search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கர்நாடகா"

    • ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைத்தலைவர் முகமதுஅலி கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
    • கர்நாடக அரசு தமிழகத்திற்கு தரவேண்டிய தண்ணீரை திறந்து விட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தஞ்சாவூா்:

    உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்து விட வேண்டும். மேகதாதுவில் அணைக்கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும். அனைத்து நீர்வரத்து, வடிகால் வாரிகளையும், ஏரி குளங்களையும் உடனே தூர்வார வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதற்கு மாவட்ட செயலாளர் என்.வி. கண்ணன் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.

    ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைத்தலைவர் முகமதுஅலி கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

    பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-

    கர்நாடக அரசு தொடர்ந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடாமல் துரோகம் செய்து வருகிறது . கடந்த ஆண்டு தமிழகத்திற்கு தரவேண்டிய 90 டி.எம்.சி. தண்ணீர் தரவில்லை. நடப்பாண்டில் 10 டி.எம்.சி தண்ணீர் தரவில்லை. ஒட்டு மொத்தத்தில் தமிழத்திற்கு தரவேண்டிய 100 டி.எம்.சி தண்ணீரை தராமல் வஞ்சிக்கிறது.

    எனவே கர்நாடக அரசு தமிழகத்திற்கு தரவேண்டிய தண்ணீரை திறந்து விட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கர்நாடக மாநிலத்தில் பெரும்பாலான அணைகள் நிரம்பி உள்ளது. எனவே உடனடியாக நம்மக்குரிய தண்ணீரை பெற்று தர வேண்டும். அடுத்த கட்டமாக அனைத்து விவசாய அமைப்புகள், பல்வேறு கட்சி நிர்வாகிகளை அழைத்து பெரிய அளவில் போராட்டம் நடத்த உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கர்நாடகத்தில் பெட்ரோல், டீசலுக்கான விலை உயர்த்தப்பட்டுள்ளது.
    • பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் பெட்ரோல், டீசலுக்கான கலால் வரியை உயர்த்தி அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விற்பனை வரியை முறையே 29.84 சதவீதம் மற்றும் 18.44 சதவீதம் என அரசாங்கம் திருத்தியுள்ளது. இந்த வரி உயர்வால் பெட்ரோல் விலை ரூ.3, டீசல் விலை ரூ.3.50 அதிகரித்துள்ளது.

    பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

    இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தப்பட்டது குறித்து முதல் மந்திரி சித்தராமையா கருத்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக சித்தராமையா கூறியதாவது:

    குஜராத், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா போன்ற இடங்களைவிட தற்போது கர்நாடகாவின் திருத்தப்பட்ட எரிவாயு கட்டணங்கள் குறைந்த விலையில் தான் உள்ளது.

    வாட் வரி உயர்த்தப்பட்டாலும் மற்ற மாநிலங்களை விட கர்நாடகாவில் டீசல் விலை குறைவாகவே உள்ளது.

    கர்நாடகாவின் வளங்களை மற்ற மாநிலங்களுக்கு பா.ஜ.க. அரசு கொடுத்துள்ளது.

    பெட்ரோல் மீதான கலால் வரியை ரூ.9.21ல் இருந்து ரூ.32.98 ஆகவும், டீசல் மீதான கலால் வரியை ரூ.3.45ல் இருந்து ரூ.31.84 ஆகவும் மத்திய அரசு கடந்த 10 ஆண்டுகளில் உயர்த்தி உள்ளது.

    இந்த வரி உயர்வு மக்களுக்கு சுமையாக உள்ளது. மக்களின் நலன் கருதி இந்த வரிகளை மத்திய அரசு குறைக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.

    • சிறப்பு புலனாய்வு குழுவினர் கடந்த 31-ந் தேதி கைது செய்தனர்.
    • வருகிற 18-ந் தேதி வரை காவலில் எடுத்து விசாரணை நடத்த உள்ளனர்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் வெளியானதையடுத்து பிரஜ்வல் ரேவண்ணா மீது பாதிக்கப்பட்ட பெண்கள் கொடுத்த புகாரின் பேரில் 3 பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

    இதற்கிடையே பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாட்டிற்கு தப்பி சென்றார். இதையடுத்து அவரை பிடிக்க சிறப்பு புலனாய்வு குழுவினர் தீவிரம் காட்டி வந்தனர். அதன் பேரில் பெங்களூரு விமான நிலையத்தில் வைத்து பிரஜ்வல் ரேவண்ணாவை சிறப்பு புலனாய்வு குழுவினர் கடந்த 31-ந் தேதி கைது செய்தனர்.

