என் மலர்tooltip icon

    உலகம்

    • 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களை ரஷியாவுக்கு வடகொரியா அனுப்பியது.
    • நேட்டோ கூட்டமைப்பின் பொறுப்பற்ற செயலுக்கு பதிலடி நடவடிக்கையே இந்த போர் ஆகும்.

    பியாங்யாங்:

    நேட்டோ கூட்டணியில் இணைய முயன்ற உக்ரைன் மீது ரஷியா 2022-ம் ஆண்டு போர் தொடுத்தது. இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் செயல்படுகின்றன. அவை ஆயுத உதவி, பொருளாதார உதவிகளை உக்ரைனுக்கு வழங்குகின்றன. அதேபோல் ரஷியாவுக்கு அதன் நட்பு நாடான வடகொரியா ஆதரவாக உள்ளது. அதன்படி 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களை ரஷியாவுக்கு வடகொரியா அனுப்பியது.

    இரு நாடுகளுக்கிடையே கடுமையான போர் நிலவுவதாகல், 3ம் உலகப்போர் ஏற்படும் அபாயம் இருப்பதாக ஐ.நா. சபை மற்றும் பல நாடுகள் கவலை தெரிவித்தன. இந்தநிலையில் ரஷிய ராணுவ மந்திரி ஆண்ட்ரே பெலோசோவ் தலைமையிலான குழுவினர் வடகொரியா சென்று அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன்னை சந்தித்து பேசினர்.

    அப்போது கிம் ஜாங் அன் கூறியதாவது, நேட்டோ கூட்டமைப்பின் பொறுப்பற்ற செயலுக்கு பதிலடி நடவடிக்கையே இந்த போர் ஆகும். எனவே உக்ரைனுக்கு எதிரான போரில் வடகொரியா எப்போதும் ரஷியாவுக்கு தனது ஆதரவை அளிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
    • பொது போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் கடந்த மாதத்தில் இருந்து குளிர்காலம் தொடங்கியது. இதனை தொடர்ந்து அங்கு கடுமையான பனிப்பொழிவு நிகழ்ந்து வருகிறது. குறிப்பாக அந்த நாட்டின் மேற்கு மாகாணங்களான வாஷிங்டன், பென்சில்வேனியா உள்ளிட்டவற்றில் வழக்கத்தை விடவும் அதிகமாக குளிர் வீசி பனிப்பொழிவு அதிகரித்து காணப்படுகிறது.

    இதனால் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டன. பனித்துகள்கள் சாலை மற்றும ரெயில் தண்டவாளங்களை மூடியதால் பொது போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

    இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்தநிலையில் வாஷிங்டன், ஓகியோ, மிக்சிகன் உள்ளிட்டவற்றில் 61 செ.மீ அளவுக்கு பனிப்பொழிவு நிகழ்ந்துள்ளது. அதிகப்பட்சமாக பென்சில்வேனியாவில் வடமேற்கு நகரங்களில் 73 செ.மீ வரை பனிப்பொழிவு ஏற்பட்டதாக அந்த நாட்டின் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

    • சீனா படையெடுக்கும் பட்சத்தில் தைவானை பாதுகாப்போம் என அமெரிக்கா தெரிவித்திருந்தது.
    • பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை பாதுகாக்க சீனா பதிலடி நடவடிக்கைகளை எடுக்கும்.

    பிஜீங்:

    சீனாவில் கடந்த 1949-ல் நடந்த உள்நாட்டு போருக்கு பிறகு தைவான் தனி நாடாக உருவானது. ஆனாலும் தைவான் தங்கள் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என சீன அதிபர் ஜி ஜின்பிங் தலைமையிலான சீன அரசு கூறி வருகிறது. அதுமட்டும் இன்றி தேவை ஏற்பட்டால் தைவானை கைப்பற்ற, படை பலத்தை பயன்படுத்த தயங்கமாட்டோம் எனவும் சீனா கூறி வருகிறது. மேலும், தைவானின் வான் எல்லைக்குள் அவ்வப்போது சீன போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்து மிரட்டல் விடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளது.

    அதேவேளை, தீவு நாடான தைவானுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வருகிறது. தைவானுக்கு அதிக அளவில் அமெரிக்கா ஆயுதங்களை விற்பனை செய்து வருகிறது. சீனா படையெடுக்கும் பட்சத்தில் தைவானை பாதுகாப்போம் என அமெரிக்கா தெரிவித்திருந்தது.

