search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Summer heat"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கோடை வெயில் தொடங்கிய நிலையில் புதுவையில் வெயில் அளவு 95 டிகிரிக்குள்ளேயே இருந்து வந்தது
    • சிக்னலுக்காக காத்திருக்கும் வாகன ஓட்டிகள் வெயிலில் அவதிப்படாமல் இருக்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    தமிழகம், புதுவையில் கடந்த ஆண்டுகளில் இல்லாததைவிட தற்போது அதிக அளவில் வெயில் கொளுத்தி வருகிறது. இயல்பைவிட 9 டிகிரி வெப்பம் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    கோடை வெயில் தொடங்கிய நிலையில் புதுவையில் வெயில் அளவு 95 டிகிரிக்குள்ளேயே இருந்து வந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் 98.6 டிகிரி என பதிவானது. நேற்று 100.4 டிகிரியாக வெயில் பதிவானது. இதன்மூலம் இந்த ஆண்டு முதல்முறையாக 100 டிகிரியை வெயில் தாண்டி உள்ளது.

    வழக்கத்தை விட காலை 10 மணிக்கு மேல் பகல் முழுவதும் வெயில் சுட்டெரித்தது. நேற்று மே தின விடுமுறை என்பதால் பொதுமக்கள், தொழிலாளர்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கினார்கள். தவிர்க்க முடியாத காரணங்களுக்காக வெளியே வந்தவர்கள் தகிக்கும் வெயிலால் தவித்தனர்.

    இந்நிலையில் புதுச்சேரி பொதுப்பணித்துறை நிர்வாகம் எஸ்.வி. பட்டேல் சாலையில் உள்ள அதிதி சிக்னலில் தற்காலிக பச்சை நிற மேற்கூரையை அமைத்துள்ளது.

    சிக்னலுக்காக காத்திருக்கும் வாகன ஓட்டிகள் வெயிலில் அவதிப்படாமல் இருக்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இதேபோல் தமிழகத்தில் திருச்சி மாவட்டத்திலும் சிக்னலில் தற்காலிக பச்சை நிற மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் 100 மீட்டருக்கு 1 சிக்னல் இருப்பதால் வாகன ஓட்டிகள் சிக்னலில் நிற்க முடியாமல் தவித்து வந்தனர். சிக்னலில் தவிக்கும் வாகன ஓட்டிகளின் சிரமத்தை தவிர்க்க காவல் துறை சார்பில் தற்காலிக பச்சை நிற மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஏற்பட்டால் சிக்னலில் காத்திருக்கும் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    திருச்சி, புதுச்சேரியை தொடர்ந்து எல்லா மாவட்டங்களிலும் சிக்னலில் தற்காலிக பச்சை நிற மேற்கூரை அமைக்கப்படுமா? என்று வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    • கடும் வெயிலின் காரணமாக காமேசுக்கு ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட்டு திடீரென மயக்கம் போட்டு விழுந்துள்ளார்.
    • மும்பையில் இருந்து காமேசை ஆம்புலன்சில் கொண்டு வர ரூ.82 ஆயிரம் செலவானதாக கூறப்படுகிறது.

    திருக்கனூர்:

    புதுச்சேரியில் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு கடும் வெயில் சுட்டெரித்து வருகிறது. நேற்று 100 டிகிரியை தாண்டி வெயில் அடித்ததால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகிறார்கள். பலரும் வீட்டை விட்டு வெளியே வர முடியாத அளவிற்கு வெப்பம் அதிகரித்துள்ளது.

    புதுச்சேரி திருக்கனூர் புதுநகரை சேர்ந்தவர் முருகன் ராமசாமி. தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவரது இளைய மகன் காமேஷ் (வயது 23) மரைன் என்ஜினீயரிங் படித்துள்ளார். வேலை தேடி காமேஷ் கடந்த மாதம் மும்பைக்கு சென்றார்.

    அங்கு ஒரு அறையில் வாடகைக்கு தங்கி பல நிறுவனங்களுக்கு வெயிலில் சென்று அலைந்து திரிந்து வேலை தேடியுள்ளார். ஆனால் அவருக்கு சரியான வேலை கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் கடும் வெயிலின் காரணமாக காமேசுக்கு ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட்டு திடீரென மயக்கம் போட்டு விழுந்துள்ளார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மும்பை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவருக்கு போதுமான சிகிச்சை அளிக்கப்படாததால் முருகன் ராமசாமி காமேசை மும்பையில் இருந்து தனியார் ஆம்புலன்ஸ் மூலமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு வந்து மேல் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார்.