    இதையடுத்து பலாத்கார வழக்குகள் குறித்து அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். 2 முறை போலீஸ் காவலில் எடுத்து பிரஜ்வலிடம் விசாரணை நடத்தினர். பின்னர் காவல் முடிவடைந்த நிலையில் அவர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்தநிலையில் பெங்களூருவில் சைபர் கிரைம் போலீசில் பதிவான பாலியல் வழக்கு தொடர்பாக பிரஜ்வல் ரேவண்ணாவை சிறப்பு புலனாய்வு குழுவினர் காவலில் எடுக்க முடிவு செய்தனர். இதற்காக அவரை மக்கள் பிரதிநிதிகள் கோர்ட்டில் நேற்று போலீசார் ஆஜர் படுத்தினர்.

    அப்போது பிரஜ்வல் ரேவண்ணாவை காவலில் எடுத்து விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழுவினர் தரப்பில் அனுமதி கோரப்பட்டது. அதனை ஏற்ற நீதிபதி, பிரஜ்வல் ரேவண்ணாவை 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழுவுக்கு அனுமதி வழங்கினார்.

    அதன்படி வருகிற 18-ந்தேதி வரை பிரஜ்வல் ரேவண்ணாவை சிறப்பு புலனாய்வு குழு போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்த உள்ளனர்.

    • யார் மீதும் பழி போடுவதில் அர்த்தமில்லை.
    • பொது இடங்களில் தேவையில்லாமல் அறிக்கை விடக்கூடாது.

    பெங்களூரு:

    கர்நாடகாவில் மொத்தம் 28 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளது. இதில் கடந்த தேர்தலில் 27 இடங்களில் காங்கிரஸ் கட்சி தோற்றது. ஆனால் பெங்களூர் புறநகரில் மட்டும் கர்நாடக காங்கிரஸ் தலைவரும், துணை முதல் மந்திரியுமான டி.கே.சிவகுமாரின் தம்பி டி.கே.சுரேஷ் வெற்றி பெற்றார்.

    பெங்களூர் புறநகர் டி.கே.சிவக்குமார், டி.கே. சுரேஷின் கோட்டையாக இருந்து வந்தது. இந்த தொகுதியில் கடந்த 2012-ல் நடந்த இடைத்தேர்தல், அதைத்தொடர்ந்து நடந்த 2014, 2019 ஆகிய ஆண்டுகளில் நடந்த பாராளுமன்ற தேர்தலிலும் டி.கே.சுரேஷ் வெற்றி பெற்று எம்.பி. ஆனார்.

    இந்த நிலையில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 9 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனாலும் பெங்களூர் புறநகரில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் டி.கே.சுரேஷ் 2 லட்சத்து 68 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

    அவரை எதிர்த்து போட்டியிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரும், தேவகவுடாவின் மருமகனுமான டாக்டர் மஞ்சுநாத் வெற்றி பெற்றார்.

    இந்த தோல்வி டி.கே. சிவக்குமார் மற்றும் காங்கிரஸ் கட்சியினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த நிலையில் டி.கே.சுரேஷை திட்டமிட்டு கட்சியினர் தோல்வியடைய வைத்து விட்டனர் என்று டி.கே.சுரேசின் ஆதரவாளர்கள் பொதுவெளியில் பேச ஆரம்பித்தனர்.

    இந்த விவகாரம் கர்நாடக காங்கிரசில் பெரும் பூதாகரமாக வெடித்து உள்ளது. ஏற்கனவே முதல் மந்திரி சித்தராமையாவுக்கு ஆதரவாக சில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும், துணை முதல் மந்திரி டி.கே.சிவக்குமாருக்கு ஆதரவாக சில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் பேசி வரும் நிலையில் டி.கே.சுரேஷ் தோல்வியால் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாகி உள்ளது.

