search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bulls"

    • மானாமதுரை அருகே நடந்த ஜல்லிக்கட்டில் காளைகள் சீறிப்பாய்ந்ததில் 20 வீரர்கள் காயமடைந்தனர்.
    • ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரைஅருகே உள்ள பெரும்பச்சேரி சமய கருப்பணசுவாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு மேட்டுமடை, பெரும்பச்சேரி கிராம மக்கள் சார்பில் ஜல்லிக்கட்டு நடந்தது.

    சமய கருப்பணசுவாமி கோவிலில் பூஜைகள் நடத்தி ஜல்லிக்கட்டு தொடங்கி வைக்கப்பட்டது. சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, விருதுநகர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட

    400-க்கும் மேற்பட்ட காளைகள் ஜல்லிக்கட்டில் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன.

    பல பகுதிகளில் இருந்தும் வந்திருந்த மாடுபிடி வீரர்கள் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கினர். காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் கட்டில், சேர், சில்வர் அண்டா, சைக்கிள், வெள்ளிக்காசு உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டது.

    ஜல்லிக்கட்டில் களத்தில் நின்று சிறப்பாக களமாடிய சிறந்த காளைகளுக்கும், அதிக காளைகளை பிடித்த வீரர்களுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.இதில் காளைகளை அடக்க முயன்ற 20 வீரர்கள் காயமடைந்தனர்.

    மானாமதுரை வட்டாட்சியர் ராஜா மேற்பார்வையில் நடந்த இந்த ஜல்லிக்கட்டில் காவல்துறை கண்காணிப்பாளர் கண்ணன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 11 பேர் காயம் அடைந்தனர்.
    • காவல் ஆய்வாளர் கலாவாணி மற்றும் பலர் பங்கேற்றனர்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள மகிபாலன்பட்டியில் பூங்குன்ற நாயகி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடந்தது. சிவகங்கை , திருப்பத்தூர், பொன்னமராவதி, கீழச்சிவல்பட்டி, திருமயம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 208 காளைகளும், 50-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர்.

    போட்டியை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார். சீறிப் பாய்ந்த காளைகளை, மாடுபிடி வீரர்கள் போட்டிபோட்டு அடக்கினர். இந்த போட்டியை காண தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வந்திருந்தனர். அவிழ்த்து விடப்பட்ட காளைகளின் திமிலை பிடித்து வீரர்கள் அடக்க முற்பட்டனர்.

    இதில் காளைகள் வீரர்களை தூக்கி வீசியது. காளைகள் முட்டியதில் 11 வீரர்கள் காயமடைந்தனர். அவர்களுக்கு திடலில் அமைக்கப்பட்டிருந்த மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது. 2 பேர் மேல் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    துணை போலீஸ் சூப்பிரண்டு ஆத்மநாபன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை 24 அரை கிராமமக்கள் செய்திருந்தனர். கோட்டாட்சியர் பால்துரை, வட்டாட்சியர் வெங்கடேசன், மண்டல துணை வட்டாட்சியர் செல்லமுத்து, திருப்பத்தூர் நகர் காவல் ஆய்வாளர் கலாவாணி மற்றும் பலர் பங்கேற்றனர்.

    • 2 பிரிவுகளாக நடைபெற்ற போட்டியை விழா கமிட்டி சார்பில் தொடங்கி வைக்கப்பட்டது.
    • சீறிப்பாய்ந்து சென்ற காளைகளை ஏராளமான பந்தய ரசிகர்கள் சாலையின் இருபுறமும் கூடியிருந்து கண்டு களித்தனர்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் அருகே உள்ள பூசனூர் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் மண்டபம் திறப்பு விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கைப்பந்தயம் நடைபெற்றது.

    இதில் தூத்துக்குடி, நெல்லை, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மாட்டு வண்டிகள் பங்கேற்றன. பூஞ்சிட்டு மற்றும் சிறியமாடு என 2 பிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டியை விழா கமிட்டி சார்பில் கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது.

