என் மலர்
உலகம்
- கலிதா ஜியா 2 முறை பிரதமராக பதவி வகித்தார்.
- கலிதா ஜியா தனது அரசாங்கத்தில் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்.
வங்காளதேச முன்னாள் பிரதமரும், வங்காளதேச தேசியவாத கட்சி தலைவருமான கலிதா ஜியா, உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த நவம்பர் 23-ந்தேதி தலைநகர் டாக்காவில் உள்ள எவர்கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார்.
இதயம் மற்றும் நுரையீரல் தொற்று நோய் ஆகியவற்றுக்காக சிகிச்சை பெற்று வந்தார். சில நாட்களுக்கு முன்பு அவரது உடல்நிலை மோசமடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. கடந்த 11-ந் தேதி முதலே வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் கலிதா ஜியா இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி இறந்தார். அவருக்கு வயது 80. இதுதொடர்பாக வங்காள தேச தேசியவாத கட்சி வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், வங்காளதேச தேசியவாதக் கட்சி தலைவர்-முன்னாள் பிரதமர் கலிதா ஜியா நம்மிடையே இல்லை என்று தெரிவித்தது.
கலிதா ஜியா 2 முறை பிரதமராக பதவி வகித்தார். 1991-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரையும், 2001-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரையும் பிரதமாக இருந்தார். அவர் வங்காளதேசத்தின் முதல் பெண் பிரதமர் ஆவார்.
கடந்த 1960-ம் ஆண்டு அப்போதைய ராணுவ அதிகாரியான ஜியாவுர் ரகுமானை திருமணம் செய்தார். வங்காளதேச சுதந்திரப் போரில் முக்கிய பங்காற்றிய ஜியாவுர் ரகுமான், வங்காளதேச தேசியவாத கட்சியை உருவாக்கி 1977-ம் ஆண்டு அதிபராக பொறுப்பேற்றார். 1981-ம் ஆண்டு மே மாதம் ஜியாவுர் ரகுமான் படுகொலை செய்யப்பட்டார். அதன்பின் 1984-ம் ஆண்டு வங்காள தேச தேசியவாத கட்சியின் தலைவராக கலிதா ஜியா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2007-ம் ஆண்டு ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் கலிதா ஜியா கைது செய்யப்பட்டார். ஊழல் வழக்கில் அவருக்கு 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதற்கிடையே கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மாணவர்கள் போராட்டம் காரணமாக ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ந்து அவர் இந்தியாவில் தஞ்சமடைந்தார்.
இதையடுத்து முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. அதன்பின் சில மாதங்களுக்கு முன்பு சிறையில் இருந்து கலிதா ஜியா விடுதலை செய்யப்பட்டார். இதற்கிடையேதான் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
கலிதா ஜியா தனது அரசாங்கத்தில் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். இலவச மற்றும் கட்டாய ஆரம்பக் கல்வி, 10-ம் வகுப்பு வரை சிறுமிகளுக்கு இலவசக் கல்வி, பெண் மாணவர்களுக்கு உதவித்தொகை, கல்விக்காக உணவுத் திட்டங்கள் ஆகியவற்றை அறிமுகப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
கலிதா ஜியா உடல்நிலை மோசமடைந்ததையடுத்து அவரது மகன் தாரிக் ரகுமான் லண்டனில் இருந்து 17 ஆண்டுகளுக்கு பிறகு சமீபத்தில் வங்காளதேசம் திரும்பினார்.
ஷேக் ஹசீனா ஆட்சி காலத்தில் தாரிக் ரகுமான் மீது பல வழக்குகள் தொடரப்பட்டு இருந்த நிலையில் அந்த வழக்குகளை இடைக்கால அரசாங்கம் ரத்து செய்தது. இதையடுத்து தனது தாய் கலிதா ஜியாவை பார்க்க தாரிக் ரகுமான் நாடு திரும்பினார்.
- சீனாவில் தற்போது 100 பெண்களுக்கு 104 ஆண்கள் என்ற விகிதத்தில் பாலின விகிதம் உள்ளது.
