என் மலர்
தலைப்புச்செய்திகள்
- மோட்டார் ஸ்போர்ட்ஸ் விளையாட்டுக்கே மிகப்பெரிய ஊக்கமாக அமைந்தது.
- லோகோவை பயன்படுத்துவதற்கான அனுமதியை நான் அரசிடம் கேட்டுப் பெற்றேன்.
நடிகரும், ரேசருமான அஜித் குமார் சர்வதேச போட்டியின் போது, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) Logo-வை, கார்- ரேஸிங் உபகரணங்கள் மற்றும் ஜெர்சியில் பயன்படுத்தியதற்காக, தமிழ்நாடு அரசு சார்பில் நன்றி தெரிவித்து மகிழ்கிறோம் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவரது எக்ஸ் தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து நடிகரும், ரேசருமான அஜித் குமார் மனம் திறந்துள்ளார்.
அவர் கூறியதாவது:-
இந்தியாவின் முதல் ஸ்ட்ரீட் ரேசிங்கை தமிழ்நாடு அரசு சென்னையில் நடத்தியது மோட்டார் ஸ்போர்ட்ஸ் விளையாட்டுக்கே மிகப்பெரிய ஊக்கமாக அமைந்தது.
ஒரு மோட்டார் ஸ்போர்ட்ஸ் ரசிகனாக அதற்கு நன்றிக்கடன் செலுத்தும் விதமாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) லோகோவை பயன்படுத்துவதற்கான அனுமதியை நான் அரசிடம் கேட்டுப் பெற்றேன்.
அவர்கள் எனக்கு ஸ்பான்சர் செய்யவில்லை, யாரிடமும் நான் ஸ்பான்சர்ஷிப் கேட்பதும் இல்லை. இந்த விளையாட்டு மட்டுமல்ல அனைத்து விளையாட்டுகளுக்கும் பல நல்ல விஷயங்களை SDAT செய்து வருகிறது.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
- இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அவர்களுக்கு திருமணம் நடந்தது.
- ஆதாரங்களை அழிக்கும் நோக்கில் அவரது உடலை தங்கள் வயலில் வைத்து எரித்துள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தில், வரதட்சணை கேட்டு 21 வயது கர்ப்பிணி பெண் ஒருவர் கணவர் மற்றும் உறவினர்களால் அடித்துக் கொல்லப்பட்டார் .
மைன்புரி மாவட்டத்தின் கோபால்பூர் கிராமத்தில் ரஜினி குமாரி என்ற அந்த 21 பெண் கணவர் சச்சின் உடன் வசித்து வந்தார். இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அவர்களுக்கு திருமணம் நடந்தது. ரஜினி அண்மையில் கர்ப்பமாகி உள்ளார்.
ரஜினியை கணவர் சச்சினும் அவரது உறவினர்களும் ரூ.5 லட்சம் கூடுதல் வரதட்சணை கேட்டு அழுத்தம் கொடுத்து வந்தனர்.
இதை நிறைவேற்றத்தால், அவர்கள் நேற்று முன் தினம் (வெள்ளிக்கிழமை) ராஜனியை கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் ரஜினி உயிரிழந்தார்.
பின்னர், ஆதாரங்களை அழிக்கும் நோக்கில் அவரது உடலை தங்கள் வயலில் வைத்து எரித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து அறிந்த ராஜனியின் தாயார் சுனிதா தேவி சனிக்கிழமை அன்று காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதற்கிடையே தாயார் சுனிதா தேவி அளித்த குறித்து புகார் அளித்தார். புகாரின் பேரில் சச்சின், அவரது சகோதரர்கள் பிரான்ஷு மற்றும் சஹ்பாக், உறவினர்களான ராம்நாத், திவ்யா மற்றும் டினா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
- விசாரணை முடிந்த பின்பு இறுதி அறிக்கையில் என்ன வருகின்றது என்பதை பார்த்து பேசுவோம்.
- டிசம்பரில் நடத்த வேண்டிய கூட்டத்தை ஏன் முன்கூட்டியே நடத்தினீர்கள் என பல கேள்விகள் உள்ளது.