    பூசனூர் கிராமத்தில் இருந்து 7 கிலோமீட்டர் தூரம் நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயத்தில் சீறிப்பாய்ந்து சென்ற காளைகளை ஏராளமான பந்தய ரசிகர்கள் சாலையின் இருபுறமும் கூடியிருந்து கண்டு களித்தனர். இதைத்தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்ற மாட்டுவண்டி உரிமையாளர்களுக்கும், ஓட்டி வந்த சாரதிகளுக்கும் பரிசுத்தொகை மற்றும் பரிசுக்கோப்பை வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

    • மஞ்சுவிரட்டில் காளைகள் சீறிப்பாய்ந்தன.
    • 2 பேர் இறந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள கண்டரமாணிக்கம் கிராமத்தில் உள்ள ஆதினமிளகி அய்யனார் முத்துமணிஅய்யா கோவிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடந்தது. இதில் 252 காளைகளும், 70 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். போட்டியை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தொடங்கி வைத்தார். காளைகள் அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கு சேர், பீரோ, அண்டா, சைக்கிள் போன்ற பரிசுகளும் அமைச்சர் சார்பில் வழங்கப்பட்டது.

    இந்த போட்டிக்கான ஏற்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு பணிகளை மாவட்ட ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நல சங்க தலைவர் சுரேஷ் கருப்பையா அம்பலம், லேனா பெரிய தம்பி அம்பலம், மஞ்சரி லட்சுமண் ஆகியோர் செய்திருந்தனர். இந்த மஞ்சுவிரட்டில் 2 பேர் இறந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    • வடமாடு விடும் விழாவினை அரசு வழிகாட்டுதலுக்குட்பட்டு நடத்துவது குறித்த ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடைபெற்றது.
    • விதிமீறல்களை தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணிக்கும் பாதுகாப்பு கேமராக்கள் அமைக்கப்பட வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் மாவட்ட அளவிலான ஜல்லிக்கட்டு மற்றும் வடமாடு விடும் விழாவினை அரசு வழிகாட்டுதலுக்குட்பட்டு நடத்துவது குறித்த ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடைபெற்றது.

    பின்னர் கலெக்டர் கூறியிருப்பதாவது :-

    தஞ்சை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு விழா அரசு விதிகளின்படி நடத்தப்படுவதற்கான முழு பொறுப்பும் விழாக்குழுவினரைச் சார்ந்ததாகும்.

    ஜல்லிக்கட்டு விழா அமைப்பாளர்களின் சில முக்கியமான கடமைகள் மற்றும் பொறுப்புகள் பின்வருமாறு:-

    ஜல்லிக்கட்டு விழா நிகழ்வுகளை நடத்துவதற்கு அமைப்பாள ர்கள் முன்அனுமதியை மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அரசிடமிருந்து பெறுவார்கள்.

    ஜல்லிக்கட்டு விழா நடத்துவதற்கான கோரிக்கை முன்கூட்டியே எழுத்துப்பூர்வமாக நிகழ்வின் நடத்தப்படவுள்ள தேதியைக் குறிப்பிட்டு முறையான ஆவணங்களுடன் குறைந்தது 15 நாட்களுக்கு முன் மாவட்ட நிர்வாகத்துக்கு வழங்க வேண்டும்.

    ஜல்லிக்கட்டு விழாவின்போது நடைபெறும் அனைத்து நிகழ்விற்கும் தாங்களே பொறுப்பு என்னும் உறுதி மொழியும், முழு நிகழ்வும் தேசிய மயமாக்கப்பட்ட நிறுவனத்தில் காப்பீடு செய்யப்பட்டுள்ளதற்கான

    விழாக்குழுவினரால் சமர்ப்பிக்க வேண்டும்.