- நேபாளத்தின் கிராமப்புறங்களில் உள்ள ஏழைக் குடும்பங்களை இலக்கு வைக்கும் தரகர்கள், சீனாவில் ஆடம்பர வாழ்க்கையை வைத்து ஏமாற்றுகின்றனர்.
நேபாளத்தில் வறுமையில் வாடும் இளம் பெண்களைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, அவர்களைச் சீனாவுக்குக் கடத்திச் சென்று விற்பனை செய்யும் கும்பல்கள் அம்பலமாகி உள்ளன.
சீனாவில் முன்பிருந்த ஒரு குழந்தை கொள்கை காரணமாக அந்நாட்டில் ஆண்களின் எண்ணிக்கை பெண்களை விட பல கோடிகள் அதிகமாக உள்ளது. தோராயமாக சீனாவில் தற்போது 100 பெண்களுக்கு 104 ஆண்கள் என்ற விகிதத்தில் பாலின விகிதம் உள்ளது.
இதனால் சீன ஆண்களுக்குத் தங்கள் நாட்டில் மணப்பெண் கிடைப்பது பெரும் சவாலாக மாறியுள்ளது.
இதைப் பயன்படுத்திக் கொள்ளும் மனிதக் கடத்தல் கும்பல்கள், நேபாளம், பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகளிலிருந்து பெண்களைச் சீனாவுக்குக் கடத்துகின்றன.
நேபாளத்தின் கிராமப்புறங்களில் உள்ள ஏழைக் குடும்பங்களை இலக்கு வைக்கும் தரகர்கள், சீனாவில் ஆடம்பர வாழ்க்கை மற்றும் கைநிறைய ஊதியம் கிடைக்கும் வேலை என ஆசை வார்த்தைகளைக் கூறி பெண்களைத் திருமணத்திற்குச் சம்மதிக்க வைக்கின்றனர்.
இந்த கும்பலை சேர்ந்த சீன ஆண்கள் நேபாளத்திற்கு வந்து சட்டப்படித் திருமணம் செய்து கொள்வது போல நாடகமாடி, சுற்றுலா விசாவில் அந்தப் பெண்களைச் சீனாவுக்கு அழைத்துச் செல்கின்றனர்.
சீனா சென்றடைந்த பிறகு, அந்தப் பெண்கள் அங்கிருக்கும் மற்ற ஆண்களுக்குப் பெருந்தொகைக்கு விற்பனை செய்யப்படுகின்றனர்.
அவர்கள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டு, பாலியல் ரீதியாகவும் உடல் ரீதியாகவும் துன்புறுத்தப்படுவதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன. மேலும் அவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதும் அங்கிருந்து வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதும் கண்டறியப்பட்டுள்ளது.
சீன சமூக வலைதளங்களில் மேட்ரிமோனி என்ற போர்வையில் நேபாளப் பெண்களை ஏலம் விடுவது போன்ற நேரலை வீடியோக்கள் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே நேபாள காவல்துறையின் மனிதக் கடத்தல் தடுப்புப் பிரிவு, காத்மாண்டு விமான நிலையத்தில் சீனர்களுக்கு மணப்பெண்களாக அழைத்துச் செல்லப்பட்ட பல பெண்களை மீட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் சீனக் குடிமக்கள் மற்றும் அவர்களுக்கு உதவிய நேபாளத் தரகர்கள் பலரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
வறுமையைப் பயன்படுத்திப் பெண்களின் வாழ்வைச் சிதைக்கும் இந்தத் தொழில்முறை கடத்தல் நெட்வொர்க் தெற்காசிய நாடுகளில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
- இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களைத் தீவிரமாக முன்வைத்தவர்
- இந்தியாவுக்குள் நுழைந்துள்ளதாகத் டாக்கா கூடுதல் கமிஷனர் நஸ்ருல் இஸ்லாம் தெரிவித்தார்.
வங்கதேசத்தைச் சேர்ந்த 'இன்குலாப் மன்ச்' மாணவர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஷெரீப் உஸ்மான் ஹாதி கடந்த டிசம்பர் 12-ம் தேதி தலையில் சுடப்பட்டார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் சிங்கப்பூருக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், டிசம்பர் 18 அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உஸ்மான் ஹாதி வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா அரசுக்கு எதிராக நடந்த போராட்டங்களில் முக்கியப் பங்கு வகித்தவர்.