கோவையில் இன்று நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கரூர் சம்பவம் தொடர்பாக அரசின் சார்பில் முழு விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கின்றன. மாவட்டத்தில் நடந்த நிகழ்வு குறித்து, கரூரிலிருந்து நான் முழு விளக்கம் கொடுத்துள்ளேன். தற்போது இது தொடர்பாக எஸ்.ஐ.டி. நிறுவப்பட்டு, விசாரணை சென்று கொண்டிருக்கிறது.
விசாரணை முடிந்த பின்பு இறுதி அறிக்கையில் என்ன வருகின்றது என்பதை பார்த்து பேசுவோம். அதுதான் சரியாக இருக்கும்.
உங்களைப் போன்ற ஒரு பத்திரிகையாளரிடம் நான் கேட்டேன். அரசின் மீது கேட்கக்கூடிய கேள்விகள், இன்னொரு பக்கம் ஏன் திரும்பி போகவில்லை என்று கேட்டேன். அதனை தான் உங்களிடமும் கூறுகிறேன். யாரை நோக்கி நீங்கள் கேட்க வேண்டிய கேள்வி இருக்கிறதோ, அதை நீங்கள் தவிர்த்து விடுகிறீர்கள். நீங்களே உங்களை சுய பரிசோதனை செய்து பாருங்கள்.
ஏன் 2 மணி நேரம் லேட் ஆக வந்தீர்கள். 500 மீட்டருக்கு முன்பாக ஸ்கிரீன் போட்டு லைட்டை ஏன் ஆப் செய்தீர்கள் என்று கேட்க வேண்டும். 12 மணிக்கு அறிவித்துவிட்டு ஏன் 7 மணிக்கு வந்தீர்கள்.
டிசம்பரில் நடத்த வேண்டிய கூட்டத்தை ஏன் முன்கூட்டியே நடத்தினீர்கள் என பல கேள்விகள் உள்ளது. இதெல்லாம் பத்திரிகைகள், சமூக வலைதளங்களில் வருவதில்லை விவாதத்திற்கு எடுத்துக் கொள்வதில்லை.
யாரை நோக்கி நீங்கள் கேட்க வேண்டிய கேள்வி இருக்கிறதோ அதை எல்லாம் தவிர்த்து விடுகிறீர்கள். ஒரு கணம் நீங்களே உங்களை சுய பரிசோதனை செய்து பாருங்கள்.
எதார்த்த சூழ்நிலையை எடுத்துச் சொல்ல வேண்டிய கடமை நம்மிடம் இருக்கிறது. என்ன நடந்தது?. எப்படி நடந்தது?. இதில் யாரெல்லாம் இருக்கிறார்கள். ஒரு கேள்வி என்னிடம் கேட்டால் எதிர் முகாமிலும் ஒரு கேள்வி கேட்க வேண்டும் அல்லவா?.
அதற்கு கேள்விகள் வந்தால் பரவாயில்லை. ஒரே தரப்பில் உங்களுடைய கேள்விகள் இருக்கிறது. கரூர் சம்பவம் சம்பந்தமாக எந்த கேள்வியும் வேண்டாம். விசாரணை முடிந்த பின்பு அறிக்கை வந்த பிறகு மீண்டும் சந்திப்போம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும் தந்திரக் கும்பல்கள் தலையெடுக்காமல் போராடும்!
- மக்களின் விருப்பத்திற்கு மாறாக நெருக்கும் ஜனநாயக விரோதிகளுக்கு எதிராகப் போராடும்!
இந்தியை ஏற்றால்தான் கல்வி நிதி கொடுப்போம் என இருக்கும் ஆணவத் திமிருக்கு எதிராக தமிழ்நாடு போராடும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாடு யாருடன் போராடும்?" என ஆளுநர் கேட்டுள்ளார்…
இந்தி மொழியை ஏற்றுக்கொண்டால்தான், கல்வி நிதியைக் கொடுப்போம் என இருக்கும் ஆணவத் திமிருக்கு எதிராகப் போராடும்!
அறிவியல் மனப்பான்மையை விதைக்கும் கல்வி நிலையங்களுக்குள் சென்று மூடநம்பிக்கைகளையும் - புரட்டுக் கதைகளையும் சொல்லி, இளம் தலைமுறையை நூறாண்டு பின்னோக்கி இழுக்கும் சதிக்கு எதிராகப் போராடும்!
