search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "burned"

    தேவதானப்பட்டி அருகே ஆட்டோவை தீ வைத்து எரித்த கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தேவதானப்பட்டி:

    பெரியகுளம் அருகே உள்ள சில்வார்பட்டி மேலத்தெருவை சேர்ந்தவர் காளீஸ்வரன் (வயது 35). இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். தனது ஆட்டோவை வீட்டில் நிறுத்தி வைத்து விட்டு தூங்கினார்.

    இன்று வீட்டின் முன் தீ எரிந்து கொண்டிருந்துள்ளது. வெளியே கதவு திறந்து பார்த்த போது ஆட்டோ தீ எரிவதை பார்த்து பின்னர் தண்ணீரை வைத்து அணைத்தனர். பின்னர் தேவதானப்பட்டி போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டு இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர். தீ வைத்தது யார் என்று தெரியவில்லை?

    இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் தொடர்ந்து இப்பகுதியில் ஆட்டோக்களில் டயர், பேட்டரி, டீசல் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் திருட்டு நடந்து கொண்டிருக்கிறது. இது சம்மந்தமாக தேவதானப்பட்டி விசாரித்து வருகின்றனர்.

    பரமத்திவேலூரில் கூரை வீடு தீயில் எரிந்து நாசமானதில் பொருட்கள் அனைத்தும் சேதம் அடைந்தன.
    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அருகே சிறுகிணற்றுபாளையத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 50). கூலித்தொழிலாளி. இவர் கூரை வீட்டில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். 

    இந்நிலையில் திடீரென்று அந்த கூரை வீடு தீ பிடித்து எரிந்தது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த வேலாயுதம்பாளையம் தீயணைப்பு அலுவலர் திருமுருகன் தலைமையில் சம்பவ இடத்துக்கு வந்து தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தி அணைத்தனர். அதற்குள் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது. இதன் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும். 
    தேனி அருகே சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதி கார் தீ பிடித்து எரிந்து நாசமானது.

    உத்தமபாளையம்:

    தேனி அருகே போடி மேலசொக்கநாதபுரத்தைச் சேர்ந்தவர் முருகன் (வயது 40). இவர் தனது மனைவி ஜெயந்தி, மகன்கள் தினேஷ், ரித்திஷ் மற்றும் உறவினர் முத்துக்குமார் ஆகியோருடன் பெங்களூரில் இருந்து சொந்த ஊருக்கு காரில் வந்து கொண்டு இருந்தார்.

    உறவினர் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சின்னமனூர் வழியாக கம்பம் சென்றனர். அப்போது சீலையம்பட்டி அருகே திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது மோதியது. இதில் காரின் முன் பக்கம் நொறுங்கி சேதமடைந்தது.

    அதில் இருந்து புகை வெளியானது. இதைபார்த்த அனைவரும் காரை விட்டு உடனடியாக வெளியேறினர். சிறு காயங்களுடன் அவர்கள் உயிர் தப்பினர்.

    சிறிது நேரத்தில் கார் திடீரென தீ பற்றி எரியத் தொடங்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த முருகன் உத்தமபாளையம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

    இருந்த போதும் கார் முற்றிலும் எரிந்து நாசமானது. காயமடைந்த 5 பேரும் தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டுள்ளனர். இது குறித்து சின்னமனூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    வாணியம்பாடியில் கியாஸ் கசிவு ஏற்பட்டு சிலிண்டர் வெடித்ததில் 6 வீடுகள் தீப்பிடித்து எரிந்தது. இதில் லட்சக்கணக்கான பொருட்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது.

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி அருகே உள்ள கோவிந்தாபுரம் பகுதியை சேர்ந்தவர் ராமு. கூலித்தொழிலாளி. நேற்று மாலை இவரது வீட்டில் கியாஸ் கசிவு ஏற்பட்டு சிலிண்டர் வெடித்தது.

    இதனால் அந்த வீடு முழுவதும் தீப்பற்றி எரிய தொடங்கியது. காற்றின் வேகம் காரணமாக தீ அருகில் வசிக்கும் முரளி, செல்வம், ராஜன்பாபு, கர்லின், காசியம்மாள் ஆகியோரின் வீடுகளுக்கும் பரவியது. இதானல் அந்த வீடுகளில் தீப்பற்றி எரிந்தது. இதனால் 6 வீட்டில் அனைத்து பொருட்களும் எரிந்து நாசமானது.