    மும்பையில் இருந்து காமேசை ஆம்புலன்சில் கொண்டு வர ரூ.82 ஆயிரம் செலவானதாக கூறப்படுகிறது.

    அந்த பணத்தையே முருகன் ராமசாமி கடன் வாங்கி செலுத்திய நிலையில் தற்போது தனியார் மருத்துவமனையில் பல லட்சம் செலவாகும் என்பதால் என்ன செய்வது என தெரியாமல் தவித்து வருகிறார்.

    வறுமையில் வாடும் முருகன் ராமசாமி தனது மகனின் உயிர் காக்க தன்னார்வலர்களும் புதுச்சேரி அரசும் உதவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

    திருக்கனூர் இளைஞர் மும்பையில் ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட்டு சென்னையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் திருக்கனூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • ஈரோடு, சேலத்தில் 108 டிகிரியையும் கடந்து இந்த ஆண்டில் இதுவரை இல்லாத வெப்ப அளவாக பதிவாகியுள்ளது.
    • தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் வெப்ப அலை வீசும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    புதுடெல்லி:

    தமிழகத்தில் கத்தரி வெயில் காலத்தில்தான் வெயிலின் தாக்கம் உக்கிரமாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு அப்படி இல்லை. கடந்த மார்ச் மாதம் இறுதியில் இருந்தே வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது.

    அதிலும் கடந்த மாத தொடக்கத்தில் இருந்தே வெயில் சுட்டெரித்து வருகிறது. குறிப்பாக சேலம், ஈரோடு, கரூர், தர்மபுரி, திருத்தணி, திருப்பத்தூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் 100 டிகிரியையும், சில நேரங்களில் 105 டிகிரி கடந்தும் வெயில் பதிவாகி வருகிறது.

    இதில் ஈரோடு, சேலத்தில் 108 டிகிரியையும் கடந்து இந்த ஆண்டில் இதுவரை இல்லாத வெப்ப அளவாக பதிவாகியுள்ளது. ஈரோட்டில் 11-வது நாளாக நேற்று 110 டிகிரி வெயில் கொளுத்தியது.

    இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழகத்திற்கு அடுத்த 5 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் வெப்ப அலை வீசும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    தெலுங்கானா, கர்நாடகா, ஆந்திரா, கேரளாவிலும் வெப்ப அலை வீச வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.

    • பொதுவாக கத்தரி வெயில் காலத்தில்தான் வெயிலின் தாக்கம் உக்கிரமாக இருக்கும்.
    • இந்த ஆண்டு கத்தரி வெயில் தொடங்குவதற்கு முன்னதாகவே, ஈரோட்டில் 109 டிகிரியை கடந்துவிட்டது.

    சென்னை:

    'அக்னி நட்சத்திரம்' என்று கூறப்படும் கத்தரி வெயில் காலம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் இருக்கும். வானிலை ஆய்வு மையத்தை பொறுத்தவரையில் கத்தரி வெயில் என்ற வார்த்தையை பயன்படுத்துவது கிடையாது. அவர்கள் மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை கோடை காலம் என்றே கூறி வருகின்றனர்.

    ஆனால் தமிழ் பஞ்சாங்கம் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் அக்னி நட்சத்திரம் (கத்தரி வெயில்) கணக்கிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டு கத்தரி வெயில் நாளை மறுதினம் (சனிக்கிழமை) தொடங்குகிறது.

    இந்த கத்தரி வெயில் வருகிற 28-ந்தேதி வரை அதாவது, 25 நாட்கள் தொடர்ந்து வாட்டி வதைக்க காத்திருக்கிறது.

    பொதுவாக கத்தரி வெயில் காலத்தில்தான் வெயிலின் தாக்கம் உக்கிரமாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு அப்படி இல்லை. கடந்த மார்ச் மாதம் இறுதியில் இருந்தே வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது.