உச்சி மண்டை வரை மதவெறியை ஏற்றிக்கொண்டு, எதற்கெடுத்தாலும் மதத்தைப் பிடித்துக் கொண்டு நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும் தந்திரக் கும்பல்கள் தலையெடுக்காமல் போராடும்!
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை, மக்களின் விருப்பத்திற்கு மாறாக நெருக்கும் ஜனநாயக விரோதிகளுக்கு எதிராகப் போராடும்!
ஆளுநரின் அதிகார அத்துமீறல்களுக்கு எதிராக ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்துக்குச் சென்று மாநில உரிமைகளை நிலைநாட்டுகிறோம். அரசியல்சட்டத்தின் மாண்பை சிறுமைப்படுத்தும் எண்ணம் கொண்டவர்களுக்கு எதிராகத் தொடர்ந்து போராடும்!
தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய தொழிற்சாலைகளை - தொழில் வளர்ச்சியை - வேலைவாய்ப்புகளை, அடுத்த மாநிலத்துக்கு மிரட்டி அழைத்துச் செல்லும் சதிகாரர்களுக்கு எதிராகப் போராடும்!
ஆர்.எஸ்.எஸ். ஆசியுடன் இந்திய மக்களின் ஒற்றுமையைச் சீர்குலைத்து மீண்டும் மனுதர்மத்தை நிலைநாட்டத் துடிக்கும் ஆதிக்க வெறியர்களுக்கு எதிராகப் போராடும்!
உலகத்துக்கே பொதுவான வள்ளுவருக்குக் காவிக்கறை பூசுவது முதல் கீழடியின் உண்மைகள் நிலத்துக்கடியிலேயே புதைந்துபோக வேண்டும் என்று நினைப்பது வரையிலான வன்மம் இருக்கிறதே, அதற்கு எதிராகப் போராடும்!
#Delimitation மூலம் தமிழ்நாட்டின் வலிமையைக் குறைக்கும் சதிக்கு எதிராகப் போராடும்!
ஏகலைவனின் கட்டை விரலைக் கேட்டதுபோல் திணித்திருக்கும் நீட் எனும் பலிபீடத்துக்கு எதிராகப் போராடும்!
நாட்டையே நாசப்படுத்தினாலும், தமிழ்நாடு மட்டும் 11.19% வளர்ச்சி பெற்று, பிற மாநிலங்களுக்கு ஒளிகாட்டுகிறதே என்று நாள்தோறும் அவதூறுகளைப் பரப்பி, கலவரம் நடக்காதா என ஏங்கிக்கிடக்கும் நரிகளுக்கு எதிராகப் போராடும்!
நாகாலாந்து மக்கள் புறக்கணித்து அனுப்பிய பின்னும் திருந்தாமல், தமிழ்நாட்டு மக்களிடையே குழப்பத்தை உண்டாக்க மட்டுமே பணியாற்றும் ஆளுநருக்கு எதிராகவும் போராடும்!
இறுதியில் தமிழ்நாடே வெல்லும்! ஒட்டுமொத்த இந்தியாவையும் காக்கும்!
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- மொபைல் போனை வாக்குச் சாவடிக்கு வெளியே வைக்க வசதி செய்யப்படும்.
- ஒரு வாக்குச்சாவடிக்கு 1,200 வாக்காளர்களுக்கு மேல் இருக்க மாட்டார்கள்.
எதிர்வரும் சட்டமன்ற தேர்தல் ஏற்பாடுகளை செய்ய இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையிலான குழு பீகார் வந்துள்ளது.
நேற்று அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்பட்டு கட்சிகளின் கருத்துக்கள் கேட்டறியப்பட்டது.
இந்நிலையில் ஞானேஷ் குமார் இன்று பீகாரின் வைஷாலி நகரில் செய்தியாளர் சந்திப்பு நிகழ்த்தினார்.
அதில் பேசிய அவர், பீகாரில் 243 சட்டமன்ற இடங்கள் உள்ளன என்றும் அவர் கூறினார். சட்டமன்றத்தின் பதவிக்காலம் நவம்பர் 22 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்கு முன்னர் தேர்தல்கள் நடத்தி முடிக்கப்படும். தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஏற்கனவே அனைத்து அரசியல் கட்சிகளுடனும் கூட்டங்களை நடத்தியுள்ளனர்.