    இந்த நிலையில் கர்நாடக காங்கிரஸ் தலைவரும், துணை முதல் மந்திரியுமான டி.கே.சிவக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சமீபத்திய தேர்தல் முடிவுகள் காங்கிரசுக்கு எச்சரிக்கை மணி. தோல்வி குறித்து மாநிலம் முழுவதும் உள்ள தொகுதிகளில் ஆய்வு கூட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த கூட்டங்களுக்கான தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும்.

    அதிக தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் இருந்தோம். ஆனால் அந்த எண்ணிக்கையை எட்ட முடியவில்லை. மக்களின் தீர்ப்பை ஏற்க வேண்டும். கட்சி தலைவர்களின் சொந்த கிராமங்கள் மற்றும் நகரங்களில் இருந்து வாக்குகள் கிடைக்கவில்லை.

    தேர்தல் தோல்விக்கு சில எம்.எல்.ஏ.க்கள் மீது அமைச்சர்கள் குற்றம் சாட்டுவது குறித்து கேட்டபோது இதுபற்றி யாரும் என்னிடம் புகார் செய்யவில்லை. யார் மீதும் பழி போடுவதில் அர்த்தமில்லை.

    தோல்விக்கான காரணம் குறித்து தொகுதி பொறுப்பில் உள்ள தலைவர்கள், தொண்டர்களிடம் பேசி அதற்கான காரணங்களை ஆராய வேண்டும். அதை விட்டுவிட்டு எம்.எல்.ஏ.க்கள் பொது இடங்களில் தேவையில்லாமல் அறிக்கை விடக்கூடாது. கட்சி தொண்டர்களுடன் அமர்ந்து பிரச்சினைகளை விவாதிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • போலீசார் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
    • 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்கும்படி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்ட முன்னாள் எம்.பி.யான பிரஜ்வல் ரேவண்ணா (வயது 33) பெண்களுடன் ஆபாசமாக இருக்கும் வீடியோக்கள் கர்நாடகத்தில் முதற்கட்ட பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுதொடர்பாக அவர் மீது 3 பலாத்கார வழக்குகள் பதிவானது. இந்த வழக்குகளில் போலீசாரிடம் சிக்காமல் ஒரு மாதத்திற்கும் மேலாக அவர் ஜெர்மனியில் தலைமறைவாக இருந்தார்.

    பின்னர் கடந்த மாதம் 31-ந் தேதி ஜெர்மனியில் இருந்து பெங்களூரு திரும்பிய பிரஜ்வல் ரேவண்ணா கைது செய்யப்பட்டார். அவரை 6-ந்தேதி முதல் 10-ந்தேதி (நேற்று) வரை காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். போலீஸ் விசாரணைக்கு அவர் ஒத்துழைப்பு அளிக்காமல் இருந்து வந்ததாக தகவல்கள் வெளியானது.

    இந்த நிலையில் நேற்று காலையில் பெங்களூரு பசவனகுடியில் உள்ள பிரஜ்வல் ரேவண்ணா வீட்டுக்கும், அவரை போலீசார் அழைத்து சென்றார்கள்.

    பிரஜ்வல் ரேவண்ணாவை போலீசார் அழைத்து சென்றபோது வீட்டின் முதல் மாடியில், அவரது தாய் பவானி ரேவண்ணா இருந்தார். ஆனாலும் தாயை சந்திக்கவும், அவருடன் பேசுவதற்கும் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. பிரஜ்வல் ரேவண்ணாவால் பலாத்காரத்திற்கு உள்ளான பெண்ணை கடத்திய வழக்கில் பவானி ரேவண்ணா முன்ஜாமீன் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

    நேற்றுடன் போலீஸ் காவல் நிறைவடைந்ததை தொடர்ந்து பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு கோர்ட்டில் நேற்று மதியம் 3 மணியளவில் பிரஜ்வல் ரேவண்ணாவை நீதிபதி முன்னிலையில் போலீசார் ஆஜர்படுத்தினா்.

    இதையடுத்து, பிரஜ்வல் ரேவண்ணாவை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்கும்படி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். அதைத்தொடர்ந்து, கோர்ட்டில் இருந்து அவர் பலத்த பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.