    ஆயுத விற்பனையில் அடுத்தகட்டமாக, 385 மில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. ஆயுத விற்பனைக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. அதன்படி போர் விமானங்கள் மற்றும் ரேடார் அமைப்புகளுக்கான உதிரி பாகங்கள் ஆகியவை அடுத்த ஆண்டு முதல் டெலிவரி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நடவடிக்கைக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இது குறித்து சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறியிருப்பதாவது:-

    சீனாவின் தைவான் பிராந்தியத்திற்கு அமெரிக்க ஆயுத விற்பனை செய்வது, ஒரே ஒரு சீனா என்ற கொள்கை, சீனா-அமெரிக்க கூட்டறிக்கைகள், சீனாவின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பு நலன்களை கடுமையாக மீறும் செயலாகும். சர்வதேச சட்டத்தையும் கடுமையாக மீறுவதாகும்.

    ஆயுத விற்பனையானது தைவான் பிரிவினைவாத சக்திகளுக்கு மிகவும் தவறான சிக்னலை அனுப்புகிறது. இதனால் தைவான் ஜலசந்தி முழுவதும் சீனா-அமெரிக்க உறவுகள், அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு தீங்கு விளைவிக்கும்.

    தைவானுக்கு ஆயுதம் வழங்குவதையும், தைவானுக்கு சுதந்திரம் கேட்கும் பிரிவினைவாத சக்திகளை தூண்டுவதையும் ஆதரிப்பதையும் அமெரிக்கா உடனடியாக நிறுத்த வேண்டும். நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை பாதுகாக்க சீனா பதிலடி நடவடிக்கைகளை எடுக்கும்.

    இவ்வாறு சீன வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

    தைவானைச் சுற்றி சீனா தனது ராணுவ நடவடிக்கையை அதிகரித்து அச்சுறுத்தி வரும் நிலையில், அமெரிக்காவுடனான தனது ராணுவ உறவுகளை விரிவுபடுத்த தைவான் முயன்று வருவது குறிப்பிடத்தக்கது.

    • அல் கொய்தா உடன் நெருங்கிய உறவை ஹயாத் தஹ்ரிர் அல் ஹாம் அமைப்பு பேணி வந்துள்ளது.
    • அலெப்போ நகர் வரலாற்றுக் காலம் தொட்டே சிரியாவில் முக்கிய நகரமாக விளங்கி வருகிறது.

    மத்திய கிழக்கு நாடான சிரியாவில் மீண்டும் உள்நாட்டு போர் வெடித்துள்ளது. சிரியா அதிபராக பஷர் அல் அசாத் கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் உள்ளார். கடந்த 2011 ஆம் ஆண்டு சிரியாவில் வேலைவாய்ப்பு பிரச்சனை உள்ளிட்ட காரணங்களால் அதிபர் பஷர் ஆட்சிக்கு எதிராக நடந்த போராட்டங்கள் உள்நாட்டுப் போராக வெடித்தது.

    பஷரை ஆதரிப்போர் மற்றும் எதிர்ப்போர் என இரு பிரிவினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் பலர் கொல்லப்பட்டனர். ரஷிய அதிபர் புதின் தலையீட்டால் பஷர் தனது ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டார். போராட்டக்காரர்களை ஒடுக்க ரஷியா பஷருக்கு பேருதவி செய்தது.

    2012 ஆம் ஆண்டுமுதல் போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டிலிருந்த கிழக்கு அலெப்போ நகரை ரஷியா தனது விமானப்படை மூலம் மீட்டு 2016 ஆம் ஆண்டில் அதிபர் பஷர் அல் அசாத்திடம் மீண்டும் ஒப்படைத்தது. அதன் பிறகான காலத்தில் சிறிய அளவிலான எதிர்ப்பு ஆங்காங்கே போராட்டங்கள் என்ற அளவில் மட்டுமே இருந்த நிலையில் தற்போது மீண்டும் உள்நாட்டுப் போராக மாறியுள்ளது.

