search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "New Year 2024"

    • இந்தியா முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
    • ஸ்ரீநகரில் உள்ள லால் சவுக்கில் இதுவரை இல்லாத வகையில் புத்தாண்டை வரவேற்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    2024 புத்தாண்டு தினம் இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஜம்மு-காஷ்மீர் ஸ்ரீநகரில் உள்ள லால் சவுக்கில் புத்தாண்டு கலைகட்டியுள்ளது. மியூசிக் நிகழ்ச்சி அமைத்து கொண்டாடியுள்ளனர். இதுவரை இதுபோன்று புத்தாண்டு கொண்டாட்டத்தை பார்த்தது இல்லை என உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர்.

    ஜம்மு-காஷ்மீரின் சுற்றுலாத்துறை சார்பில் மியூசிக் நிகழ்ச்சி ஸ்ரீநகரின் காந்தா கர் (மணிக்கூண்டு) பகுதியில் நடத்தப்பட்டது. நூற்றுக்கணக்கான மக்கள் மணிக்கூண்டு பகுதியில் ஒன்று கூடி புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர்.

    ஸ்ரீநகரின் மணிக்கூண்டு பகுதியில் உள்ளூர்வாசிகள் மற்றும் சுற்றுலா வந்தவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    முகமது யாசீன் என்பவர் "புத்தாண்டு கொண்டாட்டத்தை பார்க்க நான் இங்கே வந்தேன். இதுபோன்ற கொண்டாட்டத்தை இதற்கு முன்னதாக நான் பார்த்ததே இல்லை. அதுவும் லால் சவுக் பகுதியில் இதுபோன்று பார்த்தது கிடையாது. நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்" என்றார்.

    ஜம்மு-காஷ்மீரில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும். ஆனால், லால் சவுக் பகுதியில் நடைபெறுவது இதுதான் முதல் முறை. காஷ்மீர் அமைதியாக இருக்க வேண்டும். அவர்கள் அமைதியை விரும்புகிறார்கள். இதெல்லாம் அங்குள்ள மக்கள் எப்படி எடுத்துக்கொள்கிறார்கள் என்பதை சார்ந்துதான் உள்ளது. லால் சவுக் பகுதிகள் மணப்பெண் போன்று அலங்கரிக்கப்பட்டுள்ளது என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    சுற்றுலா பயணிகள் கூட ஸ்ரீநகர் மணிக்கூண்டு பகுதியில் இதுபோன்று நிகழ்ச்சி நடைபெறுகிறதா... என ஆச்சர்யத்துடன் பார்த்தனர்.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவை ரத்து செய்த மத்திய அரசு, அங்குள்ள மக்களின் அமைதிக்காகவும், சுற்றுலாவை மேம்படுத்தவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

    • புத்தாண்டை வாணவேடிக்கையுடன் மகிழ்ச்சியாக மக்கள் வரவேற்றனர்.
    • வழிபாட்டு தலங்களில் சிறப்பு பூஜை, மக்கள் தரிசனம். கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை.

    உலகம் முழுவதும் இன்று புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு நாடுகளில் புத்தாண்டு பிறந்து மக்கள் கொண்டாடி வருகின்றனர். அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இனிமேல்தான் புத்தாண்டு பிறக்க இருக்கிறது. அந்நாட்டு மக்கள் புத்தாண்டை வரவேற்க தயாராகி வருகின்றனர்.

    புத்தாண்டையொட்டி தலைவர்கள் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் மோடி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தன்னுடைய புத்தாண்டு வாழ்த்தில் "2024-ம் ஆண்டு அனைவருக்கும் சிறப்பானதாக அமையட்டும் எனத் தெரிவித்துள்ளார்.