    ஏற்கனவே பிரஜ்வல் ரேவண்ணாவால் பலாத்காரத்திற்கு உள்ளான பெண்ணை கடத்தியதாக, அவரது தந்தையான முன்னாள் மந்திரி எச்.டி.ரேவண்ணா இதே பரப்பனஅக்ரஹாரா சிறையில் கடந்த மாதம் 8-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை 6 நாட்கள் அடைக்கப்பட்டிருந்தார். அதன்பிறகு அவர் ஜாமீனில் விடுதலை ஆகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • காதலிக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன்.
    • காதலி குறித்து வேறு எந்த தகவலையும் வெளியிட போலீசார் மறுத்து விட்டனர்.

    பெங்களூரு:

    கர்நாடகா மாநிலம் ஹாசன் தொகுதியின் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியின் முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் வெளியானதை யடுத்து அவர் ஜெர்மனிக்கு தப்பி சென்றார்.

    இதையடுத்து அவரை சிறப்பு விசாரணை குழு அதிகாரிகள் தேடிவந்த நிலையில் கடந்த 31-ந் தேதி அதிகாலை ஜெர்மனியில் இருந்து பெங்களூரு வந்த போது பிரஜ்வல் ரேவண்ணா கைது செய்யப்பட்டார்.

    இதையடுத்து போலீசார் பிரஜ்வல் ரேவண்ணாவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். கடந்த 6-ந் தேதியுடன் அவரது காவல் முடிவடைந்தது.

    இதையடுத்து போலீசார் மீண்டும் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது மேலும் 5 நாட்கள் போலீசார் விசாரணை நடத்த அனுமதி கேட்டனர். இதையடுத்து மீண்டும் 5 நாட்கள் போலீஸ் காவலுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

    இதைதொடர்ந்து பிரஜ்வல் ரேவண்ணாவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். ஆனால் அவர் பெரும்பாலான கேள்விகளுக்கு எந்த பதிலும் தெரிவிக்காமல் மவுனமாக இருந்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    இதற்கிடையே பிரஜ்வல் பிறந்து வளர்ந்த ஹோலே நரசிப்பூர் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு சிறப்பு விசாரணை குழு அதிகாரிகள் நேற்று அழைத்து சென்று சோதனை நடத்தினர்.

    கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேஷ் நாயுடு தலைமையில் இந்த சோதனை நடந்தது. சுமார் 4 மணி நேரம் அவரது வீட்டில் இந்த சோதனை நடந்தது. அப்போது பிரஜ்வலை பார்த்து அவரது தந்தை ரேவண்ணா கண்ணீர் விட்டு அழுதார். இதைப்பார்த்த பிரஜ்வலும் அழுதார். பின்னர் போலீசார் பிரஜ்வலை அங்கிருந்து மீண்டும் விசாரணை அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர்.

    பிரஜ்வல் ஜெர்மனியில் பதுங்கி இருந்த போது அவர் தொடர்பில் இருந்தவர்கள் பற்றி நடத்திய விசாரணையின் அடிப்படையில் பிரஜ்வல் தங்க மற்றும் அவருக்கு தேவையான பண உதவிகளை அவரது காதலி செய்து இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து சிறப்பு விசாரணை குழு அதிகாரிகள் அவரது காதலிக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பி உள்ளனர். மேலும் பிரஜ்வல் காதலி குறித்து வேறு எந்த தகவலையும் வெளியிட போலீசார் மறுத்து விட்டனர்.

    இதே போல் பிரஜ்வல் ரேவண்ணாவின் காவல் நாளையுடன் முடிவடைகிறது. எனவே அவரை மீண்டும் நாளை மாலை கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். 3-வது முறையாகவும் அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

    • ராஜினாமா செய்ததாக கடிதம் ஒன்று வாட்ஸ் அப் குழுக்களில் வைரலாகி வருகிறது.
    • காங்கிரசார் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

    பெங்களூரு:

    கர்நாடகாவில் பாராளுமன்ற தேர்தலின்போது சிக்கபள்ளப்பூர் தொகுதியின் பா.ஜ.க. வேட்பாளரும், முன்னாள் மந்திரியுமான டாக்டர் சுதாகர் ஒரு ஓட்டு கூடுதலாக பெற்றால் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வேன் என அந்த தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ. பிரதீப் ஈஸ்வர் கூறினார்.