மேலும், இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களைத் தீவிரமாக முன்வைத்தவர் என்பதால் இவரது கொலை வங்கதேச அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்தக் கொலையில் தொடர்புடைய முக்கிய துப்பாக்கிச் சூடு நடத்திய ஃபைசல் கரீம் மசூத் மற்றும் அவரது கூட்டாளி ஆலம்கீர் ஷேக் ஆகிய இருவரும் மைமென்சிங் பகுதியில் உள்ள ஹாலுவாகாட் எல்லை வழியாக இந்தியாவுக்குள் நுழைந்துள்ளதாகத் டாக்கா கூடுதல் கமிஷனர் நஸ்ருல் இஸ்லாம் தெரிவித்தார்.
அவர்களுக்கு உதவி செய்த இந்தியர்களான பூர்தி மற்றும் சாமி என்பவர்களை இந்திய அதிகாரிகள் தடுத்து வைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
வங்கதேச காவல்துறையின் இந்தக் குற்றச்சாட்டுகளை இந்திய எல்லை பாதுகாப்புப் படை மற்றும் மேகாலயா மாநில காவல்துறை திட்டவட்டமாக மறுத்துள்ளன.
எல்லையைத் தாண்டி எவரும் உள்ளே நுழைந்ததற்கான எந்தவொரு ஆதாரமோ அல்லது தகவலோ இல்லை என்று மேகாலயா எல்லை பாதுகாப்புப் படை ஐ.ஜி ஓ.பி. உபாத்யாய் தெரிவித்துள்ளார்.
வங்கதேச அதிகாரிகள் கூறுவது போல, உதவி செய்ததாக யாரையும் தாங்கள் கைது செய்யவோ அல்லது தடுத்து வைக்கவோ இல்லை என்று மேகாலயா டி.ஜி.பி இடாஷிஷா நோங்ராங் தெளிவுபடுத்தியுள்ளார்.
- ரிமோட் கண்ட்ரோல் குண்டுவெடிப்பில் 6 வீரர்கள் கொல்லப்பட்டனர்.
- 2025 ஆம் ஆண்டில் மட்டும் பலுசிஸ்தானில் நடந்த வன்முறைச் சம்பவங்களில் 200-க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர்
பாகிஸ்தானின் தென்மேற்கு மாகாணமான பலுசிஸ்தானில் உள்ள இயற்கை வளங்களை பாகிஸ்தான் அரசு சுரண்டுவதாகவும், உள்ளூர் மக்களுக்குப் பலன்கள் கிடைப்பதில்லை என்றும் கூறி தனி நாடு கேட்டு நீண்டகாலமாக பல ஆயுத குழுக்கள் இயங்கி வருகின்றன.
இந்நிலையில், பலுசிஸ்தான் மாகாணத்தில் கடந்த சில நாட்களாகப் பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் (BLA) மற்றும் பிற ஆயுதக் குழுக்கள் நடத்திய வெவ்வேறு தாக்குதல்களில் சுமார் 16 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
கேச், பஞ்ச்கூர் மற்றும் துர்பத் ஆகிய பகுதிகளில் இந்தத் தாக்குதல்கள் நடந்துள்ளன.
பஞ்ச்கூரில் உள்ள சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தட சாலையில் ராணுவ வாகனம் ஒன்றைக் குறிவைத்து நடத்தப்பட்ட ரிமோட் கண்ட்ரோல் குண்டுவெடிப்பில் 6 வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இந்தத் தாக்குதல்களுக்குப் பலுசிஸ்தான் விடுதலை ராணுவம், பலுசிஸ்தான் விடுதலை முன்னணி மற்றும் பலுச் குடியரசு காவலர்கள் ஆகிய அமைப்புகள் கூட்டாகப் பொறுப்பேற்றுள்ளன.