    அதிலும் கடந்த மாத தொடக்கத்தில் இருந்தே வெயில் சுட்டெரித்து வருகிறது. குறிப்பாக சேலம், ஈரோடு, கரூர், தர்மபுரி, திருத்தணி, திருப்பத்தூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் 100 டிகிரியையும், சில நேரங்களில் 105 டிகிரி கடந்தும் வெயில் பதிவாகி வருகிறது.

    இதில் ஈரோடு, சேலத்தில் 108 டிகிரியையும் கடந்து இந்த ஆண்டில் இதுவரை இல்லாத வெப்ப அளவாக பதிவாகியுள்ளது. ஈரோட்டில் 11-வது நாளாக நேற்று 110 டிகிரி வெயில் கொளுத்தியது.

    இங்கே இப்படி என்றால், கோடை வாசஸ்தலமான ஊட்டி, கொடைக்கானல், வால்பாறையில்கூட வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. ஊட்டியில் இதுவரை இல்லாத வெப்ப அளவு பதிவாகி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    குளிருக்கேற்றாற்போல் உடையணிந்து செல்லும் நிலை அங்கு மாறி, வெயிலுக்கு குடைப்பிடித்தபடி மக்கள் செல்லும் காட்சியை கடந்த சில நாட்களாக பார்க்க முடிகிறது.

    இது ஒருபுறம் இருக்க வெயில் காலங்களில், கோடை மழை ஓரளவுக்கு வெப்பத்தை குறைக்கும். ஆனால் இந்த ஆண்டு கோடை மழை என்பது அரிதான விஷயமாகவே இருக்கிறது. தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் மட்டும் லேசான கோடை மழை தலைகாட்டத் தொடங்கியுள்ளது.

    இதே நிலை நீடித்தால், கத்தரி வெயிலின் தாக்கம் வழக்கத்தைவிட மேலும் அதிகரித்து காணப்படும் என்பதில் சந்தேகம் இல்லை. உதாரணமாக, கடந்த ஆண்டில் கத்தரி வெயில் காலத்தில் சென்னை மீனம்பாக்கத்தில் 109 டிகிரியை தொட்டதுதான் அதிகபட்ச வெயில் பதிவாக இருந்தது.

    ஆனால் இந்த ஆண்டு கத்தரி வெயில் தொடங்குவதற்கு முன்னதாகவே, ஈரோட்டில் 109 டிகிரியை கடந்துவிட்டது.

    அந்தவகையில் பார்க்கும் போது, இந்த ஆண்டு 110 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெயில் சுட்டெரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. கடந்த 2003-ம் ஆண்டு மே மாதத்தில் 119.48 டிகிரி பாரன்ஹீட் பதிவானதுதான் இதுவரை பதிவான உச்சபட்ச வெயில் அளவாக இருந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

    • வாட்டி வதைக்கும் வெப்ப அலை தாக்கம் ஒரு சில மாவட்டங்களில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகிறது.
    • வெப்ப அலையின் தாக்கத்தில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள மருத்துவர்கள் அறிவுரைகளை வழங்கி வருகின்றனர்.

    தமிழகத்தில் வரலாறு காணாத வகையில் வெயில் சுட்டெரித்து வருகிறது. குறிப்பாக வட தமிழக உள் மாவட்டங்களில் வெயில் வறுத்தெடுப்பதால் மக்கள் வெளியே வர முடியாமல் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். அதிகபட்சமாக 110 டிகிரி வரை வெப்பத்தின் தாக்கம் இருந்து வருகிறது.

    வாட்டி வதைக்கும் வெப்ப அலை தாக்கம் ஒரு சில மாவட்டங்களில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகிறது. வெப்ப அலையின் தாக்கத்தில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள மருத்துவர்கள் அறிவுரைகளை வழங்கி வருகின்றனர்.

    இந்நிலையில் கோடையை குளிர்விக்க மழை பெய்யும் என தனியார் வானிலை ஆர்வலர் செல்வகுமார் கூறியுள்ளார். மே முதல் வாரத்திற்கு பின் தமிழகத்தின் பல இடங்களில் இடியுடன் மழை பெய்யும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    • நாட்டிலேயே அதிக அளவு வெயில் தமிழகத்தில் பதிவாகி உள்ளது.
    • இன்றும், நாளையும், வெப்பநிலை அதிகமாக இருக்கும்.

