search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Arumugasamy Commission"

    ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்தில், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை இன்று ஆஜராகி விளக்கம் அளித்தார். #JayaDeathProbe #ThambiDurai
    சென்னை:

    ஜெயலலிதா மரணம் மற்றும் அவருக்கு அளிக்கப்பட்ட சிசிச்சைகள் தொடர்பாக எழுந்த சந்தேகங்கள் குறித்து ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
     
    இதுவரையில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள், அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள், நர்சுகள், ஜெயலலிதாவின் உறவினர்கள், பணியாளர்கள் என பலரிடம் விசாரணை நடந்துள்ளது. இதில் சிலர் மீண்டும் வரவழைக்கப்பட்டு குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது.

    அதன்பின்னர் முக்கிய பிரமுகர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த மாதம் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனிடம் விசாரணை நடத்தப்பட்டது. அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று ஆணையத்தில் ஆஜராகி தனது தரப்பு விளக்கத்தை அளித்தார். அப்போது, ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து, நீதிபதி ஆறுமுகசாமி கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார்.



    இந்நிலையில், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை இன்று விசாரணை ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நாளை விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அவர் விசாரணைக்கு ஆஜராவாரா? என்பது பற்றி இன்று மாலை தெரியவரும். #JayaDeathProbe #ThambiDurai
    ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்தில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆஜராகி விளக்கம் அளித்தார். #MinisterVijayabaskar #JayaDeathProbe
    சென்னை:

    ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

    அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது நடந்தது என்ன? ஆஸ்பத்திரிக்கு செல்வதற்கு முன்னர் அவர் வகித்து வந்த போயஸ் கார்டனில் நடைபெற்றது என்ன? என்பது போன்ற கேள்விகள் எழுந்துள்ளன.

    ஜெயலலிதாவின் மரணத்தில் நிலவும் இந்த கேள்விகளுக்கு விடை காணும் வகையில் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை நடத்தி வருகிறார். இதற்காக சென்னை எழிலகத்தில் உள்ள ஆணைய அலுவலகத்தில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    இதில் அ.தி.மு.க. நிர்வாகிகள், சசிகலாவின் உறவினர்கள், அப்பல்லோ ஆஸ்பத்திரி டாக்டர்கள் உள்ளிட்டோர் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். சுகாதாரத்துறை அமைச்சரான விஜயபாஸ்கரிடமும் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டது.

    இதற்காக ஆறுமுகசாமி ஆணையம் சார்பில் விஜயபாஸ்கருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இதனை ஏற்று அவர் இன்று காலை 10.25 மணி அளவில் ஆணையத்தில் ஆஜரானார்.


    அப்பல்லோ ஆஸ்பத்திரியில் 75 நாட்கள் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது சுகாதாரத்துறை அமைச்சர் என்ற முறையில் நீங்கள் அளித்த ஆலோசனைகள் என்ன? வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டதா? என்பது போன்ற கேள்விகள் விஜயபாஸ்கரிடம் முன் வைக்கப்பட்டன. இதற்கு அவர் உரிய பதிலை அளித்துள்ளார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    விஜயபாஸ்கர் நேரில் ஆஜராக வலியுறுத்தி ஆறுமுகசாமி ஆணையம் சார்பில் 4 முறை சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 3 முறையும் சம்மன் அனுப்பப்பட்டபோது அவர் ஆஜராகவில்லை. 4-வது முறையாக அனுப்பப்பட்ட சம்மனை ஏற்றுத்தான் அவர் ஆஜராகி இருக்கிறார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு விஜயபாஸ்கர் மீதான குட்கா வழக்கு விசாரணை தீவிரமாக நடைபெற்று வந்தது. அதில் விஜயபாஸ்கர் தொடர்ச்சியாக ஆஜராகி வந்தார். இதன் காரணமாகவே அவர் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகவில்லை என்று கூறப்பட்டது. #MinisterVijayabaskar #JayaDeathProbe
    ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையம், வரும் 23ம் தேதி ஆஜராக வேண்டும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு சம்மன் அனுப்பியுள்ளது. #JayaDeathProbe #ArumugasamyCommission #OPanneerselvam
    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்களும் சர்ச்சைகளும் எழுந்ததால், இதுகுறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், ஜெயலலிதாவின் செயலாளர்கள், உதவியாளர்கள், பாதுகாவலர்கள், கார் ஓட்டுனர்கள், போயஸ் கார்டனில் வசித்தவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
     
    இவர்கள் தவிர ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அவரது கணவர் மாதவன், அரசு டாக்டர் பாலாஜி, இளவரசி மகள் கிருஷ்ணபிரியா, மகன் விவேக், சசிகலாவின் சகோதரர் திவாகரன் உள்பட 130க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் சிலரை ஆணையம் மீண்டும் வரவழைத்து குறுக்கு விசாரணை நடத்தி வருகிறது.