    புத்தாண்டையொட்டி இந்தியாவில் உள்ள வழிபாட்டு தலங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் அதிகாலையில் இருந்து வழிபாட்டு தலங்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    புத்தாண்டையொட்டி நேற்றிரவு கிறிஸ்தவ தேவாலங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • உறவுகளோடு தொடர்பு கொண்டு உறவுகளை வளப்படுத்துவோம்.
    • கடந்தவைகள் எல்லாம் கடந்து போனதாகவே இருக்கட்டும்.

    இப்புத்தாண்டில் இனிதான வாழ்வு நமது ஆகட்டும். பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்றாலும் இன்றைய சூழலில் ஒருவர் எந்த அளவுக்கு முழுமையாக உடல் மன ஆரோக்கியத்துடன் இருக்கிறார் என்பதே மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. எந்தவித நோய்க்கும் ஆளாகாமல் இருக்கும் நல்ல ஆரோக்கியமே ஆனந்தமான வாழ்க்கையை நல்கும் எனலாம். எனவே அவ்வப்போது தேவைப்படும் மருத்துவ பரிசோதனைகளை செய்து கொள்வதும், சிறிய உடல் உபாதை என்றாலும் தகுந்த மருத்துவ ஆலோசனை பெறுவதும், நல்ல மனநலத்துடன் மகிழ்வாக தினப்படி வாழ்வை அமைத்துக் கொள்வதும் புத்தாண்டை மேலும் இனிதாக்கும்.

    நம் வாழ்வில் நமக்கு கிடைத்திருக்கும் நம் குடும்ப உறுப்பினர்கள் நண்பர்கள் நமது வணிக உறவுகள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை இந்த தருணத்தில் தெரிவிப்போம். இது நம் சூழலை மேம்படுத்தும்

    உணர்ச்சி மேலாண்மை தற்போது மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. எந்த சூழலிலும் பதட்டப்படாமல், சினம் கொள்ளாமல், நிதானமாக செயல்படுவோம். நிரந்தர வெற்றியை நமதாக்குவோம்.

    இந்த புத்தாண்டில் நாம் அடைய விரும்பும் அனைத்து லட்சியங்களையும் அடைந்து விட்டதாக நம் மனக்கண் முன் கொண்டு வருவோம். இது நமது ஆழ்மனதின் அற்புத ஆற்றலின் மூலம் நிஜமாகவே நாம் விரும்பியவை நியாயமாக நமக்கு கிடைக்க வழி வகுக்கும்.

    இன்றைய உலகம் தகவல்களால் நிறைந்திருக்கிறது. தகவல்கள் எல்லா வகையிலும் நம்மை சூழ்ந்து நம் கவனத்தை ஈர்க்கின்றது. நமக்கு எது வேண்டிய தகவல் எது வேண்டாத தகவல் என்பதை அறிந்து நமது நேரம் விரயமாவதை தவிர்க்க வேண்டும். நேரம்தான் உண்மையான செல்வம் இதை சரியாக புரிந்து செயல்படுவோம்.

    நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீட்டுக்குச் செல்வது இந்த தலைமுறையில் மிகவும் குறைந்து விட்டது.இனி நேரடியாக அவ்வப்போது நண்பர்களோடு, உறவுகளோடு தொடர்பு கொண்டு உறவுகளை வளப்படுத்துவோம்.

    ஸ்மார்ட் வாட்ச்சும் எலக்ட்ரிக்கல் வாகனமும் வாழ்க்கையை பெரிய அளவிற்கு தொழில்நுட்பத்தில் மாற்றம் செய்துள்ளது. புதிய தொழில்நுட்பங்களை கற்போம். நம் வாழ்வின் மேம்பாட்டிற்கு தக்க வகையில் அதை பயன்படுத்துவோம்.

    நம் எல்லோர் முன்னும் வாய்ப்புகள் வரிசை கட்டி சென்று கொண்டிருக்கிறது அதை சரியாக பயன்படுத்திக் கொண்டு வாழ்வை வளமாக்கிக் கொள்வது நம் கையில் தான் உள்ளது. தளராது முயற்சி திட்டமிட்ட கடினமான உழைப்பு எப்போதுமே வெற்றியை நமதாக்கும் என்பதில் ஐயமில்லை.

