search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fire home"

    முத்துப்பேட்டை அருகே மின் கம்பத்தில் ஏற்ப்பட்ட மின் கசிவில் தீப்பொறி வீட்டின் மீது விழுந்ததால் 3 வீடுகள் எரிந்து சேதம் அடைந்தன.
    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த வேப்பஞ்சேரி வரவாணி தெரு பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. 

    இந்த நிலையில் நேற்று மதியம் அங்குள்ள மின் கம்பத்தில் ஏற்ப்பட்ட மின் கசிவில் தீப்பொறி சாரதம் என்பவரின் வீட்டின் மீது விழுந்து தீப்பிடித்து எரியத்துவங்கியது. இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் தீயை அணைக்க முயன்றனர். அப்போது பலமான காற்று வீசியதால் தீ அருகில் இருந்த வீடுகள் மீதும் மளமள என்று பரவி கொழுந்துவிட்டு எரியத் துவங்கியது. 

    இதனையடுத்து அப்பகுதியினர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த முத்துப்பேட்டை மற்றும் திருத்துறைப்பூண்டி தீயணைப்பு நிலைய வீரர்கள் பலமணிநேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இந்த தீ விபத்தில் சாரதம் (65), வீரையன்(50) ஆகியோரின் கூரை வீடு, சிங்காரவேல்(40) என்பவரின் ஓட்டு வீடு, முருகதாஸ் (45) என்பவரின் வீட்டின் பின்பக்க கொட்டகை மற்றும் அருகில் இருந்த வைக்கோல்போர் ஆகியவை முற்றிலும் எரிந்து சாம்பலானது. 

    இதில் வீட்டில் இருந்த ரொக்க பணம், நகைகள், பாத்திரங்கள், கட்டில், மர பீரோ உட்பட பொருட்கள், மின்சாதன பொருட்கள், முக்கிய ஆவணங்கள் ஆகியவை தீயில் கருகி சாம்பலானது. சேதமதிப்பு ரூ.5 லட்சம் என கூறப்படுகிறது. 

    இதுகுறித்து எடையூர் இன்ஸ்பெக்டர் சிவதாஸ், சப்-இன்ஸ்பெக்டர் இலங்கேஸ்வரன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    மேலும் வருவாய்த்துறையினரும் பார்வையிட்டு பாதிப்பு குறித்து விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் தீ விபத்து ஏற்பட்ட பகுதியை தி.மு.க ஒன்றிய செயலாளர் மனோகரன், மாவட்ட பிரதிநிதி அன்பழகன், முன்னாள் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் முருகையன், முன் னாள் ஊராட்சி மன்ற தலைவர் குணசேகரன் ஆகியோர் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
    ×