    சென்னை:

    தமிழகத்தில் வரலாறு காணாத வகையில் வெயில் சுட்டெரித்து வருகிறது. குறிப்பாக வட தமிழக உள் மாவட்டங்களில் வெயில் வறுத்தெடுப்பதால் மக்கள் வெளியே வர முடியாமல் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். அதிகபட்சமாக 110 டிகிரி வரை வெப்பத்தின் தாக்கம் இருந்து வருகிறது.

    வரட்டி வதைக்கும வெப்ப அலை தாக்கம் ஒரு சில மாவட்டங்களில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகிறது.

    மேற்கு வங்காளம், ஒடிசா, பீகார், டெல்லி போன்ற மாநிலங்களிலும் வெயில் கொளுத்துகிறது. நாட்டிலேயே அதிக அளவு வெயில் தமிழகத்தில் பதிவாகி உள்ளது.

    வெப்பநிலை குறித்து தினமும் வானிலை ஆய்வாளர்கள் ஆராய்ச்சி செய்கின்றனர். தமிழக உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரையும் சமவெளி பகுதிகளின் ஒரு சில இடங் களில் அதிகபட்ச வெப்ப நிலை 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரையும் இயல்பை விட அதிகமாக இருக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. 

    இதுகுறித்து சென்னை மண்டல வானிலை துணை இயக்குனர் பாலச்சந்திரன் கூறுகையில், 'வட உள் மாவட்டங்களில் வெப்ப நிலை அதிகமாக உள்ளது. தற்போதைய ஆய்வின்படி 4-ந் தேதி வரை வெப்ப அலை தாக்கம் இருக்கும் என்றார்.

    தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறியதாவது:-

    இன்றும், நாளையும், வெப்பநிலை அதிகமாக இருக்கும். ஒரு சில மாவட்டங்களில் 110 டிகிரி பாரன்ஹீட் வரை பதிவாகும். 6-ந் தேதி வரை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். வேலூர், திருத்தணி ஆகிய பகுதிகளில் வெயில் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

    சென்னை மீனம்பாக்கம் 38, 39 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகி உள்ளது. இனி படிப்படியாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

    மழை பெய்யக்கூடிய பகுதிகளில் வெயிலின் தாக்கம் குறையும், மேற்கு தொடர்ச்சி மாவட்டங்கள், தென் தமிழகத்தில் கோடை மழை பெய்யும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

    • அரசியல் கட்சிகள் தண்ணீர் பந்தல் திறப்பதற்கு தேர்தல் நடத்தை விதிகளின் அடிப்படையில் எந்த ஆட்சேபனையும் இல்லை.
    • தண்ணீர் பந்தல் திறப்பின்போது தேர்தல் நடத்தை விதிகள் கண்டிப்பாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

    சென்னை:

    தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    அரசியல் கட்சிகள் தண்ணீர் பந்தல் திறப்பதற்கு தேர்தல் நடத்தை விதிகளின் அடிப்படையில் எந்த ஆட்சேபனையும் இல்லை. எந்த ஓர் அரசியல் கட்சியும் அல்லது வேட்பாளரும் இந்தச் செயல்பாட்டின் மூலமாக எவ்விதத்திலும் அரசியல் ரீதியாக பயன் பெறக்கூடாது.

    தண்ணீர் பந்தல் திறப்பின்போது தேர்தல் நடத்தை விதிகள் கண்டிப்பாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

     

    எனவே, தண்ணீர்பந்தல் திறக்க விரும்பும் எந்தவொரு அரசியல் கட்சியும், வேட்பாளரும், தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டு, சுகாதாரம், தூய்மையான குடிநீர் தொடர்பான அரசாங்கத்தின் பிற அறிவுறுத்தல்களைக் கடைப்பிடிக்க வேண்டும். அவர்களின் கோரிக்கையின் அடிப்படையிலும் தேர்தல் நடத்தை விதிகளைப் பின்பற்றியும் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் அனுமதிக்கலாம்.

    அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளும் அவரவருடைய எல்லைக்குள் தேர்தல் நடத்தை விதிகளைப் பின்பற்றி சரியான முறையில் தண்ணீர் பந்தல் செயல்பாடுகள் நடைபெறுகின்றன என்பதை உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் ஏப்ரல் 18-ந் தேதி 448.21 மில்லியன் யூனிட், ஏப்ரல் 26-ந் தேதி 451.79 மி.யூ என்ற அளவுகளில் மின்சார பயன்பாடு இருந்தது.
    • சீரான மின் விநியோகத்தை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் உறுதி செய்து வருகிறது.