மேலும், அனைத்து பொறுப்பு அதிகாரிகளுடனும் ஒரு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. ஒரே கட்டமாக தேர்தலை நடத்துவது குறித்து, தேர்தல் ஆணையம் விரைவில் ஒரு முடிவை எடுக்கும்.
ஒரு வாக்குச்சாவடிக்கு 1,200 வாக்காளர்களுக்கு மேல் இருக்க மாட்டார்கள். வாக்களிக்க நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.
மொபைல் போனை வாக்குச் சாவடிக்கு வெளியே வைக்க வசதி செய்யப்படும். அவற்றை வெளியே வைத்துவிட்டு வந்த பின்பே வாக்களிக்க அனுமதிக்கப்படும்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களின் வண்ணப் புகைப்படங்கள் இருக்கும்.
பீகார் தேர்தலில் 17 புதிய சோதனைகளை பரிசோதிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இது எதிர்காலத்தில் நாடு தழுவிய அளவில் செயல்படுத்தப்படும்.
வாக்காளர் அடையாள அட்டைகளில் வாக்காளர் அடையாள எண்கள் பெரிதாக இருக்கும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எண்ணுவதில் பிழை இருந்தால், அனைத்து VVPAT, வாக்குச்சீட்டு வாக்குகளும் எண்ணப்படும்.
ஒவ்வொரு தேர்தலுக்கும் முன்பு வாக்காளர் பட்டியல்களைத் திருத்துவது அவசியம், பீகார் சிறப்பு தீவிர திருத்தும் சட்டப்படி நடத்தப்பட்டது. தேர்தலுக்குப் பிறகு அதை மறுபரிசீலனை செய்வது சட்டத்திற்கு முரணானது.
வாக்காளர் பட்டியலைத் தயாரிப்பதற்கு மாவட்ட தேர்தல் அலுவலர் தான் பொறுப்பு. பீகாரின் 243 மாவட்ட தேர்தல் அலுவலர்கள் வாக்காளர்களை தணிக்க செய்ய ஒன்றிணைந்து பணியாற்றினர்.
நீக்கப்பட்ட பெயர்களின் பட்டியல் அரசியல் கட்சிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. வாக்காளர் பட்டியலில் யாருடைய பெயர் விடுபட்டிருந்தால், அவர்கள் மாவட்ட நீதிபதியிடம் மேல்முறையீடு செய்யலாம்" என்று தெரிவித்தார்.
- கூட்டணியில் இருக்கும் தலைவர்கள் விமர்சிப்பதற்கு எந்த தடையும் இல்லை.
- மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் இரட்டை ஆட்சி நிலையை உருவாக்கும் முயற்சி நடைபெற்று வருகின்றது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் மணப்பாறையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கரூர் சம்பவம் நடக்கக்கூடாத ஒன்று. ஆனால் அந்த சம்பவத்திற்கு விஜய் தான் தார்மீக பொறுப்பேற்றிருக்க வேண்டும். அந்த சம்பவத்தில் முதல்வர் உடனே கரூருக்கு சென்று அனைத்து விதமான பணிகளையும் துரிதப்படுத்தி னார். அ.தி.மு.க. பொதுச் செயலாளர் இந்த சம்பவத்தில் அரசியல் செய்கிறார்.
எண்ணூர் சம்பவத்தில் புலம் பெயர்ந்த தொழி லாளர்கள் உயிரிழந்ததை நாங்கள் நேரில் சென்று பார்த்து சம்பவம் குறித்து கேட்டறிந்தோம். தொழி லாளர்கள் நலனில் அரசு அவர்களுக்கு தேவை யானவற்றை செய்து தர வேண்டும் என்று முதல்வரிடம் வலியுறுத்தி உள்ளோம். எங்கள் கூட்டணிக்குள் எந்த பிரிவும் இல்லை. கூட்டணியில் இருக்கும் தலைவர்கள் விமர்சிப்பதற்கு எந்த தடையும் இல்லை.