    முந்தைய போராட்டங்களில் தீவிரமாகச் செயல்பட்ட ஹயாத் தஹ்ரிர் அல் ஹாம் கிளர்ச்சி அமைப்பினர் திடீரென மீண்டும் ராணுவத்துடன் சண்டையைத் தொடங்கியுள்ளனர். அமரிக்கா மற்றும் ஐநா சபையால் பயங்கரவாத அமைப்பாக வரையறுக்கப்பட்ட இதன் தலைவராக அபு முகமது அல்-கோலானி உள்ளார். முந்திய காலங்களில் அல் கொய்தா உடன் நெருங்கிய உறவை இவ்வமைப்பு பேணி வந்துள்ளது

    இந்நிலையில் தற்போது வடமேற்கு சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் தாக்குதலில் டசன் கணக்கான படையினர் கொல்லப்பட்டதாக சிரியா ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும் கிளர்ச்சியாளர்கள் அலெப்போ நகரின் பெரும்பகுதியைக் கைப்பற்றியுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

    இதனையடுத்து அலெப்போவில் மையம் கொண்டுள்ள கிளர்ச்சியாளர்கள் மீது ரஷிய ராணுவம் தொடர்ந்து குண்டுவீசி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் இதுவரை 300க்கும் மேற்பட்ட கிளர்ச்சியாளர்கள் உயிரிழந்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

    சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் -இல் இருந்து 350 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு பகுதியில் உள்ள அலெப்போ நகர் வரலாற்றுக் காலம் தொட்டே சிரியாவில் முக்கிய நகரமாக விளங்கி வருவது குறிப்பிடத்தக்கது. 

    • உயிரிழந்த மாணவரின் பெயர் சாய் தேஜா என்று தகவல் வெளியாகியுள்ளது.
    • சாய் தேஜா சிகாகோவில் உள்ள பெட்ரோல் பங்கில் பகுதி நேர வேலை செய்து வந்துள்ளார்.

    அமெரிக்காவின் சிகாகோ நகரில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே தெலுங்கானாவைச் சேர்ந்த மாணவர் ஒருவர் மர்மநபர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    உயிரிழந்த மாணவரின் பெயர் சாய் தேஜா என்று தகவல் வெளியாகியுள்ளது. சாய் தேஜா இந்தியாவில் தனது பட்டப்படிப்பை முடித்துவிட்டு எம்.பி.ஏ. படிப்பதற்காக அமெரிக்கா சென்றுள்ளார். அவர் சிகாகோவில் உள்ள பெட்ரோல் பங்கில் பகுதி நேர வேலை செய்து வந்துள்ளார்.

    இந்த சம்பவம் தொடர்பாக சிகாகோவில் உள்ள இந்திய துணைத் தூதரகம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அந்த பதிவில், "இந்திய மாணவர் சாய் தேஜா கொலை செய்யப்பட்ட செய்தியை கேட்டு நாங்கள் அதிர்ச்சியும் ஆழ்ந்த வருத்தமும் அடைந்துள்ளோம். குற்றவாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோருகிறோம். பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு தூதரகம் அனைத்து உதவிகளையும் செய்யும்" என்று தெரிவிதிக்கப்பட்டுள்ளது.

    இந்திய துணைத் தூதரக பதிவை பகிர்ந்துள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், "இந்தச் செய்தியால் நான் மிகவும் வருத்தப்படுவதாக" பதிவிட்டுள்ளார்.

    • அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் பெயர்களை அறிவித்து வருகிறார்.
    • அமெரிக்க மக்களை பாதுகாக்கவும் உழைத்து வருகிறார்.

    அமெரிக்காவில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த அதிபர் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற டொனால்டு டிரம்ப் அடுத்த மாதம் அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக பதவியேற்க உள்ளார். அதிபர் பதவியேற்க இன்னும் ஒன்றரை மாதங்கள் உள்ள நிலையில், டொனால்டு டிரம்ப் தனது அமைச்சரவையில் இடம்பெறும் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் பெயர்களை அறிவித்து வருகிறார்.

    இதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பலர் இடம்பெற்று வருகின்றனர். அந்த வரிசையில், அமெரிக்க புலனாய்வு அமைப்பு எஃப்.பி.ஐ. (FBI) இயக்குநராக இந்திய வம்சாவளியை சேர்ந்த பென்டகன் அதிகாரி காஷ்யப் படேல்-ஐ டிரம்ப் நியமனம் செய்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "காஷ்யப் சிறந்த வழக்கறிஞர் மற்றும் புலனாய்வு அதிகாரி. அமெரிக்காவிற்கு முன்னுரிமை என்பதை தனது கொள்கையாக கொண்ட அவர், ஊழலை எதிர்த்தும், நீதியை காக்கவும், அமெரிக்க மக்களை பாதுகாக்கவும் உழைத்து வருகிறார்," என்று குறிப்பிட்டுள்ளார்.