    சென்னை:

    தமிழக மின் தேவை நேற்று முன் எப்போதும் இல்லாத வகையில் 20 ஆயிரத்து 701 மெகாவாட் என்ற உச்சத்தை எட்டியுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கடந்த ஏப்ரல் 26-ந் தேதி மாநிலத்தின் மின் தேவை 20 ஆயிரத்து 583 மெகா வாட்டாகவும், மின் பயன்பாடு 451.79 மில்லியன் யூனிட்டாகவும் பதிவாகி கடந்த ஆண்டின் உச்சத்தை கடந்தது.

    தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் மார்ச் 26-ந் தேதி 426.44 மி.யூ, ஏப்ரல் 2-ந் தேதி 430.13 மி.யூ, ஏப்ரல் 3-ந் தேதி 435.85 மி.யூ, ஏப்ரல் 4-ந் தேதி 440.89 மி.யூ, ஏப்ரல் 5-ந் தேதி 441.18 மி.யூ, ஏப்ரல் 17-ந் தேதி 442.74 மி.யூ, ஏப்ரல் 18-ந் தேதி 448.21 மில்லியன் யூனிட், ஏப்ரல் 26-ந் தேதி 451.79 மி.யூ என்ற அளவுகளில் மின்சார பயன்பாடு இருந்தது.

    அதேபோல ஏப்ரல் 3-ந் தேதி 19,413 மெகாவாட், ஏப்ரல் 4-ந் தேதி 19,415 மெ.வாட், ஏப்ரல் 5-ந் தேதி 19850 மெ.வாட், ஏப்ரல் 8-ந் தேதி 20,125 மெ.வாட், ஏப்ரல் 18-ந் தேதி 20,341 மெகாவாட் என்ற அளவுகளில் மின் தேவை பதிவானது. ஆனால் தற்போது இந்த அளவுகளையும் கடந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

    தொடர்ந்து சீரான மின் விநியோகத்தை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் உறுதி செய்து வருவதாகவும், அதன்படி நேற்று எப்போதும் இல்லாத வகையில் 20,701 மெகாவாட்டாகவும், மின்நுகர்வு 454.32 மி.யூனிட்களாகவும் உயர்ந்துள்ளதாக மின்சார வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். 

    • பருவ கால பழங்கள் மற்றும் நீர்ச்சத்து மிகுந்த காய்கறிகளை தவறாமல் தினந்தோறும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
    • புரதச்சத்து அதிகம் உள்ள உணவுகளை தவிர்க்கவும், பழைய உணவுகளை சாப்பிட வேண்டாம்.

    கோவை:

    தமிழகத்தில் தற்போது நிலவி வரும் அதிக வெப்பம் மற்றும் வெப்ப அலைகளில் இருந்து தற்காத்து கொள்ள பொது சுகாதார துறை பொதுமக்களுக்கு ஆலோசனைகளை வழங்கி உள்ளது. இதுதொடர்பாக கோவை மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி கூறியிருப்பதாவது:-

    தினமும் குறிப்பிட்ட கால இடைவெளியில் நிறைய தண்ணீர் பருக வேண்டும், தாகம் எடுத்தால் மட்டுமே தண்ணீர் பருக வேண்டும் என்ற நிலையில் இருக்கக் கூடாது. வெளியில் செல்லும் போதும், பயணத்தின் போதும் குடிநீரை தவறாமல் எடுத்துக் செல்லுங்கள். உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்கவும், உடல் வெப்பத்தினை தணிக்கக் கூடிய ஓ.ஆர்.எஸ்., எலுமிச்சை சாறு, இளநீர், மோர், பழச்சாறுகள், பருவ கால பழங்கள் மற்றும் நீர்ச்சத்து மிகுந்த காய்கறிகளை தவறாமல் தினந்தோறும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

    மெல்லிய தளர்வாக பருத்தியினால் ஆன வெளிர்நிற ஆடைகளை அணியலாம். மதிய நேரங்களில் வெளியில் செல்லும் போது குடை அல்லது தொப்பி போன்றவற்றை உபயோகப்படுத்தி நேரடி சூரிய வெப்பத்தில் இருந்து தற்காத்து கொள்ள வேண்டும். வெளியில் செல்லும் போது காலணிகளை தவறாமல் அணிய வேண்டும்.