துர்பத் பகுதியில் ராணுவத்தினர் பயன்படுத்தி வந்த தகவல் தொடர்பு கோபுரங்கள் மற்றும் கண்காணிப்பு கேமராக்களையும் ஆயுதக் குழுக்கள் வெடிபொருட்கள் மூலம் தகர்த்துள்ளன.
இந்தத் தாக்குதல்களைத் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் பலுசிஸ்தான் முழுவதும் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது.
இதில் இதுவரை 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது.
2025 ஆம் ஆண்டில் மட்டும் பலுசிஸ்தானில் நடந்த வன்முறைச் சம்பவங்களில் 200-க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்தச் சம்பவம் தொடர்பாக அதிபர் புதின், அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் தொலைபேசியில் உரையாடினார்.
- இது ஒரு அப்பட்டமான பொய் என்று ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.
உக்ரைன் ரஷியா இடையிலான போர் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்த போரை நிறுத்த டிரம்ப் அரும்பாடுபட்டு வருகிறார்.
கடந்த சில வாரங்களாக அமெரிக்காவின் தலையீட்டுடன் ரஷியா - உக்ரைன் இடையே போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் அதிகாரப்பூர்வ இல்லத்தைக் குறிவைத்து உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, உக்ரைனுடனான அமைதிப் பேச்சுவார்த்தையில் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளப்போவதாக ரஷியா அறிவித்துள்ளது.
ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கூறுகையில், டிசம்பர் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில், நோவ்கோரோட் பகுதியில் உள்ள அதிபர் புதினின் அரசு இல்லத்தை நோக்கி உக்ரைன் சுமார் 91 நீண்ட தூர டிரோன்களை ஏவியுள்ளது. இருப்பினும், ரஷிய வான் பாதுகாப்புப் படையினர் அந்த டிரோன்கள் அனைத்தையும் சுட்டு வீழ்த்தியதாகத் தெரிவித்தார்.

இது அரச பயங்கரவாதம் என்றும் இதற்கு பதிலடி கொடுக்கப்படும் என்றும் கூறிய லாவ்ரோவ், இந்தத் தாக்குதலால், தற்போது நடைபெற்று வரும் அமைதிப் பேச்சுவார்த்தையில் ரஷியாவின் கோரிக்கைகள் மற்றும் நிபந்தனைகள் தீவிரமாக மறுபரிசீலனை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக ரஷிய அதிபர் புதின், அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் தொலைபேசியில் உரையாடினார். அப்போது, அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கும் வேளையில் இத்தகைய தாக்குதல்கள் நடப்பது பேச்சுவார்த்தையை வலுவிழக்கச் செய்யும் என்று புதின் சுட்டிக்காட்டியுள்ளார் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே ரஷியாவின் இந்தக் குற்றச்சாட்டுகளை உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி முற்றிலுமாக மறுத்துள்ளார். இது ஒரு அப்பட்டமான பொய் என்றும், உக்ரைன் தலைநகர் கீவ் மீது தாக்குதல் நடத்துவதற்குத் தகுந்த காரணத்தை உருவாக்கவே ரஷியா இதுபோன்ற நாடகங்களை ஆடுவதாகவும் அவர் பதிலடி கொடுத்துள்ளார்.
புதின் இல்லத்தின் மீதான இந்தத் தாக்குதல் குற்றச்சாட்டு, போர் நிறுத்த முயற்சிகளுக்குப் பெரும் முட்டுக்கட்டையாகக் கருதப்படுகிறது.
- தோழிகளான இருவரும் 3 ஆண்டுகள் முன் அமெரிக்கா சென்றுள்ளனர்.
- இருவரும் மேலும் 4 நண்பர்களுடன் அமெரிக்காவின் அலபாமாவுக்கு காரில் சுற்றுலா சென்றனர்.
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்த சாலை விபத்தில், 2 இந்திய இளம்பெண்கள் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்கள் தெலுங்கானாவின் மஹபூபாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த புல்லுகந்தம் மேக்னா ராணி (24) மற்றும் கடியால பாவனா (24) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தோழிகளான இருவரும் 3 ஆண்டுகள் முன் அமெரிக்கா சென்றுள்ளனர். இருவரும் கலிபோர்னியாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை நிறைவு செய்த நிலையில் அமெரிக்காவிலேயே வேலை தேடி வந்தனர்.