    ஒரு செயலை செய்ய முடிவு செய்த பின்னர் அதில் காலம் தாழ்த்திக் கொண்டே இருக்கக் கூடாது. நன்று என தெரிந்து விட்டால் அதை இன்றே செய்யும் குணம் வேண்டும். நேரத்தை விரயம் செய்வதை நிறுத்துவது தான் பலருக்கு செயல் திறனை மேம்படுத்தி வெற்றி தந்திருக்கிறது.

    நமக்கு எப்பொழுதும் ஆக்கபூர்வமான பழக்க வழக்கங்கள் இருக்க வேண்டும். முடிந்தால் தினமும் இரவு படுக்கைக்கு செல்லும் முன் 30 நிமிடம் ஒதுக்கி நாம் தினப்படி செய்த வேலைகளை பட்டியலிட்டு அவைகளில் இருக்கின்ற குறை நிறைகளை குறித்து வைத்துக்கொண்டு நாளைய நிகழ்ச்சிகளை இன்றைக்கு திட்டமிட வேண்டும். இது நேர மேலாண்மைக்கு பெரிதும் உதவும்.

    உங்களுடைய அனைத்து எண்ணங்களையும் யோசனைகளையும் பதிவு செய்யுங்கள். நீங்கள் ஒரு செயலை செய்யும் பொழுது ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவை ஐந்து நிமிடம் ஓய்வெடுத்து பின் வேலையை தொடருங்கள். உங்கள் வேலையை சிதறடிக்க கூடிய அனைத்தையும் தெளிவாக ஒதுக்க கற்றுக் கொள்ளுங்கள். உங்கள் மேஜை எப்பொழுதும் நீங்கள் என்ன வேலை செய்யப் போகிறீர்களோ அது தொடர்பான பொருட்கள் மட்டும் இருக்கட்டும். எக்கச்சக்கமான பொருட்களால் நிரப்பாதீர்கள்.

    ஒரு விஷயத்தை புதிதாக செய்யும் பொழுது அதில் கற்றுக்கொள்ள நிறைய இருக்கும். அப்போது ஒரு நிபுணர் போல செயல்படுங்கள். நிபுணர்கள் எப்பொழுதும் ஒரு விஷயத்தை கற்றுக் கொள்ளும் பொழுது முழு கவனத்தை அதில் மட்டுமே செலுத்துவார்கள்.

    மின்னஞ்சலை பார்ப்பது வாட்ஸ் அப் குறுஞ்செய்திகளுக்கு பதில் போடுவது என்பதற்கு ஒரு நாளில் இரண்டு முறை மட்டுமே குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி செய்யுங்கள். புதிய பொருட்கள் வாங்கும் போது அது உங்களுக்கு உண்மையிலேயே தேவையா என்பதை பலமுறை உங்களுக்குள்ளே நீங்களே கேள்வி எழுப்பு பின் முடிவுக்கு வாருங்கள்.

    சில நாட்கள் உங்களுக்கு மிக சிக்கலாகவும் மனசோர்வும் தந்தால் வேலை வலு மிகுதியாக இருந்தால் உங்களை நீங்களே புத்துணர்ச்சி பெற முயற்சி செய்யுங்கள்.

    கடந்தவைகள் எல்லாம் கடந்து போனதாகவே இருக்கட்டும். அவை பற்றிய வருத்தங்களும் குற்ற உணர்வுகளும், சுமையாக நமக்கு இருக்க வேண்டாம். அனைத்தையும் விட்டொழிப்போம். வருங்காலம் எப்போதும் பிரகாசமாகவே இருக்கிறது. எனவே அதைப் பற்றிய பயம் வேண்டாம். நிகழ்காலத்தை நிஜமாகவே முழுமையாக நாம் அனுபவித்து பயன்படுத்திக் கொண்டால் எப்போதும் மகிழ்வான வாழ்வே நமக்கு சொந்தமாய் இருக்கும்.