    இந்த நிலையில் சிக்பள்ளாப்பூர் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் 8 லட்சத்து 22 ஆயிரத்து 619 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ரக்ஷா ராமையா 6 லட்சத்து 59 ஆயிரத்து 159 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.

    இந்த நிலையில் சிக்பள்ளாப்பூர் தொகுதி எம்.எல்.ஏ. பிரதீப் ஈஸ்வர் எப்போது ராஜினாமா செய்வீர்கள் என பா.ஜ.க. தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    இதனிடையே அவர் ராஜினாமா செய்ததாக கடிதம் ஒன்று வாட்ஸ் அப் குழுக்களில் வைரலாகி வருகிறது. அந்த கடிதத்தில் கொடுத்த வாக்குறுதி தவறக்கூடாது என்ற பழமொழியை சிறுவயது முதலே வாழ்நாள் முழுவதும் கடைபிடித்து வருகிறேன். பாராளுமன்ற தேர்தலில் சிக்பள்ளாப்பூர் தொகுதியில் டாக்டர் சுதாகர் ஒரு ஓட்டு கூடுதலாக பெற்றால் ராஜினாமா செய்வேன் என சில நாட்களுக்கு முன்பு பகிரங்கமாக கூறினேன்.

    எனது தொகுதியில் சுதாகர் கிட்டதட்ட 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளதால் எனது எம்.எல்.ஏ. பதவியை தானாக முன்வந்து ராஜினாமா செய்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

    இந்த கடிதம் விவகாரம் காங்கிரசார் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

    இது குறித்து எம்.எல்.ஏ.வின் உதவியாளர் கூறுகையில், பிரதீப் ஈஸ்வர் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து விட்டதாக ராஜினாமா கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அது போலியானவை. அவர் ராஜினாமா செய்யவில்லை. அவரை கிண்டல் செய்வதற்காக இந்த கடிதத்தை சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர் என்றார்.

    • கர்நாடகத்தில் மொத்தம் 28 பாராளளுமன்ற தொகுதிகள் உள்ளன.
    • அசம்பாவிதங்களை தடுக்கும் பொருட்டு மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன.

    பெங்களூரு:

    கர்நாடகத்தில் மொத்தம் 28 பாராளளுமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த 28 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் 2 கட்டமாக கடந்த ஏப்ரல் 26-ந் தேதி மற்றும் மே 7-ந் தேதி தேர்தல் நடைபெற்றது.

    அதாவது முதல்கட்ட தேர்தல் கர்நாடகத்தின் தலைநகரான பெங்களூருவில் உள்ள 3 பாராளுமன்ற தொகுதிகள் உள்பட தென் கர்நாடகத்தில் அமைந்திருக்கும் 14 தொகுதிகளுக்கும், 2-வது கட்ட தேர்தல் சிவமொக்கா உள்பட வடகர்நாடகத்தில் உள்ள 14 தொகுதிகளுக்கும் நடந்தது. இந்த தேர்தல் களத்தில் மொத்தம் 474 வேட்பாளர்கள் உள்ளனர்.

    இதில் முக்கியமான தலைவர்களான முன்னாள் முதல்-மந்திரிகள் பசவராஜ் பொம்மை ஹாவேரியிலும், ஜெகதீஷ் ஷெட்டர் பெலகாவியிலும், குமாரசாமி மண்டியாவிலும், மத்திய மந்திரி பிரகலாத்ஜோஷி தார்வாரிலும் போட்டியில் உள்ளனர். இவர்கள் பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்கள்.

    மைசூரு தொகுதியில் மன்னர் யதுவீர் உடையார் பா.ஜனதா சார்பில் களத்தில் உள்ளார். பா.ஜனதா தேசிய இளைஞரணி தலைவர் தேஜஸ்வி சூர்யா பெங்களூரு தெற்கு தொகுதியில் போட்டியிட்டுள்ளார்.

    ஆபாச வீடியோ வெளியாகி அரசியலில் புயலை கிளப்பிய பிரஜ்வல் ரேவண்ணா பா.ஜனதா கூட்டணியில் ஜனதா தளம்(எஸ்) சார்பில் ஹாசன் தொகுதியில் போட்டியிட்டுள்ளார்.

    பாராளுமன்ற தேர்தல் முடிவடைந்ததை அடுத்து நாளை நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. கர்நாடகத்தில் 28 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.