    நல்ல காற்றோட்டம் மற்றும் குளிர்ந்த பகுதிகளில் இருக்க வேண்டும். நேரடி சூரிய ஒளி மற்றும் வெப்ப அலைகளை தடுக்கவும், பகலில் ஜன்னல்கள் மற்றும் திரைச்சீலைகளை மூடி வைக்கவும், குளிர்ந்த காற்றை உள்ளே அனுமதிக்க இரவில் அவற்றை திறக்கவும். வெளியில் செல்வதாக இருப்பின் பகல் நேரத்தினை தவிர்த்து காலை அல்லது மாலையில் உங்கள் பணிகளை திட்டமிடவும்.

    கடுமையான வெப்பத்தின் காரணமாக யாரும் எந்த நேரத்திலும் வெப்ப அழுத்தம் மற்றும் வெப்பம் தொடர்பான நோயால் பாதிக்கப்படலாம் என்பதால் கீழ்க்காணும் நபர்களுக்கு கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

    கைக்குழந்தைகள் மற்றும் இளம் குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், திறந்தவெளியில் வேலை செய்பவர்கள், மனநோய் உள்ளவர்கள், உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள், குறிப்பாக இதயநோய் அல்லது உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள். குளிர்ந்த காலநிலை பகுதியில் இருந்து வெப்பமான காலநிலை பகுதிக்கு வரும் நபர்கள் தங்களது உடல், வெப்பமான சூழலிற்கு பழகுவதற்கு ஒருவார காலம் அவகாசம் கொடுக்க வேண்டும் மற்றும் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.

    தனியாக வாழும் வயதானவர்கள் மற்றும் நோய் வாய்ப்பட்டவர்களின் உடல் நலம் தினசரி கண்காணிக்கப்பட வேண்டும். பகலில் கீழ்தளங்களில் இருக்க முயற்சி செய்யுங்கள். உடலை குளிர்விக்க மின்விசிறி, ஈரத்துணிகளை பயன்படுத்தவும்.

    வெப்பமான சூழலில் வெயிலில் செல்லும் காலஅளவு குறைத்துக் கொள்ள வேண்டும். கடுமையான வெயிலின் கீழ் கடுமையான உடல் செயல்பாடுகளை தவிர்க்க வேண்டும், கோடை கால கடுமையான வெப்பமான சூழ்நிலையில் பணிபுரிவோர் நேர இடைவெளி விட்டு பணிபுரிய வேண்டும்.

    பணிபுரியும் இடத்திற்கு அருகில் குளிர்ந்த குடிநீர் வழங்கப்பட வேண்டும், நீரோற்றமாக இருக்க ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் அல்லது அதற்கும் அதிகமாக அடிக்கடி தண்ணீரை உட்கொள்ள வேண்டும்.

    பணிச்சூழலில் வெப்பநிலையை ஈரப்பதம் மற்றும் சரியான காற்றோட்டம் ஆகியவற்றின் மூலம் கட்டுப்படுத்தலாம். தலைவலி மற்றும் தலைச்சுற்றல் போன்ற அறிகுறிகள் தோன்றினால் அந்த நபரை குளிர்ந்த சூழலுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். மேலும் போதுமான குடிநீர் வழங்கப்பட வேண்டும். தேவையான சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.

    குறிப்பாக மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெயிலில் செல்வதை தவிர்க்கவும், மதிய வேளைகளில் கடினமான செயல்களை தவிர்க்கவும்.