    ஆம்பூர் மற்றும் வாணியம்பாடியிலிருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இதில் லட்சக்கணக்கான பொருட்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது.

    தீவிபத்து நடந்த இடத்தை தாசில்தார் கிருஷ்ணவேனி, வருவாய் ஆய்வாளர் ராஜ்குமார், அ.தி.மு.க.நகர செயலாளர் சதாசிவம், காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு தலைவர் அஸ்லம்பாஷா மற்றும் நிர்வாகிகள் சென்று பார்த்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினர்.

    காசிமேட்டில் இன்று காலை மீன் ஏற்றுமதி குடோன் எரிந்து சாம்பல் ஆனது. இதில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள மீன்கள் எரிந்து நாசமாகின.

    ராயபுரம்:

    காசிமேடு ஜீவரத்தினம் நகரை சேர்ந்தவர் மூர்த்தி. இவருக்கு காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகே வெளிநாடுகளுக்கு மீன் ஏற்றுமதி செய்யும் கம்பெனி உள்ளது. இதன் அருகே மீன்களை சேமித்து வைக்கும் குடோன் உள்ளது.

    இங்கு ஏற்றுமதி செய்வதற்காக ரூ.5 லட்சம் மதிப்புள்ள திருகை மீன்களை சேமித்து வைத்து இருந்தார். இதன் அருகே ஏற்றுமதி கம்பெனியின் அலுவலகம் உள்ளது.

    இன்று காலை 8 மணியளவில் இந்த குடோன் தீப்பிடித்து எரிந்தது. காசிமேடு மீன்பிடி துறைமுகம் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

    இந்த தீ விபத்தில் குடோனில் இருந்த ரூ.5 லட்சம் மீன்கள் எரிந்து நாசமாகின. அலுவலகமும் எரிந்தது. இங்கு இருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்களும் சேதமாகின.

    காசிமேடு மீன்பிடி துறை முகம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். முதல் கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. மேலும் விசாரணை நடந்து வருகிறது.

    திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 குடிசை வீடுகள் எரிந்து சாம்பலானது.
    கே.கே.நகர்:

    திருச்சி கே.கே.நகர் சுப்பிரமணியபுரம் பகுதியில் அமைந்துள்ளது பென்சனர் காலனி. இங்கு ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. மேலும் அதிக அளவில் குடிசை வீடுகளும் இருக்கிறது. இந்த நிலையில் இன்று காலை அந்த பகுதியில் சேர்ந்த குப்பைகளுக்கு யாரோ தீ வைத்துள்ளனர். இதில் காற்றின் வேகம் காரணமாக குப்பையில் பற்றிய தீயானது அருகில் இருந்து குடியிருப்புகளுக்கும்  பரவியது. மேலும் நெருப்பு துகள் கள் அருகிலிருந்த தனியார் நிறுவனத்தில் மேல் இருந்த கூரையில் விழுந்து மளமள வென தீ பரவியது. இதனை பார்த்த  அப்பகுதியினர் அணைக்க முயன்றும் முடிய வில்லை. உடனடியாக தீய ணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    வேமாக பரவிய தீ அதே பகுதியை சேர்ந்த விஜயலட்சுமி என்பவர் வீடு உள்பட 5 பேரின் வீடுகளில் பிடித்து எரிந்தது. தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக தீயை அணைக்க முற்பட்டனர். பின்பு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு  துறையினர் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேல் போராடி தீயை அணைத்தனர். 

    இந்த விபத்தில் அந்த வீடுகளில் இருந்த பணம் மற்றும் பொருட்கள் எரிந்து சாம்பலானது. மொத்தம் சேத மதிப்பு ரூ.5 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. தீ விபத்து ஏற்பட்ட இடத்தை திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ப. குமார் எம்.பி. நேரில் சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி நிவாரண பொருட்களை வழங்கினார்.