    • வேளாங்கண்ணி, சாந்தோம் தேவாலங்களில் சிறப்பு பிரார்த்தனை.
    • வடபழனி முருகன் கோவிலில் அதிகாலை சிறப்பு பூஜை.

    2024 ஆங்கிலப்புதாண்டு பிறந்துள்ளது. ஆங்கில புத்தாண்டை வரவேற்க சென்னையில் பொதுமக்கள் நள்ளிரவு பொது இடங்களில் கூடினர். சென்னை மெரினாவில் ஆயிரக்கணக்கானோர் கூடினர். அதேபோல் புதுச்சேரியிலும் சுற்றுலாப் பயணிகள் ஆயிரக்கணக்கானோர் கூடினர்.

    நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டை வரவேற்றனர். அப்போது ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்தனர். பல்வேறு இடங்களில் வாணவேடிக்கை நிகழ்த்தி புத்தாண்டை வரவேற்றனர். Happy New Year என கோசமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    புத்தாண்டையொட்டி நாகப்பட்டினம் வேளாங்கண்ணி, சென்னை சாந்தோம் உள்ளிட்ட தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. கோவை, ஈரோடு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள தேவாலங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. ஈரோட்டில் தேவாலயத்திற்கு முன்பு ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்து புத்தாண்டை வரவேற்றனர்.

    புத்தாண்டையொட்டி இந்து கோவில்களில் இன்று அதிகாலை சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பக்தர்கள் அதிகாலை முதல் சாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

    சென்னை வடபழனி முருகன் கோவிலில் இன்று அதிகாலை சிறப்பு பூஜை செய்யப்பட்டது. உற்சவருக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதிகாலை முதல் அவர்கள் வரிசையில் நின்று தரிசனம் செய்து வருகிறார்கள்.

    கோவை புளியங்குடி முந்தி விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்து வருகிறார்கள்.

    புதுச்சேரி மணக்குள விநாயர் கோவிலில் விநாயகருக்கு தங்கக் கவசம் அணிவித்து சிறப்பு பூஜை நடைபெற்றது.

    புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். புதுச்சேரியில் கடற்கரையில் நள்ளிரவு 1.30 மணிக்குப் பிறகும் சுற்றுலா பயணிகள் கலைந்து செல்ல மறுத்தனர். இதனால் போலீசார் லேசான தடியடி நடத்தினர். அதன்பின் அவர்கள் கலைந்து சென்றனர்.

    • மெரினா கடற்கரையில் நள்ளிரவு 1 மணி வரை பொது மக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
    • சென்னை கடற்கரை சாலையில் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    ஆங்கில புத்தாண்டு 2024 நள்ளிரவு 12 மணிக்கு பிறந்துள்ளது. இதையொட்டி நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் சிறப்பு கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை பரிமாறி மகிழ்ந்தனர்.

    இதை முன்னிட்டு சென்னையில் புத்தாண்டுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இரவு 8 மணிக்கு மேல் கடற்கரைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மெரினா கடற்கரையில் நள்ளிரவு 1 மணி வரை பொது மக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

    சென்னை கடற்கரை சாலையில் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மேலும், நட்சத்திர ஹோட்டல்கள், மால்களில் நடைபெற்ற கொண்டாட்ட நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதேபோல் கோவை, மதுரை, கன்னியாகுமரி உள்பட பல்வேறு பகுதிகளில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றது.

    2024 புத்தாண்டு பிறந்ததையொட்டி கோவில்கள், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    அனைத்து கிறிஸ்தவ சபைகளிலும் இரவு 10 மணி முதல் புத்தாண்டு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் ஒருவருக்கு ஒருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

    • மெரினா கடற்கரையில் நள்ளிரவு 1 மணி வரை பொது மக்களுக்கு அனுமதி.
    • சென்னை கடற்கரை சாலையில் வாகன போக்குவரத்துக்கு தடை.

    புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக சென்னை கடற்கரையில் பொது மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். குறிப்பாக, மெரினா, எலியட்ஸ் உள்ளிட்ட கடற்கரையில் புத்தாண்டை கொண்டாடுவதற்காக பொது மக்களின் வருகை அதிகரித்து வருகிறது.

    மெரினா கடற்கரையில் நள்ளிரவு 1 மணி வரை பொது மக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டை கொண்டாட பொது மக்கள் கூட்டம் கூட்டமாக கடற்கரைகளுக்கு திரண்டுள்ளனர்.

    சென்னை கடற்கரை சாலையில் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடற்கரை சாலைக்குள் நுழையும் அனைவரையும் காவல்துறையினர் சோதனை செய்கின்றனர்

    கடற்கரை சாலையில் பாதுகாப்பு பணியில் நூற்றுக் கணக்கில் குவிக்கப்பட்டுள்ளனர்.நகரம் முழுவதும் போக்குவரத்து நெரிசல்- சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    கடற்கரை சாலையில் சுற்றுலா துறை சார்பில் கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    நாளை மாலை 6 மணி வரை போர் நினைவிடம் முதல் கலங்கரை விளக்கம் வரை சாலைகள் மூடப்பட்டுள்ளது. பெசன்ட் நகர் கடற்கரையில் ஆறாவது அவென்யூ சாலையும் மூடப்பட்டது.

    • ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக மக்களுக்கு ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
    • 2023ஆம் ஆண்டு விண்வெளி ஆராய்ச்சியில் சாதனைகளை நிகழ்த்தியது.

    இந்தியாவில் 2024 புத்தாண்டு இன்னும் சற்று நேரத்தில் பிறக்க இருக்கிறது. இதை முன்னிட்டு, நாட்டின் முக்கிய தலைவர்கள் பொது மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக மக்களுக்கு ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். 

    இதுதொடர்பாக, ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    2024 புத்தாண்டை முன்னிட்டு, அனைவருக்கும் எனது அன்பான நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    2023ஆம் ஆண்டு விண்வெளி ஆராய்ச்சியில் சாதனைகளை நிகழ்த்தியது. ஜி20 தலைமையில் நீங்காத தாக்கத்தை ஏற்படுத்தியது. விளையாட்டுத் துறையில் நமது வீரர், வீராங்கனைகள் சிறப்பாக பரிணமித்தது என சுயசார்புபாரதத்தின் வலுவான அடித்தளத்தை அமைப்பதற்கான நமது தேசிய உறுதிப்பாட்டின் சான்றாக விளங்கியது.

    சட்டசீர்திருத்தங்கள் காலனித்துவ பாரம்பரியத்தை நிராகரித்ததுடன், நமது தேசத்தின் ஜனநாயக நெறிமுறைகளை மேலும் ஆழப்படுத்தியுள்ளன.

    உச்சநீதிமன்றம், ஜம்மு & காஷ்மீரின் முழுமையான ஒருங்கிணைப்பு தொடர்பாக வழங்கிய தனது வரலாற்றுபூர்வ தீர்ப்பின் மூலம் "ஒரேபாரதம் உன்னதபாரதம்" என்ற உணர்வை மேலும் வலுப்படுத்தியது.

    நமது இளையசக்தி அனைத்து துறைகளிலும் தங்கள் திறமை மற்றும் தொழில்முனைவு மேதைத்துவத்தை நிரூபித்து வருகிறது. நமது புராதன சனாதன தரிசனத்தில் ஆழமாக வேரூன்றிய நமது தெளிவான கலாசாரஆன்மிகம், உலகை ஒரே குடும்பம் ஆக ஒருங்கிணைத்துள்ளது. நாம் நமது சமூக ஒற்றுமையை வலுப்படுத்தி, 'ஒரேதேசம்' ஆக கடுமையான சவால்களை முறியடித்து முன்னேறினோம்.