    பெங்களூரு வடக்கு தொகுதி-விட்டல் மல்லையா ரோட்டில் உள்ள புனித ஜோசப் இன்டியன் உயர்நிலைப்பள்ளி, பெங்களூரு மத்தி-மவுண்ட் கார்மல் பி.யூ.கல்லூரி, பெங்களூரு தெற்கு-ஜெயநகர் எஸ்.எஸ்.எம்.ஆர்.வி. பி.யூ.கல்லூரி, சிக்பள்ளாப்பூர்-தேவனஹள்ளி நாகராஜா என்ஜினீயரிங் கல்லூரி, கோலார்-கோலார் அரசு முதல் நிலை கல்லூரிகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

    அதுபோல் துமகூரு, மண்டியா, மைசூரு , சாம்ராஜ்நகர், பெங்களூரு புறநகர், சிக்கோடி தொகுதி, பெலகாவி, விஜயாப்புரா, ராய்ச்சூர், பீதர், கொப்பல், பல்லாரி, ஹாவேரி, தார்வார், உத்தர கன்னடா, தாவணகெரே , சிவமொக்கா, உடுப்பி-சிக்கமகளூரு, ஹாசன், தட்சிண கன்னடா , சித்ரதுர்கா ஆகிய தொகுதி களுக்கு ஓட்டுக்கள் எண்ணப்படுகிறது.

    யாதகிரி மாவட்டம் சுராப்புரா சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் வாக்குகள் யாதகிரி அரசு பி.யூ.கல்லூரியில் எண்ணப்படுகின்றன.

    நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறு வதால் அசம்பாவிதங்களை தடுக்கும் பொருட்டு மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை மையங்களை சுற்றி 144 தடை உத்தரவும் அமல்படுத்தப்பட உள்ளது.

    • நேற்று முதல் பெங்களூரு உள்பட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்தது.
    • பல்வேறு பகுதிகளில் 32 மரங்கள் வேரோடு சாய்ந்தன.

    பெங்களூரு:

    கர்நாடக தலைநகர் பெங்களூருவில் கடந்த ஏப்ரல் மாத தொடக்கத்தில் கடுமையான வெயில் வாட்டி வந்தது. இதற்கிடையே கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை ஜூன் மாத ஆரம்பத்தில் தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதன்படி நேற்று முதல் பெங்களூரு உள்பட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்தது.

    இன்று 2-வது நாளாக பெங்களூரு, குடகு, ஹாசன் உள்ளிட்ட 16-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. யஷ்வந்த்பூர், வசந்தநகர், சாந்தி நகர், ஹெப்பாலா, சதாசிவநகர், ராஜாஜிநகர், விஜயநகர், பனசங்கர், மெஜஸ்டிக், சிட்டி மார்க்கெட் உள்ளிட்ட பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது .

    பெங்களூரு ஊரக மாவட்டத்தில் உள்ள நெலமங்களா பகுதியிலும், பீன்யா, தாசரஹள்ளி, பாகல்குண்டே, ஷெட்டி ஹள்ளி மல்லசந்திரா உள்ளிட்ட பல இடங்களில் பருவமழை பெய்து வருகிறது. தொடர் மழையால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.

    குறிப்பாக குடகு, தட்சிண கன்னடா, உடுப்பி, ஹாசன், சிக்கமகளூரு மற்றும் உத்தர கன்னடா மாவட்டங்களில் மொத்தம் 28 தாலுகாக்களில் மலைகளில் இருந்து பாறைகள் பெயர்ந்து சாலைகளில் விழுந்துள்ளன. அவற்றை அப்புறப்படுத்தும் பணயில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    பெங்களூரு நகரின் பல்வேறு பகுதிகளில் 32 மரங்கள் வேரோடு சாய்ந்தன. இது தொடர்பாக பிபிஎம்பி கட்டுப்பாட்டு அறையில் 32 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பணியாளர்கள் உடனடியாக 18 இடங்களில் மரங்களை அகற்றினர்.