    தற்போதைய எஃப்.பி.ஐ. இயக்குநராக இருக்கும் கிறிஸ்டோபர் ரே-வை, கடந்த 2017 ஆம் ஆண்டு டொனால்டு டிரம்ப் தான் நியமித்து இருந்தார். எனினும், தன் மீதான வழக்குகளை எஃப்.பி.ஐ. கையாண்ட விதம் குறித்தும் அதன் இயக்குநர் கிறிஸ்டோபர் மீதும் டொனால்டு டிரம்ப் கடும் விமர்சனங்களை முன்வைத்திருந்தார். இதைத் தொடர்ந்து தான் எஃப்.பி.ஐ. இயக்குநராக 44 வயதான காஷ்யப் படேல் நியமிக்கப்படுகிறார்.

    • 100 சவீத வரிகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.
    • அமெரிக்காவுடன் உள்ள உறவையும் துண்டித்துக் கொள்ளுங்கள்.

    அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள டொனால்டு டிரம்ப், அமெரிக்க டாலருக்கு பதிலாக மற்றொரு நாணயத்தை உருவாக்கவோ அல்லது ஆதரிக்கவோ கூடாது என பிரிக்ஸ் (BRICS) உறுப்பு நாடுகளை கேட்டுக்கொண்டுள்ளார். இதற்கு மாறான நடவடிக்கைகளில் ஈடுபடும் நாடுகள் 100 சவீத வரிகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்று அவர் மேலும் எச்சரிக்கை விடுத்தார்.

    பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் புதிதாக எந்த நாணயத்தையும் உருவாக்கக் கூடாது. மேலும், ஏற்கனவே இருக்கும் வேறு நாட்டு நாணயத்தையும் பயன்படுத்த கூடாது. சர்வதேச வியாபாரங்களுக்கு பிரிக்ஸ் நாடுகள் அமெரிக்க டாலரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதை மாற்ற நினைக்கும் நாடுகளுக்கு 100 சதவீதம் வரை கூடுதல் வரி விதிக்கப்படும்.

    அவர்களுக்கு வேறொரு ஏமாளி கிடைத்தால் அவர்களுடன் வியாபாரம் செய்யட்டும். டாலர் வேண்டாம் என்றால் அமெரிக்காவுடன் உள்ள உறவையும் துண்டித்துக் கொள்ளுங்கள் என்று டொனால்டு டிரம்ப் பதிவிட்டுள்ளார்.

    இது குறித்த பதிவில், "பிரிக்ஸ் நாடுகள் டாலரை தவிர்க்க முயற்சிக்கும் போது நாங்கள் வேடிக்கை பார்த்த காலம் முடிந்து விட்டது. இந்த நாடுகள் புதிய பிரிக்ஸ் நாணயத்தை உருவாக்கவோ அல்லது வலிமைமிக்க அமெரிக்க டாலருக்குப் பதிலாக வேறு எந்த நாணயத்தையும் உருவாக்க கூடாது. இதை மீறும் போது 100% கூடுதல் வரிகளை சந்திக்க வேண்டி இருக்கும். இல்லையெனில், அமெரிக்கப் பொருளாதாரத்தில் விற்பனை செய்வதிலிருந்து விடைபெற்று கொள்ளலாம்."

    "அவர்கள் மற்றொரு "ஏமாளியை தேடிக் கொள்ளலாம். சர்வதேச வர்த்தகத்தில் அமெரிக்க டாலரை பிரிக்ஸ் மாற்றும் வாய்ப்பு இல்லை, இப்படி செய்ய நினைக்கும் நாடுகள் அமெரிக்காவிடம் இருந்து விடைபெற்றுக் கொள்ளலாம்," என்று குறிப்பிட்டுள்ளார்.

    • இஸ்கானுடன் தொடர்புடைய 17 பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
    • மத அடிப்படைவாத அமைப்பான இஸ்கானுக்கு தடை விதிக்க நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது

    வங்கதேசத்தில் இந்துக்கள் போராட்டத்தை தூண்டியதாக இந்து மத சாமியாரும் இஸ்கான் தலைவருமான சின்மோய் கிருஷ்ண தாஸ் கடந்த நவம்பர் 25 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது.