கூட்டணியில் அவ்வளவு சுதந்திரமாக இருக்கிறோம். ஆகவே கரூர் சம்பவத்தில் திருமாளவன் அவர் கருத்தை கூறி உள்ளார். இருப்பினும் எங்கள் கூட்டணி வலுவாக உள்ளது. 2026 தேர்தலில் மாபெரும் வெற்றியை பெறுவோம். கூட்டணிக்கு அப்பால் தேசம்-தேசத்தின் நலம் மீது நாங்கள் கவனமாக இருக்கிறோம்.
விஜய் எந்த கூட்டணியில் இருந்தாலும் அந்த கூட்டணியை கண்டிப்பாக தோற்கடிப்போம். நாடாளுமன்றத்தின் ஜனநாயகம் நெருக்கடிக்கு ஆளாக்கப்பட்டுள்ளது. அரசியல் சாசன சட்டம் நெருக்கடிக்கு ஆளாக்கப்பட்டு உள்ளது. மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் இரட்டை ஆட்சி நிலையை உருவாக்கும் முயற்சி நடைபெற்று வருகின்றது.
தனிப்பட்ட முறையில் கவர்னர் மீதோ, பா.ஜ.க. மீதோ எந்த காழ்ப்புணர்ச்சியும் இல்லை. கவர்னர் என்கிற பதவியை வைத்துக் கொண்டு முதல்வரையே கடந்து செல்ல முயற்சிப்பது என்பது ஜனநாயகத்தின் மீது தொடுக்கப்படுகின்ற பயங்கர தாக்குதல். இதை நாங்கள் எதிர்கிறோம். இதற்கு எதிராக தமிழக அரசு ஒரு போரை தொடுத்திருக்கிறது. அது ஜனநாயகத்திற்காக போர்.
இதில் முதல்வருடன் துணை இருப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அவரிடம் இருந்து ஆசிய கோப்பையை வாங்குவதில்லை என்று இந்திய அணி தெரிவித்திருந்தது.
- இந்தியாவுக்கு கொண்டு வர பிசிசிஐ முயன்று வருகிறது.
கடந்த செப்டம்பர் 28 அன்று துபாயில் நடந்த ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆசிய கோப்பையை கைப்பற்றியது.
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும் பாகிஸ்தான் உள்துறை அமைச்சருமான மோஹ்சின் நக்வி கோப்பையை வழங்க முன்வந்தார். ஆனால் அவரிடம் இருந்து ஆசிய கோப்பையை வாங்குவதில்லை என்று இந்திய அணி தெரிவித்திருந்தது.
மற்றொரு நிகழ்ச்சி வைத்து அதில் தனது கைகளால்தான் கோப்பையை வழங்குவேன் என்றுகூறிய நக்வி, கோப்பையை தன்னுடன் எடுத்துச் சென்றார்.
கோப்பை தற்போது ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் வாரியம் வசம் உள்ளது. அதை இந்தியாவுக்கு கொண்டு வர பிசிசிஐ முயன்று வருகிறது.
இந்நிலையில் இந்தியாவுக்கு கோப்பையை வழங்க மறுத்ததற்காக மோஹ்சின் நக்விக்கு பாகிஸ்தான் அரசு தங்கப் பதக்கம் வழங்கி கௌரவிக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சிந்து மற்றும் கராச்சி கூடைப்பந்து தலைவர் குலாம் அப்பாஸ் ஜமால், கராச்சியில் நடக்க உள்ள ஒரு விருந்து விழாவில் நக்விக்கு பதக்கம் வழங்கப்படும் என்று கூறியுள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
- சுற்றுலா தலங்களை மூட மாவட்ட நிர்வாகம் உத்தர விட்டுள்ளது.
- பலியானவர்களின் உடல்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மேற்குவங்காள மாநிலத்தில் இமயமலைக்கு உட்பட்ட டார்ஜிலிங், கலிம்போங், கூச் பெஹார், ஜல்பைகுரி மற்றும் அலிப் பூர்துவார் ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன.
கனமழை , நிலச்சரிவால் டார்ஜிலிங் மாவட்டத்தில் மிரிக்- குர்சியோங்கின் மாவட்ட நகரங்கள் மற்றும் சுற்றுலா தலங்களை இணைக்கும் துடியா இரும்புப் பாலமும் இடிந்து விழுந்தது.
