search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது
    X

    கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது

    • சாரல் மழை பெய்ததையடுத்து சூரிய உதயத்தை பார்க்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
    • சுற்றுலா தலங்களில் கூட்டம் அலைமோதியதையடுத்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    நாகர்கோவில்:

    கோடை விடுமுறை முடிந்து வருகிற 6-ந்தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. கோடை விடுமுறை நிறைவடைவதற்கு இன்னும் 8 நாட்களே உள்ள நிலையில் குமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் சூரிய உதயத்தை காண்பதற்கும், சூரியன் மறைவதை பார்ப்பதற்கும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் படை எடுத்த வண்ணம் உள்ளனர்.

    கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வந்த நிலையில் சூரிய உதயம் மற்றும் மறைவதை பார்க்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். இந்த நிலையில் இன்று காலையில் சூரிய உதயத்தை பார்ப்பதற்கு சுற்றுலா பயணிகள் ஏராளமான ஒரு கடற்கரையில் குவிந்திருந்தனர்.

    ஆனால் இன்றும் சாரல் மழை பெய்ததையடுத்து சூரிய உதயத்தை பார்க்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து விவேகானந்தர் பாறைக்கு செல்வதற்கு சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு பல மணி நேரம் காத்திருந்து சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் பாறையை கண்டுகளிக்க சென்றனர். சுற்றுலா பயணிகள் கூட்டம் அலை மோதியதையடுத்து கன்னியாகுமரியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது. கன்னியாகுமரி மட்டுமின்றி திற்பரப்பு அருவியிலும் இன்று சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர். குமரி மாவட்டம் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் திற்பரப்பு அருவிக்கு வந்திருந்தனர். அவர்கள் குடும்பத்தோடு ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர். பத்மநாபபுரம் அரண்மனையிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. சொத்தவிளை பீச், முட்டம் பீச், சங்குத்துறை பீச், வட்டக்கோட்டை பீச் உள்பட மாவட்டத்திலுள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் இன்று காலை முதலே ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து இருந்தனர். சுற்றுலா தலங்களில் கூட்டம் அலைமோதியதையடுத்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    ஏற்கனவே கடற்கரை கிராமங்களில் கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் என்று எச்சரிக்கை விடப்பட்ட நிலையில் சுற்றுலா பயணிகள் கடற்கரை பகுதிக்கு செல்வதை தடுக்கும் வகையில் போலீசார் அந்த பகுதிகளில் ரோந்து பணியிலும் ஈடுபட்டனர்.

    Next Story
    ×