     

    இந்நிலையில் வங்கதேசத்தில் 2 இந்து மத சாமியார்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறையில் உள்ள சின்மோய் கிருஷ்ண தாஸ்க்கு உணவு, மருத்துப்பொருட்கள் மற்றும் பணத்தை கொடுக்கச் சென்ற ருத்ரப்ரோட்டி கேசப் தாஸ் மற்றும் ரங்கநாத் சியாமா சுந்தர் தாஸ் ஆகிய இரு இஸ்கான் இளம் சாமியார்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த கைது குறித்து எந்த விளக்கமும் அளிக்காத வங்கதேச போலீஸ் வழக்குகள் சந்தேகத்தின் பேரில் கொத்வாலி காவல் நிலையத்தில் வைத்து அவர்கள் கைது செய்யப்ட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    வங்கதேசத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் ஆட்சி கவிழ்க்கப்பட்டதில் இருந்து சிறுபான்மையினரான இந்துக்கள் மீது குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவறை 200க்கும் மேற்பட்ட கோவில்கள் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இதற்கிடையே சின்மோய் கிருஷ்ண தாஸ் கைதை எதிர்த்து போராட்டங்களும் நடந்து வருகிறது. சின்மோய் கிருஷ்ண தாஸ் உட்பட இஸ்கானுடன் தொடர்புடைய 17 பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

     

    முன்னதாக மத அடிப்படைவாத அமைப்பான இஸ்கானுக்கு தடை விதிக்க கோரி வங்கதேச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. ஆனால் உலகளாவிய அமைப்புக்கு தடை விதிப்பது சடத்தியமில்லை என நீதிமன்றம் மறுத்தது குறிப்பிடத்தக்கது. 

    • ஹிஸ்புல்லா பலவீனமாகிவிட்டது என்று நினைப்பவர்கள் தோற்றுவிட்டார்கள் என்று அவர் தெரிவித்தார்.
    • ஒப்பந்தத்தின்படி 60 நாட்களுக்குப் போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டது

    காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலுக்கு எதிராக லெபனானில் இயங்கி வரும் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர்.

    இதனால் இஸ்ரேலின் வடக்குப் பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறினர். அவர்களை மீண்டும் அவர்களுடைய இடத்தில் குடியமர்த்துவதுதான் நோக்கம் என இஸ்ரேல் அறிவித்துக் கடந்த மாதம் 1-ந்தேதியில் இருந்து லெபனான் மீது தாக்குதல் நடத்தியது.

    தரைவழி தாக்குதலையும் தொடங்கியது. மொத்தமாக ஹிஸ்புல்லாவினரின் பேஜர் கருவிகளை வெடிக்கச் செய்தது, லெபனான் தலைநகர் பெய்ரூட் மீதான தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவை கொன்றது என இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தியது.

     

    இதனால் லெபனான் மக்களும் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி இடம்பெயர்ந்தனர். 3,800க்கும் மேற்பட்ட லெபனானியர்கள் இந்த தாக்குதல்களில் கொல்லப்பட்டனர். இதற்கிடையே இஸ்ரேல்- லெபனான் இடையில் போர் நிறுத்தம் ஏற்பட அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், ஐ.நா. முயற்சி மேற்கொண்டன. இதன்படி ஹிஸ்புல்லா மற்றும் இஸ்ரேல் இடையே கையெழுத்தான போர் நிறுத்த ஒப்பந்தம் கடந்த நவம்பர் 27 முதல் அமலுக்கு வந்தது.

    இதை ஹிஸ்புல்லாவின் தற்போதைய தலைவர் நைம் காசிம் வெற்றியாக வர்ணித்தார். இஸ்ரேல்- ஹிஸ்புல்லா போர் நிறுத்தம் நமக்கு கிடைத்த மாபெரும் வெற்றி, நாம் அவர்களை தடுத்ததால் நாம் பாதுகாப்பாக உள்ளோம், இது நமது எதிரி ஹிஸ்புல்லாவை அழிப்பது தடுக்கப்பட்டுள்ளது. ஹிஸ்புல்லா பலவீனமாகிவிட்டது என்று நினைப்பவர்கள் தோற்றுவிட்டார்கள் என்று அவர் தெரிவித்தார்.