    ஜல்லிக்கட்டு விழாவில் அனுமதிக்கப்பட உள்ள அதிகபட்ச காளைகளின் எண்ணிக்கை, மற்றும் பங்கேற்க எதிர்பார்க்கப்படும் காளைகளின் உத்தேசப் விண்ணப்பத்துடன் இணைத்து சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

    இந்திய பிராணிகள் நல வாரியம் வழங்கி உள்ள பல வகைகள் போதுமான எண்ணிக்கையில் நிறுவப்பட வேண்டும்.

    விதிமீறல்களை தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணிக்கும் பாதுகாப்பு கேமராக்கள் அல்லது வெப் கேம்கள், வாடிவாசல் உள்ளிட்ட அரங்கின் முக்கிய இடங்களில் அமைக்கப்பட வேண்டும்.

    மாவட்ட நிர்வாகத்தின் விருப்பப்படி அனுமதிக்கப்படும் கோவில் காளைகளை வாடிவாசல் அருகில் தனி பாதை வழியாக அனுப்பலாம். அந்த கிராம கோவில் காளைகளை மாடுபிடி வீரர்கள் யாரும் தழுவுதல் கூடாது.

    பாக்கு வைத்து அழைக்கப்படும் காளைகளுக்கு தனியாக காளைகள் தங்குமிடம் அமைக்கப்பட வேண்டும்.

    போட்டியில் பங்கேற்கும் காளைகள் மற்றும் உரிமையாளர்கள் விவரங்களை thanjavur.tn.nic.in என்ற இணையதளத்தில் விழா நடைபெறும் 3 நாட்களுக்கு முன் பதிவிறக்கம் செய்யப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.இந்த கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா, கால்நடை துறை மண்டல இணை இயக்குனர் தமிழ்செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான காளை மாடுகள் பங்கேற்றன.
    • போட்டியில் 4 பிரிவுகளில் ஒவ்வொரு சுற்றுக்கும் 40 வீரர்கள் களம் இறக்க பட்டு வீரர்கள் மாட்டை அடக்கினர்.

    விளாத்திகுளம்:

    தமிழகத்தின் தென்மாவட்டங்களில் புகழ்பெற்ற தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான எருது கட்டு திருவிழாவானது தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள பல்லாகுளம் கிராமத்தில் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்றது. இதில் ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான காளை மாடுகள் பங்கேற்றன.

    இக்கிராமத்தில், 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்த பாரம்பரிய திருவிழாவானது, கொரோனா தொற்றுப்பரவல் காரணமாக‌ கடந்த 4 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த நிலையில் இந்தாண்டு புகழ்பெற்ற எருது கட்டு திருவிழா வெகு விமர்சியாக தொடங்கியது. 24 மாடுகள் பங்கேற்ற இப்போட்டியில் 4 பிரிவுகளில் ஒவ்வொரு சுற்றுக்கும் 40 வீரர்கள் களம் இறக்க பட்டு வீரர்கள் மாட்டை அடக்கினர்.

    முன்னதாக வீரர்கள் மற்றும் மாடுகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு பின்னரே ஆடுகளத்தில் இறக்கினர். இந்த எருது விடும் விழாவை காண வெளியூர்களில் இருந்து வந்த பொதுமக்கள், பார்வையாளர்கள் கைதட்டி உற்சாகப்படுத்தினார்.

    ஈரோடு ஜல்லிக்கட்டில் மதுரையை சேர்ந்த கார்த்திக் என்ற பி.காம். 3-ம் ஆண்டு கல்லூரி மாணவர் கார்த்திக் கலந்து கொண்ட அவர் மட்டும் தனியாக 11 காளைகளை அடக்கி ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றார்.
    ஈரோடு:

    ஈரோட்டில் இன்று நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 150 மாடுகள் வாடிவாசல் வழியாக விடப்பட்டன.

    இதை அடக்க 200 இளைஞர்களள் மல்லு கட்டினர். மாடுகளை அடக்கியவர்களுக்கு தங்க காசுகள் மற்றும் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.