    அதே நம்பிக்கை, அர்ப்பணிப்பு, கூட்டுறுதி மற்றும் ஆற்றலுடனும் நாம் 2024-ல் நுழைகிறோம். நமது முயற்சிகளில் சிறந்து விளங்கவும், நமது தேசத்தின் வளர்ச்சிப் பயணத்திற்கு வேகம் சேர்ப்பதற்காகவும், 2047-க்குள் வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவதில் இணைந்து செயல்படுவதற்கான நமது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துவோம்.

    'புத்தாண்டு 2024' நம் அனைவருக்கும் மேலும் மகிழ்ச்சி, நல்லிணக்கம், நல்ல ஆரோக்கியம் மற்றும் வெற்றியைக் கொடுக்கட்டும்- ஆளுநர் ரவி.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    • நீங்கள் அடைய விரும்பும் இலக்குகளைச் சாதிக்க புத்தாண்டு ஒரு நல்ல தொடக்கமாக இருக்கும்.
    • தீர்மானங்கள் நமக்கு தகுந்தபடி உண்மையாகவும், சாதிக்க முடிந்த அளவில் இருக்க வேண்டும்.

    புத்தாண்டு 2024க்கு இன்னும் சில நாட்களே உள்ளது. புத்தாண்டு நெருங்கும்போது, உங்கள் சக நண்பர்கள் இந்த கேள்வியை உங்களிடம் கேட்கும் போது, "உங்கள் புத்தாண்டு உறுதிமொழி என்ன?" எப்பொழுதும் உறுதிமொழி அல்லது தீர்மானங்களைக் கடைப்பிடிக்கத் தவறிய நம்மில் சிலருக்கு இது எவ்வளவு மோசமாகத் தோன்றினாலும், நீங்கள் அடைய விரும்பும் இலக்குகளைச் சாதிக்க புத்தாண்டு ஒரு நல்ல தொடக்கமாக இருக்கும்.

    அனைவரும் புதிய ஒரு தொடக்கத்தை நோக்கியே இருக்கிறோம் என்பதற்கு புத்தாண்டு தீர்மானங்கள் சரியான எடுத்துக்காட்டு. தீர்மானங்கள் நமக்கு தகுந்தபடி உண்மையாகவும், சாதிக்க முடிந்த அளவில் இருக்க வேண்டும். அவற்றை சாதிக்க தனியான நேரங்களை ஒதுக்கவும் வேண்டும்.

    தீர்மானங்களை நிறைவேற்றுவதை மன அழுத்தமாக உணரக்கூடாது, மாறாக உங்களை மேம்படுத்துவதற்கான வாய்ப்பாக அமைத்துக்கொள்ள வேண்டும். உங்கள் தீர்மானங்கள் சுய வளர்ச்சியின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும்.

    தற்போதைய காலங்களில், ரெசல்யூஷன்கள் பெரும்பாலும் ஒரு நபர் தனக்கு அளிக்கும் வாக்குறுதிகளாகவே உள்ளது. கிறிஸ்தவர்களிடையே பாரம்பரியமாக இந்த நடைமுறை தொடங்கியது. இருப்பினும், உலகெங்கிலும் உள்ள மக்கள் புத்தாண்டு தீர்மானங்களை மேற்கொண்டு வருகிறார்கள். எனவே, இந்த நேரத்தில் உங்கள் புத்தாண்டு தீர்மானங்களை நீங்கள் கடைப்பிடிக்க விரும்பினால், கவனத்தில் கொள்ள வேண்டியவற்றை பார்க்கலாம். 

    யதார்த்தமான தீர்மானங்களை அமைக்கவும்:

    நம்மில் பெரும்பாலோர் 'எடையைக் குறைத்தல் ,புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வது' போன்ற பெரிய மற்றும் அடிக்கடி தெளிவற்ற இலக்குகளைத் தேர்ந்தெடுக்க விரும்புகிறோம், உங்கள் இலக்குகளைப் பற்றி குறிப்பிட்ட மற்றும் யதார்த்தமாக இருப்பது மிகவும் நல்லது. "அதிக லட்சியம் அல்லது தெளிவற்ற இலக்குகளை அமைப்பதை தவிர்க்கவும்".