    மதியவேளையில் சமைப்பதை தவிர்க்க வேண்டும், சமையல் செய்யும் இடத்தை போதுமான அளவு காற்று வரும் பொருட்டு கதவுகள் மற்றும் ஜன்னல்களை திறக்கவும்

    மது, தேநீர், காபி மற்றும் குளிர்பானங்கள் அல்லது அதிகளவு சர்க்கரை கொண்ட பானங்கள் ஆகியவற்றை உட்கொள்வதை தவிர்க்கவும். இவை அதிக நீர்ச்சத்தை இழக்க வழிவகுக்கும். புரதச்சத்து அதிகம் உள்ள உணவுகளை தவிர்க்கவும், பழைய உணவுகளை சாப்பிட வேண்டாம். நிறுத்தப்பட்ட நான்கு சக்கர வாகனத்தில் குழந்தைகளையோ, செல்லப்பிராணிகளையோ உள்ளே வைத்து விட்டு செல்ல வேண்டாம். வாகனத்தின் உள்ளே வெப்பநிலை ஆபத்தானதாக இருக்கலாம். சூரிய ஒளியில் நீண்ட நேரம் நிறுத்தப்படும் வாகனங்களை குழந்தைகள் தொடுவதை தவிர்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • தமிழகத்தில் தற்போது கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது.
    • வெயிலில் இருந்து தப்பிக்க ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு உள்ளிட்ட இடங்களுக்கு நிறையே பேர் சுற்றுலா செல்கின்றனர்

    தமிழகத்தில் தற்போது கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் வெயிலில் இருந்து தப்பிக்க ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு உள்ளிட்ட இடங்களுக்கு சுற்றுலா செல்வோரின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

    இந்நிலையில், ஏற்காட்டில் இருந்து சேலம் நோக்கி வந்த தனியார் பஸ் மலைப்பாதையின் 11வது கொண்டை ஊசி வளைவில் திரும்பும்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரில் மோதி 50 அடி பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் ஒரு சிறுவன் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். 45க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

    காயமடைந்தவர்கள் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஏழை, எளிய, நடுத்தர குடும்பத்தினர் தற்போது ஏ.சி. வாங்க ஆர்வம் காட்டுகின்றனர்.
    • சென்னையில் புறநகர் பகுதிகளில் ஏ.சி. விற்பனை அமோகமாக நடக்கிறது.

    சென்னை:

    தமிழகத்தில் இந்த ஆண்டு கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. மார்ச் மாதத்தில் தொடங்கிய வெயிலின் தாக்கம் ஏப்ரல் மாதம் பல மாவட்டங்களில் அதிகரித்தது.

    108 டிகிரி வரை வெயில் கொளுத்துகிறது. மேலும் வட மாவட்டங்களில் வெப்ப அலை கடுமையாக தாக்கி வருகிறது. இதனால் மக்கள் அவதிப்படுகிறார்கள். இரவில் உஷ்ணம் அதிகமாகி புழுக்கம் ஏற்படுகிறது. இதனால் வீடுகளுக்குள் தூங்க முடியவில்லை. வீட்டிற்கு வெளியே காற்று இல்லாததால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனால் ஏ.சி. பயன்பாடு அதிகரித்துள்ளது.

    பெரும்பாலான குடும்பங்களில் புதிதாக ஏ.சி. வாங்கி பயன்படுத்த தொடங்கி விட்டனர். கடன் வசதி இருப்பதால் முன் தொகையை செலுத்தி ஏ.சி. வாங்குகின்றனர்.

    ஏழை, எளிய, நடுத்தர குடும்பத்தினர் தற்போது ஏ.சி. வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். வெயிலின் வெப்பத்தை தாங்க முடியாமல் இரவில் தூக்கம் இல்லாமல் குழந்தைகளின் வற்புறுத்தலின் பேரில் ஏ.சி. வாங்குவதற்கு குடும்பம் குடும்பமாக கடைகளுக்கு செல்கின்றனர்.

    சென்னை உள்ளிட்ட பெரிய நகரங்கள், கிராமங்கள் நகரப்பகுதியிலும் ஏ.சி. விற்பனை 'களை' கட்டி உள்ளது.

    ஒவ்வொரு நிறுவனமும் பல்வேறு வித சலுகைகளை கூறி ஏ.சி. விற்பனையில் ஈடுபட்டு வருகின்றன. சென்னையில் வீட்டு உபயோக

    கடைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. தீபாவளி, பொங்கல் பண்டிகைக்கு ஜவுளி வாங்கும் கூட்டம் போல தற்போது ஏ.சி. வாங்குவதற்கு கடைகளில் குவிகின்றனர்.