     

     ஹிஸ்புல்லா தலைவர் - நைம் காசிம் 

    இந்த நிலையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இஸ்ரேல் மீண்டும் லெபனான் பகுதிகளில் தாக்குதல் நடத்தியுள்ளது. ஹிஸ்புல்லா தாக்குதல் நடத்த தயாராக இருந்ததாகக் கூறி இஸ்ரேல் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

    ஆனால் தாங்கள் எந்த தாக்குதலுக்கும் தயாராக வில்லை என ஹிஸ்புல்லா மறுத்துள்ளது.போர் காரணமாக வெளியேறிய லெபனானியர்கள் மீண்டும் தங்கள் பகுதிக்கு திரும்பி வருகிறார்கள். அவர்களைத் தடுக்கும் வகையிலேயே இஸ்ரேல் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.

     

    ஒப்பந்தத்தின்படி 60 நாட்களுக்குப் போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டது. லிட்டானி ஆற்றின் வடக்க்குப் பகுதிக்கு ஹிஸ்புல்லா அமைப்பினர் பின்வாங்க வேண்டும். இஸ்ரேல் படை தனது எல்லைக்குத் திரும்ப வேண்டும்.

    எல்லையின் இடைப்பட்ட பகுதியை லெபனான் மற்றும் ஐநா அமைதிப்படை கண்காணிக்கும் என்பதே ஒப்பந்தமாகும். ஆனால், இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்த இரண்டு நாட்களில் இஸ்ரேல் தாக்குதல் நடந்துள்ளதால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • அல் கொய்தா உடன் நெருங்கிய உறவை இவ்வமைப்பு பேணி வந்துள்ளது.
    • தலைநகர் டமாஸ்கஸ் -இல் இருந்து 350 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு பகுதியில் அலெப்போ உள்ளது.

    மத்திய கிழக்கு நாடான சிரியாவில் மீண்டும் உள்நாட்டு போர் வெடித்துள்ளது. சிரியா அதிபராக பஷர் அல் அசாத் கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் உள்ளார். கடந்த 2011 ஆம் ஆண்டு சிரியாவில் வேலைவாய்ப்பு பிரச்சனை உள்ளிட்ட காரணங்களால் அதிபர் பஷர் ஆட்சிக்கு எதிராக நடந்த போராட்டங்கள் உள்நாட்டுப் போராக வெடித்தது.

    பஷரை ஆதரிப்போர் மற்றும் எதிர்ப்போர் என இரு பிரிவினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் பலர் கொல்லப்பட்டனர். ரஷிய அதிபர் புதின் தலையீட்டால் பஷர் தனது ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டார். போராட்டக்காரர்களை ஒடுக்க ரஷியா பஷருக்கு பேருதவி செய்தது.

    2012 ஆம் ஆண்டுமுதல் போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டிலிருந்த கிழக்கு அலெப்போ நகரை ரஷியா தனது விமானப்படை மூலம் மீட்டு 2016 ஆம் ஆண்டில் அதிபர் பஷர் அல் அசாத்திடம் மீண்டும் ஒப்படைத்தது. அதன் பிறகான காலத்தில் சிறிய அளவிலான எதிர்ப்பு அங்கங்கே போராட்டங்கலகள் என்ற அளவில் மட்டுமே இருந்த நிலையில் தற்போது மீண்டும் உள்நாட்டுப் போராக மாறியுள்ளது.

     

    முந்தைய போராட்டங்களில் தீவிரமாகச் செயல்பட்ட ஹயாத் தஹ்ரிர் அல் ஹாம் கிளர்ச்சி அமைப்பினர் திடீரென மீண்டும் ராணுவத்துடன் சண்டையைத் தொடங்கியுள்ளனர். அமரிக்கா மற்றும் ஐநா சபையால் பயங்கரவாத அமைப்பாக வரையறுக்கப்பட்ட இதன் தலைவராக அபு முகமது அல்-கோலானி உள்ளார். முந்திய காலங்களில் அல் கொய்தா உடன் நெருங்கிய உறவை இவ்வமைப்பு பேணி வந்துள்ளது

     

    இந்நிலையில் தற்போது வடமேற்கு சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் தாக்குதலில் டசன் கணக்கான படையினர் கொல்லப்பட்டதாக சிரியா ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும் கிளர்ச்சியாளர்கள் அலெப்போ நகரின் பெரும்பகுதியைக் கைப்பற்றியுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது. இதனால் அலெப்போ நகரில் இருந்து ராணுவம் தாற்காலிகமாக பின்வாங்கி உள்ளது.