    உங்கள் தீர்மானங்களை சிறிய, மேலும் நிர்வகிக்கக்கூடிய பணிகளாகப் பிரிப்பதன் மூலம் இதைச் செய்யலாம், இது குறைவான, மிகப்பெரியதாக அடையக்கூடியதாக இருக்கும். உதாரணமாக, "இந்த ஆண்டு எனது வேலையில் நான் மகிழ்ச்சியாக இருப்பேன்" என்று வெறுமனே சொல்வதை விட, உங்கள் பணித் திறனைக் கண்காணிக்க ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டிய பட்டியல்களை உருவாக்குதல் முக்கியம்.

    செயல் திட்டத்தை உருவாக்குங்கள்: 

    செயல்திட்டத்தை உருவாக்குவது உறுதியுடன் இருக்கவும், உங்கள் முன்னேற்றத்தை அளவிடவும் உதவும். மேலும், இலக்கு அமைக்கும் பயன்பாடுகளை வைத்திருக்க வேண்டும். "குறிப்பிட்ட மைல் கற்களை அடைவதற்கான தேதிகளை நிர்ணயிப்பதன் மூலம் நீங்கள் இதைச் செய்யலாம்."நான் 5 கிலோ குறைப்பேன்" என்று கூறுவதற்குப் பதிலாக, "நான் 2 வாரங்களுக்குள் ஐந்து கிலோ குறைப்பேன்" என்று சொல்லுவது அதிக அளவில் வித்தியாசம் தரும். நேரத்தை மிகவும் யதார்த்தமாக அமைக்க வேண்டும், இல்லையென்றால் மிக விரைவில் உங்கள் தீர்மானம் தோல்வியடையும்.

    ஒவ்வொரு தீர்மானத்திற்கும் விரிவான செயல் திட்டத்தை உருவாக்கவும். "உங்கள் இலக்குகளை அடைய நீங்கள் எடுக்க வேண்டிய படிகளைத் தீர்மானிக்கவும்." எதிர்காலத் தடைகளை முன்னறிந்து, அவற்றைச் சமாளிப்பதற்கான திட்டங்களை உருவாக்குவதும் முக்கியமானது.

    'ஏன்' என்பதை நினைவில் கொள்ளுங்கள்:

    நீங்கள் உங்கள் தீர்மானங்களைத் தொடரும்போது, நீங்கள் பின்னடைவைச் சந்திக்க நேரிடலாம் மற்றும் உங்களின் உந்துதல் குறைவது போல் உணரலாம். இதுபோன்ற சமயங்களில், இந்த இலக்கை நீங்கள் ஏன் தேர்ந்தெடுத்தீர்கள் என்பதையும், நீங்கள் விரும்பும் ஆதாயங்களில் கவனம் செலுத்துவதையும் உங்களுக்கு நினைவூட்டிக் கொள்வது அவசியம். ஒரு இலக்கு முக்கியமானதாக இருப்பதற்கான காரணங்கள், தொடர்ந்து செல்வதும், செல்வதற்கான உந்துதலின் நிலை தான் ஆதாரம். 

    சுய நம்பிக்கையை ஊக்குவிக்கவும்:

    தீர்மானங்களை எடுப்பதற்கும் அவற்றைத் தக்கவைத்துக் கொள்வதற்கும் ஒருவரின் சொந்தத் திறனை மாற்றுவதற்கான வலுவான நம்பிக்கை தேவை. "உங்களுக்கு நல்ல மற்றும் கெட்ட நாட்கள் இருக்கும், சில சமயங்களில் நீங்கள் பின்தங்கியிருப்பதைப் போல உணருவீர்கள்." இதுபோன்ற சமயங்களில், உங்கள் உத்திகளை மறுமதிப்பீடு செய்து, பயணத்தை மீண்டும் தொடங்க வேண்டும். உங்கள் இலக்குகளை அடைய சிறிது நேரம் ஆகலாம், ஆனால் நீங்கள் நிலையாக இருப்பதும், உங்களை நம்புவதும் மிகவும் முக்கியம்".

