search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜல்லிக்கட்டு போட்டிக்காக பயிற்சி பெறும் தஞ்சை காளைகள்
    X

    ஜல்லிக்கட்டு போட்டிக்காக பயிற்சி பெறும் தஞ்சை காளைகள்

    தமிழர்களின் பாரம்பரிய பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. இந்த போட்டியில் பங்குபெறும் காளை மாடுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

    தஞ்சாவூர்:

    புதுக்கோட்டை மாவட்டம் தச்சன்குறிச்சியில் நாளை(14-ந் தேதி) நடைபெறும் ஜல்லிக்கட்டில் கலந்து கொள்வதற்காக தஞ்சை ஆடக்காரதெருவில் கார்த்தி மற்றும் கிருபாகரன் ஆகியோருக்கு சொந்தமான வெள்ளையன், கரிகாலன் என்ற 2 மாடுகளுக்கு இன்று பயிற்சி அளிக்கப்பட்டது. அதில் மாட்டை அடக்க வருபவர்களிடம் இருந்து எப்படி பிடிபடாமல் தப்பிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் இந்த 2 மாடுகளுக்கும் அளிக்கப்பட்டது. இதனை ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

    இது குறித்து மாட்டின் உரிமையாளர் கார்த்தி கூறியதாவது:-

    நாங்கள் பரம்பரை பரம்பரையாக காளை மாடுகள் வளர்த்து வருகிறோம். மாடு தான் எங்களது முதல் குழந்தை. அதனை நாங்கள் தெய்வமாக நினைத்து வழிபடுகிறோம். மாடுகளுக்கு வீரியம் குறையாமல் இருப்பதற்காக தினமும் நடைபயிற்சி உள்ளிட்ட ஏராளமான பயிற்சி அளித்து வருகிறோம்.

    பருத்திகொட்டை, சோளத்தட்டை, பச்சையரிசி, உளுந்து, பேரீச்சம்பழம் உள்ளிட்டவைகளை உணவுகளாக காளை மாடுகளுக்கு அளித்து வருகிறோம். மாடு பிடித்து செல்லும்போது காலில் செருப்பு அணிய மாட்டோம். திரும்ப அழைத்து வரும் வரை உணவு கூட சாப்பிட மாட்டோம். எங்களது மாட்டை இதுவரை யாரும் அடக்கவில்லை. புதுக்கோட்டை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் கலந்து கொண்டு பிரிட்ஜ், பேன், பீரோ உள்ளிட்ட ஏராளமான பரிசுகளை வாங்கியுள்ளது. எனது காலத்துக்கு பிறகும் எங்களது குழந்தைகள் தொடர்ந்து மாடுகளை வளர்ப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×