுரேஷ் ஆகிய 19 பேரை சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடியாக நேற்று கைது செய்தனர்.

    அவர்கள் அனைவரையும் திருச்சியில் இருந்து மதுரைக்கு அழைத்துச்சென்று சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளனர். மேலும், விமானநிலையத்தில் உள்ள சுங்கத்துறை அலுவலகத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தியபோது, அங்கு கணக்கில் வராத ரூ.9 லட்சத்து 4 ஆயிரம் இருந்தது. அதையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    இதற்கிடையே சி.பி.ஐ. அதிகாரிகளில் ஒருபிரிவினர் கைது செய்யப்பட்ட சுங்கத்துறை அதிகாரிகளின் வீடுகளுக்கும் சென்று சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையில் அதிகாரிகளின் வீடுகளில் எவ்வளவு தங்கம் பிடிபட்டது என்பது உள்ளிட்ட விவரங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

    திருச்சி விமானநிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகளிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்த நிலையில், சிங்கப்பூரில் இருந்து வந்த பயணிகளிடமும் விசாரணை நடத்தினார்கள்.

    இதில் சில பயணிகள் அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று பொருட்களை வாங்கி வந்தது தெரியவந்தது. அந்த பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை சோதனையிட்ட சி.பி.ஐ. அதிகாரிகள், அவர்கள் கடந்த 3 மாதங்களில் எத்தனை முறை வெளிநாடுகளுக்கு சென்று வந்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. அவ்வாறு அவர்கள் வெளிநாட்டுக்கு சென்று வந்த தினத்தில் திருச்சி விமானநிலையத்தில் கடத்தல் தங்கம் சிக்கி உள்ளதா?. அது தொடர்பாக கணக்குகள் காட்டப்பட்டுள்ளதா? எனவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் பயணிகள் தங்கம் கடத்தி வரும்போது, விமானநிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்துவார்கள்.



    அப்படி சோதனை நடத்தும்போது, குறிப்பிட்ட சில அதிகாரிகள் அலட்சியமாக இருந்துள்ளனர். அவ்வாறு அலட்சியமாக இருந்து தங்கம் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் பற்றி சென்னையில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்துக்கு இன்பார்மர் மூலமாக ரகசிய தகவல்கள் சென்றதாகவும், அதன் அடிப்படையிலேயே திருச்சி விமானநிலையத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

    கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருச்சி விமானநிலையத்தில் இதேபோல் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினார்கள். அப்போது தங்கம் கடத்தி வரும் பயணிகளிடம் அலட்சியமாக இருந்த சுங்கத்துறை அதிகாரிகள் 2 பேரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்போது மீண்டும் திருச்சி விமானநிலையத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வரும் சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #TrichyAirport #CBIRaid 
    திருச்சி விமான நிலையத்தில் சிபிஐ அதிகாரிகள் நடத்திய சோதனையில், கடத்தலுக்கு உதவியதாக சுங்கத்துறை அதிகாரிகள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். #TrichyAirport #CBIRaid
    திருச்சி:

    வெளிநாடுகளில் இருந்து தொடர்ச்சியாக தங்கம் கடத்தி வரப்படும் சம்பவம் திருச்சி விமான நிலைய அதிகாரிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், நேற்று விமான நிலையத்திற்கு திடீர் என வந்த சி.பி.ஐ. அதிகாரிகள், பயணிகளிடம் விசாரணை நடத்தினர்.

    மதுரையில் இருந்து வந்திருந்த துணை கண்காணிப்பாளர் அந்தஸ்தில் உள்ள அதிகாரி தலைமையில் ஆய்வாளர்கள் 3 பேர் உள்பட 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் குழு இந்த சோதனையில் ஈடுபட்டனர்.



    சுங்கத் துறை அதிகாரிகள், விமான நிலைய பணியாளர்கள், அங்கு செயல்படும் பல்வேறு தனியார் நிறுவனங்களின் ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். அனைவரின் பொருட்கள், ஆவணங்கள் சோதனை செய்யப்பட்டன.

    இரண்டாவது நாளாக இன்றும் சிபிஐ சோதனை நீடித்தது. பயணிகள், விமான நிலைய பணியாளர்கள், வியாபாரிகள், சுங்கத் துறை அதிகாரிகள் என 60-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையின் முடிவில் சுங்கத்துறையின் உதவி ஆணையர் மற்றும் 2 கண்காணிப்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    விசாரிக்கப்பட்ட பயணிகளில் பெரும்பாலானோர் வியாபாரிகள் ஆவர். தொழில் சம்பந்தமாக அடிக்கடி சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று வரக் கூடியவர்கள். அவர்கள் அதிக அளவு தங்கம் கொண்டு வந்ததாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து, சி.பி.ஐ. அதிகாரிகள் இந்த அதிரடி விசாரணையில் ஈடுபட்டதாக தெரிகிறது. அவர்களுக்கு சுங்கத்துறை அதிகாரிகள் உதவி செய்திப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளனர். #TrichyAirport #CBIRaid

    டெல்லி பொதுப்பணித்துறை மந்திரி வீட்டில் சிபிஐ ரெய்டு நடத்தியுள்ள நிலையில் ‘பிரதமர் மோடிக்கு என்ன வேண்டும்?’ என அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார். #ArvindKejriwal
    புதுடெல்லி:

    டெல்லி பொதுப்பணித்துறையில் சமீபத்தில் கட்டிட பொறியாளர்கள் நியமிக்கப்பட்டனர். இதில், விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாக கூறி அந்த துறை மந்திரி சத்யேந்தர் ஜெயின் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். இதனை சுட்டிக்காட்டி ‘பிரதமர் மோடிக்கு என்ன வேண்டும்?’ என அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.

