search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "building worker"

    • கட்டிட தொழிலாளி பணியின் போது மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
    • கம்பம் தெற்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    கம்பம்:

    கம்பம் புதிய பஸ் நிலைய பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 34). கட்டிட தொழிலாளி. இவர் கம்பம் போலீஸ் குடியிருப்பு அருகே ஒரு கட்டிடத்தில் கட்டுமான பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.

    அப்போது மதியம் உணவு இடைவேளையில் தனது மனைவி சித்ராவிடம் செல்போனில் பேசியபடி மாடி படிக்கட்டில் ஏறி சென்றார். அதன்பின்பு வெகு நேரமாகியும் அவர் கீழே வரவில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த சக தொழிலாளர்கள் மாடியில் சென்று பார்த்தபோது கருப்பசாமி பேச்சு, மூச்சு இல்லாமல் கிடந்தார். பின்னர் அவரை மீட்டு கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து கம்பம் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் லாவண்யா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இறந்த கருப்பசாமிக்கு, முகைத் (4), யுகனியா (1) என்ற 2 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    மணிமண்டபத்தை கட்டி முடித்ததற்கு பணம் தராததால் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் கட்டிட தொழிலாளி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    கடலூர்:

    கடலூர் புதிய கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் தங்களது குறைகளை கோரிக்கை மனுக்களாக அளித்தனர்.

    விருத்தாசலம் அருகே உள்ள புதுப்பேட்டையை சேர்ந்தவர் ராஜாராம். கட்டிட தொழிலாளி. இவர் கலெக்டர் அலுவலகத்துக்கு கோரிக்கை மனுவுடன் இன்று வந்தார்.

    கலெக்டர் அலுவலக வளாகத்தில் அவர் மறைத்து வைத்திருந்த மண்எண்ணை பாட்டிலை எடுத்து திடீரென்று உடல் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

    பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அங்கு விரைந்து வந்து ராஜாராம் வைத்திருந்த மண்எண்ணை பாட்டிலை பறித்தனர். தொடர்ந்து அவர் உடல் மீது தண்ணீரை ஊற்றினர். இது குறித்து ராஜாராமிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறியதாவது:-

    கடலூர் மாவட்டம் நான்கோட்டிமுனை என்ற கிராமத்தில் உள்ள ஒருவரின் தாய்க்கு மணிமண்டபம் கட்டும் பணியை என்னிடம் ஒப்படைத்தனர்.

    அதற்கு அவர்கள் முன்பணமாக ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் கொடுத்தனர். மீதி பணத்தை நீங்களே போட்டு வேலையை முடியுங்கள். கடைசியில் நாங்கள் அந்த பணத்தை கொடுத்து விடுகிறோம் என்றனர். அவர்கள் சொன்னபடி நான் பலரிடம் கடன் வாங்கி அந்த மணிமண்டபத்தை கட்டி முடித்து கொடுத்தேன். ஆனால், அவர்கள் இது வரை எனக்கு தரவேண்டிய மீதி பணத்தை கொடுக்கவில்லை.

    இது குறித்து போலீசில் புகார் செய்தும் எந்தவித பயனும் இல்லை. மேலும் விருத்தாசலம் கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்துள்ளேன். அதுவும் நிலுவையில் உள்ளது.

    இந்த சம்பவத்தால் மிகுந்த மனம் உடைந்த நான் கடலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்றேன்.

    இவ்வாறு அவர் போலீ சாரிடம் கூறினார்.

    பின்னர் அவரை சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    திருச்சி அருகே கள்ளக்காதலியை கட்டிட தொழிலாளி அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    திருச்சி:

    திருச்சி சோமரசம்பேட்டை அருகே உள்ள சுண்ணாம்புக்காரன்பட்டி பகுதியை சேர்ந்த ரெங்கராஜ் மகன் நடராஜ் (வயது 31). கட்டிட தொழிலாளியான இவர் குளித்தலை அருகே உள்ள தோகைமலை அழகனாம்பட்டி பகுதியில் அடிக்கடி பணிக்கு செல்வது வழக்கம். அப்போது அங்கு பணிக்கு வந்த அப்பகுதியை சேர்ந்த லீலா (35) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    லீலாவின் கணவர் சோலைராஜ் கடந்த 12 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். 10 வயதில் ஒரு மகன் உள்ளார். கணவர் இறந்து விட்டதால் ஆதரவற்று இருந்த லீலா கட்டிட பணிக்கு சென்று தனது மகனை வளர்த்து வந்தார். நடராஜூடனான பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி சந்தித்து பேசி வந்துள்ளனர். உல்லாசமும் அனுபவித்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் லீலா வேறு நபர்களுடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நடராஜ் லீலாவை கண்டித்துள்ளார். நேற்று லீலாவை, நடராஜ், சுண்ணாம்புகாரன்பட்டியில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்து வந்தார். அப்போது அங்கு செல்போனில் பேசுவது தொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த நடராஜ், வீட்டில் இருந்த அம்மிக்கல்லை எடுத்து லீலாவின் தலையில் போட்டார். இதில் அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். வீட்டில் யாரும் இல்லாததால் நேற்றிரவு முதல் இன்று காலை வரை பிணத்தின் அருகிலேயே நடராஜ் அமர்ந்து என்ன செய்வதென்று தெரியாமல் இருந்துள்ளார்.