இந்நிலையில், இருவரும் மேலும் 4 நண்பர்களுடன் நேற்று முன் தினம் அமெரிக்காவின் அலபாமாவுக்கு காரில் சுற்றுலா சென்றுள்ளனர்.
சுற்றுலாவை முடித்து காரில் திரும்பியபோது மலைப்பாங்கான பகுதியில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காரில் பயணித்த ராணி, புவனா சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். எஞ்சிய 4 பேரும் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து விரைந்த மீட்புக்குழுவினர் 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்த ராணி, புவனாவின் உடல்களை விரைந்து இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பல முதியவர்கள் தப்பிக்க முடியாமல் தங்கள் அறைகளுக்குள்ளேயே சிக்கிக் கொண்டனர்.
- தலைநகர் ஜகார்டாவில் உள்ள அலுவலகக் கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 22 பேர் பலியாகினர்.
இந்தோனேசியாவில் முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 16 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
அங்கு, வடக்கு சுலவேசி மாகாணத்தில் உள்ள மனாடோ நகரில் 'வெர்தா தாமய்' என்ற முதியோர் இல்லம் இயங்கி வந்தது.
நேற்று இரவு சுமார் 8:30 மணியளவில் முதியோர் இல்லத்தில் திடீரென தீப்பிடித்தது. அந்த நேரத்தில் பெரும்பாலான முதியவர்கள் தங்கள் அறைகளில் உறங்கிக் கொண்டிருந்ததால், தீ பரவியதை அவர்களால் உணர முடியவில்லை. பல முதியவர்கள் தப்பிக்க முடியாமல் தங்கள் அறைகளுக்குள்ளேயே சிக்கிக் கொண்டனர்.
தகவலறிந்து தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். அங்கிருந்த சுமார் 30 பேரில் 12 முதல் 15 பேர் வரை பத்திரமாக மீட்கப்பட்டனர்.
இந்த விபத்தில் 16 முதியவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் மூன்று பேர் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அங்கிருந்து மீட்கப்பட்டவர்கள் தற்போது அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
கடந்த டிசம்பர் 9 அன்று தலைநகர் ஜகார்டாவில் உள்ள அலுவலகக் கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 22 பேர் பலியான நிலையில், தற்போது இந்த முதியோர் இல்ல விபத்து இந்தோனேசியாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- சுமார் 241 பயணிகள் ரெயிலில் சென்றுகொண்டிருந்தனர்.
- பசிபிக் பெருங்கடலையும் மெக்சிகோ வளைகுடாவையும் இணைக்கும் ரெயில் பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மெக்சிகோவில் நேற்று ரெயில் தடம் புரண்ட விபத்தில் 13 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பசிபிக் பெருங்கடலையும் மெக்சிகோ வளைகுடாவையும் இணைக்கும் இன்டர்-ஓசியானிக் ரெயில் சுமார் 241 பயணிகள் மற்றும் ஒன்பது பணியாளர்களுடன் சென்றுகொண்டிருந்தது.
அப்போது ஓக்ஸாகா மற்றும் வெராக்ரூஸ் எல்லையில் உள்ள நிஜண்டா நகருக்கு அருகே தடம் புரண்டு விபத்துக்கு உள்ளானது.
இந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்ததாகவும், 98 பேர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. காயமடைந்தவர்களில் 5 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் பசிபிக் பெருங்கடலையும் மெக்சிகோ வளைகுடாவையும் இணைக்கும் ரெயில் பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- புளோரிடாவில் டிரம்ப்- ஜெலன்ஸ்கி சந்திப்பு நடைபெற்றது.
- ரஷியா போர் தொடுக்காத வகையில் 50 வருட உத்தரவாதத்தை ஜெலன்ஸ்கி கோரியுள்ளார்.
ரஷியா- உக்ரைன் இடையிலான 4 வருட போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முயற்சி மேற்கொண்டு வருகிறது. அவர் 20 அம்ச திட்டத்தை பரிந்துரை செய்தார். இது தொடர்பாக உக்ரைனுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்த நிலையில்தான் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை, புளோரிடாவில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்தித்து பேசினார்.