    தாழ்வான பகுதிகளில் தண்ணீர் புகுமோ என்ற அச்சம் நிலவுகிறது. கடலோர மற்றும் மலைப் பகுதிகளில் 6 மாவட்டங்களில் பருவமழை பேரிடர்களை தடுக்க வருவாய் துறையினர் தயார் நிலையில் உள்ளனர். வருவாய்த்துறையின், பேரிடர் மீட்பு குழுவினருக்கு வழிகாட்டுதல்களை மாவட்ட நிர்வாகம் வழங்கியுள்ளது.

    • வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
    • பின்னால் உள்ள காரணத்தை கண்டறியுமாறு அதிகாரிகளிடம் பிரஜ்வல் கோரிக்கை.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் ஹாசன் பாராளுமன்ற தொகுதி எம்.பி.யாக இருப்பவர் பிரஜ்வல் ரேவண்ணா. இவர் பல பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுதொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனியில் இருந்து பெங்களூரு திரும்பி வந்ததும் அவரை கைது செய்து கடந்த 31-ந்தேதி முதல் 6 நாட்கள் வரை தங்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகிறார்கள்.

    பெங்களூரு அரண்மனைசாலையில் உள்ள சி.ஐ.டி. தலைமையகத்தில் சிறப்பு புலனாய்வு குழு போலீசார் அவரிடம் துருவி, துருவி விசாரித்து வருகிறார்கள்.

    நேற்று முன்தினம் இரவு அவரிடம் பலாத்கார வழக்கு தொடர்பாக அடுக்கடுக்கான கேள்விகளை போலீசார் எழுப்பினர். அப்போது அவர் போலீசாரின் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. வெளியே வந்தவுடன் பார்த்துக் கொள்கிறேன் என அதிகாரிகளை மிரட்டியதாக கூறப்படுகிறது.

    இன்று 3-வது நாளாக போலீசார் மீண்டும் பிரஜ்வல் ரேவண்ணாவிடம் விசாரணை மேற்கொண்டனர். பாதிக்கப்பட்ட பெண்ணை பற்றி உங்களுக்கு தெரியுமா? என கேள்வி கேட்டனர். அதற்கு பிரஜ்வல் ரேவண்ணா புகார் அளித்த பெண் யாரென்று எனக்கு தெரியாது. நான் அவரை பார்த்ததில்லை. நான் பெங்களூர், ஹாசன், டெல்லியில் இருக்கிறேன். அவர் யாரென்று தெரியவில்லை என்றார்.

    உங்களது மற்ற செல்போன்கள் எங்கே? என கேட்டபோது நான் பயன்படுத்தும் செல்போன் இப்போது உங்களிடம் உள்ளது. அதை தவிர வேறு செல்போன் இல்லை. மற்றொரு செல்போன் தொலைந்து போயிருக்கலாம். நான் அந்த செல்போனை பயன்படு த்தவில்லை.

    மேலும் அரசியல் சதி காரணமாக என் மீது பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நான் எந்த தவறும் செய்யவில்லை. 4 ஆண்டுகளுக்கு பிறகு பலாத்கார புகாருக்கு பின்னால் உள்ள காரணத்தை கண்டறியுமாறு அதிகாரிகளிடம் பிரஜ்வல் கோரிக்கை விடுத்தார்.

    மேலும் சித்தரிக்கப்பட்ட ஆபாச வீடியோக்களை வெளியிட்டு என்னை சிக்க வைத்துள்ளனர். இந்த வீடியோக்களை வெளியிட்டு அரசியல் கட்சியினர் விளம்பரப்படுத்தியுள்ளனர். இந்த வீடியோக்களின் பின்னணியில் இருக்கும் கார்த்திக் உள்ளிட்டோரை கைது செய்து விசாரித்தால் உண்மை நிலை தெரியவரும் என பிரஜ்வல் கூறியதாக தெரிகிறது.

    அவர் கூறியபடி கார்த்திக் என்பவரிடம் விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் பெண்கள் பலத்காரம் செய்யப்பட்ட ஹாசன் பகுதியில் உள்ள வீட்டிற்கு அழைத்து சென்று ஆதராங்களை திரட்ட உள்ளனர்.