     

    மேலும் அலெப்போவில் மையம் கொண்டுள்ள கிளர்ச்சியாளர்கள் மீது ராணுவம் தொடர்ந்து குண்டுவீச்சு நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

    இன்று [சனிக்கிழமை] அலெப்போ புறநகர்ப் பகுதியில் ரஷிய மற்றும் சிரிய போர் விமானங்கள் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து தாக்குதல் நடாத்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் -இல் இருந்து 350 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு பகுதியில் உள்ள அலெப்போ நகர் வரலாற்று காலம் தொட்டே சிரியாவில் முக்கிய நகரமாக விளங்கி வருவது குறிப்பிடத்தக்கது. 

    • உக்ரைனுக்கு உதவும் நாடுகளுக்கு ரஷிய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்தார்.
    • ஹைப்பர்சோனிக் ஏவு கணைகளை அதிகளவில் தயாரிக்க புதின் உத்தரவிட்டுள்ளார்.

    ரஷியா-உக்ரைன் இடையிலான போர் ஆயிரம் நாட்களைக் கடந்து நீடித்துக் கொண்டிருக்கிறது. இதில் உக்ரைனுக்கு அமெரிக்கா உதவி வருகிறது.

    சமீபத்தில் முதல் முறையாக அமெரிக்க ஏவுகணையை பயன்படுத்தி ரஷியா மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியது. இதனால் ஆத்திரம் அடைந்து உள்ள ரஷியா, போரில் முதல்முறையாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஐ.சி.பி.எம் ஏவுகணையை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியது.

    மேலும் உக்ரைனுக்கு உதவும் நாடுகளுக்கு ரஷிய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்தார். உக்ரைன் போரில் பயன்படுத்துவதற்காக ஹைப்பர்சோனிக் ஏவு கணைகளை அதிகளவில் தயாரிக்க புதின் உத்தரவிட்டுள்ளார்.

    இந்நிலையில் ரஷியாவினால் ஆக்கிரமிக்கப்படாத உக்ரைன் பகுதிகளை நேட்டோவின் கீழ் கொண்டு வந்தால் ரஷியாவுடனான போரை நிறுத்த முடியும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

    மேலும் பேசிய அவர், இதை தான் நாம் முதலில் செய்யவேண்டும். அதன்பின்பு உக்ரைன் தற்போது ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை பேச்சுவார்த்தை நடத்த திரும்பப் பெற முடியும் என்று ஜெலன்ஸ்கி கூறினார்.

    இந்த மாத தொடக்கத்தில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதில் இருந்து உக்ரைன் - ரஷியா போர் நிறுத்தம் குறித்தும் அமைதி ஒப்பந்தம் குறித்த பேச்சு அடிபடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • தென் கொரியாவின் வான் எல்லைக்குள் 11 சீன மற்றும் ரஷ்ய இராணுவ விமானங்கள் வட்டமடித்தன.
    • இதனால் தென் கொரியாவில் போர் பதற்றம் ஏற்பட்டது.

    தென் கொரியாவின் வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் 5 சீன இராணுவ விமானங்களும், 6 ரஷிய இராணுவ விமானங்களும் நுழைந்ததாக அந்நாட்டு இராணுவம் அறிவித்தது. இதனை தொடர்ந்து தென் கொரியாவின் இராணுவம் போர் விமானங்களை ஏவியது. இதனால் தென் கொரியாவில் போர் பதற்றம் ஏற்பட்டது.

    கிட்டத்தட்ட 4 மணிநேரம் தென் கொரியாவின் வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் வட்டமடித்த 11 சீன மற்றும் ரஷிய இராணுவ விமானங்கள் பின்னர் பாதுகாப்பாக வெளியேறின.

    முன்னறிவிப்பின்றி சீன மற்றும் ரஷிய இராணுவ விமானங்கள் தென்கொரிய வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் பறந்ததற்கு தென்கொரியா எதிர்ப்பு தெரிவித்தது.

    சீன மற்றும் ரஷிய இராணுவ விமானங்கள் தென் கொரியாவின் வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் ஊடுருவுவது சமீபத்திய ஆண்டுகளில் அடிக்கடி நிகழும் நிகழ்வாகிவிட்டது குறிப்பிடத்தக்கது.

    ×