அப்போது, அமைதி திட்டத்தின் ஒரு பகுதியாக அமெரிக்கா, உக்ரைனுக்கு 15 வருட பாதுகாப்பு உத்தரவாதத்தை வழங்க முன்வந்துள்ளதாக ஜெலன்ஸ்சி தெரிவித்துள்ளார். மேலும், ரஷியா, உக்ரைன் மீது வலுக்கட்டாயமாக ஆக்கிரமிப்பை முயற்சியை மேற்கொள்ளாதவாறு, 50 வருடத்திற்கு அமெரிக்கா பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தியதாக தெரிவித்துள்ளார். மேலும், யதார்த்தம், பாதுகாப்பு உத்தரவாதம் இன்றி இந்த போர் முடிவுக்கு வராது என்றார்.
இந்த சந்திப்பின்போது, உக்ரைன்- ரஷியா இடையே அமைதி ஒப்பந்தம் முன்பைவிட நெருக்கமாகியுள்ளது என டிரம்ப் வலியுறுத்தியுள்ளார். அத்துடன், ஒரு மாதத்திற்கு மேலான அமெரிக்கா தலைமையில் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தை முறிந்து போகக் கூடும் எனவும் தெரிவித்துள்ளார்.
முக்கிய பிரச்சினையில் ஒருமித்த கருத்து ஏற்பட இன்று பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
- 17 வருடத்திற்குப் பிறகு வங்கதேசம் திரும்பியுள்ளார்.
- இவரது பெயரை வாக்காளர் பட்டியலில் இணைக்க தேர்தல் ஆணையம் சம்மதம் தெரிவித்துள்ளது.
வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா தலைமையிலான ஆட்சி அகற்றப்பட்டது. முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் 12-ந்தேதி பொதுத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து 17 வருடமாக வெளிநாட்டில் (இங்கிலாந்து) தங்கியிருந்த முன்னாள் பிரதமர் கலிதா ஜியா மகன் தாரிக் ரகுமான் கடந்த 25-ந்தேதி தனது மனைவி, மகளுடன் நாடு திரும்பினார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தனது தாயாரை சென்று பார்த்தார். பின்னர், தேர்தலுக்கான வேலையில் இறங்கினார். முதற்கட்டாக தனது பெயரை வாக்காளர் பட்டியலில் இணைக்க பதிவு செய்தார்.
இந்த நிலையில் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். டாக்கா 17 தொகுதியில் தாரிக் ரகுமான் போட்டியிடுகிறார். ரகுமான் பெயரை வாக்காளர் பட்டியலில் இணைக்க தேர்தல் ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
- நாங்கள் இருவரும் இந்தியாவின் மிகப்பெரிய தப்பி ஓடியவர்கள் என லலித் மோடி வீடியோ வெளியீடு.
- இருவரையும் இந்தியா கொண்டு வந்தே தீருவோம் என இந்திய வெளியுறவுத்துறை பதில் அளித்திருந்தது.
விஜய் மல்லையாவின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட லலித் மோடி, நாங்கள் இருவரும் இந்தியாவின் மிகப்பெரிய தப்பி ஓடியவர்கள் என வீடியோ வெளியிட்டிருந்தார்.
பொருளாதார குற்றச்சாட்டில் ஈடுபட்டதாக இந்திய அரசால் குற்றம்சாட்டப்பட்ட இருவரும் வெளிநாட்டிற்கு தப்பி ஓடிய நிலையில் இந்தியாவை கிண்டல் செய்யும் வகையில் வீடியோ வெளியிட்டிருந்தார் லலித் மோடி. இதற்கு இணைய தளவாசிகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். மேலும், இந்திய அரசு அவர்களை நாட்டிற்கு அழைத்து வர முடியாதது குறித்து கேள்வி எழுப்பியிருந்தனர்.