    இந்நிலையில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையம், வரும் 23ம் தேதி ஆஜராக வேண்டும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு இன்று சம்மன் அனுப்பியுள்ளது.

    மேலும், அமைச்சர் விஜயபாஸ்கர் ஜனவரி 21ஆம் தேதியும், தம்பிதுரை எம்.பி. ஜனவரி 22ஆம் தேதியும் ஆஜராக வேண்டும் எனவும் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. #JayaDeathProbe #ArumugasamyCommission #OPanneerselvam
    ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் 20-ந்தேதி ஓ.பன்னீர்செல்வம் ஆஜராக சம்மன் அனுப்பி உள்ளது. #ArumugasamyCommission #OPS
    சென்னை:

    ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

    இதில் ஜெயலலிதாவின் உதவியாளர்கள், பாதுகாவலர்கள், டிரைவர்கள், அப்பல்லோ டாக்டர்கள், அரசு டாக்டர்கள் உள்பட 150-க்கும் மேற்பட்டவர்கள் ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளனர்.

    இதில் 20-க்கும் மேற்பட்டவர்களிடம் சசிகலாவின் வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன் குறுக்கு விசாரணை நடத்தி உள்ளார்.

    ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றபோது முதல்-அமைச்சர் பொறுப்பில் இருந்த ஓ.பன்னீர்செல்வத்திடம் விசாரணை நடத்த வேண்டும் என்று ஆணையத்தில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.



    அதை ஏற்று டிசம்பர் 20-ந்தேதி ஓ.பன்னீர்செல்வம் விசாரணை ஆணையத்தில் ஆஜராகுமாறு ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது.

    இதேபோல் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் அ.தி.மு.க. செய்தி தொடர்பாளரும், அமைப்பு செயலாளருமான சி.பொன்னையன் ஆகியோர் 18-ந்தேதி விசாரணை ஆணையத்தில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது. #ArumugasamyCommission #OPS

    ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையம், சிறைச்சாலையில் உள்ள சசிகலாவிடம் விசாரணை நடத்துவதற்கு அனுமதி கோரி கடிதம் எழுதி உள்ளது. #JayaDeathProbe #ArumugasamyCommission #Sasikala
    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்களும் சர்ச்சைகளும் எழுந்ததால், இதுகுறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், ஜெயலலிதாவின் செயலாளர்கள், உதவியாளர்கள், பாதுகாவலர்கள், கார் ஓட்டுனர்கள், போயஸ் கார்டனில் வசித்தவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    இவர்கள் தவிர ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அவரது கணவர் மாதவன், அரசு டாக்டர் பாலாஜி, இளவரசி மகள் கிருஷ்ணபிரியா, மகன் விவேக், சசிகலாவின் சகோதரர் திவாகரன் உள்பட 130க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் சிலரை ஆணையம் மீண்டும் வரவழைத்து குறுக்கு விசாரணை நடத்தி வருகிறது.

    இந்த நிலையில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவிடம் நேரில் விசாரணை நடத்த ஆறுமுகசாமி ஆணையம் முடிவு செய்துள்ளது. ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது, அவருடன் சசிகலா 75 நாட்கள் தங்கியிருந்ததால், அவரிடம் விசாரித்தால் பல்வேறு தகவல்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்பதால் அவரிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.



    சசிகலாவிடம் விசாரணை நடத்த அனுமதி கோரி,  பரப்பன அக்ரஹார சிறை நிர்வாகத்துக்கு ஆறுமுகசாமி ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. இதேபோல் தமிழக உள்துறைக்கும் விசாரணை ஆணையம் கடிதம் அனுப்பி உள்ளது. உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டிக்கு எழுதி உள்ள அந்த கடிதத்தில், சசிகலாவிடம் விசாரணை நடத்துவதற்கு அனுமதி பெற்று தரும்படி கூறப்பட்டுள்ளது. #JayaDeathProbe #ArumugasamyCommission #Sasikala
    ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையத்தின் கால அவகாசம் மேலும் 4 மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. #JayaDeathProbe #ArumugasamyCommission
    சென்னை:

    ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. கடந்த 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் 24 -ஆம் தேதி நீதிபதி ஆறுமுகசாமி விசாரணையைத் தொடங்கினார். முதல்கட்டமாக விசாரணை ஆணையத்தின் காலம் 3 மாதங்களாக நிர்ணயிக்கப்பட்டது.