நிலச்சரிவு மற்றும் பாலம் இடிந்து விழுந்ததில் 17 பேர் பலியானார்கள். உயிரிழப்பு சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதை தொடர்ந்து டார்ஜிலிங்கில் உள்ள டைகர் ஹில் மற்றும் ராக் கார்டன் உள்ளிட்ட சுற்றுலா தலங்களை மூட மாவட்ட நிர்வாகம் உத்தர விட்டுள்ளது.
பலியானவர்களின் உடல்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
மலைப்பகுதி மாவட்டங்களில் இரவு முழுவதும் இடைவிடாமல் பெய்து வரும் பலத்த மழையால் அண்டை மாவட்டமான ஜல்பைகுரியன் மல்பஜாரில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
மேற்கு வங்காளம்- சிக்கிமை இணைக்கும் சாலை மற்றும் சிலிகுரியை இணைக்கும் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் நிலச்சரிவால் துண்டிக்கப்பட்டன.
துர்கா பூஜைக்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் டார்ஜிலிங் சென்றுள்ளனர். கனமழை மற்றும் நிலச்சரிவால் அவர்கள் பரிதவிக்கிறார்கள். அவர்களை மீட்கும் பணி தீவிரப்படுத் தப்பட்டுள்ளது.
பலத்த மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்துக்கு மேலாக மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
டார்ஜிலிங் எம்.பி. ராஜூ பிஸ்தா தனது எக்ஸ்தள பதிவில் கூறியிருப்பதாவது:-
கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்பு மிகுந்த கவலை அளிக்கிறது. உயிரிழப்புகள், சொத்து இழப்பு மற்றும் உள்கட்டமைப்புக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. நிலைமையை நான் கண்காணித்து வருகிறேன். மேலும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறேன்.
இவ்வாறு அந்த பதிவில் அவர் கூறியிருக்கிறார்.
- தேவைப்பட்டால் இதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்று கூறினார்.
- ஆர்ஜேடி சார்பாக கூட்டத்தில் கலந்து கொண்ட எம்பி அபய் குஷ்வாஹா இந்தக் கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலின் ஒரு பகுதியாக, தேர்தல் ஆணையம் பீகாரில் அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்தியது.
தேர்தல் நடத்துவது தொடர்பாக அந்தந்த கட்சிகளிடமிருந்து ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளை அது வரவேற்றது.
கூட்டத்தில் பங்கேற்ற பாஜக பீகார் தலைவர் திலீப் ஜெய்ஸ்வால், "புர்கா அணிந்து வாக்களிக்க வரும் பெண்களின் வாக்காளர் அட்டைகளில் உள்ள புகைப்படத்தை தேர்தல் ஆணையம் பொருத்திப்பார்த்து சோதனையிட வேண்டும்.
மோசடி வாக்குகளைத் தடுக்க இது செய்யப்பட வேண்டும். தேவைப்பட்டால் இதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்" என்று கூறினார்.
ஆர்ஜேடி சார்பாக கூட்டத்தில் கலந்து கொண்ட எம்பி அபய் குஷ்வாஹா இந்தக் கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
அவர் பேசியதாவது, "பாஜகவின் கோரிக்கை அர்த்தமற்றது. தேர்தல் ஆணையம் ஏற்கனவே மாநிலத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொண்டு சமீபத்திய புகைப்படத்துடன் வாக்காளர் அட்டைகள் வழங்கப்பட்டதை அடுத்து, புர்கா அணிந்த பெண்களை அட்டையில் உள்ள புகைப்படத்துடன் ஒப்பிட வேண்டிய அவசியமில்லை" என்று வாதிட்டார்.
- 'டை-எத்திலீன் கிளைக்கால்' எனப்படும் அதிக நச்சுத்தன்மை கொண்ட வேதிப்பொருள் சுமார் 48.6% அளவுக்கு இருந்தது.
- காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஸ்ரேசன் பார்மாசூட்டிகல்ஸ் தயாரித்தது.
மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில், இருமல் மருந்தைக் குடித்ததன் காரணமாக 11 குழந்தைகள் சிறுநீரகம் செயலிழந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
அண்டை மாநிலமான ராஜஸ்தானின் சிகாரிலும், இரண்டு குழந்தைகள் சிறுநீரகங்கள் செயலிழந்து உயிரிழந்தன.