    சென்னையில் புறநகர் பகுதிகளில் ஏ.சி. விற்பனை அமோகமாக நடக்கிறது. வெயிலின் தாக்கம் ஜூன் மாதம் வரை இருக்கக்கூடும் என்பதால் அதனை சமாளிக்க ஏ.சி. வாங்குவதில் தீவிரம் காட்டுகின்றனர்.

    ஏ.சி. விற்பனை கடந்த ஆண்டைவிட 3 மடங்கு அதிகமாக இருப்பதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். ஏ.சி.யை வாங்கினாலும் அதனை வீடுகளில் வந்து பொறுத்துவதற்கு காலதாமதம் ஆகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாதிப்புக்காக நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்டோா் மருத்துவமனைகளை நாடுவதாகக் கூறப்படுகிறது.
    • அறிகுறிகளை அலட்சியப்படுத்தாமல் மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொண்டால் சிறுநீரகங்களை பாதுகாக்கலாம்.

    தமிழகத்தில் கோடை வெயில் உச்சத்தை எட்டி உள்ள நிலையில், பகல் நேரத்தில் வெளியில் செல்வதைத் தவிா்க்குமாறு சுகாதாரத்துறை தரப்பில் அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டு உள்ளன.

    இதனிடையே, சின்னம்மை, உயா் ரத்த அழுத்தம், நீா்ச்சத்து இழப்பு, சரும பாதிப்புகள் பரவலாக மக்களிடையே காணப்படுகின்றன. இந்நிலையில், நீா்க்கடுப்பு எனப்படும் சிறுநீா்ப் பாதை தொற்று அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.

    அத்தகைய பாதிப்புக்காக நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்டோா் மருத்துவமனைகளை நாடுவதாகக் கூறப்படுகிறது.


    இது குறித்து பொது நல மருத்துவ நிபுணா் டாக்டா் அ.ப.பரூக் அப்துல்லா கூறியதாவது:-

    உடலில் உள்ள ரத்தத்தை சுத்திகரித்து, அதில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றும் பணியை சிறுநீரகங்கள் செய்கின்றன. ஒவ்வொரு சிறுநீரகத்திலும் தலா பத்து லட்சம் நெப்ரான்கள் (ரத்த நுண் சுத்திகரிப்பான்கள்) உள்ளன. அங்கிருந்து உருவாகும் கழிவுகள் யூரிடா் எனப்படும் குழாய் கள் மூலம் சிறுநீா்ப்பையில் சேகரிக்கப்படுகின்றன.

    பின்னர் அவை யூரித்ரா எனப்படும் குழாய் வழியே சிறு நீராக வெளியேறுகிறது. இந்த கட்டமைப்பைத்தான் சிறுநீா்ப்பாதை என அழைக்கிறோம். இதில் ஏதேனும் கிருமித் தொற்று ஏற்படும் போது சிறுநீா் கழிப்பதில் எரிச்சல், வலி, சிரமங்கள் காணப்படும். இதை அலட்சி யப்படுத்தினால், கிருமிகள் சிறுநீரகங்களைத் தாக்கி பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.

    கோடை காலத்தில் உடலில் போதிய நீா்ச்சத்து இல்லாவிடில் சிறுநீா்ப் பாதையில் தொற்று ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

    சமீபகாலமாக அத்தகைய பிரச்சினைகளுடன் பலா் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக வருகின்றனா். அதிலும், பெண்களில் பலா் புறச்சூழ்நிலை காரணமாக சிறுநீரை உரிய நேரத்தில் வெளியேற்ற இயலாமல் இருப்பதால் அவா்களில் பெரும்பாலானோருக்கு கிருமித் தொற்று ஏற்படுகிறது.

    இதைத் தவிா்க்க நாளொன்றுக்கு குறைந்தது மூன்று முதல் நான்கு லிட்டா் வரை தண்ணீா், இளநீா், மோா், எலுமிச்சை சாறை அருந்தலாம். தனி நபா் சுகாதாரம் பேணுவது அவசியம். அதேபோன்று, சிறுநீா் கழிக்கும் இடத்தையும், கைகளையும் சானிடைசா் கொண்டு சுத்தம் செய்தால் கிருமித் தொற்று வராமல் தடுக்கலாம்.

    அறிகுறிகளை அலட்சியப்படுத்தாமல் மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொண்டால் சிறுநீரகங்களை பாதுகாக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×