    இந்த விசாரணை ஆணையத்தில் சசிகலாவின் உறவினர்கள், முன்னாள் தலைமைச் செயலாளர்கள், காவல் துறை அதிகாரிகள், அரசு மருத்துவர்கள், ஜெயலலிதாவின் உதவியாளர்கள், அவரது வீட்டில் பணிபுரிந்தவர்கள் என இதுவரை 30 -க்கும் மேற்பட்டோர் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். சாட்சியம் அளித்தவர்களிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குறிப்பிட்ட காலத்துக்குள் விசாரணை முடிவடையாத காரணத்தால் கடந்த டிசம்பர் 24 -ஆம் தேதியில் இருந்து 6 மாத காலத்துக்கு அதாவது 2018 -ஆம் ஆண்டு ஜூன் 24 -ஆம் வரை கால அவகாசத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்பின்னர் மேலும் 4 மாதம் கால நீட்டிப்பு வழங்கப்பட்டது.



    ஆனால், இந்த காலத்திற்குள் விசாரணை நிறைவடையவில்லை. ஜெயலலிதா மரணம் தொடர்பாக மேலும் பலரை விசாரிக்க வேண்டி உள்ளதால் கால நீட்டிப்பு வழங்க வேண்டும் என ஆறுமுகசாமி ஆணையம் கேட்டுக்கொண்டது. அதனை ஏற்ற அரசு, விசாரணை ஆணையத்தின் காலத்தை மேலும் 4 மாதத்திற்கு நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. 4 மாதத்திற்குள் ஆணையம் தனது விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    இதன்மூலம் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு மூன்றாவது முறையாக கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. #JayaDeathProbe #ArumugasamyCommission
    எம்ஜிஆருக்கு 1984ம் ஆண்டு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்களை வழங்கும்படி அப்பல்லோ நிர்வாகத்திற்கு ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவிட்டுள்ளது. #JayaDeathProbe #JusticeArumugasamyCommission #Apollo #MGR
    சென்னை:

    ஜெயலலிதா மரணம் தொடர்பாக எழுந்த சந்தேகங்கள் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் மீது பல்வேறு கேள்விக் கணைகளை தொடுத்த ஆணையம், இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வாக்குமூலங்களை பதிவு செய்து வருகிறது.

    ஜெயலலிதாவின் உடல்நிலை மோசமானதையடுத்து அமெரிக்காவிற்கு அவரை கொண்டு சென்று சிகிச்சை அளித்திருக்கலாம் என பலர் கருத்து தெரிவித்தனர். எம்ஜிஆருக்கு அளித்ததுபோன்று ஜெயலலிதாவுக்கு ஏன் அமெரிக்காவில் சிகிச்சை அளிக்கவில்லை? என்ற கேள்வியும் எழுந்தது. இந்த விவகாரம் இப்போது பூதாகரமாக வெடித்துள்ளது.

    1984-ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் எம்ஜிஆர் இதே அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து மேல்சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்கான நடைமுறைகள் மற்றும் சிகிச்சை குறித்து ஆறுமுகசாமி ஆணையம் இப்போது விளக்கம் கேட்டுள்ளது.



    1984ல் எம்ஜிஆருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான ஆவணங்களை வரும் 23-ம் தேதிக்குள் வழங்கும்படி ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    எம்ஜிஆரை அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்ல எதன் அடிப்படையில் முடிவு செய்யப்பட்டது? அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து அமெரிக்காவிற்கு அவரை அழைத்துச் செல்வது தொடர்பாக அமைச்சரவையில் எடுத்த முடிவு யார் மூலம் மருத்துவமனைக்கு தெரிவிக்கப்பட்டது? என்ற விவரங்களையும் ஆணையம் கேட்டுள்ளது.