இரு மாநிலங்களிலும், இந்த மருந்து உட்பட 15க்கும் மேற்பட்ட மருந்துகள் விற்க தடை விதிக்கப்பட்டது.
மத்திய பிரதேசத்தில் இறந்தவர்களில் பெரும்பாலான குழந்தைகள் பராசியாவில் உள்ள குழந்தை நல மருத்துவரான பிரவீன் சோனியின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
எனவே குழந்தைகளுக்கு கோல்ட்ரிப் இருமல் மருந்தை பரிந்துரைத்து கவனக்குறைவாகச் செயல்பட்டதாக மருத்துவர் பிரவீன் சோனி கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் அவர் பணியிடை நீக்கம்மும் செய்யப்பட்டுள்ளார்.
குழந்தைகளை பலி கொண்ட 'கோல்ட்ரிஃப்' (Coldrif) என்ற அந்த இருமல் மருந்தில், 'டை-எத்திலீன் கிளைக்கால்' எனப்படும் அதிக நச்சுத்தன்மை கொண்ட வேதிப்பொருள் சுமார் 48.6% அளவுக்கு இருந்ததாக ஆய்வக அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.
பிரவீன் சோனி மற்றும் இந்த மருந்தை உற்பத்தி செய்த தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஸ்ரேசன் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்கள் மீதும் பல்வேறு பிரிவுகளின் கீழ் FIR பதிவு செய்யப்பட்டுள்ளது.
மத்திய பிரதேசத்தில் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பங்களுக்குத் தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் மோகன் யாதவ் அறிவித்துள்ளார்.
- தாம்பரத்தை சேர்ந்த 24 வயது வங்கி ஊழியரான பரமேஷ் என்பவரும் மாரத்தான் போட்டியில் பங்கேற்றார்.
- கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை கோட்டூர்புரம் அண்ணா பல்கலைக்கழக பகுதியில் இன்று மாரத்தான் ஓட்டப் பந்தயம் நடைபெற்றது. புற்றுநோய் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த மாரத்தான் ஓட்டப் பந்தயத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இன்று அதிகாலை தொடங்கிய இந்த மாரத்தான் போட்டியில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தாம்பரத்தை சேர்ந்த 24 வயது வங்கி ஊழியரான பரமேஷ் என்பவரும் மாரத்தான் போட்டியில் பங்கேற்றார்.
இந்தநிலையில் ஓடத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே பரமேசுக்கு வலிப்பு ஏற்பட்டது. தரையில் சுருண்டு விழுந்தார். அவரைப் பார்த்து மாரத்தானில் பங்கேற்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் மூலம் பரமேஷ் உடனடியாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால், மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காணாமல் போனவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.
- இந்தியாவின் மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் அருகே மிரிக் பகுதியில் கனமழை வெள்ளத்தால் பாலம் இடிந்து விழுந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.
நேபாளத்தில் நேற்று முதல் பெய்து வரும் கனமழை, திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் இதுவரை 47 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்திய எல்லைக்கு அருகிலுள்ள கிழக்கு நேபாளத்தின் இலாம் மாவட்டத்தில் மட்டும் ஏற்பட்ட பல நிலச்சரிவுகளில் 35 பேர் கொல்லப்பட்டனர். காணாமல் போனவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.
தலைநகர் காத்மாண்டுவில் பாகமதி உள்ளிட்ட பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன.
இதனால் காத்மாண்டு சாலைகள் நாட்டின் பிற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு நேபாளத்தில் உள்ள கோசி ஆற்றில் அபாய அளவைத் தாண்டி வெள்ளம் பாய்வதால், கோசி தடுப்பணையின் 56 மதகுகளும் திறந்துவிடப்பட்டுள்ளன.
மேலும் நேபாளத்தில் நாளை வரை மழை நீடிக்க வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இதற்கிடையே இந்தியாவின் மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் அருகே மிரிக் பகுதியில் கனமழை வெள்ளத்தால் பாலம் இடிந்து விழுந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்தால் சிலிகுரி - மிரிக் இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
விபத்து நடந்த பகுதியின் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாலம் இடிந்த விபத்தில் பலர் நீரில் அடித்துச்செல்லப்பட்டதால் உயிரிழப்பு அதிகரிக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது.






