திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

மழையின் அளவு மாவட்டத்தில் படிப்படியாக குறைந்தது.பேச்சிப்பாறை அணைக்கு 625 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி
Published on

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் பேச்சிப்பாறை அணையில் இருந்து மதகுகள் வழியாகவும், உபரியாகவும் தண்ணீர் திறக்கப்பட்டது. இதன்மூலம் ஆறுகள், கால்வாய்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. திற்பரப்பு அருவியிலும் அதிக அளவு தண்ணீர் கொட்டியதால் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் மழையின் அளவு மாவட்டத்தில் படிப்படியாக குறைந்தது. நேற்று காலை நாகர்கோவில், இரணியல் மற்றும் மலையோர பகுதிகளில் ஒரு சில இடங்களில் தூறலாகவே மழை இருந்தது. அதிக பட்சமாக முள்ளங்கினா விளையில் 16.4 மில்லி மீட்டர் மழை பெய்தது. அடையாமடைல் 6.2, குருந்தன்கோட்டில் 5.2, பெருஞ்சாணியில் 3.4 மில்லிமீட்டர் மழை பெய்ததாக பதிவாகி உள்ளது. இதனால் அணைகளுக்கு வரும் நீர்வரத்தும் குறைந்துள்ளது.

இதன் காரணமாக திற்பரப்பு அருவியில் 8 நாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் இன்று குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

பேச்சிப்பாறை அணைக்கு 625 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றம் நிறுத்தப்பட்டது. 48 அடி கொள்ளளவு கொண்ட அணையில் தற்போது 44.97 அடி நீர்மட்டம் உள்ளது. மதகுகள் வழியாக 636 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையில் 58.25 அடியாக நீர்மட்டம் உள்ளது. அணைக்கு 434 கன அடி தண்ணீர் வரத்து உள்ளது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் வழங்கும் முக்கடல் அணையின் நீர்மட்டம் 12.4 அடியாக உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com