    ஈரோடு ஜல்லிக்கட்டில் மதுரையை சோ்ந்த பி.காம். 3-ம் ஆண்டு கல்லூரி மாணவா் கார்த்திக் என்பவர் கலந்து கொண்டார். அவர் மட்டும் தனியாக 11 காளைகளை அடக்கி ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றார்.

    இவருக்கு 11 தங்க காசுகளும் மற்றும் மொபைல் உள்பட பல்வேறு பரிகளும் வழங்கப்பட்டன. சிறந்த மாடுபிடி வீரருக்கான விருதும் இவருக்கு வழங்கப்பட்டது.

    மாணவர் கார்த்திக் தமிழ்நாட்டில் எங்கெல்லாம் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்கிறதோ... அங்கெல்லாம் சென்று ஆர்வத்துடன் கலந்து கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #Jallikattu
    தமிழர்களின் பாரம்பரிய பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. இந்த போட்டியில் பங்குபெறும் காளை மாடுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

    தஞ்சாவூர்:

    தமிழர்களின் பாரம்பரிய பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. இந்த போட்டியில் பங்குபெறும் காளை மாடுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

    புதுக்கோட்டை மாவட்டம் தச்சன்குறிச்சியில் நாளை(14-ந் தேதி) நடைபெறும் ஜல்லிக்கட்டில் கலந்து கொள்வதற்காக தஞ்சை ஆடக்காரதெருவில் கார்த்தி மற்றும் கிருபாகரன் ஆகியோருக்கு சொந்தமான வெள்ளையன், கரிகாலன் என்ற 2 மாடுகளுக்கு இன்று பயிற்சி அளிக்கப்பட்டது. அதில் மாட்டை அடக்க வருபவர்களிடம் இருந்து எப்படி பிடிபடாமல் தப்பிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் இந்த 2 மாடுகளுக்கும் அளிக்கப்பட்டது. இதனை ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

    இது குறித்து மாட்டின் உரிமையாளர் கார்த்தி கூறியதாவது:-

    நாங்கள் பரம்பரை பரம்பரையாக காளை மாடுகள் வளர்த்து வருகிறோம். மாடு தான் எங்களது முதல் குழந்தை. அதனை நாங்கள் தெய்வமாக நினைத்து வழிபடுகிறோம். மாடுகளுக்கு வீரியம் குறையாமல் இருப்பதற்காக தினமும் நடைபயிற்சி உள்ளிட்ட ஏராளமான பயிற்சி அளித்து வருகிறோம்.

    பருத்திகொட்டை, சோளத்தட்டை, பச்சையரிசி, உளுந்து, பேரீச்சம்பழம் உள்ளிட்டவைகளை உணவுகளாக காளை மாடுகளுக்கு அளித்து வருகிறோம். மாடு பிடித்து செல்லும்போது காலில் செருப்பு அணிய மாட்டோம். திரும்ப அழைத்து வரும் வரை உணவு கூட சாப்பிட மாட்டோம். எங்களது மாட்டை இதுவரை யாரும் அடக்கவில்லை. புதுக்கோட்டை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் கலந்து கொண்டு பிரிட்ஜ், பேன், பீரோ உள்ளிட்ட ஏராளமான பரிசுகளை வாங்கியுள்ளது. எனது காலத்துக்கு பிறகும் எங்களது குழந்தைகள் தொடர்ந்து மாடுகளை வளர்ப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகளுக்கு நாளை முதல் உடல்தகுதி சோதனை செய்யப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது. #Jallikattu

    அலங்காநல்லூர்:

    தமிழர்களின் பாரம்பரிய வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையையொட்டி நடத்தப்படும்.

    காளைகள் துன்புறுத்தப்படுவதை காரணம் காட்டி 2016-ம் ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் நடைபெற்ற எழுச்சி போராட்டம் காரணமாக ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் இயற்றப்பட்டது. அதன்படி தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் ஜல்லிக்கட்டுகள் நடத்தப்படுகின்றன.

    இருப்பினும் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய 3 இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலக பிரசித்தி பெற்றது.