    எம்ஜிஆரை அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்றதுபோல், ஜெயலலிதாவை அழைத்துச் செல்ல முடியாமல் போனதற்கான காரணத்தை கண்டறியும் முயற்சியாக இந்த ஆவணங்களை ஆறுமுகசாமி ஆணையம் கேட்டுள்ளது. எம்ஜிஆரின் சிகிச்சை விவரங்களை 34 ஆண்டுகளுக்கு பிறகு ஆணையம் கேட்டிருப்பது வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. #JayaDeathProbe #JusticeArumugasamyCommission #Apollo #MGR
    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் ஆஜராகிய அப்பல்லோ டாக்டர்கள்- நர்சுகள் 7 பேரிடம் சசிகலா தரப்பு வக்கீல் குறுக்கு விசாரணை நடத்தினார். #jayalalithaa
    சென்னை:

    ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா மரணம் அடைந்ததில் மர்மம் இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் தமிழக அரசு கடந்த ஓராண்டுக்கு முன்னர் இந்த விசாரணை ஆணையத்தை நியமித்தது.

    இதனையடுத்து நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை நடத்துவதற்கு வசதியாக மெரினா கடற்கரையையொட்டியுள்ள எழிலகத்தில் தனியாக அலுவலகமும் அமைக்கப்பட்டுள்ளது.

    ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற போது பொறுப்பில் இருந்த அரசு அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள், போயஸ் கார்டன் பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டனர். ஓய்வு பெற்ற சென்னை போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜ் பலமுறை விசாரணை ஆணையத்தில் ஆஜராகியுள்ளார்.

    அவரைப் போல அப்போது உயர் பொறுப்புகளில் இருந்த போலீஸ் அதிகாரிகள் பலரும் விசாரணை ஆணையத்தில் ஆஜராகி தங்களுக்கு தெரிந்த தகவல்களை தெரிவித்தனர்.


    ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, மகன் தீபக் ஆகியோருக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. அவர்களும் ஆஜராகி விளக்கம் அளித்தனர். சசிகலா குடும்பத்தினர் பலரும் சம்மனை ஏற்று ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜரானார்கள்.

    ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலாவிடமும் விசாரணை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இதுவரையில் அவரிடம் விசாரணை எதுவும் நடத்தப்படவில்லை.

    ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்துவதற்காக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்துக்கும், அங்கு பணிபுரியும் டாக்டர்கள், நர்சுகளுக்கும் தொடர்ந்து சம்மன் அனுப்பப்பட்டு வருகிறது. இதற்கு முன்னர் இது தொடர்பாக பலரிடம் விசாரணை நடத்திய ஆணையம் பல்வேறு தகவல்களை திரட்டியுள்ளது.


    இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்னர் ஆறுமுகசாமி ஆணையம், அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்திடம் கண்காணிப்பு கேமரா காட்சிகளை தருமாறு கேட்டிருந்தது. ஆனால் அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகமோ, ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது பதிவான வீடியோ காட்சிகள் தங்களிடம் இல்லை என்றும், அப்போது பதிவான காட்சிகள் அழிந்து விட்டதாகவும் கூறியது. இதனை ஏற்க மறுத்த ஆணையம், அப்பல்லோ நிர்வாகத்திடம் மீண்டும் உரிய விளக்கம் கேட்டுள்ளது.

    இந்த நிலையில் ஆறுமுகசாமி ஆணையத்தில் இன்று ஆஜராகுமாறு அப்பல்லோ டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்ட 11 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

    இதனை ஏற்று டாக்டர்கள் ராமச்சந்திரன் அர்ச்சனா, சினேகாஸ்ரீ ஆகியோர் இன்று ஆஜரானார்கள். எக்கோ டெக்னீசியன் நளினி, செவிலியர்கள் ஷில்பா, விஜய லட்சுமி, பிரேமா ஆகியோரும் விசாரணை ஆணையத்தில் ஆஜரானார்கள்.

    இவர்களிடம் சசிகலா தரப்பு வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன் குறுக்கு விசாரணை செய்தார். ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றபோது, நடந்தது என்ன? என்பது தொடர்பாக அவர் பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை செய்தார்.

    அப்பல்லோ நிர்வாக அதிகாரியான சுப்பையா விஸ்வநாதன் நாளை ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இவர்களுடன் டாக்டர்கள் பத்மாவதி, வெங்கட்ராமன் ஆகியோரும் ஆஜராகிறார்கள்.