    மேலும் தீ விபத்தில் பாதிக்கப்படாத அளவிற்கு கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.  தீ விபத்து குறித்து ஏர்போர்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து அதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஆவுடையார்கோவிலில் தீ விபத்தில் 3 வீடுகள் எரிந்து நாசமானதால் ரூ. 5 லட்சம் மதிப்பில் பொருட்கள் சேதம் அடைந்தன.
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் நெல்லியடி ஊரணிக்கரைச் சேர்ந்தவர்கள் வசந்தி(42), அழகுமலை (55), ராஜாத்தி (60). இவர்கள் 3 பேரின் வீடுகள் அடுத்தடுத்து உள்ளன. நேற்று மதியம் திடீரென வசந்தியின் வீட்டில் முதலில் தீப்பற்றியது. பின்னர் தீ மளமளவென அழகுமலை, ராஜாத்தி வீடுகளுக்கும் பரவியது. 

    இது குறித்து தகவல் அறிந்தும் ஆவுடையார் கோவில் தீயணைப்பு விரைந்து சென்று தீயை அணைத்தனர். இருப்பினும் 3 வீடுகளிலும் இருந்து ரூ. 5 லட்சம் மதிப்பிலான பணம், நகை, சான்றிதழ், பாத்திரங்கள், வீட்டு உபயோக பொருள்கள் எரிந்து நாசமானது. 

    இச்சம்பவம் குறித்து ஆவுடையார்கோவில் போலீசார் வழக்குபதிவு செய்து மின்கசிவு காரணமாக தீ பிடித்ததா? அல்லது வேறு காரணமா என விசாரித்து வருகின்றனர்.
    கருங்கல் அருகே நள்ளிரவில் போலீஸ் ஏட்டின் காருக்கு யாரோ தீ வைத்து விட்டனர். இதில் கார் எரிந்து சேதம் அடைந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கருங்கல்:

    கருங்கல் அருகே மேற்கு மாத்திரவிளையை சேர்ந்தவர் வாசுதேவன். இவர் இரணியல் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருகிறார்.

    இவர் தனக்கு சொந்தமான காரை வீட்டின் அருகே உள்ள காலி இடத்தில் நிறுத்தி வைப்பது வழக்கம். நேற்று இரவு அவர் தனது காரை அந்த இடத்தில் நிறுத்தி இருந்தார். மேலும் பிளாஸ்டிக் கவரால் அந்த காரை மூடி இருந்தனர். நள்ளிரவில் திடீரென்று அந்த கார் தீ பிடித்து எரிந்தது. இதைபார்த்த அக்கம், பக்கத்தினர் போலீஸ் ஏட்டு வாசு தேவனுக்கு தகவல் கொடுத்தனர். அவர் அங்கு விரைந்து சென்று பார்த்த போது கார் கொளுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது. யாரோ அந்த காருக்கு தீ வைத்து விட்டு தப்பியோடியது தெரியவந்தது.

    உடனே பொதுமக்கள் உதவியுடன் காரில் பிடித்த தீ அணைக்கப்பட்டது. இதில் கார் சேதம் அடைந்தது. இது பற்றி வாசுதேவனின் மகன் தீபன்ரஞ்சன் கருங்கல் போலீசில் புகார் செய்தார். போலீசார் கார் எரிந்தது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    பாகூர் அருகே திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் வீடு எரிந்து சாம்பல் ஆனது. ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைந்தன.

    பாகூர்:

    பாகூர் அருகே சோரியாங்குப்பத்தை அடுத்த திடீர் குப்பத்தை சேர்ந்தவர் வைத்தியநாதன் (வயது 57) கூலித்தொழிலாளி.

    இன்று காலை அவர் விவசாய வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் அவரதுமனைவி விமலா மற்றும் குழந்தைகள் இருந்தனர்.

    இந்த நிலையில் பகல் 12 மணியளவில் வைத்தியநாதன் கூரை வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த விமலா குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தார்.