    டெல்லி ஆம் ஆத்மி அரசு செய்துள்ள நல்ல விஷயங்களை மக்களிடம் மறைக்கும் விதமாக மத்திய அரசு இவ்வாறு செய்கிறது என அக்கட்சி குற்றம் சாட்டியுள்ளது. தங்களது கட்சி எம்.எல்.ஏ.க்கள் மீது தொடர்பில்லாத வழக்கில் சம்பந்தப்படுத்தி போலீசார் மற்றும் டெல்லி அரசு சதி செய்வதாகவும் அக்கட்சி கூறியுள்ளது. 
    அரசு அதிகாரிகளை சரிகட்டி, சர்வதேச விமானச்சேவை லைசென்ஸ் பெற்றதாக ஏர் ஏசியா நிறுவன தலைமை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்த சி.பி.ஐ. அதிகாரிகள் 6 இடங்களில் சோதனை நடத்துகின்றனர். #AirAsiabookedby #AirAsiaCEO #TonyFernandes
    புதுடெல்லி:

    மலேசியா நாட்டின் குறைந்த கட்டண விமானச்சேவை நிறுவனமான ஏர் ஏசியா, பெங்களூரு நகரை தலைமை இடமாக கொண்டு கடந்த 2013-ம் ஆண்டு இந்தியாவில் விமானச் சேவையை தொடங்கியது. முதலில் இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு இடையில் விமானச் சேவையை தொடங்கிய இந்த நிறுவனத்தின் 49 சதவீதம் பங்குகள் டாட்டா சன்ஸ் நிறுவனத்திடம் உள்ளது.

    உள்நாட்டு விமானச் சேவையை தொடர்ந்து வெளிநாட்டு விமானச் சேவைகளையும் தொடங்கியுள்ள ஏர் ஏசியா கவர்ச்சிகரமான கட்டண சலுகைகளை அவ்வப்போது வெளியிட்டு வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது.

    இந்நிலையில், வெளிநாட்டு விமானச் சேவைக்கான லைசென்ஸ் பெறுவதற்கு முறைகேடான வழிகளை இந்நிறுவனம் பயன்படுத்தியதாக சமீபத்தில் தெரியவந்தது.

    மத்திய அரசில் உள்ள உயர் அதிகாரிகளை பல்வேறு வழிகளில் சரிகட்டி சர்வதேச விமானச் சேவைக்கான லைசென்ஸ் வழங்குவதற்கான விதிமுறைகளை தளர்த்தியும், மாற்றியும் இந்த முறைகேடு நடந்துள்ளதை சி.பி.ஐ. அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

    குறிப்பாக, இந்த லைசென்ஸ் பெறுவதற்கான 20 விதிமுறைகளில் ஐந்தாவது விதிமுறையில் இந்தியாவில் இருந்து சர்வதேச விமானச் சேவையை தொடங்க வேண்டுமானால், இந்திய விமான போக்குவரத்து துறையில் ஐந்தாண்டு முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

    டோனி பிரான்சிஸ்

    மேலும், அந்த நிறுவனத்துக்கு சொந்தமாக குறைந்தபட்சம் 20 விமானங்கள் இருக்க வேண்டும். ஆனால், அரசு அதிகாரிகளின் உதவியுடன் இந்த விதிகளை எல்லாம் மீறி ஏர் ஏசியா சர்வதேச லைசென்ஸ் பெற்றுள்ளது சி.பி.ஐ. விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டது.

    இதைதொடர்ந்து, ஏர் ஏசியா நிறுவனத்தின் தலைமை செயல் இயக்குனர் (சி.இ.ஓ.) மலேசியா நாட்டை சேர்ந்த டோனி பிரான்சிஸ், ஏர் ஏசியா நிறுவனத்தின் இயக்குனர் ஆர்.வெங்கடராமன், விமானச்சேவை ஆலோசகர் தீபக் தல்வார் மற்றும் பெயர்கள் வெளியிடப்படாத அரசு அதிகாரிகள் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது.

    டெல்லி, மும்பை, பெங்களூரு ஆகிய பெருநகரங்களில் உள்ள ஏர் ஏசியாவுக்கு சொந்தமான 6 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகின்றனர். #AirAsiabookedby #AirAsiaCEO #TonyFernandes
    ×