    நாளை மறுநாள் (27-ந் தேதி) டாக்டர்கள் ரவிக்குமார், பாஸ்கரன், செந்தில் குமார், சாய்சதீஷ் ஆகியோர் ஆஜராக உள்ளனர்.

    ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் கடந்த ஓராண்டாக பல்வேறு தரப்பினரிடமும் விசாரணை நடத்தி முடித்துள்ள நிலையில் அப்பல்லோ நிர்வாகத்திடமும், டாக்டர்கள் மற்றும் செவிலியர்களிடமும் ஆணையம் இறுதிக்கட்ட விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளது.

    இதனால் ஆணையத்தின் விசாரணை எப்போது முடியும்? என்கிற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் ஜெயலலிதா மரணத்தில் நீடிக்கும் மர்ம முடிச்சுகள் அவிழுமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

    இதுவரை 50-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. சசிகலாவிடம் விரைவில் விசாரணை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பின்னர் விசாரணை ஆணையத்தின் முதல் கட்ட அறிக்கை வெளியாகும் என்று தெரிகிறது. #jayalalithaa #Sasikala
    ஆறுமுகசாமி ஆணையத்தில் விசாரணையின் போது தன் தரப்பு வக்கீலையும் அனுமதிக்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில், ஜெ.தீபா வழக்கு தொடர்ந்துள்ளார். #JDeepa #ArumugasamyCommission
    சென்னை:

    ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது. இந்த ஆணையத்தின் விசாரணையின் போது தன் தரப்பு வக்கீல் ஒருவரை அனுமதிக்க வேண்டும் என்று ஜெ.தீபா மனு கொடுத்தார்.

    இந்த மனுவை நீதிபதி ஆறுமுகசாமி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ஜெ.தீபா வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், நீதிபதி ஆறுமுகசாமியின் உத்தரவை ரத்து செய்யவேண்டும். தன் தரப்பு வக்கீலை விசாரணையின்போது உடன் இருக்க அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்‘ என்று கூறியுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. #JDeepa #ArumugasamyCommission
    ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையில் துணை ஜனாதிபதியிடம் விசாரணை நடத்த ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்ப உள்ளது. #JayaDeathProbe #ArumugasamyCommission

    சென்னை:

    ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு திடீர் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு 75 நாட்கள் சிகிச்சை பெற்ற அவருக்கு என்ன செய்தது? எத்தகைய சிகிச்சை கொடுத்தார்கள்? என்பன போன்ற வி‌ஷயங்களில் மர்மம் நிலவுகிறது.

    ஜெயலலிதாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது முதல் மரணம் அடைந்தது வரை மர்மங்கள் நிலவுகிறது. இதில் உண்மையை கண்டு பிடிப்பதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

    அந்த ஆணையம் சார்பில் கடந்த ஆண்டு முதல் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஜெயலலிதாவுடன் பழகியவர்கள், சிகிச்சை அளித்தவர்கள், அதற்கு ஏற்பாடு செய்தவர்கள் என அனைத்துத் தரப்பினரிடமும் விசாரணை நடக்கிறது.

    இதுவரை சுமார் 100 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அவர்கள் அளித்த தகவல்கள் வாக்கு மூலமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களிடம் சசிகலா வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன் குறுக்கு விசாரணை நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை எல்லையை விரிவுபடுத்த ஆணையம் திட்டமிட்டுள்ளது. அதன்படி ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் இருந்த போது அவரது சிகிச்சை குறித்து நேரில் சென்று கேட்டறிந்த துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு, அப்போதைய கவர்னர் வித்யாசாகர் ராவ் இருவரையும் அழைத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.


    ஜெயலலிதா உடல் நிலையை வெங்கையா நாயுடு விசாரிக்க வந்தபோது அவர் மத்திய மந்திரியாக இருந்தார். தற்போது துணை ஜனாதிபதியாக இருப்பதால் அவரை விசாரணை ஆணையத்துக்கு அழைக்க முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    சட்ட நிபுணர்களுடன் கலந்து பேசி துணை ஜனாதிபதி மற்றும் முன்னாள் கவனர்ருக்கு சம்மன் அனுப்ப உள்ளனர். இதற்கிடையே தலைமை செயலாளர் உள்பட பலரிடம் தகவல் தரும்படி விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