    அதற்குள் தீ வீடு முழுவதும் பரவி எரிந்தது. மேலும் அருகில் உள்ள வைக்கோல் போரிலும் தீ பற்றி எரிந்தது.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் பாகூர் தீயணைப்புத்துறை அதிகாரி பக்கிரி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டார். சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

    எனினும் வீடு முற்றிலும் எரிந்து சாம்பலானதால் வீட்டில் இருந்த ரூ. 1 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதமானது. மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    பள்ளிப்பாளையம் அருகே ஆம்னிவேன் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
    பள்ளிப்பாளையம்:

    நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே உள்ள ஆயக்காட்டூர் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 45).  இவர் மனைவி மற்றும் குடும்பத்தினருடன் ஊரில் வசித்து வருகிறார். மேலும் ரவிச்சந்திரன் ஆயக்காட்டூரில் விசைத்தறி கூடம் வைத்து நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் சங்ககிரியில் உள்ள சொந்தக்காரர் ஒருவரது வீட்டிற்கு இன்று செல்ல முடிவு செய்திருந்தார். அதன்படி இன்று காலையில் ரவிச்சந்திரன் தனக்கு சொந்தமான ஆம்னிவேனில் குடும்பத்தினரை அழைத்துக் கொண்டு சங்ககிரிக்கு  புறப்பட்டார். காரில் மொத்தம் 4 பேர் இருந்தனர்.

    ஆம்னிவேனை ரவிச்சந்திரன் ஓட்டினார். காலை 7.30 மணி அளவில் வெப்படை என்ற இடத்தில் ஆம்னிவேன் சென்றபோது, என்ஜீன் பகுதியில் இருந்து திடீரென புகை குபு குபுவென கிளம்பி வெளியே வந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரவிச்சந்திரன் உடனடியாக ஆம்னி வேனை நிறுத்தினார். இதையடுத்து அனைவரும் காரிலிருந்து படபடவென கீழே  இறங்கி சிறிது தூரம் தள்ளிச் சென்று நின்று கொண்டனர். 

    கொஞ்சம் நேரத்தில் கார் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. இதுபற்றி குமாரபாளையம் தீயணைப்பு நிலையத்துக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு நிலைய வீரர்கள் அங்கு வருவதற்குள் ஆம்னிவேன் முற்றிலும் எரிந்து எலும்புக் கூடாக மாறியது. ரோட்டில் ஓடியபோது ஆம்னிவேன் வெடித்து சிதறி இருந்தால் உயிர் சேதம் ஏற்பட்டிருக்கும். நல்ல வேளையாக ரவிச்சந்திரன் சுதாரித்துக் கொண்டு ஆம்னி வேனை நிறுத்தியதால் அனைவரும் உயிர் தப்பினர். இந்த விபத்தில் யாருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை. ரோட்டில் ஓடிய ஆம்னிவேன் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
    முத்துப்பேட்டை அருகே மின் கம்பத்தில் ஏற்ப்பட்ட மின் கசிவில் தீப்பொறி வீட்டின் மீது விழுந்ததால் 3 வீடுகள் எரிந்து சேதம் அடைந்தன.
    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த வேப்பஞ்சேரி வரவாணி தெரு பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. 

    இந்த நிலையில் நேற்று மதியம் அங்குள்ள மின் கம்பத்தில் ஏற்ப்பட்ட மின் கசிவில் தீப்பொறி சாரதம் என்பவரின் வீட்டின் மீது விழுந்து தீப்பிடித்து எரியத்துவங்கியது. இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் தீயை அணைக்க முயன்றனர். அப்போது பலமான காற்று வீசியதால் தீ அருகில் இருந்த வீடுகள் மீதும் மளமள என்று பரவி கொழுந்துவிட்டு எரியத் துவங்கியது. 

    இதனையடுத்து அப்பகுதியினர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த முத்துப்பேட்டை மற்றும் திருத்துறைப்பூண்டி தீயணைப்பு நிலைய வீரர்கள் பலமணிநேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இந்த தீ விபத்தில் சாரதம் (65), வீரையன்(50) ஆகியோரின் கூரை வீடு, சிங்காரவேல்(40) என்பவரின் ஓட்டு வீடு, முருகதாஸ் (45) என்பவரின் வீட்டின் பின்பக்க கொட்டகை மற்றும் அருகில் இருந்த வைக்கோல்போர் ஆகியவை முற்றிலும் எரிந்து சாம்பலானது. 