    இன்று காலை அவரது தாய் வீட்டிற்கு வந்து பார்த்த போது, லீலா கொலை செய்யப்பட்டு கிடப்பதையும், மகன் அருகில் அமர்ந்திருப்பதையும் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

    இதைத்தொடர்ந்து நடராஜ் சோமரசம்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு சென்று சரணடைந்தார். அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் ஜீயபுரம் டி.எஸ்.பி. ராதாகிருஷ்ணன், சோமரம்பேட்டை இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்காதலியை கட்டிட தொழிலாளி கொலை செய்த சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews
    துடியலூரில் பஸ் நிலையத்தில் தலையில் கல்லைபோட்டு பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து கட்டிடத்தொழிலாளியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கவுண்டம்பாளையம்:

    கோவை துடியலூரில் புதிய பஸ் நிலையம் சமீபத்தில் திறக்கப்பட்டது. பஸ் நிலையத்தில் மின்விசிறி, மின் விளக்கு உள்ளது. இங்கு வீடு இல்லாதோர்படுத்து தூங்குவது வழக்கம்.

    இதே பகுதியை சேர்ந்த ருக்மணி (வயது 42). இந்த பஸ் நிலையத்தில் படுத்து தூங்கி வந்தார். ருக்மணி வீட்டு வேலை மற்றும் குப்பை சேகரித்து பிழைப்பு நடத்தி வந்தார்.

    இந்நிலையில் அதே பஸ் நிலையத்தில் தினம் படுத்து தூங்கிய கட்டிடத்தொழிலாளி சின்னசாமி (60) என்பவருக்கும், ருக்மணிக்கும் பழக்கம் ஏற்பட்டு சேர்ந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் இன்று அதிகாலை எழுந்த சிலர் ருக்மணியை பார்த்தபோது அவர் ரத்தவெள்ளத்தில் இறந்து கிடந்தார். அருகில் ஒரு கல் கிடந்தது. அதிலும் ரத்தக்கறை இருந்தது. இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் ருக்மணியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்து விட்டதாக அலறி சத்தம்போட்டனர்.

    இது குறித்து துடியலூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ருக்மணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சந்தேகத்தின் பேரில் கட்டிடத்தொழிலாளி சின்னசாமியை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இது குறித்து போலீசார் கூறும்போது ருக்மணிக்கு உடல் நலக்கோளாறு ஏற்பட்டிருக்கலாம். அப்போது ரத்த வாந்தி ஏற்பட்டு ரத்தம் அந்த பகுதி முழுவதும் பரவியிருக்கலாம். அதில் அருகில் இருந்த கல்லிலும் பட்டிருக்கலாம். இதனால் கொலை போன்று பொதுமக்கள் சந்தேகப்பட்டனர்.

    ருக்மணியின் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து முழுமையாக கூறு முடியும் என்றனர்.

    பஸ் நிலையத்தில் பெண் அடித்துக்கொலை செய்யப்பட்டதாக பரவிய தகவல் அந்த பகுதியில் இன்று காலை பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews
    மத்தூரில் கட்டிட தொழிலாளி வீட்டில் கொள்ளையர்கள் நகை , வெள்ளி பொருட்களை திருடிச் சென்று விட்டனர். மேலும் 3 வீடுகளில் புகுந்த அவர்கள் வீட்டில் ஒன்றும் இல்லாததால் திரும்பி சென்று விட்டனர்.
    ஊத்தங்கரை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் கீழ்வீதியை சேர்ந்தவர் சம்பத், கட்டிட தொழிலாளி. இவர் பெங்களூருவில் தங்கி இருந்து கட்டிட வேலை பார்த்து வருகிறார். வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் பெங்களூரு சென்றுவிட்டார். இவரது வீட்டு பூட்டை உடைத்த கொள்ளையர்கள் பீரோவில் இருந்த ஒன்றரை பவுன் நகை, கொலுசு உள்ளிட்ட கால் கிலோ வெள்ளி பொருட்கள் 10 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துவிட்டு சென்று விட்டனர். 

    இதுகுறித்து சம்பத்தின் மனைவி அமராவதி மத்தூர் போலீசில் புகார் செய்து உள்ளார். சப்-இன்ஸ்பெக்டர் சங்கரன் வழக்குபதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்.