    முதல் நாள் விசாரணையில் எதிர்ப்பார்த்தபடி பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி. விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. அவர் அச்சுறுத்தும் வகையில் பேசினார். இது குறித்து நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும். நீதிமன்ற உத்தரவுப்படி நடவடிக்கை எடுக்கப்படும். 2 நாட்கள் விசாரணை முடிவடைந்துள்ள நிலையில் குற்றம் நடந்த இடமான ஹாசனுக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது என சிறப்பு புலனாய்வு குழு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    • கைதில் இருந்து தப்பிக்க பிரஜ்வால் ரேவண்ணா ஜெர்மனிக்கு தப்பிச் சென்றார்.
    • விமான நிலையத்திற்கு வந்திறங்கியதும் ரேவண்ணாவை கைது செய்ய போலீஸார் தயார் நிலையில் உள்ளனர்.

    இந்தியாவின் முன்னாள் பிரதமர் தேவகௌடாவின் பேரனும் பாஜக கூட்டணி கட்சியான ஜேடிஎஸ் கட்சி எம்.பியுமான பிரஜ்வால் ரேவண்ணா பெண்களை பாலியல் வன்கொடுமை செய்யும் சுமார் 2000 ஆபாச வீடியோக்கள் வெளியாகி நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

    பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்கள் முன்வந்து புகார் அளிக்கத் தொடங்கினர். இதனால் கைதில் இருந்து தப்பிக்க பிரஜ்வால் ரேவண்ணா ஜெர்மனிக்கு தப்பிச் சென்றார்.பாதிக்கப்பட்ட பெண்களுள் ஒருவரை கடத்திய குற்றத்திற்காக ஜேடிஎஸ் கட்சித் தலைவரும் பிரஜ்வாலின் தந்தையுமாகிய ஹச்.டி.ரேவண்ணா கைது செய்யப்பட்டு பின் ஜாமினில் வெளிவந்தார்.

    இந்த விவகாரத்தில் துரித கதியில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கர்நாடக ஆளும் காங்கிரஸ் கட்சி உறுதியளித்துள்ளது. இதற்கிடையில் பிரஜ்வாலை நாடு திரும்புமாறு அவரது தாத்தா தேவகௌடா எச்சரித்தார்.

    இந்நிலையில் நாளை மறுநாள் (மே 31) நாடு திரும்புவதாக பிரஜ்வால் ரேவண்ணா வீடியோ வெளியிட்டு தெரிவித்தார். அதன்படி நாளை (மே 30)  ஜெர்மனி தலைநகர் 'முனிக்'கிலுருந்து பெங்களூருவுக்கு விமானம் முன்பதிவு செய்துள்ள ரேவண்ணா, நாளை மறுநாள் பெங்களூரு கேம்பகௌடா விமான நிலையத்தில் தரையிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விமான நிலையத்திற்கு வந்திறங்கியதும் ரேவண்ணாவை கைது செய்ய போலீஸார் தயார் நிலையில் உள்ளனர். 

     

     

    • கர்நாடக மாநிலம் தும்கூரு மாவட்டத்தில் உள்ள ஹோஸ்பெட் கிராமத்தில் மர அறுவைத் தொழிலாளியாக வேலை செய்து வருபவர் சிவராம்.
    • சிவராம் - பபுஷ்பா தம்பதி இடயில் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது.

    கர்நாடகாவில் மனைவியுடன் வாக்குவாதம் முற்றி அவரது தலையை கணவன் துண்டித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் தும்கூரு மாவட்டத்தில் உள்ள ஹோஸ்பெட் கிராமத்தில் மர அறுவைத் தொழிலாளியாக வேலை செய்து வருபவர் சிவராம்

    இவர் சிவமோகா மாவட்டத்தின் சாகரா நகரத்தைச் சேர்ந்த புஷ்பா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 8 வயது குழந்தை உள்ளது. சிவராம் - பபுஷ்பா தம்பதி இடயில் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது.

    இந்நிலையில் நேற்று (மே 28) இரவு வாக்குவாதம் முற்றிய நிலையில் மனைவியின் தலையை துண்டாங்க வெட்டிக் கொலை செய்துள்ளார் சிவராமன். மேலும் வீட்டின் சமயலறையில் வைத்து புஷ்பாவின் உடலை துண்டு துண்டாக வெட்டியுள்ளார்.

    இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸார் சிவராமனை கைது செய்துள்ளனர். தந்தையின் இந்த வெறிச்செயலால் அவரது 8 வயது மகள் நிர்கதியில் விடப்பட்டுள்ளது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

     

    ×