    இங்கு நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த காளைகள் பங்கேற்கும். ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த உச்சநீதிமன்றம் கடுமையான விதிகளை பிறப்பித்துள்ளது. அதனை பின்பற்றி அரசின் மேற்பார்வையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    அதன்படி இந்த ஆண்டு வருகிற 15-ந்தேதி பொங்கல் பண்டிகை அன்று அவனியாபுரத்திலும், 16-ந்தேதி பாலமேட்டிலும், 17-ந்தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்கின்றன. இதற்கான அரசாணைகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    மேற்கண்ட இடங்களில் நடைபெறும் போட்டிகளில் 500-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜல்லிக்கட்டு போட்டிகளில் தங்களது காளைகளை பங்கேற்க செய்வோர் அதற்கான உரிய சான்றிதழை கால்நடைத்துறையிடம் இருந்து பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அதன்படி 3 இடங்களில் உள்ள கால்நடை மருத்துவ மனைகளில் நாளை (2-ந் தேதி) முதல் வருகிற 12-ந்தேதி வரை காளைகளுக்கு உடல் தகுதி சோதனைகள் ஆய்வு செய்யப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்படும்.

    காளைகளின் உயரம் 120 செ.மீட்டராக இருக்க வேண்டும். காளையின் வயது குறைந்தபட்சம் 8 வயதுக்குள்ளாக இருக்க வேண்டும்.

    கொம்பின் கூர்மைத் தன்மை உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டு போட்டிகளில் பங்கேற்க தகுதி உள்ளதா? என்பது குறித்து கால்நடை மருத்துவர்கள் சான்றிதழ் வழங்குவார்கள்.

    பின்னர் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க காளைகளுக்கு வரிசை எண் கொடுக்கப்பட்டு பதிவு செய்யப்படும். பதிவின் போது காளையின் உரிமையாளர்கள் 2 பாஸ்போர்ட் சைஸ்போட்டே, ஆதார், ரேசன் கார்டு நகல் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.

    3 இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்க இன்னும் 2 வாரங்களே உள்ளதால் அதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பாலமேடு, அலங்காநல்லூரில் வாடிவாசல்கள் சுத்தம் செய்யப்பட்டு வர்ணம் பூசப்பட்டுள்ளன. கேலரிகளும், தடுப்பு வேலிகளும் அமைக்க சவுக்கு மரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

    மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகளுக்கு ஊட்டச்சத்து தீவனம், நீச்சல் பழகுதல், மண்ணை குத்தி கிளறுதல் போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதேபோல் மாடுபிடி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். #Jallikattu

    தமிழகத்தில் 2019-ம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் நாளை மறுநாள் நடக்கிறது. #Jallikattu
    கந்தர்வக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே தச்சங்குறிச்சி கிராமத்தில் உள்ள புனித அடைக்கல மாதா ஆலய திருவிழாவையொட்டி ஆண்டுதோறும் ஜனவரி 1-ந்தேதி தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம்.

    சுப்ரீம் கோர்ட்டு தடை காரணமாக சில ஆண்டாக போட்டி நடத்தப்படாததால் வாடிவாசல் பகுதி களையிழந்து காணப்பட்டது.

    இந்தநிலையில் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் நடத்திய போராட்டத்துக்கு பின்னர் தமிழக அரசு சிறப்பு சட்டம் இயற்றியதால் நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த கோர்ட்டு அனுமதி அளித்தது. இதையடுத்து தச்சங்குறிச்சியில் கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது.

    ஆண்டுதோறும் தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சி கிராமத்தில்தான் நடத்தப்படும். அதன்படி 2019-ம் ஆண்டுக்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி தச்சங்குறிச்சியில் நாளை மறுநாள் 2-ந்தேதி நடத்தப்படுகிறது. இதற்காக ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் வாடிவாசலை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    ஜல்லிக்கட்டு போட்டிக்காக தச்சங்குறிச்சியில் கேலரி அமைக்கப்பட்டு வரும் காட்சி.

