என் மலர்tooltip icon

    உலகம்

    மனைவிகள் பற்றாக்குறை.. சீனாவுக்கு கடத்தப்படும் ஏழை இளம்பெண்கள் - மெகா மோசடி
    X

    மனைவிகள் பற்றாக்குறை.. சீனாவுக்கு கடத்தப்படும் ஏழை இளம்பெண்கள் - மெகா மோசடி

    • சீனாவில் தற்போது 100 பெண்களுக்கு 104 ஆண்கள் என்ற விகிதத்தில் பாலின விகிதம் உள்ளது.
    • நேபாளத்தின் கிராமப்புறங்களில் உள்ள ஏழைக் குடும்பங்களை இலக்கு வைக்கும் தரகர்கள், சீனாவில் ஆடம்பர வாழ்க்கையை வைத்து ஏமாற்றுகின்றனர்.

    நேபாளத்தில் வறுமையில் வாடும் இளம் பெண்களைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, அவர்களைச் சீனாவுக்குக் கடத்திச் சென்று விற்பனை செய்யும் கும்பல்கள் அம்பலமாகி உள்ளன.

    சீனாவில் முன்பிருந்த ஒரு குழந்தை கொள்கை காரணமாக அந்நாட்டில் ஆண்களின் எண்ணிக்கை பெண்களை விட பல கோடிகள் அதிகமாக உள்ளது. தோராயமாக சீனாவில் தற்போது 100 பெண்களுக்கு 104 ஆண்கள் என்ற விகிதத்தில் பாலின விகிதம் உள்ளது.

    இதனால் சீன ஆண்களுக்குத் தங்கள் நாட்டில் மணப்பெண் கிடைப்பது பெரும் சவாலாக மாறியுள்ளது.

    இதைப் பயன்படுத்திக் கொள்ளும் மனிதக் கடத்தல் கும்பல்கள், நேபாளம், பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகளிலிருந்து பெண்களைச் சீனாவுக்குக் கடத்துகின்றன.

    நேபாளத்தின் கிராமப்புறங்களில் உள்ள ஏழைக் குடும்பங்களை இலக்கு வைக்கும் தரகர்கள், சீனாவில் ஆடம்பர வாழ்க்கை மற்றும் கைநிறைய ஊதியம் கிடைக்கும் வேலை என ஆசை வார்த்தைகளைக் கூறி பெண்களைத் திருமணத்திற்குச் சம்மதிக்க வைக்கின்றனர்.

    இந்த கும்பலை சேர்ந்த சீன ஆண்கள் நேபாளத்திற்கு வந்து சட்டப்படித் திருமணம் செய்து கொள்வது போல நாடகமாடி, சுற்றுலா விசாவில் அந்தப் பெண்களைச் சீனாவுக்கு அழைத்துச் செல்கின்றனர்.

    சீனா சென்றடைந்த பிறகு, அந்தப் பெண்கள் அங்கிருக்கும் மற்ற ஆண்களுக்குப் பெருந்தொகைக்கு விற்பனை செய்யப்படுகின்றனர்.

    அவர்கள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டு, பாலியல் ரீதியாகவும் உடல் ரீதியாகவும் துன்புறுத்தப்படுவதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன. மேலும் அவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதும் அங்கிருந்து வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதும் கண்டறியப்பட்டுள்ளது.

    சீன சமூக வலைதளங்களில் மேட்ரிமோனி என்ற போர்வையில் நேபாளப் பெண்களை ஏலம் விடுவது போன்ற நேரலை வீடியோக்கள் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இதற்கிடையே நேபாள காவல்துறையின் மனிதக் கடத்தல் தடுப்புப் பிரிவு, காத்மாண்டு விமான நிலையத்தில் சீனர்களுக்கு மணப்பெண்களாக அழைத்துச் செல்லப்பட்ட பல பெண்களை மீட்டுள்ளது.

    இந்த விவகாரத்தில் சீனக் குடிமக்கள் மற்றும் அவர்களுக்கு உதவிய நேபாளத் தரகர்கள் பலரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

    வறுமையைப் பயன்படுத்திப் பெண்களின் வாழ்வைச் சிதைக்கும் இந்தத் தொழில்முறை கடத்தல் நெட்வொர்க் தெற்காசிய நாடுகளில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×