    தேவைக்கேற்ப ஆதரவைத் தேடுங்கள்: 

    உதவி தேடுவது தோல்வியின் அடையாளம் அல்ல.நீங்கள் மதிக்கும் மற்றும் அக்கறையுள்ள நபர்களிடமிருந்து உதவி மற்றும் வழிகாட்டுதலைப் பெற தயங்க வேண்டாம். உங்களை ஊக்குவிக்கும், உங்களை நிலைநிறுத்தி வைக்கும் மற்றும் நீங்கள் விட்டுக்கொடுக்க விரும்பும் நாட்களில் உங்களுக்கு பொறுப்புக்கூறும் ஒரு ஆதரவு அமைப்பு இருப்பது மிகவும் முக்கியமானது.

    இந்த உத்திகளை கடைப்பிடித்தல் பயனுள்ளதாகவும் உதவிகரமாக இருக்கும். 

    • கிரிபேட்டியில் இந்திய நேரப்படி இன்று மதியம் 3.30 மணிக்கு புத்தாண்டு பிறந்தது.
    • நியூசிலாந்தில் 2024 ஆங்கில புத்தாண்டு இந்திய நேரப்படி சரியாக 4.30 மணிக்கு பிறந்தது.

    உலகிலேயே முதலில் பசிபிக் கடலில் உள்ள கிறிஸ்துமஸ் தீவு என்ற கிரிபேட்டியில் இந்திய நேரப்படி இன்று மதியம் 3.30 மணிக்கு புத்தாண்டு பிறந்தது.

    கிரிபேட்டியை தொடர்ந்து நியூசிலாந்தில் 2024வது ஆண்டில் ஆங்கில புத்தாண்டு இந்திய நேரப்படி சரியாக 4.30 மணிக்கு பிறந்தது.

    கிரிபேட்டி, நியூசிலாந்தை தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் இந்திய நேரப்படி இன்று மாலை 6.30 மணிக்கு புத்தாண்டு பிறந்தது.

    இந்நிலையில், வாண வேடிக்கையுடன் ஆஸ்திரேலிய மக்கள் புத்தாண்டை வரவேற்று, பட்டாசுகள் வெடித்தும், கேக் வெட்டியும், ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடி வருகின்றனர். இதனால், ஆஸ்திரேலியாவில் புத்தாண்டு களைகட்டி வருகிறது.     

    • கிரிபேட்டியை தொடர்ந்து நியூசிலாந்தில் 2024 வருடத்தின் ஆங்கில புத்தாண்டு பிறந்தது.
    • நியூசிலாந்ததில் புத்தாண்டு களைகட்டி வருகிறது.

    நியூசிலாந்தில், இந்திய நேரப்படி சரியாக இன்று மாலை 4.30 மணியளவில் புத்தாண்டு பிறந்தது.

    உலகிலேயே முதலில் பசிபிக் கடலில் உள்ள கிறிஸ்துமஸ் தீவு என்ற கிரிபேட்டியில் இன்று மதியம் 3.30 மணிக்கு புத்தாண்டு பிறந்தது.

    கிரிபேட்டியை தொடர்ந்து நியூசிலாந்தில் 2024 வருட ஆங்கில புத்தாண்டு பிறந்தது.

    இந்நிலையில், வாணவேடிக்கையுடன் நியூசிலாந்து மக்கள் புத்தாண்டை வரவேற்றனர். மேலும், பட்டாசுகள் வெடித்தும், கேக் வெட்டி, ஆட்டம் பாட்டம் என புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர். இதனால், நியூசிலாந்ததில் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டி வருகிறது.

    ×