    மேலும் முக்கிய பிரமுகர்களுக்கான விழா மேடை மற்றும் பார்வையாளர்கள் பாதுகாப்புடன் அமர்ந்திருப்பதற்கான கேலரி, போட்டி நடத்தப்படும் திடலில் அமைக்க வேண்டிய அம்சங்கள் அனைத்தும் ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் தயார் செய்யப்பட்டு வருகிறது.

    முதல் போட்டியில் தங்கள் காளை வெற்றி வாகை சூடவேண்டும் என்பதற்காக காளை மாடுகளுக்கு சிறப்பு பயிற்சிகளை காளையின் உரிமையாளர்கள் அளித்து வருகின்றனர். அதே போல் மாடுபிடி வீரர்களும் காளைகளை அடக்க தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். போட்டிக்கான அனுமதி டோக்கன் கடந்த 2 நாட்களாக கொடுக்கப்பட்டு வருகிறது. போட்டியில் கலந்து கொள்ள இதுவரை 850 காளைகளும், 500 மாடுபிடி வீரர்களும் பதிவு செய்துள்ளனர். இதனால் தச்சங்குறிச்சி கிராமமே களை கட்டியுள்ளது. #Jallikattu


    அலங்காநல்லூர், பாலமேடு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்காக காளைகளை தயார் செய்யும் பணிகளில் காளைகள் வளர்ப்போர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். #Jallikattu
    அலங்காநல்லூர்:

    தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்று கிராமப்புறங்களில் நடைபெறும் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு. இது 400 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது.

    தமிழ்நாட்டில் மதுரை மாவட்டத்தில் உள்ள அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் அவனியாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளில் இந்த வீர விளையாட்டு தை மாதத்தில் நடைபெறும்.

    வருகிற ஜனவரி 15-ந் தேதி அவனியாபுரத்திலும், 16-ந் தேதி பாலமேட்டிலும், 17-ந் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடை பெறுவதற்கான ஏற்பாடுகளை அந்தந்த கிராம கமிட்டியினர் செய்து வருகின்றனர்.



    இந்நிலையில் அலங்காநல்லூர், பாலமேடு பகுதிகளில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு கண்மாய்களில் நீச்சல் பயிற்சியும் மைதானங்களில் ஓட்டமும், மண்குவியலில் மண் குத்துதலும், மாதிரி வாடி அமைத்து அதில் காளைகளை அவிழ்த்து விடுவதும் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை காளைகள் வளர்ப்போர் அளித்து வருகின்றனர்.

    அ.கோவில் பட்டியைச் சேர்ந்த மண்டு கருப்புச்சாமி கிராம கோவில் காளைக்கு அப்பகுதியில் உள்ள குளத்தில் நீச்சல் பயிற்சி அளிக்கப்பட்டது.

    இதுகுறித்து ஜல்லிக்கட்டு காளை வளர்க்கும் அலங்காநல்லூரைச் சேர்ந்த கோவிந்தராஜ் கூறியதாவது:-

    பொதுவாக காளைகளுக்கு டிசம்பர், ஜனவரி மாதம் வந்தாலே தெம்பும், தைரியமும், துணிச்சலும் இயற்கையாகவே வந்து விடுகிறது. காளைகளுக்கு தீவனமாக பச்சை புல், வைக்கோல், முற்றிய தேங்காய் பருப்பு, நாட்டு பருத்தி விதை போன்ற பலவகையான தீவனங்கள் வழங்கி சிறப்பாக கவனிக்கப்படும்.

    அத்துடன் அதற்கான பயிற்சிகளில் வழக்கம் போல் ஈடுபடுத்தப்படும். தென்மாவட்டங்களில் மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மற்றும் திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து ஜல்லிக்கட்டு காளைகள் போட்டிகளில் பங்கேற்கும்.

    ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கு முன்பே அனைத்து பகுதிகளிலும் காளைகள் வளர்ப்போர் ஆர்வத்துடன் பயிற்சி அளித்து முன்னேற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர் என்றார். #Jallikattu



    ×