இந்த நிலையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், இருவரையும் இந்தியா கொண்டு வர அரசு உறுதிப் பூண்டுள்ளது எனத் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறையின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில் "இந்தியாவில் இருந்து தப்பி ஓடியவர்கள், இந்திய சட்டத்தால் தேடப்படுபவர்கள், இந்தியாவுக்கு கொண்டு வரப்படுவார்கள் என்பதில் நாங்கள் உறுதிப்பூண்டுள்ளோம்.
குறிப்பாக இந்த இருவரையும் இந்தியா கொண்டு வர, நாங்கள் பல்வேறு அரசுகளுடன் பேசி வருகிறோம். அதற்கான செயல்முறை நடைபெற்று கொண்டிருக்கிறது. பல்வேறு வழக்குகளில், ஏராளமான வழக்கறிஞர்கள் சட்டப்பூர்வமாக ஈடுபட்டுள்ளனர். இருந்தபோதிலும், நாங்கள் அவர்கள் இந்தியா கொண்டு வர உறுதிப்பூண்டுள்ளோம். ஆகவே, இந்திய நீதிமன்றங்கள் முன் விசாரணையை எதிர்கொள்வார்கள்" எனத் தெரிவித்தார்.
இந்த நிலையில் தன்னுடைய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என லலித் மோடி தெரிவித்துள்ளார்.
"யாருடைய உணர்வையும் புண்படுத்தியிருந்தார், நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். குறிப்பாக நான் அதிக மரியாதை கொடுக்கும் இந்திய அரசிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என்னுடைய அறிக்கை தவறாக புரிந்து கொள்ளப்பட்டது, வெளியான செய்தி போன்று ஒருபோதும் எனக்கு நோக்கம் கிடையாது. ஆழ்ந்த மன்னிப்பை கேட்டுக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
- இத்தாலி மலைப்பகுதி கிராமத்தில் பிறந்நத பெண் குழந்தைக்கு லாரா என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
- லாராவின் பிறப்பு அந்தக் கிராமத்தின் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகக் கருதப்படுகிறது.
இத்தாலியின் அப்ரஸோ மலைப்பகுதியில் அமைந்துள்ள பாக்லியாரா டெய் மார்சி என்ற சிறிய கிராமத்தில், சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு குழந்தை பிறந்துள்ள செய்தி உலகம் முழுவதும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் கிராமத்தில் வசிக்கும் மரியா மற்றும் ஆன்டோனியோ ஆகியோருக்கு பிறந்த இந்த பெண் குழந்தைக்கு லாரா என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
கடந்த 1990-களின் நடுப்பகுதிக்குப்பிறகு (சுமார் 30 ஆண்டுகளாக) இந்தக் கிராமத்தில் எந்தக் குழந்தையும் பிறக்கவில்லை. லாராவின் பிறப்பு அந்தக் கிராமத்தின் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகக் கருதப்படுகிறது.
பாக்லியாரா டெய் மார்சி ஒரு மிகச்சிறிய கிராமம். இங்கு நிரந்தரமாக வசிப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. அதாவது, தகவல்களின்படி 20-க்கும் குறைவானவர்களே வசிக்கின்றனர். இத்தாலியின் பல மலைக் கிராமங்களைப் போலவே, இங்கும் இளைஞர்கள் வேலை தேடி நகரங்களுக்குச் சென்றுவிட்டதால், முதியவர்கள் மட்டுமே வசித்து வந்தனர்.
இந்நிலையில், லாராவின் பிறப்புச் செய்தி பரவியதும், அக்கம் பக்கத்து கிராமத்தினர் மற்றும் சுற்றுலாப் பயணிகள் எனப் பலரும் அந்தக் குழந்தையைப் பார்க்கவும், அக்குடும்பத்திற்கு வாழ்த்துச் சொல்லவும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இத்தாலிய ஊடகங்கள் இக்குழந்தையை "மிராக்கிள் பேபி" என்று கொண்டாடுகின்றன. ஏனெனில், மக்கள் தொகை குறைந்து வரும் இத்தாலிய கிராமங்களுக்கு இது ஒரு புதிய உயிர்ச்சக்தியைத் தந்துள்ளதாகக் கருதப்படுகிறது.