    இந்த நிலையில் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஜெயலலிதா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டபோது பதிவான சி.சி.டி.வி. காட்சிகள் அழிந்து விட்டதாக கூறப்பட்டுள்ளது. இது மக்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இது தொடர்பாக அப்பல்லோ ஆஸ்பத்திரி சார்பில் சுப்பையா விசுவநாதன் வரும் 25-ந்தேதி விசாரணை ஆணையத்தில் ஆஜராகி தகவல்கள் அளிக்க உள்ளார். அவரிடம் சசிகலா வக்கீல் ராஜாசெந்தூர் பாண்டியன் குறுக்கு விசாரணை நடத்தவுள்ளார். #JayaDeathProbe #ArumugasamyCommission

    ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் எய்ம்ஸ் டாக்டர்களுக்கு சம்மன் அனுப்பி உள்ளது. #JayaDeathProbe #ArumugasamyCommission
    சென்னை:

    முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் தனிநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது.

    இந்த விசாரணை கமி‌ஷனில் முன்னாள் தலைமை செயலாளர்கள் ராம்மோகன் ராவ், ஷீலா பாலகிருஷ்ணன், ஜெயலலிதா உறவினர்கள், உதவியாளர்கள், சசிகலாவின் உறவினர்கள், அப்பல்லோ மருத்துவர்கள், அரசு டாக்டர்கள் உள்பட பலர் ஆஜராகி விளக்கம் அளித்து இருந்தனர்.

    இந்த நிலையில் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் டாக்டர்களுக்கு விசாரணை ஆணையம் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பி உள்ளது.



    ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது எய்ம்ஸ் டாக்டர்கள் கைலாணி, அஞ்சன் டிரிகா, நிதிஷ்நாயக், நிகில் தண்டன் ஆகியோர் ஆலோசனை வழங்கி உள்ளனர். அவர்கள் 3 முறை அப்பல்லோ மருத்துவமனை வந்தனர்.

    எய்ம்ஸ் இயக்குனர் ரன்தீப் குலேரியாவின் மெயிலுக்கு இந்த சம்மனை விசாரணை ஆணையம் அனுப்பி உள்ளது. ஆனால் இந்த சம்மனுக்கு இதுவரை எந்த பதிலும் வரவில்லை என்று கூறப்படுகிறது.

    இதே போல ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது ஆலோசனை வழங்கிய லண்டன் டாக்டர் ரிச்சர்டு பீலேவுக்கு சம்மன் அனுப்ப விசாரணை கமி‌ஷன் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. #JayaDeathProbe #ArumugasamyCommission

    ‘ஜெயலலிதா எந்த நோய்க்காக அனுமதிக்கப்பட்டார் என்பது தெரியாது’ என்று அப்பல்லோ மருத்துவமனை நர்ஸ் வாக்குமூலத்தை கேட்ட நீதிபதி ஆறுமுகசாமி அதிர்ச்சி அடைந்தார்.
    சென்னை:

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவர் நளினி, நர்ஸ் பிரேமா ஆன்டனி ஆகியோர் நேற்று ஆஜராகினர்.

    ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக அவர்களிடம் நீதிபதி பல்வேறு கேள்விகளை கேட்டார். ஆணையத்தின் வக்கீல்கள் எஸ்.பார்த்தசாரதி, நிரஞ்சன் ஆகியோர் அவர்களிடம் குறுக்கு விசாரணை செய்தனர். நீதிபதி மற்றும் ஆணைய வக்கீல்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு தெரியாது, ஞாபகம் இல்லை என்று அவர்கள் பதில் அளித்ததாக கூறப்படுகிறது.

    மருத்துவர் நளினி, 2016-ம் ஆண்டு அக்டோபர் 5-ந் தேதி தான் அப்பல்லோ மருத்துவமனையில் பணியில் சேர்ந்துள்ளார். ஜெயலலிதா மரணம் அடையும் வரை அவர் சிகிச்சை பெற்று வந்த சிறப்பு வார்டில் பல நாட்கள் பணியில் இருந்துள்ளார்.

    நான் பணியில் இருந்த போது, ஜெயலலிதா யாரிடமும் பேசியது இல்லை என்றும், ஜெயலலிதாவை சசிகலா பார்க்கவில்லை என்றும், தான் வார்டுக்குள் செல்லும் போது சில நேரங்களில் தன்னை பார்த்து ஜெயலலிதா புன்னகைத்து உள்ளதாகவும் நளினி வாக்குமூலம் அளித்துள்ளார்.