    மேலும் சம்பத் வீட்டில் கொள்ளை நடந்த அதே நாளில் கொள்ளையர்கள் மத்தூர் அம்பேத்கார் நகரை சேர்ந்த அஞ்சலி (வயது 35), பொன்னி (65), மத்தூர் கீழ்வீதியை சேர்ந்த சரவணன் (40) ஆகியோர் வீடுகளின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து உள்ளனர். அந்த வீடுகளில் ஒன்றும் இல்லாததால் கொள்ளையர்கள் திரும்பி சென்றுவிட்டனர்.

    இதுகுறித்தும் மத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டு உள்ளது.
    பாலக்கோடு அருகே பெற்றோர் திருமணம் செய்து வைக்காததால் கட்டிட தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். #Suicide
    பாப்பாரப்பட்டி:

    பாலக்கோடு அருகே உள்ள சென்னையன் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் தூர்வாசன். இவருடைய மகன் முனியப்பன் (வயது 22), கட்டிட தொழிலாளி. இவர் கடந்த ஒரு ஆண்டாக திருமணம் செய்து வைக்க கோரி பெற்றோரிடம் வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் அவர்கள் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் மனமுடைந்து காணப்பட்ட முனியப்பன் நேற்று முன்தினம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள கூ.குட்டமருதஅள்ளி கிராமத்தில் ஒரு தோட்டத்தில் விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி முனியப்பன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பாப்பாரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    திருப்பத்தூரில் குழந்தை கடத்தல் குறித்து வாட்ஸ்-அப்பில் வீடியோ வெளியிட்டு வதந்தி பரப்பிய கட்டிட மேஸ்திரியை போலீசார் கைது செய்தனர்.
    திருப்பத்தூர்:

    வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் குழந்தை கடத்தல் கும்பல் ஊடுருவியதாக வாட்ஸ்-அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கடந்த சில நாளாக வதந்தி பரப்பப்பட்டு வந்தது.

    இதன் எதிரொலியாக போளூர் அருகே உள்ள களியம் கிராமத்தில் சென்னை பல்லாவரத்தை சேர்ந்தவர்கள் சென்ற காரை மறித்த கிராம மக்கள், குழந்தை கடத்தல் கும்பல் என்று நினைத்து கொடூரமாக தாக்கினர்.

    இதில் ருக்மணி என்ற மூதாட்டி சம்பவ இடத்திலேயே இறந்தார். 4 பேர் பலத்த காயமடைந்தனர். இதுதொடர்பாக, 11 கிராமங்களை சேர்ந்த 46 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் பலரை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

    இதையடுத்து, குழந்தை கடத்தல் வதந்தியை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு செய்தனர். செய்யாறில் குழந்தை கடத்தல் வதந்தி குறித்து வதந்தி பரப்பிய வாட்ஸ்-அப்பில் செல்பி வீடியோ வெளியிட்ட சக்தி என்ற கட்டிட மேஸ்திரியை போலீசார் வீடு புகுந்து கைது செய்தனர்.

    இந்த நிலையில், அதே போன்று திருப்பத்தூரிலும் குழந்தை கடத்தல் குறித்து வாட்ஸ்-அப்பில் வீடியோ வெளியிட்டு வதந்தி பரப்பிய கட்டிட மேஸ்திரி கைது செய்யப்பட்டுள்ளார்.

    திருப்பத்தூர் அடுத்த ஆதியூர் ராவுதம்பட்டியை சேர்ந்தவர் ஜெகதீசன் மகன் யாதவமூர்த்தி (வயது 31). கட்டிட மேஸ்திரியான இவர், கடந்த 2 நாட்களுக்கு முன்பு வாட்ஸ்-அப்பில் ஒரு வீடியோ வெளியிட்டார். அந்த வீடியோ வைரலாக பரவியது. வீடியோவில், 400 வடமாநிலத்தவர்கள் குழந்தை கடத்த ஊடுருவி உள்ளனர்.

    ஒருவன் சிக்கி விட்டான். மீதமுள்ள 399 பேரை எங்கு பார்த்தாலும் அடித்து கொள்ளுங்கள். ஆந்திராவில் குழந்தை கடத்தல் கும்பலை போலீசார் என்கவுண்டர் செய்கின்றனர். தமிழக போலீசார் எதற்கும் லாயக்கில்லை. குழந்தை கடத்தல்காரர்களை பொதுமக்கள் பிடித்து கொடுத்தாலும், போலீசார் விடுவிக்கின்றனர் என்று பேசி இருந்தார்.

    இந்த வீடியோ குறித்து எஸ்.பி. பகலவன் உத்தரவின் பேரில், திருப்பத்தூர் டி.எஸ்.பி. ஜேசுராஜ் தலைமையில் தாலுகா இன்ஸ்பெக்டர் உலக நாதன், சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா மற்றும் போலீசார், யாதவமூர்த்தியை தேடி பிடித்து கைது செய்தனர்.

    தவறான தகவல் பரப்புதல் உள்ளிட்ட 2 பிரிவுகளில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


    ×