    இதில் வீட்டில் இருந்த ரொக்க பணம், நகைகள், பாத்திரங்கள், கட்டில், மர பீரோ உட்பட பொருட்கள், மின்சாதன பொருட்கள், முக்கிய ஆவணங்கள் ஆகியவை தீயில் கருகி சாம்பலானது. சேதமதிப்பு ரூ.5 லட்சம் என கூறப்படுகிறது. 

    இதுகுறித்து எடையூர் இன்ஸ்பெக்டர் சிவதாஸ், சப்-இன்ஸ்பெக்டர் இலங்கேஸ்வரன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    மேலும் வருவாய்த்துறையினரும் பார்வையிட்டு பாதிப்பு குறித்து விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் தீ விபத்து ஏற்பட்ட பகுதியை தி.மு.க ஒன்றிய செயலாளர் மனோகரன், மாவட்ட பிரதிநிதி அன்பழகன், முன்னாள் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் முருகையன், முன் னாள் ஊராட்சி மன்ற தலைவர் குணசேகரன் ஆகியோர் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
    கடலூர் அருகே முன்விரோதத்தில் வீட்டுக்கு தீ வைத்ததால் சிலிண்டர் வெடித்து 6 வீடுகள் எரிந்து சாம்பலானது.

    கடலூர்:

    கடலூர் அருகே உள்ளது சேடாபாளையம். இந்த பகுதியை சேர்ந்தவர் சுமதி. இவரது மகன் வெற்றிவேல் (வயது 19). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஆனந்தஜோதி, முகுந்தன், விஜயகுமார் ஆகியோருக்கிடையே செல்போனில் வாட்ஸ்-அப் அனுப்புவதில் முன்விரோதம் இருந்து வந்தது.

    இந்த நிலையில் நேற்று மாலை ஆனந்தஜோதி உள்பட 6 பேர் சுமதி வீட்டுக்கு சென்றனர். அங்கிருந்த அவரிடம் தகராறு செய்தனர். அப்போது அங்கு வந்த சுமதியின் உறவினர் கார்த்திக் (29) என்பவர், ஏன் தகராறு செய்கிறீர்கள்? என்று தட்டி கேட்டார்.

    அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஆனந்தஜோதியும், அவரது நண்பர்களும் கார்த்திகை சரமாரியாக தாக்கினர்.

    இதில் அவர் படுகாயம் அடைந்தார். காயம் அடைந்த கார்த்திக் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    தனது அண்ணன் கார்த்திக் தாக்கப்பட்ட சம்பவம் அவரது தம்பி விக்னேசுக்கு தெரியவந்தது. அவரும், அவரது நண்பர் செந்தில்குமாரும் நேற்று இரவு ஆனந்தஜோதியின் வீட்டுக்கு சென்றனர். பின்பு அவரது கூரைவீட்டுக்கு தீ வைத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    அப்போது காற்று வீசியதால் தீ மளமளவென்று குடிசை வீடு முழுவதும் பரவியது. வீட்டில் இருந்த கியாஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனால் அருகில் உள்ள வீடுகளில் இருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடி வந்தனர்.

    சிலிண்டர் வெடித்ததில் அருகில் இருந்த தனசேகர், செல்வம், வெங்கடேசன், ராஜவேலு, மாரியம்மாள் ஆகியோரின் வீடுகளுக்கும் தீ பரவியது. உடனே பொதுமக்கள் தண்ணீரை ஊற்றி அணைக்க முயன்றனர்.

    மேலும் இது குறித்து கடலூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடம் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் ஆனந்தஜோதி வீடு உள்பட 6 பேரின் வீடுகளும் எரிந்து சாம்பலானது.

    வீடுகளில் இருந்த அனைத்து பொருட்களும் சேதமாகின. இந்த தீ விபத்தில் 4 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்தன.

    இந்த சம்பவம் தொடர்பாக முதுநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் இருதரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.

    பின்னர் முகுந்தன், விஜயகுமார், செந்தில்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக சேடாபாளையம் கிராமத்தில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதைத்தொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    ×