    நர்ஸ் பிரேமா ஆன்டனி

    ஜெயலலிதா மரணம் அடைந்த டிசம்பர் 5-ந் தேதி நளினி பணியில் இருந்துள்ளார். ‘அன்றைய தினம் ஜெயலலிதாவுக்கு மூளையை தவிர மற்ற பிரதான உறுப்புகள் செயல் இழந்துவிட்டன. குறிப்பிட்ட நேரத்துக்கு பின்னர் மூளையும் செயல் இழந்துவிட்டது’ என்றும் தனது வாக்குமூலத்தில் மருத்துவர் நளினி கூறி உள்ளார்.

    நர்ஸ் பிரேமா ஆன்டனி, ஜெயலலிதா சிகிச்சை பெற்ற சிறப்பு வார்டில் பணியில் இருந்த செவிலியர்களை கண்காணிக்கும் பணியை மேற்கொண்டு வந்துள்ளார். மருத்துவர்களின் அறிவுரைப்படி, ஜெயலலிதாவுக்கு குறிப்பிட்ட நேரத்தில் உணவு, மருந்து வழங்கப்படுகிறதா?, எந்தெந்த நேரத்தில் என்னென்ன சிகிச்சை அளிக்கப்பட்டது என்ற மருத்துவக்குறிப்பு சரியாக பராமரிக்கப்படுகிறதா? என்பதை கண்காணிக்கும் பணியில் அவர் ஈடுபட்டு வந்துள்ளார்.

    நீதிபதி அதிர்ச்சி

    விசாரணையின் போது, ஜெயலலிதா என்ன நோய்க்காக அனுமதிக்கப்பட்டார் என்பது தனக்கு தெரியாது என்று பிரேமா கூறி உள்ளார்.

    இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த நீதிபதி ஆறுமுகசாமி, ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட மருந்து, சிகிச்சைக்கான மருத்துவக்குறிப்புகளை கண்காணித்து வந்த உங்களுக்கு அவர் என்ன நோய்க்காக அனுமதிக்கப்பட்டார், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை என்ன? என்பது எப்படி தெரியாமல் இருக்கும் என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

    என்ன நோய்க்காக இந்த மருந்து வழங்கப்பட வேண்டும் என்று தெரிந்தால் தானே, செவிலியர்கள் முறையாக மருந்து வழங்குகிறார்களா? என்பதை நீங்கள் கண்காணிக்க முடியும் என்று பிரேமாவிடம் ஆணையம் தரப்பு வக்கீல்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். அதற்கு பிரேமா, ஜெயலலிதாவுக்கு இருந்த நோய் பற்றியோ, சிகிச்சை பற்றியோ தெரிந்து கொள்ளவில்லை என்றும், அதை தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டவில்லை என்றும் பதில் அளித்துள்ளார்.

    ஆணையத்துக்கு சந்தேகம்

    அவ்வாறு தெரிந்து கொள்ளாததற்கு, ஜெயலலிதா மீது தனிப்பட்ட வெறுப்பா? அல்லது அவரது கட்சி மீது வெறுப்பா? அல்லது அப்பல்லோ நிர்வாகத்தின் மீது வெறுப்பா என அடுத்தடுத்து ஆணைய வக்கீல்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். இவை எதுவும் காரணம் இல்லை என்றும், தெரிந்து கொள்ள விரும்பவில்லை என்றும் பதில் அளித்துள்ளார்.

    பிரேமாவின் பதில்கள் அனைத்தும் அவர் தானாகவே கூறிய பதில் தானா? அல்லது அவருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு அதன் அடிப்படையில் அளிக்கப்பட்ட பதிலா? என்ற சந்தேகம் ஆணையத்துக்கு எழுந்துள்ளது. இதைத்தொடர்ந்து நர்ஸ் பிரேமாவிடம் மீண்டும் விசாரணை நடத்த ஆணையம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    தமிழக உளவுத்துறை ஐ.ஜி. சத்தியமூர்த்தி, நமது எம்.ஜி.ஆர். பத்திரிகை அலுவலகத்தின் கணக்கு பிரிவில் அலுவலராக பணியாற்றி வந்த ஆனந்தன் ஆகியோரிடம் ஆணையம் இன்று விசாரணை நடத்துகிறது.

    ×